தேரில் வந்த திருமகள் ..! -8

8 ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்.. அம்புஜம் வாயைத் திறந்தால் ஊரே பம்மும்.. அப்பேற்பட்ட வாய் தாட்டியக்காரியிடம் வந்து பார் வட்டப்பாறைக...


8

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்.. அம்புஜம் வாயைத் திறந்தால் ஊரே பம்மும்.. அப்பேற்பட்ட வாய் தாட்டியக்காரியிடம் வந்து பார் வட்டப்பாறைக்கு என்று அசால்ட் ஆறுமுகமாக சவால் விட்டுக் கொண்டிருந்தார் சுதர்சனம்.. ஊரே பம்மும் வாய்தாட்டியம் படைத்த அம்புஜம் சுதர்சனத்திடம் பம்ம வேண்டியிருந்தது.. அவள் எதைப் பேசினாலும் அதற்கு எதிர் பேச்சைப் பேசி வாயை அடைத்து விடும் சுதர்சனத்தைப் பேச்சில் ஜெயிக்க அவளால் முடியவில்லை.
'எதப் பாடினாலும் எசப்பாட்டு படிக்கறவனைப் போல, எதப் பேசினாலும் எசப்பேச்சு பேசி வாய அடைக்கிறானே.. வித்தாரக் கள்ளன்..! ஆனாலும் இவனுக்கு இம்புட்டு அறிவு ஆகாது..'
பூஜையறைக்குச் சென்றபடி விரல்களை நெட்டி முறித்தாள் அம்புஜம்.. அதை சுமித்ரா பார்த்து விட்டதில் இவள் கண்களில் கனல் பறந்தது...
சுமித்ரா தசரதனிடம் போட்டுக் கொடுத்து விடுவாள் என்ற அச்சமெல்லாம் அவளுக்கு இல்லை.. அப்படி அவள் போட்டுக் கொடுக்க வேண்டும்.. 'பார் அண்ணா.. உன் பெண்டாட்டி என்னை எப்படியெல்லாம் பேசுகிறாள் என்று பார்..' என்று கண்ணைக் கசக்கி.. தசரதனைத் தூண்டி விட்டு, சுமித்ராவின் குடுமியைப் பிடித்து ஆட்டவேண்டும் என்ற கனவு அவளுக்கு வெகு காலமாக இருந்தது.. சுமித்ரா அதற்கு வாய்ப்புக் கொடுத்ததேயில்லை.. அம்புஜத்திடம் அவள் வாய் கொடுக்க மாட்டாள்.. தசரதனிடம் நாத்தனாரைப் பற்றிப் போட்டுக் கொடுக்கவும் மாட்டாள்..
'அம்மணி கோள் சொல்ல மாட்டாகளாம்.. பொறணி பேசவும் மாட்டாகளாம்.. ஆனா அத்தனையையும் கொண்டு போயி அவ அண்ணன் காதில மட்டும் ஓதுவாளாம்.. அவன் நேரம் பாத்து என்ன எங்கண்ணன்கிட்ட மாட்ட வைப்பானாம்.. ஊமை ஊரக் கெடுக்குமாம்.. பெருச்சாளி வீட்டக் கெடுக்குமாம்.. வித்தராக்கள்ளி.. ஊமக் கோட்டான் மாதிரி வேசம் கட்டிக்கிட்டு கூடப் பொறந்தவனத் தூண்டி விடுவா.. அண்ணன்காரன் எட்டு ஊரையும் வித்தாரம் பேசியே விரட்டியடிப்பாங்கிற தெனாவெட்டு..'
அம்புஜத்திற்கு வயிறு எரிந்தது.. சுதர்சனத்தின் திறமையை குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற புத்திசாலித்தனம் கொண்டவள் அம்புஜம்.. மதியூகி.. !
அமைதியாக இருந்தபடியே அவளை ஆட்டிப்  படைக்கும் சுதர்சனத்தின் வருகை அவளது வயிற்றில் புளியைக் கரைத்தது.. அண்ணன் மகனின் தலையில் தன் மகளைக் கட்டி வைத்து விடும் திட்டத்தை சுதர்சனம் தூள் பறக்கச் செய்து விடுவாரோ என்ற சந்தேகமே அவளுக்கு வரவில்லை.. நிச்சயமாக அவர் அதை செய்து விடுவார் என்று அவளுக்குத் தெரியும்..
'யாரு இவன்..? கடைஞ்செடுத்த வினயக்காரனாச்சே..'
என் அண்ணன் மகனுக்கு நான் பெண் கொடுக்கிறேன்.. ஊடே வர நீ யார் என்று கேட்டு விடவும் முடியாது.. ரகுநந்தன் அவளுக்கு அண்ணன் மகனென்றால் சுதர்சனத்திற்கு தங்கை மகன்..
'வாயத் தொறக்கட்டும்.. அப்போப் பார்த்துக்கலாம்..'
அம்புஜம் சுதர்சனம் வாயைத் திறந்தால் கொடுத்துக்கட்டி விடலாம் என்று காத்திருந்தாள்.. சுதர்சனமும் எது எதற்கோ வாயைத் திறந்து அம்புஜத்தைக் கொடுத்துக் கட்டித் தோரணமாக தொங்க விட்டார்.. தங்கை மகனின் திருமணத்தைப் பற்றி மட்டும் வாயைத் திறக்கவில்லை..
'கல்லுளி மங்கன்..!'
அம்புஜம் மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.. சுதர்சனத்தின் அமைதிக்குள் அடங்கியிருக்கும் புயலைப் பற்றிய அச்சம் அவளது தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது.. காரணமில்லாமல் சுதர்சனம் தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன் தங்கை வீட்டில் முகாமிட்டிருக்க மாட்டார் என்று அம்புஜத்திற்கு நன்றாகவே தெரியும்..
 ரகுநந்தன் தொட்டதெற்கெல்லாம் தாய்மாமனிடம் ஓடி விடுவான்.. சுதர்சனமும் தோள் தட்டிக் கொண்டு நியாயம் கேட்க வந்து விடுவார்.. ஆனானப்பட்ட தசரதனே மைத்துனன் குரல் கொடுத்தால் அடங்கிப் பதில் சொல்லுவார் எனும்போது அம்புஜத்தால் பேச முடியுமா..?
'மகராசன்.. வாயத் தொறந்தா டாண் டாண்ணு மணியடிச்ச மாதிரி பாயிண்டு பாயிண்டா பிச்சு உதறுறானே.. வக்கீலுக்குப் படிச்சிருந்தா கொடி கட்டிப் பறந்திருப்பான்.. மத்த வக்கீலுக பொழைச்சுப் போகட்டும்ன்னு விட்டு வைச்சுட்டான் போல..'
அம்புஜமே மனதுக்குள் பாராட்டுப் பத்திரம் வாசித்து விடுவாள்.. மருமகன் என்று வந்து விட்டால் சுதர்சனம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வீடுகட்ட வந்து விடுவார்..
ஒன்றும் இல்லாததிற்கே ஒரு நாள் முழுக்கப் பஞ்சாயத்து வைக்கும் சுதர்சனம், தங்கை மகனின் வாழ்க்கைப் பிரச்னையைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பதுதான் அம்புஜத்திற்குக் கோராமையாக இருந்தது... அவளும் சுதர்சனம் இருக்கும் போது வேண்டுமென்றே தசரதனிடம் திருமணத்தைப் பற்றிய பேச்சை வளர்த்தாள்..
"நம்ம சித்ராவுக்கு ரகுமேல கொள்ள ஆசையண்ணா.."
இதற்கு சுதர்சனம் என்ன பதிலைச் சொல்லப் போகிறார் என்று  ஓரக் கண்ணில் பார்த்தால், அவர் மூக்கை உறிஞ்சி வாசனை பிடித்தார்..
"சுமித்ரா.. இன்னைக்கு விடக்கோழி கொழம்பு போல... எட்டூருக்கு வாசம் வருது.. அப்புடியே சுக்கா வறுவலும் வைச்சா ஒரு வெட்டு வெட்டிறலாம்.."
கடைசி இரண்டு வார்த்தைகளைச் சொல்லும் போது மட்டும் அம்புஜத்தைப் பார்த்து வைத்தார்.. அவளுக்குப் பகபகவென வந்தது.. பக்கத்தில் அவளைத் தொட்டுத் தாலிகட்டிய கிருஷ்ணனும் இருக்கிறார்.. ஏண்டா.. என் மனைவியைப் பார்த்து ஜாடை பேசுகிறாய் என்று ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா..? அதை விட்டு விட்டு அந்த மனிதர் நாக்கைச் சப்புக்கொட்டி..
"சுக்கா வறுவலெல்லாம் மட்டன் கறியில செய்யனும் தம்பி.. அதான் நல்லாயிருக்கும்.." என்று அபிப்ராயம் சொல்லிக் கொண்டிருந்தார்..
'திங்கப் படிச்ச மனுசன்..! திங்கறதத் தவிர வேற எதையும் பேச வாயத் திறக்கிறதில்ல..' பற்றிக் கொண்டு வந்தது அம்புஜத்திற்கு..
வேறு பேச வாய் திறந்தால் அம்புஜம் உண்டு இல்லையென்று ஆக்கி விடுவாள் என்பதினால் அவர் உண்பதைத் தவிர வேறு எதற்கும் வாயைத் திறப்பதில்லை என்பது அவளுக்கு வசதியாக மறந்து போனது..
"சித்ரா பாடினா இன்னைக்கு முழுவதும் கேக்கலாம்.. ரகு கொடுத்து வைத்தது அண்ணா.." அம்புஜம் சொல்லி வாய்மூடுமுன்..
"அவன் கொடுத்து வைத்த லட்சணம்தான் ஊருக்கே தெரியுமே.. சொந்த ஊரிலே வேலை கிடைச்சும், சென்னைக்கு டெபுடேசன் வாங்கிக்கிட்டு ஓடிப் போயிருக்கானே.. இதவிடவா கொடுத்து வைக்கணும்..?" என்று கேட்டு அம்புஜத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார் சுதர்சனம்.. அத்துடன் நிறுத்தாமல்..
"ஏன் அண்ணா..? உங்க மகளுக்குப் பாடத் தெரியுங்களா..?" என்று படு ஆச்சரியமாக கிருஷ்ணனைப் பார்த்து கேட்டு வைத்தார்.
அவரையும் மதித்துக் கேள்வி கேட்டதில் புளகாங்கிதப் பட்டுப்போன கிருஷ்ணன் பரவசமாக..
"ஆமாம் தம்பி.. எங்க சித்ரா வாயத் தொறந்து 'கொட்டப் பாக்கும், கொழுந்து வெத்தல'யும் பாட்டப் பாடினா எங்க வீட்டு எருமமாடு கட்டுத்தறிய அறுத்துக்கிட்டு ஓடிரும்ன்னா பாருங்களேன்.." என்று பெருமை பீற்றி அம்புஜத்தின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தார்..
'விளங்கிரும்.. இந்த ஆளு புருசன்னு எங்கண்ணன் என் தலையில கட்டி வைச்சதில என்பாடு பெரும் பாடா இருக்கு.. ஆணொன்னு பொண்ணொன்னு ரெண்டு புள்ளைகளுக்கு அப்பனா இருந்து என்ன பிரயோசனம்.. அதுகள கரையேத்தனும்ங்கிற பொறுப்பு கடுகளவாவது இந்த மனுசன்கிட்ட இருக்குதா..? இம்சை.. பொறந்ததுக ரெண்டும் இந்த ஆளைப் போலவே தின்னிப் பண்டாரமா இருந்து என் உயிரைக் குறைக்குதுக.. குண்டனையும் குண்டத்தியையும் யாரு கட்டிக்குவாங்க..? என் அண்ணன் வீட்டில பொண்ணக் கொடுத்து பொண்ண எடுத்தாத்தான் என் பொழைப்பு பொழைப்பா இருக்கும்.. இல்லேன்னா இதுகளுக்கு வழி பார்க்கிறதுக்குள்ள நான் ஒருவழியாகிருவேன்.. இதெல்லாம் இந்த வெட்டி ஆம்பளைக்கு பிடிபடுதா..?'
அம்புஜத்தின் மனம் புலம்பும் புலம்பலை அச்சுப் பிசராமல் அவதானித்து விட்ட சுதர்சனம் குறுஞ்சிரிப்பு சிரித்து வைத்தார்.
"கேட்டுக்கங்க மச்சான்.. உங்க தங்கச்சி மக பாடினா எரும மாடே கட்டுத்தறிய அறுத்துக்கிட்டு ஓடிப் போயிருமாம்.. அஞ்சறிவு இருக்கற அதுவே ஓடிப் போகும் போது ஆறறிவு படைச்ச என் தங்கச்சி மகன் ஊரு விட்டு ஊரு ஓடி ஒளிய மாட்டானா..?"
சுதர்சனம் கேட்ட கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க தசரதன் தங்கையின் மீது எரிந்து விழுந்தார்..
"இப்ப உன் மக 'கொட்டப் பாக்கும்.. கொழுந்து வெத்தலயும்'ன்னு பாட்டுப்பாடி எருமையை ஓட வைச்ச கதையை ஊரு முழுக்க சொல்லியாகனுமா..?"
"அண்ணா.. அது வந்து.."
"வாயை மூடு.. எரிகிற கொள்ளியில எண்ணையை ஊத்திக்கிட்டு.. பேசத் தெரிஞ்சா பேசு.. இல்லேன்னா வாயை மூடிக்கிட்டு இரு.. அதுக்கு முதல்ல உன் மக வாயை பாட்டுப் பாடக் கூடாதுன்னு மூடி வை.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு புறப்பட்டு வர்ற ரகு, உன் மக பாட்டக் கேட்டு பின்னங்கால் பிடறியில பட சென்னையைப் பாத்து ஓடிறப் போறான்.."
"அண்ணா..?"
பேச முடியாமல் வாயடைத்துப் போனாள் அம்புஜம்.. சுதர்சனத்திடம் உறண்டை இழுக்க அவள் பேசப் போனால் வினை அவள் பக்கமே திரும்பி வீடு கட்டி விளையாடுகிறதே.. தங்கை மகள் என்ற பாசத்திலிருக்கும் தசரதனே சித்ரா பாட்டுப் பாட வாயைத் திறக்கக் கூடாது என்று சொல்லி விட்டாரே.
"ஹா.. ஹா.. ஹா.. மச்சான்.. முடியலை போங்க.."
விழுந்து விழுந்து சிரித்து அம்புஜத்திற்கு வெறியைக் கிளப்பி விட்டார் சுதர்சனம்.. அவரே அம்புஜத்தைக் கடுப்பேற்ற வாய்ப்புக் கிடைப்பதற்காக காத்திருப்பவர்.. லட்டு போல வரிசையாக முதல்லட்டு, இரண்டாம் லட்டு என்று 'சுதர்சனா.. லட்டு திங்க ஆசையா..?' என்று கேட்டுக் கொண்டு வாய்ப்புகள் வந்தால் விட்டு வைப்பாரா..? கபால் என்று பாய்ந்து கேட்ச் பிடித்து லபக் லபக் என்று விழுங்கி விட மாட்டாரா..?
"கிருஷ்ணன் அண்ணா.. அண்ணி பேசற பேச்சக் கேட்டு எங்க ஊரு திருவிழாவில பாட்டுக்கச்சேரி நடத்த சித்ராவத்தான் கூப்பிடலாம்ன்னு இருந்தேன்.. கழுதையில இப்படி ஆகிப் போச்சே.. மச்சானே தங்கச்சி பொண்ணு வாயத் தொறந்து பாடிரக்கூடாதுன்னு 'தடா' போடுறாருன்னா, எங்க ஊரு ஆளுக என்ன பொளந்து கட்டியிருப்பாங்க.. நல்லவேளை அண்ணா.. தப்பிப் பிழைச்சேன்.."
"அப்படியா தம்பி.. அடப் பாவமே.. உங்கள நல்லவரு, வல்லவரு.. நாலும் தெரிஞ்சவருன்னுல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. இப்படியொரு அப்புராணியா இருந்துருக்கீங்களே.."
"அப்புராணி..? யாரு..? நானு..? ஏனுங்க அண்ணா, உங்க மனசில என்னப் பத்தி இம்புட்டு உயர்வான அபிப்ராயங்கள வைச்சிருக்கிறது அண்ணிக்குத் தெரியுங்களா..?"
நமட்டுச் சிரிப்புடன் சுதர்சனம் கேட்ட பின்புதான் அம்புஜம் அருகில் இருக்கிறாள் என்ற விவரம் கிருஷ்ணனின் புத்தியில் உரைத்தது.. அவர் கலவரத்துடன் மனைவியைப் பார்த்தார்.. அவள் பார்வையில் அவரை 'கைமா' பண்ணி விடும் வெறி தெரிந்ததில் நடுநடுங்கிப் போனார்..
"ஹி..ஹி.. நான் நினைச்சேன்னு சொல்லலை தம்பி .. ஊர் நினைச்சதுன்னு சொன்னேன்.."
"இனி மாத்திப் பேசி பிரயோசனமில்லண்ணா.. ஊர் நினைச்சது உங்களுக்கு எப்படித் தெரியும்ன்னு நீங்க தனியா எம்புடும் போது அண்ணி மண்டகப்படி நடத்துவாக.. அவுகளுக்குப் பதில் சொல்லிக்கங்க.. சுமித்ரா.. சுக்கா வறுவல் ரெடியாம்மா..?"
சுதர்சனம் வெற்றிவாகை சூடியவராக கோழி வறுவலை ஒரு கை பார்க்கக் கிளம்ப, கூடவே கிருஷ்ணனும் தொற்றிக் கொண்டார்.. அம்புஜத்திடம் அகப்பட்டால் அவள் திருவிழா கொண்டாடி விடுவாளே..
"இருங்க தம்பி.. நானும் வர்றேன்.."
"உங்களுக்கு மட்டன் சுக்காதானே பிடிக்கும்..? இது சிக்கன் சுக்கா.."
"ஐ.. அஸ்க்கு, புஸ்க்கு..! யாருகிட்ட..? இப்படிச் சொல்லி சிக்கன் சுக்காவை என் கண்ணிலேயே காட்டக் கூடாதுன்னு ஐடியா பண்றீங்களா..? உங்களுக்கு இது தங்கச்சி வீடுன்னா, எனக்கு மச்சினன் வீடு.. நீங்க பொண்ணக் கொடுத்திருக்கீங்கன்னா, நானு பொண்ணக் கட்டியிருக்கேன்.. உங்களுக்கு இருக்கிற உரிமை எனக்கும் இருக்கு.. ஆமா.. சொல்லிட்டேன்.."
"ஆஹா..! கோழிக்கறிக்காக உரிமைப் போராட்டம் நடத்தறீங்களே.. இப்பேற்பட்ட புருசனைக் கட்டிக்க அண்ணி தவமாய் தவமிருந்திருக்கணும் போங்க.. அசத்தறிங்க அண்ணா.."
சுதர்சனம் அம்புஜத்தைப் பார்த்த கேலிப் பார்வையில் பூமியில் புதையுண்டு போனாலென்ன என்று வெறுத்துப் போனாள் அம்புஜம்..
இப்படிக் கோழிக்கறிக்கு மட்டும் உரிமை பேசும் கணவரை வைத்துக் கொண்டு அவள் நினைத்ததை எப்படி செய்து முடிப்பாள்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள் ..! -8
தேரில் வந்த திருமகள் ..! -8
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy