அம்மம்மா.. கேளடி தோழி...! -118

118 என் மடிமீது நீ உறங்கு... தாலாட்ட நான் இருக்கிறேன்... "இன்னையோட தோப்பு முழுசையும் நீ சுத்திப் பார்த்திட்ட..." பாலம...


118
என் மடிமீது நீ உறங்கு...
தாலாட்ட நான் இருக்கிறேன்...

"இன்னையோட தோப்பு முழுசையும் நீ சுத்திப் பார்த்திட்ட..."
பாலமுரளி சொன்னதும் கண்கள் முழுவதும் சந்தோசத்தை நிரப்பி...
"அப்படியா...?" என்று ஆச்சரியப்பட்டாள் ராதிகா...
"என்ன அப்படியா..? என்னமோ மலையை வெட்டி முடிச்சதைப் போல பெரிசா பில்ட் அப் கொடுக்கிற... தோப்பைத்தானே சுத்திப் பார்த்த...?"
"எவ்வளவு பெரிய தோப்பு இது.. இதைச் சுற்றிப் பார்த்து முடிச்சிட்டேனே.. எனக்கு இது பெரிய விசயம்தான்.."
"ம்ஹீம்... செடியை வைச்சுத் தோப்பாக்கின எங்க பாட்டன் முப்பாட்டன்கூட இந்த அளவுக்கு பெருமைப் பட்டிருக்க மாட்டாங்கடி.. இந்த ஒருவாரமே தோப்பைச் சுத்திட்டு இப்படி பெருமைபட்டுக்கற...? நான் ஒரு மணி நேரத்திலேயே இத்தனையையும் சுத்தி வருவேன்.. தெரியுமா...?"
"உங்ககூட போட்டிக்கு வந்தேனா...?"
"வந்துதான் பாரேன்..."
"அத்தை முன்னாலே குணசாலியைப் போல பேசி கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டு... தனியா உங்ககிட்ட மாட்டினவுடனே போட்டிக்கு கூப்பிடறீங்களா..? இருங்க அத்தைக்கு போன் போடறேன்..."
"அடிப்பாவி.. புருசனையே மிரட்டறியா...?"
அவன் கேலி பேசியபடியே லேசாகத் திரும்பிப் பார்க்க... ராதிகா இமைகளைச் சிமிட்டினாள்...
"ஏய்ய்..." அவன் நின்றே விட்டான்...
"என்ன..?" ஒன்றும் அறியாதவளைப் போல அவள் வினவினாள்...
"கண்ணடிக்கிறயேடி.." ஆச்சரியப்பட்டான்...
"யாரு நானா...?" அவள் அப்பாவியாய் இமை கொட்டினாள்...
பாலமுரளிக்கு சிரிப்பு வந்து விட்டது... அவளது காதைப் பிடித்துத் திருகியதில்...
"ஆ.. அத்தான்.. வலிக்குது..." என்று பொய்யாக அவள் அலறினாள்...
அவளின் குறும்புத்தனத்தில்... அவன் நெடுநேரத்திற்கு சிரித்துக் கொண்டிருந்தான்... அடர்ந்த செடி கொடிகளின் இடையே போன பாதையில் அவன் திரும்பிய போது...
"எங்கே போகிறோம்...?" என்று அவள் கேட்டாள்...
"தோப்பைப் பார்த்து முடிச்சாச்சு.. இது பக்கத்திலே வேறொன்று இருக்கு.. அதைப் பார்க்க வேணாமா...?" அவன் மர்மமாகப் புன்னகைத்தான்.
'என்னவா இருக்கும்...' ராதிகாவின் மனம் குறுகுறுத்தது...
அதை அறியும் ஆவலில் வாயடிப்பதைக் கூட மறந்து போனவளாக சுற்றுப்புறத்தின் பசுமையை ரசித்தபடி மௌனமாக அவன் கூடப் போனாள் ராதிகா...
அந்தப் பாதையின் முடிவிலிருந்த திருப்பத்தில் அவள் திரும்ப முனைந்த போது...
"பொறு..." என்றான் முரளி...
எதற்காக நிற்கச் சொல்கிறான் என்று புரியாதவளாக அவள் நின்றபோது... அவன் கரங்கள்.. அவள் கண்களைப் பொத்தின...
"இப்ப நட..." என்றான்...
அவள் நடந்தாள்... சில அடிகளை அவள் எடுத்து வைத்த பின்னால்.. அவள் கண்களைப் பொத்தியிருந்த அவனது கரங்கள் விலகின.. கண்களைக் கசக்கியபடி எதிரே பார்த்த ராதிகா பிரமித்து விட்டாள்...
'ஹோ...'வென்ற பேரிறைச்சலுடன் அருவி கொட்டிக் கொண்டிருந்தது... வெள்ளைப் பஞ்சுப் பொதிகள் மொத்தமாக விழுவதைப் போலத் தோன்றிய அந்தக் காட்சியில் ராதிகா மெய் மறந்து விட்டாள்...
பக்கத்தில் பாலமுரளி நின்று கொண்டிருப்பதையும் மறந்தவளாக...
"ஹை.. அருவி.." என்று கைகொட்டி.. குதூகலித்தாள்..
"எப்படிங்க... இங்கே அருவி இருக்குன்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியாதே..."
அவள் குழந்தையாகக் கேட்டபோது பாலமுரளி செல்லமாக அவள் தலையில் சின்னதாக ஒரு குட்டை வைத்தான்...
"மக்கு.. மக்கு.. நீ இருக்கிறது தேனூத்து..."
"அதுக்கென்னவாம்...?"
"இது குற்றாலத்துக்குப் பக்கத்து கிராமம்டி.. இங்கே அருவி கொட்டாம இருந்தால்தான் ஆச்சரியப்படனும்.. அருவி கொட்டினா ஆச்சரியப்படுவியா..?"
"ஹையோ.. நான் நினைச்சே பார்க்கலை தெரியுமா...?"
"நினைக்காத பல விசயங்களை நாம பார்க்க நேர்வதுதான் வாழ்க்கை... புரியுதா...?"
"இதுதான் சாக்குன்னு பாடம் எடுக்க ஆரம்பிக்க வேணாம்..."
பாலமுரளியிடம் விளையாட்டாகப் பேசியபடி திரும்பியவள் அப்படியே நின்று விட்டாள்.. அசையாமல் நின்றவளை பதட்டத்துடன் அணுகிய பாலமுரளி...
"என்னடி ஆச்சு...?" என்று கவலையுடன் கேட்டான்...
ராதிகா பேச வாய் திறந்தாள்... அவளால் பேச முடியவில்லை...
"அங்கே.. அங்கே.." குழறியபடி அவள் கை காட்டிய திசையில் ஊன்றிப் பார்த்தான் பாலமுரளி...
அருவி கொட்டிக் கொண்டிருந்த இடத்தில் பெரும் பள்ளம் இருந்தது.. அதில் வழிந்து நிரம்பிய அருவிநீர் ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்தது... ஆற்றோரமாக கரை இருந்தது.. ஆற்றங்கரையில் பெரிய அரசமரம் இருந்தது... அரச மரத்தடியில் பெரிய சிமிண்ட் மேடை இருந்தது... மேடையின் மேல் பிள்ளையார் வீற்றிருந்தார்...
ராதிகாவின் விரல் கோவிலை நோக்கித்தான் நீண்டிருந்தது...
"அரசமரத்தடி பிள்ளையார்..! வா.. போய் சாமி கும்பிடலாம்..."
ராதிகாவின் திக்பிரமை எதனால் ஏற்பட்டது என்பதை உணராதவனாக பாலமுரளி அவளை... பிள்ளையாரின் அருகே அழைத்துச் சென்றான்.. ராதிகாவின் விழிகளில் தெரிந்த மிதமிஞ்சிய ஆச்சரியத்தையும்... பயத்தையும் பார்த்தவனுக்கு... அது ஏனென்று விளங்கவில்லை...
"சாமி கும்பிடுடி.." கைகளைக் கூப்பினான்...
செழுத்தப்பட்டவளைப் போல.. இயந்திரமாக ராதிகாவும் கரங்களைக் குவித்தாள்... பிள்ளையாரின் முன்னாலிருந்த விபூதியையும்... குங்குமத்தையும் எடுத்து  அவள் நெற்றியில் இட்டபோதுதான் பாலமுரளி அதை உணர்ந்தான்...
ராதிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது...
"ராதிகா..." திகைப்புடன் அவன் அவளை உலுக்கினான்...
"நம்ப முடியலைங்க..." அவள் விசும்பினாள்...
'எதைச் சொல்றா...' அவன் யோசித்தான்...
'ஒருவேளை.. இவகிட்ட இவ்வளவு இணக்கமா நான் பேசிப் பழகறதை நம்ப முடியலைன்னு சொல்கிறாளோ...'
அவனால் மறுமொழி கூற முடியவில்லை... ராதிகா... பிள்ளையார் கோவிலின் படிகளில் அமர்ந்து விட்டாள்.. அந்த அருவிக்கரையும்.. அரச மரமும்... அதனடியில் வீற்றிருந்த பிள்ளையாரும்... அன்றொரு நாள் அவள் கண்ட கனவின்.. நிஜ வடிவங்களாக அவள் கண்முன் நின்றதில் அவள் அதிர்ந்து போயிருந்தாள்...
'இது எப்படி சாத்தியம்...'
அவளால் நம்ப முடியவில்லை... சில மாதங்களுக்கு முன்னால் அவள் ஒரு கனவைக் காண்கிறாள்.. அதில் அருவி வருகிறது.. ஆற்றங்கரை வருகிறது.. அரசமரத்தடி வருகிறது.. அதில் வீற்றிருக்கும் பிள்ளையாரும் வருகிறார்... அந்தக் கனவின் முடிவில் அவளை அந்த ஆற்றங்கரையில் இறக்கி விட்டுவிட்டு மேகம் பறந்து விடுகிறது.. அவள் அங்கேயே நிலை கொள்கிறாள்...
அடுத்த சிலதினங்களில் அவள் ஒருவனைச் சந்திக்கிறாள்.. அன்மேல் காதல் கொள்கிறாள்... அவனுடன் அவளுக்கு திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது... அவனுடன் வாழ வந்தவள்.. அவள் வாழ்க்கைப் பட்ட கிராமத்தில்... அவள் கனவில் கண்ட அதே அருவிக் கரையையும்.. அரச மரத்தடி பிள்ளையாரையும் பார்க்கிறாள் என்றால் இதை என்னவென்று சொல்லுவது...?
"இதைக் கடவுளின் சித்தம்ன்னு சொல்லனும்மா..." மெய்சிலிர்த்துச் சொன்னாள் மேகலா...
பாலமுரளியிடம் அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் வீடுதிரும்பிய ராதிகா.. இரவு உணவிற்குப் பின்னால்... பாலமுரளி மாடிக்குச் சென்று விட்ட பிறகு... மேகலாவைத் தேடிச் சென்று அதைச் சொன்னாள்...
மேகலா ஆச்சரியப்பட்டுப் போனாள்...
"கடவுளே.." என்று கரம் கூப்பி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்...
"ஒரு செகண்ட் எனக்கு பயம் வந்திருச்சு அத்தை..." ராதிகாவின் கண்களில் மிரட்சி இருந்தது...
"எதுக்கு பயம்...? பைத்தியம்..."
"அது எப்படி அத்தை...? அப்படியே நான கனவில் பார்த்ததைப் போலவே அந்த இடம் இருக்கு... அரசமரத்தடி பிள்ளையாரும் இருக்கிறார்..."
ராதிகா இன்னமும் அந்த அதிர்விலிருந்து மீளவில்லை என்பதைக் கண்டு கொண்டவளாக மேகலா.. மகனை செல்போனில் அழைத்தாள்...
"ஏம்மா... சயின்ஸ் வளர்ந்துருச்சுங்கிறதுக்காக... ஒரே வீட்டில இருந்துக்கிட்டு மாடியில இருக்கிறவனை போன் பண்ணிக் கூப்பிட்டு வைக்கனுமா...?" என்று கேட்டபடி பாலமுரளி கீழே வந்தான்...
"இவ பயந்து போயிருக்காடா..."
திரும்பவும் காய்ச்சல் என்று ராதிகா விழுந்து வைத்து விடுவாளோ என்ற பயம் மேகலாவுக்கு... அதை உணர்ந்தவனாக பாலமுரளி வாய் விட்டுச் சிரித்தான்...
"என்னடி.. சாப்பிட்டதும் தூங்க வராம.. இங்கே உட்கார்ந்து அம்மாவை அரட்டிக்கிட்டு இருக்கியா..? என்ன விசயம்...?"
மேகலா விவரத்தைச் சொன்னதும் அவன் ஆச்சரியப்பட்டுப் போனான்...
"அதனாலதான் இவ அப்படி முழிச்சு வைச்சாளா..? நான் என்னவோ... ஏதோன்னு நினைச்சேன்..."
"என்னடா நினைச்சே..?"
"உங்களுக்குத் தெரியாதும்மா.. இவ வெறும் வாய்தான் அடிப்பா.. மத்தபடி.. தைரியத்துக்கும்.. இவளுக்கும் ரொம்பத்தூரம்.. இப்படித்தான் திருநெல்வேலிக்கு போயிட்டு வார வழியில் ஷோபாவை தூரத்திலே பார்த்துட்டு மோகினிப் பேய்ன்னு அலறிட்டா.."
பாலமுரளி சிரித்தபோது... கூடச் சேர்ந்து மேகலாவும் சிரிக்கவில்லை... மாறாக மகனை முறைத்தாள்...
"ஏண்டா... என் மருமகளை உன் அக்கா வீட்டு விருந்துக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போறதாய் என்கிட்டச் சொல்லிட்டு.. பயம் காட்டத்தான் கூப்பிட்டுக்கிட்டுப் போனயா...?"
"இதுவேற பழியா..? கேட்டுக்கடி.. என் அம்மாவிடம் போட்டுக் கொடுக்கத்தான் கீழே தேங்கினயா...?"
"ஆமாம்டா... அவளுக்கு அதுதான் வேலை... நட்ட நடுராத்திரியில நல்ல மனுசங்களைப் பார்த்தாலே பேய்ன்னுதான் தோனும்.. அந்த ஷோபாவைப் பார்த்தா மனுஷியாவா தோனும்..?"
"விடுங்கம்மா... அவதான் சென்னைக்கு கிளம்பிப் போயிட்டாளே..."
"அதில உனக்கு ரொம்ப வருத்தம் போல இருக்கே.. ராதிகா கவனிச்சுக்கம்மா..."
"ஆமாம்மா... அவளுக்கு ஒன்னுமே தெரியாது.. நீங்க வேற கிளப்பி விடுங்க.. சும்மாவே இவ உடுக்கையில்லாம சாமியாடி வைப்பா.. நீங்க வேற உடுக்கையை அடிச்சிட்டிங்களா... இனி விடிய விடிய சாமியாட்டம் தான்.."
"அதுக்கெல்லாம் அசருகிற ஆளா நீ..."
"அதுசரி... மாமியாரும் மருமகளுமா பலமான கூட்டணியைப் போட்டுட்டிங்க.. நான் ஜகா வாங்கிக்க வேண்டியதுதான்.. ஆனாம்மா... இவ பேயை நினைச்சுத்தானே அலறிவைச்சா.. சாமியைப் பார்த்து எதுக்காக பயந்தான்னு எனக்குப் புரியாம இருந்துச்சு.. இப்பத்தான் புரியுது..."
பாலமுரளி விச்ராந்தியாக மேகலாவின் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்து விட்டான்... ராதிகா ஒன்றைச் சொல்ல.. அதற்கு அவன் கேலிபேச.. மேகலா மருமளுக்காக பரிந்து கொண்டு வர என்று நேரம் போனதே தெரியாமல் அங்கே அரட்டைக் கச்சேரி களை கட்டியது... ஒருவழியாக... பாலமுரளியும் ராதிகாவும் தூங்கப் போய் விட்ட பின்னால் படுக்கையில் சாய்ந்த மேகலாவின் மனம் நிறைந்திருந்தது...
'இப்படி வீடு கலகலன்னு இருந்து எத்தனை வருசமாச்சு...'
தொலைந்து போன கடந்த காலத்தின் சிரிப்பையும்.. சந்தோசத்தையும் மீட்டுக் கொடுத்து விட்ட ராதிகாவின் மீது அவளுக்குள் அன்பும்.. பாசமும் பொங்கின...
மாணிக்கவாசகத்தின் இறப்பிற்கு முன்னால் அந்தவீடு கலகலப்பாக இருந்தது... எல்லாவற்றையும் பார்த்துக் கொண்ட மாணிக்க வாசகம் குடும்பத்தையும் மிக நன்றாகவே பார்த்துக் கொண்டார்.. கவலையற்று இருந்த பாலமுரளி... பாலசரஸ்வதியிடம் சதா.. வம்பிழுத்துக் கொண்டே இருப்பான்.. தம்பியைப் பற்றி அக்கா புகார் சொல்ல.. அவன் அதற்கும் கிண்டல் செய்ய என்று.. வழக்கு வளர்ந்து கொண்டே இருக்கும்.. அவர்களுக்குள் வழக்கு தீர்த்து விடுவதற்குள் மேகலாவுக்கு போதும்.. போதுமென்று ஆகிவிடும்...
மாணிக்கவாசகம் போனார்.. அவருடன் சேர்ந்து அந்தக் குடும்பத்தின் சந்தோசமும் போய்விட்டது.. மேகலா சிரிக்க மறந்தாள்.. பாலமுரளி குடும்ப பாரத்தை தோளில் ஏற்றிக் கொண்டான்.. பாலசரஸ்வதி... எதிர்காலத்தைக் குறித்த பயத்தில் மூழ்கினாள்...
சுமையைச் சுமக்க ஆரம்பித்த பாலமுரளி அதை சுகமானசுமையாக மாற்றிக் கொண்டு... வெற்றிமேல் வெற்றியை ஈட்ட ஆரம்பித்தபோது.. பாலசரஸ்வதி எதிர்காலத்தைக் குறித்த பயத்திலிருந்து மீண்டாள்... ஆனால்.. திருமணமாகி கணவரின் வீட்டிற்குப் போய் விட்டாள்...
உழைப்பாளியான மகன் அருகிலிருந்தும்.. அவனின் அருகாமை மேகலாவுக்கு கிடைக்கவில்லை... மகளோ புகுந்த வீட்டிற்குப் போய்விட்டாள்.. மேகலாவின் வாழ்வில் தனிமை சூழ்ந்திருந்தது... அன்றுதான் தனிமை விலகியது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,1,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -118
அம்மம்மா.. கேளடி தோழி...! -118
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-118.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-118.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy