அம்மம்மா.. கேளடி தோழி...! -116

116 சில்லென்ற மழைத்துளியாய்.. சொல்லி விட்டாய் காதல் மொழியை... ஷோபா பெட்டிகளைக் கொண்டு வந்து ஹாலில் வைத்தாள்... சும்மா நின்று கொண்...


116
சில்லென்ற மழைத்துளியாய்..
சொல்லி விட்டாய் காதல் மொழியை...

ஷோபா பெட்டிகளைக் கொண்டு வந்து ஹாலில் வைத்தாள்... சும்மா நின்று கொண்டிருந்தால் அவளது பெட்டிகளை சுமக்க வேண்டிவந்து விடுமோ என்ற நினைவில் இல்லாத துசியைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்த மீனாட்சி மகிழ்ந்தே போனாள்...
"ஏம்மா.. நிசமாவே இந்தப் புள்ள ஓடிப் போகப் போகுதா..?" என்று ராதிகாவிடம் கேட்டாள்...
"மீனாட்சி... மீனாட்சி... பார்த்துப் பேசக் கூடாதா..?" சுற்று முற்றும் பார்த்துக் கொண்டாள் ராதிகா...
"ஏம்மா.. நிசமாவே இந்தப்புள்ள ஓடிப் போகப் போகுதா..?" என்று மீண்டும் ராதிகாவிடம் கேட்டாள்... மீனாட்சி
"அக்கம்... பக்கம் பார்த்துப் பேசச் சொன்னேன்.. அவளே வயசுப்பொண்ணு.." ராதிகா புத்திமதி சொல்ல ஆரம்பிக்க...
"அந்த நினப்பு எனக்கிருந்து என்ன பிரயோசனம்..? அந்தப் புள்ளக்கில்ல இருக்கனும்..?" என்று நியாயம் கேட்டாள் மீனாட்சி...
"ஸ்ஸ்.. மீனாட்சி... அவளும்.. நீயும் ஒன்றா..?"
அப்படியாவது மீனாட்சி அடங்க மாட்டாளா என்ற அபிலாஷை ராதிகாவுக்கு... மீனாட்சி அசையவில்லை...
"அதானே... நாயும்.. பேயும் ஒன்னாகிடுமா..?" என்ற பொன்மொழியை உதிர்த்து வைத்தாள்...
"இது உனக்கே நல்லாயிருக்கா மீனாட்சி..?"
"எதைச் சொல்கிறிங்கம்மா... இந்தச் சேலையையா..? காலம்பர கட்டறப்பவே நினைச்சேன்... கருமம் புடிச்ச கலரு நல்லாயில்லையேன்னு..."
"சோதிக்காதே மீனாட்சி.. அவ ஓடிப்போகப் போகிறாளான்னு கேட்கலாமா..?"
"யதார்த்தமாத்தானே கேட்டேன்...?"
"அவளைப் போயி நாயின்னு சொல்லலாமா...?"
"ஏம்மா... என்னைப் பேயின்னு சொன்னேன்.. அதை ஏன்னு ஒரு வார்த்தை நீங்க கேட்கலை... அந்தப் புள்ளைக்கு மட்டும் தாங்கிக்கிட்டு வர்றீங்க... இது நாயமில்லைம்மா..."
இந்தப் பேச்சுக்கு முடிவே இருக்காது என்ற ஞானோதயம் வரப்பெற்றவளாக ராதிகாவே பேச்சை நிறுத்திக் கொண்டாள்.. இரண்டு.. மூன்று தடவை அவளிடம் வாய்கொடுத்துப் பார்த்த மீனாட்சி.. அவள் வாயைத் திறக்கும் உத்தேசத்தில் இல்லையென்பதை கண்டு கொண்டவளாக காவேரியைத் தேடிப் போனாள்..
"என்னம்மா.. கிளம்பிட்டியா..?" மூக்குக் கண்ணாடியை சரிசெய்தபடி மேகலா கேட்டாள்...
ஒரு பேச்சுக்குக்கூட.. அதற்குள்ளேயா கிளம்பி விட்டாய்... இருந்து விட்டுப் போகலாமே என்ற உபசார வார்த்தைகளை அவள் சொல்லவில்லை... அதுதான் சாக்கென்று ஷோபா இருந்து விட்டுப் போகிறேன் என்று சொல்லி விட்டால் என்னசெய்வது என்ற பயம் மேகலாவுக்கு...
"ம்ம்ம்..." முணுமுணுப்பு மட்டுமே ஷோபாவிடமிருந்து வந்தது...
பாலமுரளி அவனது வழக்கப்படி செல்போனைக் காதுக்கு கொடுத்தபடி படிகளில் இறங்கிவந்தான்...
"ராதிகா அவனைப் பிடிச்சு வச்சுக்கம்மா... கர்ணனுக்கு கவசக்குண்டலம் போல... இவனுக்கு செல்போன் வந்து மாட்டியிருக்கு... அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே கிளம்பிப் போயிடப்போறான்.. ஷோபா வேற ஊருக்கு கிளம்பிப் போகத் தயாராகி நிற்கிறா..."
மேகலாவின் கவலை.. பாலமுரளி சாப்பிடாமல் போய்விடப் போகிறானே என்பதற்காகவா.. இல்லை.. ஷோபா ஊருக்குக் கிளம்பிப் போய்விடாமல் தேங்கிவிடப் போகிறாளே என்பதற்காகவா... என்ற ஆராய்ச்சியில் ஷோபா இறங்கினாள்...
"நான் சொல்றேன்.. அந்தப் புள்ள இன்னைக்கு கட்டாயம் போயிருமுன்னு..", மீனாட்சி உறுதியாகச் சொன்னாள்...
"எனக்கென்னவோ... அது போகாதுன்னு தோனுது.. சும்மா 'ஷோ' காட்டுதுன்னு தோணுது..." வாணலியில் காய்களை வதக்கியபடி காவேரி மறுத்துப் பேசினாள்...
"என்னா பெட்டு...?" மீனாட்சி கட்டைவிரலை உயர்த்த...
"இதுக்கெல்லாம் நானு ஆளில்லைடி ஆத்தா.. என்னவோ.. தோணுச்சு... சொன்னேன்..." என்று வெற்றிகரமாக பின்வாங்கினாள் காவேரி...
"சொன்னதும்தான் சொன்னவ... நல்லதா நாலு வார்த்தை சொல்ல வேணாமா...? இந்தப் புள்ளையை வீடு தங்க வைக்கனும்னு நினைக்கறியே... நீயெல்லாம் இந்த வீட்டு உப்பைத் தின்னு என்ன பிரயோசனம்..?"
மீனாட்சி வெடியைப் பற்றவைக்க...
"அடிப்பாவி..." என்று அலறினாள் காவேரி...
"ஏண்டி.. நானாச்சு... இந்த அடுப்பாங்கரையாச்சுன்னு இருக்கிறவளப் பிடிச்சு வில்லங்கத்தில இழுத்து விடப் பாக்கறியே... இந்தப் புள்ளய இருக்கச் சொல்ல எனகென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..?"
அவள் அலைகடலாய் பொங்கிவிட... அவசரமாக வெள்ளைக் கொடியை பறக்கவிட்டாள் மீனாட்சி...
"அதானே பார்த்தேன்... நீ அப்படிப் பேசற ஆளில்லையே..."
"மொத்தத்தில் உன்கிட்டயே நான் பேசியிருக்கக் கூடாதுடி..." காவேரியும் அமைதியாகி விட...
'என்னடா இது... நாம எங்கே போயி வாயைத் திறந்தாலும்... அங்கே இருக்கிறவங்க பேசா மடந்தையாய் ஆகிடறாங்க...?' என்று ஒற்றை விரலை நெற்றியில் தட்டியபடியே யோசனையில் ஆழ்ந்தாள் மீனாட்சி...
மேகலாவின் கணிப்புப்படி... ஹாலில் பெட்டிகளோடு நின்று கொண்டிருந்த ஷோபாவைக் கண்டு கொள்ளாமல் வெளியேறப் போனான் பாலமுரளி...
ராதிகாவிற்கு அவன் செய்கையைக் கண்டு சிரிப்பு வந்து விட்டது... கண்களால் மாமியாரை அமைதிபடுத்திய படியே அவள் கணவனைப் பின் தொடர்ந்து சென்றாள்... மனைவியைக் கண்டதும் செல்போனை காதை விட்டு எடுத்த பாலமுரளி புருவங்களை உயர்த்தினான்...
'கல்லுக்குண்டு போல வழியில இத்தனை பெட்டிகளோடு நான் நிற்கிறேன்... என்னை இவன் கண்ணுக்குத் தெரியல... அதுவே இந்த ராதிகா லேசா அசைஞ்சாக்கூடப் போதும்.. அது இவன் கண்ணுக்குத் தெரிந்து விடுது... அப்படி என்னதான் மந்திரம் போட்டு வைத்திருக்காளோ...'
ஷோபா மனதுக்குள் காய்ந்தாள்... அதை உணராத ராதிகா கணவனை செல்லக் கோபத்துடன் முறைத்தாள்.. அதைக் கண்டவன் கிறங்கிப் போனவனாக மொத்தத்தில் செல்போனை அணைத்தே விட்டான்...
"என்னடி...?"
அவன் கேட்டவிதத்தில் ஷோபா பல்லைக்கடித்தாள்..
'இதுக பண்ற ரொமான்ஸ் தாங்கலை... அப்பப்பா.. அதான் தாலிகட்டி.. குடும்பமும் நடத்த ஆரம்பிச்சிட்டாங்கள்ல... அப்புறமும் எப்படி இப்படிக் கொஞ்சிக்கிறாங்க...'
ராதிகாவின் அதிர்ஷ்டத்தை நினைத்து அவள் மனதில் பொறாமை பொங்கி எழுந்தது...
'ம்ப்ச்... நான் பொறுமி என்ன ஆகப் போகுது.. இவளை அழிக்கனும்னு வந்தேன்... கடைசியில அசைக்கக் கூட முடியாம தோற்றுப் போய் திரும்பிப் போறேன்.. இந்த ஜென்மம் பூராவும் இங்கேயே டேரா போட்டாலும் பாலமுரளி இவளை வெறுக்க மாட்டான்னு தெரிஞ்சு போன பின்னாலே.. இங்கே இருந்து என்ன ஆகப் போகுது...?'
அணுகுண்டாய் வெடிக்க வந்தவள்.. புஸ்வானமாகி திரும்பிப் போக நேர்வதில் ஷோபாவுக்குள் துயரம் எழுந்தது... மீண்டும் மீண்டும் ராதிகாவிடம் தோற்க நேர்கிறதே என்று அவளுக்கும் துக்கம்தான்.. என்னதான் முயன்றாலும் ராதிகாவைத் தோற்கடிக்கவே முடியாது என்று ஆகிவிட்டபின்பு அவளுடன் மோதுவதால் ஷோபவுக்கு என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது...?
சங்கரும் இல்லையென்றாகி விட்ட பின்பு.. தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஷோபா இருந்தாள்...
ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பும் ஆண்மகனின் காதல் கிடைப்பதென்பது ஒருவரம்... அவன் மனதில் அவளைத் தவிர வேறு ஒரு பெண்ணிற்கு இடமில்லை என்ற கொடுப்பினை கிடைப்பது.. அதைவிட பெரியவரம்..
இவையிரண்டும் ராதிகாவிற்கு வாய்த்திருந்தன.. அசைக்க முடியாத சக்தியாக அவள் நிற்கும் போது... அவளிடம் மோதிப் பார்த்து காலத்தை விரயம் பண்ண ஷோபா தயாராக இல்லை...
பாலமுரளி ராதிகாவை வெறுப்பானென்றாலாவது ஷோபா தன் எதிர்காலத்தை பணயம் வைக்கலாம்... அவன் அதையும் செய்து தொலைக்க மாட்டேன் என்கிறான்.. ஷோபா எதைச் சொன்னாலும் உணக்கையாகக் கேட்டுவிட்டு பல்லைப் பல்லைக் கடிக்கிறானே தவிர ராதிகாவைத் தள்ளி வைக்க மாட்டேன் என்கிறான்...
இப்படிப்பட்ட காதல் கணவனைக் கொண்ட ராதிகாவுடன் மோதிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு.. சென்னைக்குப் போய் பச்சைக்கொடியை காட்டி வைத்தால்.. மறுகணமே பரந்தாமனும்.... சுசிலாவும் கோடிஸ்வர மாப்பிள்ளைகளை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்... அந்தக் கால சுயம்பரம் போல... பிடித்த மணமகனைத் தேர்ந்தெடுத்து அவன் கழுத்தில் மாலையைப் போடுவதை விட்டுவிட்டு இந்தப் பட்டிக்காட்டு வீட்டில்... வேலைக்காரியிடமெல்லாம் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா என்ன..?
அவளுக்கென்ன தலைவிதியா..? அவள் தகுதி என்ன.. தராதரம் என்ன... அனைத்தையும் மறந்து விட்டு.. ராதிகாவை அழிப்பதற்காக அவமரியாதைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டுமா...?
ஷோபாவின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன.. ராதிகாவும்.. பாலமுரளியும் கண்களாலேயே பேசிக் கொண்டதில் அவள் மனதில் கல்யாண ஆசை எழுந்து விட்டிருந்தது.. அவர்கள் இருவரும் பார்வையிலேயே ஒருவரையொருவர் சாப்பிட்டுக் கொண்டதில் அவள் கிளர்ந்திருந்தாள்.. சங்கரும் திருமண அழைப்பிதழ்களை விநியோகிக்க ஆரம்பித்து விட்டதில் அவளது ரோசம் விழித்துக் கொண்டது... அவனது திருமணத்திற்கு முன்னால் அவளது திருமணம் நடந்தாக வேண்டும் என்ற வன்மம் தலை தூக்கியதில் அவள் சென்னைக்கு கிளம்பிவிட்டாள்..
ஷோபா தேனூத்துக்கு கிளம்பி வந்ததில் பரந்தாமனுக்கும்... சுசிலாவுக்கும்.. கொஞ்சம்கூட உடன்பாடில்லை...
"இல்லை டாடி... அவளை ஏதாவது ஒரு விதத்தில் அபெக்ட் பண்ணனும்.. அதுக்கப்புறம்தான் என்னோட மேரேஜ் பத்தியே நினைப்பேன்..."
ஷோபா உறுதியாக சொல்லி விட்டதில் அவர்களால் ஏதும் செய்ய முடியாமல் போய் விட்டிருந்தது...
தினமும் சுசிலா போனில் பேசிக் கொண்டிருந்தாள்..
"துரும்பைக் கூடக் கிள்ளிப் போட முடியலை மம்மி.. நல்லாத்தான் ஆரம்பித்தது... இந்த பாலமுரளியும் என் முன்னாலேயே ராதிகாவை இர்ரிட்டேட் பண்ணினான்.. அவ முன்னாலேயே என்கூட ஊர் சுற்றப் போறேன்னு சொன்னான்.. முதநாள் நைட் சொல்றான்.. மறுநாள் மார்னிங்கில் அப்படியா சொன்னேன்னு என்னிடமே கேட்கிறான்..."
"இதைப் பாருடா... அப்புறம்..?"
சுசிலா சுவராஸ்யமாக கேட்ட விதத்தில் ஷோபாவுக்கு கோபமே வந்து விட்டது...
"என்ன மம்மி... நான் என்ன கதையா சொல்றேன்..? இவ்வளவு இன்ட்ரெஸ்டா கேட்கறிங்க..."
"இல்லைடா செல்லம்... அந்த ராதிகாவைப் பார்த்தியா.. எவ்வளவு சமத்தா குடும்பம் நடத்தறான்னு..."
சுசிலா எடுத்துக் கொடுத்தாள்.. ஷோபாவுக்கும் அதே நினைவுதான்..
"அதனாலேதான் சொல்றேன்... நீ அவளை அழிக்கறேன்னு டயத்தை வேஸ்ட் பண்ண வேணாம்... கிளம்பிவா.. அந்த சங்கரை விட பெட்டரா நாங்க மாப்பிள்ளை பார்க்கிறோம்.. அவனுக்கு முன்னாலே உனக்குக் கல்யாணம் நடந்தாத்தானே சொஸைட்டியில நமக்கும் பெருமையாய் இருக்கும்...?"
"அப்படியா சொல்கிறிங்க...?"
"ஆமாண்டா செல்லம்... அந்த ராதிகா எங்கே ஓடிவிடப் போகிறா..? அவ நாத்தனார்... என் அக்காவுக்கு மருமகள்.. அவளை எப்படிக் கவனிச்சுக்கனுமோ அப்படி நான் கவனிச்சுக்கறேன்... நீ கிளம்பி வாடாம்மா..."
"இருந்தாலும் மம்மி... இந்த ராதிகா..."
"நான் தான் சொல்கிறேனில்ல... அவளை நான் பார்த்துக்கறேன்.. அவளெல்லாம் ஒரு ஆளா..? சரஸ்வதியைக் கிளப்பி விட்டால் அவதம்பி பெண்டாட்டியை உண்டு இல்லைன்னு ஆக்கி வைச்சுருவா... எங்கே தட்டினா... எங்கே வலிக்கும்ன்ன எனக்குத் தெரியும் ஷோபா... இப்ப உடனடியா நீ செய்ய வேண்டியது கல்யாணம்... பழி வாங்கற நடவடிக்கையில்லை..."
சுசிலாவின் பேச்சில் ஷோபாவின் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் ஓடிவிட.. அவள் கிளம்பி விட்டாள்...
இது தெரியாமல் மீனாட்சி... அவள் கிளம்புவாளா.. மாட்டாளா என்று பட்டி மன்றம் நடத்தக் கிளம்பி விட்டாள்...
பாலமுரளியைத் தடுத்து நிறுத்திய ராதிகா.. தளர்வாகப் பின்னலிட்டு.. தலையில் பூச்சரத்தை சூடியிருந்தாள்.. காலை பூஜையில் மாமியாருடன் கலந்து கொண்டதன் அடையாளமாக நெற்றியில் குங்குமமும் விபூதியும் கலந்த கீற்று தெரிந்தது.. உச்சியில் அவள் வைத்திருந்த குங்குமத்தில் மங்கலகரமாக தெரிந்தாள்...
மனைவியின் குடும்பப் பாங்கான வனப்பில் எப்போதும் போலவே அப்போதும் மயங்கிப் போனான் பாலமுரளி...
"ஏங்க.. காதில செல்போனை வைச்சிட்டா.. சுத்திலும் நடக்கிறது... சுத்தமா மறந்து போகுமா...?"
"பேச்சுவாக்கில் வெளியே வந்திட்டேன்... இதுக்கொரு பாட்டா...?"
"அடேங்கப்பா... இன்னைக்குத்தான் புதுசா இவர் வெளியே வர்றாரு... இவர் மேல தேவையில்லாம குத்தம் சொல்லிட்டோம்..."
"இப்ப உனக்கு என்ன வேணும்...?"
"சாப்பிடனும்..."
"செஞ்சுட்டாப் போச்சு..."
மறந்தும்.. ஷோபா ஊருக்குப் போக வேண்டும் என்று ராதிகா சொல்லவில்லை... அதை மாமியார் சொல்லிக் கொள்ளட்டும் என்ற நினைவுடன் பாலமுரளிக்கு காலைப் பலகாரத்தை எடுத்து வைக்க டைனிங் டேபிளுக்குச் சென்றாள்...
வீட்டுக்குள் வந்த முரளி.. அப்போதுதான் ஷோபாவைப் பார்த்தான்... அவளருகிலிருந்த பெட்டிகளைப் பார்த்ததும் புருவங்களை உயர்த்தினான்...
"என்னாச்சு ஷோபா..?"
"ஊருக்குக் கிளம்பறேன் அத்தான்..."
"உன் அப்பாவும்.. அம்மாவும் பாரின் போயிருக்கிறதா சொன்னியே..."
"டிரிப் கேன்சலாகிருச்சாம்... திரும்பி வந்துட்டாங்க.."
"அப்படியா..? நீ இன்னும் கொஞ்சம் நாள் இங்கே இருப்பேன்னு நினைச்சேன்..."
'எதுக்கு..? நீயும் உன் பெண்டாட்டியும் கூடிக் குழாவிக்கிறதைப் பார்த்து வயிறு எரிகிறதுக்கா...?'
"மம்மி... டாடியை விட்டுட்டு நான் தனியா இருந்ததில்லை அத்தான்.. இந்த தடவைதான் இப்படியாகி விட்டது..."
ஷோபா இப்படிப் பேசிக் கொண்டிருக்க.. டைனிங் டேபிளில் மீனாட்சி ராதிகாவின் காதைக் கடித்தாள்...
"அப்படியே பாப்பாவைப் போலவே பேசி வைக்குதே இந்தப் பீப்பா.. இந்த நாடகசாலையை எங்கேம்மா தேடிப் பிடிச்சீங்க..?"
ஊர்வாயைக் கூட மூடி விடலாம்... இந்த மீனாட்சியின் வாயை மூடவே முடியாது என்ற நினைவுடன் உதட்டில் ஒற்றைவிரலை வைத்து அவளை எச்சரித்தாள் ராதிகா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -116
அம்மம்மா.. கேளடி தோழி...! -116
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-116.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-116.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy