தேரில் வந்த திருமகள்..! -20

20 அவருக்கு என்ன தெரியும்.. அஞ்சனலட்சுமியைத் தன் காதல் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் ரகுநந்தன் புளகாங்கிதப் பட்டுக் கொண்டிருந்தான் எ...


20

அவருக்கு என்ன தெரியும்.. அஞ்சனலட்சுமியைத் தன் காதல் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் ரகுநந்தன் புளகாங்கிதப் பட்டுக் கொண்டிருந்தான் என்பது.. அவர் என்னவோ ரகுநந்தன் சிற்றானைக்குட்டி சித்ராவிடமிருந்து தப்பிக்கத்தான் நடித்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தார்.. ரகுநந்தனோ இப்படியொரு அழகியைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையென்றாலும் நடிப்பிற்காகவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாமே என்ற நடிப்பு வேகத்துடன் எகிறிக் கொண்டிருந்தான்.. அஞ்சனலட்சுமிக்கே அது நடிப்பு என்பது மறந்து போயிருந்தது எனும்போது ரகுநந்தனுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பாதா..?
"வேறவழி இல்லேன்னா இப்படிச் செய்வியா..?"
"வேற எப்படிப்பா செய்திருக்க முடியும்..? உங்களுக்குத்தான் பெண்டாட்டி பிள்ளைகள்தான் உங்க குடும்பம் என்கிற பாசமே இல்லாமப் போயிருச்சே.. எங்களைப் பத்தி எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீங்களா..? இல்ல, உங்களை குடும்பம் குழந்தைகன்னு நினைக்கிறதுக்கு உங்க தங்கை அலோவ் பண்ணியிருப்பாங்களா..? எப்போப் பார்த்தாலும் அவங்களைப் பத்தி மட்டும்தானே நீங்க நினைக்கனும்..? அப்படித்தானே ஸ்க்ரு கொடுத்து வைச்சிருக்காங்க..?"
ரகுநந்தன் கேட்ட கேள்வியில் ஆடிப் போனார் தசரதன்.. அவன் தந்தையின் முகம் பார்த்து அப்படியெல்லாம் பேசுகிறவன் அல்ல.. சுதர்சனம்தான் தங்கையை தசரதனுக்குக் கட்டிக் கொடுத்து விட்ட கோராமைக்காக அவருடன் மல்லுக்கு நின்று இந்தக் கேள்விகளைக் கேட்பார்.. முதன் முறையாக மகன் கேட்கிறான்..
பட்டுப் புடவையின் முந்தானையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சுமித்ராவைப் பார்த்தார்.. அதீத அழகுடன் இருந்தாள்.. வாய்பேசாத சாந்தமான அழகு.. குத்து விளக்கின் சுடர்தரும் அமைதியுடன் கூடிய அழகு.. அந்த அழகில் ஆகர்ஷிக்கப்பட்டுத் தானே அவளைப் பெண் கேட்டு மணந்து கொண்டார்.. ஆசைப் பட்டு மணந்த மனைவிக்கு அவர் நியாயம் செய்தாரா..?
மனைவியின் துயரத்தில் மனம் கரைந்தார் தசரதன். அவள் பெற்ற பிள்ளையின் திருமணத்தை அவள் பார்க்க முடியாமல் போனதற்கு யார் காரணம்..? அவர்தானே..
"காதலிக்கிறதினாலே குடும்ப கௌரவமும், மானமும் காற்றில் பறந்து விடுமா..? மனதுக்குப் பிடித்தவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க ஆசைப்படலாம்.. அதுவே நான் ஆசைப்பட்டாக் குற்றமாப்பா..? அம்மா மேல ஆசைப்பட்டு நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதை மாமா என்னிடம் கதை கதையாய் சொல்லியிருக்கார்.."  ரகுநந்தன் சிக்சர் அடித்தான்..
'மாப்புள்ள பாயிண்ட், பாயிண்ட்டா போட்டுத் தாக்கறானே.. என் டிரெயினிங் வீண் போகலை..' சுதர்சனம் பெருமைப் பட்டுப் போனார்..
"டேய்.." வெட்கச் சிரிப்புடன் மகனை அதட்டினாள் சுமித்ரா.. அதை ஓரக்கண்ணால் தசரதன் ரசிப்பதைக் கண்ட அம்புஜம் வெகுண்டாள்..
"கிடக்கிறதையெல்லாம் விட்டுட்டுக் கிழவியைத்தூக்கி மனையில வைச்சுக்கிட்டு இருக்காதே ரகு.. உங்கம்மாவ ஒன்னும் என் அண்ணன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணலை.. உறவு மொறையில இருக்கிற பொண்ணுன்னு ஊடே இருக்கிற சொந்த பந்தம் கிட்டச் சொல்லி விட்டாரு.. கல்யாணம் முடிவாச்சு.. நீ எதுக்கும் எதுக்கும் இணை கூட்டற..? படிச்சு இளந்தாரியா வளந்து நிக்கிற இல்ல.. சர்க்கார் ஆபிசரா உத்தியோகம் வேற பாக்கிற.. சுயமா சம்பாதிக்கிற திமிர் உன்னைப் பேச வைக்குது.. சொந்தங்கள மறக்க வைக்குது.. என் அண்ணனையே கேள்வி கேக்குறயா..? இது யார் கொடுத்த தைரியம்..?"
அம்புஜம் ரகுநந்தனின் பின்னால் மறைந்திருந்த அஞ்சனலட்சுமியை உறுத்துப் பார்த்தாள்.. அவள் பயந்து போனவளாக ரகுநந்தனின் முதுகோடு முதுகாக ஒட்டிக் கொண்டாள்..
'ஆஹா..!'
ரகுநந்தன் கள் குடித்த வண்டானான்.. அந்த நொடியில் வந்த அந்த மயக்கம் அவனை எங்கெங்கோ கொண்டு போனது.. கிறங்கிப்போனான்..
"ஆமாம்.. என் பொண்டாட்டி கொடுத்த தைரியம்தான்.. அதுக்கு இப்ப என்னாங்கறிங்க..?"
அஞ்சனாவைப் பெண்டாட்டி என்று சொல்லும்போது ஏன் அவன் நாக்கில் வெல்லக்கட்டியைத் தூள் துளாக்கிக் கொட்டி விட்டதைப் போல இனிக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை..
"பாத்தீங்களாண்ணே.." அம்புஜம் தசரதனைத் தூண்டிவிட, சுதர்சனம்..
"மாத்தி யோசிங்கண்ணின்னு சொன்னா, அண்ணி கேட்டிங்களாண்ணே.. பல்லவியை கொஞ்சமா மாத்தி பாத்தீங்களாண்ணேன்னு யோசிச்சிருக்காங்கடா ரகு.." என்று ஊடே விகடம் பேசினார்..
"உங்களுக்கு எல்லாமே ஏளனமாத்தான் இருக்கும் கொழுந்தனாரே.. உங்க காட்டில மழை பெய்யுதில்ல.."
"ஆமாங்கண்ணி.. குடை பிடிக்க தேவையே இல்லாத மழை..  சொட்டச் சொட்ட நனைஞ்சுக்கிட்டு இருக்கேன்னா பாருங்களேன்.."
"அம்புட்டு சந்தோசம்..?"
"ஆமாங்கண்ணி.. எம்புட்டு சந்தோசம்..!"
"இருக்காதா பின்னே..? இங்ஙன ஆடிக் காத்தில பறக்கிற அம்மியாப் பறந்துக்கிட்டு இருக்கிறது என் அண்ணனோட குடும்ப கௌரவம்..! உங்க மகன் உங்க சொல்பேச்சு கேட்டு அடங்கி ஒடுங்கி இருக்கானில்ல.. நீங்க சந்தோசம் கொண்டாடத்தான் செய்வீங்க.."
"ஊஹீம்.. அப்புடியெல்லாம் தப்புக் கணக்குப் போட்டுராதீங்க.. என் மகன் அடங்காமாறி.. நாளைக்கே ரதிமீனாவைக் கட்டக் கூடாதுன்னு நான் சொன்னேன்னு வையுங்க.. நீயும் வேண்டாம், உன் சொத்தும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியில் போயி ரதிமீனாவுக்குத் தாலியைக் கட்டிருவான்.."
'நான் என்னத்தைச் சொல்றேன்.. இந்த ஆளு எங்கே வந்து நிக்கிறாரு..' அம்புஜத்தின் வயிற்றில் அமிலம் சுரந்தது..
சுதர்சனத்தின் மகனான கண்ணன் அப்படிப்பட்ட தாட்டியக்காரன்தான் என்பதில் அம்புஜத்திற்குள் அனல் பறந்தது..
"கேட்டிங்களாண்ணேன்னு சொன்னாலும் கேலிப் பேச்சு வருது.. பாத்தீங்களான்னு சொன்னாலும் பகடிப் பேச்சு வருது.. உங்க கண்ணு முன்னாடியே அண்ணியோட அண்ணன் ஏளனமாப் பேசறாரு.. நீங்க தாட்டியமா இருக்கிறப்பவே எனக்கு இந்த கதியா அண்ணா..? பொண்ணக் கொடுத்து பொண்ண எடுத்துட்டா இந்த வீட்டில எனக்கு பிடிப்பு இருக்கும்.. எங்கண்ணனுக்கு தங்கச்சிங்கிற சொந்தம் உடையாம இருக்கும்ன்னு கனாக்கண்டேனே.. நான் கண்ட கனா பகல் கனாவாப் போச்சேண்ணே.. பொண்ணத்தான் கட்டிக் கொடுக்க முடியல.. அண்ணன் பொண்ணயாவது என் மகனுக்குக் கட்டி வைக்கலாம்ன்னு பாத்தா அதுக்கும் இடியா குறுக்க வந்து நிக்கிறாங்களே அண்ணே.." என்று உண்மையாகவே குமுற ஆரம்பித்து விட்டாள்..
தசரதன் மகன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போயிருந்தார்.. சுமித்ராவின் மீது அவர் ஆசைப்பட்டுத் திருமணம் செய்து கொண்டது உண்மைதானே.. அம்புஜம் அதைத் தட்டி விட ஆனமட்டும் முயற்சி செய்தாளே.. சுமித்ரா வேண்டாமென்று சொன்னாளே.. அவர் செவிகளில் போட்டுக் கொள்ளவில்லையே.. அவருக்கு மட்டும் ஒரு நியாயம்.. அவருடைய பிள்ளைகளுக்கு வேறொரு நியாயமா..?
அவர் மட்டும் அம்புஜத்தின் மகளை ரகுநந்தனின் விருப்பத்துக்கு மாறாக அவன் தலையில் கட்டி வைக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்திருக்கா விட்டால் ரகுநந்தனும் சென்னைக்கு ஓடியிருக்க மாட்டான்.. இப்படி வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றிருக்க மாட்டான்.. இப்போது அம்புஜம் அடுத்த பிள்ளையையும் துரத்தி விட அடிப் போடுகிறாள்..
மகளின் முகத்தைப் பார்த்தார்.. அம்புஜத்தின் பேச்சில் ரதிமீனாவின் முகம் வெளிறியிருந்தது.. சதானந்தனைப் பார்த்தார்.. அவன் தின்பதிலேயே குறியாக இருந்தான்.. கண்ணனோ கம்பீரமாக நின்றிருந்தான்..
வாய் நிறைய வடைகளைத் திணித்துக் கொண்டிருந்த சதானந்தனைப் பார்த்த ரதிமீனாவின் விழிகளில்
 'இவனையா நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்..?' என்ற பயம் இருந்தது..
அவளருகில் நின்றிருந்த கண்ணன் அத்தை மகளைப் பார்வையில் அதட்டிக் கொண்டிருந்தான்.
"ஏய்ய்.. உன்னைத் தூக்கிட்டுப் போயித் தாலியைக்கட்ட மாமன் மகனிருக்கேன்.. நீயேண்டி இந்த முழி முழிக்கிற..?" என்று தாழ்ந்த குரலில் வெடுவெடுத்தான்..
"அதுக்கு விட்டுட்டுத்தான் நான் வேற வேலயப் பார்ப்பேணாக்கும்..? அண்ணன்காரன் பக்கத்திலதான் இருக்கேண்டா மாப்பிள்ள..?" ரகுநந்தன் முணுமுணுத்தான்..
"முதல்ல நீ உன் பஞ்சாயத்தைப் பாருமச்சான்.."
"அடுத்து உன் பஞ்சாயத்துதான் மாப்பிள்ள.."
"பார்த்துக்கிட்டு நிக்காம வேற என்ன செய்வியாம்..?"
"நாளு நட்சத்திரம் பார்த்து ஊரைக் கூட்டி என் தங்கச்சிய உனக்குக் கட்டிக் கொடுப்பேண்டா.."
"அஃது.."
மாமன்மகனும் அத்தை மகனும் கையடித்துக் கொள்ள..
"இந்த வித்தாராமெல்லாம் என் புள்ளைக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.." என்று விரல்களை நெறித்தாள் அம்புஜம்.
"வீடான வீட்டில இது என்ன அண்ணி..?" சுமித்ரா தாங்க முடியாமல் கேட்டு விட்டாள்..
"நீ ஏன் அண்ணி பேசமாட்ட.. நீ நினைச்சதெல்லாம் நடக்குதில்ல.. உன் மகனையே நினைச்சுக்கிட்டு இருந்த என் பொண்ணை கைகழுவிட்டு எங்கிருந்தோ ஒருத்தியைக் கொண்டு வந்து மருமகன்னு வீட்டுக்குள்ள நிப்பாட்டிட்ட.. இப்ப அண்ணன் மகனுக்குப் பொண்ணக் கொடுத்துப்புடலாம்ன்னு அடிக்கல்ல நாட்டற.. ஒருநாளும் அது நடக்காது அண்ணி.."
"அம்புஜம்.." தசரதன் அதட்டினார்..
வீடே அவரை இமைகொட்டி அதிசயமாகப் பார்த்தது..
"சும்மா அச்சாணியமாப் பேசிக்கிட்டே இருக்காதே.. ரகுநந்தன் செஞ்சது தப்புத்தான்.. அதுக்குத்தான் அவனைக் கண்டிச்சுக்கிட்டு இருக்கேன்.. அதுக்காக அவன் செஞ்சுக்கிட்டு வந்திருக்கிற கல்யாணத்தை ஏத்துக்காம இருக்க முடியுமா..?"
"என்னது..?" அம்புஜத்தால் தாங்கவே முடியவில்லை..
இவ்வளவு எளிதாக மகனின் திருமணத்தை தசரதன் அங்கீகரித்து விட்டதில் அவளுக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது.. அத்துடன் தசரதன் நிறுத்தினாரா..? அடுத்த குண்டையும் தூக்கிப் போட்டார்..
"ரதியோட கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்..? இன்னார்க்கு இன்னார்ன்னு இறைவன் எழுதி வைச்சிருக்கான் அம்புஜம்.. ரதிக்கு சதானந்தன்னு எழுதி வைக்கலையே.. நாம என்ன செய்ய முடியும்..?"


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -20
தேரில் வந்த திருமகள்..! -20
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy