அம்மம்மா.. கேளடி தோழி...! -129

129 தென்றல் கூட எனக்குப் பகையாகும்.. உனக்கும்.. எனக்கும் நடுவில் வந்தால்... பாலமுரளி நட்பை மதிப்பவன்தான்.. நட்புக்காக உயிரைக் கூட...


129
தென்றல் கூட எனக்குப் பகையாகும்..
உனக்கும்.. எனக்கும் நடுவில் வந்தால்...

பாலமுரளி நட்பை மதிப்பவன்தான்.. நட்புக்காக உயிரைக் கூட கொடுக்கிறவன்தான்... இதே ஹேமா.. சங்கரின் பக்கம் நிற்காமல்.. பாலமுரளியின் சார்பாக நின்றிருந்தால்.. மாதேஷைவிட உயர்ந்தவனாக அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து... பிறந்து வீட்டுச் சீரையும் செய்து திருமணம் செய்து வைத்திருப்பான்...
அப்படியில்லாமல் ஹேமா... சங்கரின் பக்கமாக நின்று விட்டாள்... அதை பாலமுரளியும் உணர்ந்து விட்டான்.. அதன் பின்னால் முரளிக்கு ஹேமாவைக் கண்டாலே கட்டோடு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது..?
ஹேமாவைப் பார்க்கும் முரளியின் பார்வையில் வெறுப்பிருந்ததை உணர்ந்த ராதிகா.. அதை ஹேமா உணர்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று தவியாய் தவித்தாள்...
ஹேமா அதை உணர்ந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்i... வெள்ளைச் சிரிப்புடன்.. திருமண அழைப்பிதழை எடுத்து... பாலமுரளியின் பெயரையும்.. ராதிகாவின் பெயரையும் எழுதி அவன் கையில் கொடுக்கப் போனாள்... அவன் அதை வாங்கிக் கொள்ளவில்லை...
"உங்க பிரண்டிடமே கொடுங்க...", என்று சொல்லி விட்டான்...
அப்போதும் முகம் மாறாமல் சிரித்தபடியே ராதிகாவிடம் அழைப்பிதழை நீட்டினாள் ஹேமா...
"அத்தையிடம் கொடுடி.." என்றாள் அவள்...
"அவங்க பெரியவங்க... அவங்களுக்கு தனியா இன்விடேசன் இருக்கு... உங்ககூட அவங்களை கூட்டுச் சேர்த்துக்கச் சொல்றியா...", கலகலவென்று சிரித்தாள் ஹேமா...
ராதிகாவிற்கு தோழியின் செய்கையைக் கண்ட ஆறுதலாக இருந்தது.. ஹேமா மட்டும்... முரளியின் அலட்சியப் போக்கில் முகம் கன்றியிருந்தால் அதை ராதிகாவினால் தாங்கிக் கொள்ள முடியாமல் போயிருக்கும்... ஹேமா அதைச் செய்யவில்லை... முரளி எவ்வளவுதான் உதாசீனமாகப் பார்த்தாலும்.. அவள் சிரித்த முகமாகவே இருந்தாள்.. சொந்தமில்லாமல் அவன் பேசினாலும்... அவள் ராதிகாவின் மீதான சொந்தத்தில் நிலையாக நின்றாள்..
"ஆண்ட்டி.. இது உங்களுக்கான இன்விடேசன்.."
மேகலாவின் கையில் அழைப்பிதழைக் கொடுத்து விட்டு.. அவள் பாதம் பணிந்தாள்...
"ஆசிர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி..."
"நல்லா இரும்மா..."
மனம் நிறைந்த ஆசிர்வாதத்தை அளித்தாள் மேகலா..
மருமகளின் சிநேகிதி.. மருமகளைப் போலவே பதவிசாக இருப்பதில் மேகலா மகிழ்ந்து போனாள்.. கிளம்ப வேண்டும் என்ற ஹேமாவை அதட்டி உட்கார வைத்தாள்..
"சாப்பிடாமப் போறதா.. நல்ல கதையாய் இருக்கே.."
"பரவாயில்லை ஆண்ட்டி.. இன்னொரு நாள் வர்றேன்..."
"ஆமாம்மா.. நீ இந்தா இருக்கிற குற்றாலத்தில தான் குடியிருக்க.. இன்னைக்கு வர முடியலைன்னாலும்.. நாளைக்கே வந்து சாப்பிடப் போற.. அம்புட்டுத் தொலைவில இருந்து சிநேகிதியைப் பார்க்கிறதுக்காக கிளம்பி வந்த பொண்ணு... சாப்பிடாம வெறும் வயித்தோடப் போறதா..? காவேரி... இங்கே வா..."
ஹேமாவின் மறுப்பை லட்சியமே செய்யாமல் மேகலா காவேரியை அழைத்து பாலமுரளிக்கு பிடிக்கவில்லை... இந்தச் செயலை ராதிகா செய்திருந்தால் முறைத்திருப்பான்... மேகலாவை அவனால் முறைக்க முடியவில்லை...
"எனக்கு மில்லுக்கு நேரமாச்சேம்மா..." என்றுதான் சொல்ல முடிந்தது...
"நீ போய்ட்டு வாப்பா..." கனிவுடன் மகனிடம் சொல்லிவிட்டு காவேரிக்கு மதிய உணவுக்கு என்னென்ன வகைகள் செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள் மேகலா...
பாலமுரளியின் முகக்குறிப்பிலிருந்து எதை உணர்ந்தாளோ.. ஹேமா சிரித்த முகத்துடன் மேகலாவின் விருந்தோம்பலை மறுக்கத்தான் செய்தாள்...
"நீங்க சொன்னாலும்... சொல்லாவிட்டாலும்... நான் இந்தப் பக்கம்தான் வரப்போறேன் ஆண்ட்டி.. தென்காசியில் சங்கர் ஆரம்பிக்கப் போகிற பேக்டரியில் மாதேஷீம் பார்ட்னரா இருக்கார்.. மேரேஜீக்கு அப்புறம் நாங்க தென்காசியில்தான் தனிக்குடித்தனமா இருக்கப் போகிறோம்... அதனால... அப்ப வந்து மொத்தமா விருந்து சாப்பிட்டுக்கறேனே..."
ஹேமா சொல்லிய இந்தச் செய்தியில் பாலமுரளின் முகம் கருத்து விட்டது.. சங்கரின் தொழிலில் பங்குதாரராக இருப்பவனின் வருங்காலமனைவிக்கு.. அவன் வீட்டில் விருந்து அளிப்பதா..?
"அதான்... அவங்க வேணாம்ன்னு சொல்றாங்களேம்மா... இன்னொருநாள்தான் வரட்டுமே.. நானும் மில்லுக்குப் போற வழியில இவங்களை இறக்கி விட்டுட்டுப் போகனுமே..."
இன்னொருநாள் இந்த வீட்டுப் பக்கம் அவள் வந்து விடுவாளா என்று மனதிற்குள் கருவிக் கொண்டான் பாலமுரளி...
"யோசிக்காம பேசாதேடா.. நம்ம வீட்டுப் பெண்ணுக்காக... இவ்வளவு தூரம் வந்திருக்கிற பெண்ணை கை நனைக்காம நான் அனுப்பி வைக்க முடியாது... நீ மதியச் சாப்பாட்டுக்கு வந்துட்டுப் போகும் போது இந்தப் பெண்ணைக் கூப்பிட்டுக்கிட்டுப் போ..." மேகலா கறாராகச் சொல்லி விட்டாள்...
அதற்கு மேலும் பேசினால்.. அவள் என்ன சொல்லி வைப்பாள் என்று பாலமுரளிக்குத் தெரியும்...
'உன் அப்பா இருக்கிறப்போ.. இந்த வீட்டு வாசப்படியை யார் மிதிச்சாலும்... அவங்க சாப்பிடாமப் போகக் கூடாதுன்னு சட்டமே போட்டிருந்தார்.. நீ அவரோட மகன்டா.. அவரு இருந்தாலும் இல்லாட்டியும்... அந்தக் கடமையை மறப்பியா...' என்று கேட்டு வைப்பாள்...
அதற்குப் பயந்தவனாக... ராதிகாவை முறைத்தபடி அவன் கிளம்பிப் போய் விட்டான்.. அவன் போகும் வரை... முள்ளின் மேல் இருப்பதைப் போலத் தவித்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கு.. அவன் வெளியேறியதும் ஒர்விதமான விடுதலையுணர்வு முகத்தில் பரவியது...
இயல்பாக.. தோழியின் கையைப் பிடித்தபடி சரளமாக பேச ஆரம்பித்தவளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஹேமாவின் விழிகளில் ஏதோ தெரிந்தது..
"நீங்க சிநேகிதப் புள்ளைக.. பேசறதுக்கு ஆயிரம் விசயமிருக்கும்.. ராதிகா.. மாடிக்கு உன் சிநேகிதியைக் கூப்பிட்டுக்கிட்டுப் போ.. சமையலை காவேரியும்... மீனாட்சியும் கவனிச்சுக்குவாங்க... சாப்பிடக் கூப்பிடறப்போ மட்டும் நீங்க ரெண்டு பேரும் கீழே இறங்கி வந்தாப் போதும்..."
மேகலாவின் உத்தரவில்.. சந்தோசமான ராதிகா.. தோழியின் கையைப் பிடித்தபடி மாடிப் படிகளில் ஏறினாள்.. ராதிகாவின் அறையைக் கண்ட ஹேமாவின் முகத்தில் பிரமிப்பும்.. ஆச்சரியமும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன...
"அசத்தலா இருக்குடி உன் ரூம்.. நீ கொடுத்து வச்சவதான்.. ஆக்சுவலாய் உன் வீடு இவ்வளவு கிராண்டாய் பேலஸைப் போலவே இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை... இதனாலதான் உன் ஹஸ்பெண்ட் மத்தவங்கள மதிச்சு பேச மாட்டேன்கிறாரா...?"
மறைமுகமாக அவளை பாலமுரளி அவமதிப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் ஹேமா பேசியதில் ராதிகா சங்கடப் பட்டுப் போனாள்...
"ஸாரி... ஹேமா..." தோழியின் கையைப் பிடித்துக் கொண்டாள்...
"விடுடி.. நீ என்ன பண்ணுவ...? உன் ஹஸ்பெண்டுக்கு எதனாலோ என்னைப் பிடிக்காம போயிருச்சு... அது எதனாலன்னுதான் எனக்குத் தெரியலை..." யோசனையுடன் சொன்னாள்...
அதைத் தெரிந்த ராதிகா.. வாய்விட்டு அதைச் சொல்ல இயலாமல் உதட்டைக் கடித்தாள்...
"நீ சந்தோசமா இருக்கியாடி..." 
ஹேமா ராதிகாவின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களுக்குள் பார்த்துக் கேட்டாள்...
"ம்ம்ம்..." ராதிகாவின் விழிகளில் நீர் தளும்பியது...
"உனக்கு பொய் சொல்ல வராது ராதிகா...."
"த்ச்சு.. விடு.. என்னென்னவோ நடந்திருச்சு..."
"என்னன்னு என்னிடம் சொல்லக் கூடாதா..?"
தோழியின் ஆறுதலான வார்த்தைகளில் மனம் உடைந்தாள் ராதிகா... மனதில் இருக்கும் வலிகளைக் கொட்டி அழ... தாயின் மடியைவிட.. தோழமையின் நிழல் உகந்தது.. ஆனால்.. அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே...
என்னவென்று அவளால் சொல்ல முடியும்..? அவள் காதலித்தவனே அவளது காதலை அறியாமலிருக்கும் போது... அதைப்பற்றித் தோழியிடம் சொல்லி அழ ராதிகாவுக்கு மனமில்லை...
அதைச் சொன்னால் அத்தோடு நின்று விடுமா..? அடுத்து பாலமுரளி வகுத்த வியூகங்களைப் பற்றி சொல்ல வேண்டி வந்து விடாதா..?
என்னதான் நெருங்கிய தோழியாக இருந்தாலும்.. ராதிகாவுடைய அந்தரங்கத்தை அவளிடம் சொல்லி விட முடியுமா...? தோழமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே...
"என் கதையை விடுடி.. அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே... உன் கதைக்கு வா... என்ன சொல்கிறார் உன் ஆள்..."
ராதிகா ஹேமாவின் கழுத்தில் கைகளை மாலையாகப் போட்டுக் கேட்க.. அவள் வெட்கி முகம் சிவந்தாள்...
"போ ராது... அவர் ரொம்ப மோசம்..."
"அடிப்பாவி... அந்த அளவுக்கு போயிட்டியா...?"
"சேச்சே.. அவர் என் பின்னாலேயே சுத்திச் சுத்தி வர்றார்.. அதைச் சொன்னேன்..."
"இதை நான் நம்பனுமாக்கும்..."
"நம்பாட்டிப் போ..."
என்னவோ நகைச்சுவையைச் சொல்லி விட்டதைப் போல அவள் சிரிக்க.. ராதிகாவும் சேர்ந்து சிரித்தாள்... எதையோ நினைத்துக் கொண்டவளின் முகத்தில் சிரிப்பு மறைந்து.. வருத்தம் பரவியது...
"ஸாரிடி ஹேமா... நீ என்னைப் பற்றி செல்பிஷ்ன்னு நினைச்சிருப்ப இல்ல.. சங்கர் கூட மாதேஷின் வீட்டுக்குப் போகிறேன்னு சொல்லிட்டு.. சொன்ன சொல்லை நிறைவேத்தாம தேனூத்துக்கு வந்திட்டேன்னு மனசுக்குள்ள திட்டியிருப்ப இல்ல..."
வருத்தத்துடன் பேசிய தோழியின் கைகளில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் ஹேமா...
"நீ வரமாட்டேன்னு எனக்கும் தெரியும்.. சங்கருக்கும் தெரியும் ராது..."
"எப்படிடீ..." ராதிகா வழிவிரித்தாள்...
"உன் ஹஸ்பெண்டோட கார்.. ரொம்ப நேரமா காலேஜீக்குள்ளேயே நின்னுக்கிட்டு இருந்தது.. அது உன் ஹஸ்பெண்டோட கார்ன்னு எனக்குத் தெரியாது.. காஸ்ட்லி கார்ங்கிறதால நோட் பண்ணினேன்... அதுக்கப்புறமா பார்த்தா... அது உன் ஹஸ்பெண்டோட காரா இருக்குது.. அப்பவே எனக்கத் தெரியும்... நீ வரமாட்டேன்னு... உன்னை அவர் திட்டியிருப்பாரோ... அதனால நீ கஷ்டப்பட்டிருப்பியோன்னுதான் நானும்... சங்கரும் கவலைப் பட்டோம்..."
அதற்கு மேல் ஹேமாவும் பேசவில்லை... ராதிகாவும் பேசவில்லை.. மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.. ஹேமா.. குளியலறைக்குள் போக... ராதிகா யதேச்சையாக அறை வாசலைப் பார்த்தாள்... அங்கே நிழலாடியது..
'யாராக இருக்கும்...'
அவள் சென்று பார்த்தபோது... பாலமுரளி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான்...
'இவன் மில்லுக்குப் போனானே...'
ராதிகாவின் இதயத்தில் ரயில் ஓட ஆரம்பித்தது... அவன் அருகில் இல்லையென்ற நினைவில் சுதந்திரமாக ஹேமாவுடன் பேசியவளின் மனதில் பயம் சூழ்ந்தது...
"அம்மா.. உங்களையும்.. உங்க சிநேகிதப் புள்ளையையும் சாப்பிடக் கூப்பிட்டாறச் சொன்னாங்கம்மா..." மீனாட்சி வந்து அழைத்தாள்..
"இதோ.. வர்றோம் மீனாட்சி..."
"ஏம்மா.. எனக்கொரு சந்தேகம்..."
"என்னவாம்..?"
"இந்தப் புள்ளயும் உங்ககூட படிச்சதுன்னு சொல்றிங்க.. அந்த ஷோபாப் புள்ளயும் உங்க கூடத்தான் படிச்சதுன்னு சொன்னீங்க..."
"ஆமாம்.. அதுக்கென்ன இப்ப...?"
"இது மட்டும் அடக்க ஒடுக்கமா.. பொம்பளப் புள்ளையா.. லட்சணமா இருக்குது.. அந்தப் புள்ள மட்டும் ஏம்மா.. அப்படி இருக்குது..."
"இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்.. படைச்சு வைச்ச பகவான்தான் இதுக்கொரு பதிலைச் சொல்லனும்..."
"அவருகூட அந்த ஷோபாப் புள்ளயப் பத்தி சொல்ல யோசிப்பாரும்மா..."
மீனாட்சியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே.. குளியலறையில் இருந்து வெளிவந்த ஹேமா சிரித்து விட்டாள்.. கூடச் சேர்ந்து சிரிக்கும் மனநிலையில் ராதிகா இல்லை...
"என்னடி ஆச்சு...? சோர்ந்து தெரியற... இப்ப வரைக்கும் நல்லாத்தானே இருந்த..?" ஹேமா கவலையுடன் விசாரித்தாள்...
"ஏம்மா.. காய்ச்சல்.. கீய்ச்சல் வந்துருச்சா..?" மீனாட்சி சந்தேகமாய் பார்த்தாள்...
"இவ ஏண்டி இப்படிப் பார்க்கிறா.." ஹேமாவுக்கு புரியவில்லை...
"அதை என்கிட்டக் கேளும்மா... இந்தம்மாவுக்கு சரக்குன்னா காய்ச்சல் வந்திரும்..." மீனாட்சி விளக்கம் சொன்னாள்...
"இவளுக்கா காய்ச்சல் வரும்..? இருக்காதே..." ஹேமா அடித்துப் பேசினாள்...
"அப்ப... நான் பொய்யா சொல்றேன்...?" மீனாட்சி சண்டைக்கு வந்தாள்..
"அதுக்கில்லை மீனாட்சி.. நீ சொன்ன ஷோபாவுக்குத்தான் இவ தலைவலியை வர வைப்பா.. ஆனா... ஒருநாளும்.. இவ தலை வலிக்குதுன்னு கூட சொன்னதில்ல.. இவளுக்குப்போய் காய்ச்சல் வரும்... அதுவும் அடிக்கடி வரும்ன்னு சொன்னா.. அதை என்னால நம்ப முடியுமா..?"
"அது அப்போ... இது இப்போ... அதென்னவோம்மா.. இப்பல்லாம் எங்க சின்னம்மா.. அடிக்கடி காய்ச்சலில் விழுந்துடறாங்க..." மீனாட்சி வெகுவாக வருத்தப் பட்டு விட்டு கீழே இறங்கிப் போனாள்...
ராதிகாவைப் பார்த்தால் காய்ச்சல் வந்தவளைப் போலவே இருந்து வைக்க.. ஹேமா கவலைக்கு ஆளானாள்...
"என்னடி..?" என்று துளைத்தெடுத்தாள்...
"ஒன்றுமில்லடி..." குரல் நடுங்க மறுத்து விட்டு.. அவளை சாப்பிட அழைத்துக் கொண்டு போனாள் ராதிகா..
மதிய விருந்து தடபுடலாக இருந்தது.. சாப்பிட்டு முடிந்ததும் ஹேமா விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.. அவளை பாலமுரளியுடன் அனுப்பி வைத்துவிட்டு உள்ளே திரும்பிய ராதிகாவிடம்... மகனைப் பற்றி சிலாகித்தாள் மேகலா...
"உன் சிநேகிதிக்காக... உன் புருசன் இன்னைக்கு மில்லுக்குக் கூடப் போகலை.. இப்பத்தான் போறான்..."
"ஆனா.. அவர் கிளம்பிப் போனாரே அத்தை..." ராதிகாவின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவதைப் போல ஒலித்தது...
"ஊஹீம்.. தெருமுனை வரைக்கும் போனவன்.. திரும்பி வந்துட்டான் நேரே.. மாடிக்குத்தானே வந்தான்.. உன்னிடம் சொல்லலையா...?"
அன்று இரவு... மீண்டும் ராதிகாவுக்கு காய்ச்சல் வந்து தொலைத்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -129
அம்மம்மா.. கேளடி தோழி...! -129
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-129.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-129.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy