புலர்கின்ற பொழுதில் -3

3 புலர்கின்ற பொழுதில்.. பொன்மகளின் வரவு.. அலைமகளே..! என்றும் நீதானே என் நிறைவு... அதற்கு முன்னால் தன் மனைவியை அந்த மாதிரியான ...


3
புலர்கின்ற பொழுதில்..
பொன்மகளின் வரவு..
அலைமகளே..! என்றும்
நீதானே என் நிறைவு...

அதற்கு முன்னால் தன் மனைவியை அந்த மாதிரியான நிலைமையில் துளசிராமன் பார்த்ததில்லை.. சிறுமியாக இருந்தபோதே அவருக்கு மணம் முடித்து வைக்கப் பட்டு.. அவர் கரம் பற்றிக் கொண்டு அந்த வீட்டிற்குள் வந்த குணவதி.. தேவையில்லாமல் அந்த வீட்டு வாசல்படியைத் தாண்டியதில்லை.. தேவையான போதும் தாண்டியதில்லை.. அப்படிப்பட்ட அமைதியின் சிகரம்.. இன்றைக்கு தன்னந்தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டு.. காற்றில் கைவிரலால் கோலம் போடவும்.. துளசிராமன் கலவரப் பட்டார்..
"ஏண்டா சுந்தரம்.. உன் அம்மா எப்போதிருந்து இந்த மார்க்கமா இருக்கா..?"
மாமனாரின் கேள்வியைக் கேட்ட வேதநாயகி..
'அப்பாவும்.. மகனும்.. மார்க்கமா இருக்கிறதைப் பத்தி.. ஒரு புத்தகமே எழுதித் தள்ளிருவாங்க போல இருக்கே.. வேற எது தெரியுதோ இல்லையோ.. இந்த மார்க்கம் மட்டும் நல்லாத் தெரியுது..' என்று மனதிற்குள் வசை பாடிக் கொண்டாள்..
அத்தனை வருடங்களாக மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் சுந்தரமூர்த்திக்கு.. மனைவி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாமல் போய்விடுமா..?
'அப்பாவும் இப்படி ஒரு மார்க்கமாகவே பேசி வைக்கிறாரே.. ஏற்கனவே இவ ஒரு மார்க்கமா இருந்து தொலைக்கிறா.. இப்ப இதைக் கேட்டதும.. என்ன மார்க்கமா நினைத்துத் தொலைக்கிறாளோ..'
மார்க்கத்தைப் பற்றித்தான் அவள் நினைத்துத் தொலைப்பாள் என்பதை அறிந்து வைத்திருந்த சுந்தர மூர்த்தி.. அவசரமாக தகப்பனின் பேச்சை திசை மாற்றி விட்டார்..
"கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்காம்.."
"இருக்காமுன்னு சொன்னா.. யாரு இதைச் சொன்னது..?"
மனைவியின் பெயரைச் சொல்ல வாய் திறக்கப் போன சுந்தரமூர்த்தி.. அவள் கண்களில் தெரிந்த எச்சரிக்கையை உணர்த்தும் சமிக்ஞையைக் கண்டதும் அவசரமாக வாயை மூடிக் கொண்டார்..
'ம்ஹூம்.. எல்லாரு வீட்டிலயும்.. புருசன்காரன் முகத்தைப் பார்த்து.. அவன் என்ன சொல்லுவானோன்னு யோசிச்சு பொம்பளைக பேசுவாங்கன்னா.. என் வீட்டில் கதையே.. தலை கீழாய் இருக்கு.. இவ முகத்தைப் பார்த்துப் பார்த்து.. யோசித்து நான் பேச வேண்டியிருக்கு.. தலை விதிடா சாமி..'
"ஏண்டா சுந்தரம்.. நான் கேட்கிறது உன் காதில் விழுகுதா இல்லையா..?"
'நீங்க பேசறது காதில் விழுகுது.. நீங்க வாய் விட்டுல்ல பேசுறிங்க.. என் பொண்டாட்டி மனசுக்குள்ள.. பேசிக்கிறதுதான் என்னான்னு எனக்குத் தெரிய மாட்டேங்குது..'
"வாயைத் திறந்து பதிலைச் சொல்லுடா.."
'எனக்கும் வாயைத் திறக்க ஆசைதான்ப்பா.. எங்கே.. என் பொண்டாட்டி.. கண்ணாலே என்னை மிரட்டிக்கிட்டு இருக்காளே..'
"ஏண்டா.. இடிச்சு வைச்ச புளியாட்டமா இப்படி நிக்கறே.."
'பொறுங்கப்பா.. என் பொண்டாட்டியோட அடுத்த கண்ஜாடை என்ன சொல்லுதுன்னு பார்த்துப்புட்டு பதிலைச் சொல்லுறேன்..'
சுந்தரமூர்த்தியின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.. வேதநாயகியிடமிருந்து அடுத்த கண் சமிக்ஞை அவரை நோக்கி வந்தது.. அங்கே வேலை செய்து கொண்டிருந்த பூவாயியை நோக்கி அவள் ஜாடை காட்டினாள்..
மனைவியின் கண் சமிக்ஞைகளை புரிந்து கொள்ளும் விசயத்தில் மட்டும் கற்பூரப் புத்தியைப் பெற்றிருந்த சுந்தரமூர்த்தி உற்சாகமாகி விட்டார்..
"பூவாயிதான் சொன்னாப்பா.."
தன் பெயரை எதற்காக எஜமானர் சொல்லுகிறார் என்பதை அறியாதவளாய்.. தன் பெயரை அவர் சொல்லியதாலேயே மகிழ்ந்து போய்விட்ட பூவாயி.. அவரை முக மலர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள்.
"ஏன் பூவாயி.. நீயா சொன்னே..?" துளசிராமன் விசாரிக்க..
"ஆமாங்கய்யா.." என்று சொல்லியும் வைத்தாள்..
கணவனின் முகத்தை ஆவலுடன் பார்க்கும் வேலையாளைக் கவனித்த வேதநாயகியின் முகம் மாறியது..
'இவளைக் கொஞ்சம் கவனிச்சுக்கணுமே..'
மனைவியின் மனம் அறிந்து நடக்கும் சுந்தர மூர்த்திக்கா.. வேதநாயகியின் நினைவு தெரியாது..? அவர் ஜாக்கிரதையாய் பூவாயியை பார்க்காமல் துளசிராமனின் முகத்தைப் பார்த்தார்..
"வீட்டில இத்தனை பேரு சுத்தி நின்னுக்கிட்டு கூப்பாடு போடறோம்.. ஏதாச்சும் இவ காதில விழுகுதான்னு பாரு.. அசையாம உட்கார்ந்திருக்கிறாளேடா.."
துளசிராமன் குணவதியின் அருகே சென்றார்.. அவர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் குணவதி விரலால் அடுத்த கோலத்தை காற்றில் போட ஆரம்பிக்க.. துளசிராமன் அவளது விரலைப் பிடித்துக் கொண்டார்.. கற்பனை தடை பட்டதால் அதைக் கலைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் குணவதி..
 "இப்ப எதுக்கு என் விரலைப் போட்டு உடைக்கறீங்க..?"
"ஐயையோ.. என்னடி நீ.. என் மேலயே பழி போடுகிறயே.." துளசிராமன் அவசரமாய் அவளது விரலை விட்டு விட்டார்..
அப்போதுதான் அங்கே நின்று கொண்டிருந்த மகனையும்.. மருமகளையும்.. பேரனையும் கவனித்தாள் குணவதி..
"ஏனப்பு.. எல்லோரும்.. என்ன சோலிக்கு என்னைச் சுத்தி நின்னுக்கிட்டு இருக்கறீங்க.. உங்களுக்கு வேலைக் கழுதை இல்லையா..?"
மற்றவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.. வேதநாயகி யோ வழக்கம் போல மாமியாருக்கு மனதிற்குள் அர்ச்சனை செய்தாள்..
'இந்தக் கிழவிக்கு இருக்கிற கொழுப்பைப் பாரேன்.. வாயைத் திறந்தால்.. 'கழுதை..' தான் வந்து விழுகுது.. சொல்லுகிற பழமையை 'குதிரை..'ன்னு சொல்லித் தொலைச்சாத் தான் என்ன..'
"ஏம்மா இப்படித் தனியா உட்கார்ந்திருக்கிற..?" சுந்தரமூர்த்தி அதட்டினார்..
மனைவிக்கு எதிரில் தன்னையும் திட்டிவிட்ட தாயின் மேல் அவருக்கு கோபம்..
"ஒரு மனுசக்கழுதை தனியா உட்கார்ந்திருந்தா.. அது ஒரு குத்தமாடா சுந்தரா..?" குணவதிக்கும் கோபம் வந்து விட்டது..
'ம்ஹூம்.. திரும்பவும் கழுதையா..' வேதநாயகி இப்போது மாமியாரை கடுப்பாகப் பார்த்தாள்..
அவளும்தான் என்ன செய்வாள்..? பொழுது விடிந்து.. பொழுது சாயும் வரை.. அந்த வீட்டிலிருக்கும் அனைவரும்.. மாற்றி.. மாற்றி கழுதையின் பெயரைச் சொன்னால்.. கேட்கிறவளுக்குத்தான் எப்படி இருக்கும்..?
"தனியா உட்கார்ந்திருந்தால் தப்பில்லைம்மா.. தனியாப் பேசிக்கிட்டு இருந்தாத்தான் தப்பு.." சுந்தரமூர்த்தி குணவதிக்கு நிலைமையை உணர்த்தினார்..
ஆனால் அவளுக்கு அதற்கும் கோபம் வந்துவிட்டது..
"ஒரு வீடான வீட்டில பேசறது கூட குத்தமாடா..?" என்று மகனிடம் சண்டைக்கு வந்தாள்..
"உன்னை யாரும்மா பேசக்கூடாதுன்னு சொன்னது..? தனியா உட்கார்ந்து ஏன் பேசறே..?"
"அடப் போடா போக்கத்தவனே.."
குணவதியின் வசையைக் கேட்டதும் சுந்தரமூர்த்தி அவசரமாக மனைவியைப் பார்த்தார்.. அவள் கண்களில் சிரிப்புத் தெரிந்தது..
"அம்மா.. வேண்டாம்.. சொல்லிட்டேன்.."
"உன்னை யாருடா எங்கிட்ட பழமை பேசச் சொன்னது..?"
"அப்பாதான்.."
தகப்பனாரை சந்தடி சாக்கில் கோர்த்து விட்டுவிட்டு.. 'இந்த ஆட்டத்திற்கு நான் வரமாட்டேன்..' என்ற பார்வையுடன் விலகிக் கொண்டு விட்டார் சுந்தரமூர்த்தி..
மேற்கொண்டு அன்னையுடன் பேச்சுவார்த்தை நடத்தினால்.. என்ன என்ன பட்டப் பெயர்களை வாங்க வேண்டியிருக்கும் என்பதை அனுபவ ரீதியாக அவர் புரிந்து வைத்திருந்தார்..
'சும்மாவே என் பெண்டாட்டி என்னை ஒரு மார்க்கமா பார்த்து வைப்பா.. இதில இந்தம்மா வாயைத் திறந்தால் என் கதி என்னத்துக்கு ஆகிறது..'
பாவம்.. அவர் கவலை அவருக்கு..
மகனைப் பேச விட்டு விட்டு வேடிக்கைப் பார்த்துக கொண்டிருந்த துளசிராமன்.. வேறு வழியின்றி களத்தில் இறங்கினார்..
"சுந்தரத்தை ஏண்டி வையறே..?"
"உங்களை வைய முடியலையே.. அதான்.. அவனை வையறேன்.."
மாமியாரின் தைரியத்தை மனதிற்குள் மெச்சிக் கொண்டாள் வேதநாயகி.. அவள் முகத்தில் சிரிப்புப் படர்ந்தது..
'என்னை யாராவது வைய நினைத்தால் என் மருமகளுக்குத்தான் எம்புட்டுக் கொண்டாட்டம்..!'
வெறுமையாய் ஒரு பார்வையை மருமகளின் பக்கம் வீசிய துளசிராமன்.. பொறுமையாய் மனைவியின் பக்கம் திரும்பி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தார்..
"என்னை வைய பயப்படுகிறவதான் நீ.. சும்மா பூச்சாண்டி காண்பிக்காதே.. இப்ப என்ன கழுதைக்கு என்னை வையனும்னு நினைக்கிறவ.. அத முதல்ல சொல்லு.."
'ம்ஹூம்.. குடும்பமே.. கழுதைக்கு பூஜை பண்ணுகிற குடும்பம்..'
மாமனாரின் பேச்சைக் கேட்டு.. வேதநாயகி மனதிற்குள் நொந்து கொண்டாள்..
"இந்த வீட்டில தடிமாடு கணக்கா என் பேரன் ஒருத்தன் இருக்கான்.. அவனைப் பத்தி நீங்க யாராச்சும் நினைச்சுப் பாத்தீங்களா.." குணவதியின் கோபம் கண்டு மற்றவர்கள் திகைத்தனர்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -3
புலர்கின்ற பொழுதில் -3
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy