எங்கிருந்தோ ஆசைகள். -37

37 கன்னி மனதின் சலனங்களை - நீ கண்டு கொள்ள ஆசைகொண்டேன்.. காவ்யாவின் கைவிரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.. விரல்களை இறுக்கிப் பிடித...


37
கன்னி மனதின் சலனங்களை - நீ
கண்டு கொள்ள ஆசைகொண்டேன்..


காவ்யாவின் கைவிரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.. விரல்களை இறுக்கிப் பிடித்து.. அவற்றைச் சமனப்படுத்த முயன்று தோற்றாள் அவள்.. கலகலத்துப் பேசிச் சிரித்தபடி வேனுக்குள் ஏறிய பாவனா அவளின் அரண்டு போன தோற்றத்தைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினாள்...
"என்னடி.. பேயடிச்சதைப் போல உட்கார்ந்திருக்க..?"
பேய்தான் அடித்துவிட்டது என்று மனதிற்குள் துக்கப்பட்டாள் காவ்யா... அவளின் உடலெங்கும் பரவியிருந்த இன்ப அலைகளின் ஆர்ப்பரிப்பிலிருந்து இன்னும் அவள் மீளவில்லை.. பார்வைகள் புதிதாய்.. பரிபாஷைகள் புதிதாய்.. புதியதோர் உலகத்தில் இருந்தவளுக்கு.. அந்த ஸ்பரிசங்கள் புதிதாக மிரட்சியை வரவழைத்தன...
"இதற்கு இது என்று இங்கு
             யார் நினைத்தது...?
    கதை இங்கு வந்து முடியுமென்றால்
             யார் தடுப்பது..?"
வேனுக்குள் பாடல் பரவ ஆரம்பித்தது.. காவ்யாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்த பாவனா...
"நாம போகும்போது நல்லாத்தானே இருந்தா..?" என்று அர்ஜீனிடம் கேட்டு வைத்தாள்..
'நீதாண்டி போன.. அவன் போன வேகத்தில் திரும்பி வந்திட்டான்..' மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்தபடி வேனின் தரைத்தளத்தைப் பார்த்தாள் காவ்யா...
அர்ஜீனின் விழிகள் அவள் மேல் படிவதை அவன் முகம் பார்க்காமலே அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அவள் முகத்தில் பிரதிபலித்த மிரட்சியைப் புரிந்து கொண்டவனாக...
"விடுங்க பாவனா.. டயர்டா இருக்கும்.." என்று மென்மையுடன் அவன் சொன்னான்...
"டயர்டா இருக்குன்னுதானே காபி.. டிபன் சாப்பிடப் போனோம்.. இவளும் கூட வந்திருக்கலாமில்ல..?" மனத்தாங்கல் ப்டடாள் பாவனா...
"அவங்களுக்கு விருப்பமில்ல போல.." அவன் யோசனையுடன் பேசினான்...
எதில் விருப்பமில்லையென்று சொல்கிறான் என்ற நினைவில் அவளின் உடல் அதிர்ந்தது.. அவன் தொட்டதில் விருப்பமில்லையென்று சொல்கிறானா..? இல்லையென்றால்.. அவளின் காதோடு அவன் காதல் சொன்னதில் விருப்பமில்லை யென்று சொல்கிறானா..?
இரண்டிலுமே அவளுக்கு விருப்பா.. அல்லது.. வெறுப்பா.. என்று அவளுக்கே தெரியவில்லை.. தன்னைத்தானே புரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்தாள் அந்த பேதை...
அவனே சொன்னதைப் போல.. அவளும்.. அவனும்.. உணர்வு பூர்வமான கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தது உண்மைதானே...?
அந்த விளையாட்டை முடித்து வைத்து அடுத்த கட்டத்திற்கு அவன் முன்னேறினால் அவள் ஏன் அரண்டு போகிறாள்..?
"விருப்பமில்லையா..? நீங்க வேற.. இவ பிடிவாதக் காரி சார்..." உற்சாகமாகப் பதில் சொன்னாள் பாவனா...
தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த முதலாளியுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசிப் பழக வாய்ப்பு கிடைத்த உற்சாகம் அவளுக்கு.. அதை திறமையாக பயன்படுத்திக் கொள்ளவும் செய்தாள்.. என்னவோ வெகு காலமாக பேசிப் பழகியிருந்தவளைப் போல இயல்பாக அவள் பேசிச் சிரித்ததை அர்ஜீனும் ரசித்தான்.. நத்தை ஓட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வதைப் போல.. தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவற்றுக்குள் புதைந்திருந்த காவ்யாவுக்கு... இப்படியொரு தோழி எப்படி வாய்த்தாள் என்ற ஆச்சரியம் அவனுக்குள் முளைத்திருந்தது..
சண்டைக்கு காவ்யா தயாராக இருந்தாள்... அவளே சொல்வதைப் போல... எக்குத்தப்பான சின்ன வார்த்தையிலும் சீறி எழுந்து போர்முரசைக் கொட்ட அவள் தயங்கியதில்லை...
துர்வாச மாமுனிவர் பிடிசாபம் என்று இருந்ததைப் போல அவள் பிடி சண்டையை என்று இருந்தாள்.. கோபமும்.. ரோசமும் அவளின் உடன் பிறப்புக்களாக இருந்தன...
எந்த ஒரு சமயத்திலும் அவளின் கோபத்தை அவள் மறைத்ததில்லை.. அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்த அவள் தயங்கியதில்லை...
அப்படிப்பட்டவள் தன் காதலை மட்டும் ஏன் மறைக்கிறாள் என்ற கேள்விதான் அர்ஜீனின் நெஞ்சில் இருந்தது.. அவன் அந்தக் கடைக்கு சொந்தக்காரனாக ஆகி ஆறுமாதங்களுக்கு மேல் ஆகின்றன.. இந்த ஆறுமாத காலத்திலும் அவன் மீதான காவ்யாவின் தேடல் படிப்படியாக அதிகரிப்பதை அவன் உணர்ந்திருந்தான்.. அவனுக்கான அவளின் தேடலை பார்ப்பதற்காகவே எத்தனை கோடி லாபம் தரும் வியாபாரமாக இருந்தாலும்.. அதை மறந்து மதுரைக்கு அவன் ஓடிவருவான்.. அவன் வரவைக் கண்டதும் அவள் கண்களில் மின்னுமே.. ஒரு மின்னல்.. அதற்கு ஈடாக இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லையென்று அவன் நினைத்தான்...
அந்த மின்னலை அதற்கு முன்னால்.. எந்தப் பெண்ணின் விழிகளிலும் அவன் பார்த்ததில்லை... அவனிடம் மயங்கிய மயக்கத்தை அவள் கண்கள் சொல்லியபோது அவன் கொண்ட வெற்றிப் பெருமிதத்தை.. கோடிகோடியாய் கொட்டிக் கொண்டிருந்த லாபப் பணம் கொடுத்ததில்லை...
அவள் அவனிடம் மயங்கினாள்.. அவன் அந்த மயக்கத்தில் மயங்கினான்.. எவருக்கும் அஞ்சாத.. யாருக்கும் கட்டுப்படாத.. காற்றைப் போன்ற பிடிவாத குணமுள்ள அந்த துடுக்குக்காரி.. அவனின் ஒரு பார்வையிலே கட்டுண்டு நின்று விட்டதில் அவனின் ஆண்மை கர்வம் கொண்டது...
முதல் சந்திப்பிலேயே.. தன் வெடுக்கென்ற பேச்சினாலே அவனை வசீகரித்த அந்த வசீகரியை அவன் காதலித்தான்.. அவளும் அவனைக் காதலிக்கிறாள் என்று நிச்சயமாக அவன் மனதுக்குத் தெரியும்.. பார்வைகளினால் அதை உணர்த்தியவள்.. பேச்சுக்களில் அதை வெளிப்படுத்தவில்லை.. ஒப்புக் கொள்ளவும் இல்லை...
அவன் எட்ட நின்றால் கள்ளப்பார்வை பார்த்தாள்.. கிட்டப் போனால் எட்டடி தள்ளி நின்றாள்...
அர்ஜீனால் அதைத் தாங்க முடியவில்லை.. அவனுடைய உடலும் மனமும் அவளைத் தேடின.. அந்த கள்ளமலர் சிரிப்புக்காரியின் கடைக்கண் பார்வையில் அவன் சிறைபட்டிருந்தான்.. சிறைமீட்க அவளால் மட்டுமே முடியும் என்றிருக்கும் போது.. அவள் விலகி நின்று விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் அவன் களைத்துப் போய் விட்டான்...
கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்பக்கமிருந்து அவன் கண்ஜாடை காட்டி என்ன பயன்..? அவளைத் தொட்டு விடமுடியாமல் அவளின் பிம்பத்தைத் தொட்டே எத்தனை நாள்தான் அவன் காலம் கழிப்பது..?
இரும்புச் சுவரையே உடைக்கும் வல்லமை படைத்த அர்ஜீனை.. அவள் கட்டி வைத்திருந்த கண்ணாடிச் சுவரால் தடுத்துவிட முடியுமா..?
அவன் அந்தக் கண்ணாடிச் சுவரை உடைக்க முடிவெடுத்தான்.. அவனின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் அவளின் உணர்வுகளுக்கு அவனின் ஸ்பரிசத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து விட்டான்...
அது சென்னையல்ல.. மெலிதான மெழுகுவர்த்தியின் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில்.. இதமான ஆங்கில இசை தவழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான சூழலில்.. யாருடைய தனிமையிலும்.. யாரும் நுழையாத நாகரிக உலகத்தில்.. அவள் விரல்பற்றி முத்தமிட்டு... 'நான் உன்னைக் காதலிக்கிறேன்..' என்று சொல்வதற்கு...
அது மதுரை.. சாதாரண காபியைக்கூட.. கடைக்குள் இருந்துதான் குடிப்பேன்.. உன்கூட ஹோட்டலுக்கு வந்து குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அவனின் காதலி வசிக்கும் ஊர்...
அங்கே அவன் நினைத்தபடி அவளிடம் காதலைச் சொல்லிவிட முடியாது.. அதற்கான தனிமை அவனுக்கு கிடைக்கவில்லை.. பத்துப்பேரின் மத்தியிலே.. கள்ளப் பார்வை பார்க்கத் தெரிந்திருந்தவளுக்கு.. அவன் காதல் சொல்ல தனிமையைக் கொடுக்க மனமில்லை...
மற்றவர்கள் இருந்தால் அவள் ஓரவிழிப்பார்வையிலே அவனை சுண்டியிழுப்பாள்.. வேலை செய்வதைப் போல பாவனை காட்டியபடி.. இமை உயர்த்தி அவனைப்
பார்த்துக் கொண்டேயிருப்பாள்.. அந்த மயக்கத்தில் திளைப்பவனுடன்.. இரண்டு நிமிட தனிமை கிடைத்து விட்டால்.. அவசரமாக வெளியே போய் விடுவாள்.. ஏமாற்றத்துடன் அவன் சிடுசிடுத்தால்.. கடையின் விற்பனைக்கான கணக்கைக் கேட்கப் போனதாக ஆதாரம் காட்டுவாள்...
'இவ என்கூட விளையாடிப் பார்க்கிறாளா..?'
கோபத்துடன் கண்கள் இடுங்க முறைப்பவனை காதலுடன் பார்த்துவிட்டு எதுவுமே நடக்காததைப் போல.. வேலை செய்ய ஆரம்பிப்பவளை என்ன செய்தால் தகுமென்று அவன் கொலைவெறிக்கு ஆளாகாத நாளே இல்லை எனலாம்...
அந்தச் சூழ்நிலையில்தான் இளங்கோவின் திருமணம் வந்தது.. அர்ஜீன் தெளிவாக காய் நகர்த்தினான்.. எல்லோரையும் அவரவர் வீட்டுக்குச் சென்று அழைத்துக் கொள்ளலாம் என்ற அவனின் யோசனையை எடுத்த எடுப்பிலேயே காவ்யா நிராகரித்து விட்டாள்..
அர்ஜீனின் திட்டமே அதுதான்.. எல்லோருக்கும் முன்னால் காவ்யாவை அழைத்துக் கொள்ள வேண்டும்.. பாவனாவின் வீட்டிற்குச் செல்லும் வழியில் டிரைவருக்கு ஏதாவது வேலை கொடுத்து அனுப்பி விடவேண்டும்.. அவன் திரும்புவதற்குள் காவ்யாவிடம் அவன் நினைத்திருந்த விதத்தில் காதலைச் சொல்லி விடவேண்டும்.. திரும்பும் போதும் கடைசியாக காவ்யாவின் வீட்டிற்குப் போக வேண்டும்.. போகும் வழியில் டிரைவருக்கு வேலை தந்து விட்டு.. அந்த இடைபட்ட நேரத்தில்.. காலையில் சொல்லிய காதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்..
அழகான அவனின் திட்டத்தின் அடிப்படையை அவனின் காதலி தகர்த்து விட்ட பின்னாலும் அவன் நம்பிக்கை இழக்கவில்லை.. அவன் கையில் முழுதாக
ஒரு நாள்.. இருந்தது.. அந்த ஒருநாளில் வேலையின் பரபரப்பில்லாமல்.. விழாநாளின் உற்சாகத்தோடு.. ஒர்விதமான விடுதலையுணர்வோடு.. சுற்றுலாவுக்கு செல்பவளைப் போல அவனுடன் காவ்யா வரப் போகிறாள்.. அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது...
அர்ஜீன் கெட்டிக்காரன்.. அவனுக்கென்று ஒர் நிமிடத்தைக் கொடுத்தால் கூட அவன் நினைத்ததை முடித்து விடுவான்.. இங்கோ முழுதாக ஒருநாள் இருந்தது.. காவ்யாவும் கூட இருந்தாள்.. காத்திருக்கும் கொக்கைப் போல அவனும் சரியான நேரத்திற்காக காத்திருந்தான்..
திரும்பும் வரை அவனுக்கு.. அவன் தேடிய தனிமை கிடைக்கவில்லை.. ஆனாலும்.. அந்த எரிச்சல் தெரியாமல் அவன் பக்கத்திலேயே காவ்யா இருந்தாள்.. அனைவரையும் இறக்கி விட்ட பின்பு.. பாவனாவின் வீட்டை நோக்கி வேன் போய் கொண்டிருந்தபோது.. அர்ஜீன் காபி சாப்பிட அனைவரையும் அழைத்தான்.. அவனுக்குத் தெரியும்.. காவ்யா அவனுடன் வரமாட்டாளென்று.. அவன் நினைத்ததுதான் நடந்தது.. காவ்யா அவர்களுடன் செல்ல மறுத்தாள்.. அர்ஜீன் நினைத்ததை நடத்திவிட்டான்...
பாவனாவின் வீட்டில் காவ்யா இறங்கிக் கொண்டபோதும் அர்ஜினின் முகம் பார்க்கவில்லை.. அவளின் பார்வையை சந்திக்க விரும்பி.. அவள் முகத்திலேயே விழிபதித்திருந்த அர்ஜீன்...
"ஓகே காவ்யா.. நாளைக்கு கடையில பார்க்கலாம்.." என்றான்...
அப்போதும் அவள் நிமிராமல் போகவும்... பொறுமையிழந்தவனாக..
"காவ்யா.." என்று அழுத்தமாக அழைத்தான்...
அதற்கு மேலும் அமைதியாக இருந்தால் பாவனா கண்டுகொள்வாள் என்பதினால்.. வேறு வழியின்றி தலை நிமிர்ந்தாள் காவ்யா.. அர்ஜீனின் பார்வையைச் சந்தித்தாள்.. அவன் கண்கள் பேசிய செய்தியில் அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது...
ஒர் சொந்தத்துடன் அவளைப் பார்த்து தலையசைத்தான் அவன்.. காவ்யா உடல் நடுங்க பாவனாவைத் திரும்பிப் பார்த்தாள்.. அவளோ.. அர்ஜீன் வந்திருக்கும் செய்தியை அவளுடைய அம்மாவிடம் சொல்வதற்காக உள்ளே ஓடியிருந்தாள்...
நிதானமாக அவளை நெருங்கிய அர்ஜீன்.. பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டபடி அவள் கண்களுக்குள் பார்த்தான்.. அவள் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. சிவந்து போன அவள் முகத்தையே ஆசையுடன் பார்த்தவன்...
"காவ்யா.." என்று தாபத்துடன் அழைத்தான்..
அவள் தலைகுனிந்து.. கைவிரல்களை எண்ண ஆரம்பித்து விட்டாள்...
"ஏய்ய்..."
"....."
"பேச மாட்டியா...?"
"....."
"என்னைப் பாருடி..."
"....."
"ஏன் காவ்யா..? என் முகத்தைப் பார்க்கப்-பிடிக்கலையா...?"
அவள் சட்டென்று அவன் முகம் பார்த்துவிட.. யுக்தி பலித்த வெற்றிச் சிரிப்புடன் தலையசைத்தான் அர்ஜீன்...
"இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படி என்முகம் பார்க்காம வெட்கப்படற..? ம்ம்..?" அவன் உல்லாசமாக கேட்டான்...
'எதுவும் நடக்கலையா..?' அதைக் கேட்க முடியாத சங்கடத்துடன் மௌனித்தாள் காவ்யா...
"ம்ப்ச்.. இதானே வேண்டாம்கிறது.. ஐ லவ் யு காவ்யா.. புரிஞ்சுக்க.. இன்னமும் உன்கூட கண்ணாமூச்சி விளையாட்டை விளையாட என்னால் முடியாதுடி.. எனக்கு நீ வேணும்..."
இதைத்தான் அவன் வேனிலும் சொன்னான் என்பதை நினைவுகூர்ந்தாள் காவ்யா.. அவனுக்கு அவள் வேண்டுமாமே.. அவனுக்கு எது வேண்டுமாம்..? அவளின் உடலா..? இல்லை.. மனமா...?
அதைத் தெரிந்து கொள்ளாத வரைக்கும்.. அவனிடம் பதிலுக்கு 'ஐ லவ் யு' சொல்ல அவளால் முடியாது என்று அவளுக்குத் தோன்றிவிட்டது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -37
எங்கிருந்தோ ஆசைகள். -37
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-37.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-37.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy