தேரில் வந்த திருமகள்..! -13

13 " மச்சான் நீங்க பேசறது சரியில்லை.." தசரதன் மீசையை முறுக்கினார்.. " எது சரியில்லை மச்சான்.. ?" அறியாதவரைப் போ...


13

"மச்சான் நீங்க பேசறது சரியில்லை.." தசரதன் மீசையை முறுக்கினார்..
"எது சரியில்லை மச்சான்..?" அறியாதவரைப் போல வினவி வைத்த சுதர்சனம், அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணனிடம்..
"ஏன் அண்ணா.. நான் சரியில்லாம எதைப் பேசினேன்..?" என்று கேட்டும் வைத்தார்..
சமையலறையில் இருந்து வந்த அசைவ உணவு வகைகளின் வாசனையில் நாசியைத் தோய்த்திருந்த கிருஷ்ணன் நடந்து கொண்டிருந்த வாக்குவாதத்தைக் கவனிக்கவில்லை..
அம்புஜம் ஒன்றும் அமைதியின் சிகரமில்லையே.. ஆணவமாகப் பேசிக் கொண்டிருப்பவளின் வாய் அடங்கி இருந்ததே இல்லையே.. அதுவும் சுதர்சனத்தைக் கண்டு விட்டால் அவள் வம்புச் சண்டைக்கு சென்று விடுவது வழக்கம்தானே.. அதனால் கிருஷ்ணன் அம்புஜத்தின் வாயை கண்டு கொள்ளவில்லை.. திடிரென சுதர்சனம் அவரது தோள் தட்டி கேள்வி கேட்கவும்..
"நீங்க என்றைக்கு சரியில்லாம பேசினிங்க தம்பி..? எதைப் பேசினாலும் சரியாத்தானே பேசுவீங்க.." என்று சொல்லி விட்டார்..
"கேட்டுக்கிட்டிங்களா..?" தங்கையின் கணவரிடம் கேட்டபடி அம்புஜத்தைக் கேலியாக பார்த்தார் சுதர்சனம்..
"கேட்டுக்கிட்டிங்களா அண்ணே.." அதே கேள்வியை நாத்தளுதளுக்க கேட்டாள் அம்புஜம்..
"கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேம்மா.. உன் புருசனே இப்படிச் சொன்னா, நான் என்னத்தைக் கேள்வி கேக்கிறது..?"
மைத்துனனுடன் சண்டை வளர்க்காமல் தப்பிக்கப் பார்த்தார் தசரதன்.. அதை கண்டு கொண்ட அம்புஜம் வெகுண்டாள்..
"என் புருசனை நானாத் தேடிக்கிட்டேனா அண்ணா..? அண்ணியைப் பிடிச்சிருக்குன்னு ஆள் விட்டு நீங்க பொண்ணு கேட்டதைப் போல இந்த மனுசனைப் பிடிச்சிருக்குன்னு உங்ககிட்ட கை காட்டினேனா..? நீங்க கை காட்டின மாப்பிள்ளைக்கு மறுபேச்சு பேசாம கழுத்தை நீட்டின தியாகிண்ணா நானு.."
அம்புஜம் கண்களைத் துடைத்துக் கொள்ள சுதர்சனம் கிருஷ்ணனை மேலும் கீழும் பார்த்து விட்டு..
"யோவ் அண்ணா.. உம்ம பொண்டாட்டி தியாகியாம்.." என்று முணுமுணுத்தார்..
"யாரு..? இவ தியாகியா..? இவளுக்குத் தாலியக் கட்டி மாட்டிக்கிட்ட நான்தான் தியாகின்னு ஊருக்கே தெரியுமே தம்பி.." பதிலுக்கு முணுமுணுத்தார் கிருஷ்ணன்..
"உங்க மனசுக்குப் பிடிச்ச பொண்ணை நீங்க கட்டிக்கிட்டிங்களே.. என் மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளைக்கு என்னைக் கட்டிக்கொடுக்காம இப்படியொரு விவரம் கெட்ட மனுசனுக்குக் கட்டி வைக்கறீங்களேன்னு நான் ஒற்றைக் கேள்வி கேட்டிருப்பேனா..?"
அம்புஜத்தை விட்டால் அன்று முழுவதும் இதைப்போலப் பேசி தசரதனை ஓர் வழி பண்ணி விடுவாள் என்பதனால் சுதர்சனம் குறுக்கிட்டார்..
"அடடா அண்ணி.. உங்க வாய் தாட்டியத்துக்கு வாய் பேசாத அண்ணன்தான் தோதுன்னு மச்சான் நினைச்சிருப்பாரு.. மத்தவனா இருந்தா நீங்க பேசற பேச்சுக்கு ஒன்று உங்களை ஓட்டி விட்டிருப்பான்.. இல்லேன்னா அவனே ஓடிப் போயிருப்பான்.. அண்ணனா இருக்கப்போயி இருந்து பொழைக்கிறாரு.. மகனுக்கும் மகளுக்கும் கல்யாண வயசாகிருச்சு.. அதுகளுக்கு ஆளப் பாத்துக் கல்யாணத்தை முடிச்சு வைக்கிற வழியப் பாப்பீங்களா.. அத விட்டுட்டு இப்பத்தான் பதினாறு வயசான மயிலு மாதிரி உங்க கல்யாணக் கதையைப் பேசிக்கிட்டு இருக்கீங்க.. சுமித்ரா.. சமையல் ஆகிருச்சுன்னா தட்டைப் போடும்மா.. சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் தூங்கி எழுந்திருக்கலாம்.. மாப்புள்ள வந்துட்டான்னா பஞ்சாயத்துப் பேச சக்தி வேணும்.. இருக்கிற எனர்ஜிய இப்பவே போக்கியாச்சுன்னா ரகு வந்து நிக்கிறப்ப கத்தறதுக்கு சக்தி வேணாமா..?"
அவர் சாப்பிடப் போகலாம் என்று எழுந்து நின்றதில் கிருஷ்ணன் உற்சாகமாகி..
"வாங்க போகலாம்.. வாங்க போகலாம்.." என்று பறப்பாய் பறந்தார்..
"பாருங்க அண்ணி.. அண்ணன் பறக்கிறத.. என்னைக்காவது ஒருநாள் வாய்க்கு ருசியா, வக்கணையா கறிக்கஞ்சி ஆக்கிப் போட்டிருந்திங்கன்னா இந்த அளவுக்குப் பறப்பாரா.? எங்கே.. நீங்கதான் வருசம் முழுவதும் அண்ணன் வீட்டிலேயே சீராடறிங்களே.. எந்தங்கச்சி நாத்தனாவைக் கவனிக்கனும்னு வாய்க்கு ருசியா வக்கணையா ஆக்கிப் போட்டு அண்ணனை கவனிச்சுக்குது.. நீங்க அந்த எண்ணமில்லாம அதுமேலேய பிராது சொல்லிக்கிட்டு இருக்கறிங்க.. ம்ம்ம்.. எண்ணம் போலதான் வாழ்க்கையும் அமையும்.." சுதர்சனம் சீண்டினார்..
"என் எண்ணத்துக்கு என்ன..? அது நல்லாத்தான் இருக்கு.. என்னை உள்ளங்கையில வைச்சுத் தாங்கற அண்ணன் இருக்கிற வரைக்கும் எனக்கு என்ன குறை..?" அம்புஜம் சிலிர்த்தாள்..
"அடேங்கப்பா.. மச்சான் உள்ளங்கை என்ன அம்புட்டுப் பெரிசாவா இருக்கு..?" சுதர்சனம் தசரதனின் கையைப் பார்த்தார்..
"நக்கலு..?"
"இல்லிங்க அண்ணி.. விக்கலு.. சுமித்ரா தண்ணியக் கொண்டா.."
"போதும் கொளுந்தனாரே.. இந்த நக்கல், நையாண்டியெல்லாம் எங்கிட்ட வேணாம்.. என் மகனுக்கும், மகளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நான் ஏன் வேறு இடத்தில ஆளப் பாக்கனும் என்கூட சம்பந்தம் பண்ணத்தான் எங்கண்ணன் ஆண் ஒன்னு, பொண்ணொன்னு பெத்து வைச்சிருக்காரே.."
"அதுக்கு..?"
"பொண்ணக் கொடுத்துப் பொண்ணக் கட்டுவேன் கொழுந்தனாரே.."
சுதர்சனத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த ரதிமீனா அம்புஜத்தின் பேச்சைக் கேட்டதும் திகிலடித்துப் போனவளாக கையிலிருந்த தண்ணீர் தம்ளரை நழுவ விட்டாள்.. தங்கை மகளைக் கனிவுடன் பார்த்த சுதர்சனம்..
"இதுக்கெல்லாம் பயந்தா எப்புடிம்மா..? உங்கண்ணன் ஆம்பளை.. டெபுடேசன்னு ஊரை விட்டு ஓடிப் போயிட்டான்.. நீ பொம்பளப்புள்ள.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. தாய்மாமன்னு நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்..? எனக்குப் பெண்பிள்ளைதான் இல்லை.. சிங்கம் போல ரெண்டு ஆண்பிள்ளைகளைப் பெத்து வைச்சிருக்கேன்.. எக்காரணம் கொண்டும் உன்னை விட்டுத் தரமாட்டேன்.. நீ உள்ளே போ.." என்றார்..
ரதிமீனா உள்ளே ஓடி விட்டாள்.. தாய்மாமனின் பேச்சுக்குக் கட்டுப்படும் அண்ணன் மகளை ஆங்காரமாகப் பார்த்த அம்புஜம் சுதர்சனத்திடம் சீறினாள்..
"எங்க அண்ணன் மகளைக் கட்டிக்க எனக்குத்தான் உரிமையிருக்கு கொளுந்தனாரே.. நீங்க யாரு ஊட வர..?"
"உங்க அண்ணன் மகளோட தாய்மாமன்..! நான் வராம வேற யாரு வருவா..? ரதிமீனா என் தங்கச்சி மக.. அவளை என் மகனுக்குக் கட்டி வைக்க எனக்குத்தான் உரிமையிருக்கு.."
"கேட்டிங்களா அண்ணா.. நீங்க தாட்டியமா இருக்கிறப்பவே என் சொந்தத்தை அத்து விடப் பாக்குறாங்க.. இந்த வீட்டில அண்ணியோட அண்ணனுக்குத்தான் அதிகாரம்ன்னா நான் யாரு..? உங்க தங்கச்சிக்கு இந்த வீட்டில உரிமையில்லையா..?"
"பேசறது நானு.. மச்சானை ஏன் இதில இழுக்கறிங்க..? திங்க உரிமை.. தங்க உரிமை.. சீர்வரிசையைக் கேட்டு வாங்கிக்க உரிமை.. இதுக்கெல்லாம் நான் பங்குக்கு வந்தேனா..? ஏன்னு கேட்டேனா..? பிள்ளைகளைப் பத்தி பேச்சு வந்தா நான் ஊடே வருவேன்.. ஏன்னு கேப்பேன்.. ஏன்னா.. அந்தப் பிள்ளைகளுக்கு நான் தாய்மாமன்.."
அங்கே பானிபட் யுத்தம் ஆரம்பமானது.. ஆங்காரமான அம்புஜம் எட்டூருக்குக் கேட்பதைப் போலக் கத்த, காதுகளைப் பொத்திக் கொண்ட தசரதன் கர்ஜித்தார்..
"அம்புஜம்.. இப்ப ஆக வேண்டிய வேலையைப் பாரு.. ரகுநந்தன் வந்துக்கிட்டு இருக்கான்.. அவனுக்கும் சித்ராவுக்கும் கல்யாணம் பேசி முடிக்கிற வேலையை முதலில் பார்ப்போம்.. மத்த பஞ்சாயத்தை அப்புறமா பேசிக்கலாம்.."
'எப்புடி..?' அம்புஜம் வெற்றிக் களிப்புடன் சுதர்சனத்தைப் பார்த்தாள்..
"நடந்தாப் பார்த்துக்கலாம்.."
சுதர்சனம் செல்போனை காதில் வைத்து யாரிடமோ பேசுவதைப் போலச் சொல்லியபடி உள்ளே போனார்..
'அடங்க மாட்டேங்கிறானே..' அம்புஜத்தின் வயிற்றில் பயபந்து உருண்டது.. சுதர்சனத்தின் அலட்சியம் கலந்த அமைதி அவளை அச்சுறுத்தியது..
'இவன் என்ன செய்யக் காத்திருக்கிறானோ..'
பீதியுடன் டைனிங் ஹாலுக்குப் போனால் அங்கே அவர்களுக்கு முன்னதாக கிருஷ்ணன் உட்கார்ந்து தட்டில் இருந்த மட்டன் பிரியாணியையும் சிக்கன் சுக்காவையும் வெட்டிக் கொண்டிருந்தார்..
"உன் கை மணம் அப்படியே எங்கம்மாவின் கைப்பக்குவம் போல இருக்கும்மா.." கண்ணீர் பனிக்க சுமித்ராவை பாராட்ட வேறு செய்தார்..
'திங்கப் படிக்க மனுசன்..' அம்புஜத்துக்கு வெறுத்துப் போனது..
'இந்த சுதர்சனம் வேற கேலியாப் பார்த்துத் தொலைப்பானே..'
சுதர்சனத்தின் பக்கமே திரும்பாமல் கெத்தாக கிருஷ்ணனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பிள்ளைகளை அழைத்தாள்..
'பந்திக்கு முந்தனும்ங்கிற அறிவில்லாம இதுக ரெண்டும் எங்கே போச்சுக..? இப்படியாப்பட்ட அப்பனுக்குப் பிள்ளைகளாப்  பொறந்துட்டு வயித்தைப் பார்க்காம என்னத்தைப் பண்ணுதுக..?' மனதுக்குள் தாளிதம் செய்தபடி..
"ஏ சித்ரா.. சதானந்தா.. சாப்பிட வாங்க.." என்று குரல் கொடுத்தாள்..
"அதுக ரெண்டும் அப்பவே சாப்பிட்டிருச்சுகளே.." துளசி சொன்னாள்..
"சமத்துப் பிள்ளைகள்.." கிருஷ்ணன் சிலாகிக்க..
"நல்லதோர் குடும்பம்.. பல்கலைக்கழகம்.." என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சுதர்சனம்..
அம்புஜத்திற்கு சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.. எதற்காக வந்திருக்கிறோம்.. என்ன சுழலில் இருக்கிறோம் என்ற நினைவில்லாமல் சாப்பாட்டு ராமன்களாகவும், ராமியாகவும் இருக்கும் கணவர், மகன், மகளை நினைத்துக் குன்றிப் போனாள்..
"கிண்ணத்தில் இருப்பதுதான் கரண்டியில் வரும்.." தத்துவம் சொன்னார் சுதர்சனம்..
தசரதன் புருவங்களை உயர்த்த..
"சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் மச்சான்.." என்றார்..
சுதர்சனம் பேச்சுக்குச் சொல்லவில்லை என்பது அம்புஜத்திற்குப் புரிந்தது.. அவளுக்கு மட்டும் புரிந்து என்ன  பிரயோசனம்..? புரிய வேண்டிய அவளது குடும்பத்திற்கு புரிய வேண்டுமே..
"இன்னும் கொஞ்சம் வறுவலைப் போடும்மா.."
கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவரை இயலாமையுடன் பார்த்தாள்..
"ஆசை இருக்கு தாசில் பண்ண.. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.." என்றார் சுதர்சனம்..
"என்ன கொளுந்தனாரே.. ஜாடைப் பேச்சு கொடி கட்டிப் பறக்குது.. உங்க தங்கச்சிக்கு நாத்தனாரு நானு.. அந்த பயம் மனசில இருக்கட்டும்.."
"அந்த நினைப்பு மனசில இருக்கண்ணி.."
"இருக்கறதைப் போலத் தெரியலையே.. கொஞ்சம்கூட பயம் பத்து இல்லாம இல்ல பேச்சு வருது.."
"இந்த சுதர்சனம் சாமிக்கு மட்டும்தான் பயப்படுவான்.. மனுசருக்கு அஞ்சினதில்ல.. அதனால இந்த பத்து அரைச்சுப் போடற வேலைய எல்லாம் வேற பக்கம் வைத்துக்கங்க.. பேச்சுன்னு வந்துட்டா அண்ணன் முகத்துக்காகவும் பார்க்க மாட்டேன்.. மச்சான் முகத்துக்காகவும் பார்க்க மாட்டேன்.. நான் வேற மாதிரி.."
அவர் எந்த மாதிரி என்பதை புரிந்து வைத்திருந்த அம்புஜம் வாயை மூடிக் கொண்டாள்.. காரியம் பெரிதா..? வீரியம் பெரிதா..? போடுகிற சண்டையை ஜாடைப் பேச்சுக்காக போடாமல் ரகுநந்தனின் தலையில் சித்ராவைக் கட்டிவிடப் போட வேண்டும்.. அதை விட்டுவிட்டு இப்போதே சண்டையை ஆரம்பித்தால் விசயம் வேறு திசையில் திரும்பி விடும்.. ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது..
'முதல்ல ரகுவுக்கு சித்ராவைக் கட்டிக் கொடுத்துட்டு, ரதிமீனாவை சதாவுக்கு கட்டி வைக்கிற வேலையைப் பார்ப்போம்.. அதுக்கப்புறம் இந்த ஆளை ஒரு கை பார்த்துக்கலம்.. இவன் தங்கச்சி குடுமிய என் மக பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி வைக்கிறதில, இவன் என்னைக் கண்டாலே நடுங்கனும்..'
அம்புஜம் மனதுக்குள் கருவியபடி சாப்பாட்டை வெட்ட ஆரம்பித்தாள்.. அடிக்கண்ணில் அவளது முகமாற்றத்தை அவதானித்துக் கொண்டிருந்த சுதர்சனமும் கருவிக் கொண்டுதான் இருந்தார்..
'ஆட்டக் கடிச்சு, மாட்டக் கடிச்சு, ஆளக் கடிக்க வர்றியா..? என் தங்கச்சி புள்ளைகளை கதிகலங்க வைக்கிறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க நானென்ன ஏமாந்த சோணகிரியா..? நீ ரகுநந்தனுக்குப் பெண்ணைக் கொடுக்கவும் முடியாது.. ரதி மீனாவை உன் மகனுக்குக் கட்டிக்கவும் முடியாது.. நான் விட மாட்டேன்..'
அங்கே புயலும், பூகம்பமும் தற்காலப் போர் நிறுத்தம் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்க.. ரகுநந்தனும் அஞ்சனலட்சுமியும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -13
தேரில் வந்த திருமகள்..! -13
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy