புலர்கின்ற பொழுதில் -1

புலர்கின்ற பொழுதில்.. 1 புலர்கின்ற பொழுதில்.. கரம் குவித்து நின்றேன்.. ஆனை முகத்தோனின்.. அருள் வேண்டிக் கேட்டேன்.. வைகை...


புலர்கின்ற பொழுதில்..


1
புலர்கின்ற பொழுதில்..
கரம் குவித்து நின்றேன்..
ஆனை முகத்தோனின்..
அருள் வேண்டிக் கேட்டேன்..

வைகை ஆறு கரை தொட்டு ஓடிக் கொண்டிருந்தது.. கரையோர நாணல்கள்.. மெல்லிய காலையிளங் காற்றிற்கு.. வரவேற்புக் கூறுவதைப் போல ஆடிக் கொண்டிருந்தன... ஆற்றங்கரையோரமாக அடர்ந்து நின்றிருந்த தென்னந்தோப்புகளில் கூடு கட்டியிருந்த குயில்கள் பாடிக் கொண்டிருந்தன.. தென்னங்கீற்றுகளின் சலசலப்பு அதற்கு பின்னணி இசைபோல இருந்தது..
அந்த அதிகாலை நேரத்தில்.. ஆற்றங்கரை ஓரமாக நின்று கொண்டிருந்த பார்த்திபன்.. புலர்கின்ற விடியலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்..
மடித்துக் கட்டிய வேட்டியும்.. அரைக்கை சட்டையும்.. தலையில் முண்டாசாகக் கட்டியிருந்த துண்டுமாக.. கம்பீரமான விவசாயியாக காட்சியளித்தான் அவன்..
"என்ன பார்த்திபா.. ஆத்தையே அப்படி உத்துப் பாத்துக்கிட்டு நிற்கிற.. இந்த ஆத்தையும் வளைச்சு.. வாங்கிப் போட்டுப்புடலாமுன்னு பார்க்கறியா..?"
ஆற்றில் குளிக்க வந்த சுப்பிரமணி கேலியாக கேட்டான்..
"ஆத்தைப் பாத்தாக் கூட தப்பாடா சாமி..?"
"அதைத் தப்புன்னு சொல்ல நான் யாரு..?"
"அப்புறம் எதுக்கு.. பொசுக்குன்னு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிற..? ஆத்துத் தண்ணியை யாராலயும் விலை கொடுத்து வாங்க முடியுமாடா..?"
"நீ வாங்கினாலும் வாங்குவப்பா.. இந்த ஊரையே வளைத்துப் போட்டுட்ட.. ஆத்தை வளைச்சுப் போடவா யோசிக்கப் போற..?"
சுப்பிரமணி கேலி போல் கூறினாலும்.. உண்மை அதுதான்.. அந்த மேலக்கால் கிராமத்தில் இருந்த முக்கால் வாசி வயல்களும்.. தென்னந்தோப்புகளும் பார்த்திபனுக்குத் தான் சொந்தம்.. அவன் எதையாவது செய்ய வேண்டு மென்று நினைத்துவிட்டால். அதைத் தடுக்க யாராலும் முடியாது.. செய்ய நினைத்ததை செய்தேதான் தீருவேன்..
"காலையில் எதுக்குப்பா.. ஆத்துப்பக்கம் வந்திருக்கிற..?" சுப்பிரமணி.. தண்ணீருக்குள் இறங்கியவாறு கேட்டான்..
"நீ எதுக்கு வந்திருக்கிறயோ.. அதுக்குத்தான் நானும் வந்திருக்கிறேன்னு வைச்சுக்கயேன்.." பார்த்திபனும் தண்ணீருக்குள் இறங்கினான்..
"ஏம்ப்பா.. எனக்குத்தான் வசதியில்லை.. ஆத்தில குளிக்க வந்திருக்கேன்.. உனக்கென்னப்பா தலைவிதி..? இந்த ஊருக்குள்ளேயே.. அரண்மனை போல ஒரு வீட்டைக் கட்டி வச்சிருக்கிற மகராசன் நீ.. எங்க வீட்டளவுக்கு.. உன் வீட்டின் ஒவ்வொரு ரூமிலயும்.. குளிக்கிற ரூம் இருக்காம்.. அதில ஒரு குழாயைத் திருகினா வெந்நித்தண்ணி வருதாம்... இன்னொரு குழாயைத் திருகினா பச்சைத் தண்ணி வருதாம்.. ஊரே பேசிக்குது.."
"அதுக்கு என்னடா..?"
"தரையில பளிங்கு பதிச்சது பத்தாதுன்னு சுவரெல்லாம் பளிங்கைப் பதிச்சு வைச்சிருக்கயாம்.."
"நீ என்னதாண்டா சொல்ல வர்ற..?"
"அதில ஆனந்தமா குளிக்கிறத விட்டுப்புட்டு.. எதுக்குப்பா நீயெல்லாம் ஆத்தங்கரைப் பக்கம் வருகிற..?"
"போடா இவனே.. ஆத்தில நீந்திக் குளிக்கிற சுகமே தனிடா.. அது அந்த பாத்ரூமில் கிடைக்குமா..?"
"என்ன ரூமு..?"
"பாத்ரூம்.."
"நீ குளிக்கிற ரூமைச் சொல்றயா..? சொல்லு.. சொல்லு.. நீ நாலு எழுத்துப் படிச்சவன்.. உனக்குத் தெரியறது.. எனக்குத் தெரியுமா..?"
சுப்பிரமணி சொன்ன அந்த நாலு எழுத்தான எஸ்.எஸ்.எல்.சி யைப் படித்திருந்த பார்த்திபன் பெருமையாகச் சிரித்துக் கொண்டான்.. சுப்பிரமணியைப் பார்த்து அவன் பெருமைப்பட்டுக் கொண்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை..
சுப்பிரமணி மழைக்குக் கூட பள்ளிகூடத்தின் பக்கம் ஒதுங்காதவன்.. அவன் பக்கத்தில் நிற்கும்போது பத்தாம் வகுப்புப் படித்த பார்த்திபன் மெத்தப் படித்தவனாகத்தானே தெரிவான்..?
"தெரியலைன்னா விடு சுப்பிரமணி.. நேத்து பொண்ணு பார்க்க போயிருந்தயே.. என்ன ஆச்சு..?"
"என்ன ஆச்சு..? எனக்குப் பெண்ணைப் பிடிச்சுப் போச்சு.."
"உனக்கு அந்தப் பெண்ணைப் பிடிச்சிருக்கிறது சரி.. அந்தப் பெண்ணுக்கு உன்னைப் பிடிச்சிருக்கா..?"
இந்தக் கேள்வியைக் கேட்டதும் சுப்பிரமணி.. பார்த்திபனையே இமைக்காமல் பார்த்தான்..
"ஏம்ப்பா.. இது உனக்கே நல்லாயிருக்கா..?"
"என்னை ஏம்ப்பா கேட்கிற.. அந்த பொண்ணு கிட்டயில்ல இந்தக் கேள்வியை நீ கேட்டிருக்கனும்.."
"எதைக் கேட்டிருக்கனும்..?"
"உன் மூஞ்சி நல்லாயிருக்கான்னு.."
இதைக் கேட்டுக் கொண்டே பார்த்திபன்.. ஆற்றுநீரில்.. கைகளை வீசி.. ஓர் அம்பு போல் பாய்ந்தான்.. இமைக்கும் பொழுதிற்குள் எதிர்கரையைத் தொட்டு விட்டுத் திரும்பினான்..
"பாருப்பா.. பார்த்திபா.."
"நான் பார்த்து என்ன செய்யடா.. மணியா..?"
"அவளும் என்னை பார்த்துட்டா.."
"நல்லாப் பார்த்துட்டாளா..?"
"கொட்டக் கொட்ட முழிச்சுப் பார்த்துட்டா.."
"அடுத்த பெண்ணை எப்ப பார்க்கப் போற..?"
"இந்தப் பெண்ணுக்கு வர்ற வெள்ளிக்கிழமை போயி பரிசம் போடப் போறேன்.."
"நிசமாவா சொல்ற..? அவ உன்னை.. நல்லாப் பார்த்துட்டான்னு வேற சொல்லிட்டு.. இதையும் சொல்றயே.. எப்படிடா..?"
"இதுதானே வேண்டாம்கிறது.. நான் வேணும்னா.. உன்னைப் போல ஆணழகனா இல்லாம இருந்திருக்கலாம்.. ஆனா.. எனக்குன்னு ஒரு அழகு இல்லாமலா போயிரும்..?"
"அப்படியா..?"
"அட.. ஆமாம்கிறேன்.. அப்பா.. நீ பெரிய வீராதி வீரன்தான்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில.. அடங்காத காளையை அடக்குறவன்தான்.. அதுக்காக.. நான் வெறும் சோப்ளாங்கின்னு சொல்லிருவியா..?"
"பின்னே.. நீ சோப்ளாங்கி இல்லையா..?"
"ஏம்ப்பா.. உன்னை மாதிரி காளையை நான் அடக்கலைன்னாலும்.. ஒரு கன்றுக்குட்டியையாவது அடக்குவேனா இல்லையா..?"
"அதுவும் சரிதான்.."
"அவளுக்கு என்னைப் புடிச்சிருக்கு.."
"அது அந்தப் பெண்ணோட தலைவிதி.."
"அவ தலைவிதிக்கென்னப்பா.. அது நல்லாத்தான் இருக்கும்.."
"இருந்தால்.. நானென்ன வேணாம்ன்னா சொல்லப் போறேன்..?"
"ஏன்.. சொல்லித்தான் பாரேன்.."
"உன் பொல்லாப்பு எனக்கெதுக்குப்பா..?"
"நீ ரொம்ப பயந்த ஆளுதான் போ.. இம்புட்டு நேரமும் பேசித் தள்ளினயே.. அதுக்குப் பேரு என்னப்பு..?"
"அது பொல்லாப்பா..?"
"ஆமாமாம்.. நீ ஒன்னும் தெரியாத பச்சைப்புள்ள..! போகுது போ.. வர்ற தையில கல்யாணம்.. நீ பரிசத்துக்குத் தான் வர மாட்ட.. பெருங்கொண்ட பணக்காரன்.. கல்யாணத்துக்காவது வருவியா..?"
ஏக்கத்துடன் இதைக் கேட்ட சுப்பிரமணியை வாத்சல்யத்துடன் அணைத்துக் கொண்ட பார்த்திபன், கருமை நிறத்திற்கு சற்று கூடுதலான மாநிறத்தில் இருந்தான்.. மிகக் களையான முகம்.. உயரமான.. கம்பீரமான தோற்றம்.. அளவான உடற்கட்டு.. அவனது ஆண்மை ததும்பிய கவர்ச்சியான தோற்றத்திற்கு.. அந்த ஊரில் மட்டுமில்லாமல்.. சுற்று வட்டார ஊர்களிலும் நிறைய ரசிகைகள் உண்டு..
சுப்பிரமணி சொன்னதைப் போல.. ஊரின் நடு மையத்தில் மாளிகை போல கட்டப்பட்டிருந்த அவனுடைய வீடு.. அந்த வட்டார மக்கள் தினமும் வியந்து பேசும் பாக்கியத்தைப் பெற்றது..
வீட்டில் விலையுயர்ந்த கார் உண்டு.. ஆனாலும் பார்த்திபன் பவனி வருவது.. புல்லட்டில்தான்.. தோப்பு களுக்கும்.. தோட்டங்களுக்கும்.. வயல்களுக்கும் போய் வர அதுதான் அவனுக்கு தோது..
அவனை பார்வையிடும் ரசிகையர் பட்டாளத்திற்கும் அதுதான் தோது என்பது வேறு விசயம்..
இருபத்தி ஒன்பது வயதாகியும்.. இன்னும் திருமணத்திற்கு பிடி கொடுக்காமல் தப்பிக்கிறானே என்று.. அவனுடைய தாத்தா பாட்டிக்கும்.. பெற்றவர்களுக்கும்
மகா வருத்தம்..
"வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்க வேணாமாடா..?" என்று பாட்டி.. குணவதி ஆதங்கப்படவும்..
"கெட்டிமேளச் சத்தம்தானே உனக்கு வேணும்.. அடுத்த மாதமே தங்கச்சிக்கு கல்யாணத்தை பண்ணிவை.." என்று நூறு மாப்பிள்ளைகளை.. தங்கை பாரதிக்காக வரிசையாக கொண்டு வந்து நிறுத்தியவன் பார்த்திபன்..
வேறு வழியின்றி.. பார்த்திபனை விட ஆறு வயது இளையவளான பாரதிக்கு மணம் முடித்து வைத்தார்கள்..
அடுத்து பார்த்திபனின் திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் பாரதியின் வளைகாப்பு.. பிரசவம்.. பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுதல்.. காதணி விழா.. என்று தங்கையின் வீட்டு விசேசங்களை முன்னால் நிறுத்தி தப்பித்து விடுவான் பார்த்திபன்..
"ஏன் ராசா.. இந்த பதினெட்டுபட்டிச் சீமையில.. உனக்கு மனசுக்கு பிடிச்சவ ஒருத்தி கூட எம்புடலையா..?" பாட்டி பேரனிடம் தனியாக விசாரித்துப் பார்த்து விட்டாள்..
"எம்புடலையே பாட்டி.." என்று உண்மையிலேயே கவலைப்பட்டான் பேரன்..
"அப்புடி.. எப்பேர்பட்ட ரதியை மனசில நினைச் சிருக்கடா பேராண்டி.." குணவதி விடவில்லை..
"அதைச் சொன்னா மட்டும் பிடிச்சுக் கொண்டு வந்துருவியாக்கும்.." பேரன் சலித்துக் கொண்டான்..
"பிடிச்சுக் கொண்டாரேனா.. இல்லையான்னு பாரு.." குணவதி ஊக்கப் படுத்தினாள்..
"ஒல்லியாய்.. கொடி போல உடல்வாகு.." பார்த்திபன் வர்ணிக்க ஆரம்பித்தான்..
"அந்தக் காலத்து சரோஜாதேவி போலன்னு சொல்லு.." குணவதி உற்சாகமாகிவிட்டாள்..
"வட்ட முகம்.."
"நம்ம தேவிகா முகம் மாதிரி.. அப்புறம்.."
"அழகான பெரிய கண்கள்.."
"அதான்.. அந்தப் பொண்ணு சிரிவித்யா இருக்கே.."
"அது சிரிவித்யா இல்ல பாட்டி.. ஸ்ரீவித்யா.."
"எதுவோ ஒன்னு.. அதுக்குத்தான் அழகானகண்ணு.."
"அந்தம்மாதான் இப்ப இல்லையே.."
"அந்தப் பொண்ணு இருந்தா மட்டும்.. அதைப் போயி பொண்ணு கேட்டு.. உனக்கு கட்டியா வைக்க முடியும்..?"
"ஏன் பாட்டி.. எனக்கு பொண்ணு பார்க்கப் போகச் சொன்னா.. அப்பாவுக்கு பொண்ணு பார்க்கப் போற..?"
பார்த்திபன் இதைக் கேட்கவும்.. குணவதி அவசரமாக.. வீட்டிற்குள் திரும்பி.. மருமகள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டாள்.. அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது..
"ஏண்டா பேரனே.. வீட்டுக்குள்ள வெடியைக் கொளுத்திப் போடப் பார்க்கிற.. உனக்கு அப்படியென்ன என்மேல அம்புட்டு வன்மம்..?"
"பின்னே.. என்ன பாட்டி..? ஸ்ரீவித்யா.. எனக்கு அம்மா ரேஞ்சில இருக்கிறவங்க.. என் கனவுக் கன்னியைப் பத்தி நான் சொன்னா.. நீ அந்தம்மாவைப் பத்திச் சொல்றயே.. இது மட்டும் நல்லாயிருக்கா.."
"அடப் போடா கூறு கெட்டவனே..."
"யாரு..? நானு.. கூறு கெட்டவன்..? சத்தமாய் சொல்லி வைக்காதே.. இந்த ஊரு இளசுகளுக்கு.. என் மேல கண்ணு.. அதுக காதில் விழுந்துச்சு.. உன்னை மொத்திருவாளுக.."
"அப்ப.. அவளுகள்ல ஒருத்தி கழுத்தில் தாலியைக் கட்டு.."
"நீ அதிலேயே இரு.. இவளுகள்ளாம் சைட் அடிக்கத் தான் லாயக்கு.. தாலி கட்ட இல்லை.. என் லெவலே வேற பாட்டி.."
"அதைத்தான் கண்ணோட நிப்பாட்டிட்டயே.. மேல சொல்லு.."
"முடி நீளமாக இருக்கணும்.."
"எவ்வளவு நீளம்டா இருக்கணும்.."
"தலை முடியை அவிழ்த்துவிட்டால்.. தரையில் விழுகணும்.."
"அட.. நீ சவுரிமுடியைச் சொல்லுறியா..?"
கண்கள் மேலே செறுக வர்ணித்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு கோபம் வந்துவிட்டது..
"என்ன பாட்டி விளையாடறியா..?"
"ஆமடா.. நான் பப்பா.. உங்கிட்ட பாண்டி விளையாடப் போறேன்.. போடா.. போக்கிரி.. நீதானேடா.. முடியை அவிழ்த்து விட்டா தரையில விழுகணும்ணு சொன்ன..? சவுரி முடியை அவிழ்த்து விட்டாத்தான்.. தரையில பொத்துன்னு விழுகும்.."
குணவதியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு.. பார்த்திபன் பற்களை நறநறவென்று கடித்தான்..
"நான் சொந்த முடியைச் சொல்றேன்.."
"இப்ப.. எந்தப் பொண்ணுடா நீளமா முடி வளக்குது..? எல்லாம் கீத்துமாத்தா வெட்டி விட்டுக் கிட்டுல்ல அலையுதுக..?"
"அது என்னமோ எனக்குத் தெரியாது.. எனக்குப் பொண்டாட்டியா வாரவளுக்கு நீளமா முடி இருக்கணும்.."
"அப்படியா சொல்ற.. நம்ம சுத்து வட்டாரத்தில்.. எல்லாமே எலிவால் சுந்தரிகள்தானேடா.. நீள முடிக்கு நாம எங்கே போறது..?"
குணவதி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -1
புலர்கின்ற பொழுதில் -1
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzM/GrIXq8bFdEoTG9u7SF_JV_VQnoydOrm-ACLcBGAsYHQ/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzM/GrIXq8bFdEoTG9u7SF_JV_VQnoydOrm-ACLcBGAsYHQ/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/pularkinrapoluthil-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy