எங்கிருந்தோ ஆசைகள். -32

32 ஊரறியாத என் மனதை... நீயறிய ஆசைகொண்டேன்... காவ்யாவுக்குள் இருந்த ஏக்கம் நிறைந்த ஆசையை நினைத்துப் பார்க்கவும் அவளுக்கு துணிச்ச...


32
ஊரறியாத என் மனதை...
நீயறிய ஆசைகொண்டேன்...


காவ்யாவுக்குள் இருந்த ஏக்கம் நிறைந்த ஆசையை நினைத்துப் பார்க்கவும் அவளுக்கு துணிச்சல் வரவில்லை.. கோடு தாண்டாமல் வாழ வேண்டிய வாழ்க்கையைத்தான் அன்னபூரணி மகளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தாள்.. இன்றோ அந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் அர்ஜீன் நிற்கிறான்.. இந்தப் பக்கம் காவ்யா நிற்கிறாள்.. கோட்டைத் தாண்டச் சொல்லி அவளின் உள்ளம் தூண்டுகிறதே...
'இது நான்தானா..?' தூக்கம் வராமல் புரண்டாள் காவ்யா...
"நானே.. நானா..?
             யாரோதானா..?
    மெல்ல மெல்ல..
             மாறினேனா..?
    தன்னைத் தானே.. மறந்தேனே..
             என்னை நானே.. கேட்கிறேன்.."
அவளின் தலையனையின் ஓரமாக கிடந்த கைரேடியோவின் எப்.எம்மில் பாடல் ஒலித்தது...
காவ்யாவுக்கு பாட்டுக் கேட்கப் பிடிக்கும்.. இரவு உணவுக்குப் பின்னால்.. தூங்கப் போகும் போது பாடலை ஒலிக்க விட்டு தலையணைக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்வாள்.. பாடலைக் கேட்டபடி.. கண்களை மூடி.. மெல்லத் தூங்கிப் போவாள்.. இரவின் மடியில் இதமான பாடலின் தாலாட்டோடு தூங்கிப் பழக்கப்பட்டவள் அவள்..
"ஒருவன் நினைவிலே...
             உருகும் இதயமே...
    இதோர் துடிப்பு..."
காவ்யாவின் மனதை படம் பிடித்துக் காட்டியது அந்தப் பாடல்... அந்தப் பாடல் சொன்ன உண்மையில் காவ்யாவின் இதயமும் துடித்தது...
"உலர்ந்த உதடுகள்..
             தனிமைக் கவிதைகள்...
    இதோர் தவிப்பு..."
தலையனையில் தலையை உருட்டித் தவித்தாள் காவ்யா...
"பருவ வயதிலே...
             இரவும் பகலும்..
    நிலவும் நரகம்...
             சலனம்.. சலனம்..."
சட்டென்று எழுந்து அமர்ந்த காவ்யாவின் மனம் அவளைச் சுட்டது...
இந்தச் சலனம்தான் அவளை ஆட்டிப் படைக்கிறதா..?
எங்கிருந்தோ வந்தவனால் அவளுக்குள் மூண்ட ஆசையின் கனலில் அவள் துடித்துத் தவித்தாள்...
பாவனா அர்ஜீனைப் பற்றிப் பேசினால்.. இவளுக்கு எதற்காக கோபம் வரவேண்டும்..?
'வேண்டாம் காவ்யா.. விட்டுவிடு.. உன் மனதை இழுத்துப்பிடி..'
கண்களை மூடியவள்.. திரும்பத் திரும்ப மனதுக்குள் நினைத்தபடி தூங்கிப் போனாள்...
இளங்கோவின் திருமணம் அழகர் மலையில் நடப்பதாக இருந்தது.. கடையில் வேலை செய்தவர்களை அர்ஜீனின் அறைக்கு வரும்படி அவன் அழைப்பு விடுத்தான்..
"என்னவா இருக்கும்...?"
ஆளாளுக்கு சந்தேகம் கேட்டபடி அவர்கள் அர்ஜீனின் முன்னால் கும்பலாக நின்றார்கள்.. பாவனா காவ்யாவின் அருகே போய் உட்கார்ந்து கொண்டாள்...
'இதுதான் சாக்குன்னு இவ இவனை சைட் அடிக்க ஆரம்பிச்சிருவாளே...'
என்னதான் இரவு முழுவதும் ஜெபித்தாலும்.. விடியற்காலையில் இது போன்ற எண்ணம் வந்து சேருவதை காவ்யாவினால் தடுக்க முடியவில்லை..
வந்திருந்தவர்களை தோரணையாய் பார்த்த அர்ஜீன்.. டேபிளின் மீதிருந்த உருண்டை வடிவத்திலான கண்ணாடி டேபிள் வெயிட்டை உருட்டியபடி பேச ஆரம்பித்தான்...
அதை பாவனா ரசித்து.. காவ்யாவின் காதோரமாக ரசனையைப் பகிர்ந்து கொண்டாள்...
"வாவ்..! என்னமா பில்ட் அப் கொடுத்து பேச ஆரம்பிக்கிறான்டி.. சூப்பர் ஸ்டார் கூட இந்த மாதிரி போஸ் கொடுத்திருக்க மாட்டார்..."
'நீ இதுக்குத்தான் வந்திருக்க...' காவ்யா பல்லைக் கடித்தாள்..
"நம்ம கடையில வொர்க் பண்ற இளங்கோவுக்கு கமிங் வெனஸ்டேயில மேரேஜ் நடக்கப் போகுது.. இது உங்க எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான்..."
அர்ஜீன் நிதானமாக பேசியபடி காவ்யாவை ஒர் பார்வை பார்த்துக் கொண்டான்.. அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது...
"இவன் எதுக்குடி இப்ப உன்னைப் பாத்து வைக்கிறான்..?" பாவனா சந்தேகம் கேட்டாள்...
'விட மாட்டியே..' காவ்யாவுக்குள் எரிச்சல் வந்தது..
"ஏண்டி.. எல்லோரையும் பாத்துத்தான பேச முடியும்..?"
"அந்த எல்லோருமில.. நானும் ஒருத்திதான..? என்னை ஏன் பார்க்கலை..?"
"அதை அங்கே கேளு..."
காவ்யா அர்ஜீனின் பக்கம் கை காட்ட.. சரியாக அதே  சமயத்தில் காவ்யாவை பார்த்து வைத்த அர்ஜீனின் கண்களில் காவ்யாவுக்கான பிரத்யேக மின்னல் வந்தது...
"அந்த மேரேஜீக்கு நாம் போகனும்..." அர்ஜீன் காவ்யாவை பார்த்தபடி பேச்சைத் தொடர்ந்தான்..
"ஆமாம் சார்..." எல்லோரும் ஒன்று போல தலையாட்டினார்கள்..
"எப்படிப் போவிங்க..?"
அர்ஜீனின் கேள்வியில் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
"அவங்கவங்களுக்கு எப்படித் தோதோ... அப்படிப் போவோம்சார்..." தங்கராஜ் சொன்னான்..
"அப்படின்னா..?"
"சைக்கிள் வைச்சிருக்கவங்க சைக்கிள்ல போவாங்க.. டிவிஎஸ் பிப்டி வைச்சிருக்கவங்க அதில போவாங்க.. ரெண்டும் இல்லாதவங்க பஸ்ஸில போவாங்க.." கந்தசாமி விளக்கினார்..
"லேடிஸ் எப்படிப் போவாங்க..?" அர்ஜீன் காவ்யாவின் பக்கம் முழுவதுமாக திரும்பி விட்டான்...
"உன் பக்கம் திரும்பிக்க இவனுக்கு இது ஒரு சாக்கு..." பாவனா பொறாமைப் பட்டாள்...
"ஸ்ஸ்.. உளராம அங்கே கேட்கிறதுக்கு பதிலைச் சொல்லு..."
"அதுவும் சரிதான்.. மதுரையோட வரலாற்றைப் பற்றிக் கேட்டாத்தானே என்னால சொல்ல முடியாது..? இதுக்குப் பதிலை சொல்லனும்னா.. அல்வா சாப்பிட்டதைப் போலல்ல இருக்கும்..."
மகிழ்ந்து போன பாவனா.. காவ்யாவிடம் அர்ஜீன் கேட்டதற்கான பதிலைச் சொன்னாள்...
"நாங்க ரெண்டு பேரும் ஆட்டோ பிடிச்சு போய் வந்திருவோம் சார்.. அவ்வளவு தூரத்துக்கெல்லாம்.. டூவீலர்ல போய் வாரதுக்கு காவ்யா வீட்டில சம்மதிக்க மாட்டாங்கசார்..."
பாவனாவின் பேச்சிலிருந்து காவ்யாவின் கட்டுக் காவலை புரிந்து கொண்டவனுக்கு அவள்மீது இரக்கம் சுரந்தது.. அவன் உலகமே வேறு.. அங்கே ஆண்.. பெண் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் இரவு பகல் பார்க்காமல் ஓடிக் கொண்டிருப்பார்கள்...
அப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பனுக்கு.. சில கிலோ மீட்டர் தொலைவுக்கு கூட.. தனிமையில் செல்ல முடியாத காவ்யாவைப் பார்த்து ஆச்சரியம் வந்தது...
"ஓகே.. நான் சொல்ல வந்தது இதைத்தான்.. யாரும் தனித்தனியாப் போக வேண்டாம்.. சேர்ந்தே போகலாம்..."
"முதலாளி..? !..."
"யெஸ் கந்தசாமி.. நம்ம வொர்க்கர்ஸ் இளங்கோவுடைய மேரேஜீக்கு போய் வருகிறதிற்காக.. வேன் ஒன்றை அரேன்ஜ் பண்ணிரலாம்.. நானும் உங்ககூட வரப்போகிறேன்.. ஸோ... வேனில் எல்லா வசதியும் இருக்கனும்.. காவ்யா..."
"சார்...?"
"ஏதாவது ஒரு டிராவல்ஸீக்கு போன் பண்ணி.. இருக்கிறதிலேயே பெஸ்ட் குவாலிஃபைடா ஒரு வேனை புக் பண்ணுங்க.. க்விக்..."
அர்ஜீன் சொன்னதைச் செய்தாள் காவ்யா.. அழகான சொகுசு இருக்கைகள் கொண்ட.. ஏஸி வேன் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.. கடையில் வேலை செய்தவர்கள் குஷியாகிப் போனார்கள்.. அழகர்மலைக்கு சுற்றுலா போவதைப் போன்ற உற்சாகம் அவர்களுக்குள் தொற்றிக் கொண்டது...
"அசத்தறாண்டி..."
அதற்கும் பாராட்டி.. காவ்யாவின் கடுப்பைக் கிளப்பினாள் பாவனா...
அனைவரையும் அவரவர் வீட்டு வாசலுக்கே சென்று அழைத்துக் கொள்ளலாம் என்று அர்ஜீன் சொல்ல.. அவசரமாக அதை மறுத்தாள் காவ்யா...
"நான் பாவனாவோட வீட்டுக்கு வந்திடறேன் சார்.."
'ஏன்..? இவ வீட்டுக்கு நான் போகக் கூடாதா..?'
அர்ஜீனின் முகம் கருத்தது.. புருவங்கள் முடிச்சிட்டன.. அவளை கோபப் பார்வை பார்த்தான் அவன்.. காவ்யா அசைந்து கொடுக்கவில்லை..
"இவளுக்கு பிராப்ளமிருக்கு சார்.. வேனில நாம எல்லாரும் போயி நின்னா.. இவ அம்மா.. இவளை நம்மகூட அனுப்பிவைக்க மாட்டேன்னு சொல்லிருவாங்க.." பாவனா அவனை சமாதானப் படுத்தினாள்...
அவளை அழைத்துச் செல்லும் சாக்கில் காவ்யாவின் வீட்டில் உள்ளவர்களிடம் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அர்ஜீனின் எண்ணம் நிறைவேறவில்லை.
"ஓகே.. உங்க விருப்பம்..." ஏமாற்றத்தை மறைத்து தோள் குலுக்கினான் அவன்..
"என்ன ஸ்டைல்..!" பாவனா ரசித்தாள்...
இளங்கோவின் திருமண நாளும் வந்தது.. என்னவோ அர்ஜீனுடன் இன்பச் சுற்றுலாவிற்குப் போகப் போவதைப் போன்ற பரபரப்பில் காவ்யா இரவு முழுவதும் தூங்கவே-யில்லை.. மறுநாள் விடிவதற்கு முன்னாலேயே எழுந்து.. குளித்து முடித்து.. கேரளாப் பக்கத்து புடவைகளை நினைவுறுத்தும்.. சந்தன நிற வெண்மையும்.. ஜரிகைக் கரையிட்ட பார்டருமான அழகிய சேலையை உடுத்திக் கொண்டாள்...
அவளுக்கு அந்தச் சேலையை பிடிக்கும்.. அவளின் சிவந்த நிறத்திற்கு.. அழுத்தமான வண்ணம் கொண்ட சேவைகள்தான் பாந்தமாக பொருந்தியிருக்கும் என்று அன்னபூரணி சொல்லுவாள்.. ஆனாலும்.. காவ்யாவின் பார்வை லேசான வண்ணங்களின் மீதே இருக்கும்...
உடல் முழுவதும் ஜரிகைப் புள்ளிகளைக் கொண்ட புடவைக்கு பொருத்தமாக.. ஜரிகையின் வண்ணத்திலேயே கைப்பகுதியில் ஜரிகைக்கரை கொண்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தாள்.. தலைமுடியை தொய்வாகப் பின்னி.. முதல்நாள் மாலையில் தொடுத்து வைத்திருந்த மல்லிகைப் பூச்சரத்தை வைத்துக் கொண்டாள்.. நெற்றியில் அரக்கு வண்ணத்திலான ஸ்டிக்கர் பொட்டு.. வேறு நிறங்களில் வைத்துக் கொண்டால்... அன்னபூரணி பிலுபிலுவென்று பிடித்து ஆய்ந்து விடுவாள் என்பதால் காவ்யா நெற்றிப் பொட்டிற்கு வேறு வண்ணங்களை நினைத்துப் பார்ப்பதில்லை..
நகையில்தான் காவ்யாவுக்குள் லேசான மனச்சிணுங்கல் இருந்தது.. அவளது நகைகள் அனைத்தும்  அன்னபூரணியின் பொறுப்பில் இருந்தன.. உறவினர் வீட்டு விசேசங்களுக்கு போகும் போது மட்டுமே அவற்றை காவ்யா அணிந்து கொள்ள வேண்டுமென்று அவள் கட்டளையிட்டிருந்தாள்.. உடன் வேலை பார்ப்பவனின் திருமணத்திற்கு காவ்யாவை அவள் போக அனுமதித்ததே பெரிது.. அந்த அனுமதியும் கண்ணதாசனின் சிபாரிசினால் கிடைத்திருந்தது...
"போயிட்டு வரட்டுமேம்மா.. கூடவேலை பார்க்கிற பிரண்ட் கூடத்தான போறா.. ஆட்டோவில போயிட்டு ஆட்டோவிலேயே திரும்பி வந்திரப் போறாங்க.. இந்தா இருக்கிற அழகர் கோவிலுக்குக்கூட அவ போகக் கூடாதுன்னு சொன்னா எப்படிம்மா..?"
காவ்யாவுக்கு வேதனை எழும்பத்தான் செய்தது.. இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்கள் அவர்களின் சுதந்திரத்தை இன்னொருவர் பிச்சையிட பெற்றுக் கொள்வார்கள் என்ற வேதனை அவளுக்குள் மண்டியது.. பாதுகாப்பு என்ற போர்வையில் பெண்கள் சிறை படுகிறார்களே.. அதிலிருந்து மீட்சியே கிடையாதா என்ற துக்கம் அவளுக்குள் பொங்கியது...
"என்னமோ போடா கண்ணா.. டெல்லியில ஒரு பொண்ணு கூடப்படிச்ச பையனோட வெளியில் போயிட்டு ஆஸ்டலுக்குத் திரும்பினாளாம்.. அவளுக்கு வந்த கதியைப் பாத்தியா.. முந்தாநாள்கூட திருச்சிப் பக்கம் அதைப் போலவே நடத்திருக்கு.. பொம்பளப்புள்ளயப் பெத்துப்புட்டு.. வயித்தில நெருப்பக்கட்டிக்கிட்டு பொழப்பு நடத்த வேண்டியிருக்கேடா தம்பி.. காலம் கெட்டுக் கிடக்குதே.. இவ வீட்ட விட்டு வெளியில போனா.. திரும்பி வாரவரைக்கும் வதக்கு வதக்குன்னு மனசுக்குள்ள பயம் வந்து அடிச்சுக்குதுடா மகனே.. என் பயத்த யாருகிட்டப் போயி சொல்லுவேன்.. இதுக்குத்தான் காலாகாலத்தில இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிப்புடுன்னு சொல்றேன்.. அதுக்கப்புறம் இவ பாடு.. இவ புருசன் பாடு.."
'அதானே.. என்னப் பாடுபடுத்தற புருசனாப் பாத்துத்தான நீ கட்டி வைப்ப..' மனதுக்குள் வெந்து போனாள் காவ்யா..
இனிமையான கனவு கலைந்ததைப் போல இருந்தது அவளுக்கு.. கிட்டாதாயின் வெட்டென மறக்க வேண்டும் தான்.. அந்த மறக்கிற வேலையை மெதுவாக செய்து கொண்டால் ஆகாதா என்று கேட்டது அவள் மனம்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -32
எங்கிருந்தோ ஆசைகள். -32
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy