எங்கிருந்தோ ஆசைகள். -36

எங்கிருந்தோ ஆசைகள்... பாகம் - 2          36 கைதொட்ட கள்வனே... என் கணவனாக ஆசைகொண்டேன்... சுவர் கடிகாரத்தின் ஒலி ' டிக்....


எங்கிருந்தோ ஆசைகள்...
பாகம் - 2
        
36
கைதொட்ட கள்வனே...
என் கணவனாக ஆசைகொண்டேன்...

சுவர் கடிகாரத்தின் ஒலி 'டிக்.. டிக்..' என்று கேட்டுக் கொண்டிருந்தது.. தெருவில் சந்தடி அடங்கிய பின்பும் லேசான நடமாட்டம் தென்பட்டது.. தூரத்தில் சைக்கிளின் பின் பக்கத்தில் பால்கேனைக் கட்டியிருந்த பால்காரன் வருவது தெரிந்தது.. இரவு நேரத்து மதுரையின் நிசப்தமில்லாத நிசப்தத்தை ரசிக்க முடியாமல் ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து நின்றிருந்தாள் காவ்யா...
அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவள் கன்னம் தொட்டு நனைத்து.. ஜன்னல் கம்பிகளில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்தது.. சப்தமில்லாமல் அழுதவளின் மனதில் பாரமில்லாததை அவள் கவலையுடன் உணர்ந்தாள்...
அவள் மனதில் துக்கம் இருந்தது.. அந்தத் துக்கத்துக்குள் கடலளவு சந்தோசமும் கலந்திருந்தது... அது ஏனென்று தெரிந்திருந்ததால்தான் அவள் மௌனக் கண்ணீரை உகுத்துக் கொண்டிருக்கிறாள்..
மாலையிலேயே அவள் முகவாடலைக் கண்ட அன்னபூரணி...
"ஏண்டி ஒரு மாதிரி இருக்கிற..? காய்ச்ச.. கீய்ச்ச.. அடிக்குதா..?" என்று கேட்டபடி மகளின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்...
யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசன் திரும்பிப் பார்த்தான்.. தங்கையின் முக வாடலில் எதையோ தேடி அலைந்தன அவன் கண்கள்.. காவ்யா அவன் கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்தாள்.. அவன் புருவங்கள் முடிச்சிட்டன...
அழகர் கோவிலில் இருந்து திரும்பியதிலிருந்து அவள் இப்படித்தான் இருக்கிறாள் என்ற நினைவில் செல்போனை அணைத்துவிட்டு அவளருகில் வந்தான் கண்ணதாசன்...
"காய்ச்சலாம்மா..?" காவ்யாவைப் பார்த்தபடி அன்னபூரணியிடம் வினவினான்...
"இல்லையேடா தம்பி.. நெத்தி சில்லுன்னு இருக்கே.. இதுக்குத்தான் கடையைத் தவிர மத்த இடத்துக்குப் போகாதன்னு நான் தலப்பாடா அடிச்சுக்கிறது.. நான் சொல்றதை யாரு கேட்கிறாங்க..? என்னமோ இவள நானு வீட்டுக்குள்ளப் போட்டு பூட்டி வைக்கிறதப் போலயில்ல பேசி வைக்கிறா.. நீயும் சிபாரிசுக்கு வர்ற.. இப்பப்பாரு.. அலைச்சல் தாங்காம வாடிப் போய் வந்து நிக்கிறா... இவ உடம்புக்கு அலைஞ்சா ஆகுமா..? வேலைக்குப் போனோமா.. வீட்டுக்கு வந்தோமா.. ஒரு வாய் கஞ்சியைக் குடிச்சோமான்னு இருக்கனும்.. அத விட்டுட்டு.. கூட வேல பாக்கறவன் கல்யாணம் பண்ணிக்கிறான்னு விட்ட விடிகாலையிலயே அழகர் கோவிலைப் பாக்க ஓடக்
கூடாது.. அவனுக கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு என்ன... இல்ல.. காதைக் குத்திக்கிட்டாத்தான நமக்கு என்ன.. நம்மளுக்கு நம்ம சோலின்னு இருந்துட்டுப் போகாம பெரிய மனுஷிபோல இவ கலந்துக்கப் போனாளாம்... இப்ப காய்ச்சல் இல்லாத காய்ச்சலில விழுந்துட்டு வந்திருக்காளாம்.. இத எங்கே போய் சொல்றது.. இந்தாடி.. சூடாக் காபித் தண்ணியவாது குடி..."
'காய்ச்சல் இல்லாத காய்ச்சல்...'
தாயின் வார்த்தைகளில் எதையோ உணர்ந்தவனாக தங்கையின் முகத்தை கூர்ந்து பார்த்தான் கண்ணதாசன்..
அதே வார்த்தையில் அலை பாய்ந்த அவளும்.. தமையனின் முகத்தை கலக்கத்துடன் பார்த்தாள்..
"என்னம்மா..?"
"ஒன்னுமில்லேண்ணே..."
"ஏன் வாடிப் போயிருக்க..?"
"அலைச்சல்ண்ணே..."
"கல்யாணத்துக்குத்தான போன..? மதியமே வந்திருக்கலாமே..?"
"வந்ததுதான் வந்தோம். மலை மேல ஏறி.. பழமுதிர் சோலையில முருகனையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு பாவனா சொன்னா..."
"கேட்டுக்கிட்டியாடா கண்ணா.. இவ ஊரைச் சுத்தியிருக்கா..."
"இல்லம்மா.. மலையைத்தான் சுத்தியிருக்கு.. விடு போய் ரெஸ்ட் எடுக்கட்டும்..."
"விடாம என்னடா பண்ணப்போறேன்..? இவள வீட்டக் கூட்டச் சொல்லப் போறேனா..? பண்டபாத்திரத்தை தேய்ச்சுக் கழுவச் சொல்லப் போறேனா..? இல்ல.. அடுப்பங்கரைக்குள்ள போயி ஆக்கிப் போடுடின்னு தான் சொல்லப் போறேனா...? அத்தனை வேலையயும் நானே பார்த்துக்கிட்டு இவள சும்மாதான இருக்கச் சொல்றேன்..? இவ அதையும் செய்யாம நோக்காட்ட இழுத்துக்கிட்டு வந்தா கோபம் வராம எப்படிடா இருக்கும்...?"
"சரிசரி.. எல்லாத்தயும் நாள பின்ன பேசிக்கலாம்.. நீ போ காவ்யா.. ரெஸ்ட் எடு.."
அன்னபூரணியிடமிருந்து காவ்யாவுக்கு கண்ணதாசன் விடுதலை வாங்கிக் கொடுத்தான்.. நன்றியுடன் தமையனைப் பார்த்து விட்டு மாடிப்படிகளில் சோர்வாக ஏறிப் படுக்கையில் விழுந்தாள் காவ்யா.. கண்களை மூடியவளுக்குள் தூக்கம் வரவில்லை.. துக்கம்தான் வந்தது.. அந்தத் துக்கம் அவளுக்கு உவப்பானதாகவும் இருந்தது...
'நோக்காடு...'
நோயைக் குறிக்கும் மதுரை வட்டாரத்தின் சொல்..!
காவ்யா எந்த நோக்காடில் விழுந்திருக்கிறாளோ.. அந்த நோக்காடை அவள் சந்தோசமாக உணர்கிறாள் என்பதை அறிந்தால் அன்னபூரணி என்ன சொல்லுவாள்..?
இரவு உணவை மாடிக்கே கொண்டு வந்த தாயின் கரிசனத்தில் நெகிழ்ந்து விட்டாள் காவ்யா...
போலியான கடுமையுடன்.. மகளை உருட்டி மிரட்டியபடி.. சாப்பாட்டைப் பிசைந்து ஊட்டி விட்ட தாயின் பாசத்தில் நனைந்தபடி.. தாய்ப்பறவையின் சிறகுக்கடியில் ஒன்றியிருக்கும் சேய்ப் பறவையாக சாப்பிட்டு முடித்தாள் காவ்யா...
"உன்னையெல்லாம் நாலு போடு போட்டாத்தான் என் மனசு ஆறும்டி.. சொல் பேச்சக் கேக்கறியா..?"
அன்னபூரணி எழுந்து கொள்ள முனைந்தபோது...
"அம்மா.." என்று அவள் கைபற்றித் தடுத்தாள் காவ்யா...
"ராணி மங்கம்மாவுக்கு இன்னும் என்ன வேணுமாம்..?" அன்னபூரணி பொய்யாக அதட்டினாள்..
'ராணி மங்கம்மா...' காவ்யாவின் உடலில் லேசான அதிர்வு தோன்றியது.. அவள் மனதை ஊடுருவும் சங்கதிகளை உணராமலே அன்னபூரணி உணர்ந்து கொள்வதின் மாயமென்ன என்று அவளுக்கு பிடிபடவில்லை..
"உன் மடியில நான் படுத்துக்கவாம்மா..?" இறைஞ்சும் குரலில் கேட்டாள் காவ்யா...
"என் மகளுக்கு வயசு திரும்புதாக்கும்..?"
அன்னபூரணி மகளை மடிசாய்த்துக் கொண்டாள்.. தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்ட மகளின் முடி கோதி விட்டவளின் முகத்தில் தாய்மையின் பரிவு பொங்கி வழிந்தது...
தாயின் இடுப்பை வளைத்திருந்த காவ்யாவின் மனதில் தவிப்புப் பெருகியது.. கட்டுக் காவலுடன் வளர்ந்த மகளின் மனதில் எந்த யூதம் புகுந்திருக்கிறது என்பதை அறிந்தால்.. அன்னை என்ன சொல்லுவாளோ... என்று அவள் மனம் நொந்தாள்...
ஒருவழியாக மகளைத் தட்டிக் கொடுத்துத் தூங்கப் பண்ணிவிட்டு கீழே இறங்கிப் போன அன்னபூரணி.. எதிரே படியேறிவந்த மகனிடம்...
"ஆளுதான் வளந்திருக்கா.. ஆனாலும்.. இன்னும் பச்சப்புள்ளயாட்டம்தான் இருக்கா.. இவளக் கல்யாணம் கட்டிக் கொடுத்தா போகிற வீட்டில எப்படித்தான் குப்பை கொட்டப் போறாளோ..." என்று அங்கலாய்த்தாள்...
"அதுக்காக.. கல்யாணம் பண்ணாமலே நாம வைச்சிருக்க முடியுமா..?" என்றான் கண்ணதாசன்...
"கண்ணா.. நீயாடா இதைச் சொல்ற...?"
அத்தனை நாள்களாக தங்கையின் திருமணப் பேச்சை எடுத்தாலே அதைத் தள்ளிப்போட்டு விடும் மகனைப் பூரிப்புடன் பார்த்தாள் அன்னபூரணி...
"நான் தான் சொல்றேன்..." என்ற கண்ணதாசனின் மனதில் சஞ்சலம் தோன்றியிருந்தது.. அவன் முகம் பார்ப்பதை தவிர்த்த தங்கையின் முகத்தில் புதிதான எதையோ கண்டிருந்தான் அவன்...
'இவ பழைய காவ்யாவா இல்ல..'
நிச்சயத்துடன் அவன் நினைத்தான்.. பழைய காவ்யா அவளுடைய அண்ணனை முறைப்பாள்தான்.. ஆனால் அவன் பார்வையைச் சந்திக்க அஞ்ச மாட்டாள்.. எடுத்தெரிந்து பேசுவாள்தான்.. அந்தப் பேச்சை யோசிக்காமல் பேசுவாள்.. இப்படி பேசமுடியாமல் திக்கித் திணற மாட்டாள்...
'என்னவோ நடந்திருக்கு...'
அவன் சஞ்சலத்துடன் தங்கையின் அறைக்கதவைப் பார்த்தான்.. அது அவளின் மனத்தைப் போலவே இறுக்கமாக மூடியிருந்தது..
மூடப்பட்டிருந்த தங்கையின் மனதிற்குள் ஒளிந்திருக்கும் எண்ணங்கள் என்னவாக இருக்கக்கூடும் என்ற சிந்தனையுடன் அவன் தூங்கப் போனான்..
தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது காவ்யா மட்டும்தான்..
படுத்தவுடனே உறங்கி விடுவதற்கு வரம் கிடைத்திருக்க வேண்டும்.. அந்த வரம் சில மாதங்களுக்கு முன்பு வரை காவ்யாவுக்கு கிடைத்திருந்தது.. இப்போதோ.. அந்த வரத்தை தொலைத்து விட்டவளாக.. தூக்கத்தை தொலைத்து விட்டு.. அவள் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறாள்...
எப்போது அவளின் தூக்கம் தொலைந்து போனது என்பதை நினைத்துப் பார்த்தாள் காவ்யா...
என்று அர்ஜீன் என்ற கம்பீரமான ஆண் மகனை அவள் சந்தித்தாளோ.. அன்றிலிருந்துதான் அவளின் தூக்கம் தொலைந்து போனது என்பதை அவள் மனம் ஒர் அதிர்வுடன் நினைத்துப் பார்த்தது...
'எவ்வளவு தைரியமா என்னைத் தொட்டுட்டான்...'
அவள் உடல் நடுங்கியது.. அர்ஜீன் தொட்ட அந்த வினாடிகளில் உறைந்து போனவளால் படுக்க முடியவில்லை.. எப்படி அன்னபூரணியின் கைகளால் சமைக்கப்பட்ட சுவை மிகுந்த சாப்பாட்டை அவளால் உண்ண முடியாமல் போனதோ.. அதைப் போல.. திறந்திருந்த ஜன்னலின் வழியாக வந்த தென்றல் காற்றின் குளுமை அறை முழுவதும் நிரம்பியிருந்தும் அவளால் தூங்க முடியாமல் போனது...
'தூண்டிற் புழுவினைப் போல் - சிறு
             சுடர் விளக்கினைப் போல்
    நீண்ட பொழுதாக
             என் நெஞ்சம் துடிக்குதடி...'
மனதிற்குள் பாரதியின் பாடல் ஒலித்தது... எழுந்து ஜன்னலருகே சென்றாள்.. கம்பிகளில் சாய்ந்தாள்.. கட்டுக்குள் அடங்காமல் தறிகெட்டுப் பாயும் மனதை அடக்க முடியாதவளாக கண்ணீரைப் பெருக்கியபடி.. அன்றைய மாலை நேரத்து மயக்கத்தின் நினைவில் புதைந்து போனாள்...
அவளைத் தொட்டு இழுத்து.. முரட்டுத்தனமாக கட்டித்தழுவி.. அவளுடைய உதடுகளில் தன் உதடுகளைப் பதித்து அழுத்தமான முத்தத்தை அர்ஜீன் கொடுத்தபோது காவ்யா நிலை குலைந்து போனாள்...
'என்ன..? இவன் என்ன செய்கிறான்..?'
அவள் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொள்வதற்குள் அர்ஜீன் முன்னேறி விட்டான்.. அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் பதித்தான்...
காவ்யா உடல் நடுங்கிப் போனாள்.. கழுத்தில் உணர்ந்த அவன் மூச்சுக் காற்றின் வெப்பம்.. நடந்து கொண்டிருப்பது கனவல்ல.. நனவு.. என்பதை அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது..
அவள் என்ன செய்ய வேண்டும்..?
யோசிக்க திராணியில்லாமல் அவள் மூளை செயலற்று அந்த நொடியின் மயக்கத்தில் கலந்து நின்ற போது.. முகம் விலக்கிய அவன்.. அவள் முகத்தை கைகளில் ஏந்தி.. அவள் முகமெங்கும் ஆவேசமான முத்தங்களைப் பதித்தான்...
காவ்யா அலைமேல் துரும்பானாள்.. அனல் மேல் மெழுகானாள்.. அவன் கை தொட்டவுடன் விலக்கி விட முடியாமல் தொய்ந்து.. பற்றுக்கோட்டைத் தேடும் கொடிபோல அலைக்கழிந்து அவன் மீதே சரிந்தாள்..
"காவ்யா.." வெற்றியாளனாக அவன் அவள் காதுகளில் முணுமுணுத்தான்..
"நானாக நானில்லைடி..."
இதுஎன்ன.. அவள் சொல்ல வேண்டிய வார்த்தைகளை அவன் சொல்லுகிறானே என்றிருந்தது அவளுக்கு...
"உன்னை எனக்கு அந்த அளவுக்கு பிடிச்சிருக்குடி.. நீயில்லாம நானில்லைன்னு நினைக்கிற அளவுக்கு பிடிச்சிருக்கு.. உன்னைத் தேடித்தான் மதுரைக்கு நான் ஓடி வருகிறேண்டி.. நீ எனக்கு வேணும் காவ்யா..."
அவள் காதோரமாக கிசுகிசுத்த அவன் குரலில் காற்றில் கரையும் கற்பூரமாக அவள் கரைந்து கொண்டிருந்த போது.. அவன் அவளை விடுவித்தான்.. தடுமாறி நின்றவளின் கலைந்த முடியை சீர்செய்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்..
"நான் போகனும்.. இல்லேன்னா தேவையில்லாத சந்தேகம் வரும்.." அவள் கன்னத்தில் தட்டினான்...
"இன்னைக்கு இதைச் சொல்லியே ஆகனும்னு நான் தீர்மானிச்சிருந்தேன் காவ்யா.. கண்ணாமூச்சி விளையாட்டு போதும்.. எனக்கு நீ வேணும்.. என் காதலியா.. எனக்கே உரிமையானவளா.. என்னைத் தேடி.. இந்த மதுரையில எனக்காக நீ காத்திருக்கனும்.. அந்த நினைவோடு உலகத்தின் எந்த மூலையில் நான் இருந்தாலும்.. உன்னைத் தேடி ஓடி வரனும்டி.."
அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவன் போய் விட்டான்.. புயலில் சிக்கிய பூங்கொடியாய் அதிர்ந்து போனவளாக காவ்யா உட்கார்ந்து விட்டாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -36
எங்கிருந்தோ ஆசைகள். -36
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-36.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-36.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy