விண்ணைத்தாண்டி வந்தாயே..! -1

விண்ணைத்தாண்டி வந்தாயே..! 1 அனைத்து அலுவலகங்களிலும் காலையில் காணப்படும் பரபரப்பு அந்த அலுவலகத்திலும் நிலவியது.. ' மேக்னோ கண்ஸ...


விண்ணைத்தாண்டி வந்தாயே..!

1

அனைத்து அலுவலகங்களிலும் காலையில் காணப்படும் பரபரப்பு அந்த அலுவலகத்திலும் நிலவியது.. 'மேக்னோ கண்ஸ்ட்ரக்சன்..' என்று தங்க எழுத்துக்களால் கரும்பச்சை கிரானைட் கல்லில் பொறிக்கப் பட்ட எழுத்துக்களை ஒட்டிக் காண்பிக்கப்பட்ட அம்புக்குறி காட்டிய வழியில் நடந்து அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்தவள் வரவேற்புப் பகுதியில் இருந்த பெண்ணிடம்..
"எக்ஸ்யூஸ் மி.." என்றாள்..
"யெஸ்.." என்று நிமிர்ந்தாள் அந்த ரோஜா நிற அழகி..
"எம்.டியைப் பார்க்கனும்.."
"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா..?"
"ம்ம்ம்.."
மேனேஜிங் டைரக்டரின் பெர்சனல் போன் நம்பரைக் கொண்ட விசிட்டிங் கார்டை நீட்டினாள்.. அதை வாங்கிக் கொண்ட ரிசப்சனிஸ்ட்டின் முகத்தில் மரியாதை கலந்த வியப்பு வந்திருந்தது..
"இது எங்க எம்.டியோட பெர்சனல் விசிட்டிங் கார்டாச்சே.. இம்பார்டண்ட் பெர்சனுக்குத்தான் இந்த விசிட்டிங் கார்டைக் கொடுப்பார்.. ஸோ.. யு ஆர் தி இம்பார்ட்டண்ட் பெர்சன்.."
ரிசப்சனிஸ்ட்டின் பேச்சிற்கு பதில் சொல்லாமல் மென்மையாக முறுவலித்தாள்.. அவளிடம் நிலவிய சாந்தமான அழகு ரிசப்சனிஸ்டைக் கவர்ந்தது.. மெலிதான மேக வண்ணத்தில் அடர்நீலக் கரையிட்ட காட்டன் புடவையை உடுத்தியிருந்தாள்.. கழுத்தில் சன்னமான சங்கிலி.. காதுகளில் சிறிய தோடுகள்.. வலது கையில் ஒற்றை வளையல்.. இடது கையில் கைக்கடிகாரம்.. கெட்டியான துணியினால் தைக்கப்பட்டிருந்த கைப்பையை வைத்திருந்தாள்..
'இம்வளவு சிம்பிளா..?'
எளிமையிலும் பாந்தமான அழகுடன் இருந்தவளை ரிசப்சனிஸ்ட்டிற்குப் பிடித்துப் போயிருக்க வேண்டும்..
"ஐ ஆம் ரோஜா..! இங்கே ரிசப்சனிஸ்ட்டா இருக்கேன்.." என்று கை நீட்டினாள்..
பதிலுக்கு கை பற்றிக் குலுக்கியவளின் விரல்கள் மிருதுவாக இருந்தன.. இவளும் மிருதுவானவள்தான் என்று நினைத்தபடி இண்டர்காமை எடுத்து மேனேஜிங் டைரக்டரை தொடர்பு கொண்ட ரோஜா..
"சார்.. உங்க பெர்சனல் விசிட்டிங் கார்டுடன் ஒரு யங் லேடி உங்களைப் பார்க்க வந்திருக்கிறாங்க.." என்றாள்.
"இம்மீடியட்டா உள்ளே அனுப்புங்க.. அவங்க என்னுடன் பேசி விட்டுப் போகிற வரைக்கும் எந்த விசிட்டரோ, போன் காலோ என்னை டிஸ்டர்ப் பண்ணவே கூடாது.. எல்லாவற்றையும் நிறுத்தி வையுங்க.. அண்டர்ஸ்டாண்ட்..?" மறுமுனையில் எம்.டி உத்தரவிட்டார்..
"யெஸ் சார்.." இண்டர்காமை வைத்து விட்டு எதிரிலிருந்தவளை ஆராய்ச்சியாக பார்த்தாள்..
'மேக்னோ கண்ஸ்ட்ரக்சன்..' என்பது தமிழகத்தில் மட்டுமல்ல.. இந்தியாவிலேயே புகழ்பெற்ற கட்டுமானத் தொழில் செய்யும் கம்பெனி.. அதன் முதலாளி தன்னைப் பார்க்க வரும் முக்கியமானவர்களையும், அதி முக்கியமான தொலைபேசி அழைப்புகளையும் நிறுத்தி வைத்து விட்டு ஒரு இளம் பெண்ணுடன் பேசப் போகிறார்.. அந்த அளவுக்கு அதி முக்கியமான விருந்தாளியான அந்தப் பெண்ணோ எளிமையான தோற்றத்துடன் தனக்கான முக்கியத்துவத்தைப் பொருட்படுத்தாத இயல்போடு காத்திருக்கிறாள்..
"உங்க இடத்தில வேற ஒருத்தர் இருந்திருக்கனும்.. இந்நேரம் ஹாய், ஹீய், நான் யார் தெரியுமான்னு அலட்டியிருப்பாங்க.. உங்களுக்காக எங்க எம்.டி எல்லா வேலைகளையும் நிறுத்தி வைத்துட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்.. நீங்க சிம்பிளா ஒரு சின்னச் சிரிப்போடு உட்கார்ந்திருக்கீங்களே.." விழிகளை விரித்தாள் ரோஜா..
"வேற என்ன செய்யனும்..?" அமைதியாக அவள் கேட்டாள்..
"பந்தா பண்ண வேண்டாமா..?"
அங்கலாய்த்த ரோஜாவை இமைகளை உயர்த்தி அந்தப் பெண் பார்த்த விதம் அலாதியான அழகோடு இருந்தது..
"நான் சாரைப் பார்க்கப் போகலாமா..?" வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பதைப் போல மிக மெல்லிய குரலில் கேட்டாள்..
"நல்லாக் கேட்டிங்க போங்க.. உங்களுக்காக எங்க எம்.டி அத்தனை புரோக்ராமையும் நிறுத்தி வைத்து விட்டுக் காத்திருக்கிறார்ன்னு இப்போதுதானே சொன்னேன்..? என்னிடம் பெர்மிசன் கேட்கறிங்களே.."
ரோஜா இருக்கையை விட்டு எழுந்து எம்.டியின் அறை வாசல் வரைக்கும் கூட வந்தாள்..
"இதுதான் எம்.டி சாரின் ரூம்.."
அவள் கைகாட்டிய அறையின் கதவில் 'பத்மநாபன் எம்.ஈ, மேனேஜிங் டைரக்டர்..' என்ற எழுத்துக்கள் மிளிர்ந்தன.. கதவை ஒற்றை விரலால் இவள் தட்ட..
"யெஸ்.. கமின்.." என்ற கனத்தகுரல் கம்பீரமாக ஒலித்தது..
ரோஜாவுக்கு நன்றி சொல்லும் விதத்தில் தலையை அசைத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்..
"வெல்கம் பேபி.." கனிவுடன் வரவேற்றார் பத்மநாபன்..
"வணக்கம் அங்கிள்.." இவள் கரம் குவித்தாள்..
"உட்காரும்மா.."
அவள் உட்கார்ந்தாள்.. கையிலிருந்த கனத்த ஃபைலை அவரிடம் நீட்டினாள்.. அவர் புருவங்கள் சுருங்க..
"இது என்னம்மமா..?" என்று அதட்டினார்..
"என் செர்ட்டிபிகேட்ஸ் அங்கிள்.. ஃபைனல் செமஸ்டர் ரிசல்ட் இன்னும் வரலை.. மற்ற செர்டிபிகேட்ஸ் இருக்கு.."
இமைக்காமல் அவளை அவர் பார்த்த பார்வையில் பலத்த கண்டனம் இருந்தது.. நேர் கொண்ட பார்வையாய் அவரது பார்வையை சந்தித்தவளின் விழிகளில் தெரிந்த திடத்தில் பெருமூச்சு விட்டார்..
"வேண்டாம்மா.. உன் குவாலிபிகேசனைப் பார்த்து நான் உனக்கு வேலை கொடுக்கிறதாக இல்லை.."
"நீங்க கொடுக்கிற வேலைக்கு நான் தகுதியானவளா இருக்க வேண்டாமா அங்கிள்..?"
"எனக்கு உன் குவாலிபிகேசன் என்னன்னு தெரியாதாம்மா..? இந்த ஃபைலை பார்த்துத்தான் தெரிந்துக்கனுமா..?"
"மார்க், ரேங்க்ன்னு நிறைய இருக்கே அங்கிள்.."
"நீ யார்ன்னு எனக்குத் தெரியும்.. ஸோ.. இதைப் பத்தின ஆர்கியுமெண்டை ஸ்டாப் பண்ணிக்கலாம்."
அவள் மௌனமாக ஃபைலை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.. அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவரை சலனமற்ற முகத்துடன் ஏறிட்டாள்..
"உன் முடிவை மாற்றிக்க மாட்டடியா அம்மா..?"
பத்மநாபனின் விழிகளில் சொல்லொண்ணாத் துயரம் இருந்தது.. அவரது பார்வை அவளிடம் எதையோ மன்றாடியது.. யாசித்தது.. இரக்கம் காட்டு பெண்ணே என்று இறைஞ்சியது..
அவள் அசைவற்று பாறை போல இறுகியிருந்தாள்..
"இப்போதும் நேரம் கடந்து விடவில்லை பேபி.. உன் டாடியிடம் நான் பேசுகிறேன்.. உன் முடிவை மாற்றிக் கொள்.."
"மாற்றிக் கொள்ளும் முடிவை நான் எடுக்கவில்லை அங்கிள்.. சில முடிவுகள் மாற்ற முடியாதவை.. மாற்றக் கூடாதவை.."
"நீ இன்ஜினியரிங் படித்தவள்ன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க.."
"நீங்களும் நம்ப மாட்டிங்களா அங்கிள்..? நம்பாமலா என் செர்டிபிகேட்ஸை கூட வெரிபை பண்ணாம எனக்கு வேலை போட்டுக் கொடுக்கறிங்க.."
"பேச்சிலேயே மடக்கி விடுவியே.. இந்த புத்திசாலித்தனத்தை தொலைத்து விட்டு இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாயே அம்மா.. நீ யார்.. எப்படிப்பட்டவள்.. உன் உயரம் என்ன.. இதைப் பற்றியெல்லாம் ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்திருந்தால் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பாயா..?"
"யோசித்துப் பார்க்க நான் உயிருடன் இருக்க வேண்டுமில்லையா அங்கிள்..? அந்த உயிரும் இந்த உடலும் எனக்குச் சொந்தமில்லைன்னு ஆன பின்பு யோசிப்பதில் அர்த்தம் என்ன இருக்கு..?"
பத்மநாபனின் இமைகள் துடித்தன.. கலங்கிய விழிகளுடன் பேசாமல் இருந்தார்.. அவள் விழிகளில் கலக்கமில்லை.. கண்ணீரும் இல்லை.. மௌனப் பாசறை போல இறுக்கமான முகபாவத்துடன் எதிரில் இருப்பவரைத் தயக்கமில்லாமல் நோக்கினாள்..
"உன் அம்மா, டாடி, அண்ணன், அண்ணின்னு ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் தூக்கி எறிந்து விட்டு உனக்கு யாரும் வேண்டாம்ன்னு வெளியில் வந்து விட்டாயே.. உன்னை உயிருக்குயிராய் காதலித்த பிரசன்னாவிற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிற..? அவனைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா..?"
இந்தக் கேள்வி அவளிடம் அதிர்வலைகளை எழுப்பி விடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. இரும்பு இளகவேயில்லை..
"அவரைப் பற்றி நினைத்துப் பார்க்க என்ன இருக்கிறது..?" என்று நிதானமாக கேள்வி கேட்டு அவரைத்தான் அதிர வைத்தாள்..
"ஒன்றுமேயில்லையா..? உனக்கும் அவனுக்கும் இடையே ஒன்றுமே இல்லையா..?" அவருக்கு நெஞ்சை வலிப்பதைப் போல இருந்தது..
"ஒன்ன்ன்..றுமே இல்லை அங்கிள்.." அழுத்தம் திருத்தமாக அவள் சொன்னாள்..
"நீ அவனைக் காதலித்தாய் அம்மா.. அவனைப் போலவே உயிருக்குயிராய் காதலித்தாய்.. அதெல்லாம் பொய்யா..?"
"என் உயிரே எனக்குச் சொந்தமில்லை என்கிறேனே அங்கிள்.. உயிருக்குயிரான காதல் மட்டும் எப்படி எனக்குச் சொந்தமாகும்..?"
நெற்றிப் பொட்டில் அடித்ததைப் போன்ற அந்தக் கேள்வியில் நிலை குலைந்தவர் நெற்றிப் பொட்டுக்களை பிடித்து விட்டுக் கொண்டார்..
அவர் கேட்ட கேள்வியினால் துளியும் பாதிப் படையாமல் கற்சிலையைப் போல அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்.. அடுத்தவரின் துயரம் பாதிக்காமல் தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்து வாழும் பெண்ணல்ல அவள்.. மற்றவரின் துயரம் கண்டு துடித்துப் போய் விடுவாள்.. அதுவும் அவளால்தான் அவர்களுக்கு அந்தத் துயரம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் உயிரையே விட்டு விடுவாள்.. அவளின் அத்தகைய ஈர மனதும் இரக்க குணமும் தான் அவளை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது..
எந்த குணங்களை பிரசன்னா போற்றி அவளைக் காதலித்தானோ.. அந்த அவளின் குணமே அவளுக்கும் பிரசன்னாவிற்கும் இடையில் இருந்த காதலை உடைத்து நொறுக்கித் தூள் தூளாக்கி விட்டது..
"அவள் தேவதை டாடி.."
அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் பிரசன்னாவின் கண்களில் கனவு மிதக்கும்.. காதல் துள்ளும்.. அவனைச் சுற்றி வந்த பேரழகிகளைத் தவிர்த்து அவன் சாருலதாவிடம் மையல் கொண்டான்.. அவளைத் தீவிரமாக காதலித்தான்..
அவனது காதலுக்கு சற்றும் குறைந்ததல்ல அவளது காதல்.. பிரசன்னாவிற்காக உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருந்தவள்தான் அவள்.. அவள்தான் சொல்கிறாள்.. அவளது உயிர் அவளுக்குச் சொந்தமானதல்ல என்று.
"நீயும் பிரசன்னாவும் அமெரிக்காவில் வாழ்வதற்காக அங்கே அவன் வசந்த மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறான் அம்மா.."
"வசந்த மாளிகையில் குடியிருக்க அவருக்கு ஏற்றவளாய் ஒரு ஏஞ்சல் வருவாள் அங்கிள்.."
"உன்னைத்தானே அவன் தேவதையென்று சொன்னான்.."
"இல்லை அங்கிள்.. நான் தேவதையில்லை.. தேவதைகள் வரம் கொடுப்பவர்கள்.. வரம் பெறுபவர்கள் அல்ல.. நான் மனுஷி அங்கிள்.. ரத்தமும் சதையுமாக உணர்வு பூர்வமான மனதைக் கொண்ட மனுஷி.. வரம் வாங்கியிருப்பவள்.. இந்த வாழ்வையும் உயிரையும் வரமாக வாங்கியிருக்கிறேன்.. இவையிரண்டும் என்னுடையவை அல்ல.."
இப்படிப் பேசுபவளை என்ன செய்வது..? இந்த வாதத்திற்கு எந்த எதிர்வாதத்தை முன் வைப்பது..? அவளிடம் பேசாத ஆளில்லை.. போடாத சொந்தமில்லை.. எவரது பேச்சும் அவளது செவிகளில் ஏறவில்லையே.
அவள் பிடித்த பிடியில் அவள் பிடிவாதமாக இருந்தாள்.. எடுத்த முடிவில் உறுதியாக நின்றாள்.. எவராலும் வசப்படுத்த முடியாத அவள் மனதை வசப்படுத்தி விட்டதாக பிரசன்னா கனவு கண்டான்.. பெருமைப் பட்டான்.. அவனிடம் அவள் மனம் வசப்படவில்லையே..
"பிரசன்னாவிற்கு என்ன குறைம்மா..?"
"என்ன கேள்வியிது அங்கிள்..? அவரிடம் என்ன குறையிருக்கிறது..? ஹி இஸ் எ கம்ப்ளீட் மேன்.."
"அப்புறமும் ஏன் அம்மா அவனை புறக்கணிக்கிறாய்..?"
"இல்லை அங்கிள்.. நான் அவரைப் புறக்கணிக்கவில்லை.. விலகிப் போகிறேன்.. தட்ஸ் ஆல்.."
அவ்வளவுதானா..? அவளுக்கும் பிரசன்னாவிற்கும் இடையே இருந்த காதல் அவ்வளவுதான் என்ற ஒற்றைச் சொல்லில் ஓடி விடக் கூடியதா..? ஒரே வார்த்தையில் பிரசன்னாவைத் தூக்கி எறிந்து விடக் கூடிய குணம் படைத்தவளா அவள்..?
இல்லையே.. அவள் தங்கமான குணம் படைத்தவளாயிற்றே.. மென்மையான மனம் கொண்டவளாயிற்றே.. இந்த இரண்டும் அவளைப் பிரசன்னாவிடமிருந்து பிரித்து நிறுத்துமா..?
"நீ நியாயமான பெண் அம்மா.."
"தேங்க் யு அங்கிள்.. இதை பிரசன்னாவிடம் சொல்லுங்கள்.."
"பட்.. உனக்கு நியாயம் என்று படுவதை நீ செய்வதால் பிரசன்னாவின் காதல் அழிகிறதே அம்மா.. அவனுக்கு நீ செய்வது அநியாயமில்லையா..?"
"இதைத்தான் அவரும் சொல்கிறார்.. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கலாம் அங்கிள்.. திசைகள் நான்காக இருக்கலாம்.. ஆனால் நியாயத்திற்கு பக்கங்கள் இல்லை.. திசைகளும் இல்லை.. நியாயத் தராசு எந்தப் பக்கமும் சாயாது.. நேர்கோட்டில் நிலைத்து நிற்கும்.. நான் நியாயத்தராசை கையில் பிடித்திருக்கிறேன் அங்கிள்.. என் மனம் பிரசன்னாவின் பக்கம் சாயவே சாயாது.. இதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.."
'என்னத்தை எடுத்துச் சொல்வது..?'
தலைவலி தாங்காமல் இண்டர்காமை எடுத்த பத்மநாபன் அவரது பெர்சனல் செக்கரட்டரியான ரூபாவை அழைத்து சூடாக இரண்டு கப் காபியை அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.. அவள் 'சரி' என்று மட்டும் சொல்லி விட்டு இண்டர்காமை வைத்திருக்கலாம்.. அப்படிச் செய்யாமல்..
"சார்.. மிஸ்டர் நீலமேகம் உங்களைப் பார்க்க வந்து ரொம்ப நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.." என்று சொல்லி விட்டாள்..
அதிமுக்கியமான விருந்தாளியிடம் நான் பேச வேண்டியிருக்கிறது.. எவரையும் எந்த போன்காலையும் என்னை தொந்தரவு செய்யும் வகையில் அனுமதிக்க வேண்டாம் என்று பத்மநாபன் ரோஜாவிடம் உத்தரவிட்டிருந்த விவரம் பாவம் ரூபாவுக்கு தெரியவே தெரியாது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: விண்ணைத்தாண்டி வந்தாயே..! -1
விண்ணைத்தாண்டி வந்தாயே..! -1
https://1.bp.blogspot.com/-9E_46lr0k9Q/XnzIDbfW0ZI/AAAAAAAAAzY/4NBBiR2C6AYmQ0FbhMQhNjhuKSg8XWqbACLcBGAsYHQ/s320/vinnaithandi%2Bvanthaye.jpg
https://1.bp.blogspot.com/-9E_46lr0k9Q/XnzIDbfW0ZI/AAAAAAAAAzY/4NBBiR2C6AYmQ0FbhMQhNjhuKSg8XWqbACLcBGAsYHQ/s72-c/vinnaithandi%2Bvanthaye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/vinnaiththaandivanthaaye-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/vinnaiththaandivanthaaye-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy