எங்கிருந்தோ ஆசைகள். -41

41 கண்ணாமூச்சி விளையாட்டை - நீ கைவிடவே ஆசைகொண்டேன்... "ஸ்ஸ்.. அப்பாடா.." என்றபடி வீட்டுக்குள் வந்தார் துரியோதனன்... ...


41
கண்ணாமூச்சி விளையாட்டை - நீ
கைவிடவே ஆசைகொண்டேன்...


"ஸ்ஸ்.. அப்பாடா.." என்றபடி வீட்டுக்குள் வந்தார் துரியோதனன்...
செம்பு நிறைய தண்ணீருடன் அவர்முன் பிரசன்னமான செல்வி "இந்தாங்க.." என்று தண்ணீர் செம்பை அவரிடம் நீட்டினாள்...
வாங்கி மடமடவென்று அதைத் தொண்டைக்குள் சரித்துவிட்டு தண்ணீர் செம்பை திருப்பிக் கொடுத்தவர்.. ஆசுவாசத்துடன் சோபாவில் சரிந்தார்...
கணவனின் தளர்ந்த கோலத்தைக் கண்ட செல்வி மின் விசிறியைச் சுழல விட்டாள்.. கருத்தறிந்து மனைவி செய்த பணிவிடைகளில் துரியோதனனின் உள்ளம் நெகிழ்ந்தது...
'சும்மாவா பெரியவங்க சொல்லி வைச்சிருக்காங்க.. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு..'
காதலுடன் மனைவியைப் பார்த்தவர் வாசலில் கடாமுடாவென்று லாரி வந்து சரளைக்கற்களைக் கொட்டுவதைப் போன்ற சப்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்...
அங்கே லாரியும் இல்லை.. சரளைக் கற்களும் இல்லை... அதற்கு மாறாக.. அவர் பெற்ற அருந்தவப் புதல்வன்தான் வாசல் கேட்டை இடித்து நொறுக்கியபடி வந்து கொண்டிருந்தான்...
'இவனைப் பெத்தது யார் கொடுத்த வரம்..?'
நொந்து போனவராக முகம் சுளித்தார் துரியோதனன்.. கணவனின் முகத்திலிருந்த அவர் மனதைப் படித்தவளாக செல்வி...
"இப்போத்தான் வெளியே போனான்.." என்று அவசரமாகச் சொன்னாள்..
"அவன் எப்போப் போவான்.. எப்போவருவான்னு உன்னவிட எனக்கு தெளிவாத் தெரியும்டி..." என்று முறைத்தார் துரியோதனன்...
தடபுடா என்று வீட்டுக்குள் வந்த தேவராஜன் தகப்பனைக் கண்டதும் தேங்கி நின்றான்...
"எங்கேடா போயிருந்த..?" கோபத்துடன் அதட்டினார் துரியோதனன்...
"எங்கே போனா உங்களுக்கென்ன..? அதான் வித்த கடைப் பக்கமும் போகக்கூடாது... புதுசா திறந்திருக்கிற கடைப்பக்கமும் வரக்கூடாதுன்னு உத்தரவு போட்டுட்டீங்கள்ல.. அதுக்கு மேல எதுக்கு கேள்வி கேக்கறிங்க..?" பதிலுக்கு முறைத்தான் தேவராஜன்...
"வித்த கடையில உனக்கென்னடா சோலியிருக்கு..? அந்த பார்த்தசாரதியோட மகன் போனைப் போட்டு சத்தம் போடறான்.. தேவையாடா எனக்கு..? ஏற்கனெவே அவனுக என்னத் தோக்கடிச்சுட்ட ஆணவத்தில இருக்கானுக.. இதில நீயும் வேற சேந்துக்கிட்டு ஏண்டா என் உயிரைக் குறைக்கிற..? நீ பண்ணி வைச்சதெல்லாம் போதாதா..? இன்னும் சேர்ந்துக்கனுமா...?"
"அப்பா போனதையே சொல்லிக் காட்டாதீங்க.. நானும் திருந்திப்புடலாமுன்னுதான் ஜவுளிக்கடைக்கு வந்தேன்.. என்னை உள்ளார நுழைய விட்டிங்களா..?"
"அறைஞ்சேன்னா ஒட்டு மொத்தப் பல்லும் ஒன்னா உதிர்ந்து போயிடும்.. படவா ராஸ்கல்.. நீ எதுக்காக வந்தேன்னு தெரியாதா..? கடையைக் கவனிக்கலாம்கிற பொறுப்பிலயா வந்த..? கடைக்கு துணிமணி வாங்க வர்ற பொம்பளைக கூட்டத்தப் பாத்து அங்க வந்த.. இல்லேன்னா உன் பொறுப்பப் பத்தி எனக்குத் தெரியாதா..?"
துரியோதனனின் கோபத்தில் தேவராஜன் வாயை மூடிக் கொண்டான்.. தலையைப் பிடித்தபடி வாய்க்குள் மொண மெணவென்று மகனைத் திட்டிக் கொண்டிருந்தார் துரியோதனன்..
"அப்பா..." என்ற அன்பான அழைப்புடன் தேன்மொழி வந்தாள்...
"வாசலில நீ வர்ற சத்தமே கேட்கலையேம்மா.. எப்படி வந்த..?" ஆச்சரியத்துடன் கேட்டார் துரியோதனன்..
"சுவரேறிக் குதிச்சு வரலை.. கேட்டைத் திறந்துக்கிட்டுத்தான் வந்தேன்.. இது என்னப்பா இப்படிக் கேட்கறிங்க...?"
"உன் அண்ணன் வந்த லட்சணம் அப்படி..." அலுத்துக் கொண்டார் துரியோதனன்...
"இது கூடப் பொறந்துட்டேங்கிறதுக்காக.. இதுகூட என்ன இணக்கூட்டிப் பேசாதீங்கப்பா.." முகம் சுளித்தாள் தேன்மொழி..
"அத்தைச் சொல்லு.. இந்த லட்சணத்தில இவன நானு கடைக்குள்ள விடலையாம்.. கம்யூட்டரை வித்தப்ப.. கடையைப் பாத்துக்க வாடான்னு நானும் காட்டுக் கத்தலா கத்துவேன்.. காதிலேயே போட்டுக்க மாட்டான்.. தினமும் காலையில ஒருதரம்.. சாயங்காலம் ஒருதரம்ன்னு ஆஜராவான்.. ஆனா அடங்கிக் கடையில உக்கார மாட்டான்.. அப்ப பொத்துக்கிட்டு வராத கரிசனம் இப்ப மட்டும் எங்கிருந்து பொத்துக்கிட்டு ஊத்துதாம்..?"
"கதையே வேறப்பா.. கம்யூட்டர் வாங்க வர்றவங்க எல்லாருமே பொம்பளைகளா இருக்க மாட்டாங்க.. அதோட.. ஜவுளிக்கடையில் குமியற அளவுக்கு வேற எந்தக் கடையிலயும் பொம்பளைக குமிய மாட்டாங்க..."
தேன்மொழி நமட்டுச் சிரிப்புடன் போட்டுக் கொடுத்தாள்..
"அதச் சொல்லு.. அந்த மட்டிலும் ஒரு நிம்மதிதாம்மா.."
"என்னப்பா..?"
"அந்தக் கடையை விக்க வைச்சதைப் போல இந்தக் கடையை விக்க வைக்க மாட்டானில்ல..."
"ஹா... ஹா.. ஆமாம்பா..."
தகப்பனும் மகளும் கூட்டணி போட்டுக் கொண்டு தேவராஜனை தாக்கோ தாக்கென்று தாக்கிக் கொண்டிருக்க.. அவன் அதற்கெல்லாம் அயர்வேனா என்று அத்தனை சொல்லடிகளையும் தாங்கி நின்று.. எதையும் தாங்கும் வைர நெஞ்சம் அவனுக்கிருப்பதை நிருபித்தான்...
காபியுடன் வந்த செல்வி.. மகனைப் பார்த்தாள்.. இவன் இப்படி இருக்கிறானே என்ற கோபம் கலந்த வேதனை அவளுக்குள் கொப்பளித்தது...
"இந்தா பாரு தேன்மொழி.. ஆயிரம்தான் இருந்தாலும் இவன் உனக்கு அண்ணன்.. நாளக்கி உனக்கு கல்யாணமாகி புள்ளை குட்டின்னு நிக்கிறப்ப தாய்மாமன் சீரு செய்ய இவன்தான் உனக்கு வந்து நிக்கனும்... அதனால அப்பாகூடச் சேந்து வாயடிக்காம அடக்க ஒடுக்கமா இருந்து பழகு..." அவள் மகளைக் கடிந்து கொண்டாள்...
"இப்ப அண்ணனை என்னம்மா சொல்லிட்டேன்..? அப்பா கூட விளயாட்டாப் பேசிச் சிரிச்சா உடனே நீ உபதேசம் பண்ணக் கிளம்பிருவியே..." தேன்மொழி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே போனாள்..
"காபியைக் குடிச்சுட்டு போ..." அதற்கும் செல்வி அதட்டினாள்..
"இப்படி முன்னாடி வசவு.. பின்னாடி காபின்னு குடு.. தொண்டையிலே இறங்கிரும்.." தேன்மொழி சலித்துக் கொண்டாள்...
"ஏன் செல்வி.. புள்ளயப் போய் திட்டற..? அது உன் மகனை என்ன சொல்லுச்சு..? உள்ளதத்தான சொல்லுச்சு.. உன் மகனப் போல உதவாக்கரையா ஊரைச் சுத்தினா நீ பேச வேண்டியதுதான்.. அது புத்தியோட காலேஜீக்குப் போயி பட்டப்படிப்பை படிச்சு முடிச்சபுள்ள.. அதப்போயி பேசக் கண்டோமா..?" துரியோதனன் மனைவியை கோபித்தார்..
"இப்பப் பேசற வாய்தான் நாலு பேரு இருக்கிறப்பவும் பேசச் சொல்லும்.. இவளே இவ அண்ணனப் பத்தி இப்புடிப் பேசினா.. நாளபின்ன இவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்கன்னு சொல்லுங்க..." கவலையுடன் பேசினாள் செல்வி...
"யாருடி இவ.. வீட்டில கல்யாண வயசில பொம்பளப்புள்ளய வைச்சுக்கிட்டு இந்த தடிமாட்டு தாண்டவராயனுக்கு பொண்ணுத்தேடக் கிளம்பிட்டா.. அந்தப் பேச்சே இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது.. என் பொண்ண கரையேத்திட்டுத்தான் மத்ததைப் பத்தி நான் யோசிப்பேன்.." தீர்மானமாகச் சொன்னார் துரியோதனன்..
தேவராஜன் ஒரு யோசனையை யோசித்து வைத்திருந்தான்.. அந்த யோசனையை தகப்பனாரின் காதுக்குள் போட்டுவிட அதுதான் நல்ல தருணமென்று அவனுக்குத் தோன்றிவிட்டது...
தேவராஜன் தகவல் சேகரித்திருந்த வகையில்.. அர்ஜீனுக்கு காவ்யாவின் மீது ஒரு கண் இருப்பது தெளிவாகியிருந்தது.. போதாக்குறைக்கு இளங்கோவின் திருமணத்துக்கு வேன் பிடித்து மொத்த கடையும் ஒன்றாக இன்பச் சுற்றுலா போல் கிளம்பியதையும்.. அந்த ஜோதியில் அர்ஜீனனும் ஐக்கியமாகியிருந்ததையும் அவன் அறிந்திருந்தான்.. அவனால் அந்தச் செய்தியை தாள முடியவில்லை...
"கடைநிர்வாகம் மொத்தமும் காவ்யா கைக்கு போயிருச்ச தேவராஜா.. இப்ப கடையில அது வைச்சதுதான் சட்டம்.. முதலாளி கள்ளுக்குடிச்ச சிங்கங்கணக்கா அது பின்னாலேயே சுத்தறாருன்னா பாரேன்..."
போட்டுக் கொடுத்த தங்கராஜ் விவரங்களை பிட்டுப் பிட்டு வைத்திருந்தான்.. அத்தனையையும் கேட்டுக் கொண்ட தேவராஜனுக்கு.. தங்கராஜ் அர்ஜீனை சிங்கமென்று அழைத்ததை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை..
"கள்ளுக் குடிச்ச குரங்குன்னு சொல்லுவியா.. அத விட்டுட்டு அவனைப் போயி சிங்கம்கிற.." என்று சண்டைக்குப் போனான்..
"உன்கூட இது ஒன்னு இருக்கு தேவராஜா.. எதுனாலும் நீ முட்டாத்தனமாத்தான் பேசி வைப்ப.. அவர் இருக்கிற அழகுக்கும்.. வாட்டசாட்டத்துக்கும் அவரப் போயி குரங்குன்னு சொன்னா.. அழகர்கோவில் மலையில இருக்கிற குரங்குக் கூட்டமே கோவிச்சுக்கிட்டு சண்டைக்கு கிளம்பி வந்துருமப்பா.. ஒத்தச் சொல்லச் சொன்னாலும் அதப் பொருந்தச் சொல்லுற மதுரையில பிறந்தவனப்பா.. என்னால ஆணழகனையெல்லாம் குரங்குன்னு சொல்லிற முடியாது.. நீ வாங்கிக் கொடுக்கிற பிரியாணிக்கும்.. சரக்குக்கும்.. நடக்கிற நடப்பச் சொல்றேனா இல்லியா.. அத மட்டும் பாரு.. அதுக்கு மேலே இன்னாரை ஆனைன்னு சொல்லு.. இன்னாரை பூனைன்னு சொல்லுன்னு சொல்லிக் கொடுக்கிற வேலய எல்லாம் எங்கிட்ட வைச்சுக்கிராதே.. நான் மதுரைக்காரன்..."
'நான் மட்டும் செவ்வாய் கிரகத்துக்காரனா...'
தேவராஜனுக்கு பற்றிக் கொண்டுதான் வந்தது.. ஆனாலும் அதை பற்றிவிட்டு.. புன்னகை மன்னனாய் தங்கராஜைத் தழுவிக் கொண்டான்.. மறக்காமல்...
'ம்ஹீம்.. அந்தக் கடைய மட்டும் எங்கப்பன் விக்காம இருந்திருந்தா.. இவன் என் காலத் தொட்டுக் கும்பிட்டிருப்பான்.. இப்படிக் கட்டித் தழுவிக்கிட்டு நிக்க மாட்டான்..' என்ற பெருமூச்சையும் விட்டுக் கொண்டான்..
"ஆமா தங்கம்.. அந்தக் காவ்யாவோட வீட்டில கட்டுக்காவல் ஜாஸ்தியாச்சே.. அதெப்படி.. ஒரு நாள் பூராவும் அது இன்பச் சுற்றுலா போதை கண்டுக்காம விட்டாங்க.." என்று கிண்டிக் கிழங்கையும் எடுத்தான்...
"அந்தக் கூத்தை ஏன் கேக்கிற.. அதோட அண்ணன்.. என் அண்ணனுக்கு ஆபிசராச்சே.. அண்ணனைத் தேடி வந்தவரு வாய நான் கிண்டினேன்.. அவருக்கு அவரோட தங்கச்சி கடையில வேல பாக்கிறவங்களோட சேந்து கல்யாணத்துக்கு வேனில போனது தெரியாது போல இருக்குப்பா..."
'அட..' தேவராஜீக்கு ஒரு பிடி கிடைத்துவிட்டது...
"அப்புறம்..?" ஆவலாக விசாரித்தான்...
"அப்புறம் என்னாச்சுன்னு எனக்குத் தெரியாது.. ஆனா அவரு கடைப்பக்கமா வந்தா முதலாளிய வெட்டவா இல்ல குத்தவான்னுதான் பாத்து வைப்பாரு..."
'இது வேறயா..' லட்டு மேலே லட்டாக கிடைத்ததில் மகிழ்ந்து போனான் தேவராஜன்...
"இன்னைக்கு நீ வாங்கிக் கொடுத்த சரக்குக்கு இம்புட்டுத்தான் கக்க முடியும்.." தங்கராஜ் கழண்டு கொண்டான்...
அவன் சொன்னவைகளை சேர்த்துக் கோர்த்து மனதுக்குள் ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தவனுக்கு.. அர்ஜீனை அவன் பாதையிலிருந்து அகற்ற ஒருவழி கிடைத்திருந்தது...
அந்த வழியை முயன்று பார்க்க நேரம் காலம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவனுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டார் துரியோதனன்..
"நீங்க நினைச்சா தங்கச்சியை நல்ல இடத்தில கட்டியும் கொடுக்கலாம்.. உங்க மனசு வருத்தத்தையும் மாத்திக்கலாம்பா..." வினையமாக சொன்னான் அவன்...
ஆனால் அவன் சொன்னதினாலேயே.. அதிலிருந்த வினயம் மறக்கப்பட்டு அது விகடப் பேச்சாக ஆகிவிட்டது..
"ஏண்டி.. எனக்கு கொஞ்சநாளா சறுக்கல்தான்.. நான் இல்லேங்கலை.. அதுக்காக இவனெல்லாம் யோசனை சொல்ற அளவுக்கா நான் சறுக்கிட்டேன்..?" மனைவியிடம் கேட்டார் துரியோதனன்...
"வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியாடா..? உன் யோசனையெல்லாம் உன்கூட வைச்சுக்கனும்.. அத விட்டுப்புட்டு.. அப்பா தலையில அதை நுழைக்கனும்னு பாத்த.. நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.." செல்வி சீறினாள்...
"ஏம்மா.. இப்ப நான் என்னத்த சொல்லிப்புட்டேன்னு புருசனும் பொண்டாட்டியும் இந்தக்குதி குதிக்கறிங்க..? அண்ணன்காரனா லட்சணமா.. தங்கச்சி கல்யாணத்தப் பத்தி ஒரு வார்த்த சொன்னா அது தப்பாம்மா..?" தேவராஜன் நியாயம் கேட்டான்..
"தப்புத்தாண்டா.. உன் லட்சணம் என்னான்னுதான் ஊருக்கே தெரியுமே.. இதில நீ கொண்டு வர்ற மாப்பிள்ளக்கி என் பொண்ணக் கொடுத்தா என்னா கதியாகும்ன்னு எனக்குத் தெரியாதா..?" கடுகடுப்புடன் உள்ளே செல்லப் போனாள் செல்வி...
"பொறும்மா.. நான் ஒன்னும் ஏப்ப.. சாப்பயான மாப்பிள்ளயப் பாத்து கை காட்டலை.. பெரிய படிப்புப் படிச்ச கோடிஸ்வரனத்தான் கை காட்டறேன்.. அவனுக்குப் பொண்ணக் கொடுத்தா.. நம்ம சுத்துப்பட்டியில நமக்குத்தாம்மா பெருமை.." தாயை வழிமறித்தான் தேவராஜன்...
"இவன் என்னத்தைடி சொல்றான்..?"
அவன் பேசிய பேச்சில்.. இத்தனை நாள்களாய் அவனிடம் தென்படாத புத்திசாலித்தனம் தென்பட்டதில் துரியோதனன் ஆச்சரியமாகிப் போனார்.. மகன் சொல்லச் சொல்ல அதைக் கேட்டவருக்கு ஆச்சரியம் இன்னமும் அதிகமானதாக ஆனது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -41
எங்கிருந்தோ ஆசைகள். -41
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-41.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-41.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy