அம்மம்மா.. கேளடி தோழி...! -124

124 உன் மூச்சுக் காற்றில் திளைத்த... என் கூந்தல் ஆடுகிறது.. என் மனத்தைப் போலவே.. அநியாயத்துக்கு இவன் அதிபுத்திசாலியாய் இருந்து தொ...


124
உன் மூச்சுக் காற்றில் திளைத்த...
என் கூந்தல் ஆடுகிறது.. என் மனத்தைப் போலவே..

அநியாயத்துக்கு இவன் அதிபுத்திசாலியாய் இருந்து தொலைக்கிறானே என்றிருந்தது ராதிகாவிற்கு... எப்படித்தான் இவ்வளவு துல்லியமாக மற்றவர்களின் மனதில் ஓடும் யோசனைகளை இவன் அறிகிறானோ என்று ஆச்சரியப் பட்டுப் போனாள் அவள்...
சங்கர் அதைத்தான் சொன்னான்...
"நாம போகலாம் ராதிகா... மாதேஷோட பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணலாம்.. நான் சொன்னா அவங்க கேட்டுக்வாங்கதான்.. ஆனா.. நீங்க ஷோபாவோட கிளாஸ்மேட்.. அவ குணம் எப்படிப்பட்டதுன்னு உங்களால தான் அவங்களுக்குப் புரிய வைக்க முடியும்..."
ராதிகாவால் மாட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும்...?
"அதெப்படிடீ உன்னாலே மாட்டேன்னு சொல்ல முடியும்..? நான் சொல்லியிருந்தா நீ மாட்டேன்னு சொல்லியிருப்ப... அவன் சொன்னா மாட்டேன்னு சொல்லிருவியா..?" பாலமுரளி மிகத் தெளிவாகக் கேட்டான்...
"நீங்க எதைச் சொல்லி நான் மாட்டேன்னு சொல்லியிருக்கேன்... பேசனும்னு பேசாதீங்க...", ராதிகா ரோசப்பட்டாள்...
"ஆமாண்டி... நீ ஊரான் பெண்டாட்டி பாரு... உன்கிட்ட பேசனும்கிறதுக்காக... என்னத்தையோ பேசி வைக்கிறேன்... அப்படியே ஒரு அப்பு... அப்பினேன்னு வை.. முப்பத்திரண்டு பல்லும் கழண்டு விழுந்திரும்..." அவன் பல்லைக் கடித்தான்...
"அப்பத்தானே... நீங்க என் பெண்டாட்டி கிழவியாகிட்டான்னு சொல்லி வேற ஒருத்தியை தேடிக்க முடியும்...?"
சும்மாயிருக்காமல் ராதிகா வாய் விட்ட விதத்தில் பாலமுரளி சீற்றம் கொண்டவனாக ஒர் பார்வை பார்த்தான்..
அந்தப் பார்வையில் அவன் சொன்னதைச் செய்துவிடும் உத்தேசம் தெரிந்ததால் ராதிகா அவசரமாக வாயை மூடிக் கொண்டாள்...
"என்ன தைரியமும்... தெனாவெட்டுமிருந்தா.. என்னைக் கேட்காம.. அவன் சொன்னதுக்கு சரின்னு நீ சொல்லியிருப்ப..?"
"இது ஹேமாவோட வாழ்க்கைங்க..."
"நீ உன்னோட வாழ்க்கையை மட்டும் பாரு.. ஊரில இருக்கிற யார்யாரோ... எப்படியோ போனா உனக்கென்ன வந்தது..? சமூகசேவை செய்ய ஊரில நிறைய பேர் இருக்காங்க உனக்கெதுக்கு அந்த வேலை..?"
"ஹேமா யாரோ இல்லைங்க.. என் பிரண்ட்..."
"நான் உன் புருசன்.. எனக்கு நீ இதில ஈடுபடறதில துளிக்கூட விருப்பமில்லை.. அவன் தெளிவா காய் நகர்த்தறாண்டி.. எதைச் சொன்னா உன்னை அவன்கூட வரவைக்க முடியும்ன்னு தெரிஞ்சு பிளான் பண்றான்.. தேனூத்துக்கு வந்தப்போ... அவனை வான்னு கூட கூப்பிடாதவ நீ.. உன்னை அவனோடு சேர்ந்து ஒரு இடத்துக்கு வரவைக்கிறான்னா அவன் எவ்வளவு கெட்டிக்காரன்னு நினைச்சுப் பாரு.."
'அப்படியும் இருக்குமோ...'
ராதிகாவுக்கு யோசனையாக இருந்தது... திடிரென்று சங்கர் வந்து அந்தச் செய்தியைச் சொன்னதும்.. ஹேமாவும்.. அவளும் திகைத்துப் போய் விட்டார்கள்.. ஹேமாவுக்கு சங்கரின் நண்பனான மாதேஷை யார் என்றே தெரியாது... சங்கர் செய்த திருமண ஏற்பாட்டைப் பற்றி அவள் அறிந்திருக்கவில்லை... ஆனால்.. முன்பின் தெரியாத அந்த மாதேஷின் குடும்பத்தார் அவளைத் தவறாக நினைக்கின்றார்கள் என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
"அந்த ஷோபாவுக்கு நான் என்னடி கெடுதல் பண்ணினேன்..? ஏன் என்னைப்பத்தி இல்லாததையும்.. பொல்லாததையும் போட்டுக் கொடுக்கிறா..?" என்று வெகுவாக வருத்தப்பட்டுப் போனாள் ஹேமா...திடிரென்று
"ஹால் டிக்கெட்டை காணோம்டி..." என்றாள்...
"எங்கேடி தொலைச்ச...?" ராதிகா கடிந்து கொண்டாள்...
"எக்ஸாம் ஹாலில் விட்டுட்டு வந்திருப்பேனோ..? இருடி நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்..", ஹேமா விரைந்து விட்டாள்...
அவள் வரும் வரைக்கும்... சங்கருடன் பேசிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ராதிகாவுக்கு நேர்ந்து விட்டது... அவனும் ஹேமாவிற்கு வந்திருக்கும் இக்கட்டை எப்படித் தவிர்ப்பது என்று பேச ஆரம்பிக்க... தோழியைப் பற்றிய அக்கறையில் ராதிகாவும் ஆழ்ந்து பேச ஆரம்பித்து விட்டாள்...
பாலமுரளி அவள் நினைவில் வாடுவான்... அவனாகப் போட்டுக் கொண்டிருந்த இரும்பு வேலியை தகர்க்கும் முடிவை எடுப்பான்.. அவளைத் தேடிக் கல்லூரிக்கே வந்து விடுவான் என்று அவள் கனவா கண்டாள்...?
'என்ன வரம் வாங்கிப் பிறந்தேனோ...'
இப்போதெல்லாம்... இப்படிச் சலித்துக் கொள்வதே ராதிகாவிற்கு வாடிக்கையாகிப் போனது...
இருந்திருந்து பாலமுரளி வரும் நேரம் பார்த்துத்தானா... அந்த சங்கர் வந்து தொலைக்க வேண்டும்...?
இதே போல் அவன் ஏற்கனெவே செய்திருக்கிறான் என்ற நினைவில் அவளுக்கு சங்கரின் மீது வெறுப்பு வந்தது...
"ஹேமாவுக்காக பார்க்கிறேன்..." அவள் முணுமுணுத்தாள்...
"அப்ப.. நீயும்.. நானும் விலக வேண்டியிருக்கும்..", பாலமுரளி தெளிவாகச் சொல்லிவிட்டான்...
அவளின் அதிர்ந்த பார்வையில் எதை உணர்ந்தானோ... மிகலேசாக உதட்டை மடித்துக் கடித்தான்.. பின் தோளைக் குலுக்கியபடி அழுத்தமான குரலில் சொன்னான்...
"எனக்கு வேற வழியில்லை.. நானும் ஆனமட்டும் சொல்லிப் பார்த்துட்டேன்... நீ கேட்கிற பாடாய் இல்லை... இங்கே எதுக்காக வந்திருக்கிற..? பரிட்சை எழுதத்தானே வந்திருக்க..? அந்த வேலையை விட்டு விட்டு வேற எந்த எந்த வேலையையோ பார்த்துக்கிட்டு இருக்கிற.. ஒழுங்காய் பரிட்சையை மட்டும் எழுதறதுனா இங்கே இரு.. இல்லை.. மத்த சமூக வேலையைத்தான் செய்வேன்னா.. உன் அப்பாவீட்டில கொண்டு போய் விட்டு விடுகிறேன்.. அப்புறம் உன் பாடு.. உன் வீட்டாளுக பாடு.. எனக்கும்.. உனக்கும் எந்தச் சம்பந்தமுமில்ல.."
ராதிகா இடிந்து போய் விட்டாள்...
இப்படி அவன் இதற்கு முன்னால் பேசியதே இல்லை.. பேச்சுக்குக்கூட பிறந்த வீட்டை.. என்வீடு என்று ராதிகா சொல்லி விடக்கூடாது.. உடனே சண்டைக்கு வந்து விடுவான்.. அவளை தனியறையில்தான் தள்ளி வைத்திருந்தான்.. அவனுடைய வாழ்க்கையிலிருந்து தள்ளி வைக்கவில்லை... பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தாலும்.. மனைவியென்ற உரிமையையும்.. மரியாதையையும்.. அவளுக்கு பரிபூரணமாக அளித்து வந்தான்...
அப்படிப் பட்டவனின் வாயிலிருந்து இது போன்ற வார்த்தைகள் வரலாமா...?
"உங்களுக்குப் பிடிக்காததை நான் பேசினா.. செய்தா.. அதற்காக என்னைத் திட்டுங்க.. அடிங்க.. உங்களுக்கு அதுக்கான உரிமை இருக்கு... அதுக்காக உங்களுக்கும்... எனக்கும் சம்பந்தமில்லைன்னு எப்படி நீங்க சொல்லலாம்...?"
ராதிகா சண்டைக்கு கிளம்பிவிட்டாள்... பாலமுரளியின் ஆழ்ந்த பார்வை அவளை ஊடுறுவியதில் அவளின் முதுகுத் தண்டு ஜில்லிட்டது...
"எனக்கு இதுதான் வேலையா...? வேற வேலை வெட்டி எனக்கில்லையா..? தேனூத்தில் இருந்தா ஒரு பேச்சு.. சென்னையில் கால் வைச்சா ஒரு பேச்சுன்னு நீ இருக்கிறதை சகிச்சுக்கிட்டு என்னால் இருக்க முடியாது.."
"அதுக்காக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவீங்களா...?"
"நீ மனதில் தோணினதையெல்லாம் செய்துகிட்டே இருந்தா... நான் வாய்க்கு வந்ததை பேச மாட்டேனா..?"
"இதே வார்த்தையை உங்க அம்மாவைப் பார்த்தோ.. இல்லை உங்க அக்காவைப் பார்த்தோ சொல்லுவீங்களா..?"
மனக் குமுறலோடு கேட்டாள் ராதிகா... கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவனின் புருவங்கள் சுருங்கின...
"புரியலை...", என்றான்...
"உங்களுக்குப் பிடிக்காத ஒன்னை உங்க அம்மா செய்துடறாங்க... உடனே உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லி.. உங்க வாழ்க்கையில இருந்து அவங்களை விலக்கி வைச்சுடுவீங்களா...?"
"ஏய்ய்ய்..."
"உங்க அக்கா.. இப்பத்தான் குணசாலியாய் பேசறாங்க... இதுக்கு முன்னாலே.. பொய்யாய் என்மேல பழி போட்டுப் பேசலையா.. அவங்களை நீங்க என்ன செஞ்சீங்க...? அவங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லி.. உங்க வாழ்க்கையிலிருந்து தள்ளி வைச்சுருவீங்களா...?"
"அறிவில்லாம பேசாதே..."
"கோபம் வருதில்ல... ஏன்..? அவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு ரத்த சம்பந்தம்.. சொந்தம்.. ஒருத்தங்க உங்களைப் பெத்தவங்க... இன்னொருத்தங்க உங்க கூடப் பிறந்தவங்க... நான் யார்...?"
பாலமுரளி அசைவற்று நின்றுவிட.. ராதிகா கோபாவேசத்துடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்...
"விவாகம்தாங்க ரத்தாகும்.. பெத்த உறவு.. கூடப் பிறந்த உறவெல்லாம் ரத்தாகாது... என்னவோ.. புருசன் பெண்டாட்டி சொந்தத்தை ஏழேழுஜென்ம சொந்தம்ன்னு கொண்டாடுகிறோமே.. அதுக்கு ஆயுள் இவ்வளவுதானா..?"
அவள் இப்படியெல்லாம் பேசக்கூடும் என்று அப்போதுதான் கண்டான் பாலமுரளி.. அவளின் அடி மனதிலிருந்த கோபமும்.. ரோசமும் பொங்கியெழுந்தது கொண்டிருக்க... ஒரு புது ராதிகாவை அன்று அவன் கண்ணெதிரே பார்த்தான்...
"அக்கினியை சாட்சியாய் வைத்து அதைச் சுற்றி வலம் வந்தோமே.. அந்த அக்கினி வந்து உங்களை கேள்வி கேட்காதா..? மந்திரங்களைச் சொல்லி என் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டிங்களே... அந்த மந்திரங்களுக்கு சக்தி இல்லையா..? அதுக்கான பதிலை நீங்க சொல்ல வேண்டாமா...?"
அவளது குமுறலில் வெளிப்பட்ட கோபத்தீயில் அவன் குளிர் காய்ந்து கொண்டிருந்தான்... திருமணத்தின் பவித்திரத்தில் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும்.. பக்தியும்.. வெளிப்படவெளிப்பட.. அவன் மனதில் ஜீவாலை குறைந்து கொண்டே வந்தது...
"பிரிக்க முடியாத பந்தம்... புருசன் பெண்டாட்டி பந்தம்ன்னு சொல்லுவீங்களே... அந்த வார்த்தை ஏன் மாறிப் போனது..? உங்களோடு நான் வாழ வந்த வாழ்க்கைப் பாதை ஒருவழிப் பாதைன்னு சொல்லுவீங்களே.. இன்னைக்கு வந்த பாதையிலேயே திரும்பிப் போகச் சொல்ல உங்களுக்கென்ன அதிகாரம் இருக்கு...?"
ராதிகாவின் கையில் சிலம்புதான் இல்லை... மற்றபடி.. அவள் கற்பின் கனலாக.. கனன்று கொண்டிருந்தாள்...
"நீங்க வான்னா வருகிறதுக்கும்... போன்னா போகிறதுக்கும்... நான் உங்க தோட்டத்து கிள்ளுக் கீரையில்லை..."
'இதை ஏற்கனெவே சொல்லிட்டாளே...'
"இந்த வார்த்தையை அத்தை முன்னாலே நீங்க சொல்லிருங்க பார்க்கலாம்..."
'எதுக்கெடுத்தாலும்.. இந்தப் பஞ்சாயத்தை மட்டும் கூட்டிவிடுவா'
"அவங்க என்னைத்தள்ளி வைக்கனும்னு சொன்ன உங்களைத்தான் தள்ளி வைப்பாங்க..."
'அந்த தைரியம்தானேடி உனக்கு...'
"உங்களுக்கு எப்படியோ.. எனக்கு கல்யாணம்கிறது வாழ்க்கையில ஒருதரம் தான்..."
'அடேங்கப்பா.. நான் மட்டும் ஏழுதரம் பண்ணிக்கிட்டேனா.. போடி.. போ..'
"தேனூத்து தான் என் ஊர்.. உங்க வீடுதான் என்வீடு.. இதை நினைப்பில வைச்சுக்கங்க..."
'நீ முதல்ல இதை நினைப்பில வை...'
"இவருக்கும்.. எனக்கும் சம்பந்தமில்லையாமில்ல.."
ராதிகா அழுது விட்டாள்.. சிந்திய கண்ணீர் துளிகளுடன் அவள் பண்ணை வீட்டின் மாடியறையில் தஞ்சம் புகுந்து விட.. அவளின் செல்போன் அலறியது.. எடுத்துப் பார்த்தான்.. ராஜேஸ்வரி அழைத்துக் கொண்டிருந்தாள்.. பேசுவதா.. வேண்டாமா.. என்று யோசித்தவன்.. வேறு வழியின்றி பேசினான்...
"மாப்பிள்ளை...! நீங்களா...!"
மரியாதை கலந்த உற்சாகத்துடன் ராஜேஸ்வரி கேட்க...
'மாமியாரே.. இது நீங்கதானா..' என்று கேட்கத் தோன்றியது பாலமுரளிக்கு...
"ராதிகா எக்ஸாம் முடிந்து இவ்வளவு நேரமாகியும் வீட்டுக்கு வரலைன்னு கவலையாகிருச்சு மாப்பிள்ளை.. அதுதான் போன் பண்ணினேன்..."
"கவலைப்படாதீங்க.. அவ என் கூடத்தான் இருக்கா..."
"அப்படிங்களா..? எப்ப வீட்டுக்கு வருவீங்க...?"
"அது.. வந்து அத்தை.. நாங்க எங்க வீட்டில இருக்கோம்..."
"எங்க வீடுன்னா..? தேனூத்திலயா..? அதுக்குள்ள எப்படி அங்கே போகமுடியும்..?"
"ஊஹீம்.. இங்கே சென்னையிலதான்... ராதிகா பேரில நான் வாங்கியிருக்க ஃபார்ம் ஹவுஸில இருக்கோம்..."
"ஓ... அது எதுக்கு மாப்பிள்ளை..? சென்னையில நம்மவீடு இருக்கிறப்போ... நீங்க தனியாய் தங்கறதா..? அது நல்லாயிருக்குமா..?"
"இருக்கட்டும் அத்தை.. இதுவும் எங்க வீடுதானே.. சென்னைக்கு வரும் போதாவது இங்கே வந்து தங்கிப் போனாத்தானே நல்லா இருக்கும்...?"
"உங்களுக்கு நல்லாயிருக்கும்... எங்களுக்கு அப்படியிருக்காது.. இன்னைக்கு வேணும்னா அங்கே இருந்துட்டு வாங்க.. ஆனா.. விடிஞ்சதும் டான்னு இங்கே ஆஜராகிடனும்.. ஆமா.. சொல்லிட்டேன்.." ராஜேஸ்வரி போனை வைத்து விட்டாள்...
ராதிகா மதியமும் சாப்பிடவில்லை... மாலையில் காபி டிபன் சாப்பிடவாவது அவளை அழைத்துச் செல்லலாம் என்று மாடியறைக்குச் சென்ற பாலமுரளி திடுக்கிட்டான்..
ராதிகாவிற்கு காய்ச்சல் வந்திருந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -124
அம்மம்மா.. கேளடி தோழி...! -124
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-124.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-124.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy