அம்மம்மா.. கேளடி தோழி...! -115

115 நீ போகும் போது கொண்டுசென்றது... எதை... ? என் மனதையா... ? "அந்த பாலமுரளிக்கு நீங்க இந்த அளவுக்கு இம்பார்டன்ஸ் கொடுத்திருக...


115
நீ போகும் போது கொண்டுசென்றது...
எதை...? என் மனதையா...?

"அந்த பாலமுரளிக்கு நீங்க இந்த அளவுக்கு இம்பார்டன்ஸ் கொடுத்திருக்க வேண்டாம்... ஐ டோன்ட் லைக் திஸ்...."
காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது சங்கர் கூறினான்... அவசரமாக டிரைவரைப் பார்த்துக் கொண்ட கோமதிநாயகம்... குரலை தழைத்து ரகசியக் குரலில் பேசினார்...
"சத்தமாப் பேசாதீங்க மாப்பிள்ளை... டிரைவர் இருக்கான்..."
என்னடா இது என்றாகிவிட்டது சங்கருக்கு.. மனதில் நினைத்ததை காருக்குள் பேசக்கூட அவனுக்கு சுதந்திரம் இல்லாமல் போய் விட்டதா...? அந்த பாலமுரளி என்ன எங்கும் ஏகாபித்து இருக்கிறானா...?
இப்படியென்று தெரிந்திருந்தால் இந்தப் பக்கமே சங்கர் பெண்ணெடுத்திருக்க மாட்டான்...
"எனக்கு இது பிடிக்கலை..." சங்கரின் முகம் பாறையானது...
கோமதிநாயகம் பதறிப்போனார்.. அவருடைய வருங்கால மாப்பிள்ளையின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்ததில் அவருக்கு மட்டும் விருப்பமா என்ன..?
ஆனால் அவர் நித்யாவுக்கு மட்டும் தகப்பனில்லையே... அவளுக்கு முன்னாலேயே மூன்று பிள்ளைகள் இருக்கிறார்களே... அவர்கள் அத்தனை பேரும் அந்த தென்காசி வட்டாரத்தில்தானே குடியிருக்கிறார்கள்...? பாலமுரளியைப் பகைத்துக் கொண்டு அவர்களால் அந்தப் பக்கத்தில் இருக்க முடியுமா..?
"என்ன மாப்பிள்ளை செய்கிறது.. அவர்தான் தாய்மாமன் முறை செய்தாகனும்... அந்த மரியாதையை பார்க்கனுமில்ல..."
"அதே மரியாதையை அவனும் உங்களுக்கு கொடுக்க வேண்டாமா...?"
"அவனா..? எவன்...?"
கோமதிநாயகத்திற்கு விளங்கவில்லை... சங்கர் பாலமுரளியைத்தான் அவன் என்று குறிப்பிடுகிறான் என்று அறியாதவராக அவர் வினவினார்...
இப்படிக் கேள்வி கேட்ட வருங்கால மாமனாரை சங்கர் விசித்திரமாகப் பார்த்து வைத்தான்...
"இப்ப நாம் யாரைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கோம்..?"
"பாலமுரளி மாப்பிள்ளையைப் பத்தி..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே... அவனைத்தான் சங்கர் 'அவன்' என்று குறிப்பிட்டிருக்கிறான் என்பது கோமதிநாயகத்தின் புத்தியில் உறைக்க... அவர் மனதிற்குள் அலறினார்...
'இந்த மாப்பிள்ளை எனக்கு பாலமுரளியை பகையாய் மாத்தி விடறதிலேயே குறியாய் இருக்கிறாரே...'
"உங்களுக்கு இந்த சுத்துப்பட்டு வட்டாரத்தைப் பத்தி எதுவும் தெரியாது மாப்பிள்ளை..." அவர் வினயத்துடன் சங்கருக்கு புரிய வைக்க முயன்றார்...
"எனக்குத் தெரிந்து என்ன ஆகப் போகுது..?" அவன் அலட்சியமாகப் பதில் சொன்னான்...
'உங்களுக்கொன்னும் ஆகாது... ஆகிறதெல்லாம்... எனக்கும் என்னோட பிள்ளைகளுக்கும் தானே...' மனதுக்குள் புலம்பித்தள்ளினார் கோமதிநாயகம்...
"அப்படி ஒரேயடியாய் ஒதுக்கித் தள்ளிர முடியாது மாப்பிள்ளை... நீங்க இந்தப் பக்கம்தான் பேக்டரியை ஆரம்பிக்கனும்னு ஒரே பிடிவாதமா இருக்கீங்க..." மனத் தாங்கலுடன் சொன்னார் கோமதிநாயகம்...
மகள் சென்னையில் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள் என்று பெருமைப்பட முடியாமல்... சென்னையிலிருக்கும் கம்யூட்டர் கம்பெனி மருமகன்.. தென்காசியில் பேக்டரியை ஆரம்பிக்கப் போவதாகக் கூறினால் அவருக்குத்தான் எப்படி இருக்கும்...?
சங்கரின் மனநிலை குறித்தான ஐயப்பாடு மனதில் எழுந்தாலும்... அவனைப் பற்றி அவர் விசாரித்து அறிந்த விவரங்கள் அந்த ஐயப்பாட்டை முற்றிலுமாக அழித்து விட்டன....
'என்னதான் இருந்தாலும்... சென்னைப் பட்டினத்திலே... காரு... பங்களா.. கம்யூட்டர் கம்பெனின்னு அமோகமா இருக்கிற மாப்பிள்ளை... அது அத்தனையையும் விட்டுப்புட்டு... தென்காசிப் பக்கம் வரேன்னு ஏன் சொல்றாரு..? இவரு வேற வெளிநாட்டுப் படிப்பைப் படிச்சவரு... சென்னையை விட.. தென்காசி பெரிய பட்டினமா...?'
அடி மனதில் சந்தேகம் எழுந்தாலும்.. அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை... அதுதான் கோமதி நாயகம்...! தேடிப் பிடித்தாலும் கிடைக்காத மாப்பிள்ளை... தானாக மகளுக்கு அமைந்திருக்கும் போது... இப்படிப் பட்ட ஆராய்ச்சிகளை கேள்விகளாக்கி... அந்த மாப்பிள்ளையை கை நழுவ விடுவதில் அவருக்கு துளிக்கூட விருப்பமில்லை...
அதனால் சங்கர் எதைச் சொன்னாலும் 'ஆமாம் சாமி' போடுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார்.. அந்த ஆமாம் சாமியை பாலமுரளியின் விவகாரத்திலும் சங்கர் எதிர்பார்த்து வைக்க... அவரால் அதைச் செய்ய இயலாமல் போய் விட்டது...
"பாலமுரளி மாப்பிள்ளைக்கு... இந்த தென்காசி வட்டாரத்திலே செல்வாக்கும்... சொல்வாக்கும் அதிகம் தம்பி... அவரை எதுத்து நின்னா நீங்க இந்தப்பக்கம் தொழில் பண்ணிர முடியாது..."
"என்ன செய்து விடுவான்..?" சங்கரின் வார்த்தைகளில் மிதமிஞ்சிய சினம் தெரிந்தது...
அதில் கோமதிநாயகம் கவலைக்கு ஆளானார்...
எதற்காக சங்கர்... பாலமுரளிக்கு எதிராக கத்தியைத் தூக்கித்தான் தீருவேனென்ற பிடிவாதத்தைப் பிடிக்கிறான் என்று விளங்காமல் மண்டை காய்ந்து போனார்...
'ம்ஹீம்... பெத்ததும்தான் பெத்தேன்.. நாலையும் ஆம்பளைப் புள்ளையாய் பெத்துத் தொலைச்சிருக்கக் கூடாதா...?'
இதுவரை வராத விசனம் அவருக்கு இப்போது வந்து தொலைத்தது...
"எதுவும் செய்வார் மாப்பிள்ளை... எதுக்கும் நீங்க அவரை அவன்... இவன்னு சொல்லி வைக்காம... மரியாதையாய் பேசினா நல்லது..."
"அதெல்லாம் என்னால் முடியாது மாமா..."
"இப்படிச் சொன்னா எப்படி மாப்பிள்ளை...?"
"அது இப்படித்தான்..."
சங்கர் தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.. எதிர்காலத்தில் பாலமுரளியுடன் உறவு நிலைத்திருக்குமா.. நிலைத்திருக்காதா... என்ற கவலையில் ஆழ்ந்த கோமதி நாயகம்... இப்போதைக்கு விட்டுப் பிடிப்போமென்ற முடிவுக்கு வந்தார்...
'நித்யாவின் கழுத்தில் தாலி ஏறனுமே...'
பெண்ணைப் பெற்று விட்டால் பல சந்தர்ப்பங்களில் வாயிருந்தும்... ஊமையாகத்தானே ஆக வேண்டியிருக்கிறது...
மாடியை விட்டு மதிய உணவுக்காக கீழே இறங்கிவந்த முரளியின் முகத்தில் கோபக் கனல் தெரிந்தது... ஹாலின் நடுவிலிருந்த டீப்பாயின் மீது.. அகன்ற வெள்ளித்தட்டில்... பூ... பழம்... வெற்றிலை பாக்கு.. திருமணப் பத்திரிக்கை.. இவற்றுடன்.. தங்கத்தால் செய்யப்பட்ட ரூபாய் நோட்டு ஒன்றும் இருந்தது...
இது உச்சபட்ச மரியாதை...
பணம்... பாக்கு வெத்தலையோடு பத்திரிக்கை வைப்பது ஒருவரின் செல்வாக்கை மதிக்கும் மரபு... அந்தப் பணத்தை தங்கத்தால் செய்து கொடுப்பது அதைவிட உயரிய மரியாதைக்குரியவர் அவர் என்பதை உணர்த்துவதாகும்...
அந்த மரியாதையை பாலமுரளிக்கு... கோமதி நாயகம் கொடுத்திருந்தார்.. இருந்தும்... அந்த வெள்ளித் தட்டைக் கண்டதும் பாலமுரளி கண்சிவந்தான்...
"இதை எதுக்காகம்மா வாங்கினீங்க..?" என்று இறைந்தான்...
"வாங்கித்தானேடா ஆகனும்... வீடு தேடி வந்து.. தாய்மாமன் பத்திரிக்கையை முறையோட அவரு வைக்கிறப்போ.. நாம வாங்க மாட்டேன்னு சொல்ல முடியுமா..?"
"எல்லாத்தையும் முறையோடதான் அவர் செய்தாரா...?"
"அவர் நிலைமை எப்படியோ... ஆனா.. இன்னைக்கு பத்திரிக்கை வைக்கிறப்போ... மாப்பிள்ளை வீட்டு சார்பா.. மாப்பிள்ளையையே நேரில் கூப்பிட்டுக்கிட்டு வந்தாரே.. நீ அதை நினைச்சுப் பாரு..."
எதை மறக்க விரும்பினானோ... அதையே.. நினைத்துப் பார்க்கச் சொல்லிச் சொன்னாள் மேகலா...
மகனின் மனதிலிருப்பது அவளுக்கு எப்படித் தெரியும்...? அதைத் தெரிந்து வைத்திருந்த ஷோபாவின் முகத்தில் ஏளனப் புன்னகை உதித்தது...
"அவனை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லி நாம சொன்னோமா...?" பாலமுரளியின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது...
மகன் எதற்காக இந்த அளவுக்கு கோபப்படு- கிறானென்று மேகலாவுக்குப் புரியவில்லை...
"உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது முரளி... பெரியமனுசன்.. நல்ல சம்பந்தம் கை நழுவிப் போயிரக் கூடாதுன்னு அவசரத்திலே நம்மகிட்ட ஒருவார்த்தை சொல்லாம கல்யாணத்தை முடிவு பண்ணியிரக்கலாம்.. அதுக்காக அவரை ஒதுக்கி வைச்சிடறதா..?"
"ஒதுக்கி வைச்சாத்தான் என்ன...?"
"உன் கல்யாணத்தில அவருகிட்ட ஒத்த வார்த்தை நாம கேட்டோமா..?"
"அதுக்கும்... இதுக்கும்.. அவரு முடிச்சுப் போட்டுப் பார்க்கிறாரா...?"
"இந்தப் பேச்சுக்கு முடிவிருக்கா...?"
"ஆனா... இந்தக் கல்யாணத்தைப் பத்தி எனக்கொரு முடிவிருக்கு..."
"என்னடா...?"
"இந்த வீட்டிலிருந்து யாரும் இந்தக் கல்யாணத்துக்கு போகக்கூடாது..."
பாலமுரளி இதைத்தான் சொல்வானென்று ஷோபாவுக்கு தெரியும்... ராதிகாவுக்கும் தெரியும்... அதைத் தெரிந்து கொள்ளாத மேகலாவின் நெற்றி சுருங்கியது...
"அவர் யாருங்கிறது மறந்து போச்சா முரளி...?"
"அம்மா..."
"உன் அப்பாவோட ஒன்னுவிட்ட தங்கச்சியோட புருசன்... அவங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு தாய்மாமன் முறையைச் செய்ய கடமைப்பட்டவரு உன் அப்பா... அவரோட கடமையில உனக்குப் பொறுப்பில்லையா...?"
"அம்மா..."
"தங்கத்தையும்.. கோமதிநாயகம் அண்ணனையும் தள்ளி வைச்சா உன் அப்பாவோட ஆத்மா நம்மை மன்னிக்குமா...?"
மேகலாவின் கேள்விகள் சுட்டதில் உன்மத்தம் பிடித்தவனாக... பாலமுரளி சாப்பாட்டை மறந்து வெளியேறப் போனான்.. ராதிகா அவசரமாக அவனைப் பின்தொடர்ந்து ஓடினாள்...
"சாப்பிட வாங்க..."
"எனக்கு சாப்பாடு வேணாம்..."
"உங்க கோபத்தை என்மேல காட்டுங்க.. தாங்கிக்கறேன்... சாப்பாட்டு மேலக் காட்டாதீங்க... அதைத் தாங்கிக்க மாட்டேன்.."
ராதிகா அவன் முன்னால் வழிமறிப்பதைப் போல நின்றுவிட... பாலமுரளியின் வேகம் குறைந்தது... மனைவியின் கண்ணீர் முகம் அவனை அசைத்தது...
"நீங்க சாப்பிடலைன்னா.. நானும் சாப்பிட மாட்டேன்... நினைவிருக்கில்ல..?"
"ஏண்டி.. துயரம் பண்ற...?"
"ப்ளீஸ்... எனக்காக சாப்பிட வாங்க..."
"என் மனசு சரியில்லை ராதிகா.."
"நீங்க இந்த வீட்டுக்கு தூண்... அஸ்திவாரம்... உங்க மனசு சரியில்லாமப் போகக்கூடாது... அத்தை அவங்க பக்கத்தைச் சொன்னாங்க... நீங்க உங்க பக்கத்தைச் சொல்லுங்க..."
"எப்படி?"
"அப்ப அவங்க போக்கில விட்டுருங்க..."
"ராதிகா..."
"இந்தப் பிரச்னைக்கு ஆணிவேரே நான்தான்... இது அத்தைக்குத் தெரியாது... அவங்க மாமாமேல இருக்கிற அன்பில.... அவரோட தங்கை வீட்டு விசேசத்துக்கு நீங்க போக மாட்டேன்னு சொல்றிங்கன்னு உங்களைக் குறைவாய் நினைப்பாங்க... அதில எனக்குச் சம்மதமில்லை..."
"அதுக்காக...?"
"நான் அத்தையிடம் பேசறேன்.. நடந்ததைச் சொல்றேன்.. அதுக்கப்புறம் உங்களை அவங்க வற்புறுத்துவாங்களா...?"
"அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்.. புருசன் பெண்டாட்டி பிரச்னையை அவங்ககிட்டச் சொல்லப் போறியா..? அறிவில்ல உனக்கு...?"
"வேற என்னதான் செய்கிறது..?"
"அதை நான் பார்த்துக்கிறேன்.. நீ உளராம உள்ளே வா..."
மேகலா தலையைப் பிடித்தபடி ஹாலிலேயே உட்கார்ந்திருந்தாள்... ஷோபா அதைக் குதுகலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க காவேரியும்... மீனாட்சியும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அந்தக் காட்சியைக் கண்ட பாலமுரளிக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது... அதுவரை.. அவன் தாயின் மனம் நோகப் போசியதில்லை... கண்டிப்பைக் காட்டியிருக்கிறான்... கடமைகளை புறக்கணித்ததில்லை...
"அம்மா..." மேகலாவின் அருகே உட்கார்ந்தான்...
நிமிர்ந்து பார்த்த மேகலாவின் கண்கள் கலங்கியிருந்தன...
"விட்டுத்தள்ளுங்க.. வெளியே நாலுபேரு... உன் மாமன் வீட்டுக் கல்யாணத்தைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாதான்னு கேட்டு வைச்சிட்டாங்க... அந்தக் கோபத்தில பேசிட்டேன்..."
"இதைப்பத்தி உனக்கு முன்னாலேயே தெரியுமா முரளி...?"
"தெரியும்..."
"கோமதியண்ணனும்.. தங்கமும் செய்ததில எனக்கு மட்டும் சம்மதமா..? என்னதான் அவங்க பக்க நியாயத்தைச் சொன்னாலும்... அவங்க செய்தது தப்புத்தான்... அவங்களைத் தள்ளி வைக்கனும்னு எனக்கும் ஆத்திரமாத்தான் இருக்கு... ஆனா... உன் அப்பாவோட நினைப்பு வந்து அதை தடுக்குதுடா முரளி.. அவர் செய்ய வேண்டிய தாய்மாமன் சீரை.. நாம செய்ய மறுக்கலாமா முரளி...?"
மேகலா அழுதுவிட்டாள்... தாயின் கண்ணீரைத் துடைத்து விட்ட பாலமுரளியின் மனமும் இளகிவிட்டது... அவன் சமாதான வார்த்தைகளைச் சொல்லி... தாயிடம் சமாதானம் ஆனான்.. அவர்கள் பேசியபடியே சாப்பிடப் போய்விட்டார்கள்... ஷோபா மட்டும் ஹாலில் தனித்து நின்றாள்...
ஒரு நொடியில் வரவிருந்த பூகம்பம் தவிர்க்கப்பட்டு விட்டதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
'இந்த ராதிகா.. சூறாவளிக் காற்றைக்கூட தென்றல் காற்றாய் மாற்றி விட்டாளே...'


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -115
அம்மம்மா.. கேளடி தோழி...! -115
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-115.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-115.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy