தேரில் வந்த திருமகள்..! -7

7 ஜாக்பாட் அடித்த மனநிலையில் இருந்தான் ரகுநந்தன்.. இன்னும் அவன் மடியில் அவள் படுத்திருக்கிறாள் என்ற உண்மையை அவனால் நம்பவே முடியவில்லை...


7

ஜாக்பாட் அடித்த மனநிலையில் இருந்தான் ரகுநந்தன்.. இன்னும் அவன் மடியில் அவள் படுத்திருக்கிறாள் என்ற உண்மையை அவனால் நம்பவே முடியவில்லை.. திருவாரூரில் காத்திருக்கும் சிற்றானை சித்ராவையும், அவளை அவன் தலையில் கட்டக் காத்திருக்கும் அத்தை அம்புஜத்தையும், அப்பா தசரதனையும் மறந்தான்.. அப்போதைய தேன் தடவிய மணித்துளிகளில் தேங்கி நிற்க விரும்பினான்..
இங்கே இப்படியிருக்க திருவாரூரில் அவன் வீட்டில் உள்வீட்டு யுத்தம் கனன்று கொண்டிருந்தது.. தங்கை மகனைத் தடுத்தாட்கொள்ள மனைவி மகன்கள் சகிதம் திருவாரூர் வந்து இறங்கியிருந்தார் சுதர்சனம்.. மைத்துனனின் பேச்சில் தமையன் மதி மயங்கி விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அம்புஜம் தன் கணவன், பிள்ளைகளோடு அண்ணன் வீட்டிற்கு வந்து விட்டாள்.. வீட்டில் குழுமியிருக்கும் விருந்தினரைக் கவனிப்பதற்குள் சுமித்ராவிற்கு தாவு தீர்ந்தது..
"என்னடி கொடுமை இது.." மகளிடம் புலம்பினாள்..
"நீங்க சொல்கிறீங்க.. என்னால சொல்ல முடியல.."
"எதைடி..?"
"இந்த முறை மாப்பிள்ளைகளோட ஜொள்ளைத்தான்.."
"அடிச்சேன்னா பாரு.. நான் என்னத்தச் சொல்றேன்.. நீ என்னத்தச் சொல்ற..? இப்படியாடி பேசி வைப்ப..?"
"உங்களுக்கு உங்க கவலை.. எனக்கு என் கவலை.. இந்த அம்புஜம் அத்தை ஒன்னோடு நின்னாத் தேவலாம்.. இது பெண்ணையும் இங்கே கொடுக்கனுமாம்.. பெண்ணையும் இங்கேதான் கட்டனுமாம்.. பேராசைம்மா.."
சுமித்ராவின் முகம் இறுகியது.. உலகிலேயே அம்புஜமும் தசரதனும்தான் அண்ணன் தங்கையாக பிறந்து விட்டார்கள் என்பதைப் போல அம்புஜம் அலட்டிக் கொள்ளும் அலட்டலை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. திருமணமாகி தசரதனின் மனைவியாக அந்த வீட்டில் பாதம் பதித்த நாளிலிருந்து இன்றுவரை அம்புஜத்தின் ஆட்டத்தை அவளால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.. கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை.. அம்புஜம் ஆடும் ஆட்டம் அத்தகையது..
"கடைசியில ரெண்டும் கனவாப் போகப் போகுது பாரு.." வெறுப்புடன் கூறினாள்..
"அது என்னவோ உண்மைதான்ம்மா.. பெத்து வைச்சிருக்கிற ரெண்டுமே பொந்தாம் பொதுக்குன்னு இருக்குதுக.. ஒன்றைக் கூட சூஸ் பண்ண முடியாது.."
"சத்தம் போட்டுப் பேசித் தொலைக்காதேடி.. உன் அத்தை காதில விழுந்து வைக்கப் போகுது.. சரியான லங்கிணி அது.." பயத்துடன் சுற்று முற்றும் பார்த்து வைத்தாள் சுமித்ரா..
"இப்படியாப்பட்ட தொடை நடுங்கி அம்மா வயித்தில பொறந்த கொடுமைக்குத்தான் அண்ணன் டெபுடேசன்ங்கிற பேரில தலைமறைவாகி சென்னைக்கு ஓடிப் போயிருச்சு.. இது என் வீடா, ஊரார் வீடான்னு தெரியாம நான் ரூமுக்குள்ள பதுங்கிக்கிட்டு இருக்கேன்.." தலையில் அடித்துக் கொண்டாள் ரதி மீனா..
"என்னை என்னடி பண்ணச் சொல்ற..? உங்கப்பாதான் ஊரில இல்லாத தங்கச்சியக் கண்டுட்டதைப் போலப் பாசப்பயிர வளர்க்கிறாரே.."
"அவரு மட்டும்தான் பாசப்பயிர வளர்ப்பாரா..? உங்களுக்கு வளர்க்கத் தெரியாதா..? இல்ல.. நீங்களும் உங்க அண்ணனும் பயிர் வளர்த்தா பாசமலர் மலராதா..?"
"ம்ஹீம்.. என்மேல என் அண்ணன் காட்டற பாசத்துக்கு இணையாகுமாடி உன் அப்பா தங்கச்சி மேல காட்டற பாசம்..?"
சுமித்ரா கர்வத்துடன் கேட்டாள்.. அதற்கும் தலையில் அடித்துக் கொண்டாள் ரதி மீனா..
"ஏண்டி..? நீதான பாசப்பயிரை வளர்க்கச் சொன்ன..?" சுமித்ரா பரிதாபமாக கேட்டாள்..
"இந்த லட்சணத்தில் வளர்க்கச் சொல்லலை.. ஏம்மா இப்படி எகனைக்கு மொகனையா புரிஞ்சு வைக்கறிங்க..? சும்மாவே அப்பா மலர்ந்தும் மலராமல்ன்னு ஆடிக்கிட்டு இருக்காரு.. இதில நீங்க வேற காலில சலங்கையைக் கட்டி விட்டிங்கன்னா ஆட்டம் ஜாஸ்தியாகிறாதா..?" மகள் சுட்டிக் காட்டினாள்..
"ஆத்தி.." சுமித்ரா பயந்து போனாள்..
"இதையே தாங்க முடியலை.. இன்னும் கொஞ்சம் கூடுச்சுன்னா என் கதியும் அண்ணன் கதியும் என்ன ஆகும்ன்னு யோசிச்சுப் பாருங்க.. மாமாவைத் துணைக்குக் கூப்பிட்டு அத்தை அம்புஜத்தோட ஆட்டத்தை அடக்கற வழியைப் பாருங்கன்னு சொன்னா நீங்க அண்ணன் தங்கை பாசத்தில எந்த அண்ணன் தங்கை பாசம் உசத்தின்னு போட்டியை அனௌன்ஸ் பண்ணி அப்பாவை உசுப்பேத்தி விடறிங்க.."
"அம்புஜத்தோட பேச்சை எடுத்தாலே புத்தி பேதலிச்சுருதுடி மகளே.. அடங்கறவளாடி அவ.."
"அதைச் சொல்லுங்க.. அடங்காத ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கற வீரன்களாலக் கூட இந்த அம்புஜம் அத்தையை அடக்க முடியாது.. இவங்க அவங்களை அடக்கி ஓட்டி விட்டிருவாங்க.." ரசித்துச் சொன்னாள் ரதி.. அதில் சுமித்ராவுக்கு கோபம் வந்து விட்டது..
"ஏண்டி.. ஆக்கிப் போடறது நானு.. நீ புகழ் பாடறதெல்லாம் உன் அத்தைக்கா..?"
"கோவிச்சுக்காதீங்கம்மா.. ஆயிரம்தான் சொல்லுங்க.. அத்தை 'செம தில் லேடி..' அதுக்கு இருக்கிற சாகசமும் தில்லும் யாருக்கு வரும்ங்கறிங்க..? அப்பாவோட ஜெராக்ஸா ஆம்பள மூஞ்சியா இருக்கறாங்க.. அதை அதிரூப சுந்தரின்னு கட்டிக்கிட்ட புருசன் வாயாலே சொல்ல வைக்கிறாங்க.. இந்தப் பக்கம் நீயும் நானும் ஒரு தாய் மக்கள் மட்டுமில்லண்ணே, ஒரு மூஞ்சி மக்கள்ன்னு அப்பாகிட்ட கண்ணாடியைக் கொடுத்து மூஞ்சியப் பாத்து உருகவும் வைக்கிறாங்க.. இதில வீதியில போகிறவங்களுக்குக் கூட வித்தாரக் கள்ளின்னு பெயரை வைக்கிறாங்க.."
"இது வித்தாரக்கள்ளியிலும் வித்தாரக்கள்ளி..! இது ஊருக்கே வித்தாரக் கள்ளின்னு பேரை வைக்குது.. புருசன் பிள்ளைகேளோட இங்கே வந்து டேரா போட்டிருக்குதே.. ஒரு துரும்பை எடுத்து இந்தப் பக்கம் அந்தப் பக்கம்ன்னு நகர்த்தி வைச்சிருக்குமா..? அத்தனையையும் என் அண்ணி பார்த்துக்கிட்டு இருக்காங்க.."
"அவங்க குணம் அப்படி.."
பிரியத்துடன் தாய்மாமனின் மனைவியான துளசியைப் பார்த்தாள் ரதிமீனா.. பெயருக்கேற்றார் போல அழகு சொட்டும் களையான முகம்.. அதில் தெரியும் சாந்தம் மிக்க சாத்வீகம்.. பூஜையறையில் சுவாமி படங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தாள் துளசி..
அதை ஹாலில் இருந்த சோபாக்களில் ஒன்றில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அம்புஜத்திற்கு கடுப்பென்றால் கடுப்பு.. அப்படியொரு கடுப்பு.. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.. அதற்கான காரணங்களாக பல இருந்தாலும் அதி முக்கிய காரணமாக தசரதன் அங்கே இருந்தார்.. சும்மாவும் உட்கார்ந்திருக்காமல் துளசி பூஜை செய்வதை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்..
தசரதனின் வீடு பழமை மாறாத பணக்காரத்தனம் நிறைந்த அரண்மனை போன்ற பெரிய வீடு.. செல்வச் செழிப்பின் அடையாளங்கள் வீடு முழுவதும் காணப்பட்டன..
"மாணிக்க வீணையேந்தும்..
         மாதேவி கலைவாணி..!
    தேன்தமிழ் சொல்லெடுத்து
         பாடவந்தோம் - அம்மா
    பாட வந்தோம்.."
துளசி பக்தியுடன் பாடினாள்.. அம்புஜம் பற்களை நறநறத்தாள்..
'அடிக்கிறது மணி.. இதில பாட்டு வேற.. இங்க என்ன பாட்டுக் கச்சேரியா நடக்குது..?'
தசரதனின் முகத்தைக் கவலையுடன் பார்த்தாள்.. அவள் பயந்ததைப் போலவே அவர் முகத்தில் பக்திரசம் வழிந்தோடியது.. பாட்டை ரசித்து அவரது கைகள் தொடை தட்டி தாளம் போட்டன..
அம்புஜத்திற்கு பொறுக்கவில்லை.. உடன் பிறந்தவள் பக்கத்தில் இருக்க, உடன் பிறந்தவளைப் போன்ற துளசியிடம் தசரதன் பாசம் காட்டுவது அவளுக்குப் பிடிக்கவில்லை..
"பாட்டு என்ன பெரிய பாட்டு..? உன் மருமக வாயத் திறந்து பாடினா எட்டு ஊருக்குக் கேட்கும் அண்ணா.." பெருமை பேசினாள்..
"பாடினா என்ன.. உங்க மக வாயத்திறந்து ஒரு வார்த்த பேசினாலே எட்டு ஊருக்குக் கேட்குமே அண்ணி.. தொண்டையா அது..? வெங்கலத் தொண்டை.." வெக இயல்பாக விமர்சித்தபடி உள்ளே வந்தார் சுதர்சனம்..
'வந்துட்டானா..?' நிஷ்டூரமாக முறைத்தாள் அம்புஜம்..
'உன் முறைப்பை வேறு எங்காவது வைத்துக் கொள்..' அலட்டிக் கொள்ளாமல் பேப்பரை படிக்க ஆரம்பித்தார் சுதர்சனம்..
"மாமான்னா மாமாதான் மாம்.. ஊமைக்கிளி உங்களுக்கு தடாலடியான அண்ணன் வாய்ச்சிருக்கிறது உலக மகா அதிசயம் தெரியுமோ.. அடங்காப்பிடாரி அம்புஜம் அத்தைக்கே தண்ணியைக் காட்டற வீராதி வீரனில்ல என் மாமா.."
ரதிமீனா தாய்மாமனை புகழ்ந்து முணுமுணுத்ததில் பூரித்துப் போனாள் சுமித்ரா.. கண்ணனின் தங்கை சுபத்திரை கொள்ளும் பெருமிதப் பூரிப்பு அது..
பாடலை முடித்த துளசி கற்பூரத் தட்டுடன் பூஜையறையை விட்டு வெளியில் வந்தாள்.. அம்புஜம் முகவாயை கன்னத்தில் மோதி இடித்துக் கொண்டாள்.. அவள் காட்டிய நொடிப்பைக் கண்டு கொள்ளாமல் தசரதனுக்கும், சுதர்சனத்திற்கும் கற்பூர ஆரத்தியைக் காண்பித்தாள்.. அவர்கள் தொட்டுக் கும்பிட்டதும் பூஜையறைக்குத் திரும்பினாள்.. அதில் அம்புஜம் கோபம் கொண்டாள்..
'வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்.. கத்தால முள்ளு குத்துச்சுன்னு அதக் கொத்தோட அள்ளிக்கிட்டு வந்தாளாம்.. அந்தக் கதையாயில்ல இந்தக் கத இருக்கு.. இங்க குத்துக்கல்லாட்டம் நான் உக்காந்திருக்கேன்.. இவ நேரா எங்கண்ணன் முன்னாடி கற்பூரத்தைக் காட்டிச் சாம்பிராணி போடறா.. எங்கண்ணன் கூடப் பொறந்தது நானா, இல்ல இவளா..?'
கற்பூரத்தின் ஒளியை மிஞ்சிய சாந்தத்தின் ஒளி துளசியின் முகத்தில் இருந்ததில் அம்புஜத்தின் முகத்தில் கோபச்சிவப்பு வந்தது..
"ஏன் துளசி.. கற்பூர ஆரத்திய ஆம்பளைகளுக்கு மட்டும்தான் காட்டனும்.. பொம்பளைகளுக்கு காட்டக் கூடாதுன்னு சட்டம் கிட்டம் இருக்கா..?" திமிராக கேட்டாள்..
துளசி திகைத்தாள்.. சுதர்சனம் பேப்பரிலிருந்து பார்வையை உயர்த்தினார்..
"ஏன்க்கா இப்படிக் கேக்கறிங்க..?"
"இதப்பாரு.. உனக்கு ஒன்னுமே தெரியாதாக்கும்..? அதை நான் நம்பனுமாக்கும்..? ஓடற தண்ணியில ஒன்பத்தெட்டு சுளுக்கெடுக்கிறவ நீ.. எங்கிட்டயே விளக்கம் கேட்கிற.. பிழைச்சுக்குவ துளசி.."
'அந்தச் சுளுக்கையெல்லாம் நீதான் எடுப்ப.. எம்பொண்டாட்டி பாவம்.. சாது.. உன்னப் போல ஆட்டக்காரியில்ல..' மனதுக்குள் வெகுண்ட சுதர்சனம்..
"அவ என்கூட சேர்ந்து வாழ்ந்து பிழைத்துக்கிட்டுத்தான் இருக்கா அண்ணி.. நீ போ துளசி.. அண்ணிக்கு வெறும் வாயை மெல்ல முடியலை போல.. சண்டைக்கு ஆள் தேடறாங்க.. அதுக்கான ஆள் நீயில்லன்னு எல்லோருக்கும் தெரியுமே.. அவங்களுக்குத்தான் தெரியலை.. பாவம்.." என்றார்..
கணவர் சொன்னதும் கிடைத்தது வாய்ப்பென்று துளசி விரைந்து விட்டாள்.. அம்புஜம் போர்க்களம் புக ஆயத்தமானாள்..
"என்ன.. கொளுந்தனாரே.. இடக்கு மடக்கா பேச்சு வருது.. உங்க பெண்டாட்டி சாதுன்னா.. நான் யாரு..? கேடியா..?"
"அதை நான் சொன்னா நல்லாயிருக்காது.. இந்தா.. என் தங்கச்சியக் கட்டிக்கிட்ட மச்சானே இங்கிருக்கார்.. அவரே சொல்லட்டும்.." சுதர்சனம் தசரதனின் பக்கம் கை காட்டி விட்டார்..
தசதரதன் முகத்தைச் சுளித்தார்.. சற்றுமுன் பக்தி ரசம் பரவியிருந்த வீட்டின் அமைதியை அம்புஜம் கெடுப்பதைப் போல உணர்ந்தார்..
"அம்புஜம்.. உனக்கு எந்த நேரம் எதைப் பேசறதுன்னு அறிவே இருக்காதா..? கற்பூர ஆரத்தியை ஒற்றிக்கனும்னு ஆசையிருக்கிறவ கால்மேல கால் போட்டுக்கிட்டு சோபாவில உக்காந்திருக்கக் கூடாது.. பூஜை பண்ணப் போயிருக்கனும்.. அத விட்டுட்டு இங்க உக்காந்துக்கிட்டு வெட்டி உரிமை பேசிக்கிட்டு இருக்கக் கூடாது.."
எப்போதுமே தசரதனின் கோபக்குரல் எழும்பி விட்டால் அம்புஜம் பம்மி விடுவாள்.. தசரதனின் கோபம் அத்தகையது.. எப்படி பாசப்பயிரை வளர்த்து வேப்பிலை அடித்தாலும் மலையிறங்க மாட்டார்.. அப்படி அவர் மலையிறங்கா விட்டால் அம்புஜம் மற்றவர்களின் முன்னிலையில் தோல்வியைத் தழுவி விடுவாளே.. கெட்டிக்கார அம்புஜம் உடனே எழுந்து விட்டாள்..
"ஊரில உலகத்தில தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு வளர்ந்திருப்பாங்கண்ணே.. நான் அப்படியில்லை.. அண்ணன் ஒரு கோவில்.. அண்ணன் சொல்லே வேதம்ன்னு வளர்ந்தவ.. நீங்க ஒரு வார்த்த சொல்லி நான் மீறுனதா சரித்திரம் இருக்கா..?"
குரல் விம்ம, கண்களில் நீர் பனிக்க அவள் உருக்கத்துடன் பேசியதில் சுதர்சனம் பேப்பரைப் படிப்பதைப் போல..
"அடேங்கப்பா.. ஆக்டிங் பிரமாதம்.." என்றார்..
அம்புஜம் எரி தனலாய் முறைத்தாள்.. தங்கை பேசிய வார்த்தைகளில் நெக்குருகிப் போயிருந்த தசரதன்..
"என்ன மச்சான்..?" என்றார்..
"புதுப்பட விமரிசனம் மச்சான்.. தூள் கிளப்பியிருக்கான்.." என்றார் சுதர்சனம்..
உன்னை இன்னொரு சமயம் கவனித்துக் கொள்கிறேன் என்ற மிரட்டலை பார்வையில் சொன்ன அம்புஜம் பூஜையறைக்குள் போனாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -7
தேரில் வந்த திருமகள்..! -7
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy