எங்கிருந்தோ ஆசைகள். -30

30 மாலை நேரத்து மயக்கத்தையே... உன் மனது உணர ஆசைகொண்டேன்... "மயக்கத்தைத் தந்தவன் யாரடி... ?              மணமகன் பெயரென்ன ...


30
மாலை நேரத்து மயக்கத்தையே...
உன் மனது உணர ஆசைகொண்டேன்...


"மயக்கத்தைத் தந்தவன் யாரடி...?
             மணமகன் பெயரென்ன கூறடி..
    மறைவினில் நடந்ததென்னடி..?
             நீ சொல்லடி.. கதைமாறாமலே.."
பாவனா பாடியதைக் கேட்டதும் காவ்யாவிற்கு கோபம்வந்து விட்டது.. இவளிடம் கையும் களவுமாக எப்படி மாட்டிக் கொள்கிறோம் என்று நினைத்துப் பார்த்தவளுக்கு அது பிடிபடவில்லை...
"ச்சீ.. அசிங்கமாய் பேசாதே..."
"இதைப் பாருடா.. இவ்வளவு நேரமும்.. யாரோ ஒருத்தி.. யாரோ ஒருத்தனின் முகம் பார்த்துக்கிட்டு அசையாம நின்னாளாம்.. அந்த மயக்கத்தைத் தந்தது யாருன்னு கேட்டா.. ச்சீங்கிறாளாம்.. என்ன கொடுமை இளங்கோ...?"
அவர்களைக் கடந்து போன இளங்கோவிடம் பாவனா கேள்வி கேட்க.. அவன் என்ன விவரமென்று தெரியாமலே சிரித்து வைத்தான்...
'இவன்கிட்டப் பஞ்சாயத்து வைக்கிறாளே...'
காவ்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. பாவனாவை அடக்க முயன்றவளாக.. 'ஸ்ஸ்ஸீ..' 'த்ச்சு..' 'ஸ்ஸ்ஸ்..' என்பது போன்ற பல ஒலிச்சமிக்ஞைகளை எழுப்பினாள்.. பாவனாவின் காதுகளில் அவை ஏறினபாடாக இல்லை...
 "என்ன விசயம் பாவனா..?" கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டவனாக இளங்கோ கேட்டான்...
"இளங்கோ என்னன்னு கேக்கிறார்.. சொல்லிரவா காவ்யா..?" பாவனா பீதியைக் கிளப்பினாள்...
"இவளுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு இளங்கோ.. வேற ஒன்னுமில்லை.. நீங்க போங்க.." காவ்யா ஊடே புகுந்து விட்டாள்..
சிநேகிதிகளுக்கு இடையே நிகழும் ரகசிய உரையாடல் அது என்பதை கண்டு கொண்டவனாக இளங்கோ நகர மனமில்லாமல் நகர்ந்து விட்டான்.. இடத்தைக் காலி பண்ணுவதற்காகவே காத்திருந்த காவ்யா.. அவன் தலை மறைந்ததும் பாவனாவின் மீது பாய்ந்தாள்...
"ஏண்டி குரங்கே.. அவனே இஞ்சி தின்ன குரங்கைப் போலப் பல்லைக் காட்டறான்.. அவன்கிட்டப் போயி கட்டப் பஞ்சாயத்து வைக்கிறயே.. உன்னை என்ன செய்தால் தேவலாம்..?"
"இந்தாபாரு.. ஹீரோகிட்ட நான் பேசினா ஏன்னு கேளு.. அதை விட்டுட்டு இஞ்சி திங்கிற குரங்கு கூடக்கூட பேச விடமாட்டேன்னு சொன்னா நல்லாயில்ல.. சொல்லிட்டேன்.."
"அறிவு கெட்டவளே.. அவன் நம்மகிட்ட ஜொள்ளு விடற ஆள்டி..."
"அதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனுமா..? எனக்கே தெரியுமே..."
"தெரிஞ்சம் ஏண்டி அவனை ஊடாலே இழுக்கற..?"
"அவன்கிட்ட பஞ்சாயத்துதானேடி வைச்சேன்..? அதுக்காக அவன் கையைப் பிடிச்சு இழுத்தேன்னு கதை கட்டறியே.. நியாயமாடி..?"
"உன்னை..! ச்சே.. திருத்தவே முடியாதுடி.. நீ எக்கேடோ கெட்டுத் தொலை..."
"அருமையான ஆசிர்வாதம்... இப்படியே மெயின்டெயின் பண்ணு..."
"என்னை எதுக்குடி கிண்டல் பண்ற...?"
"எதுக்குன்னு உனக்குத் தெரியாதா..?"
புருவங்களை உயர்த்தி.. ரகசியச் சிரிப்புடன் கேள்வி கேட்டாள் பாவனா.. காவ்யாவுக்கு என்னவோ போல இருந்தது.. மனதின் உணர்வுகளை பகிரங்கப் படுத்த அவளால் முடியவில்லை.. பொத்தி வைத்த மல்லிகையின் வாசம் வெளியில் கமழலாம்.. அதற்காக பொத்தி வைப்பதை நிறுத்தி விடக் கூடாது...
"உன் கிறுக்குத்தனமான பேச்சுக்கு நான் ஆளில்ல பாவனா.. எனக்கு வேலை கிடக்கு.."
"எனக்கும்தான் வேலையிருக்கு.. நீ என்ன நினைக்கிற..? நீ ஒருத்தி மட்டும்தான் வேலை செய்து சம்பளம் வாங்குகிறன்னு நினைச்சயா...? நானென்ன ஊஞ்சல் கட்டியா ஆடிக்கிட்டிருக்கேன்..?"
"இப்ப என்னாங்கிற..." பொறுக்க முடியாமல் முறைத்தாள் காவ்யா...
"ஒன்னுமில்ல.. ஒரு ஸ்டேட்மென்டில ஹீரோவோட கையெழுத்து தேவைப்பட்டுச்சு.. வாங்கலாம்ன்னுதான் வந்தேன்.. வந்து பார்த்தா..." வார்த்தைகளை முடிக்காமல் கண் சிமிட்டினாள்...
'அவன் எனக்குப் பக்கத்தில வந்து நின்னதை இவ பார்த்திருக்கா...' காவ்யா சங்கடப்பட்டுப் போனாள்...
"தொடலை.. ஆனா தொட்டான்... படலை... ஆனா... பட்டான்... இந்த விடுகதைக்கு விடையென்ன காவ்யா..?" பாவனா கேட்டாள்...
அவளின் கண்களில் தெரிந்த ரகசிய சிரிப்பைக் கண்ட காவ்யாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது...
'அப்பவே நினைச்சேன்.. யாராவது பாத்து வைக்கப் போறாங்கன்னு.. நான் பயந்தபடியே ஆகிருச்சு.. மத்தவங்க பாத்திருந்தாக்கூட ஒன்னுமில்ல.. முதலாளி முக்கியமான ஏதோ ஒன்னை.. கிட்டத்திலே நின்னு சொல்லிக் கிட்டிருந்தார்ன்னு நினைச்சுக்கிட்டு போயிருப்பாங்க.. இவ அப்படியில்லை.. ஓடுகிற ஆத்துத் தண்ணியில.. ஒன்பது சுழிவைக் கண்டு பிடிக்கிற ஆளு.. இனி சும்மாவா இருப்பா...'
பாவனா சும்மாவே இல்லை.. அடுத்து வந்த நாள்களில் அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்... காவ்யா அடித்தாலும் அடங்கவில்லை... அவளின் குடுமியைப் பிடித்தாலும்.. கேலிப்பேச்சை நிறுத்தவில்லை..
"நான் கண்டாலும் கண்டேன்.. உன்னைப் போல ஒருத்தியை உலகத்தில கண்டதில்லைடி.. என்னமா நடிக்கிற..?"
"என்னத்தை நடிச்சேன்..? நீயேண்டி என்னைப் போல ஒருத்தியை தேடிக்கிட்டு இருக்க..? உனக்கு வேற சோலிக் கழுதையே கிடையாதா..?"
"அது எப்படிடீ.. அவ்வளவு கிட்ட வந்து நின்னும்.. உன்னைத் தொடாமலே ஹீரோ மெயின்டெயின் பண்ணினான்.. ஹீரோகிட்ட இந்த வித்தையைப் பத்திக் கேட்கனுமே.."
"ஏய்ய்.."
"ஒரு நூலளவுதாண்டி இடைவெளி இருக்கும்.. அடேங்கப்பா.. ரெண்டு பேருமே சரியான திருடன்.. திருடிங்கடி.."
"பாவனா..."
"ரெண்டு பேரில யாராவது ஒருத்தர் அசைஞ்சிருந்தாக் கூடப் போதும்.. அடுத்தவங்க மேலே உராய்வுதான்.. ஆமா.. உராய்வைப் பத்தி சயின்ஸ் என்ன சொல்லுது..."
"வேணாம்டி..."
"சயின்ஸ்லதாண்டி கெமிஸ்ட்ரி வரும்.. அதைப் போய் வேணாம்ன்னு சொன்னா எப்படி..? ஆமா.. உன் காதோரமாக குனிஞ்சு என்ன செய்தான்..? ஐ மீன்.. என்ன சொன்னான்..?"
"எதையாவது பார்த்துப்புட்டு எக்குத்தப்பா பேசற பிரண்டுகிட்ட இருந்து தள்ளியிருக்கச் சொன்னான்..."
"அம்மணி கரடிக் கதையைச் சொல்றீங்களாக்கும்..? சரியான உவமைதான்.. பூஜை வேளையில கரடியைப் போல வந்து நின்னவ நான்தானே..? எனக்குக் கரடிப் பட்டம் கொடுக்கிறது சரிதான்..."
"உளராதே பாவனா..."
"அதானே.. அதையெல்லாம் நான் ஏன் செய்யனும்..? நானா மயக்கத்தில இருக்கேன்..? மயக்கத்தில இருக்கிறவங்கதான் உளறிக் கொட்டி.. கிளறி மூடனும்.."
அர்ஜீன் முக்கியமான வேலையொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான் என்று காவ்யா சொல்லிப் பார்த்து விட்டாள்... அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்பதற்கு பாவனா தயாராக இல்லை.. அவள் உன்னை நான் அறிவேன் என்ற ஒரே நேர் கோட்டில் நின்று விட்டாள்...
சொல்லிச் சொல்லி அலுத்துப் போன காவ்யாவும் எப்படியோ தொலை என்று விட்டு விட்டாள்.. ஆனால்.. பாவனாவின் கேலி அத்து மீறும்போது.. அவளுக்கு மனம் தாங்காது...
"வேண்டாம் பாவனா.. அவன் யாரோ எவரோ.. மதுரைக்கு கடையை வாங்கினதாலே வந்து போகிறான் நானும் கல்யாணம் ஆகிற வரைக்கும்.. வெளியுலகைப் பார்க்கிறேன்னு வேலைக்கு வந்து... போய்க்கிட்டு இருக்கேன்.. நீ யானைக்கும்.. பூனைக்கும் சம்பந்தம் பேசாதே..."
"அடிப்போடி.. அந்த விண்ணுக்கும்.. மண்ணுக்கும் சம்பந்தமுண்டுன்னு பாட்டே இருக்கு..."
"சினிமாவில் நடக்கிறதெல்லாம் வாழ்க்கையில் நடக்காது..."
"அப்புறம் ஏண்டி.. அவன் உன் பக்கத்திலே வந்து உராயாமல் உன்னை உராய்ந்தான்...?"
"அதை விடவே மாட்டியாடி...?"
"நீ விட்டுட்டியா..?"
பாவனா காவ்யாவின் ஆழ்மனதை தொட்டு விட்டாள்.. அதிர்ந்து விழித்த காவ்யா.. வேலையிருப்பதைப் போல எழுந்து சென்று விட்டாள்.. அவள் மனது பதறியது...
விடவில்லையே.. காவ்யாவின் மனது அதை நினைக்காமல் இருந்ததில்லையே.. அன்று அவன் கேட்டானே...
'நான் பட்டினி கிடந்தா உன்னால தாங்கிக்க முடியலையில்ல..?' என்று..
அவன் அத்தோடு நிறுத்தினானா..? அதற்கு மேலும் கேட்டான்...
"ஏன் காவ்யா...?"
ஏனென்று அவள் எப்படிச் சொல்வாள்..? அவனின் மூச்சுக் காற்றில் அவளின் முடி பறந்த போத.. அவள் மனம் துடித்த துடிப்பை அவளால் அவனிடம் சொல்ல முடிந்ததா..? அவனது ஆண்மை நிறைந்த அண்மையில்.. அவளின் இளம்மனது தறி கெட்டுப் பாய்ந்ததை அவளால் அவனிடம் சொல்ல முடிந்ததா..? காதோரமாக குனிந்த அவனின் மூச்சுக் காற்றின் வெப்பத்தில்.. அவளின் ரகசியக் கனவு குளிர் காய்ந்ததை அவளால் அவனிடம் சொல்ல முடிந்ததா..? அவனிடமிருந்து வெளிப்பட்ட பிரத்யேகமான நறுமணத்தை அவளது நாசி நுகர்ந்து கிறங்கியதை அவளால் அவனிடம் சொல்ல முடிந்ததா..? அவனது முன்னுச்சி முடி கலைந்து சிதறியிருந்ததில்.. அவள் மனது கலைந்து சிதறியதை.. அவளால் அவனிடம் சொல்ல முடிந்ததா..? அவன் கிட்ட வந்து.. முட்டி நின்றபோது.. எங்கிருந்தோ ஆசைகள் வந்து அவளது இளம் மனதில் குடி புகுந்ததை அவளால் அவனிடம் சொல்ல முடிந்ததா..?
எதையும் சொல்ல முடியாமல் கிளர்ந்து தவித்தாள் அந்தப் பேதை...
"நான் சொல்லவா..?" அவன் கிசுகிசுத்தான்...
'வேண்டாம்.. சொல்லாதே...' அவள் மனதுக்குள் அரற்றினாள்...
'நீ எதையாவது சொல்லி வைத்து என் மனதில் ஆசைத் தீயை மூட்டி விடாதே... நான் தாங்க மாட்டேன்.. நீ வேறு.. நான் வேறு...'
"என் பசி உன்னப் பாதிக்குதுன்னா அதுக்கு ஒரேயொரு அர்த்தம்தான் இருக்க முடியும்.." அவன் கிறங்கிப் போன குரலில் சொல்லிக் கொண்டிருந்த போது.. அறைவாசலில் சப்தம் கேட்டது...
அர்ஜீன் சட்டென்று விலகி நின்றான்.. யாரோ வந்து போயிருப்பதை ஆடிக் கொண்டிருந்த வாசல் கதவு உணர்த்தியது.. காவ்யா அதற்குள் சமாளித்துக் கொண்டவளாக.. தன்னுணர்விற்கு மீண்டு விட்டாள்.. அழகான நாதத்திற்கு.. இடையே தடை ஏற்பட்டு விட்ட உணர்வுடன் அர்ஜீன் எரிச்சலானான்...
"யார் வந்து போனது..?"
"எனக்கென்ன தெரியும் சார்..? இது கடை.. பலபேரு வந்து போகிற இடம்.. அதை மறந்திரக்கூடாது..."
வரவழைத்துக் கொண்ட கடுமையுடன் பேசிய காவ்யாவின் முகத்தை கூர்ந்து பார்த்தான் அர்ஜீன்.. அதில் சற்று முன்னால் பார்த்த மயக்கத்தின் சுவடு தெரியவில்லை.. அவனது புருவங்கள் முடிச்சிட்டன.. இவ்வளவு சீக்கிரத்தில் அவள் அந்த மயக்கத்திலிருந்து வெளியேறி விட்டதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
"நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே..." கடினமான குரலுடன் கேட்டான்...
"என்ன கேட்டிங்க..?"
"ஓ.. அதுக்குள்ள 'எல்லாத்தையும்..' மறந்துட்டியா..?"
அவன் 'எல்லாத்தையும்' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்ததில் அவளின் முகம் சிவந்து விட்டது..
"உங்க பசியைப் பத்தி சொன்னீங்க.. உங்க பசி என்னைப் பாதிக்கிறதுக்கான அர்த்தம் ஒன்னே ஒன்னுதான்.. அது மனிதாபிமானம்.. நான் மட்டும் வயிறு நிறைய சாப்பிட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்க.. என் கண்ணுக்கு முன்னாலே உட்கார்ந்திருக்கிறவங்க பசியோடு இருந்தா அது என்னைப் பாதிக்காதா...?"
'அவ்வளவுதானா..?' அர்ஜீன் அவளை உறுத்துப் பார்த்தான்...
அவனது பார்வையின் வேகத்தைத் தாங்க மாட்டாமல் அவள் தலை குனிந்து கொண்டாள்.. அன்று இரவு படுத்துத் தூங்க முயன்றபோது அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.. பக்கத்துத் தெருவில் யார் வீட்டிலோ விசேசத்திற்காக கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கியில் பழைய பாடலொன்று தவழ்ந்து வந்தது...
"எங்கிருந்ததோ ஆசைகள்..
             எண்ணத்திலே ஓசைகள்..
    என்னென்று சொல்லத் தெரியாமலே...
             நான்.. ஏன்.. இன்று.. வாடினேன்..?"
எங்கிருந்தோ வந்த ஆசைகளின் அலைக்கழிப்பை சொல்ல முடியாதவளாக அவள் தூங்க முயன்று போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -30
எங்கிருந்தோ ஆசைகள். -30
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy