எங்கிருந்தோ ஆசைகள். -21

21 சொல்லில் அடங்கா ஆசைகளை.. சொல்லி விடவே ஆசை கொண்டேன்... வட்டமான பெரிய தட்டின் மையத்தில் சூடான இடியாப்பங்களைப் போட்டு.. அது மித...


21
சொல்லில் அடங்கா ஆசைகளை..
சொல்லி விடவே ஆசை கொண்டேன்...


வட்டமான பெரிய தட்டின் மையத்தில் சூடான இடியாப்பங்களைப் போட்டு.. அது மிதக்கும் அளவில் தேங்காய்ப்பாலை ஊற்றினாள் அன்னபூரணி.. அலுவலகக் களைப்பு போக குளித்துவிட்டு.. கைலி பனியனில் வந்து உட்கார்ந்த கண்ணதாசன்..
"காவ்யா எங்கேம்மா.." என்று கேட்டான்..
"பசிக்குதுன்னுதான் கீழே வந்தா கண்ணா.. அப்பப் பார்த்து உன் அப்பா.. திருக்குறளைச் சொல்லி விளக்கம் கேட்டு வைச்சாரா.. இந்தா வந்திர்ரேன்னு போனவதான்.. ஒரு மணி நேரம் போயாச்சு.. இன்னும் வரல..." அலுத்துக் கொண்டாள் அன்னபூரணி....
அப்போதும் திருக்குறள் புத்தகத்தை கீழே வைப்பேனா என்று அடம் பிடித்தவராக சிவதானு.. புத்தகமும் கையுமாக சாப்பிட வந்து உட்கார்ந்தார்...
"ஐயா.. சாமி.. இப்பாயாச்சும் அந்தப் புத்தகத்த கீழே வைச்சறிங்களா.. பாவம்.. என் புள்ள.. பசிக்குதும்மான்னு வந்தா.. அவள புத்தகத்தக் காட்டி விரட்டி விட்டதுமில்லாம.. இப்பயும் அவள சாப்பிடவிடாம பண்ணனும்கிற முடிவோட இருக்கீகளா..?"
"இதென்னடி அநியாயமா இருக்கு.. குறளப் படிச்சா அது குத்தமாடி..?"
"குறளப் படிச்சாக் குத்தமில்ல.. அதுக்கு விளக்கம் கேட்டு வீட்டுல இருக்கற மக்க.. மனுசங்களப் படுத்தி எடுத்தா அது குத்தம்தான்.. தெரியாமத்தான் கேக்கறேன்.. இப்ப எதுக்காக குறளப் படிச்சு விளக்கம் கேட்டுக்கிட்டு அலையறிங்க..? குறளோவியம் எழுதப் போறிங்களா..?"
"அதுக்கெல்லாம் எனக்கு அறிவு பத்தாதுடி..."
"தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக ஒட்டுப்புல்லப் போல அத ஒட்ட வைச்சுக்கிட்டு இருக்கீங்க...?"
சிவதாணு கீழே வைக்க மனமில்லாமல் புத்தகத்தை வைக்க.. அதை எடுத்து புத்தக அலமாரியின் அடுக்கில் வைத்தாள் அன்னபூரணி...
"என் புத்தகம்டி.." ஏக்கத்துடன் பார்த்தார் சிவதாணு..
"என்னவோ.. இவரோட காதலியைப் பிரிஞ்சாப்புல தான் ஏங்கித்தவிக்கிறாரு.. வீட்டுக்குள்ளதான இருக்கீங்க.. உங்க புத்தகம் எங்கேயும் ஓடிப் போகலை.. அதுவும் வீட்டுக்குள்ளதான் இருக்குது.. அடங்கி உட்காருங்க..."
கணவருக்கு இடியாப்பத்தை பரிமாறியபடியே அதட்டலைப் போட்ட அன்னபூரணி.. மாடிப்படியின் கீழ்ப்படியின் நின்று கொண்டு குரல் கொடுத்தாள்..
"காவ்யா.. அடியேய்.. காவ்யா...."
பசிக்கு உணவில்லாத போது.. தூக்கத்தை கண்களுக்கு ஈய வேண்டும் என்ற கொள்கைப்படி சின்னதாக குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த காவ்யா.. அவசரமாக ஓடிவந்து எட்டிப் பார்த்தாள்..
"என்னம்மா..?"
"பசிக்குதுன்னு சொன்னீல்ல.. வந்து சாப்பிட்டுட்டுப் போ.. எனக்கும் வேலை முடியும்.."
"கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேம்மா..."
"எனக்கென்ன ஏழுகையா இருக்குது..? வாடி கீழே.."
காவ்யா வாய்க்குள் முணுமுணுத்தபடி கீழே இறங்கி வந்தாள்.. டைனிங் டேபிளில் சிவதாணுவைக் கண்டதும்.. அவளுக்கு வந்த பசி ஓடிப் போய்விட.. அவளும் ஓடிப் போய்விடும் உத்தேசத்துடன் திரும்ப யத்தனித்தபோது...
"உன் அப்பா கையில இருக்கிற புத்தகத்தை பிடுங்கி அலமாரியில வைச்சாச்சு.. பயப்படாம வா.." என்று தைரியம் கொடுத்தாள் அன்னபூரணி...
'புத்தகம்தான அலமாரிக்குப் போயிருக்கு..? அப்பா இங்கேதான இருக்காரு...'
எதற்கும் இருக்கட்டும்மென்று நாற்காலியின் முனையில் தொற்றிக் கொள்வதைப் போல அமர்ந்தாள் காவ்யா...
'ஓடத் தோதாயிருக்கும்...'
காவ்யாவின் முன்னால் தட்டை வைத்த அன்னபூரணி.. இடியாப்பத்தைப் போட்டு தேங்காய்பாலை ஊற்றினாள்.. ஆசையுடன் அதைப் பிட்டு.. வாயருகே காவ்யா கொண்டு போன போது...
"ஏம்மா காவ்யா.. படிச்ச திருக்குறளை அதுக்குள்ள மறந்து போயிரலாமாம்மா.." என்று ஆரம்பித்தார் சிவதாணு..
அன்னபூரணியை முறைத்தபடி பிய்த்த துண்டை வாய்க்குள் தள்ளும் வாய்ப்பு தனக்கில்லை என்ற முடிவுக்கு வந்தவளாக.. தட்டில் அதைப் போட்டுவிட்டு.. பரிதாபமாக சிவதாணுவைப் பார்த்தாள் காவ்யா...
"பசிக்குதுப்பா..."
"சாப்பிடும்மா..." தாராள குணத்துடன் சொன்னார் சிவதாணு...
'அதுக்குத்தான் நீங்க விட மாட்டேங்கறிங்களே...'
ஏக்கத்துடன் தட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்த காவ்யாவை நிமிர்ந்து பார்த்தான் கண்ணதாசன்...
"அப்பா..."
"என்ன கண்ணா..."
"சாப்பிடறப்ப டியுசன் எடுக்க வேணாம்.. அது பாவம் பசிக்குதுன்னு வந்திருக்குது.. சாப்பிட விடுங்க..."
"நான் என்னப்பா செய்றேன்... தாராளமா சாப்பிடட்டும்.."
"அது சாப்பிடனும்னா நீங்களும் சாப்பிடனும்.. பேசக் கூடாது.." கண்டிப்புடன் பேசினான் கண்ணதாசன்...
சிவதாணுவுக்கு மகன் தீர்ப்புத்தான் மகேசன் தீர்ப்பு.. அதனால் மகளுக்கு திருக்குறளைச் சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையுடன் இடியாப்பத்தில் கவனமானார்...
"சாப்பிடும்மா.." பாசத்துடன் சொன்னான் கண்ணதாசன்..
நீ சொல்லைன்னா எனக்குச் சாப்பிடத் தெரியாதாக்கும் என்றுதான் மகள் நொடிப்பாள் என்று கணித்து வைத்திருந்த அன்னபூரணியின் கணிப்பை பொய்யாக்கி விட்டு.. தமையனை நன்றியுடன் பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் காவ்யா...
'இதென்னடி அதிசயமா இருக்கு.. கிழக்கும்.. மேற்கும் எப்ப ஒன்னாச்சு...?' இமைகளை கொட்டி விழித்தாள் அன்னபூரணி...
"காவ்யா..."
"என்னண்ணே..."
"எனக்குத் தெரிஞ்ச மில்லில ஆபிஸ் வொர்க் பார்க்க ஆள் தேவைப்படுதாம்.. இப்ப நீவாங்கற சம்பளத்தைவிட அதிகமா கிடைக்கும்.. நீ அங்கே ஜாயின் பண்றியா..?"
காவ்யாவுக்கு 'திக்' கென்றது...
'இந்த வேலையை விடறதா..?'
பாவனாவின் முகம் கண்முன் வந்து நின்றது.. அத்தனை நாள்களாக பார்த்துப் பழகிய சக ஊழியர்கள் நினைவுக்கு வந்தார்கள்.. பேச்சு பேச்சாக இருந்தாலும்.. விரல் நுனியில் வந்து நிற்கும் கடையின் விவரங்கள் நினைவுக்கு வந்தன... அவள் மனம் அசைந்தது...
பார்த்துப் பழகிய முகங்களையும்.. வேலையையும் விட்டுவிட்டு அவள் வேறு எங்கோ செல்வதா..? பாவனாவின் நட்பு காணக்கிடைக்காதது.. இதைக் கண்ணதாசன் புரிந்து கொள்வானா..?
ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் தோழமை கிடைப்பது.. எவ்வளவு அரிதான ஒன்று என்பதை கண்ணதாசனிடம் எப்படி அவள் சொல்வாள்..?
காவ்யாவின் தயக்கத்தைக் கவனித்த கண்ணதாசனின் புருவங்கள் முடிச்சிட்டன.. அக்கறையுடன் பேசும் தமையனின் வார்த்தைகளை மறுத்துப் பேசமுடியாமல் அவள் திண்டாடினாள்..
இதே வார்த்தைகளை இரண்டு தினங்களுக்கு முன்னால் அவன் சொல்லியிருந்தால் காவ்யாவின் பதிலே வேறாக இருந்திருக்கும்..
'இதென்ன.. புதுசா கரிசனம் பொங்கி வழியுது.. ஏண்ணே.. எனக்கு வேலை வாங்கிக் குடுன்னு நான் உங்கிட்ட கேட்டேனா..? நீபாட்டுக்கு முந்திரிக் கொட்டை போல முந்திக்கிட்டு வர்ற.. இந்த கரிசனத்தை என்ன மேல படிக்க வைக்கிறதில காண்பிக்க வேண்டியது தான..? படிக்கிற படிப்பையெல்லாம் நீயே படிச்சுக்குவ.. பார்க்கிற வேலையையும் ஆபிசர் உத்தியோகமா பாத்து வாங்கிக்குவ.. என்ன மட்டும் மில்லுல வேலையிருக்கு.. போன்னு சொல்லுவ.. ஏண்ணே உனக்கு இந்த கெட்ட புத்தி..? இது என்னத் தேடி தானா வந்த வேலை.. எனக்கு இதுவே போதும்.. நீ வாங்கிக் கொடுக்கிற வேலை வேணாம்..' என்றுதான் அவள் சொல்லியிருப்பாள்..
இன்று கதையே வேறாக இருந்தது.. காவ்யாவின் முகமூடியை கண்ணதாசனின் பாசம் கழட்டிப் போட வைத்திருந்தது.. தங்கையின் முகம் பார்த்தே அவள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு.. தாய்.. தந்தையிடம் அவளின் வேலைச்சுமையிலிருந்த ஆபத்தைக் காட்டிக் கொடுக்காமல்.. அவளுடன் துணைக்கு வந்து அவளின் வேலையை முடித்துக் கொடுத்து.. பத்திரமாக அவளை அலுவலகத்தில் சேர்ப்பித்ததோடு நிற்காமல் அவளுடைய அண்ணனாக அர்ஜீனிடம் சண்டைக்கும் போனானே.. அதற்குப் பின்னாலும்... பொய் முகமூடியின் பின்னால் ஒளிந்து கொண்டு அண்ணன் பறக்கவிடும் பாசப் பறவையை.. 'சூ..சூ..' வென்று விரட்ட காவ்யாவினால் முடியவில்லை...
எப்படி அவனிடம் மறுப்பது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக அன்ன பூரணியிடமிருந்து அவளுக்கு உதவிக்கரம் வந்தது...
"வேணாம்டா கண்ணா.. இதுன்னா பார்த்துப் பழகின இடம்.. அந்த துரியோதனன் வேற நம்ம ஊருக்கார மனுசனா இருந்தாரு..."
"அதைத்தான் நானும் சொல்றேன்ம்மா.. துரியோதனன் கடையை வித்துட்டார். வாங்கின ஆள்... நம்ம ஊர்க்கறரில்லை.. சென்னைக்காரர்.. அவருக்கு நம்ம குடும்பத்தைப் பத்தியும்.. காவ்யாப் பத்தியும் என்ன தெரியும்..? அதனாலதான் சொல்றேன்.. காவ்யா இந்த வேலையை விட்டுட்டு.. நான் சொல்ற வேலைக்குப் போகட்டும்..."
"இங்கே மட்டும் தெரிஞ்ச ஆளுக இருப்பாங்களா..?"
"மில்லோட முதலாளி எனக்குத் தெரிஞ்சவர்.. காவ்யாவுக்கு மதிப்புக் கொடுத்து நடத்துவாங்க.."
"இந்த சுத்தற வேலையே வேணாம்கிறேன்.. நீ வேலையை விடச் சொன்னதை சரின்னுதான் சொல்லுவேன்.. இவ எதுக்காக வெளியே வேலைக்குன்னு போகனும்..? பேசாம வீட்டில இருக்க வேண்டியதுதானே.. நீ புதுசா ஒரு வேலையைத் தேடறதுக்குப் பதிலா.. இவளுக்குத் தோதான மாப்பிள்ளயத் தேடு.. காலாகாலத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்திரலாம்.."
"அது உடனே நடக்கிற வேலையாம்மா..?"
"நடக்கிறப்ப நடக்கட்டும்.. அதுவரைக்கும் இவ வீட்டில இருக்கட்டும்.. அறியாத இடத்தில வேலைக்குப் போக வேணாம்..."
'போச்சுடா...' மானசீகமாக தலையில் கை வைத்தாள் காவ்யா...
'இந்தம்மா சும்மாவே சாமியாடும்... அண்ணன் வேற உடுக்கை அடிச்சு வைச்சிருச்சு... இனிமே இது சாமானியத்தில மலையிறங்காதே...'
அவளின் முகத்திலிருந்தே அவளது மனத்தின் எண்ண வோட்டத்தைப் புரிந்து கொண்ட கண்ணதாசன் அன்னபூரணியை மலையிறக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான்...
"இப்ப தங்கச்சி கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம்..?"
"அப்ப உன் கல்யாணத்துக்கு அவசரப்பட சொல்றியா..? வேணும்னா உனக்குப் பொண்ணுப் பாக்கவா..?"
"எதுக்கும்மா இந்தக் கொலைவெறி..?"
"எனக்காடா கொலைவெறி..? அது உனக்கும்.. உந்தங்கச்சிக்கும் தான் இருக்கு.. உந்தங்கச்சிக்கும் மாப்பிள்ளை பாக்க மாட்ட.. நீயும் பொண்ணு கட்டமாட்டன்னா என்னடா அர்த்தம்..? புள்ளகளப் பெத்தவளுக்கு எப்படியிருக்கும்ன்னு யோசிச்சுப் பாத்தியா..? இதில வேற இவ வேலை செய்யற கடையை வேறொருத்தன் வாங்கிட்டான்னு சொல்ற.. கண்ணா..!"
"என்ன..?"
"காலகாலத்தில உந்தங்கச்சியை கரையேத்திருப்பா.."
எப்போதும் அதை மறுத்துப் பேசும் கண்ணதாசன் அப்போது அதை மறுத்துப் பேசவில்லை என்பதை கண்டு கொண்டாள் காவ்யா.. மௌனமாக ஏதோ யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம்...
"அதுவரைக்கும் இந்தக் கடைக்கே இவ வேலைக்குப் போயிட்டு வரட்டும்பா.." என்றும் சொன்னாள் அன்னபூரணி...
"இதில ரிஸ்க் இருக்குன்னு தோணுதும்மா..."
"இருக்கட்டும்.. முடிஞ்சா வேலையப் பாக்கட்டும்.. இல்லேன்னா இந்த சோலியே வேணாம்ன்னு விட்டுத் தள்ளிட்டு வந்திரட்டும்.. ஆனா வேற பக்கம் இவள வேலைக்கு அனுப்ப வேணாம்ப்பா..."
"அம்மா.. இந்தக் கடை இப்ப துரியோதனன் கையில் இல்ல..."
"துரியோதனன்தான் இல்ல.. அந்தக் கடையில வேல பாக்கிற மத்த மக்க மனுசங்களுமா இல்லாம போயிட்டாங்க..."
"அம்மா..."
"ஆமாண்டா தம்பி.. மில்லுன்னா கடலுடா.. அதில உந்தங்கச்சிய வேலைக்கு அனுப்ப நான் சம்மதிக்க மாட்டேன்.. இதுன்னா ஒரு தம்ளர் தண்ணி.. மிஞ்சிப் போனா அங்கே பத்துப் பதினைஞ்சு பேர்தான் வேலை பார்க்கிறாங்க... அத்தன ஆளுகளும் நம்மளுக்குத் தெரிஞ்ச ஆளுகதான்.. இன்னார் வீட்டுப் பொண்ணுன்னு பயந்து.. பதவிசாப் பழகிட்டுப் போயிருவாங்க..."
'மத்தவங்க அப்படிப் போயிருவாங்க.. அந்தப் புது முதலாளி அப்படிப் போவானா..?' மனதுக்குள் கேட்டுக் கொண்டான் கண்ணதாசன்...
அர்ஜீனை அவன் கேள்வி கேட்டவுடன் அவன் பார்வை கண்டிப்புடன் காவ்யாவின் மீது பாய்ந்ததை அவன் மனது நினைத்துப் பார்த்தது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,31,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,115,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,30,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,20,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -21
எங்கிருந்தோ ஆசைகள். -21
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy