அம்மம்மா.. கேளடி தோழி...! -127

127 நீ நிந்தனைகள் செய்தாலும்... என் சிந்தனைகள் உன் மீதுதான்... செல்போனைக் காதுக்கு கொடுத்தபடி... மாடிப்படிகளில் இறங்கிவந்து கொண்ட...


127
நீ நிந்தனைகள் செய்தாலும்...
என் சிந்தனைகள் உன் மீதுதான்...

செல்போனைக் காதுக்கு கொடுத்தபடி... மாடிப்படிகளில் இறங்கிவந்து கொண்டிருந்தான் பாலமுரளி.. குனிந்த தலை நிமிராமல் டைனிங் டேபிளில் பதார்த்தங்களை வைத்துக் கொண்டிருந்த ராதிகாவின் மீது அவன் பார்வை படிந்தது...
'நிமிர்ந்து பார்க்கிறாளான்னு பாரு...' பல்லைக் கடித்தான்...
அவள் தலை நிமிரவில்லை... சென்னையிலிருந்து வந்த தினம் முதலாய் இப்படித்தான் செய்கிறாள்.. முதலில் செய்ததைப் போல.. அவன் பின்னாலேயே ஓடிவந்து வழியை மறிப்பதில்லை... சாப்பிடாமல் போகக் கூடதென்று மிரட்டுவதில்லை...
அவனும் முதலிரண்டு தினங்களில் வேலையின் ஞாபகத்தில் சாப்பிட மறந்து கிளம்பிச் சென்று விட்டான்.. ராதிகா போனிலும் நினைவு படுத்தாததினால்.. மதிய உணவையும் அவள் இல்லாத தினங்களில் வெளியே சாப்பிட்டதைப் போலவே சாப்பிட்டு விட்டான்.. இரவு நெடுநேரமான பின்னால் வீடு திரும்பியவனுக்கு மேகலா கதவைத் திறந்து விட்டாள்..
"நீங்க தூங்கப் போகலையாம்மா..? அந்த மகாராணி எங்கே...?"
அப்போதுதான் ராதிகாவின் நினைவு வந்தவனாக அவன் கேட்டான்...
"என்னடா ஆச்சு..?" மேகலா அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள்..
'அம்மாவோட பார்வையே சரியில்லையே... அவ எதையாச்சும் பத்தவைச்சுட்டாளா...?'
"ஒன்னும் ஆகலையே..."
"அப்புறம் எதுக்காக... காலையிலேயே சாப்பிடாமல் கூட ஓடிட்ட..?"
அதுவரை அவனுக்கு அந்த நினைவேயில்லை.. மேகலாவின் கேள்வியில் அவன் உதட்டைக் கடித்தான்...
'அவதானே வழியை மறிப்பா..? இன்னைக்கு மறிக்கலையே... போனும் பண்ணலையே...'
"வேலைம்மா... அதான் ஓடிட்டேன்..."
"நீ ஓடிட்ட.. ராதிகாதான் பாவம்..."
'அவளுக்கென்ன கொள்ளை வந்தது..? பட்டினியாப் போனது நான்.. எங்க அம்மா பாவப்படறது அவளப்பார்த்து.. நேரம்...'
"ஏன்.. அவளுக்கு என்ன ஆச்சு...?"
"இதுவரைக்கும் ஒன்னும் ஆகலை... இனியாவது அவ வயித்துக்குள்ள எதையாச்சும் போட்டாத்தான்... வேற ஏதும் ஆகாம இருக்கும்..."
மேகலாவின் பீடிகையில் முரளி எரிச்சல்பட்டுப் போனான்...
'நாள் பூராவும் சுத்தியலைஞ்சிட்டு.. கொஞ்சநேரம் துங்கி எழுந்திருக்கலாம்ன்னு ஒரு மனுசன் வீடு தேடி வந்தா... அவ ராத்தூக்கத்துக்கு வழியில்லாம செய்துகிட்டு இருக்காளே... இதென்ன அவளுக்கு புதசா.. மகராசி... என்னைக்கு என் கண்ணில பட்டாளோ... அன்னையில இருந்துதான் நான் ராத்தூக்கத்தை தொலைச்சிட்டேனே..'
"என்னன்னுதான் சொல்லுங்கம்மா..."
"காலையில இருந்து அவ பல்லில.. பச்சைத் தண்ணி படலைடா..."
"என்னது..?"
முரளி திகைத்துப் போனான்.. ராதிகாவின் இதுபோன்ற போர் முறையை எதிர்நோக்க நேரிடும் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை...
"ஏம்மா... அவ சாப்பிடறதுக்கென்ன..?"
"என்னைக் கேளு.. நானா பட்டினி கிடக்கச் சொன்னேன்..? அவகிட்டப் போய் இந்தக் கேள்வியை கேளுடா..."
'அவகிட்ட கேட்டுட்டாலும்...'
"ஏன் நீங்க சொல்ல மாட்டிங்களா...?"
"தினமும் அவரை வழி மறிச்சாத்தான் அவர் நிற்பாரா அத்தைன்னு அவ கேட்கிறாடா.. போன் பண்ணினாத்தான் மதியச்சாப்பாட்டுக்க வருவாரா... அவருக்கா அந்த நினைப்பிருக்க வேணாமான்னு கேட்கிறா... எத்தனை நாளைக்குத்தான் இப்படியே வழி மறிச்சு... போனில கூப்பிட்டு சாப்பாட்டைப் போடறது..? அவருக்கா தோண வேணாமான்னு கேட்கிறா.. அவ கேட்கிறதிலயும் நியாயம் இருக்கில்ல...?"
ராதிகாவின் சரஸமான வழிமறித்தலின் நினைவில் பாலமுரளியின் மனதில் ஏமாற்றம் படர்ந்தது.. அவள் போனில் பேசும் கொஞ்சலான மிரட்டல்களை இனிக் கேட்க முடியாதா என்ற ஏக்கம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது..
'தப்பிக்கப் பார்க்கிறா...'
"அதுக்காக... பட்டினி கிடப்பாளாமா..?"
"ஆமாம்ன்னு சொல்றாடா.. அவர் வீட்டில சாப்பிட்டா நான் சாப்பிடறேன்.. அவர் வீட்டில சாப்பிடலைன்னா... எனக்கும் சாப்பாடு வேணாம்ன்னு சொல்றா.. இதுபோல அவ சோர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லைடா முரளி.. சென்னைக்கு போனவன்.. அவளை என்னதான் பண்ணித் தொலைச்சே..."
என்ன பண்ணினான்..? எப்போதும் போல அவள் கன்னத்தில் நாலு அப்பு அப்பினான்.. அதற்காகவா அவள் மௌனப் போராட்டத்தை நடத்துகிறாள்...?
'இல்லை.. இது வேற ஒன்றுக்காக...'
அந்த ஒன்று எது என்ற நினைவில் அவன் மனம் கனத்தது..
'எனக்கும்.. அவருக்கும் சம்பந்தமில்லையாமே..' அவள் ஜன்னி கண்டு பிதற்றிய பிதற்றலின் நினைவில் அவன் உதட்டைக் கடித்தான்...
இந்த வார்த்தை அவள் மனதில் ரணமாக பதிந்திருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது...
"ஏம்மா.. நீங்க வேற.. அவளுக்கு அவ அம்மா வீட்டிலேயே தங்கனும்னு ஆசை.. நான் விடலை.. நம்ம பண்ணை வீட்டிலே ஒருநாள்.. அங்கே ஒரு நாள்ன்னு... மாறிமாறித் தங்க விட்டேன்.. அந்தக் கோபத்தில உம்முன்னு இருக்கா..."
"அதுக்குத்தான் படிச்சுப்படிச்சுச் சொன்னேன்.. பெத்தவங்களுக்கும் பொண்ணு மேல பாசமிருக்கும்.. பொண்ணுக்கும் பெத்தவங்க மேல பாசமிருக்கும்ன்னு.. நீ கேட்காம பின்னாலேயே ஓடின..."
"அதனால என்னம்மா கெட்டுப் போச்சு...?"
"அவ... அக்கடான்னு அவ அம்மா வீட்டில இருந்துட்டு வர்றது கெட்டுப்போச்சில்ல...?"
"அக்கடான்னு அம்மா வீட்டில இருக்கிறதுக்கா எனக்கு கழுத்தை நீட்டினா..?"
"உன்கூடப் பேச என்னால ஆகாதுடா தம்பி..."
"பெத்தவங்க மேல வைக்கிற பாசத்தை புருசன் மேல இனிமே திருப்பச் சொல்லுங்க.. அப்படியெல்லாம் அவ இஷ்டத்துக்கு அவங்கம்மா வீட்டில போய் இருக்க முடியாது..."
"என்னடா முரளி பிடிவாதம் பிடிக்கிற...?"
"இப்ப உங்களுக்கு என்னம்மா வேணும்..? அவ சாப்பிடனும்.. அவ்வளவுதானே.. நான் போயி கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்..."
"டேய்.. அடிச்சுக் கிடிச்சு வச்சிராதேடா.. அவ ஏற்கனெவே பட்டினியாய் கிடக்கிறவ...", மேகலா பயந்து போய் விட்டாள்..
'என்னை என்ன ராட்சஸன்னு இவங்க நினைக்கிறாங்களா..?'
பாலமுரளிக்கு ஆயாசமாக இருந்தது.. அப்படி நினைக்க வைத்த ராதிகாவை... உண்மையிலேயே நான்கு அப்பு அப்பினால் என்ன என்ற ஆவேசம் அவனுக்குள் கிளர்ந்தது...
"நான் அடாவடிக்காரன்னே முடிவு பண்ணிட்டிங்களா..?"
பாலமுரளியின் கோபத்தில் மேகலா அடங்கிப் போனாள்.. அதே வேத்துடன் தடதடவென்று மாடியேறினான்..
புயல்வேகத்தில் அறைக்குள் வந்தவனை நிமிர்ந்து பார்த்த ராதிகா சோர்ந்திருந்தாள்.. பாலமுரளியின் கோபத்தில் கன்றியிருந்த முகத்தைப் பார்க்கப் பயந்தவளாக தலை கவிழ்ந்தாள்...
"உன் மனசில என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கே..?"
அதுவரை அவளுடன் தனிமையில் இருக்கும் போது பேசாதவன்.. மெனளத்தைக் கலைத்து பேசிவிட்டதில்.. அவள் உதட்டைக் கடித்தபடி முகம் திருப்பிக் கொண்டாள்..
"உன்னைத்தாண்டி கேட்கிறேன்..." அவன் உறுமினான்...
"நான் எதையும் நினைக்கல..." மெல்லிய குரலில் பதில் சொன்னாள் ராதிகா...
"எங்க அம்மாவை எனக்கெதிரா தூண்டிவிடறயா..?"
"எனக்கு அதெல்லாம் வராது..."
"பட்டினி கிடக்க மட்டும் வருமா..?"
"அதில உங்களுக்கென்ன கஷ்டம்..?"
"ஓங்கி ஒரு அப்பு அப்பினேன்னு வைய்யி.. இருக்கிற பல்லு பூராவும் உதிர்ந்துரும்..."
"இதானே உங்களோட நீண்டநாள் ஆசை..? அந்தக் குறை உங்களுக்கெதுக்கு..? சொன்னதைச் செஞ்சிருங்க.."
ராதிகா அசையாமல் பதில் கொடுக்க.. பாலமுரளி அவளையே உறுத்துப் பார்த்தான்.. அவன் பார்வையை உணர்ந்தாலும் அவள் நிமிர்ந்து கூடப்பார்க்கவில்லை...
"இங்கே பார்.. புருசன் பெண்டாட்டி சண்டை.. பெட்ரூமை விட்டுக் கடக்கக் கூடாது..."
"அது எனக்கும் தெரியும்.."
"தெரிஞ்சவ எதுக்காக அம்மா என்னிடம் கேள்வி கேட்கிறதைப் போல நடந்துக்கனும்...?"
"அது உங்களுக்கே தெரியும்..."
"உனக்கு இப்ப என்ன வேணும்..? நான் வீட்டிலே சாப்பிட்டாகனும்... இனி மறக்காம அதைச் செய்து வைக்கிறேன்.. இப்ப எழுந்திருச்சுவா..."
"எதுக்கு...?"
அவளது கேள்வியில் அவன் முறைத்தான்....
"ஏண்டி... என் உசிரைப் போட்டு இப்படிக்-குறைக்கிற..? விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு.. கைகேயி பெத்த பிள்ளை ராமன்னு சொல்லி வைக்கிறயே.. உன்னை என்னதான் பண்ணலாம்...? சாப்பிட வாடி.. நீ சாப்பிடலைன்னா.. இன்னைக்கு எனக்கு ராத்தூக்கம் போயிடும்டி.. என் அம்மா என்னை தூங்கவிடாம வறுத்து எடுத்துருவாங்க..."
ஆக அம்மாவுக்காகத்தான்... அவளது கோபத்திலிருந்து தப்பிக்கத்தான் அவன் அவளைத் தேடிவந்து பேசுகிறான்.. சாப்பிட அழைக்கிறான்... அவளுக்காக இல்லை.. அவள் பட்டினி கிடக்கிறாளே என்பதற்காக இல்லை...
ராதிகாவின் மனம் வலித்தது.. அந்த வலியிலும் அவள் கேட்டாள்...
"நீங்க...?"
"நானும்தான் கொட்டிக்கறேன்... போதுமா... எழுந்திருச்சு வா... பட்டினி கிடக்கிறாளாம் பட்டினி.. இதுக்கொன்னும் குறைச்சலில்ல.. செய்கிறதெல்லாம் ஏட்டிக்கு போட்டி.. இதில மாமியார் மெச்ச பட்டினி கிடந்து எனக்கு பாட்டு வாங்கிக் கொடுக்கிறா... அராஜகம் பண்றடி..."
அவளைத் திட்டினாலும்... அவள் கூடவந்து அமர்ந்து.. அவளுக்கு பரிமாறிவிட்டு.. அவனும் சாப்பிட ஆரம்பித்தான்...
மறைவாக நின்று.. மகனையும்.. மருமகளையும் கண்காணித்துக் கொண்டிருந்த மேகலாவின் முகத்தில் நிலவிய திருப்தியை ராதிகா பார்த்து விட்டாள்..
அதுவரை.. அவளுக்காக அவன் காண்பித்த மெலிதான அக்கறையில் அவள் மனம் நெகிழ்ந்திருந்தது.. மேகலாவைப் பார்த்தவுடன் அந்த நெகிழ்வு மறைந்து போய் விட்டது..
'ம்ஹீம்.. எனக்காக இவன் இதைச் செய்யலை.. இவனோட அம்மாவுக்காக செய்கிறான்...'
கணவனின் அக்கறையை நடிப்பென்று நினைத்த பின்னால் அவள் தொண்டையில் உணவு இறங்கவில்லை...
"என்னடி..?" அவன் அதட்டினான்..
"போதும்..." அவள் மறுத்தாள்..
"என்ன போதும்..? காலையில இருந்து பட்டினி கிடந்தவ ரெண்டே இட்லியில் எழுந்திருக்கிறாளாம்.. ஒழுங்காய் சாப்பிடு.. இல்லைன்னா நடக்கிறதே வேற..."
மிரட்டி அவளைச் சாப்பிட வைத்தவன்.. அன்றைய இரவின் தனிமையில் அவளிடம் சொன்னான்...
"எங்க அம்மா பாவம்... வயசானவங்கடி.. அவங்களைப் போட்டு படுத்தி எடுக்காதே..."
"நான் என்னவோ.. அத்தைகூட மல்லுக்கு நிற்கிறதைப் போலயில்ல பேசி வைக்கறிங்க..."
"அவங்க அதைக் கூட தாங்கிக்குவாங்க.. மகன் வாழட்டும்ன்னு அதை என்கிட்டச் சொல்லாமக்கூட மறைச்சுருவாங்க... ஆனா... என்கூட நீ மல்லுக்கு நிக்கறேன்னு தெரிஞ்சதுன்னு வைய்யி... அவங்களாலே.. அதைத் தாங்கிக்கவே முடியாது..."
'இவன்கூட நான் மல்லுக்கு நிற்கிறேனா..?' ராதிகா மனம் வெதும்பினாள்...
"உங்ககூட நானொன்னும் சண்டை போடல..."
"இப்ப நீ செஞ்சுக்கிட்டு இருக்கிறதுக்கு பேரென்ன..?"
"இது சண்டையா..?"
"பின்னே.. இதென்ன சமாதானமா..? இப்படி எதிரும் புதிருமா நீயும் நானும் நின்னா.. அம்மா தூண்டித் துருவ ஆரம்பிச்சிடுவாங்க... அதனால..."
"அதனால...?"
"நீ எப்பவும் போல இருந்து தொலைடி..."
"புரியலை..." ராதிகா பிடிவாதமாக விளக்கம் கேட்டாள்...
'இவளுக்கா புரியாது...' பாலமுரளியின் முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்தது...
 'சொல்லாலே உரைத்து பாதி...
    தன்னாலே அறிந்தது மீதி...'
அவளுக்குப் பிடித்த பாடல் வரிகளை எண்ணமிட்டான்.. இவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறானென்று புரியாதாம்...
'பாவி... மகாபாவி...' மனதிற்குள் அவளைத் திட்டித் தீர்த்தான்...
"சென்னைக்கு போறதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ.. அப்படி இருந்து தொலை..."
அவன் சொல்லிவிட்டான்... ராதிகா உதட்டைக் கடித்துக் கொண்டு அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள்... அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று சத்தியமாக பாலமுரளிக்கு பிடிபடவில்லை...
'உனக்கு காதல் வேணுமா..? நீ என்னைத் தொட மாட்ட... ஆனா நான் உன்னைத் தொட்டுத்தழுவனும்.. நீ எனக்காக ஏங்க மாட்ட.. ஆனா நான உனக்காக ஏங்கித் தவிக்கனும்... நீ என்கூட குடும்பம் நடத்த மாட்ட.. ஆனா... நான் உன்கூட குடும்பம் நடத்தத் துடிக்கனும்... எத்தனை பேராசைடா உனக்கு...? என் உடலென்னா இரும்பா..? இல்லைடா.. அது மெழுகு... ஒவ்வொரு முறையும் உன்னைத் தொட்டுத் தழுவி.. நீயும் என்னைத் தொட ஆரம்பிக்கும் போது... ஏதாவது ஒரு வினைவந்து நீ விலகித் தொலைக்கிற... அதுக்குப் பின்னால நான் படற பாட்டை நீ அறிவாயா..?'
ராதிகாவின் ஆழ்மனம் குமுறியது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -127
அம்மம்மா.. கேளடி தோழி...! -127
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-127.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-127.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy