பனித்திரை -7

7 ' இந்த மனிதர் மட்டும் சென்னையில் இருந்திருந்தால் இந்நேரம் தலைநகரையே வளைத்துப் போட்டிருப்பார்.. இந்தக் கிராமத்தில் இருந்து கொண்ட...


7

'இந்த மனிதர் மட்டும் சென்னையில் இருந்திருந்தால் இந்நேரம் தலைநகரையே வளைத்துப் போட்டிருப்பார்.. இந்தக் கிராமத்தில் இருந்து கொண்டு குடத்திற்குள் எரியும் விளக்கைப் போல இவருடைய திறமையை வேஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்...' என்று எப்போதும் போல.. இப்போதும் ரங்கநாதன் மனதில் நினைத்தார்..
"இல்லை மாமா.. தனிப்பட்டு.. யாருகிட்டயும் விசாரிக்கலை..."
"அப்புறம்.. அந்தப் பையன் சரியில்லைன்னு எப்படிச் சொல்கிறீங்க..?"
"ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலமா விசாரிச்சேன்..."
"ஓ..."
"இதோ பாருங்க.. அந்த ரிப்போர்ட்டை..."
ரங்கநாதன் கொடுத்த ரிப்போர்ட்டைப் புரட்டிப் பார்த்த சோமய்யனின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன..
"ம்ம்.. அப்போ.. இதைக் காட்டி சசிகிட்ட உட்கார்ந்து பேசலாமே.." மீண்டும் அவரின் புத்தி கூர்மையை வியந்தபடி..
"அது சரி வராது மாமா..." என்றார் ரங்கநாதன்..
"ஏன் மாப்பிள்ளை..."
"நாம் பொய் சொல்கிறோம்.. வேறு மதம் என்பதால் அவளுடைய காதலைப் பிரிக்கப் பார்க்கிறோம்ன்னு அவள் நினைப்பாள்.."
"அதுவும் வாஸ்தவம்தான்..."
"முதலில் நானும் ஜானகியும் அப்படித்தான் நினைத்தோம்..."
"அது சரி.. அப்புறம் உட்கார்ந்து யோசிச்சிருப்பீங்க.."
"ஆமாம்.. எங்களுக்கு இருப்பதோ ஒற்றைப் பெண்.. அவள் மனது பிரகாரம் மாப்பிள்ளையை செலக்ட் பண்ணிக்கிடட்டுமேன்னுதான் முடிவு செய்தோம்.. பையனும் பார்வைக்கு நன்றாக இருந்தான்.. மெக்கானிக்கல் என்ஜினியர்.. என் தொழிலைக் கவனித்துக் கொள்ளப் பொருத்தமான படிப்பு.. மதம் வேறாக இருப்பதை நாங்கள் பெரிதாக நினைக்கக் கூடாதுன்னு உங்களை மாதிரியே.. எம்மதமும் சம்மதம் என்ற முடிவுக்கு வநதேன்.."
"ரொம்ப நல்ல முடிவைத்தான் எடுத்தீங்க..."
"அதன் பின்னால்தான் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.. பிரைவேட் டிடெக்டிவ் ஏஜன்ஸியிடம் பொறுப்பை ஒப்படைத்தேன்.. அவர்கள்.. ஏற்கெனவே நிறையத் தொழில் விசயங்களில்.. எனக்கு நான் கேட்ட ரிப்போர்ட்டை விசாரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.. மிகவும் நம்பிக்கையான.. நம்பர் ஒன் ஏஜன்ஸி அது..."
"அவர்களின் ரிப்போர்ட் இதுதான்னா.. விசயம் சிக்கல்தான்..."
"இப்போ.. நாங்க என்ன செய்வது என்று தெரியாமல் உங்களை நம்பிக் கிளம்பி வந்து விட்டோம்.."
சோமய்யன் யோசனையுடன் தம்பி மருமகனின் முகத்தைப் பார்த்தார்.. அவரது கூரிய அறிவு மருமகனின் நோக்கத்தைக் கண்டு கொண்டு விட்டது..
"இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்னு நீங்க நினைக்கறீங்க மாப்பிள்ளை...?"
கேள்வியை நேரடியாய் அவர் கேட்டார்.. ரங்கநாதன் தயங்கிப் பேசினார்.. அவருக்கு அந்தக் குடும்பத்தின் மதிப்புத் தெரியும்.. அவரிடமிருக்கும் கோடிக் கணக்கான பணத்தை அவர்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள்.. இது வேறு உலகம்.. இவர்கள் வேறு வகையான மனிதர்கள்..
"மாமா.. சசி உங்களின் பேத்தி..."
"ஆமாம், மாப்பிள்ளை..."
"அவளுடைய குணத்தில் ஓர் குறைவுமில்லை..."
"அதுக்கென்ன.. அது பத்தரை மாத்து தங்கமாச்சே.."
"காதல்ன்னு மனதில் நினைத்ததுதான்.. நடத்தையில் பழுதில்லை.. அதையும் இந்த ஏஜன்ஸியின் ரிப்போர்ட்டே உங்களுக்குச் சொல்லும்..."
"காகிதத்தில் இருப்பதை வைத்து வீட்டுப் பெண்களின் குணத்தைத் தீர்மானிக்கும் பழக்கம் இந்தக் குடும்பத்தில் இல்லை மாப்பிள்ளை.. நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்க..."
"எங்களுக்கு ஒன்று என்றால்.. நாங்கள் உங்களிடம் தான் வர வேண்டும்..."
"ஆமா.. அதிலென்ன சந்தேகம்.. என் தம்பிமகள்.. என் மகள் மாப்பிள்ளை.. அவளை ஆதரிக்காமல் யாரை நான் ஆதரிக்கப் போகிறேன்..?"
"அந்த நம்பிக்கையில்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.."
"எதற்குச் சுற்றி வளைக்கிறீங்க மாப்பிள்ளை.. தைரியமா நீங்க கேட்க வந்ததைக் கேளுங்க..."
"சசியை... உங்கள் பேரனுக்குக் கல்யாணம் செய்து கொள்வீங்களா மாமா.."
ரங்கநாதன் தான் கேட்க வந்ததைக் கேட்டு விட்டார்.. கோதை நாச்சியாரின் முகம் மாறிவிட்டது.. அவள் இதைச் சுத்தமாக விரும்பவில்லை.. ராஜலட்சுமியும் மௌனித்து விட்டாள்.. லிங்கய்யன் தகப்பன் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்.. எனவே இரும்பு போல முகத்தை உணர்ச்சிகளைக் காட்டாமல் வைத்துக் கொண்டு சோமய்யனின் முகத்தைப் பார்த்தார்..
சோமய்யன் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மகனைப் பார்த்தார்..
"மாப்பிள்ளை!... நீங்க கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டிங்க.. அதனால் ஒன்றும் தப்பில்லை.. உரிமைப் பட்டவங்க கிட்ட.. உடந்தையும் பட்டவங்க கேட்கிறீங்க.. என் கிட்டத்தான் நீங்க கேட்க முடியும்.. நான் உங்களைத் தாங்கி நிற்கக் கடமைப்பட்டவன்.. இப்போதைக்கு இதைப்பற்றிப் பேச வேண்டாம்.. நீங்க குளித்து முடித்து விட்டு வாங்க.. சாப்பிடலாம்.. மற்றதை அப்புறம் பேசிக் கொள்ளலாம்.."
ரங்கநாதன் ஜானகியின் முகத்தைப் பார்த்தார்.. அவள் கண் கலங்கினாள்..
"பெரியப்பா..."
"பெரியப்பன் இருக்கேன் தாயி.. உன்னைக் கண் கலங்க விட மாட்டேன்.. கவலையில்லாமல் போய்க் குளிச்சுட்டு வா.."
ஜானகி அரை மனதாய் எழுந்து மாடியேறினாள்.. ரங்கநாதனின் மனதில் புயலடித்துக் கொண்டிருந்தது.. இப்படியொரு நிலையில் சிக்க வைத்து விட்ட மகளை மனதில் திட்டித் தீர்த்தார்..
கோதை நாச்சியார்.. குமையும் மனதோடு சமையலறைப் பக்கம் போகத் திரும்பினாள்.. ராஜலட்சுமி டிவியைச் சட்டையே பண்ணாமல்.. வாய்க்குள் முணுமுணுத்தாள்..
"என்னடி முணுமுணுக்கிற..?"
"சொல்லிட்டா மட்டும்... தீர்த்துருவீங்களா..?"
"ஏன், தீர்க்க மாட்டேனா..?"
"நானென்ன உங்க தம்பி மகளா.. என் மனக் குறையைத் தீர்க்க..?"
"ஓ... நீ அப்படி வருகிறாயா.. வா.. வா.."
"நான் எங்கேயும் வரவில்லை.."
"அப்படிச் சொன்னால் எப்படி.. நீ வந்துதானே ஆக வேண்டும்..? எழுந்திரு.. லிங்கய்யா.. கோதையைக் கூப்பிடுடா.."
"எங்கேப்பா..."
"எல்லோரும் என் ரூமுக்கு வாங்க.."
அறைக்கதவை அடைத்து விட்டுக் குறுக்கும்.. நெடுக்கும் நடந்த சோமய்யன்.. நின்று.. தன் குடும்பத்தினரின் முகத்தை ஊன்றிக் கவனித்தார்..
கட்டிலில் தோரணையாக அமர்ந்திருந்த ராஜலட்சுமியின் முகத்தில் எரிச்சல் மண்டியிருந்தது.. மாமனாரின் முன்னால் உட்காராமல் மரியாதையாய்.. மாமியாரின் அருகில் கட்டிலைப் பிடித்தபடி நின்றிருந்த கோதையின் முகத்தில் அதிருப்தி வெளிப்படையாய்த் தெரிந்தது.. தகப்பனார் என்னவோ சொல்லப் போகிறார்.. என்று எதிர்பார்த்துக் காத்திருந்த.. லிங்கய்யனின் முகத்தில்.. ஓர் சிறு துடிப்பு மட்டுமே தெரிந்தது..
"லிங்கய்யா.. என் மருமகளுக்கு என் மேல் கோபம் போல் தெரியுதேடா..."
"அப்படியெல்லாம் இல்லைப்பா.. அவள் என்னவோ.. மனதில் போட்டு உழட்டிக் கொண்டு இருப்பாள்.. நீங்கள் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.."
தகப்பனாரின் வார்த்தைக்கு மறுமொழி கூறிய மகனை.. கோபத்துடன் பார்த்தாள் ராஜலட்சுமி..
"ஏன்டா.. வீட்டுப் பொம்பளைக விசனப்பட்டு நின்னா.. கண்டு கொள்ளாமப் போகச் சொல்லி.. உன் அப்பாகிட்ட சொல்கிறாயே.. நீதான் இந்த ஊருக்கு நியாயம் பிளக்கிற நியாயவாதியா..? பெரிசாய் ஊர் பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்கிற.. அங்கே ஒவ்வொருத்தரு கிட்டயும்.. அவங்க பக்க நியாயம் என்னன்னு கேட்டு.. அவங்களையும் மனசில இருக்கிறதைச் சொல்ல விட்டு அதுக்கப்புறம்தானே நியாயம் சொல்றே.. வீட்லே மட்டும் உன் பெண்டாட்டி வாயைத் திறக்கக் கூடாது.. நீங்கள்.. அப்பனும் மகனும் சேர்ந்து.. அட்டூழியமாய் எதையாவது முடிவு பண்ணுவீங்க.. நாங்க வாயை மூடிக்கிட்டு கேட்டுக்கணும்.. அப்படித்தானே.."
ராஜலட்சுமி பேசுவதைத் தடுக்காமல்.. கோதை நாச்சியார் மௌனமாய் நிற்பதைத் கவனத்தில் வைத்துக் கொண்டார் சோமய்யன்.. மருமகளின் மனக் கொதிப்பு அவருக்கு நன்றாகவே புரிந்தது.
"ராஜி... இப்போ.. என்ன நடந்து போச்சுன்னு இப்படி சத்தம் போடுற..?"
"இன்னும் என்ன நடக்கணும்..? உங்க தம்பி மகள் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கண்டதும் வாக்குக் கொடுத்திட்டிங்களே.. பெத்தவளை ஒரு வார்த்தை கேட்டிங்களா..?"
"கேட்கத்தானே இங்கே வர வைத்திருக்கிறேன்.. ஏம்மா கோதை.. நீயே சொல்லு.. ஜானகியின் மகளை உன் மகனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ள உனக்குச் சம்மதமா..?"
"அப்பா.. அவளுக்கென்ன தெரியும்..? நீங்கள் முடிவு பண்ணினால் சரிதான்.. அதை மறுத்து இந்த வீட்டில் யாரும் பேச மாட்டார்கள்.."
"லிங்கா.. நீ பேசாதே.. நான் மருமகளிடம் கேட்கிறேன்.. அது வாயைத் திறந்து சம்மதம்ன்னு சொன்னால்தான்.. நான் ஜானகிக்குச் சம்மதம் கொடுப்பேன்.."
கோதை நாச்சியார்.. தரை மேல் பார்வையைப் பதித்தபடி தீர்மானமான குரலில் கூறினாள்..
"இல்லை.. மாமா.. எனக்குச் சம்மதமில்லை.."
"கோதை.. அப்பாவையா எதிர்த்துப் பேசுற.."
"லிங்கயா.. குரலை உயர்த்தாதே.. பேசாமல் இரு.. ஏம்மா கோதை.. எதனால் உனக்குச் சம்மதமில்லை...?"
"மாமா.. சசியின் குணத்தில் நான் பழுது சொல்லவில்லை.. ஜானகிக்கு நாம் உதவி செய்யத்தான் வேண்டும்.. அந்தக் கடமை நமக்கிருக்கு.. ஆனால்.. அதற்காக.. என் மகனின் வாழ்வை நான் பணையம் வைக்க மாட்டேன்.. இந்தக் கல்யாணப் பேச்சில் எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை.."
"கோதை.. வாயை மூடு..."
"லிங்கா.. நீ குறுக்கே பேசாதே.. அம்மா கோதை... உன் மகன் எனக்கு யாரோ இல்லை.. என் பேரன்.. என் ரத்தம்.. அவன் வாழ்வை நான் பணையம் வைப்பேனா..? எதனால் இப்படி ஒரு வார்த்தையை நீ சொல்கிறாய்..?"
"மாமா.. சசி வேறு ஒரு பையனை மனதில் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.. இஷ்டமில்லாமல் என் மகனை அவள் கல்யாணம் பண்ணிக் கொண்டால்... என் மகன் வாழ்க்கையில் சுகப்படுவானா..? அத்தை உங்களைப் பிடிக்காமல் உங்களுடன் வாழ்க்கை நடத்தினால் நீங்கள் அதைச் சகித்துக் கொள்வீங்களா..? இல்லை.. உங்கள் மகன் கூட.. நான் பிடித்தமில்லாமல் குடித்தனம் நடத்தினால்.. அவர் அதைப் பொறுத்துக் கொள்வாரா.. என் மகனும் உங்களைப் போல் ஒரு ஆம்பளைதானே.. உங்களுக்கு ஒரு நியாயம்.. என் மகனுக்கு ஒரு நியாயமா..?"
மனைவியைப் பேசவிடாமல் அதட்டிக் கொண்டிருந்த லிங்கய்யன் இப்போது பேச்சிழந்தார்.. மனைவியின் கேள்வியில் இருந்த உண்மை அவரைச் சுட்டது.. எத்தனையோ அலுவல்களின் சுமையிருந்தாலும்.. மனைவியின் மையல் பார்வைக்காக வீட்டை நோக்கி ஓடி வந்த காலங்கள் நினைவில் வந்தன..
'என் ஒரு பார்வையில் சொக்கிப் போவாளே.. அந்தப் பெருமையை.. என் மகன் அனுபவிக்காமல் போவதா...?'
சோமய்யன்.. மகனின் மனமாற்றத்தை.. அவரது முகமாற்றத்தின் மூலம் உணர்ந்து கொண்டார்..
"ஆக.. கோதை இந்தக் கல்யாணத்தை எதிர்ப்பதற்குக் காரணம்.. சசியின் மனதில் வேறொருவனின் மீது விருப்பம் இருப்பதுதான்.. இல்லையா.."
அவர் ஏற்ற இறக்கத்துடன் பேசவும் ராஜலட்சுமிக்குப் பற்றிக் கொண்டு வந்தது..
"ஏன்டா லிங்கா.. விடிய விடிய ராமாயணம் கேட்டு விட்டு விடிந்த பின் சீதைக்கு ராமன்.. சித்தப்பன் மகனான்னு கேட்ட கதையாய் இல்ல.. உங்கப்பா கேள்வி கேட்கும் கதையிருக்கு..."
ராஜலட்சுமியின் கோபத்தில் உண்மை இருந்ததால்.. லிங்கய்யனும் கோதை நாச்சியாரும் மௌனம் சாதித்தார்கள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பனித்திரை -7
பனித்திரை -7
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s320/IMG-20200218-WA0020.jpg
https://1.bp.blogspot.com/-hGttRZ1DTvg/Xk42Y13sdOI/AAAAAAAAAyc/Utz1Zn1z8WQcpbJyUj0LYIP0L4k9N498gCPcBGAYYCw/s72-c/IMG-20200218-WA0020.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/paniththirai-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy