அம்மம்மா.. கேளடி தோழி...! -130

130 சிரபுஞ்சி மழையாக - என் மனம் காதல் பொழிவதை அறிவாயா.. ? ஹேமா போய்விட்டாள்... அவளுடன் ராதிகாவின் சிரிப்பும் சேர்ந்து போய்விட்ட...


130
சிரபுஞ்சி மழையாக - என் மனம்
காதல் பொழிவதை அறிவாயா..?

ஹேமா போய்விட்டாள்...
அவளுடன் ராதிகாவின் சிரிப்பும் சேர்ந்து போய்விட்டது... மீண்டும் வாடிய முகத்துடன் வீட்டை வலம் வந்து கொண்டிருந்தாள்... மேகலா வாய் விட்டேச் சொல்லிவிட்டாள்...
"அது உன்கூட நல்லாப் பழகின புள்ளையாம்மா..?"
"ஆமாம் அத்தை..."
"அதான் உன் முகம் வாடிப் போயிருக்கு.. என்ன செய்றது..? பெத்தவங்களையும்.. கூடப் பிறந்தவங்களையுமே இந்தப் பெண்ணாய் பிறந்தவங்க பிரிகிறப்போ.. கூடப் பழகின சிநேகிதங்களைப் பிரியாம இருக்க முடியுமா..? அதிலயும் கொடுத்து வைச்சது.. ஆம்பளைகதான்.. அவங்களுக்கு எந்தப் பிரிவும் இல்லை.."
மாமியாரின் இதமான வார்த்தைகளைக் கேட்ட ராதிகா சோகையாகப் புன்னகைத்து விட்டு பேசாமல் இருந்து விட்டாள்...
இரவு வெகுநேரமான பின்னால்தான் பாலமுரளி வீட்டுக்கு வந்தான்.. வீடே உறக்கத்தில் ஆழ்ந்திருக்க.. உறங்காமல் காத்திருந்த ராதிகா கதவைத் திறந்து விட்டாள்..
அவளை உறுத்துப் பார்த்த வண்ணம் உள்ளே வந்தான் பாலமுரளி.. மௌனமாக டைனிங் டேபிளின் அருகே சென்றவளின் பின்னாலேயே சென்றவன்.. தாழ்ந்த குரலில்...
"என்னடி..? பேச்சையே காணோம்.. ஆகாதவனைப் பார்க்கிறதைப் போல என்னைப் பார்த்து வைக்கிற... அந்த ஹேமாகிட்ட அம்புட்டுச் சிரிப்பு சிரிச்சயே.. அந்த சிரிப்பு எங்கே போச்சு..?" என்று கேட்டான்...
ராதிகாவுக்கு நன்றாகவே தெரியும்... நிச்சயம்... ஹேமாவை மையமாக வைத்து பாலமுரளி அவளிடம் வம்பிழுப்பான் என்று.. அதனால் அவள் உதட்டைக் கடித்தபடி அமைதி காத்தாள்...
"அவ சங்கருக்கு வேண்டப்பட்டவ.. அவளைக் கண்டா உனக்கு சிரிப்பு பொங்கி வழியும்.. நான் யாரு..? அந்த சங்கருக்கு வேண்டாதவன்தானே.. என்னைப் பார்த்தா எதிரியைப் பார்க்கிறதைப் போலத்தான் உனக்கு இருக்கும்.." குத்தலாகப் பேசினான் முரளி...
ராதிகா வாயைத் திறக்கவே இல்லை...
"எதுக்குடி அவ வந்தா..? கல்யாணப் பத்திரிக்கை வைக்க வந்தாளா..? இல்ல.. நீ உன் பெண்டாட்டியை சமரசம் பேச அனுப்பி வைக்கலேன்னாலும்.. என் கல்யாணத்தை சங்கர் நடத்தி வைப்பான்னு என்கிட்ட சொல்லச் சொல்ல வந்தாளா..?"
ராதிகா தட்டை எடுத்து வைத்து.. பரிமாற ஆரம்பித்தாள்...
"யாருக்குடி போடற..?" என்றான் அவன்...
பரிமாறிய அவளின் கை நின்றது.. அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை... அந்தச் செய்கை பாலமுரளியின் சினத்தை அதிகப் படுத்தியது...
"ஏய்ய்.." அவன் அதட்டினான்...
ராதிகாவின் கைவிரல்கள் மெதுவாக நடுங்க ஆரம்பிக்கையில்.. மேகலாவின் அறைக் கதவு திறந்தது...
"முரளி...?" புருவங்கள் முடிச்சிட அவள் வெளியே வந்தாள்... அவள் பார்வை சுவர் கடிகாரத்தில் படிந்தது...
"என்னடா.. இம்புட்டு நேரமா என்ன செஞ்ச..?"
"த்ச்சு.. வேலையிருந்துச்சும்மா..."
"அர்த்த ராத்திரி ஜாமத்தில வந்துட்டு.. காலகாலத்தில சாப்பிடாம ராதிகாகிட்ட என்னத்தை கேட்டுக்கிட்டிருக்க...?"
"சும்மா பேசிக்கிட்டு இருந்தேன்..."
"பேசு.. அவ உன் பெண்டாட்டிதானே.. தாராளமா பேசு.. வயித்தில சாப்பாட்டைப் போட்டுட்டு... உங்க ரூமுக்குப் போய் பேசு.. அதைவிட்டுட்டு சாப்பிடற இடத்தில லைட்டை எரிய விட்டுப் பேசினா என்ன அர்த்தம்...? இந்த வீட்டில அவளும்.. நீயும் மட்டும்தான் இருக்கீங்களா..? வாசலிலே காவல்காரன் இருக்கான்.. தோட்டத்திலே நாச்சியப்பன் படுத்திருக்கான்.. சமையல் கட்டுக்கு பக்கத்து ரூமில மீனாட்சியும்.. காவேரியும் தூங்கிக்கிட்டு இருக்காங்க.. நினைப்பு இருக்கில்ல...?"
மேகலாவின் கண்டிப்பான தொனியில் பேச்சை நிறுத்திவிட்டு ராதிகா பரிமாறியவற்றை அவசர கதியில் உள்ளே தள்ளினான் முரளி... கை கழுவி விட்டு திரும்பியவனின் பார்வை...
'மேலே வாடி.. பேசிக்கிறேன்...' என்றது...
ராதிகா நடுங்கிப் போனாள்...
'இன்னைக்குத் தூக்கம் அம்பேல்தானா..?'
"நீயும் சாப்பிடும்மா..." மேகலா பரிவுடன் சொன்னாள்..
"நான் சாப்பிட்டுக்கறேன்.. நீங்க போய் படுங்க...", ராதிகா சங்கடத்துடன் சொன்னாள்...
"எல்லாம் படுத்துக்கலாம்.. தூக்கம் எங்கே போயிறப் போகுது.. அவனே முசுட்டுப் பயல்.. முன் கோபக்காரன்.. காலையில உன் சிநேகிதியாலே அவன் வேலை கெட்டுப் போச்சுன்னு உர்ருன்னு இருக்கான்.. அதான்.. நான் வந்தேன்.. நீ சாப்பிடு..."
வேலை கெட்டுப் போனதால் மட்டுமா அவன் கோபமாக இருக்கிறான்..? அதன் உண்மைக் காரணத்தை அறிந்த ராதிகாவின் உள்ளம் நடுங்கியது... பேசாமல் டைனிங் ஹாலிலேயே படுத்து உறங்கி விடலாமா என்று கூட யோசித்தாள்.. ஆனால் அதை நினைத்து மட்டுமே பார்க்க முடியும்... செய்ய முடியாது... அவள் அந்த வீட்டின் ஏதாவது ஒரு அறையில் படுத்துத் தூங்கினாலே அது செய்தியாகி விடும்.. அந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியும் விடும்...
'தெரியுமா சேதி... சின்னம்மா.. ஐயாவோட ரூமில தூங்காம தனியாப் படுத்து தூங்கினாங்களாம்...' என்று ஆரம்பிக்கும் அந்தச் செய்தி..
'கேட்டியாடி கதையை.. நம்ம பெரிய வீட்டு ஐயாவும்.. அவரோட பொண்டாட்டியும் தனித்தனியா பிரிஞ்சு போயிட்டாங்களாம்.. வார முகூர்த்தத்தில.. ஐயாவுக்கு மறு கல்யாணமாம்..' என்பதில் வந்து நின்று விடும்..
அந்த அபாயத்திற்கு அஞ்சினவளாக... அடிமேல் அடியெடுத்து வைத்து மாடிப்படிகளில் ஏறினாள் ராதிகா.. காலைத் தூக்கி வைக்க முடியாமல் பாதம் பாறாங்கல்லாய் கனத்தது...
அறைக்கதவைத் திறந்த போது.. அறையில் சூழ்ந்திருந்த இருளில் அவள் நிம்மதியாக உணர்ந்தாள்...
'அப்பாடி... இவன் தூங்கிட்டான் போல...'
திணறிக் கொண்டிருந்த சுவாசம் சீராகிவிட.. ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவளாக.. இனம செருகப் படுத்தவள் தூங்கப் போனாள்...
அறையில் பளீரென்று பரவிய வெளிச்சத்தில் உடல் தூக்கிப் போட எழுந்து அமர்ந்தாள்...
'இன்னும் இவன் தூங்கலையா..?'
செக்கச் செவேலென்று சிவந்திருந்த அவன் விழிகள்.. அவனுக்கு தூங்கும் உத்தேசமில்லையென்பதை அறிவிக்க.. ராதிகாவுக்கு நெஞ்சை அடைத்தது...
'ஹேமா.. பேசாம இன்விடேசனை தபாலில் அனுப்பியிருக்கலாம்...' நொந்து கொண்டாள் ராதிகா...
"எப்படியெப்படி.. நான் உன்னை அனுப்ப மாட்டேன்னு.. அவளுக்கும் சங்கருக்கும் தெரியுமா..? என் காரை அவமட்டும் அடையாளம் பார்த்தாளா... இல்ல.. அவனும் சேர்த்துப் பார்த்தானா..? நான் பார்த்துக்கிட்டு இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டே உன்கூட பேச்சை வளர்த்தியிருக்கான்னா.. அது யார் கொடுத்த தைரியம்..?"
'நிச்சயமாய் நான் அந்த தைரியத்தைக் கொடுக்கவில்லை...'
ராதிகாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.. அவளுக்கென்று வினைகள் எந்த ரூபத்திலெல்லாம் வருகின்றன...?
"நீ சந்தோசமா இருக்கியான்னு கேட்டாளே... அதை அவளாக் கேட்டாளா...? இல்ல... அந்த சங்கர் கேட்டுவிட்டானா...?"
'கடவுளே...' ராதிகா மனம் துடித்தாள்...
"என்னன்னு அவகிட்டச் சொல்லச் சொன்னாளே.. சொல்ல வேண்டியதுதானே.. அதை அப்படியே கொண்டு போய் சங்கரிடம் கொட்டுவாளில்ல.. நல்ல சான்ஸை கோட்டை விட்டுட்டியேடி..."
'போதும்.. இத்துடன் நிறுத்திக் கொள்.. உனக்குப் புண்ணியமாப் போகும்...'
"உன் கதையை விட்டு விடனுமா.. உனக்கு எல்லாம் முடிஞ்சிருச்சா...? எம்புட்டு விரக்தியாப் பேசினடி..? அவனைக் கல்யாணம் பண்ணமுடியாமப் போன விரத்திதானடி அது..?"
'கொல்லாதே...'
"உன்னை நான் கொடுமை பண்ணிருவேனோன்னு அவளும் அந்த சங்கரும் கவலைப் பட்டாங்களாமே.. த்ச்சு.. த்சு.. கொடுமை பண்ணினதை சொல்லிவிட வேண்டியது தானே.. அவன் மறுவாழ்வு கொடுப்பானில்ல..."
அதற்கு மேல் கேட்க முடியாதவளாக ராதிகா காதைப் பொத்திக் கொண்டாள்.. அவள் காதுகளில் தீக்கங்குள் விழுவதைப் போலிருந்தன.. அவளது துடிப்பைக் கண்டும் பாலமுரளியின் மனம் இரங்கவில்லை..
'இவ்வளவு பேசறேன்.. வாயைத் திறக்கிறாளான்னு பாரு.. அந்த ஹேமாகிட்ட மட்டும் பல்லைப் பல்லைக் காட்டிப் பேசினாளே... அந்தப் பேச்சும் சிரிப்பும் எங்கே போச்சு...?'
அவனது கோபம் கனன்று எழுந்தது...
"நடிக்காதேடி.. உன் பாசாங்கெல்லாம் எனக்குத் தெரியும்.. இதுக்கு பேசாம.. அவகூடவே போயிருக்க வேண்டியதுதானே..? அவ உன்னை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்திருப்பாள்ல..?"
ராதிகா சட்டென்று எழுந்தாள்.. அவள் என்ன செய்யப் போகிறாள் என்று பாலமுரளி யூகிப்பதற்குள் பால்கனிக் கதவைத் திறந்து அந்தப் பக்கமாக தாழிட்டுக் கொண்டு விட்டாள்..
"ஏய்ய்..." பாலமுரளி கதவை இழுத்துப் பார்த்தான்.. அது திறக்கவில்லை...
ஊதக்காற்றில் ஜன்னல் கதவுகள் ஆட.. கவலையுடன் வெளியே பார்த்தான்.. வானத்தில் பளீரென்ற வெளிச்சக் கோடு மின்னி மறைந்தது...
மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிய.. பாலமுரளி பலமாகக் கதவைத் தட்டினான்...
"ராதிகா.. ராதிகா..."
மறுபக்கம் பதிலில்லை... அதற்குள் சடசடவென்று மழைத்துளிகள் சாரைசாரையாய் கொட்டத் தொடங்கி விட்டன.. பாலமுரளி கதவைத் தட்டிய சப்தத்தை மழைச் சப்தம் அமிழ்த்திவிட.. பாலமுரளி ஓங்கி கதவை ஆட்டினான்..
அந்தக் காலத்து தேக்கு மரக் கதவு.. அசைந்து கொடுக்கவில்லை...
'இவகூட பெருத்த இம்சை...'
பால்கனியை ஒட்டியிருந்த ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தான்... பால்கனியில் பாதிப் பகுதி மேற் கூரையுடன் இருக்க... மீதிப் பகுதி வெட்ட வெளியாக இருக்கும்...
அந்த வெட்ட வெளிப் பகுதியில் கண்மூடிப் படுத்திருந்தாள் ராதிகா... மழைநீர் வெள்ளமாக அவளைச் சுற்றித் தேங்கி.. அவளது ஆடைகளை நீரில் மூழ்கடித்து... அலையடித்துச் சென்றது...
'அடிப்பாவி...' பாலமுரளி அதிர்ந்து விட்டான்...
ராதிகா இப்படிச் செய்து வைப்பாள் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை... கண்ணெதிரே மழை நீரில் அமிழ்ந்து கிடக்கும் அவளது தோற்றத்தைக் கண்டவனுக்கு வேகம் பிறந்தது...
அறைக் கதவைத் திறந்தவன்.. தடதடவென்று மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறினான்.. கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவனுக்கு அதைப் பற்றிய நினைவு துளிக்கூட இல்லை.. அவனது எண்ணமெல்லாம்.. அதே மழை நீரில் நனைந்து போய் கிடந்த ராதிகாவின் மீதே இருந்தது...
'என்ன காரியத்தை செஞ்சு வைக்கிறா..'
மொட்டைமாடியின்.. பக்கவாட்டுச் சுவரின் மீது ஏறி... தண்ணீர் வழிந்தோடப் பதிக்கப்பட்டிருந்த பெரிய சிமிண்ட் குழாயைப் பிடித்து.. இறங்க ஆரம்பித்தான்...
மழைநீரில் கால் வழுக்கியது... கை பற்றுவதற்கு சரியான பிடிப்பில்லாமல் நழுவ யத்தனித்தது.. சமாளித்து இறங்கியவன்.. பால்கனியின் சுற்றுச்சுவரருகே வந்ததும்.. அதைப் பற்றிக் கால்பதித்து.. பால்கனிக்குள் குதித்தான்.. மழை நீரில் தெப்பமாக நனைந்து கிடந்த ராதிகாவை நெருங்கினான்...
"ஏய்ய்.. எழுந்திருடி..." அவளை உலுக்கினான்...
அவள் தொய்ந்து விழுகவும்தான்.. அவனுக்கு அது உறைத்தது...
'இவ நினைவில்லாமக் கிடக்கிறாளே...'
அதனால்தான் அவள் கதவைத் திறக்கவில்லை என்பது புரிந்துவிட.. வழக்கம்போல அவளைக் கைகளில் ஏந்தித் தூக்கினான்.. வாடிப் போன பூமாலையாய்.. அறுந்து போன கொடியாய்.. தொய்ந்து கிடந்தவளைப் படுக்கையில் கிடத்தியவன்.. முதல் காரியமாக பால்கனிக் கதவை இறுக மூடினான்..
"ராதிகா.. ஏய்ய்.. ராதிகா..." அவள் கன்னத்தில் தட்டிப் பார்த்தான்... அவள் கண்ணைத் திறக்கவே இல்லை...
அவள் முகத்தில் தண்ணீரைத் தெளிக்காமா என்று அபத்தமாக யோசித்தவன்.. அவள் முகத்தில் படிந்திருந்த மழைநீர் திவலைகளில் நிதானித்தான்...
'ச்சே.. எனக்குக் கூட புத்தி வேலை செய்ய மாட்டேங்குது.. இவளே மழைத் தண்ணியில தான் முங்கிக் கிடந்தா.. அதில மயக்கம் தெளியாதவளா.. நான் அடிக்கிற தண்ணியில மயக்கம் தெளியப் போறா...?'
ராதிகாவின் ஈர உடைகளின் மீது அவன் பார்வை படிந்தது...
'இப்படியே விட்டா... ஜன்னியிலதான் கொண்டு போய் விடும்.. அப்புறம் அம்மாவுக்கும்.. அந்த டாக்டரம்மாவுக்கும் பதில் சொல்லி முடியாது...'
அவளது ஈர உடைகளை அகற்றி.. உலர்வான உடைகளை அணிவிக்க அவனால் முடியுமா...?
சும்மாவே அவளைக் கண்டால் அவனுக்கு புத்தி தடுமாறும்.. அந்த நிலையில் மயங்கிக் கிடந்தவளின் ஈர உடைகள் உடலோடு ஒட்டியிருக்க.. அவன் கண்கள் அவள் உடல்மீது படர்ந்து மேய ஆரம்பிப்பதை தடுக்கவே அவனால் முடியவில்லை...
இந்த லட்சணத்தில்.. அவனாவது.. அவளின் ஈர உடைகளை அகற்றி.. உலர்ந்த உடைகளை அணிவிப்பதாவது..
'அவ்வளவுதான்... இன்னைக்கு ராத்திரியே.. இவகூட குடும்பம் நடத்த ஆரம்பிச்சுருவேன்.. இந்த விசப்பரிட்சையே எனக்கு வேணாம்...'
தனக்குள் அவன் சொல்லிக் கொண்ட போது.. அவனின் ஆழ்மனது...
'அடேங்கப்பா.. அப்படி அவகூட குடும்பம் நடத்தினாத்தான் என்ன..?' என்று கேட்டது...
பாலமுரளி.. அவளின் ஈர உடைகளை மாற்றிவிட தைரியமில்லாமல் பின்வாங்கிவிட்டான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -130
அம்மம்மா.. கேளடி தோழி...! -130
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-130.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-130.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy