தேரில் வந்த திருமகள்..! -12

12     ' அலையே.. கடலலையே..!           நீ கலங்காதே.. மனம் மயங்காதே..      உன் அருகினில் நானிருப்பேன்.. ' ரகுநந்தனின் மனம...


12

    'அலையே.. கடலலையே..!
          நீ கலங்காதே.. மனம் மயங்காதே..
     உன் அருகினில் நானிருப்பேன்..'
ரகுநந்தனின் மனம் பாடியது.. அஞ்சனலட்சுமியின் துயரம் என்னவாக இருக்கக்கூடும் என்று தெரியாமல் அவனது மனம் கனத்தது.. திருவாரூரில் இறங்கியதும் காத்திருக்கும் போராட்டத்தைப் பற்றிய கவலையை அவன் மறந்தான்.. அவனது மனம் கவர்ந்த அஞ்சனாவின் மனதிலிருக்கும் சோகத்தை ஆற்ற விழைந்தான்..
இங்கே இப்படியிருக்க, திருவாரூரில் அவனது வீட்டில் சுதர்சனத்திற்கும் அம்புஜத்திற்குமான பனிப்போர் களை கட்டிக் கொண்டிருந்தது.. தங்கை மகனிடம் பேசலாம் என்று சுதர்சனம் செல்போனை கையில் எடுத்தார்.. அவரை நிஷ்டூரமாக முறைத்தாள் அம்புஜம்..
"இப்ப என்னத்துக்கு அண்ணி இப்படிப் பாக்கறிங்க..?" எரிச்சலுடன் கேட்டார் சுதர்சனம்..
"இப்ப யாருக்குப் போன் போடப் போறிங்க..?"
"யாருக்கோ.. அது எதுக்கு உங்களுக்கு..?"
"உங்க வீட்டில உக்காந்து யாருக்கு வேணும்னாலும் போனைப் போடுங்க கொளுந்தனாரே.. அது எதுக்கு எனக்கு..?"
"இது உங்க வீடா..?"
"என் அண்ணன் வீடு.. என் பிறந்த வீடு.."
"இந்த வக்கணையை நாங்களும் செப்புவோம்.. இது என் தங்கையின் வீடு.. அவ புகுந்த வீடு.."
"இந்த வக்கணைக்கு ஒன்னும் கொறைச்சலில்ல.."
அம்புஜம் தோள்பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டாள்.. அதைபடு அலட்சியமாகப் பார்த்து அவளது ரத்த அழுத்தத்தை எகிற வைத்தார் சுதர்சனம்.. அருகில் இடித்த புளியாக அமர்ந்திருக்கும் கணவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் அம்புஜம்.. மனைவி எதற்காகத் தலையில் அடித்துக் கொள்கிறாள் என்று புரியாமல் அப்பாவியாக விழித்த கிருஷ்ணன்..
"இப்ப என்னத்துக்கு தலையில் அடிச்சுக்கிற அம்புஜம்..?" என்று கரிசனமாக விசாரித்தார்..
'ம்ம்ம்.. உங்களுக்குக் கழுத்தை நீட்டியிருக்கேனே.. அதுக்காகத்தான்..'
மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தாள் அம்புஜம்..
"விவரம் கெட்ட மனுசன்.."
மைண்ட் வாய்ஸை அவள் சவுண்டு வாய்ஸாகப் பேசிவிட..
"அதுசரி.. உங்க விவரத்துக்கு முன்னால அண்ணனாலே தாக்குப் பிடிக்க முடியுமா..? இவரு பாவம்.. அப்பாவி மனுசன்.." என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சுதர்சனம்..
'எப்புடிக் கவுண்டரு கொடுக்கறான்.. இந்த மனுசனும் இருக்காரே..' அதற்கும் கணவரை முறைத்தாள் அம்புஜம்..
"அண்ணன் பாவம் அண்ணி.. இந்த முறைப்பு முறைச்சீங்கன்னா அவரு என்ன ஆவாரு..?"
"அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்.."
"எங்கே..? நீங்க அந்தக் கவலையை எடுத்துக்கிட்டா நான் ஏன் வெட்டியாக் கவலப்படப் போறேன்..?"
"என்ன கொளுந்தனாரே.. விட்ட விடிகாலையில இருந்து வில்லங்கமாப் பேசனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்க போல.. இருக்கிற இடத்த விட்டு நகராம வில்லங்கத்துக்கு விதை போடறதில உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல கொளுந்தனாரே.."
"உங்க பாராட்டுக்கு நன்றி அண்ணி.. ஆனாலும் அண்ணி உங்கவாயாலே நீங்க வில்லங்கத்தப் பத்திப் பேசக் கூடாதுங்க அண்ணி.. வில்லங்கத்தோட மொத்த உருவமே நீங்கதானுங்களே.. மரமா நீங்க நிக்கிறப்ப, நான் விதை போட்டு என்னாகப் போகுது அண்ணி..?"
'போட்டுத் தாக்கறானே..'
எந்தப் பக்கமிருந்து அம்பெய்தாலும் அதைக் 'கபக்' என்று பாய்ந்து கேட்ச் பிடித்து விடும் சுதர்சனத்தின் வல்லமையில் வெம்பிப் போனாள் அம்புஜம்.. அவர் அங்கு வந்திருப்பது அவளை பயம் கொள்ள வைத்தது.. அண்ணன் மகனின் தலையில் அவளது மகளைக் கட்டிவிட அவள் காணும் கனா பலிக்காதோ என்ற கவலை வந்தது..
'இந்தம்மா முழிக்கிற முழியே சரியில்லயே.. மனதுக்குள்ளே என்ன சதிவேலையை யோசிக்குதோ..' சுதர்சனம் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தார்..
"என் முகத்தில என்ன இருக்கு..?" வெடுவெடுத்தாள் அம்புஜம்..
'சகுனி வேலை இருக்கு..' சொல்லாமல் மௌனித்தார் சுதர்சனம்..
'உக்காந்திருக்கிறதைப் பாரு.. இடிச்ச புளி மாதிரி.. என்ன சொன்னாலும் இடத்தக் காலி பண்ண மாட்டேங்கிறானே.. இவன் இங்கிருந்தா குச்சியை முறிச்சுப் போட்டுக் கட்டாயம் என் கனாவைக் கலைச்சுருவான்.. இவன ஓட்டிவிட ஒரு மார்க்கமும் அகப்பட மாட்டேங்குதே..'
அம்புஜம் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்..
"நாங்கள்ளாம் பொண்ணக் கொடுத்த வீட்டில கை நனைக்க யோசிப்போம்.. எங்கண்ணன் என் வீட்டுக்கு வந்து போகிறதே தெரியாது.. வாசலோட வந்துருவாரு.."
"எப்படி வீட்டுக்குள்ள வருவாரு..? அதுக்குள்ள நீங்க அண்ணன் வீட்டில குடும்பத்தோட டேரா போடலாம்ன்னு வீட்டுக் கதவை மூடிச் சாவியை இடுப்பில செருகிக்கிட்டு வாசலில் வந்து நின்னிருப்பீக.. அப்புறம் எப்படி உங்க வீட்டில வந்து அவரு விருந்தாடுவாரு.. ஒரு காப்பிக்கு வழியிருந்திருக்குமா..? அதுவே எங்க வீட்டில மச்சான் தலையைக் கண்டதும் கோழியடிச்சு, மீனைப் பிடிச்சு, முட்டையை அவிச்சுத் தடபுடலா விருந்தாக்கிப் போடுவோமே.. மச்சான் வந்து சாப்பிட்டு இளைப்பாறி ஒரு வாரம் தங்கியிருந்துட்டு இல்ல வருவாரு.."
அந்த அஸ்திரத்தையும் தவிடு பொடியாக்கினார் சுதர்சனம்..
"பொண்ணக் கொடுத்தவரு இதக்கூடச் செய்யலைன்னா எப்புடி..? பதில் விருந்து தின்னத்தான் தங்கச்சி வீட்டில வந்து தங்கியிருக்கீங்களாக்கும்..?"
"ஆமாம்ன்னு சொன்னாக் குத்தமில்ல அண்ணி.. தங்கச்சியக் கட்டிக் கொடுத்த வீட்டில கை நனைச்சு விருந்தாடறதுக்கு எனக்கு ஆயிரம் காரணம் இருக்கு.. அதையெல்லாம் உங்ககிட்டச் சொல்லிக்கிட்டு இருக்கணும்ங்கிற அவசியமில்ல.. பொண்ணக் கட்டிக் கொடுக்கிறதுக்கு முன்னாடியே இங்கே குடும்பத்தோட டேரா போட்டிருக்கிற நீங்கள்ளாம் பொண்ணக்கட்டிக் குடுக்கிற வீட்டில கை நனைக்கிறதைப் பத்திப் பேசவே கூடாது.."
"வேற எதைப் பேசறது கொளுந்தனாரே.. வேணும்னா நடக்கப் போகிற என் மக கல்யாணத்தைப் பத்திப் பேசவா..?"
அதற்குத்தான் நீ விட மாட்டேன் என்கிறாயே என்ற காய்ச்சலுடன் கேட்டாள் அம்புஜம்..
"உங்க மக கல்யாணத்தைப் பத்திப் பேச நான் ஏன் தடா போடப் போறேன்.. தாராளமா பேசுங்க.." பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்த சுதர்சனம்..
"ஆமாம்.. மாப்பிள்ள யாரு..? எந்த ஊரு..? என்ன பேரு..?" என்று கேட்டு சோதித்து வைத்தார்..
"என்னது..???"
ஆணானப்பட்ட அம்புஜத்திற்கே பேச வாய் வரவில்லை.. சுதர்சனம் போட்ட போட்டில் திக்கித் திணறினாள்.
உள்ளே தாய்க்கு உதவி செய்வதைப் போன்ற பாவனையுடன் ஹாலில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரதி மீனாவிற்கு சிரிப்புத் தாங்கவில்லை.. ஆர்ப்பாட்ட அம்புஜத்தை அனாசியமாக பந்தாடும் தாய்மாமனின் தாட்டியத்தை ரசித்தாள்..
"ம்மா.. மாமாவோட முடியல.. எப்படிக் கேக்கிறார்ன்னு பாருங்க.. அத்தைக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சு.." தாயிடம் முணுமுணுத்தாள்..
"ஹார்ட் அட்டாக்கெல்லாம் ஹார்ட் இருக்கிறவங்களுக்குத் தான்  வரும்.. உங்க அத்தைக்கு ஏது ஹார்ட்டு..? இதயமில்லாத ஜென்மம்.." வெறுப்புடன் முகவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள் சுமித்ரா..
உள்ளூரில் வேலை கிடைத்தும் ஓய்ந்து உட்கார முடியாமல் சுமித்ரா பெற்ற மகன் சென்னைக்கு ஓடியதற்கு அம்புஜம்தானே காரணம் என்ற வெறுப்பு அவளுக்கு..
"கவலைப்படாதீங்கம்மா.. அதான் ட்ரீட்மெண்ட் கொடுக்க நம்ம மாமா இருக்காரில்ல.." உற்சாகத்துடன் சொன்னாள் ரதி..
"அந்த நிம்மதியிலதான் இருக்கிறேண்டி.. குத்துக்கல்லாட்டம் இருக்கிற எனக்கு உடம்பு சரியில்லன்னு என் மகனை திருவாரூருக்கு  இழுத்துக்கிட்டு இருக்காங்களே.. என் நெஞ்சு கொதிக்குது.. சென்னையிலேயாவது என் மகனை நிம்மதியா இருக்க விடுதுகளா..? மனச்சாட்சி இல்லாத ஜென்மங்கள்.."
மனது கொதித்த கொதிப்பில் நாத்தனாரையும் கணவரையும் திட்டித் தீர்த்தாள் சுமித்ரா.. அவள் வேதனை அவளுக்கு.. தாயைக் கட்டித் தோளில் முகம் புதைத்து ஆறுதல் படுத்தினாள் ரதி..
"கூல் மாம்.. அங்கே பார்த்தீங்களா.. உங்க அண்ணன் அலட்டிக்காம செஞ்சுரி அடிச்சுக்கிட்டு இருக்காரு.. அவரோட தங்கச்சி நீங்க.. அவரில பாதியாவது இருக்க வேணாமா...? அலட்டிக்காம ஆடுகளத்தில இறங்கி ஆடனும்மா.."
"அதுக்குத்தான் என் அண்ணன் இருக்காரே.. என்னை விடு.. கடோத்கஜிக்கு ஆக்கிப் போடப் போகனும்.."
"கடோத்கஜி..! ஹ..! எவ்வளவு பொருத்தமான பேரு.."
ரதிமீனா சத்தமின்றி குலுங்கிச் சிரித்தாள்.. தசரதன் தண்ணீர் கேட்டபோது மட்டும் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு தண்ணீர் சொம்பைக் கொண்டு போய் கொடுத்தாள்..
'மாமா போடற அணுகுண்டுக்கு அத்தைக்கு இல்ல தொண்டைத் தண்ணி வத்திப் போயி தண்ணி கேக்கனும்.. அப்பா ஏன் கேக்கறாரு..?' என்ற சிந்தனை வேறு..
"கேட்டுக்கிடிங்களா அண்ணே.. சுபத்திரையைக் காவக் காக்கிற தாட்டியமான அண்ணன் கண்ணனைப் போல என்னை நீங்க காவக் காத்து நிக்கிறப்பவே எப்படிக் கேள்வி வருதுன்னு..?"
அம்புஜம் பிலாக்கனத்தை ஆரம்பித்தாள்.. எதற்காக தந்தை தண்ணீர் கேட்டார் என்று ரதிமீனாவுக்கு பிடிபட்டது.. தசரதன் வருமுன் காக்கும் ரகம்.. அம்புஜத்தால் சுதர்சனத்திடம் மோத முடியாமல் பின்வாங்க நேரும்போது அவள் சார்பில் மோத அவள் தசரதனைத்தான் குறி வைப்பாள்.. அதற்காகத்தான் தசரதன் தண்ணீர் குடித்து தயாராகிறார்..
'அதுசரி.. ஒரு அண்டாத் தண்ணிய ஒருமிக்கக் குடித்தாலும் எங்க மாமா பேச்சுக்கு இசைப்பேச்சு பேச முடியுமா..?'
தகப்பனுடன் மோதப் போகும் தாய்மாமனின் பெருமையை சிலாகித்தது ரதி மீனாவின் மனம்..
"கேக்கிறது வேற யாருமில்லண்ணே.. உங்க மச்சினர்.. கொஞ்சமாச்சும் தங்கச்சிய இந்த வீட்டில கட்டிக் கொடுத்திருக்கோம்ங்கிற பயம் பத்து இருக்கா..? அப்படி இருந்திருந்தா உங்க முன்னாடியே உங்க தங்கச்சிய நாக்கு மேலப் பல்லப் போட்டுக் கேள்வி கேக்கிற தைரியம் வந்திருக்குமா..?" அம்புஜம் உருவேற்றினாள்..
"ஏன் அண்ணி..? இங்கே யாரு நாக்கு மேலப் பல்லப் போட்டுக் கேக்கக் கூடாத கேள்வியக் கேட்டது..? உங்க பொண்ணுக்குக் கல்யாணம்ன்னு சொன்னீங்க.. மாப்பிள்ள யாரு, எந்த ஊருன்னு கேட்டேன்.. இது ஒரு தப்பா..? அதுக்குப் போயி என் தங்கச்சிய இழுக்கறிங்க.. நீங்களாச்சும் சுபத்திரை, கண்ணன்னு புராணத்தை இழுத்துப் பாசப்பயிரை வளர்ப்பீங்க.. நாங்க அப்படியில்ல.. பிறப்பிலேயே சுதர்சனமும் சுமத்திரையும்ன்னு பிறந்தவங்க.. உங்களைக் கட்டிக் கொடுத்துட்டே என் மச்சான் பயம் பத்தில்லாம இருக்காரு.. அருமையான எந்தங்கச்சியக் கட்டிக் கொடுத்திருக்கிற நான் ஏன் பயப்படனும்..?"
ஹாலில் அம்புஜம் சட்டமாக உட்கார்ந்து கொண்டு சுமித்ராவின் தலையை உருட்டிக் கொண்டிருக்க, சுமித்ராவோ நாத்தனாரின் வாய்க்கு வக்கணையாக கோழி வறுவலை வறுத்துக் கொண்டிருந்தாள்..
"இது ஆடற ஆட்டத்துக்கு பல்லில பச்சைத்தண்ணி படாம வீட்டை விட்டு விரட்டியடிக்கனும்.. அண்ணனை வீடு தங்க விடாம விரட்யடிச்சிருக்கு.. இதுக்குப் போயி கோழியை வறுத்து ஆக்கிப் போடறிங்களேம்மா.." ரதிமீனா ஆதங்கப்பட்டாள்..
"வேற வழி..? எம்பிள்ளைக்கு அம்மாவா இந்த அம்புஜத்த ஒருகை பார்க்கணும்னுதான் மனசு துடிக்குது.. ஊடே உங்க அப்பா வந்து மதிலு சுவரு போல நிக்கிறாரே.. அவருக்காக அவரோட தங்கச்சின்னு ஆக்கிப் போட வேண்டியிருக்கே.." சேலை முந்தானையில் விழிகளைத் துடைத்துக் கொண்டாள் சுமித்ரா..
ரதிமீனாவுக்கு இரக்கமாக இருந்தது.. சுமித்ராவுக்கு மகன் மீது கொள்ளைப்பாசம்.. அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கத் துடியாய் துடித்தாள்.. அதற்கான சுதந்திரம் அவளுக்கு மறுக்கப்பட்டிருந்தது.. பத்து மாதம் சுமந்து பெற்றவளிடம் 'என் மகன்..' என்ற ஒற்றை வார்த்தையில் உரிமையைப் பறித்துக் கொண்டு தள்ளி நிறுத்தியிருந்தார் தசரதன்..
"விடுங்கம்மா.. உங்களாலே பேச முடியலைன்னா என்ன..? அதான்.. உங்களுக்குப் பதிலா நம்ம மாமா அம்புஜம் அத்தையை வாயைத் திறக்க விடாம வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்காரே.." ஆறுதல் சொன்னாள் ரதி..
"அந்த நம்பிக்கையிலதான் நான் இருக்கேண்டி.."
"அதே நம்பிக்கையிலதான் அண்ணனும் துணிஞ்சு ஊருக்கு வந்துக்கிட்டு இருக்கு.."
தாயும் மகளும் நம்பிக்கையுடன் ஹாலைப் பார்த்தார்கள்.. அங்கே படு இயல்பாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து, சோபாவின் மீது ஒரு கையைப் போட்டுக் கால்களை ஆட்டியபடி, துளிக்கூட பதட்டமில்லாமல் தசரதனையும் அம்புஜத்தையும் எதிர்கொண்டு தலையால் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருந்தார் சுதர்சனம்..
"நம்ம மாமா இருக்காரே.."  ரதிமீனா பெருமைப்பட்டாள்..
"இப்படி ஒரு அண்ணன் இருக்கிறப்ப அம்புஜம் அத்தைக் கெல்லாம் நீங்க அஞ்ச வேண்டியதே இல்லைதான் அம்மா.."
தமையனின் தாட்டியத்தில் பெருமிதம் கொண்டாள் சுமித்ரா.. தாங்கி நிற்கும் தமையன் வாய்க்கப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தேரில் வந்த திருமகள்..! -12
தேரில் வந்த திருமகள்..! -12
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0016.jpg
https://1.bp.blogspot.com/-Y8riA0s4Hs8/Xk42dl5qyQI/AAAAAAAAAyg/bm414DHuYxwjKHA79fnjMlJYe42fyWHqQCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0016.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/therilvanthathirumagal-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy