அம்மம்மா.. கேளடி தோழி...! -121

121 நீ விட்டுச் சென்ற நினைவுகளில்.. மூழ்கியே மூச்சுத் திணறினேன்... விசிலடித்தபடி மாடிப்படிகளில் இறங்கி வந்த பாலமுரளியைக் கண்டதும்...


121
நீ விட்டுச் சென்ற நினைவுகளில்..
மூழ்கியே மூச்சுத் திணறினேன்...

விசிலடித்தபடி மாடிப்படிகளில் இறங்கி வந்த பாலமுரளியைக் கண்டதும் வள்ளியம்மாள்.. பொன்னுச்சாமியின் காதுகளில் கிசுகிசுத்தாள்...
"பாத்தியாய்யா... பொஞ்சாதியைப் பிரிஞ்சு ஒருவாரம்தான் ஆகுதாம்... அதைத் திரும்பப் பார்க்கப் போறதுக்கு ஐயா மனசுக்குள்ள கும்மாளம் கொடிகட்டிப் பறக்குது... நீயும் இருக்கியே..."
"இன்னாம்மே.. சந்தடி சாக்கில எங்கால வாரி வுடற.."
"ஐய்யே.. அடங்குய்யா.. நமக்கு கண்ணாளம் ஆனவுடனே ஆடிமாசம் வந்து தொலைச்சது..."
"அதுவா வந்ததுக்கு நான் இன்னாம்மே பண்ணுவேன்... நானா அதை இட்டாந்து வுட்டேன்...?"
"போய்யா.. நீயும் உன் பேச்சும்.. ஆடிமாசம் போனவள... தேடி வந்தியாய்யா..."
"அதான் உங்க வூட்டுல இருந்து இட்டாந்து வுட்டாங்களே..."
"வுட்டாங்க.. நீயிருந்தியா வூட்டுல..? அதான் சாக்குன்னு.. ஆடி மாசமே கழண்டுக்கிட்டு போன ஆளு.. ஆடிபோயி.. ஆவணிபோயி.. புரட்டாசியும் போயி.. ஐப்பசி மாசம் தானேய்யா வந்து சேந்த..."
"அது.. அதுவந்து.."
"இன்னா.. வந்து போயின்னு ராகம் போடற..."
"சேக்காளி.. பசங்க கூப்பிட்டாங்கம்மே..."
"எங்கே.. சினிமாவுக்கா..?"
"இல்லேம்மே.. கேரளா பக்கம் போயிட்டு வரலாமுன்னு சொன்னாங்க..."
"நீயும் பின்னாடியே போயிட்ட... அந்தப் பக்கம் பொஞ்சாதி.. அப்பன் வூட்டுக்குப் போனா.. இந்தப் பக்கம் கம்பியை நீட்டின ஆளுதான நீ... அங்கன பாருய்யா.. புருசன் பொஞ்சாதின்னா இப்படி இருக்கனும்..."
வள்ளியம்மாள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க...
"என்ன பொன்னுச்சாமி.. வள்ளியம்மா என்ன சொல்லுது..?" என்று கேட்டபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான் பாலமுரளி...
"ஒன்னுமில்லங்கய்யா.. அம்மா எப்ப வருவாங்கன்னு பேசிக்கிட்டு இருந்தோம்..."
வள்ளியம்மாள் பதவிசாகப் பதில் சொல்லியபடி பாலமுரளியின் முன்னால் தட்டை வைத்துப் பரிமாற ஆரம்பித்தாள்...
"பரவாயில்லையே... நீ கிச்சடி கூடப் பண்ணுவியா...?" பாலமுரளி ஆச்சரியப்பட்டான்...
"செட்டியார் வீட்டில வேலை செஞ்சவ முதலாளி.. அவங்க கைப்பக்குவம் அப்படியே வரும்..", பொன்னுச்சாமி பெருமைப்பட்டுக் கொண்டான்...
வயிற்றுப் பசியை அப்போதுதான் உணர்ந்தவனாக திருப்தியுடன் சாப்பிட்டு முடித்த பாலமுரளி...
"ருசியாய் இருந்துச்சு வள்ளி.. இதுக்காகவே பொன்னுச்சாமிக்கு இந்த மாசத்திலயிருந்து சம்பளத்தை ஆயிரம் ரூபாய் அதிகமாக்கிட்டேன்..."
"ஐயா..!"
கணவனும்... மனைவியும் ஆனந்தத் திகைப்பில் ஆழ்ந்திருக்க... பாலமுரளி வாசலுக்கு வந்து காரில் ஏறினான்.. ராதிகாவைப் பார்க்கப் போகும் நினைவில் அவன் மனதில் சந்தோச நீரூற்று பொங்கிக் கொண்டிருந்தது...
அப்போதிருந்த மனநிலையில் யார் எதைக் கேட்டாலும்.. இதோ வைத்துக் கொள் என்று தந்து விடும் மனநிலையில் அவன் இருந்தான்...
கொடுப்பதில் இருக்கும் சந்தோசத்தை உணர வைத்த ராதிகாவின் மீது அவனுக்குள் காதல் அதிகமானது...
'வந்துக்கிட்டே இருக்கேண்டி...'
அவனைப் பார்த்தவுடன் அவள் முகம் எப்படி மலரும் என்ற நினைவில் அவன் மனதில் எதிர்பார்ப்பின் அலைகள் உற்பத்தி ஆகின...
'காலையில போயி.. மதியம் சாப்பிட வர்றதுக்கே அந்தப் பார்வை பார்ப்பா.. இப்ப பார்த்து ஒரு வாரமாச்சு.. ஓடிவந்து கட்டிக்கிட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல...'
தென்னந்தோப்பில் ராதிகா காட்டிய நெருக்கம் தந்த நினைவில் அவன் காரின் வேகத்தைக் கூட்டினான்..
'ம்ம்... என்னதான் விழுந்தடிச்சுக்கிட்டு ஓடினாலும்.. அவ வரும்போதுதானே வருவா.. பரிட்சையை பாதியில விட்டுவிட்டா வரமுடியும்...'
தன் வேகத்தைக் குறித்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான்...
சிக்னலில் கார் நின்றது.. அவனுக்கு முன்னாலிருந்த ஹீரோஹோண்டாவில் அமர்ந்திருந்த பெண்ணின் நீண்ட பின்னலில் அவன்மனம் ஆடியது.. 
'அவ முடியை விரிச்சு விட்டா தரையைத் தொடும்.. அப்படியே மோகினிதான்.. மயக்கும் மோகினி...!'
அவனறிந்த அவளின் உடலழகில் அவன் மனம் மயங்கியது...
'த்ச்சு.. தேவையில்லாம அவளைத் தள்ளி வைச்சுட்டு இப்ப அவஸ்தைப் படறேன்... அவ கண்ணு பூராவும் என்மேலயே இருக்கு... லேசாப் பார்த்தாலே மயங்கிப் போறா.. அவளைத் தொட்டு ஆளாம... விட்டு விலகி நின்னு.. இத்தனை நாளையும் வீணடிச்சுட்டேனே..'
பார்க்கப் போவது மனைவியை என்பது பாலமுரளிக்கு மறந்து விட்டிருந்தது.. என்னவோ.. காதலியை முதன் முதலாகச் சந்திக்கப் போவதைப் போல ஒரு பரவச அலை அவன் மனதில் உற்பத்தி ஆகியிருந்தது...
'ஹப்பா... ஒருவழியா சிக்னல் விழுந்துருச்சு...'
காரைக் கிளப்பியவன் படு வேகமாக ஓட்டினான்.. வாயுவேகம்... மனோ வேகம்.. என்பதைப் போல சாலையில் கார் பறந்தது... ராதிகாவின் கல்லூரி வளாகத்திற்குள் காரைச் செழுத்தியவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்..
'இன்னும் நேரமிருக்கு போல...'
காரை விட்டு இறங்கினால் எங்கே உட்காருவது என்ற சிந்தனையுடன்... காருக்குள்ளேயே ஏஸியை போட்டுவிட்டு பாடலை ஒலிக்க விட்டபடி உட்கார்ந்து விட்டான் பாலமுரளி...
    "அம்மம்மா.. கேளடி தோழி..!
             நிலாவினில் நின்றொரு நாழி...!
    சொல்லாலே உரைத்தது பாதி...
             தன்னாலே அறிந்தது மீதி...
                 அம்மம்மா...!"
எல்.ஆர். ஈஸ்வரியின் ஆழ்ந்த குரலில் ஒலித்த பாடலின் நுணுக்கங்கள் உணர்த்திய உணர்வில் அவன் மூழ்கி விட்டான்...
அந்தப் பாடல்... ராதிகாவிற்கு பிடித்தமான பாடல்.. அடிக்கடி இதை ஒலிக்க விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பாள்... அவள் விரும்பினாளே என்றுதான் பழைய பாடல்களின் சிடியில் அந்தப் பாடலையும் சேர்த்து பதிவு பண்ணியிருந்தான் பாலமுரளி...
இப்போது அந்தப் பாடல் ஒலித்த போது... ராதிகா அவன்மீது மயக்கத்துடன் கிறங்கிச் சரிந்த அந்த நாளின் நினைவு அவன் மனதில் வந்தது..
'அன்னைக்கு மட்டும் இந்த போன் கழுதை சத்தம் போடாம இருந்திருந்தா.. நல்லாயிருந்திருக்கும்... இதுதான் நேரம் காலம் தெரியாம சத்தம் போட்டுக் காரியத்தை கெடுத்து வைக்குதே...'
கொலைவெறியோடு கையிலிருந்த செல்போனை பார்த்தான் பாலமுரளி... விட்டால் கண்ணகி சிலம்பை எறிந்ததைப் போல.. அந்த செல் போனையும் விட்டெறிந்து சுக்கு நூறாக்கியிருப்பான்.. அது பாவம் போல அமைதி காத்ததில் விட்டு வைத்தான்...
செல்போனை உடைத்தெறியும் ஆசை அடிக்கடி அவனுக்கு வருவதுண்டு.. அந்த அளவுக்கு அவனது செல்போனின் அழைப்பு அவனைச் சோதித்திருந்தது...
இரண்டு முறை அவனாகப் போட்ட இரும்பு வேலியை அவன் உடைக்க யத்தனித்துக் கொண்டிருந்த போது.. அந்த செல்போனின் அழைப்புக்கள் அவனது யத்தனத்தையே உடைத்து... இரும்புவேலியை இறுக வைத்திருக்கின்றன.. அந்த செல் போனின் அழைப்புக்கள் மட்டும் வந்திராமல் இருந்திருந்தால்...?
பாலமுரளி... சீட்டில் சாய்ந்து கண்மூடிக் கொண்டான்...
'எவ்வளவு ஆசையாசையா கல்யாணத்துக்கு நாள் பார்த்தேன்...'
பழைய நினைவுகள் அவன் மனதில் வந்து நின்றன..
'அவளும் சந்தோசமாத்தான் இருந்தா.. நிச்சயத்துக்கு முதநாள் நான் கூப்பிட்டதும் பண்ணை வீட்டுக்கு வந்தா.. அதுக்குப் பின்னாலே...'
அந்த அனுபவத்தின் நினைவில் அவன் உடலில் சூடேறியது...
"தள்ளாடி... தள்ளாடி நடமிட்டு..
             அவள் வந்தாள்...
    சொல்லாமல் கொள்ளாமல்..
             அவளிடம் நான் சென்றேன்..
    அது கூடாதென்றாள்..
             மனம் தாளாதென்றாள்..
    ஒன்று நானே தந்தேன்..
             அது போதாதென்றாள்..."
அவனது மனநிலையை உணர்ந்ததைப் போலக் காரில் பாடல் ஒலித்தது...
'இது யட்சினியின் வேலை போல..' அவன் சிரித்துக் கொண்டான்...
"அனுபவம் புதுமை..
             அவளிடம் கண்டேன்...
    அந்நாளில் உண்டான..
             பொல்லாத எண்ணங்களே...
    ஆஹா.. பொன்னான கைபட்டு..
             புண்ணான கன்னங்களே...
    லாலால.. லாலால.. லா..."
அன்று கண்ட அனுபவத்தை மீண்டும் காணத் துடித்தான் அவன்...
'இன்னும் என்ன செய்கிறா..'
பொறுமையிழந்தவனாக செல்போனை கையில் எடுத்தான்...
'போன் பண்ணிக் கேட்கலாமா...'
அது வேண்டாம் என்று தோன்ற.. செல்போனை காரில் போட்டான்...
'பரிட்சை ஹாலில் போனை அட்டெண்ட் பண்ணலாமோ... கூடாதோ...'
அது மட்டுமில்லாமல் திடிரென்று அவள் முன்னால் சென்று நின்று அவள் கண்களில் தெரியும் மின்னலைக் காண வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது..
'பிரமிச்சுப் போய் நின்னுடுவா...'
அவனைக் கடந்து இரு பெண்கள் பேசிக் கொண்டே போக.. கைக்கடிகாரத்தை மீண்டும் பார்த்தான்...
'பரிட்சைமுடிகிற நேரம்தான்... இப்ப வந்திருவா...'
இப்போது பெண்கள்.. பரவலாக வெளியே வர ஆரம்பித்தார்கள்.. பாலமுரளி கூர்மையான பார்வையுடன் கவனித்துக் கொண்டிருந்தான்... தொலைவில் ராதிகா வருவதைப் போலத் தெரிந்தது...
'வந்துட்டா..'
வருடக் கணக்கில் பிரிந்திருந்த மனைவியைப் பார்க்கும் தாபத்துடன் அவன் பார்த்தான்..
அவள் சேலை கட்டியிருந்தாள்.. நேர்த்தியான மடிப்புடன் அதை அவள் கட்டியிருந்த விதம்.. அழகானதாக இருந்தது.. பாலமுரளியை வசீகரிக்கும் கூந்தலை நீண்ட பின்னலாக்கியிருந்தாள்.. அவள் நடந்து வந்தபோது... தாள லயத்துடன் அது ஆடிய விதத்தில் பாலமுரளியின் மனம் சிக்குண்டது..
இறங்கி எதிரே நடந்து போய் அவள் கண்முன்னால் நிற்க வேண்டும் போலத் தோன்ற.. கார் கதவில் கையை வைத்தான்...
'அது யாரு... அவ கூட வர்றது...?'
ஹேமாவை இனம் கண்டு கொண்டவனின் புருவங்கள் சுருங்கின...
'இவ கூடப் பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்.. அதை மீறி பேசறாளா...?'
கோபம் வந்தாலும்.. தனிமையில் அதைக் கண்டித்துக் கொள்ளலாம் என்ற நினைவுடன் கார் கதவைத் திறக்கப் போனான்..
அப்போதுதான் அது நிகழ்ந்தது... அவனது காரைக் கடந்து போன ஒரு கார்.. ராதிகாவை சமீபத்து நின்றது.. கார் கதவைத் திறந்து கொண்டு சங்கர் இறங்கினான்...
'இவனா..! இவன் எதுக்காக இங்கே வந்திருக்கான்...'
பாலமுரளியின் விழிகள் தீங்கங்குகளாக மாறின...
சங்கர்... ஹேமாவின் அருகில் சென்று ஏதோ பேசினான்... அவள் ராதிகாவிடம் எதையோ சொன்னாள்.. ராதிகா.. சங்கருடன் பேச ஆரம்பித்து விட்டாள்...
அவர்கள் மூவரும் சுற்றுப் புறத்தை மறந்தவர்களாக பேசிக் கொண்டிருக்க... பாலமுரளியின் உடலில் இருந்த காதல் உணர்வுகள் காணாமல் போய் கொண்டிருந்தன...
மூவராகப் பேசிக் கொண்டிருந்தவர்களில் ஹேமா மட்டும் விலகி... கல்லூரியை நோக்கிப் போய்விட.. சங்கரும்.. ராதிகாவும் பேசியபடியே நகர்ந்து... மர நிழலில் கிடந்த.. சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்...
'வேணும்னே இவங்க ரெண்டு பேரையும் கோர்த்து விட்டுட்டு அந்த ஹேமா போயிட்டாளா.. அவளுக்கு இதே வேலைதானா..? வேற பொழைப்பே இல்லையா...?'
பாலமுரளியின் ரத்தம் கொதித்தது...
ஹேமா திரும்பி வந்த பாடாக இல்லை... சங்கரும்.. ராதிகாவும் பேசிக் கொண்டிருந்த பேச்சை நிறுத்தவுமில்லை... வெகுநேரம் கழித்தே ஹேமா திரும்பி வந்தாள்... வந்தவள் கிளம்பும் உத்தேசமில்லாதவளைப் போல.. ராதிகாவின் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.. அவர்கள் மீண்டும் பேச ஆரம்பித்தனர்..
'இறங்கிப்போய் அவளை நாலு சாத்து சாத்தி.. இழுத்துக்கிட்டு வரலாமா..?' பாலமுரளிக்குள் ஆத்திரம் பீறிட்டது...
சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டவனாக அதை அடக்கிக் கொண்டான்..
ஒருவழியாக சங்கர் காரில் ஏறிக் கிளம்ப... அவனுக்கு ராதிகாவும்.. ஹேமாவும்.. கையசைத்து விடை கொடுத்தார்கள்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாலமுரளியின் கொலைவெறி அதிகமானது...
'எவ்வளவு திமிரிருந்தா.. அவனுக்குப் போய் டாட்டா காண்பிப்பா...'
அவனுடைய காரைக் கடந்து போக முனைந்த ராதிகாவைக் கண்டதும் பாலமுரளிக்கு வெறுத்துப் போய்விட்டது...
'காரைக் கூடக் கவனிக்கல.. இவ்வளவுதானா... இவ...?'
அதற்குள் ராதிகா காரைக் கவனித்து விட்டாள்.. அவள் கண்களில் மின்னல் வந்தது... அதைக்கண்ட பாலமுரளிக்கு எரிச்சல்தான் வந்தது...
'இதுக்கொன்னும் குறைச்சலில்ல...'
ராதிகா ஆவலுடன் காரின் முன்பக்கமாக வந்து குனிந்து பார்த்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -121
அம்மம்மா.. கேளடி தோழி...! -121
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-121.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-121.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy