தேரில் வந்த திருமகள்..! -19

19 ரதிமீனா வந்து விட்டாள்.. அரக்குகலரில் மெஜந்தா வண்ணத்தில் கெட்டி ஜரிகையிட்ட பட்டுப்பாவாடை.. மெஜந்தா வண்ணத்தில் கைப்பகுதியில் கெட்டி...


19

ரதிமீனா வந்து விட்டாள்.. அரக்குகலரில் மெஜந்தா வண்ணத்தில் கெட்டி ஜரிகையிட்ட பட்டுப்பாவாடை.. மெஜந்தா வண்ணத்தில் கைப்பகுதியில் கெட்டி ஜரிகை பார்டர் வரும்படி தைக்கப்பட்ருந்த ஜாக்கெட்.. மெஜந்தா வண்ணத்தில் பட்டுத் தாவணி என்று தமிழகத்தின் பாரம்பர்யமாக வெகு அழகாக இருந்தாள்.. நீண்ட கூந்தல் அவளுக்கு.. கரிய அடர்ந்த கூந்தலைப் பின்னியிருந்தாள்.. அவள் நடக்கும் போது ஆடும் பின்னலில் அவளுடைய மாமன் மகன் கண்ணனின் மனமும் சேர்ந்து ஆடும்.. அதை கண்டு கொண்ட அத்தை அம்புஜத்தின் மனமும் பதட்டத்தில் ஆடும்.. ஆத்திரத்துடன் தன் மகனைப் பார்ப்பாள்.. அவன், இந்த விவகாரமெல்லாம் எனக்கு எதற்கு என்று சுமித்ரா சுட்டுப் போடும் வடைகளைத் தின்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பான்..
'இவனுக்கு சதானந்தன்னு பேரு வைச்சேன்.. இவன் என்னடான்னா, சதா தின்னுக்கிட்டு இருக்கிறதிலேயே குறியா இருக்கான்.. கண்ணுக்கு முன்னாலே ஒரு பேரழகி மாமன் மகளா உலாத்திக்கிட்டு இருக்காளே.. அவளை 'அத்தை மகனே.. அத்தானே.. உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்'னு பாட்டுப்பாட வைக்கலாமேங்கிற குறிக்கோள் ஏதும் மனசில இருந்தா இப்படி அவ முன்னாலே தின்னிப் பண்டாரமா வேசம் கட்டிக்கிட்டு இருப்பனா..?' அம்புஜம் மனதுக்குள் குமைவாள்..
அன்று அந்தக் குமைச்சல் அதிகமாகவே இருந்தது.. ரகுநந்தனும் கை நழுவிப் போய்விட்டான்.. அதைக் காரணம் காட்டி ரதிமீனாவை வளைத்துப் போட்டு விடலாம் என்றால் சுதர்சனம் போட்டிக்கு வந்து நிற்கிறார்..
'இந்த மனுசன் பொண்ணப் பெத்துக்காமலே ரகுநந்தனுக்கு சித்ராவைக் கட்டி வைக்க விடாம மல்லுக்கு நின்னவன்.. இப்ப ஒன்னுக்கு ரெண்டா மகன்கள் இருக்கிறப்ப என் மகனுக்கு ரதிமீனாவை விட்டுக் கொடுக்காம போட்டிக்கு வருவானே..' அம்புஜம் ஆத்திரம் அடைந்தாள்..
ரதிமீனா மாடிப்படிகளில் ஏறும் போதே அம்புஜம் முடிவு செய்து விட்டாள்.. அவள் அண்ணனையும் அண்ணியையும் அழைத்துக் கொண்டு வரப்போகிறாள் என்பதில் அம்புஜத்தின் மனம் ஆங்காரம் கொண்டது..
'வாடி.. என் வருச நாட்டுப் பைங்கிளி..! காத்திருந்தவ மருமகனை நேத்து வந்தவ கட்டிக்கிட்டு என் அண்ணன் வீட்டில மருமகளா அடியெடுத்து வைச்சிருக்கியா..? நேத்துச் சாயங்காலமே உன்னை ஆய்ந்து கூடையிலே அள்ளிப் போட்டிருப்பேன்.. சொந்தக்கார பெரிய மனுசர் வீட்டுக்குப் போகாம வேடிக்கை பாக்க இங்ஙனயே குத்த வைச்சு உக்காந்துட்டாரு.. அந்தாளு முன்னாலே எங்கண்ணன் பிள்ளையைப் பேச முடியாம வாயை இறுக்கி மூடித் தழ்ப்பாளப் போட்டு உக்காந்துட்டாரு.. அதுதான் சாக்குன்னு இந்த வித்தாரக்கள்ளிக உன்னயும் உன் புருசனையும் மாடிக்கு அனுப்பி காபந்து பண்ணிட்டாளுக.. இப்ப விடிஞ்சிருச்சு.. நீங்க ரெண்டு பேரும் கீழே வந்துதானே ஆகணும்.. இருக்குடி கச்சேரி உங்களுக்கு..'
நம்பியாரைப் போல அவள் கைகளைப் பிசைந்தபடி காத்திருப்பதை அறியாமல் அஞ்சனா அறைக்குள் வந்த ரதிமீனாவின் அழகை வியந்து கொண்டிருந்தாள்..
"வாவ்..! வாட் எ டிரேசனல் மேக்கப்..! ஐ லைக் திஸ்.."
"நிஜமாவே நான் அழகா இருக்கேனா அண்ணி..?"
"செம அழகு.."
"உங்களை விட அழகில்லை அண்ணி.. நீங்க அப்படியே மைதாமாவு கலரில வெள்ளை வெள்ளேர்ன்னு இருக்கீங்களே.."
அரைத்து விட்ட சந்தன நிறத்தில் இருந்த ரதிமீனா அஞ்சனாவைக் கட்டிக் கொண்டாள்.. அதுபோன்ற பாசப் பிணைப்புக்களுக்குப் பழக்கப்பட்டிராத அஞ்சனாவின் கண்கள் கலங்கி விட்டன.. அந்தப் பாசம் அஞ்சனாவுக்குச் சொந்தமானதல்லவே..
"வாங்க அண்ணி.. கீழே போகலாம்.. குடும்பமே உங்களைப் பார்த்துக் கும்மியடிக்கக் காத்துக்கிட்டு இருக்கு.. பயந்துராதீங்க.. அப்பாவும், அத்தையும்தான் போர்முரசு கொட்டுவாங்க.. மத்தவங்க எல்லாம் உங்க பக்கம்தான் நிற்போம்..
ரதிமீனா தைரியம் கொடுத்தாலும் அஞ்சனாவின் வயிற்றில் பயபந்து உருண்டது.. அவளுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமில்லை என்பதை அவள் மறந்தாள்.. உண்மையாகவே அவளும் ரகுநந்தனும் சதிபதி என்பதைப் போல பயந்தாள்.. ரகுநந்தன் அவளைவிட பதினாறு அடி முன்னே பாய்ந்தான்.. அவளுடைய மிரண்ட விழிகளைப் பார்த்தவன்..
"நானிருக்கேனில்ல.." என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
அவர்கள் மூவரும் மாடிப்படிகளில் இறங்கி வருவதை சிவந்த கண்களால் உறுத்துப் பார்த்த தசரதன்..
'ஜோடிப் பொருத்தம் நல்லாத்தான் இருக்கு..' என்று மனதுக்குள் சிலாகித்தார்..
வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் கண்களை உருட்டி விழித்தார்.. அதையறியாத அம்புஜம்..
"பாத்தீங்களாண்ணே.. இம்புட்டு பெரிய காரியத்தை அசால்ட்டா செஞ்சுட்டு.. எதுவுமே நடக்காததைப் போல பயமத்து வருதுக.. நம்ம புள்ளைமேல தப்பில்லண்ணே.. எந்தக் காட்டு சிறுக்கியோ.. நம்ம புள்ள மனசக் கெடுத்துத் திருட்டுக் கல்யாணம் பண்ண வைச்சுட்டா.." என்று ஓதினாள்..
"பாத்துப் பேசனும் அண்ணி.. கோபம் வந்தா வாய்க்கு வந்ததைப் பேசிறக் கூடாது.. எந்தக் காட்டுச் சிறுக்கியோவா..? அந்தப் பொண்ணு எங்கோ இருந்து வந்திருந்தாலும் மச்சான் வீட்டுக்கு மருமகளா வந்திருக்கு.. உங்க அண்ணன் மருமகளை இப்படித்தான் பேசுவீங்களா..?" சுதர்சனம் சண்டைக்கு வந்தார்..
'ஆத்தி... இந்த மனுசன் எங்கண்ணனோட என்னைப் பகையாளியா கோர்த்து விடறானே..'
மனதுக்குள் அரண்டு போனதை வெளியில் காட்டிக் கொண்டால் அவள் எப்படி அம்புஜம் ஆவாள்..?
"சட்டுன்னு மனசை மாத்திக்க எங்கண்ணன் ஒன்னும் சாதாரண மனுசனில்ல.. தெய்வப்பிறவி..!" என்று போட்டுத் தாக்கினாள்..
"அடேங்கப்பா.." என்றார் சுதர்சனம்..
"பாத்தீங்களாண்ணே.. உங்க மைச்சினன் உங்களை எப்படிப் பேசறாருன்னு.." அம்புஜம் மூட்டி விட்டாள்..
"என் மச்சானை நான் எப்படிப் பேசுவேன்னு அவருக்கும் நல்லாத் தெரியும்.. ஊருக்கும் நல்லாத் தெரியும்.. நீங்க மூட்டி விடாம வாயை மூடிக்கிட்டா நல்லா இருக்கும் அண்ணி.."
"நான் எதுக்குப் பேசாம இருக்கனும்..? நான் சொல்லத்தான் செய்வேன்.. எங்கண்ணன் என்னை எப்படி அருமை பெருமையா வளர்த்தாருன்னு இந்த ஊருக்கே தெரியும்.. அண்ணன் ஒரு கோவில்ன்னு பூப்போட்டு வணங்கிக்கிட்டு இருக்கிறவ நானு.. எங்க அண்ணனும் அப்படித்தான்.. தங்கைக்கொரு கீதம்ன்னு பாட்டுப்பாடி தூங்க வைச்சவரு.."
அம்புஜம் வராத கண்ணீரை முந்தானையால் துடைத்தாள்..
"அப்புடியே சினிமாப் பார்த்தாப்புலயே இருக்கு.." என்று ஏகடியம் பேசி வைத்தார் சுதர்சனம்..
அஞ்சனா ரகுநந்தனின் முதுகுக்குப் பின்னால் நின்றிருந்தாள்.. அவளுக்குப் பயமாகவும் சங்கடமாகவும் இருந்தது.. அம்புஜத்தின் பார்வையைச் சந்திக்கவே அஞ்சினாள்.. அதைப் பார்த்த தசரதனின் முகத்தில் இணக்கம் வந்தது.. அம்புஜம் அதை கண்டு கொண்டாள்.. எரிமலையாக வெடித்தாள்..
"ஏளனம் பேசறவங்களுக்கு எங்க அண்ணன் தங்கச்சி பாசத்தைப் பத்தி என்ன தெரியும்..? என் அண்ணன் மருமகன்னு என்மக சித்ராவை மட்டும்தான் சொல்லுவார்.. எங்கிருந்தோ வந்ததுகளையெல்லாம் ஒரு நாளும் மருமகளா ஏத்துக்க மாட்டார்.." என்று தசரதனின் மகன், மருமகள் பாசத்திற்கு தடையை விதித்தாள்..
"அதுசரி.. தங்கச்சி மகள மருமகள்ன்னு ஒரு பாசத்துக்குச் சொன்னா அதையே பிடிச்சுக்கிட்டுத் தொங்க முடியுமா..? நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னொரு வீட்டுக்கு மருமகளா வாழப் போகிற பொண்ணு, இந்த வீட்டுக்கு மருமகளா ஆகிருமா..? ரகுநந்தனோட பொண்டாட்டி மட்டும்தான் இந்த வீட்டுக்கு மருமகளா ஆக முடியும்.. விட்டா சதானந்தன இந்த வீட்டு மருமகன்னு சொல்லிருவீங்க போல.." சுதர்சனம் அம்புஜத்தின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தார்..
"கேட்டிங்களாண்ணே.." அம்புஜம் எப்போதும் அவள் பாடும் பல்லவியை ஆரம்பித்து விட்டாள்..
"அதான் நீங்க பிறந்ததில இருந்து இந்த கேட்டிங்களா அண்ணே பல்லவிய மச்சான் கேட்டுக்கிட்டு இருக்காரில்ல.. வேற பல்லவியை மாத்தி பேசினாத்தான் என்ன அண்ணி..? மச்சானுக்கும் போரடிக்கும்ல்ல..?" வினயமாக வேண்டுகோள் வைத்தார் சுதர்சனம்..
'அடேய்..' அம்புஜத்தின் கண்கள் சிவந்தன..
ஒற்றை ஆளாக அவள் போராடிக் கொண்டிருக்க கிருஷ்ணனும் அவள் பெற்ற பிள்ளைகளும் டைனிங் ஹாலில் குழுமி காலை டிபனை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
'இதுகளை வைத்துக்கிட்டு நான் படற பாடு இருக்கே..' அவளுக்குத் தலை வேதனையாக இருந்தது..
ரகுநந்தனின் பின்னால் நின்று கொண்டிருந்த அஞ்சனாவின் விழிகள் சுழன்றன.. அழகான பாரம்பர்யம் மிக்க பெரிய வீடான தசரதனின் வீட்டை அவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.. முதல் நாள் மாலையில் அவளுக்கு இருந்த பதட்டத்தில் வீட்டை அவள் சரியாகப் பார்க்கவில்லை.. தூங்கி எழுந்து குளித்து முடித்து வந்திருக்கும் புத்துணர்வுடன் பார்த்த போது வீடு வேறு மாதிரியான அழகுடன் மிளிர்ந்து அவளை ஈர்த்தது.. ஹாலின் விஸ்தீரனமும்.. அங்கே சோபாவில் கால்மீது கால் போட்டு அமர்ந்திருந்த தசரதனின் கண்டிப்பான முகமும், பட்டுப்புடவை, வைர நகைகளுடன் சாந்தமாக ஒளிர்விடும் சுமித்ராவின் அழகும் அவளைக் கவர்ந்தன..
"என்னடா இதெல்லாம்..?" தசரதன் சீறினார்..
"விசாரணைக்கமிசன் ஆரம்பிச்சுருச்சு அண்ணா.." ரதிமீனா முணுமுணுத்தாள்..
"என்ன வேலையை செய்துட்டு வந்திருக்கிற..? திருவாரூர் தசரதன்னா கட்டுக்கோப்பாக் குடும்பத்தை நடத்தறவன்னு ஒரு பேரு இருந்ததுச்சு.. அதைக் கப்பலில் ஏத்தி அனுப்பி விடக் கங்கணம் கட்டிக்கிட்டு இப்டியொரு வேலையைச் செய்து வைத்திருக்கியா..? இத்தனை நாளா நான் கட்டிக் காப்பாத்தி வந்த குடும்ப கௌரவத்தையும் பெருமையையும் காத்தோட பறக்க விட்டுட்டியேடா.."
"காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. வேற என்ன தப்பைச் செஞ்சேன்..? உங்களிடம் என் காதலைச் சொல்லியிருந்தா, வாடா மகனே, உனக்குப் பிடிச்ச பெண்ணை உனக்குக் கட்டி வைச்சுட்டுத்தான் வேற வேலைன்னு கிளம்பி வந்துருவீங்களா..? இல்லையில்ல..? அப்புறம் எதுக்கு என்மேல குற்றம் கண்டு பிடிக்கறிங்க.. எனக்கு வேற என்ன வழி இருந்தது..?"
ரகுநந்தன் அனல் பறக்கப் பேசிய பேச்சில் சுதர்சனம் மூக்கின் மீது விரலை வைத்தார்.. அவர் மனதில் வியப்பு வந்தது..
'மாப்புள அப்புடியே நிசமாலுமே காதல் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்ததைப் போலப் போட்டுத் தாக்கறானே..'


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -19
தேரில் வந்த திருமகள்..! -19
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy