பனித்திரை -9

9 " தாத்தா..." ரஞ்சன் அதிர்ச்சியுடன் பார்த்தான்.. இவர்களுக்கு விசயம் தெரிந்து விட்டதா... ? " என்னடா முழிக்கிற.. ? ...


9

"தாத்தா..." ரஞ்சன் அதிர்ச்சியுடன் பார்த்தான்..
இவர்களுக்கு விசயம் தெரிந்து விட்டதா...?
"என்னடா முழிக்கிற..? பட்டிக்காட்டில் இருக்கிற பயலுகளுக்கு எப்படி விசயம் தெரிஞ்சுச்சுன்னு யோசிக்கிறயா..? நீ எட்டுச் சீமை தள்ளியிருந்தாலும்.. அங்கேயும் உன்னைக் கவனிக்க என் ஆளிருக்கும்.. உன் அப்பனையும்.. தாத்தாவையும் கேணப்பயலுகன்னு நினைச்சுட்டியாடா...?"
"தாத்தா.. நான் அவளைக் காதலிக்கிறேன்..."
ரஞ்சன் நிமிர்வாய்ப் பதில் கூறவும் லிங்கய்யனுக்கும் கோபம் தலைக்கு ஏறியது...
"தூ.. அதுக்குப் பெயர் காதலாடா...?"
"அப்பா.. வேண்டாம்.. ஆத்திரத்தில் யோசிக்காமல் பேசிவிடாதீங்க..."
"நீதான் காதல் உன் கண்ணை மறைக்க.. யோசிக்காமல் சேற்றில் விழப் பார்க்கிறாய்.. சேற்றில் புரள வேண்டியது.. வேறு ஜென்மங்கள்டா.. உனக்கு எதற்கு அந்தத் தலையெழுத்து..."
"அப்பா.. அபாண்டமாய் அவளைப் பேசாதீங்க..."
"இப்ப என்னதான்டா.. நீ சொல்ல வர்றே..."
லிங்கய்யன் கோபத்தில் உடல் நடுங்க ஆரம்பிக்க, சோமய்யன் இடையிட்டு மகனை அடக்கினார்..
"தா.. லிங்கா... நீ பேசாமல் இரு.. அவனுக்கென்ன தெரியும்.. வயசுப் பையன்.. கொஞ்சம் அப்படி.. இப்படின்னு இருக்கிறான்.. அதுக்குப் போயி.. அவனைக் கலங்கடிக்கிறாயே..."
தகப்பனுக்குக் குறையாத ஆத்திரத்துடன்.. முறைத்துக் கொண்டு கண்கள் சிவக்க நின்றிருந்த பேரனின் பக்கம் முகம் திருப்பினார்..
"ரஞ்சா.. உன் அப்பனின் கோபத்திலும் நியாயம் இருக்கு..."
"இப்போது நீங்கள் செய்வது கொஞ்சம் கூட நியாயமில்லை..."
"நாங்கள் செய்வது உன் நல்லதிற்காகத்தான்..."
"என் நல்லது.. கெட்டதை நான் பார்த்துக் கொள்வேன்..."
"ஓ.. அந்த அளவுக்கு நீ பெரியவன் ஆகிவிட்டாயில்லையா..? மறந்து விட்டேன்.. அப்போச் சரிப்பா.. நீ போய்க் கல்யாணத்தை நிறுத்து.. லிங்கா..! நீ போய் உன் பொண்டாட்டியையும்.. என் பொண்டாட்டியையும் கூப்பிட்டுக் கொண்டு வா.. மறக்காமல் உன் மகளையும் கையோடு கூப்பிட்டுக் கொண்டு வந்து விடு.. இவனே இந்திக்காரி பின்னால் போகப் போகிறான்.. இவனை நம்பி.. அந்தப் பச்சிளம் குருத்தை நான் விட்டு விட்டுப் போக முடியாது..."
லிங்கய்யன் கதவுப் பக்கம் போகப் போக.. அவசரமாய் ரஞ்சன் தடுத்தான்..
"அப்பா..! பொறுங்க.. தாத்தா.. எதுக்கு எல்லோரையும் கூப்பிடுறீங்க.."
"வேறு எதுக்கு, இதைப் பகிர்ந்து குடிக்கத்தான்..."
கையில் வைத்திருந்த விசபாட்டிலை எடுத்துக் காட்டினார் சோமய்யன்.. ரஞ்சன் பதறிவிட்டான்.. சோமய்யன் வெறும் பேச்சுப் பேசுகிறவர் அல்ல..
"தாத்தா.. என்ன இது...?"
"ம்ம்.. விசம்.. நீ பார்த்தாயில்லையா..?"
"இதையா எல்லோருக்கும் கொடுக்கப் போகிறீர்கள்..?"
"எல்லோருக்கும்ன்னு.. உன்னையும் ஏன் கூட்டுச் சேர்த்துக்கிற..? நீ போய் அந்த மணிஷாவுடன் மகிழ்ச்சியாய்க் குடும்பம் நடத்து.. நாங்கள் போகிறோம்..."
"என்ன தாத்தா.. மிரட்டுகிறீர்களா...?"
"ஆமாம்.. இப்ப அதுக்கு என்னங்கிற...?"
"நான்.. இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.."
"என் ரத்தம்.. பெத்த ரத்தம்.. பயப்படாதுடா.. நீ போ.."
"தாத்தா.. நீங்கள் என்னைக் கார்னர் பண்ணுகிறீங்க.."
"உன்னை யார் இதில் அகப்படச் சொன்னது..? உதறிவிட்டுப் போ..."
"சொன்னால் கேளுங்க தாத்தா..."
"நீ சொல்லி நான் கேட்குமளவிற்கு உன்னைப் பெரிய மனிதனாகத்தான் நினைத்தேன்.. இப்படி நாங்கள் சொல்லி.. நீ கேட்கும் அளவிற்கு நீதான் கொண்டு வந்து விட்டாய்.."
"தாத்தா.. காதலிப்பது தவறா...?"
"தவறேயில்லை.. நீ காதலித்தது தவறு இல்லை.. அந்தப் பெண் வேற்று மாநிலமென்பதிலும் தவறு இல்லை.. வேறு பாஷை பேசுகிற பெண் என்பதிலும் தவறு இல்லை.. தவறு வேறு ஒரு விதத்தில் இருக்கிறது.. அது இப்போது உனக்குப் புரியாது ரஞ்சா.. அது ஒருநாள் உனக்குப் புரியும்.. அப்படிப் புரியும் போது நீ மீள முடியாத புதைகுழியில் மாட்டிக் கொள்ளாமலிருக்க உன்னைப் பாதுகாக்கும் ஏற்பாடுதான் இந்தக் கல்யாணம்..."
"நான் என்ன சின்னக் குழந்தையா...?"
"சின்னக் குழந்தையாய் நீ இருந்திருந்தால்தான் பிரச்சனையே இல்லையே.. ஆனால் நீதான் வளர்ந்தவன் ஆகி விட்டாயே.."
"இப்படிப் பேசினால் எப்படி தாத்தா..."
"ரஞ்சா.. எனக்கு அதிகம் பேசிப் பழக்கமில்லை.. வெட்டு ஒன்று.. துண்டு இரண்டுதான்.. ஒன்று நீ காலையில் மணமேடையில் ஏறி.. உன் அத்தை மகள் சசியின் கழுத்தில் தாலியைக் கட்ட வேண்டும்.. இல்லையென்றால்.. நாங்கள் குடும்பத்தோடு போய்ச் சேர வேண்டும்..."
"தாத்தா.. என்னைக் கட்டுப்படுத்துவது கஷ்டம்.."
"எனக்கும் அது தெரியும்.. கடலைக் கைக்குள் அடக்க முடியுமா..? அது போலதான்.. உன்னை அடக்க நினைப்பதும்.. நாங்க யாரும் உன்னைக் கண்காணிக்க மாட்டோம்.. கட்டுப்படுத்த மாட்டோம்.. உன் இஷ்டப்படி நீ எங்கே வேணும்னாலும் போகலாம்.. ஆனால் ஊரே கூடியிருக்கும் இந்தச் சபையில் காலையில் குறித்த முகூர்த்தத்தில் நீ சசிரேகாவின் கழுத்தில் தாலியைக் கட்டலேன்னு வை.. அதற்கு அப்புறம் நடப்பதற்கு.. நீதான் பொறுப்பு.. போ..."
சோமய்யன் கதவைத் திறந்து கொண்டு.. படபட வென்று படியில் இறங்கிப் போய்விட்டார்.. லிங்கய்யன் மகனின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார்.. ரஞ்சன்.. தகப்பனாரின் பார்வையைத் தவிர்த்தான்.. லிங்கய்யன் ஒரு பெருமூச்சை வெளியேற்றினார்...
"என் அப்பா என்னை வளர்த்தது போலத்தானே.. உன்னையும் நான் வளர்த்தேன்.. நீ மட்டும்.. ஏன்.. எனக்கு இப்படியொரு தலை குனிவை உண்டாக்கி விட்டாய்..."
"அப்பா..."
"நான் அப்படியென்ன செய்து விட்டேன்னு நீ கேட்கப் போகிறாய்.. ரஞ்சா.. காதலிப்பது தவறில்லை.. காதலிக்கும் நபர் சரியான ஆளாக இருக்க வேண்டாமா...?"
"அவள் நல்லவள் அப்பா..."
"அதை நீ சொன்னால் மட்டும் போதாதுப்பா.."
"எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லைப்பா.."
"எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.. ரஞ்சா..."
"நான் இந்தக் கல்யாணத்தைச் செய்து கொள்ள மாட்டேன்..."
"நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்து கொள்வோம்..."
லிங்கய்யன் ஆழ்ந்த பார்வையோடு ரஞ்சனின் அருகே வந்தார்.. அவனது முடி கோதினார்.. மீண்டும் பெருமூச்சு விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார்...
ரஞ்சன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.. அறைக் கதவு திறக்கும் ஒலி கேட்டது.. நிமிர்ந்து பார்த்தான்.. கோதை நாச்சியார் கையில் காபித் தம்ளரோடு நின்றிருந்தாள்..
"அம்மா..."
"நான் உன் அம்மாங்கிறது கூட உனக்கு நினைவிருக்காடா...?"
"ஏம்மா இப்படிப் பேசறீங்க...?"
"வேறு எப்படிப் பேசுவது..? காபி குடி..."
"எனக்கு வேண்டாம்.."
"அப்போச்சரி... நாங்கள் எல்லோரும் சேர்ந்தே இப்போதிருந்து உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுகிறோம்.. ஆக்கி வைத்த விருந்தை.. ஊர்க்காரங்களும்.. உறவுக்காரங்களும் சாப்பிடட்டும்.."
"காபியைக் குடுங்க.."
மகனின் சோர்ந்த தோற்றத்தைக் கண்டு பெற்ற வயிறு கலங்கியது.. கோதை நாச்சியாரின் மனம் துடித்தது.. பொங்கி வந்த விம்மல் வெடித்தது.. அடிவயிற்றிலிருந்து புறப்பட்ட கேவல் ஒலியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் வெடித்து அழுதாள்.. ரஞ்சன் அவசரமாய் எழுந்து அறைக்கதவை மூடிவிட்டுத் தாயை நெருங்கினான்.. அவள் தரையில் சரிந்து அமர்ந்து அழுதாள்...
"அம்மா.. ப்ளீஸ் அழுகாதீங்க..."
"இப்படிச் செய்துட்டியேடா.. என் பிள்ளை எனக்குத் தெரியாமல் எந்தக் காரியமும் செய்ய மாட்டான்னு நம்பிக்கிட்டு இருந்தேனே.. அந்த நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டு விட்டாயே.."
"நான் வேண்டுமென்றே செய்யவில்லைம்மா..."
"எவளோ ஒருத்தியைப் பிடித்திருச்சுன்னா நீ என்ன செய்திருக்கணும்..? உன் அப்பா... தாத்தாகிட்ட பயமாய் இருந்தாலும்.. என்கிட்ட வந்து சொல்லியிருக்கணுமா.. இல்லையா..? அதை விட்டுவிட்டு அவளை இழுத்துக் கிட்டு திருச்சியை ரவுண்டு கட்டிச் சுற்றியிருக்கே.. இதை உன் தாத்தா சொல்லி போட்டோக்களைக் காட்டிய போது என் உயிர் தவிச்ச தவிப்பு உனக்குத் தெரியுமாடா...?"
"போட்டோக்களா...?"
"ஆமாம்.. மத்தவங்களுக்குத்தான் நீ யார் வீட்டு ஆம்பளைன்னு தெரியாது.. உனக்குக் கூடவா தெரியாமல் போச்சு...? நீ விடும் மூச்சுக்காற்றைக் கூட இந்த வீட்டுப் பெரிய ஆம்பளைகள் எண்ணி விடுவாங்களேடா..."
"அவள் வேற்று பாஷை பேசினாலும் நல்லவள்ம்மா.."
"வேண்டாம் ரஞ்சா.. மத்தப் பெண்களைப் பத்தி நான் எப்பவுமே அவதூறாய்ப் பேசினதில்லை.. இப்போது என்னைப் பேச வைச்சிராதே.. நான் உன்னைப் பெத்தவடா.. உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்.. இந்தக் கல்யாணம் உன் நல்லதிற்காகத் தான்.. அதை விட்டுவிட்டு.. என்னையும்.. உன் தங்கையையும் கைவிட்டு விடாதேடா.. உன் தாத்தா குடுக்கும் விசத்தை வாங்கி எங்களைக் குடிக்க வச்சிராதேடா..."
ரஞ்சன் தன் தாயின் மடியில் முகம் புதைத்தான்.. கோதை நாச்சியாரின் மனம் பொங்கியது...
இந்த மகனின் துன்பம் கண்டும்.. வாளாவிருக்கும் நிலை தனக்கு வந்து விட்டதை எண்ணித் துக்கப்பட்டாள்..
அறைக் கதவை யாரோ திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள்.. இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்.. ராஜலட்சுமி நின்று கொண்டிருந்தாள்..
"பாட்டி..."
"கோதை.. இந்தப் பயல் என்கிட்ட ஒன்னும் பேச வேணாம்னு சொல்லு.. நீயேன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கிற..? எழுந்திரு.. கீழே எல்லாத் திக்கிலிருந்தும் உறவுக்கார ஜனங்கள் வந்து குமிஞ்சுக்கிட்டு இருக்காங்க.. ஊரு.. உலகத்துக்கே.. இந்தக் குடும்பத்தின் மதிப்பு தெரிஞ்சிருக்கு.. உன் மகனுக்குத் தெரியல..."
"பாட்டி..."
"இந்த வீடு எப்படியிருந்த வீடு.. ஒருத்தருக்கொருத்தர்.. ஆதரவா.. அனுசரணையா.. ஒத்துமையா இருந்த வீடு.. இத்தனை நாளும் இவன் எங்கே போகிறான்.. எங்கே வருகிறான்.. நாம ஒருவார்த்தையாவது கேட்டிருப்போமா.. இந்தப் பயல் நம்ம நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைச்சு விட்டான்.. இவன்கிட்ட நமக்கென்ன பேச்சு.. நீ எழுந்துவா.. நமக்கு ஆயிரம் சோலி இருக்கு..."
"பாட்டி..."
"போடா.. போ.. பாட்டியாம் பாட்டி.. உங்க தாத்தன் இது வரைக்கும் எனக்குச் சேலை வாங்கிக் குடுத்திருக்காரு.. நகை வாங்கிக் குடுத்திருக்காரு.. ஏன்.. யாருக்கும் தெரியாமல் அல்வாவும்.. மல்லிகைப்பூவும் வாங்கிக்கிட்டு வந்து குடுத்திருக்காரு.. ஆனால்.. இப்போது.. விசத்தை வாங்கிக்கிட்டு வந்து குடுத்திருக்காருடா.. இந்தக் கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்ல...?"
"பாட்டி..."
"விடிஞ்சு நீ அந்தப் பொண்ணு கழுத்தில் தாலி கட்டிய பின்னால என்னைப் பாட்டின்னு கூப்பிடு.. நானும் பதில் சொல்றேன்.. அதுவரை.. என்கிட்ட பேசாதே.. பிழைத்துக் கிடக்கும் வரத்தை.. இந்தக் குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு குடுக்க மனமிருந்தால் கொடு.. இல்லைன்னா விட்டுத் தள்ளு..."
ராஜலட்சுமி கோதை நாச்சியாரை இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.. வெகு நேரம்.. அறைக்குள் அடைபட்டுக் கிடந்த ரஞ்சன்.. அறையை விட்டு வெளியே வந்தான்.. இருள் சூழ ஆரம்பித்திருந்தது.. வீடு பூராவும் ஒளி வெள்ளத்தில் நிரம்பியிருந்தது..
தோட்டத்தின் முன்புறம்.. வந்து நின்றான்.. வரிசையாய்க் கார்கள் வந்து நின்றன.. அதிலிருந்து சொந்தக்காரர்கள் இறங்குவதையும்.. மகிழ்வாய்ப் பேசியபடி வீட்டுக்குள் போவதையும் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றான்..
'நாங்க உன்னைக் கண்காணிக்க மாட்டோம்.. கட்டுப்படுத்த மாட்டோம்.. உன் இஷ்டப்படி நீ எங்கே வேணும்னாலும் போகலாம்..'
சோமய்யனின் குரல் காதுகளில் ஒலித்தது.. எங்கே போவது..? இந்த வீட்டை விட்டு.. எப்படிப்போவது...? இப்படிப்பட்ட சூழ்நிலையில் உறவுக்காரர்கள் மத்தியில் பெற்றவர்களை எப்படித் தலைகுனிய வைப்பது...?
ரஞ்சன் பெருமூச்சோடு வீட்டுக்குள் திரும்பி நடந்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -9
பனித்திரை -9
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy