எங்கிருந்தோ ஆசைகள்...-24

24 நித்தம் உந்தன் திருமுகத்தில்.. நான் விழிக்க ஆசைகொண்டேன்.. தேவராஜனும்தான் காவ்யா அந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்த அந்த நாள்ம...


24
நித்தம் உந்தன் திருமுகத்தில்..
நான் விழிக்க ஆசைகொண்டேன்..


தேவராஜனும்தான் காவ்யா அந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்த அந்த நாள்முதல்.. இந்த நாள்வரை.. அவளிடம் வழியோ.. வழியென்று வழிந்து பார்க்கிறான்.. ஆனாலும் காவ்யாவின் கவனத்தை அவனால் கவர முடியவில்லை...
அவன் விடும் ஜொள்ளு மழையில் அந்தக் கடைதான் நனைந்ததே தவிர.. காவ்யாவின் மனம் நனையவில்லை.. அவள் தேவராஜனின் பசீரத பிரயத்தனங்களை ஒரு அலட்சியப் பார்வையில் தவிடு பொடியாக்கி விட்டு.. கல்லையும்.. மண்ணையும் பார்ப்பதைப் போல அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விடுவாள்...
'உனக்கெல்லாம் ஒரு கணக்கா..' என்பதைப் போல அவள் பார்த்திருந்தால் கூட தேவராஜனால் தாங்கிக் கொண்டிருக்க முடியும்.. அவன் பார்வையிடும் அநேகப் பெண்கள்.. அவனை அப்படித்தான் பார்த்து வைத்தார்கள்.. இப்படி.. உணர்வு துடைத்த முகத்துடன் காவ்யா பார்த்து வைத்ததைப் போல யாரும் அவனைப் பார்த்ததில்லை...
என்னதான் அவள் அப்படியொரு அருமையான பார்வையை பார்த்து வைத்தாலும்.. தேவராஜன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை.. விக்கிரமாதித்த மகராஜன் நின்றதைப் போல.. தேவராஜனும் விடாமல் காவ்யாவிடம் காதல்கணைகளை வீசிக் கொண்டிருந்தான்..
காவ்யாவின் வெடுக்கென்ற பதிலால் திடுக்கிட்டுப் போகாமல்... அசையாத நெடுமரமாய்... அங்கேயே நின்று கொண்டிருந்த தேவராஜனை சுவராஸ்யமாக பார்வையிட்டாள் பாவனா...
எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்கிற நல்ல்ல்ல்... லவனாக.. காவ்யாவின் புறக்கணிப்புகளைத் தாங்கிக் கொண்டு புன்னகை மன்னனாக நிற்கிறவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குச் சிரிப்புத்தான் வரும்...
அந்த ஐயோ பாவம் சிரிப்பை.. தூண்டில் வீசுகிற சிரிப்பாக எடுத்துக் கொள்ளும் தேவராஜன்.. எதற்கும் இருக்கட்டுமென்று காவ்யா இல்லாத தருணங்களில் பாவனாவிடமும் வழிந்து வைப்பான்.. அந்த வழிசலை ரசிக்கும் பாவனா.. அவன் அந்தப்பக்கம் போனதும்.. இந்தப் பக்கம் காவ்யாவிடம் அதைப்பற்றிச் சொல்லிச் சிரிப்பாள்..
அன்றும் அந்த சுவராஸ்ய ஐயோ பாவப் பார்வையினை அவள் பார்த்து வைக்க..
'ஆஹா.. பட்சி என்னைப் பார்வையிடுதே...' என்று புல்லரித்துப் போய் விட்டான் தேவராஜன்...
பதிலுக்கு வெளிப்படையாக பார்வையிட முடியாமல் காவ்யா பக்கத்திலிருக்க.. அவளிடம் காவியக் காதலனாக வேடம் போட முயன்று கொண்டிருந்த தேவராஜன்.. அவளுக்குத் தெரியாமல் பாவனாவையும் பார்த்து வைத்தான்...
'பார்றா.. பயபுள்ள.. இந்தப் பக்கமும் ஊடுசால் போடவர்றதை...' பாவனாவிற்குள் ரகசியச் சிரிப்பு பொங்கியது... அவள் தேவராஜனின் பக்கமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்...
"என்ன.. தேவா சார்.. எப்படியிருக்கீங்க..." நமட்டுச் சிரிப்புடன் நலம் விசாரித்தாள்..
'இந்தப் புள்ள தனியா வரும்போது பேசித் தொலைக்கக் கூடாதா.. காவ்யா முன்னால்தான் பேசித் தொலைக்கனுமா...'
மனதுக்குள் பாவனாவை அர்ச்சித்தபடி.. காவ்யாவின் முகத்தையே பருகு.. பருகென்று பார்த்தபடி.. பாவனாவின் முகத்தைப் பாறாததைப் போல பாவனை காட்டிய தேவராஜன்..
"ம்ம்ம்.." என்று முணுமுணுத்தான்..
'பாருடா.. இப்பத்தான் எக்குத்தப்பா பாத்து வைச்சான்.. காவ்யா நிமிர்ந்து பாத்தவுடனே பயபுள்ள என்னமா வேஷம் கட்டறான்...'
பாவனாவுக்கு அவனை சும்மா விடக்கூடாது என்று தோன்றிவிட்டது...
"ம்ம்ம்ன்னா என்ன அர்த்தம்..? எனக்குப் புரியலையே.. ஏன் ஏகாம்பரம் சார்.. உங்களுக்கு ஏதாச்சும் புரியுதா..?" என்று விசாரித்தாள்...
"ஒரு மண்ணும் புரியலைம்மா..." என்று கம்யூட்டரை முறைத்தபடியே பதில் சொன்னார் ஏகாம்பரம்...
அவருக்கு அவர் கவலை.. கையிலே கணக்குப் போடுவதில் கில்லாடியான அவர் முன்னாலே... கம்யூட்டரை நிறுத்தி வைத்து அதில் கணக்குப் போடச் சொன்னால்.. பாவம் அந்த மனிதர்தான் என்ன பண்ணுவார்.. பணக்கணக்கை மனக்கணக்கில் சொல்லுவதில் வல்லவரான அருடைய திறமையை கம்யூட்டர் பதம் பார்த்து தவிடு பொடியாக்கிக் கொண்டிருந்ததில்.. அவர் எதைப் பேசினாலும் எரிந்து விழுந்துதான் பேசி வைப்பார்..
தேவராஜனுக்கு சோதனையாக இருந்தது.. பாவனா காவ்யாவிடம் விசாரணைக் கமிசன் நடத்தியிருந்தால் கூட.. அவன் தாங்கிக் கொண்டிருப்பான்.. ஏகாம்பரத்திடம் விசாரணை கமிசன் போட்டதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
'இப்படிப் போட்டுத் தாக்கறாளே...' அவன் பற்களை நறநறத்தான்...
"கேட்டிங்களா தேவா சார்.. அவருக்கும் புரியலையாம்.." என்றாள் பாவனா...
"யாருக்குப் புரிஞ்சாலும்... புரியாட்டாலும்... காவ்யாவுக்கு புரியுமே.. எனக்கு அதுவே போதும்...", என்றான் தேவராஜன்..
"என்னடி காவ்யா.. இவர் இப்படிச் சொல்றாரு.. உனக்குப் புரியுதா..?" காவ்யாவிடம் கேட்டாள் பாவனா..
'ஆஹா.. இவ காவ்யாவை பேச்சில இழுத்து விட்டுட்டாளே...' மகிழ்ந்து போன தேவராஜன்.. காவ்யாவின் பதிலை அறிய ஆவல் ததும்பும் முகத்துடன் அவள் முகத்தையே பார்த்தான்...
"சகிக்கலை..." வெடுவெடுத்தாள் காவ்யா...
தேவராஜனின் முகம் விழுந்து விட்டது.. அதை ஓரக்கண்ணால் பாவனா ரசித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தவனுக்கு பூமி இரண்டாகப் பிளந்து.. 'வா தேவராஜா..' என்று அவனை அழைத்துக் கொள்ளக் கூடாதா என்ற ஏக்கம் மேலிட்டது...
"என்னடி இப்படிச் சொல்ற..? இவரென்ன மியுஸிக்கா போட்டுட்டார்..? ம்ம்ம்ன்னு முணுமுணுத்துத்தான வைத்தார்... அதைப் போய் சகிக்கலைன்னா எப்புடி காவ்யா..?" பாவனா விடாமல் வழக்கு வைத்தாள்...
'விட்டுத் தொலைக்க மாட்டேங்கிறாளே...' தேவராஜனின் மனம் சல்லடையானது...
"காலங்கார்த்தால ரம்பம் போடாதேன்னு உன்கிட்ட எத்தனைவாட்டி சொன்னாலும் நீ திருந்தவே மாட்டியா..? நீதான் வேலை செய்யறதில்ல.. வெட்டியாய் பொழுதப் போக்குற.. உன்னப் போல வெட்டிப் பொழைப்பு பொழைக்க என்னால முடியாதுன்னு சொன்னாக் கேட்டுக்கவே மாட்டியா... நான் வேலை செய்யனும்.. வேலயக் கெடுக்காம உன் சோலிக்கழுதயப் பாக்கப் பாரு.." என்று திட்டித் தீர்த்த காவ்யா.. பாவனாவின் முகத்தைப் பார்க்காமல் தேவராஜன் முகத்தையே பார்த்தபடி திட்டித்தீர்த்ததில் தேவராஜன் பலத்த பாதிப்பிற்கு ஆளானான்...
பேச்சுவாக்கில் ஒருமுறை கூட அவள் பாவனாவை 'டீ' போட்டு அழைக்கவில்லை என்ற உண்மையையும் அவனிடமிருந்த கொஞ்ச நஞ்ச அறிவு.. அறிவுறுத்தி வைத்ததில் அவனின் கருத்த முகம் மேலும் கருத்து விட்டது..
பாவனா சிரிப்பை அடக்கிக் கொண்டதில் தேவராஜனின் பாதிப்பு அதிகமானது.. ஆனாலும் அவன் நகராமல்.. ஆணியடித்ததைப் போல அங்கேயே நின்றான்..
'சொரணை கெட்ட ஜென்மம்..' காவ்யா முகத்தை திருப்பிக் கொண்டாள்...
'இன்னும் இவன் எத்தனை அடிகளத்தான் தாங்குவான்..?' பாவனா மனக்கணக்கைப் போட்டாள்...
இது இரண்டையும் செய்யாத ஏகாம்பரம்.. கம்யூட்டரை வெறுப்புடன் பார்த்து விட்டு காவ்யாவின் பக்கம் திரும்பினார்...
"இந்தக் கழுதைய யாரும்மா கண்டு புடிச்சது.." என்று விசாரித்தார்..
"எனக்குத் தெரியாது..." காவ்யா தலையைப் பிடித்தாள்..
அவளுக்கு தலைவலி வந்து விட்டிருந்தது.. விண்விண்ணென்று தெறித்த தலையை விரல்களால் அழுத்தி விட்டபடி.. முகத்தைச் சுளித்தாள்...
"என்னடா.. தேவாசார் வந்து இம்புட்டு நேரமாகுது.. நம்ம காவ்யாவுக்கு இன்னும் தலைவலி வரலியேன்னு இப்பத்தாண்டி நினைச்சேன்.. நான் நினைச்சு முடிக்கிறதுக்குள்ள 'டாண்'ணு உனக்கு தலைவலி வந்திருச்சு...", மெச்சிப் போனாள் பாவனா...
"உன்னை.." பல்லைக் கடித்தாள் காவ்யா...
"என் வேதனையைப் பார்த்தா.. உனக்குச் சிரிப்பாணி வருதா..?" தேவராஜனை முறைத்தபடி பாவனாவிடம் கேட்டாள்...
"ஐயோடா.. அதெல்லாம் இல்லைடி... எல்லாம் ஒரு கரிசனம்தான்.. வேற ஒன்னுமேயில்ல.. நம்புடி.." என்று காவ்யாவிடம் சொல்லிய பாவனா ஏகாம்பரத்தின் பக்கமாக திரும்பி...
"காவ்யாவுக்கு தலைவலி வந்திருச்சு ஏகாம்பரம் சார்.. அதனால கம்யூட்டர் கழுதய கண்டு புடிச்சது யாருன்னு நம்ம தேவா சார்கிட்டக் கேளுங்க.. இவரு பில் கேட்ஸோட வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரராத்தான் பொறக்கலை.. மத்தபடி.. கம்யூட்டர் பத்தியெல்லாம்.. அக்கு வேறு ஆணிவேறா அலசித் தள்ளிப் புடுவாரில்ல.." என்று சொல்லி வைத்தாள்...
'கெடுத்தாளே.. காரியத்த...' தேவராஜன் நடுங்கிப் போனான்..
கண்மாக்கரையில் சீட்டுக்கச்சேரி நடத்துவதைப் பற்றித்தான் அவனுக்குத் தெரியும்.. கம்யூட்டரைப் பற்றி அவனுக்கென்ன தெரியும்.. அதிலும் அந்த பில்கேட்ஸ் என்பவன் பூனைகளை விற்கிறவனா.. இல்லை யானைகளை விற்கிறவனா என்று கூட அவனுக்குச் சுத்தமாகத் தெரியாது.. இந்த லட்சணத்தில் அவன் பில்கேட்ஸின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரனைப் போல என்று பாவனா எடுத்து விட்டால்.. பாவம் பய புள்ள.. என்னதான் செய்வான்..?
ஏகாம்பரம் அவனை ஏறிட்டுப் பார்த்தார்.. தேவராஜன் கதி கலங்கிப் போனான்.. அவர் வாயைத்திறக்க... இவன் அரண்டு போய் வேறு திக்கில் பார்த்து வைக்க.. என்று அங்கே களைகட்டியதில் பாவனா உற்சாகமாகிப் போனாள்...
"ம்ஹீம்.. இவருகிட்ட கம்யூட்டரப் பத்திக் கேக்கிறதுக்குப் பதிலா நான் கழுத மேய்க்கப் போகலாம்..." என்று சொல்லி விட்டார் ஏகாம்பரம்..
அவ்வளவுதான்.. பாவனா விழுந்து.. விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.. தலைவலியுடன் போராடிக் கொண்டிருந்த காவ்யாவிற்கும் சிரிப்பு வந்து விட்டது.. அதைத் தாள மாட்டாத தேவராஜனுக்கு வருத்தம் வந்து விட்டது...
"என்னம்மா இம்புட்டுச் சிரிப்பு சிரிக்கறிங்க.. நம்ம பவளக்கொடி நாடகத்தப் பாத்து.. நான்கூட இம்புட்டுச் சிரிப்பு சிரிச்சதில்லம்மா.." என்றபடி காபித்தம்ளர்களோடு அங்கே பிரசன்னமானார் கந்தசாமி...
"இதைப் பாருடா.. நம்ம காவ்யாவுக்கு தலைவலி வந்தவுடனே.. கரெக்டா காபி வந்து சேர்ந்திருது..." என்று ஆச்சரியப்பட்டுப் போன பாவனா...
"எப்புடி கந்தசாமி..?" என்று அவரிடம் விசாரித்தாள்..
"அது வேற ஒன்னுமில்லம்மா... நம்ம பழைய முதலாளியோட மகன் வந்து நின்னாலே... நம்ம காவ்யாம்மாவுக்கு தலைவலி வந்து நின்னுரும்... அதான்... சின்னய்யா கடைக்குள்ள நுழையறப்பவே நான் காபிக் கடைக்குள்ள நுழைஞ்சிட்டேன்..." என்று விளக்கம் சொன்ன கந்தசாமி.. காவ்யாவை அனுதாபத்துடன் பார்த்தபடி..
"தலைவலி மாத்திரையையும் வாங்கிட்டு வந்திருக்கேன்ம்மா..." என்று எடுத்துக் கொடுத்தார்...
'ரொம்ப முக்கியம்.. இப்ப இத இவ கேட்டாளா..?' கடுப்பாகிப் போனான் தேவராஜன்...
"நல்ல வேலை செஞ்சீங்க கந்தசாமி..." பாவனா பாராட்டிவிட்டு..
"வாங்கிக்கடி காவ்யா.." என்று தோழியை ஊக்குவித்தாள்..
காவ்யாவும் தேவராஜனை முறைத்தபடி தலைவலி மாத்திரையை வாங்கிக் கொண்டதில் பாவனாவுக்கு மகிழ்ச்சி... கந்தசாமிக்கோ நெகிழ்ச்சி...
"பாவம்.. இந்தம்மாவுக்கு தலைவலி வந்தா என்ன பாடுபடுவாங்கன்னு எனக்குத்தானே தெரியும்..?" தேவராஜனிடம் அனுதாபத்துடன் சொன்னார் கந்தசாமி..
'இப்ப இத நான் கேட்டேனா..?'
கேட்காமலே தலைவலி மாத்திரையையும்.. தகவலையும் அள்ளித்தரும் கந்தசாமியை வெட்டவா.. குத்தவா என்பதைப் போலப் பார்த்து வைத்தான் தேவராஜன்...
"என்ன... தேவாசார்... உங்களப் பத்தியும்... உங்க வரவப் பத்தியும் கந்தசாமி தெளிவா கணிச்சு வைச்சிருக்காரே..." பாவனா தேவராஜனிடம் அபிப்ராயம் கேட்டாள்...
"ஹி.. ஹி... பெரியவருக்கு கொஞ்சம் ஜாஸ்திதான்.." என்றான் தேவராஜன்...
"எது ஜாஸ்தின்னு சொல்றீங்க..? கொழுப்பா..?" விளக்கம் கேட்டாள் பாவனா..
கந்தசாமியின் முகம் சுருங்கிவிட்டது.. அவர் மீசையின் மேல் கையைப் போட்டு தேவராஜனை யோசனையுடன் பார்த்ததில் தேவராஜன் கதிகலங்கிப் போனான்...
'ஆத்தாடி.. கிழவன் பார்வையே சரியில்லையே.. இப்ப இவனுக்கு நான் முதலாளியும் இல்ல.. முதலாளியா இருந்தாலே இந்த ஆளு.. வெளியில வா.. உன்ன அங்கே பாத்துக்கிறேன்னு சொல்லி வைப்பான்.. இப்ப அதுவும் இல்லாம போச்சு.. கடைக்குள்ளயே பாத்துப் புடுவானே.. இந்தப் பாவனா இவனத் தூண்டிவிட்டு திருவிழாக் கொண்டாட வைச்சிருவா போல இருக்கே.. நாள பின்னே இந்தக் கடைக்கு நான் வந்து போகனுமுன்னா.. இந்தக் கிழவனின் தயவு தேவப்படுமே.. இவன்தான வாசலக் காக்கிறவன்...'
வாயில் காப்போரை அனுசரித்துப் போக வேண்டிய அவசியத்துக்கு ஆளான தேவராஜன்.. அவசரமாக பாவனாவின் கூற்றை மறுத்தான்...
"சேச்சே... நான் அப்படிச் சொல்லுவேனா..? விவரம் ஜாஸ்தின்னு சொன்னேன்..."


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்...-24
எங்கிருந்தோ ஆசைகள்...-24
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy