தேரில் வந்த திருமகள்..! -15

15 தேரில் வந்த திருமகள் அவனைத் தேடி வந்து விட்டாளா.. ? பிரமிப்புடன் ரகுநந்தன் பார்த்துக் கொண்டிருக்க சுதர்சனம் ரகுநந்தனின் காதுகளில்....


15

தேரில் வந்த திருமகள் அவனைத் தேடி வந்து விட்டாளா..? பிரமிப்புடன் ரகுநந்தன் பார்த்துக் கொண்டிருக்க சுதர்சனம் ரகுநந்தனின் காதுகளில்..
"மாப்பிள்ள.. கெட்டிக்காரன்டா நீ.. கல்யாணத்தைக் கட்டிக்கிட்டுக் கையோட பொண்டாட்டியக் கூடக் கூப்பிட்டுக்கிட்டு வர்றன்னு சொல்லவே இல்ல பார்த்தியா..?" என்று முணுமுணுத்தார்..
"நீங்க வேற மாமா.. இந்தப் பொண்ணு யாரு, எவருன்னு எனக்குத் தெரியாது.. பேரு மட்டும் அஞ்சனலட்சுமின்னு தெரியும்.. பக்கத்துப் பக்கத்து சீட்டில உக்காந்திருந்தோம்.. அதை இந்த தாத்தா பார்த்துட்டு வீடு வரைக்கும் வந்து வில்லங்கத்தைக் கிளப்பறாரு.." ரகுநந்தன் பதிலுக்கு முணுமுணுத்தான்..
"அப்படிங்கறே..?"
"ஆமாங்கிறேன்.."
"விடுடா மாப்பிள்ள.. இதுவும் நல்லதுக்குத்தான்.. இப்போதைக்கு உன் லங்கிணி அத்தையிடமிருந்து தப்பிக்க இந்தப் புரளியையே மெயின்டெயின் பண்ணுவோம்.."
"நாளைக்கு விசயம் தெரிஞ்சிருச்சுன்னா..?"
"நாளை சங்கதியை நாளைக்குப் பார்க்கலாம் மாப்பிள்ள.."
சுதர்சனம் நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சமயோசிதமாக குரல் கொடுத்தார்..
"துளசி.. ஆரத்தியைக் கரைச்சுக்கிட்டு வா.."
"நீங்க என்ன மச்சான், முன்னப் பின்னத் தெரியாத பொண்ணுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கச் சொல்றீங்க.." தசரதன் எகிறினார்..
"அது முன்னப் பின்னத் தெரியாத பொண்ணில்லங்க மச்சான்.. நம்ம ரகுவோட பொண்டாட்டி.. உங்க மருமகள்.. துளசி ஆரத்தி ரெடியா..? மசமசன்னு நிற்காம மாப்பள்ளைக்கும் பொண்ணுக்கும் ஆரத்தி எடு.." சுதர்சனம் துளசியை அதட்டினார்..
சுமித்ராவையோ, ரதிமீனாவையோ ஆரத்தி எடுக்கச் சொன்னால் தசரதன் கத்துவார்.. அவரது கோபத்திற்கு அஞ்சி அவர்கள் அப்படியே நின்று விடுவார்கள்.. துளசியை தசரதனால் கோபித்துக் கொள்ள முடியாது.. இதையெல்லாம் கணப்பொழுதில் யோசித்துத்தான் கெட்டிக்கார சுதர்சனம் தன் மனைவியை விரட்டினார்..
துளசி வள்ளுவரின் வாசுகியாக கையில் ஆரத்தி தட்டுடன் வந்து விட்டாள்.. சுதர்சனம் ரகுநந்தனை தள்ளிய வேகத்தில் அவன் அஞ்சனலட்சுமியின் மீது போய் விழுந்தான்.. இவனது கனத்தைத் தாங்க முடியாமல் அவள் தடுமாறிச் சாய, இவன் அவளைத் தாங்கிப் பிடிக்க என்று அழகான காதல்காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.. ஆட்டோக்காரர் சுவராஸ்யமாகி..
"அட.. இவங்க தசரதன் ஐயாவோட மருமகளுங்களா..? பேங்க் மேனேஜர் தம்பி, வீட்டுக்குத் தெரியாம காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்காரா..?" என்று சுதர்சனத்திடம் கேட்டார்.
அவர் இதற்காகத்தானே காத்திருந்தார்.. ஆட்டோக்காரரும் ஆல் இண்டியா ரேடியோவும் ஒன்று என்று அந்தக் காலத்திலிருந்து சொல்லப்படும் பழமொழியென்று சொல்பவர் சுதர்சனம்.. என்ன  ஒன்று.. நாளடைவில் ஆல் இண்டியா ரேடியோ செய்திகள் மருவி பி.பி.சி செய்திகளாகி விட்டன என்று சொல்லுவார்..
"ஆமாய்யா.." என்று சுதர்சனம் தலையசைக்க..
"அப்ப நான் வர்றேன்.." என்று ஆட்டோ சவாரிக்கான பணத்தைக்கூட வாங்கிக் கொள்ளாமல் மாயமானார் ஆட்டோக்காரர்..
'செய்தியை ஒலிபரப்பறதில அத்தனை வேகம்..! காசா முக்கியம்..? புறணிதானே முக்கியம்.. அப்பாடி.. அடுத்த சில, செகண்டில திருவாரூர் முழுக்க இதப் பத்தித்தான் பேச்சா இருக்கும்..' சுதர்சனம் திருப்தியாக தலையை ஆட்டினார்..
"பொண்டாட்டியக் கொஞ்சினது போதும்.. பக்கத்தில சேர்ந்து நில்லுங்க மாப்பிள்ள.." துளசி அன்புடன் சொன்னாள்..
'பெண்டாட்டியா..?'
அஞ்சனலட்சுமி அப்போதுதான் நிலைமையை யூகித்தாள்.. எரிதணலாய் அவள் ரகுநந்தனை முறைக்க அவன் கன்னத்தில் போட்டுக் கொண்டான்..
"ஏங்க.. நானாங்க எடுத்துக் கொடுத்தேன்..? அவங்களா இட்டுக் கட்டி கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பிணையாங்க..?"
"மிஸ்டர் ரகுநந்தன்.. உங்க பெட்டியை விட்டுட்டு என் பெட்டியை அபேஸ் பண்ணிக்கிட்டு வந்துட்டிங்க.. பெட்டிக்காகத்தான் உங்களை ஃபாலோ பண்ணி வந்தேன்.."
"எனக்காக வரலைன்னு சொல்கிறிங்க.. இருக்கட்டும்.. ஆனா உங்க பெட்டியை நான் வேணும்னே அபேஸ் பண்ணிட்டு வந்துட்டேன்னு பழி போடறிங்க பாருங்க.. அது தப்புங்க.. பெட்டி மாறிப் போச்சுன்னு சொல்லுங்க.. கேட்டுக்கறேன்.. நான் அபேஸ் பண்ணிட்டு வந்தேன்னு மட்டும் சொல்லாதீங்க.."
"ஆமாம் சார்.. பெட்டிக்குக் கால் முளைத்து உங்ககூட மாறி வந்திருச்சு.. தூக்கிக்கிட்டு வந்தது நீங்கதானே.. அதுக்குள்ள என்ன என்ன இருக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா..?"
"வைர வைடூரியமே இருக்கட்டும்ங்க.. அடுத்தவங்க பொருளுக்கு நான் ஆசைப்படமாட்டேன்.. உடனடியா உங்களைத் தேடிவந்து பெட்டியை ஒப்படைச்சிருப்பேன்.."
"எங்கேன்னு தேடி வருவீங்க..?"
"அதுதான் நீங்க தேடி வந்துட்டிங்களே.."
இருவரும் சன்னக்குரலில் வழக்கடித்துக் கொண்டிருக்க..
"அடடா.. இதுக ரெண்டும் இப்படித்தான் தசரதா.. நான் ஹோட்டலில பாக்கிறப்பவும் பக்கத்தில ஆளுக இருக்கிறதைப் பார்க்காம ரகசியம் பேசிக்கிட்டு இருந்துச்சுக.. இங்கேயும் நாம இருக்கிறத மறந்து கொஞ்சிக்கிட்டு இருக்குதுக.. ஏம்மா துளசி.. கையில ஆரத்தித்தட்ட வைச்சுக்கிட்டு உன் மருமகன் பொண்டாட்டிகிட்ட வாசலில நின்னு கொஞ்சிக் குழாவட்டும்ன்னா காத்துக்கிட்டு இருக்க..? சட்டுப்புட்டுன்னு ஆரத்திய எடுத்து வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டுப் போம்மா.. நாலு பேரு நடந்து போகிற ரோடு.. இலவசமாக சினிமாக் காட்டனுமா..?" என்று பெரியவர் தசரதனுக்கு வெறியேற்றினார்..
"என்னாது.. வீட்டுக்குள்ள அழைக்கிறதா..? அப்படியே போயிரட்டும்.." தசரதன் கர்ஜித்தார்..
"அப்படியே போகனுமா..? எதுக்கு மச்சான்..? உங்க தங்கச்சி மகளக் கட்டினாத்தான் என் தங்கச்சி மகன் வீட்டுக்குள்ள வரனும், இல்லேன்னா வீதியோட போயிரனுமா..? நல்லா இருக்கு மச்சான் உங்க நியாயம்.. நீ ஆரத்தி எடு துளசி.. என் மாப்பிள்ளைக்கு இந்த வீட்டில இடமில்லாம போயிருமான்னு நானும் பார்க்கிறேன்.." சுதர்சனம் பதிலுக்கு மீசையை முறுக்கினார்..
சுமித்ராவும் ரதிமீனாவும் ஆவலுடன் வாசலுக்கு வந்து அஞ்சனலட்சுமியின் அழகை வியந்து கொண்டிருந்தார்கள்..
"அம்மா.. அண்ணன் லட்டு போல ஒரு அண்ணியை லவட்டிக்கிட்டு வந்திருச்சும்மா.."
"சாட்சாத் மகாலட்சுமி போல மருமகள் வந்திருக்கா.. உங்கப்பாவக் கேட்டா கட்ட விடுவாரா..? அதனாலதான் உங்க அண்ணன் கெட்டிக்காரத்தனமா கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு அழைச்சுக்கிட்டு வந்திருக்கான்.."
தாயும் மகளும் தங்களுக்குள் கிசுகிசுக்க..
"அங்கே என்ன பேச்சு.?" என்று அதற்கும் கர்ஜித்தார் தசரதன்.
"இது என்ன மச்சான், உங்ககூட வம்பாப் போச்சு.. உங்களுக்குக் கழுத்தை நீட்டினா என் தங்கச்சிக்குப் பேசக்கூட சுதந்திரம் இல்லாமப் போயிருமா..? பெரிய வன்கொடுமையாயில்ல இருக்கு.. துளசி.. இப்ப ஆரத்தி எடுக்கப் போறியா, இல்லியா..?" சுதர்சனம் தசரதனை விட அதிகமாக சப்தம் போட்டார்..
அங்கே நடந்த களேபரத்தில் அஞ்சனலட்சுமிக்கு கை,கால் உதறத் தொடங்கியது.. என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவள் விழிக்க, ரகுநந்தனுக்கும் அவளுக்கும் ஆரத்தி எடுத்து அவள் நெற்றியில் பொட்டு வைத்து அணைத்துக் கொண்டாள் துளசி..
"திருவாரூர் தேர் மாதிரி அழகா இருக்கேம்மா.. வலது காலை எடுத்து வைச்சு வீட்டுக்குள்ள வாம்மா.."
அஞ்சனலட்சுமியை இழுத்துக் கொண்டு துளசி வீட்டுக்குள் போய் விட்டாள்.. அவள் கொண்டு வந்திருந்த பெட்டியை தள்ளிக் கொண்டு ரகுநந்தன் பின்தொடர்ந்தான்..
"இங்கே கொடுண்ணா.. அண்ணியோட பெட்டியை நான் தள்ளிக்கட்டு வர்றேன்.." ஆனந்தமாகப் பெட்டியை பறித்துக் கொண்டாள் ரதிமீனா..
பெரியவரின் முன்னால் மகனை வீட்டுக்குள் விட முடியாது என்று தகராறு செய்ய தசரதனால் முடியவில்லை.. ஏற்கனெவே, தங்கைக்காக பெற்ற மகனை ஊரை விட்டு ஒட வைத்து விட்டார் என்று திருவாரூர் முழுவதும் தசரதனை மெச்சிக் கொண்டிருக்கிறார்கள்.. இதில் மகனை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்ற பெயரும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.. தசரதனை இரக்கமில்லாத தகப்பன் என்று தூற்றி விடுவார்கள்..
அஞ்சனலட்சுமியின் பங்களாவைப் போல இல்லாவிட்டாலும், தசரதனின் வீடு பெரியதாகவே இருந்தது.. ஹாலில் இருந்த சோபாக்களில் ஒன்றில் அஞ்சனலட்சுமியும் ரகுநந்தனும் அமர வைக்கப்பட்டார்கள்.. சுமித்ரா ஓட்டமாக ஓடிப் பாலும், பழமும் கொண்டு வந்தாள்..
"முதலில் பூஜையறையில் மருமகள் விளக்கேத்திரட்டுமே அண்ணி.." துளசி சொன்னாள்..
"ஆமாமில்ல.. திடிர்ன்னு கல்யாணச் சேதி தெரிஞ்சதில கையும் ஓடல.. காலும் ஓடல அண்ணி.. வாம்மா.. வந்து பூஜையறையில் விளக்கேற்று.."
சுமித்ரா அன்புடன் அஞ்சனலட்சுமியின் கையைப் பிடித்து அழைத்தாள்.. அஞ்சனலட்சுமி மறுப்பாக தலையை ஆட்டுவதற்குள் அவளை எழுப்பி விட்டாள் துளசி.. வேறு வழியில்லாமல் பூஜையறைக்குள் சென்று விளக்கேற்றினாள்.. தீப ஒளியில் தெய்வத் திருவுருவங்களைத் தரிசித்தவளுக்குள் இனம் புரியாத ஓர் அமைதி வந்தது.. ஓடிக் கொண்டிருந்தவளுக்கு இளைப்பாற நிழல் கிடைத்த உணர்வு.. ஆனால் இது அவளுக்கு நிரந்தமில்லையே..
பூஜையறையிலிருந்து வெளியே வந்தவளை ஹால் சோபாவுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.. அங்கே ரகுநந்தனுக்கும் அவளுக்கும் பாலும் பழமும் கொடுத்து உபசரித்தார்கள்..
"திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுகளுக்கு சாஸ்திர சம்பிரதாயம் ஒன்னுதான் குறைச்சலாக்கும்.." அம்புஜம் ஆங்காரமாகக் கத்தினாள்..
"என் தங்கச்சி பிள்ளைகளுக்குத்தான் ஒழுங்காக் கல்யாணம் நடந்துரக் கூடாதுன்னு நீங்க கங்கணம் கட்டிக்கிட்டு அலையறீங்களே.. பெண்டாட்டி, பிள்ளைகள் முக்கியம்ன்னு என் மச்சான் நினைச்சிருந்தா என் மாப்பிள்ள எதுக்காக வீட்டுக்குத் தெரியாமக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கப் போறான்..?" மறைமுகமாக தசரதனை விட்டு விளாசினார் சுதர்சனம்..
"அதென்ன என் தங்கச்சி பிள்ளைகன்னு ரதி மீனாவையும் கூட்டுச் சேர்க்கறிங்க கொழுந்தனாரே.."
"ஏன் அண்ணி..? ரதி எந்தங்கச்சி பெத்த பிள்ளைதானே..? அதை என்ன தவிட்டுக்கா வாங்கியிருக்கோம்..?"
"ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது ரகுநந்தன்தான்.. என் மருமக ரதிமீனா குணவதி.. தகப்பன் சொல் மிக்க மந்திரமில்லைன்னு வளர்ந்திருக்கிற பொண்ணு.. எங்கண்ணன் கோடு கிழிச்சாத் தாண்டாத உத்தமி.. குல விளக்கு..!"
"அட்ரா சக்கைன்னானாம்.. ரகுநந்தன் எஸ்கேப் ஆகிட்டான்னதும் அடுத்த குறியை ரதிமீனாவுக்கு வைச்சுட்டிங்களா..?"
சுதர்சனம் கைதட்ட அம்புஜத்தின் முகம் பயங்கரமாகக் கோணியது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -15
தேரில் வந்த திருமகள்..! -15
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy