பனித்திரை -8

8 சோமய்யன் நிதானமாய் மனைவியைப் பார்த்தார்.. பின் மெதுவாக.. ஓர் அணு குண்டைத் தூக்கிப் போட்டார்.. அந்த அணுகுண்டு வெடித்ததில் அங்கிருந்த...


8

சோமய்யன் நிதானமாய் மனைவியைப் பார்த்தார்.. பின் மெதுவாக.. ஓர் அணு குண்டைத் தூக்கிப் போட்டார்.. அந்த அணுகுண்டு வெடித்ததில் அங்கிருந்த அத்தனை பேரும் ஆடிப்போனார்கள்..
"ராஜி.. உன் மருமகள் கேட்டுச்சு பாரு, ஒரு கேள்வி.."
"அவள் எனக்கு மட்டும் மருமகளா எப்போதிருந்து ஆனா..? அதோட அவ ஒரு கேள்வியை மட்டுமா கேட்டா.. ஒன்பத்திரண்டு கேள்வி கேட்டா.. பதில் சொல்ல முடியலை.. வக்கணையாய் வரிஞ்சு கட்டிக்கிட்டு என்கிட்ட வியாக்கியானம் பேச வந்துட்டிங்க.."
"சரி... நம்ம மருமகள்.. ஒன்பத்திரண்டு கேள்வி கேட்டாலும்... அதில ஒரு விசயத்தை மட்டும்தானே கேட்டாள்.."
"ஆமாம்.. அதுக்கு இப்ப என்னங்கிறீங்க.."
"அட யாருடி.. இவ.. சுத்த விவரம் கெட்டவளா இருக்கா..."
"நான் விவரமா இருந்தால்.. ஏன் உங்களைக் கட்டிக்கப் போறேன்..?"
"அதைப் பத்தி இப்ப ஏன்டி கவலைப்படறே.. இப்பத்தானே பேரன் பேத்தி கல்யாண வயசுக்கு வந்திருக்காங்க.. கெள்ளுப் பேரன்.. பேத்தி எடுத்த பின்னால்.. கவலைப்பட்டிருக்க வேண்டியதுதானே.. என்னவோ.. நேற்றைக்குத்தான் சமைந்து.. குச்சு வீட்டில் இருக்கற.. குமரி மாதிரிதான்.. வக்கணைப் பேச்சை.. வாய் கிழியப் பேசுற..."
அந்த நிலமையிலும்.. மாமனார்... மாமியாரின் பேச்சைக் கேட்டுக் கோதை நாச்சியாருக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.. அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்..
"ஆமாம்.. நான் மட்டும் குமரியில்லாம.. கிழவியாகி விட்டேன்.. இவருக்கு இப்பத்தான் வயசு திரும்பியிருக்கு.. மருமக கேட்டதுக்குப் பதில் சொல்ல முடியலை.. என்னிடம் வாய்ச் சவடாலுக்கு வந்து விட்டாரு.."
"ம்ஹும்.. என்னதான் ஊராளும் ராஜாவாக இருந்தாலும்.. கட்டிக் கொண்டவளுக்கு.. அவன் கடுகு போலதான்.." என்று நினைத்துக் கொண்ட லிங்கய்யனுக்கு.. தகப்பனைக் கண்டு பாவமாக இருந்தது..
'இப்படிப் போய்ப் பெண்களிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறாரே!'
மனைவியின் பேச்சை ரசித்துச் சிரித்தார் சோமய்யன்..
"இதைப் பாருடி.. உன் மருமகள் கேட்டது இருக்கட்டும்.. இப்ப.. நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்.. அதுக்கு முதலில் நீ பதில் சொல்லு..."
"என்னத்தைக் கேட்கப் போறீங்க..?"
"நான் என் மனதில் வேறு ஒருத்தியை நினைத்துக் கொண்டு உன் கூடக் குடும்பம் நடத்தினால் நீ தாங்கிக்குவியா...?"
"இது என்னங்க.. எடுபட்ட தனமா கேட்கறீங்க.."
"இல்லை.. என் மகன்தான்.. இன்னொருத்தியை நினைச்சுட்டு நம்ம மருமககூட வாழ்க்கை நடத்தினால்.. அது பொறுத்துக் கிட்டுப் போகுமா...?"
"வேணும்னே வம்புக்கு இழுக்கறீங்களா...?"
"உள்ளதைச் சொன்னேன்டி.. நானும் உன்னைத்தவிர வேறு பொம்பளைய நினைச்சதில்லை.. என்மகனும்.. ராமன்தான்..."
"இதை ஏன்.. எங்ககிட்டச் சொல்கிறீங்க...."
"நம்ம மருமகள் கேட்டுச்சே.. உங்களைப் போலத் தானே.. என் மகனுக்கும்.. அவனை விரும்புகிற பெண்தான்.. பெண்டாட்டியா வரணும்னு இருக்கும்ன்னு.. அவன் மனசில் வேறு யாரையும் நினைக்கலைன்னு உங்களுக்குத் தெரியுமா...?"
கோதை நாச்சியார் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள்..
"மாமா.. இது அடுக்காது.. என் மகன் அப்படிப்பட்டவனில்லை.."
"இதைப் பார்த்துட்டுச் சொல்லும்மா..."
சோமய்யன் பீரோவைத் திறந்து.. சில போட்டோக்களை எடுத்து அவளிடம் கொடுத்தார்.. லிங்கய்யனும்.. ராஜலட்சுமியும் கூடவே எட்டிப் பார்த்தார்கள்...
திருச்சியின் பல்வேறு இடங்களில்.. பல்வேறு உடைகளில் மணிஷா.. ரஞ்சனின் தோள் தடவிக் கட்டிக் கொண்டு இருந்தாள்..
"ஐயையோ.. என்னடி கோதை.. எவளோ ஒருத்தி.. அரையும் குறையுமாய் உடுத்திக்கிட்டு.. நாடகத்தில் வேசம்கட்டி ஆடுகிறவளைப் போல உதட்டில் சாயத்தை அப்பிக்கிட்டு... என் பேரனைக் கட்டிக்கிட்டு நிற்கிறா.. இது எத்தனை நாளாய் நடக்குது...?"
"ரொம்ப நாளாவே நடக்குது..." என்றார் சோமய்யன்..
"இதை ஏன் எங்களிடம் முன்னாடியே சொல்லவில்லை...?"
"சொல்லியிருந்தால் மட்டும்.. உங்களால் என்ன செய்திருக்க முடியும்...?"
"ஆனாலும் அப்பா..."
"லிங்கா.. வேண்டுமென்றே மறைக்கவில்லையடா.. எனக்குத் தகவல் தெரிந்ததும்.. நம்ம மாப்பிள்ளை போலவே.. பையனையும்.. அந்தப் பெண்ணையும் கண்காணிக்கச் சொன்னேன்.. இந்தப் போட்டோக்களோடு விவரம் வந்தது.."
"இந்தப் பொண்ணு யாருப்பா..?"
"மணிஷான்னு பேரு.. வட இந்தியக்காரி.. வேறு பாஷை பேசுற பொண்ணு.. இருந்தாலும் குத்தமில்ல.. நம்ம பிள்ளை விரும்பிட்டானேன்னுதான் விசாரிக்கச் சொன்னேன்.. விசாரிச்சா.. பூதம் கிளம்புதுடா.."
"என்னப்பா சொல்றீங்க..?"
"இந்தப் பொண்ணோட பூர்விகம் சரியில்லைடா.. அது கூடப் பரவாயில்லை.. சேற்றில் பிறந்த செந்தாமரைன்னு ஏத்துக்கலாம்ன்னு பார்த்தால்.. இந்தப் பெண்ணே சரியில்லைடா.. பலபேர் கைமாறி.. நம்ம பிள்ளையைப் பார்த்ததும்.. வசதியானவன்னு தெரிஞ்சுக்கிட்டு இறுக்கிப் பிடிச்சிருக்கு.. காசு பணத்திற்குக் கடைசிவரை குறைவில்லை.. செட்டிலாகி விடலாம்கிற கணக்குத்தான்.."
கோதை நாச்சியார்.. இடிந்து போய்.. சுவரோடு சரிந்து தரையில் அமர்ந்து விட்டாள்.. சோமய்யன் மகனைப் பார்த்தார்.. அதற்குள் ராஜலட்சுமி.. மருமகளின் அருகில் அமர்ந்து அவளைச் சமாதானப்படுத்த முனைந்தாள்..
"கோதை.. இங்கே பாரு.. எல்லாம் சரியாகிவிடும்.."
"எப்படியத்தை.. இப்படிப் போய் மாட்டியிருக்கிறானே..."
"நம்ம வீட்டு ஆம்பளைங்க எதுக்கு இருக்காங்க.. ஊரு நாட்டாமையை ஏறக்கட்டிவிட்டு... வீட்டுப் பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்காம.. வேறு வேலை பார்க்க நான் விட்டுவிடுவேனா.. நீ எழுந்திரு தாயி.."
"எனக்கு பயமாயிருக்கு அத்தை..."
சோமய்யன் கட்டிலில் அமர்ந்து.. தன் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டார்.
"பயப்படாதேம்மா.. நான் இதற்காகத்தான்.. ஜானகியிடம் முறித்துப் பேசவில்லை.."
"ஆனால்.. அந்தப் பெண் சசியும்.. இப்படி இருக்கிறாளே மாமா.."
"அவளால்தானே.. இவனது ஒதுக்கத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்...?"
"அப்படியே இரண்டு பேரும் ஒதுங்கி வாழ்ந்து விட்டால் என்ன மாமா செய்வது...?"
"தாயி.. தண்ணிக்குள் நாம தள்ளி விடுவோம்.. நீந்திக் கரையேறுவது அவங்க பாடு.."
"இப்படிச் சொன்னால் எப்படி மாமா...?"
"கோதை.. இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது தெரியும்.. நாமளே கையைப் பிடித்துக் கடைசி வரைக்கும் அழைத்துக்கிட்டுப் போக முடியுமா..?"
"இதுக ரெண்டுக்கும்தான்.. நல்லது.. கெட்டது தெரியாமல் போச்சே..."
"அப்படியும் ஒரேயடியாய்ச் சொல்லி விட முடியாதும்மா.. இந்தச் சசி இருக்கிறாளே.. அவள் அந்தப் பயலிடம் இடைவெளிவிட்டுத்தான் பழகியிருக்கிறாள்ன்னு அந்த ஏஜன்ஸி ரிப்போர்ட் சொல்லுது. நம்ம பயலும் தள்ளித் தள்ளித்தான் போயிருக்கிறான்.. இந்தக் கழுதைதான் புளியங்கொம்பை விட்டு விடக் கூடாதுன்னு வளைக்கப் பார்த்திருக்கிறாள்.."
"எனக்கு மனமே சரியில்லை மாமா.."
"எல்லாம் சரியாகிப் போகும்.. கவலைப்படாமல் போய் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு வேலையைப் பாரு.. எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும்.."
அவர் சொன்னது போலவே எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தது.. ஜானகி.. ரங்கநாதனுடன்.. எல்லோரும் கலந்து பேசித் திருமணத்திற்கு நாளைக் குறித்து விட்டார்கள்.. பெங்களூர் செல்லும் கனவில் சென்னையில் சசிரேகா.. தன் படிப்பை முடிக்க.. திருச்சியில் படிப்பை முடித்து விட்டு ரஞ்சன்... தோப்பூர் வந்தான்.. அவன் வரும்போது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.. இது தான் வீடா.. என்ற சந்தேகம் அவனுக்கு வந்துவிட்டது..
சுற்றுப்புற இடங்களைச் சுற்றி வளைத்து.. தெரு முழுக்க அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள்.. நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் கூடை நாற்காலிகள்.. இரு தெருமுனை பந்தல்களில் இருந்தும் ஆரம்பித்து ஊர்க்காரர்களும்.. உறவுக்காரர்களும் அமர்ந்திருந்தார்கள்..
'வீடு மாறி வந்து விட்டோமோ...' என்று ஓர் கணம் யோசித்தவன் மறுகணம்.. தன்னைத் தானே மனதிற்குள் குட்டிக் கொண்டான்...
அந்த ஊரிலேயே மிகப் பெரிய வீடு.. அவர்களுடைய வீடுதான்.. அந்த வீட்டின் முகப்புத் தோற்றம் ஓர் அரண்மனையைப் போலிருக்கும்..
எனவே வீடு மாறி வந்திருக்க வாய்ப்பில்லை.. வீட்டின் தோற்றம் இப்படி மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.. குழப்பத்துடன் வீட்டுப்படியேறினான்.. கழுத்து.. கைகளில் வைரங்கள் ஒளிர்விட.. உயர்ரகப் பட்டுச் சேலையை இழுத்துச் செருகிக்கொண்டு கோதை நாச்சியார் எதிரே வந்தாள்..
"என்னம்மா இது.. வீட்டில் விசேசமா...?"
"ஆமாண்டா.. நீ உள்ளே வா..."
"என்ன விசேசம்...?"
"எல்லாத்தையும் வாசலில் நின்னுக்கிட்டுதான் சொல்லணுமா...?"
"ஏம்மா.. தெரு முனையிலேயே பந்தலும்.. நாற்காலியும் ஆரம்பித்து விட்டது.. நான் வாசலில் வந்துதானே கேட்கிறேன்.. விளக்கம் சொல்லுங்க..."
"அதை உன் தாத்தாவும்.. அப்பாவும் சொல்வாங்க.. நீ முதலில் மாடிக்குப் போ..."
'என்னடா இது, பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது..' என்ற ஆச்சரியத்துடன் அவன் மாடியேறினான்.
'அம்மாவா... என் சந்தேகத்திற்குப் பதில் சொல்லாமல் அப்பா.. தாத்தாகிட்ட கேட்கச் சொல்லுகிறாங்க...?'
கோதை நாச்சியார்.. மகன் எதைக் கேட்டாலும் உடனே சொல்லி விடுவாள்.. எந்தத் தாய்க்கும் முதல் பிள்ளையின் மேல் பற்றுதலும்.. பாசமும்.. அதிகமாக இருக்கும்.. அது கோதை நாச்சியாரிடமும் இருந்தது.. வீட்டில் சோமய்யனுக்கும்.. லிங்கய்யனுக்கும் பேத்தி செல்லப் பெண் என்றால்.. ராஜலட்சுமிக்கும்.. கோதை நாச்சியாருக்கும்.. ரஞ்சன்தான் என்றுமே செல்லம்..
மாடியறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் ரஞ்சன்.. உள்ளே அமர்ந்து ஏதோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்த சோமய்யனும்.. லிங்கய்யனும் தலை நிமிர்ந்தனர்..
"தாத்தா.. வீட்டில் என்ன விசேசம்.. தெருப்பூராவும் பந்தல் போட்டு ஒரே அமர்க்களமாயிருக்கு..."
"லிங்கா.. கதவைப் பூட்டு..."
தன் கேள்விக்குப் பதிலளிக்காமல் தகப்பனாருக்கு ஆணையிடும் தாத்தாவை ஆச்சரியமாகப் பார்த்தான் ரஞ்சன்..
"தாத்தா.. வாட் இஸ் திஸ்...?"
"இப்படி உட்காரு..."
"உட்கார்ந்து விட்டேன்.. சொல்லுங்க..."
"விடிந்தால் உனக்குக் கல்யாணம்..."
என்னவோ.. விடிந்தால் உனக்குச் சட்டை வாங்கப் போகிறோம் என்ற தொனியில் சோமய்யன் பேசவும் ரஞ்சனுக்குள் கோபம் சுர்ரென்று வந்து விட்டது...
"இது என்ன விளையாட்டு தாத்தா...?"
"விளையாட்டில்லைடா பேராண்டி.. நிஜம்.. சுத்துப்பட்டி உறவுக்கார ஜனங்களுக்கெல்லாம் பத்திரிகை கொடுத்தாகி விட்டது.. சென்னை.. மும்பை.. டில்லியிலிருந்து மற்ற உறவுக்காரங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னாலேயே பத்திரிகை போய் விட்டது.. அமெரிக்கா.. லண்டனில் இருக்கிறவங்களுக்கும் பத்திரிகை பறந்து விட்டது..."
"அமெரிக்காவில் இருக்கிறவனுக்கு என் கல்யாணத்தைப் பத்தித் தெரியுது.. இதோ இருக்கிற திருச்சியில் இருக்கிற எனக்கு என் கல்யாணத்தைப் பத்திச் சொல்லாமல் மறைத்து விட்டிங்க..."
"ஏன்.. நீ எங்களிடம் மறைக்கவில்லையா...?"
சோமய்யன் நிதானமாகக் கேட்டார்.. லிங்கய்யன் விழி சிவக்கத் தன் மகனை முறைத்துக் கொண்டிருந்தார்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -8
பனித்திரை -8
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy