எங்கிருந்தோ ஆசைகள். -33

33 நினைவாலே பயனில்லையென்றாலும்... உனை நினைக்க ஆசைகொண்டேன்... எட்டாத உயரத்துக்கு ஆசைப்படக் கூடாதுதான்.. அதற்காக அதை நினைத்துப் ப...


33
நினைவாலே பயனில்லையென்றாலும்...
உனை நினைக்க ஆசைகொண்டேன்...


எட்டாத உயரத்துக்கு ஆசைப்படக் கூடாதுதான்.. அதற்காக அதை நினைத்துப் பார்க்கவும் கூடாதா...?
கனவுகள் எதற்காக இருக்கின்றன..? நடக்க முடியாத நிகழ்வுகளை கனவுகளில் வாழ்ந்து மகிழத்தானே இருக்கின்றன..?
தொட்டு விட முடியாது என்று நினைத்திருந்தால் அன்று சூடிக் கொடுத்த சுடர்கொடி.. கார்மேக வண்ணன் மீது ஆசை கொண்டிருக்க மாட்டாளே.. எட்டாத உயரம் என்று பரந்தாமனை அவள் நினைத்தாளா..? அந்த ஆண்டவனையே தன் காதலால் ஆண்ட அந்த ஆண்டாள் கனாக் கண்டாளே.. அந்தக் கனாக்களுக்கு பெரியாழ்வார் தடை விதித்தாரா..?
வாரணமாயிரம் சூழ வலம் வந்து.. நாராயணனை நம்பி அவள் கனவில் நடந்தாளே.. அந்தக் கனவுக்கு யாரிடம் அவள் அனுமதி கேட்டாள்..? எழில் பூரணமாய் பெற்குடமும் கண்டாளே.. அந்தக் கனவின் நிறைவை யாரால் கொடுக்க முடியும்..? தோரணம் ஆடிட அவள் கண்ட கனவை.. அதிலிருந்த காதலின் நிச்சயத்தை அந்த பரமாத்மா உணர்ந்ததினால்தானே.. தன்னுடன் அவளைச் சேர்ந்துக் கொண்டான்...
காவ்யா ஆண்டாளில்லைதான்.. ஆண்டாளிடம் இருந்த மாறாத காதல்.. நாராயணனின் மீது அவள் கொண்டிருந்த நேசம்.. காவ்யாவிடம் இல்லைதான்.. அது போன்ற தீவிரமான காதலை அவள் அர்ஜீனின் மீது வைக்க வில்லைதான்...
அவளுக்குத் தெரியும்.. அவன் வேறு.. அவள் வேறு என்பது.. மனதை அதன் போக்கில் விட்டு விடக் கூடியவள் அவளல்ல.. நிறைவேறாது என்ற தெரிந்த பின்பும்.. நிச்சயமில்லாத ஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்வதால் யாதொரு பலனும் ஏற்படப் போவதில்லை என்பதை அவள் அறிவாள்...
ஆனாலும்.. எங்கிருந்தோ ஆசைகள் வந்து அவளது இளம் மனதில் மையம் கொள்வதை அவளால் தடுக்க முடியவில்லை...
அர்ஜீனின் ரகசியப் பார்வைகளைச் சந்திக்கும் போது அவளின் காதுமடல் சூடாவதின் காரணத்தை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை...
அவன் அருகில் வந்தால் அவளின் உடலில் ஏற்படும் நடுக்கத்தை அவளால் இனம் காண முடியவில்லை...
அவளே சொல்வதைப் போல அவள் மதுரையில் பிறந்து வளர்ந்த மதுரைக்காரி.. நேர்கொண்ட பார்வையுடன் இருந்த தைரியசாலி.. இளம்வயது ஆண்களுடன் அதிகமாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல் விலகி நிற்கும் அழுத்தக்காரி...
அப்படிப்பட்ட காவ்யா.. அர்ஜீனின் வரவை ரகசியமாக மனதுக்குள் எதிர்பார்க்கிறாள்.. அவனின் பார்வைகளில் உடல் சூடேற.. கன்னம் சிவக்கிறாள்.. அவன் பார்வைகளுக்கான பதில் பார்வைகளை அனுப்பியும் வைக்கிறாள்.. அவன் அருகில் வந்தால் கிறங்கிப் போகிறாள்.. அவளது தோற்றத்தை ரசிக்கும் அவனின் பிரத்யேக மையல் பார்வையில் மயங்கிப் போகிறாள் என்றால்.. இதை என்னவென்று அவள் சொல்லுவாள்..?
அவனுடன் சேர்ந்து வெளியில் செல்லப் போகும் சில மணி நேரங்களுக்காக.. இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லையென்றால்.. இந்தக் கொடுமையை அவள் யாரிடம் போய் சொல்லுவாள்..?
அன்னபூரணியிடம் சொன்னால்.. அவள் அடுத்த நொடியிலேயே மகளை வீட்டுக்குள் சிறைவைத்து.. ஏதாவது ஒரு மீசைக்கார மாப்பிள்ளையின் கையில் அவளைப் பிடித்துக் கொடுத்து விடுவாள்...
கண்ணதாசனிடம் சொன்னால்.. அவன் ஒரு பார்வையிலேயே நீயா இதைச் செய்தது..? இதற்காகவா நான் உனக்காக போராடி நீ வெளியில் சென்று வர அனுமதி வாங்கித் தந்தேன் என்று கேட்டு அவளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுவான்..
சிவதாணுவிடம் சொன்னால்.. அவர் திருக்குறளிலிருந்து அந்தச் சூழ்நிலைக்கு பொருத்தமான குறளைச் சொல்லி உபதேசம் பண்ண ஆரம்பித்து இதற்கு அன்னபூரணியின் அராஜகமே தேவலை என்று நினைக்க வைத்து விடுவார்...
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பயந்துதான் காவ்யா அவள் மனதை இறுக்கிப் பூட்டி வைத்திருந்தாள்.. அதன் திறவுகோல் அர்ஜீனின் வசத்திலிருக்கும் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லையே...
அவள் மனதை திறக்கும் வல்லமை படைத்த ஆண்மகனை அதுநாள் வரை அவள் சந்தித்ததே இல்லை.. அப்படிப்பட்ட கம்பீரத்தோடு அர்ஜீன் மகராஜன் வந்தாலும் வந்தான்.. காவ்யாவின் பஞ்சு போன்ற மென்மையான மனதில் காதல் தீ பற்றி விட்டது...
அவள் அதை உணர்ந்தும்.. உணராதவளைப் போல மனதை இறுக்கிப் பிடிக்க முயன்றாள்.. அது அகப்படுவேனா என்று சண்டித்தனம் செய்தது.. மெல்ல.. மெல்ல.. மனதை தன் வசப்படுத்துவதற்குப் பதிலாக.. மனதின் வசம் அவள் அகப்பட்டுக் கொண்டிருந்தாள்..
    'யாரோ ஒருவன்.. புரவியில் வந்தான்...
             என் மனதைப் புரட்டிப்போட்டு...
    தீயாய் அதை ஆக்ரமித்தான்...
             அந்தத் தீயின் வெம்மையில்..
    என் மனம் கருகாமல்.. சருகாக ஆகாமல்..
             மலர்ந்து சிலிர்க்கிறதே.. ஏன்..?'
அவள் மனதின் ரகசிய உணர்வுகளை.. மிக.. மிக.. ரகசியமாக டைரியில் வடித்தாள்.. ஏதோ தவறு செய்து விட்டவளைப் போல அதை புடவைகளுக்கு அடியில் ஒளித்து வைத்தாள்...
இதையெல்லாம் அன்னபூரணி அறிவாளா..?
அப்படிப்பட்ட ஒருவனுடன் அருகிலிருக்கும் அழகர் கோவில்வரை போய்விட்டு வருவதை மகள் எந்த அளவுக்கு விரும்புகிறாள் என்பதை அறியாமல் அவள் அனுமதி கொடுத்து விட்டாள்...
"பாத்து.. சூதானமா போயிட்டு வரனும்.. பொம்பளப் புள்ளகள பொத்தி வளக்கிறது.. உங்களுக்கெல்லாம் தப்பாத்தான் தோனும்.. பொழுது விடிந்து... பொழுது போகிறவரைக்கும்.. நாட்டுக்குள்ள நடக்கிற ஆக்கிரமத்தில முக்காவாசி.. பொம்பளப் புள்ளகளுக்கு நடக்கிற கொடுமதான்.. அதனால சுதந்திரம் அது இதுன்னு பினாத்தாம.. வெள்ளனாவே வீடு வந்து சேரப் பாரு..." அன்னபூரணி தீர்மானமாகச் சொல்லி விட்டாள்...
பலாத்காரத்தில் இறந்து போன பெண்களைப் பற்றிச் சொல்லிச் சொல்லியே.. திரும்பவும் பெண்களை வீட்டுக்குள் சிறை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.. என்று வேதனையுடன் நினைத்துக் கொண்டாள் காவ்யா...
இன்னும் எத்தனை காலம்தான் இந்தக் கொடுமை நீடிக்கும் என்ற நினைவோடு.. கையிலிருந்த சொற்ப நகைகளைப் போட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள்.. தேவதை போல் தெரிந்தாள்...
அன்னபூரணியிடம் சொல்லிக் கொண்டபோது.. அவள் மகளின் அதீத அழகைக் குறித்த கவலையில் ஆழ்ந்தாள்.. கண்ணதாசன் விழிகளில் யோசனையுடன் தலையை அசைத்தான்...
"பாவனா வீட்டிலே டிராப் பண்ணவா..?" என்று கேட்டான்..
மறுத்தால் அவன் ஏதாவது நினைத்துக் கொள்வான் என்ற பயத்துடன் காவ்யா சம்மதமாக தலையை அசைத்தாள்..
அவளுக்கா அவளுடைய அண்ணனின் மனம் தெரியாது..? காவ்யா பாவனாவுடன்தான் அழகர் கோவிலுக்குப் போகப் போகிறாளா என்பதை அவன் உறுதி படுத்திக் கொள்ள முனைகிறான்...
அவன் ஆசையைக் கெடுப்பானேன் என்ற எண்ணத்துடன் தான் காவ்யா கண்ணதாசனின் காரில் ஏறிக் கொண்டாள்.. அவள் நினைத்ததுதான் நடந்தது.. கண்ணதாசன் வாசலோடு போய் விடாமல் பாவனாவின் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டான்..
"வாங்க.. வாங்க.." பரபரப்பாக வரவேற்றாள் பாவனா..
அவள் கண்களில்.. கண்ணதாசனின் இனத்தில் பிறக்காமல் போய் விட்டோமே என்ற ஆற்றாமை அப்பட்டமாகத் தெரிந்தது..
"காவ்யாவும்.. நீங்களும் பழமுதிர்சோலைக்குப் போகப் போறிங்களாமே.. காவ்யா சொல்லுச்சு.." என்றான் கண்ணதாசன்..
"பழமுதிர்சோலையில்லையே.. அழகர் கோவில்..." என்றாள் பாவனா...
"ரெண்டும் ஒன்னுதானே.. மலையடிவாரத்தில் அழகர் கோவில்... மலையேறினா பழமுதிர்சோலை.. நீங்க இன்னமும் ஓசுர்காரங்களாவே இருக்கறிங்க போல.." கண்ணதாசன் லேசாகச் சிரித்தான்...
"மதுரைக்காரியாய் மாறனும்னும்கிற ஆசை.. மலையளவுக்கு என் மனசில இருக்குது.. அதுக்கான கொடுப்பினைதான் எனக்கு இருக்கா.. இல்லையான்னு தெரியலை.." பூடகமாக பேசி வைத்தாள் பாவனா...
கண்ணதாசன் உடனே கைக்கடிகாரத்தை பார்த்து வைக்க.. காவ்யாவுக்கு சிரிப்பு வந்தது...
'இவன் இதுக்கெல்லாம் மசிய மாட்டான்.. பாவனா மத்தவங்களப் போல இவனையும் நினைச்சிட்டா போல..'
"என்ன சார் வாட்சைப் பாக்கறிங்க..?" ஏமாற்றத்துடன் கேட்டாள் பாவனா...
"வாட்சை எதுக்குப் பார்ப்பாங்க..? டைம் பாக்கத்தான பாப்பாங்க..." கண்ணதாசன் புருவங்களை உயர்த்தினான்..
"உட்காருங்க.. அம்மா.. அப்பாவைக் கூப்பிடறேன்.."
"அவங்களை எதுக்காக சிரமப் படுத்தறிங்க..?"
"இது ஒரு சிரமமா..?"
"வேண்டாம்.. அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. நான் கிளம்பறேன்.. காவ்யா பத்திரம்.."
"கவலையே படாதீங்க.. உங்க தங்கையை என் கண்ணுக்குள்ள வைச்சு நான் பாத்துக்கறேன்.."
"அதெல்லாம் வேணாம்ங்க.. உங்களுக்கு கண் வலிக்கும்.. கண்ணுக்கு பக்கத்திலேயே வைச்சுப் பாத்துக்கங்க.." சிரிக்காமல் சொன்னான் கண்ணதாசன்..
"அட... உங்களுக்கு ஜோக் அடிக்கக் கூடத் தெரியுமா..?" இமை கொட்டி விழித்தாள் பாவனா..
இதற்கெல்லாம் நான் அயரமாட்டேன் என்பதைப் போல அழுத்தமான பார்வையொன்றை வீசிய கண்ணதாசன்..
"ஆட்டோவிலதான போறிங்க..?" என்று இயல்பாக கேட்பதைப் போலக் கேட்டு விட்டான்...
கண்ணதாசனிடம் பேசிக்கொண்டிருக்கும் உற்சாகத்தில் பாவனா உண்மையைச் சொல்லி விடாமலிருக்க வேண்டுமே என்று காவ்யா கவலைப் பட்டுப் போனாள்...
நல்ல வேளையாக பாவனா எவ்வளவுதான் கடலை போட்டாலும்.. தோழியைக் காப்பாற்றுவதில் சுதாரிப்பாக இருந்து வைத்தாள்..
"ஊம்..? அதானே எங்க பிளான்..?" என்று கேட்டு காவ்யாவின் வயிற்றில் பாலை வார்த்தாள்...
"நான் வேணும்னா காரில் உங்களை டிராப் பண்ணவா..?" கண்ணதாசன் காவ்யாவை கதிகலங்க வைப்பதிலேயே குறியாக இருந்தான்...
எதனால் அவனுக்கு இவ்வளவு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று காவ்யாவிற்குத் தெரியும்..
முதல்நாள் இரவில் அவள் பூஜையறையில் இரண்டு சீட்டுக்களைக் குலுக்கிப் போட்டு.. எடுத்துப் படித்தாள்.. அது அவளின் வழக்கம்.. முடிவெடுக்க முடியாமல் மனது அலைபாயும் போது காவ்யா அந்த முறையைத்தான் எப்போதும் கையாள்வாள்...
இரு வேறுபட்ட முடிவுகளை காகிதங்களில் எழுதி சுருட்டி கடவுள்களின் திருவுருவங்களின் முன்னிலையில் குலுக்கிப் போட்டு விடுவாள்.. கண்மூடி கடவுள்களிடம் சரியான முடிவைக் கொடு என்று வேண்டி விட்டு... ஒரு சீட்டை எடுத்துக் கொள்வாள்.. கண்திறந்து கையில் எடுத்த சீட்டைப் படித்துப் பார்ப்பாள்.. அதில் வரும் முடிவு எதுவாக இருந்தாலும்.. அதை அப்படியே ஏற்றுக்கொள்வாள்...
முதல் நாளிலும் அவள் அதைப் போல சீட்டுக் குலுக்கிப் போட்டு.. ஒன்றைக் கையில் எடுத்த போது.. கண்ணதாசன் அங்கே வந்துவிட்டான்... அவள் கையிலிருந்த சீட்டை எட்டிப் பார்த்தான்...
'போகலாம்...' என்ற வார்த்தை அதிலிருந்தது...
புருவங்கள் முடிச்சிட.. எடுக்கப்படாமலிருந்த இன்னொரு சீட்டை எடுத்துப் பிரித்துப் படித்தான்...
'போக வேண்டாம்...' என்றிருந்தது...
"என்னம்மா..?" என்று கேட்டான்...
பூஜையறையில் நின்று கொண்டு பொய் சொல்ல காவ்யாவினால் முடியவில்லை.. அவள் தடுமாற்றத்துடன்..
"நாளைக்கு அழகர் கோவிலுக்கு போகிறதா.. வேணாமான்னு சீட்டுக் குலுக்கிப் பாத்தேன்.." என்று சொன்னாள்...
"சின்ன விசயம்.. இதுக்கு எதுக்காக சீட்டுக் குலுக்கிப் போடனும்..?" கண்ணதாசனின் புருவங்கள் உயர்ந்தன..
"சும்மாதான்..."
அதற்குமேல் வார்த்தைகளை வளர்க்காமல் காவ்யா விரைந்து விட்டாள்...
ஆனால் கண்ணதாசன் சமாதானமடைந்து விடவில்லை.. விடிந்த பின்னாலும் தங்கையின் தடுமாற்றம் எதனால் வந்தது என்பதை துப்பறியத் துடிக்கிறான்...
"நீங்க கேட்டா.. நான் மாட்டேன்னா சொல்லுவேன்..?" பாவனா பதிலுக்கு கண்ணதாசனை கலங்கடித்தாள்..
"தோ.. ஒன் அவர்ல கிளம்பி வந்துருவேன்.. நீங்க சோபாவில உக்காரலாம்.. டிவி பார்க்கலாம்.. இல்லேன்னா.. வீட்டைச் சுத்திப் பார்க்கலாம்.. எதை வேணும்னாலும் செய்யுங்க.. இது உங்க வீடு மாதிரி..."
இதை ஒரு மாதிரியான குரலில் அவள் சொன்ன பின்பும் அங்கே உட்கார கண்ணதாசன் என்ன முட்டாளா..? அவன் தங்கைக்காக ஒரு மணிநேரம் என்ன.. பலமணி நேரம் கூடக் காத்திருப்பான்தான்.. அதை பாவனாவின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு செய்ய மாட்டான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -33
எங்கிருந்தோ ஆசைகள். -33
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy