அம்மம்மா.. கேளடி தோழி...! -110

110 சொல்லொன்றை சொல்லி விடு... சொந்தத்தினைக் காட்டி விடு... ' சொல்லி விடுவானா.. ? ராதிகா எதிர்பார்க்கும் அந்த வார்த்தைகளை உச்ச...


110
சொல்லொன்றை சொல்லி விடு...
சொந்தத்தினைக் காட்டி விடு...

'சொல்லி விடுவானா..? ராதிகா எதிர்பார்க்கும் அந்த வார்த்தைகளை உச்சரித்து விடுவானா...?'
ஷோபா மனம் நடுங்கிப் போனாள்...
பாலமுரளி மட்டும் அப்படிச் சொல்லி விட்டால்... அவன் மீதான ராதிகாவின் நம்பிக்கை இறுகி விடும்.. அந்த நம்பிக்கையை ஆட்டிப் பார்க்க வந்திருக்கும் ஷோபாவின் முதல் முயற்சியே தோற்று விடும்...
'சொல்லி விடாதே...' ஷோபா மனதுக்குள் பரிதவித்தாள்...
'வாழ்வின் மீதான இவளது நம்பிக்கையை உடை.. இவளும் வரவேண்டுமென்று சொல்லி விடாதே...'
மனம் பதற ஷோபா பாலமுரளியின் முகம் பார்த்தாள்.. அதே சமயத்தில் ராதிகாவும் அவன் முகம் பார்த்தாள்.. அவள் பார்வையோடு பாலமுரளியின் பார்வை கலந்தது.. இறுகிப் பிணைந்தது...
ஷோபாவைப் போல முகத்தில் செயற்கைப் பூச்சுகளுடன் இல்லாமல் இயற்கையான வணப்புடன்... இயல்பான உடையலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தாள் ராதிகா...
அவளின் நீண்ட பின்னல் முழங்கால்களைத் தாண்டித் தொங்க... 'காலளவு.. கருங்கூந்தல்...' என்ற பாடலின் வரி முரளியின் மனதில் ஓடியது.. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரமும்... நெற்றி வகிட்டில் தீற்றியிருந்த குங்குமமும் அவளது பெண்மையின் மிளிர்வை அவனுக்கு உணர்த்தி மயக்கின.. ராதிகாவின் கழுத்தில் மின்னிய புதுத்தாலிச் சரட்டில் அவன் பார்வை படிந்தது...
'இவள் என் பெண்டாட்டி...'
நினைக்கும் போதே மனம் இனிக்க...
"வா..." என்று சொல்லி விட்டான் பாலமுரளி...
ஷோபா விக்கித்துப் போய் நின்று விட்டாள்... ராதிகாவின் விழிகளில் வெற்றியின் சாயலெல்லாம் இல்லை... அதுவே ஷோபாவின் வெறியை அதிகப்படுத்தியது...
'இவன் என் கணவன்.. இவனோடு வெளியில் போவது என் உரிமை... இதில் வெற்றி முரசு கொட்ட என்ன இருக்கிறது...?'
இதைத் தன் செய்கைகளால் உணர்த்தி விட்டாள் ராதிகா...
"போயிட்டு வரேன் அத்தை..." மேகலாவிடம் விடை பெற்றாள்...
"தங்கமாய் போயிட்டுவாம்மா..." முகம் மலர விடை கொடுத்தாள் மேகலா...
'கிழவிக்கு இருக்கிற ளொள்ளைப் பாரேன்.. நான் கிளம்பினா மட்டும் இதோட சொத்து கொள்ளை போகிறதைப் போல முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு இருந்துச்சு.. இப்ப பல்லைக் காட்டிக்கிட்டு போயிட்டு வான்னு சொல்லுது...'
சற்று முன்புவரை இருந்த திடம் மறைந்து பலவீனமாக உணர்ந்தாள் ஷோபா...
ராதிகாவின் இயல்பான நடவடிக்கைகள் 
'இது என்வீடு.. இவர்கள் என் மனிதர்கள்...' என்று சொல்லாமல் சொல்ல... தன்னை மூன்றாம் மனுஷியாக உணர்ந்தாள்...
"போகலாமா ராதிகா..."
அவளை விட்டுவிட்டு மனைவியிடம் பாலமுரளி கேட்டுவைக்க.. ஷோபாவின் ரத்தக் கொதிப்பு உச்ச நிலையை அடைந்தது...
"ம்ம்ம்..."
ராதிகா ஒயிலாக புருவங்களை உயர்த்தி ஒரு மயக்கும் பார்வையை வீசிவிட்டு... அவனுடன் சேர்ந்து நடந்தாள்...
அவனுடன் இணை சேர்ந்து ராதிகா நடந்து வருவதில் எப்போதுமே பாலமுரளிக்கு தனிவிதமான இன்பம் உண்டு.. அதை அவன் மிகவும் விரும்புவான்.. அப்படி நடக்கும் பொழுதுகளில் அவள் கையோடு கை பிணைக்க வெகுவாக ஆசைப்பட்டிருக்கிறான்.. அவன் போட்டிருந்த சபதத்தினால் அது முடியாமல் போய் விட்டிருந்தது.. ஆனாலும் அதை ஈடுகட்டுவதைப் போல..  ராதிகா அவன் தோளோடு.. தோள் உராயத்தான் நடந்து வைப்பாள்... முக்கியமான தருணங்களில் அவன் கை மீது கை வைத்து தோள் மீது... தலை சாய்த்து தூங்கி விடுவாள்...
வாழ்க்கை அழகான பல தருணங்களை அவனுக்கு அள்ளி வழங்கிக் கொண்டுதான் இருந்தது...
அடித்தால் அடியை வாங்கிக்கொண்டு .... தன் கருத்தில் நிலையாக நின்று... கோபப்பட்டுப் பேசினால் பதிலுக்கு தன் கோபத்தைக் காட்டிப்பேசி.. சண்டையென்றில்லாமல் ஊடலை உணர்த்தி... அதே சமயம் அவனை விட்டுக் கொடுக்காமல்... விலகி நிற்காமல்... உறுதியாக தன் உறவில் பிணைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்திய ராதிகா ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான பரிணாமத்தை உணர்த்தி அவன் மனதை மயக்கிக் கொண்டிருந்தாள்..
கழுத்தில் கூர்மையான கத்தியை வைப்பவனை காதலுடன் பார்க்க முடியுமா...?
ராதிகாவால் அது முடிந்தது...
அவன் என்ன செய்தாலும்.. எதிர்த்து போராடியவள் அடுத்த சில மணித்துளிகளிலேயே அதை மறந்து அவனைக் காதலுடன் பார்த்தாள்....
'இவளை என்னதான் செய்வது...?'
எவ்வளவோ செய்யலாம்தான்.. கட்டியணைத்து முத்தம் கொடுக்கலாம்... கைகளுக்குள் நிறுத்திக் கொள்ளலாம்...
இவை அத்தனையையும் செய்ய வேண்டாமென்று பாலமுரளியை யார் தடுத்தது...?
அவனது கோபம் தடுத்துக் கொண்டிருந்தது...
அதை அறிந்திருந்த ராதிகா.. அவனைத் தன் கண்ணசைவில் சிறை பிடித்திருந்தாள்.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்... கொல்ல நினைக்கிறாயா... உன் கையால் சந்தோசமாகச் சாகிறேன்.. வாழ நினைக்கிறாயா.. வந்து விடு.. உன் கையில் என்னைத் தருகிறேன்...
இப்படிப்பட்ட சரணாகதியுடன் ராதிகா அவன் கோபத்தை எதிர்கொண்டாள்... அலைகடலாய் ஆர்ப்பரிக்கும் பாலமுரளியின் மனதை ஒரு பார்வையால் அமைதிப் படுத்தும் சக்தி ராதிகாவிடம் இருந்தது...
அதை ஷோபாவால் புரிந்து கொள்ள முடியுமா..? அவள் வேறு ஒன்றை நினைத்தாள்.. பகலில் கோபம் கொள்பவனை இரவின் நெருக்கத்தில் மயக்கி ராதிகா தன் கைக்குள் நிறுத்திக் கொள்கிறாள் என்று அவள் நினைத்தாள்...
அவளுக்கு என்ன தெரியும்..? ராதிகாவை விட்டு விலகிநிற்கும் சபதத்தை முரளி எடுத்திருக்கிறான் என்பது..
தெரிந்திருந்தால்... அது எப்படி.. உடல் நெருக்கத்தைத் தராமல் ஒரு மனைவியினால் கணவனை கைக்குள் நிறுத்திக் கொள்ள முடியும் என்று திகைத்திருப்பாள்.. ஆச்சரியப்பட்டிருப்பாள்.. பிரமித்துப் போயிருப்பாள்..
அது தெரியாததினால் பல்லைக் கடித்தபடி அசையாமல் நின்றாள்..
அவள்கூட வருகிறாள் என்பதையே மறந்துவிட்டு.. சன்னக்குரலில் பேசியபடி பாலமுரளியும்.. ராதிகாவும் நடந்துவிட.. தனியே நின்றவளை மீனாட்சி கேலிப் பார்வை பார்த்தாள்...
"என்னம்மா.. நீங்க போகலியா..? போகனும்னா.. அவங்க பின்னாடியே ஓடுங்க.. இல்லைன்னா.. விட்டுட்டு போயிருவாங்க..."
மீனாட்சியின் பேச்சுக்கு... காவேரியின் சிரிப்பு.. சமையலறையில் இருந்து எதிரொலித்தது... மேகலா புன்னகையுடன் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருக்க.. அந்த வீட்டு தாய்க்குலத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் ராதிகாவுக்கு இருப்பதை உணர்ந்து கொண்டாள் ஷோபா..
மீனாட்சி சொன்னதைப் போலவே.. பாலமுரளி அவளைத் திரும்பியே பார்க்கவில்லை...
"என்னடி... புதுசா மில்லுக்கு கிளம்பி வர்ற...?" என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்...
"வேற என்ன செய்யறது....? இப்படி ஓட்டிக்கிட்டு நானா வந்தால்தான் உண்டு போல.. மத்தபடி என்னை வெளியே கூப்பிட்டுப்போகனும்கிற நினைப்பு உங்களுக்கு வர மாட்டேங்குதே..."
ராதிகா சரஸமாகப் பேசியது முரளிக்கு பிடித்திருந்தது...
"நீ சென்னைக்காரி... இந்தப் பட்டிக்காட்டில என்ன இருக்குன்னு உன்னைக் கூப்பிட்டுக்கிட்டுப் போய் காட்டச் சொல்கிறவ...?"
"என்ன இல்லை..? அருவி இருக்கு... பாறை இருக்கு... ஆறு இருக்கு... கோவில் இருக்கு... குளிர்ச்சியாகப் பார்க்க... மரம் செடி கொடின்னு பச்சைப் பசேல்ன்னு இயற்கை இருக்கு... சுத்தமான மலைக் காத்து இருக்கு..."
"அடேங்கப்பா... விட்டா... இன்னைக்கு முழுதும் சொல்லிக்கிட்டே இருப்ப போல..."
"ம்ம்ம்... இன்னும் சொல்லி முடிக்கல..."
"சொல்லு... சொல்லு..."
"இதெல்லாம் போதாதுன்னு இன்னொன்னும் கூட இருக்கு..."
"எது...?"
"நீங்க... பக்கத்தில் இருப்பீங்க..."
ராதிகா வெட்கப் புன்னகையுடன் சொல்லிவிட.. பாலமுரளி கிறங்கிப் போனான்...
அந்த நொடியில் அவள் வேண்டாத மனைவியென்பதே அவனுக்கு மறந்து போய் விட்டது...
அவளைப் பார்த்த அவனது பார்வையில் அப்படியே அவளை அள்ளிச் சாப்பிட்டு விடும் தாபம் தெரிந்தது...
அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் ராதிகா முகம் சிவந்து... வேறு திக்கில் பார்த்தாள்...
'மயக்கறேடி...'
அவன் மனம் சொல்ல... அவன் அவளைப் பார்த்தபடியே காரின் முன்பக்கக் கதவை அவளுக்காகத் திறந்துவிட்டான்...
அவனது பார்வையில் தெரிந்த மயக்கத்தில் கிறங்கிப் போனவளாக அவளும் ஷோபாவைப் பற்றிய நினைவேயில்லாமல் முன் பக்கத்தில் ஏறி அமர்ந்து விட்டாள்...
இனி கௌரவம் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்ற நினைவுடன் ஷோபா வாசலுக்கு ஒடினாள்...
"எப்படி ஓடுதுன்னு பாருங்கம்மா..."
மீனாட்சி அந்த வேக ஓட்டத்தை வெகுவாக ரசித்தாள்...
"அத்தான்..."
மூச்சிரைக்க வந்து நின்ற ஷோபாவைப் பார்த்ததும் தான் பாலமுரளிக்கு அவளையும் அழைத்துச் செல்வதாக இருந்தது நினைவுக்கு வந்தது...
'இவளும் வரனுமா..?'
அந்த இதமான மனநிலையைக் கெடுத்துக் கொள்ள பாலமுரளிக்கு விருப்பமில்லை... அவனுக்கே அத்தி பூத்தாற்போலத்தான் இதுபோன்ற தருணங்கள் வந்து அமைகின்றன... அத்தோடு.. ராதிகாவை முதன்முதலாக அறிமுகப் படுத்துவதை விட்டுவிட்டு ஷோபாவையும் ஏன் அழைத்துக் கொண்டு போக வேண்டும்...?
தனித்து அவனுடன் ராதிகா வந்து இறங்குவது எப்படியிருக்கும்..? வால் பிடித்ததைப் போல ஷோபாவையும் கூடவைத்துக் கொண்டு இறங்குவது எப்படியிருக்கும்..?
தன் மனைவிக்கான முக்கியத்துவம் சிறிதளவும் குறையக்கூடாதென்று பாலமுரளி நினைத்தான்...
"ஷோபா..."
அவன் அழைக்கும் போதே அவனின் குரல் மாறுபாட்டை உணர்ந்து கொண்ட ஷோபாவிற்கு திக்கென்று இருந்தது... அவள் பயந்ததைப் போலத்தான் அவனும் சொல்லி வைத்தான்...
"நீ வேணும்னா மீனாட்சியோட ஊரைச் சுற்றிப் பார்க்கப் போயேன்... ராதிகா என்னோட வரும்போது நீயும் வந்து இறங்கினா நல்லாயிருக்காது..."
அவன் நாசுக்காக கூறியதைப் புரிந்து கொண்டு ஷோபாவே ஒதுங்கி நின்றிருக்க வேண்டும்... அதைவிட்டு விட்டு... வாய்க்கு வாய் நாகரிகத்தைப் பற்றியே பேசும் ஷோபா... அதை மறந்து வெகுண்டாள்...
"ஏன் நல்லாயிருக்காது...?"
அவளது கேள்வியில் பாலமுரளி முகம் சுளித்தான்...
"த்ச்சு... என்ன பேசற ஷோபா..? ராதிகா என் பெண்டாட்டி... நாங்க போகப் போறது என்னோட மில்லுக்கு.. நாங்களோ புதுசாக் கல்யாணமானவங்க..." அவன் விளக்கம் சொன்னான்...
"அதனால என்ன அத்தான்..?" அவள் விடாப்பிடியாய் அதிலேயே நின்றாள்...
இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா..? சொன்னால் புரிந்து கொள்ள வேண்டாமா என்றிருந்தது பாலமுரளிக்கு...
"பாரும்மா... இது சென்னையில்லை... தேனூத்து..."
"ஆனா.. நீங்க இப்ப தென்காசிக்குத்தானே போறிங்க...?"
"எங்கே போனாலும் தேனூத்துக்காரன்... தேனூத்துக் காரன்தான்ம்மா... என் மில்லுக்கு வேற பொண்ணு என் கூட வரக்கூடாது..."
பாலமுரளி சட்டென்று காரில் ஏறிக்கொள்ள... ஷோபா பிரமை பிடித்தவளைப் போல நின்று விட்டாள்...
அவளுக்கான இடம் எது என்று பாலமுரளி அறிவுறுத்திவிட்டதில் அவள் இடிந்து போயிருந்தாள்... அப்போது யதார்த்தமாக ராதிகா நிமிர்ந்து பார்க்க... ஷோபாவின் முகம் பயங்கரமாக மாறியது...
எந்த விதத் துரும்பையும் கிள்ளிப் போடாமலேயே ராதிகா வெற்றி பெறுவதன் அடிப்படை எது என்று ஷோபாவால் இனம் காண முடியவில்லை...
ராதிகாவின் வாழ்வை அசைத்துக் காட்டத்தான் அவள் வந்தாள்... ஆனால்.. யாராலும் அசைக்க முடியாத நிலையான இடத்தை பாலமுரளியின் இதயத்தில் ராதிகா பெற்றிருப்பதை அவள் ஷோபாவுக்கு உணர்த்தி விட்டாள்...
என்னதான் வேண்டாத மனைவியாக இருந்தாலும்... பாலமுரளி.. அவளுக்கான இடத்தை யாருக்கும் அளிக்க மாட்டான் என்பதை ஷோபா அன்றுதான் அறிந்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -110
அம்மம்மா.. கேளடி தோழி...! -110
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-110.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-110.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy