அம்மம்மா.. கேளடி தோழி...!,-107

107 உன் நிழலாய் தொடர்ந்து வந்தேன்.. வேறுஎன்ன குற்றம் செய்தேன்... ? அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.. ராதிகா ஜன்னல் கம்பியி...


107
உன் நிழலாய் தொடர்ந்து வந்தேன்..
வேறுஎன்ன குற்றம் செய்தேன்...?

அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.. ராதிகா ஜன்னல் கம்பியில் முகம் புதைத்திருந்தாள்.. திரும்பிப் பார்க்கவில்லை.. அழுத்தமான காலடியோசை அவளை நெருங்கிய போதும் அவள் அசையாமல் அப்படியே நின்றாள்.. அவளது முதுகை துளைக்கும் பார்வை பார்த்தான் பாலமுரளி...
ஜன்னல் கம்பியில் சாய்ந்து நின்றிருந்த அவளின் தோற்றம்.. ஒரு தேர்ந்த ஓவியன் வரைந்த அற்புதமான ஓவியத்தைப் போல இருந்தது... அவளது நீண்ட பின்னல் இடுப்பைத் தாண்டி.. பின்னங்கால்களைத் தொட்டுக் கொண்டிருக்க.. அதை பிடித்து இழுக்க வேண்டும் போன்ற அவன் மனதுக்குள் கிளர்ந்து எழுவதை உணர்ந்த பாலமுரளி நிலைகுலைந்தான்...
அவன் வந்து விட்டதை அறிந்தபின்னும் அதை பொருட்படுத்தாமல் அவள் நின்று கொண்டிருந்ததில் அவன் ஆத்திரப்பட்டுப் போனான்...
"ஜன்னல் வழியா யாரைடி பார்க்கிற..?" வார்த்தைகளால் அவளைச் சுட்டான்...
அவனது கணிப்பு பொய்க்கவில்லை.. சூடு தாங்காமல் துடித்துப் போனவளாக அவள் திரும்பிப் பார்த்தாள்...
"வார்த்தைகளை அளந்து பேசுங்க.." அவள் குரல் நடுங்கியது...
தோள்களை அலட்டிசியமாகக் குறுக்கிய பாலமுரளி ஜன்னலருகில் சென்று வெளியே பார்த்தான்.. தூரத்தில் சாலை தெரிந்தது..
"அந்த ரோட்டையா பார்க்கிற..? சரிதான்.. இது நீ செய்ய வேண்டிய வேலைதான்.."
அவன் குரலில் தொனித்த ஏதோ ஒன்று ராதிகாவைக் குத்தியது.. அவள் கோபம் கொண்டாள்.. செய்வதையெல்லாம் அவனே செய்து விட்டு மற்றவர்களை குற்றவாளிக் கூண்டில் எப்படி நிறுத்துகிறான் என்ற நினைவில் அவள் கொதித்துப் போனாள்...
இவன் மேகலாவைத்தான் அடக்கலாம்.. ராதிகாவையும் அப்படியே ஆக்கிவிடலாம் என்று நினைத்து விட்டானா..?
அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது.. தட்டிக் கேட்கும் உரிமையும்.. தைரியமும் தாய்க்கு வேண்டுமானால் இல்லாமல் போகலாம்.. மனைவிக்கு இல்லாமல் போய்விடுமா..?
"ரோட்டைப் பார்த்தால் கூடத் தப்பா..?" மிடுக்கான தொனியில் கேட்டாள்..
அவளது மிடுக்கை உணர்ந்தவனின் புருவங்கள் உயர்ந்தன... அவன் மீண்டும் தோள்களைக் குலுக்கி.. அலட்சியமாக கைகளை விரித்தான்...
"ஏன் பார்க்கக் கூடாது.. தாராளமாகப் பார்க்கலாம்.. இந்த ரோட்டைப் பார்க்காமலிருக்க உன்னால் முடியாது தான்..."
'அடக் கடவுளே...!' என்றிருந்தது ராதிகாவுக்கு..
"இந்த ரோட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?" எரிச்சலுடன் கேட்டாள்...
"இது தென்காசிக்குப் போற ரோடு..." அமர்த்தலாகப் பதில் சொன்னான் முரளி...
"தென்காசியில யாரிருக்கா..?" வெடுக்கென்று கேட்டாள் ராதிகா..
"இதுவரை யாருமில்லை... இனித்தான் வரப் போறாங்களே...", முரளியின் குரோதப் பார்வை அவளை எரிப்பதைப் போலப் பார்த்தது...
இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் ராதிகா ஜன்னலை விட்டு விலகி கட்டிலை நோக்கி நடந்தாள்.. அதில் ஏறி அமர்ந்து முழங்கால்களைக் கட்டி அதில் முகம் பதித்துக் கொண்டாள்...
"என்னாச்சு.. என்னவோ வேகமாய் கேள்வி கேட்ட. தென்காசிக்கு உன்னைத் தேடி.. உனக்கு வேண்டியவங்க வரப் போகிறாங்கன்னு சொன்னதுமே தலையைக் கவிழ்ந்துக்கிட்டு உட்கார்ந்துட்ட..?" பாலமுரளி எள்ளலாகக் கேட்டான்...
"நான் ஏன் தலையைக் கவிழனும்..?" ராதிகா ரோசத்துடன் நிமிர்ந்தாள்...
"வீட்டிலயும்.. தோட்டத்திலேயும் வேலை செய்கிற வேலையாள்க முன்னாலே அந்த ஷோபாகூட ரகசியம் பேசி... உங்க காரில் ஏற்றிக்கிட்டுப் போனீங்களே... அதுக்காக நீங்கதான் தலையைக் கவிழனும்..."
"ஓ..."
அவளது பேச்ல் விழிகள் மின்ன அவளை ஊடுறுவிப் பார்த்தான் பாலமுரளி...
'எப்படிப் பார்க்கிறான்.. எல்லாத் தப்பையும் இவன் செய்துவிட்டு.. எதுவும் நடக்காததைப் போல பார்த்து வைக்கிறானே.. இப்படிப் பார்க்க இவனால்தான் முடியும்..' ராதிகா மனம் குமுறினாள்...
அவனது விழிகளின் மின்னலுக்கான அர்த்தம்.. அன்றைய இரவில் டைனிங் டேபிளில் அவளுக்குத் தெரிந்தது...
பாலமுரளி அருகில் வேண்டுமென்றே அமர்ந்து கொண்ட ஷோபா தாழ்வான குரலில் அவனிடம் பேச ஆரம்பிக்க.. ராதிகாவைப் பார்த்த வண்ணம் அவள் சொல்வதை உன்னிப்பாகக் கவனித்து.. பதில் சொல்லிக் கொண்டிருந்தான் பாலமுரளி...
அந்த நாடகத்தை ஆள் மாற்றி ஆள்.. ஏதோ வேலையிருப்பதைப் போன்ற பாவனையுடன் அங்கே வந்து பார்த்து விட்டுப் போக.. வேலையாள்கள் முன்னிலையில் இதுபோன்ற செயல்கள் நடக்கலாமா என்று வெகுண்டு போனாள் மேகலா...
அதுவரை அவள் கட்டிக்காத்து வந்த பெரிய குடும்பத்தின் கண்ணியம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் அவள் மனதில் எழுந்தது...
ஒரளவிற்கு மேல் அவளால் அந்த நாடகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை...
"முரளி.." கடினமான குரலில் அழைத்தாள்...
"என்னங்கம்மா..." முரளி அவள் பக்கம் திரும்பினான்...
"ஷோபாவை திருநெல்வேலியில் விட்டுவிட்டு வர்றேன்.. நீ நேரத்தோட வீட்டுக்கு வந்துருப்பா.. ராதிகா தனியா இருப்பா... ஷோபா... நீ ராத்திரியே உன் துணிகளை அடுக்கி வைச்சுக்கம்மா... காலையில நாம கிளம்பனும்..."
உத்தரவிடும் தொனியில் மேகலா சொல்ல... ராதிகா நிம்மதியாக உணர்ந்தாள்... இனி நாடகத்தைப் பார்க்க முடியாதோ என்று வேலையாள்கள் ஏமாற்றமாக உணர்ந்தார்கள்...
பாலமுரளியின் பார்வை ராதிகாவின் முகத்தின் மீது படிந்தது... அதில் தெரிந்த நிம்மதியை அவன் கண்டு கொண்டான்... கூர்மையான அவனது துளைக்கும் பார்வையில் எதையோ உணர்ந்த ராதிகாவுகு மனம் 'பக்..பக்..' கென்று அடித்துக் கொண்டது...
அவளது பயத்தை மெய்பிக்கும் வகையில் பாலமுரளி மேகலாவிடம் பேசினான்...
"நாளைக்கே திருநெல்வேலிக்குப் போகிறீங்களா..? ஏம்மா..?"
"இது என்னடா கேள்வி.. ஷோபாவை தனியே அனுப்ப முடியுமா..?"
"அவளை எதுக்காக அனுப்பனும்...?"
ராதிகாவைப் பார்த்தபடியே கேட்டான் பாலமுரளி.. அவன் எதிர்பார்த்ததைப் போலவே அவள் பதைப்புடன் அவனைப் பார்த்தாள்.. அவன் விழிகளில் திருப்தியின் ரேகை படிந்தது..
'வாஹ்ரே.. வா...' ஷோபா மகிழ்ந்தே போனாள்...
முதன்முதலாக அவள் நினைத்ததை ராதிகாவின் விசயத்தில் அவள் செயல்படுத்தப் போகிறாள்...
அந்தப் பொன்னான வாய்ப்பை அவளால் நம்பவே முடியவில்லை...
அவளைக் கண்டாலே காத தூரத்துக்கு விலகி ஓடும் பாலமுரளியா அவளை எதற்காக அனுப்ப வேண்டும் என்று கேட்கிறான்..?
இது ஒன்று போதுமே.. ராதிகாவின் மனதை ஷோபா வெட்டிச் சாய்த்து விடுவாளே...
"புரியாம பேசாதே முரளி... அவ அவளோட பெரியம்மா வீட்டுக்குப் போகனுமுன்னுதானே கிளம்பி வந்தா.."
"இது யாரு வீடும்மா...? நாம அவளுக்கு உறவுக்காரங்க இல்லையா..? விருந்தாளியாய் வந்தவளை இரண்டே நாளில் அனுப்பி வைச்சா.. அக்காவோட மாமியார் மெச்சுக்குவாங்களா..?"
அவன் பாலசரஸ்வதியை நினைவு படுத்த.. மேகலா அரண்டே போனாள்.. மகளின் மாமியரைப் பற்றிக் கவலைப் படாமல் பெண்ணைப் பெற்ற தாயால் இருக்க முடியாது..?
'சபாஷ்..' ஷோபா பாராட்டுதலாக முரளியைப் பார்த்தாள்.. அதை ராதிகாவும் பார்த்தாள்.. ராதிகா பார்ப்பதை முரளியும் பார்த்தான்..
அவன் கண்கள் இடுங்கின.. மனைவியை பார்வையிட்டபடியே மேகலாவிடம் பேச்சைத் தொடர்ந்தான்..
"அதோட அம்மா.. இப்பத்தான் நானும் ராதிகாவும் திருநெல்வேலிக்கு போயிட்டு வந்தோம்.. உடனடியா நீங்களும் போய் நின்னா நல்லாயிருக்குமா..?"
"நான்தான் ஷோபாவை விட்டவுடனே கிளம்பி விடுவேனே முரளி..."
"அதுக்கு அவங்க விட்டு விடுவாங்களா...?"
முரளி நிதானமாகக் கேட்க.. மேகலா பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்..
"அதனால்தான் சொல்கிறேன்ம்மா.. ஷோபா இங்கேயே இருக்கட்டும்.."
"அவ வயசுப் பொண்ணு முரளி.."
"இந்த வீட்டில நான் மட்டும் தனியா இல்லையே.. வீட்டுக்குப் பெரியவங்களா நீங்க இருக்கீங்க.. ஷோபாவோட கூடப் படிக்கிற ராதிகா இருக்கா.. வீடு நிறைய வேலையாளுக இருக்காங்க... அப்புறம் என்ன..?"
பேச்சு முடிந்தது என்பதை உணர்த்தியவனாக பாலமுரளி எழுந்து கொண்டான்.. இனி அவன் பேச்சுக்கு எதிர்பேச்சை பேசிவிட முடியாது என்பதை உணர்ந்தவளாக மேகலா பெருமூச்சு விட்டாள்... கை கழுவி விட்டு திரும்பியவன்..
"ஷோபா.." என்று அழைத்தான்..
"அத்தான்.." வள்ளுவரின் வாசுகியாக ஷோபா அவன் முகம் பார்த்தாள்...
"ஊர் சுற்றிப் பார்க்கனுமுன்னு சொன்னியே.. நாளைக்கு காலையிலே ரெடியாய் இரு... கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்..."
பாலமுரளி மாடிப்படிகளில் ஏறிவிட.. மேகலாவும்.. ராதிகாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..
இது எங்கு போய் முடியப் போகிறதோ என்ற கவலை மேகலாவை சூழ்ந்து மையம் கொண்டது.. அதை அவளது முகக் குறிப்பிலிருந்து உணர்ந்து கொண்ட ராதிகா.. தன் பயத்தை வெளியிடாமல் மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்..
"ஏய்ய்..." ஷோபா ராதிகாவை விரல் சொடுக்கி அழைக்க.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி வெகுண்டு விட்டாள்..
'வீட்டு ஆம்பளையை கைக்குள்ள போட்டுக்கிட்டா தெனாவெட்டு வந்துருமா..? இப்படியாப்பட்ட பெண் ஜென்மத்தை வெட்டிச்சாய்க்க வேணாமா..?'
அவள் கண்ணகியாய் மாறி ஷோபாவை முறைக்க.. ராதிகா அமைதியாக மீனாட்சியை அங்கிருந்து அப்புறப் படுத்தினாள்..
"மீனாட்சி.. இந்தப் பாத்திரத்தை கிச்சனில் கொண்டு போய் வை..."
ஷோபாவின் அழைப்பை பொருட்படுத்தாமல் ராதிகா மீனாட்சியிடம் வேலை சொல்ல.. ஷோபாவுக்குள் வழக்கமான தலைவலி வரவா என்றது...
'இவ கண்ணு முன்னாலேயே இவஹஸ்பெண்ட் என்கூட ஊரைச் சுற்ற வரேன்னு சொல்றான்.. இவ அதுக்கும் அசையல.. நான் வேற கை சொடுக்கி.. 'ஏய்ய்'ன்னு கூப்பிடறேன்.. இவ அதுக்கும் அலட்டிக்கல.. இதெல்லாம் பத்தாதுன்னு என்னை முறைக்கிற வேலைக்காரியை செல்லமா வேலை ஏவிக்கிட்டு இருக்கிறா.. இவளை ஆட்டம் காண வைக்கவே முடியாதா..?'
பழகினதுதான் என்றாலும்.. வழக்கம் போலவே ராதிகாவின் அலட்சியமான போக்கு ஷோபாவை பாதித்தது...
மீனாட்சியோ.. அங்கிருந்து நகருவேனா என்று அடம் பிடித்தவளாக ஷோபாவை முறைத்துக் கொண்டே நின்றாள்.. அது வேறு கூடச் சேர்ந்து ஷோபாவின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தது...
"மீனாட்சி... உன்னை கிச்சனுக்கு போகச் சொன்னேன்.."
ராதிகா உத்தரவிடும் தொனியில் பேசியதை ஷோபா ரசிக்கவில்லையென்றாலும்.. ஒருவகையில் அது அவளுக்கு ஆறுதலாக இருந்தது..
சும்மாவே அவளுக்கு வீரதீரமான பெண்மணிகளின் மீது பயம் உண்டு.. யாராவது வாய் தாட்டியமாக 'இன்னாமே..' என்று சொன்னால்.. சென்னையிலேயே அவள் ஜகா வாங்கி விடுவாள்..
இதுவோ தேனூத்து.. மீனாட்சியைப் பார்த்தால்.. மீசையில்லாத 'லேடி கட்டபொம்மனை'ப் பார்ப்பதைப் போலவே இருந்து வைத்தது...
இப்படிப்பட்ட வீரப் பெண்மணிகளிடம் இருந்து விலகி நிற்பதே சாலச் சிறந்தது என்பதை வாழ்க்கை ஷோபாவிற்கு பலசமயங்களில் பாடமாக கற்பித்து வந்திருக்கிறது...
இத்யாதி.. இத்யாதி.. காரணங்களால்.. மீனாட்சியின் கண்பார்வையிலிருந்து தள்ளி நிற்க வேண்டும் என்று ஷோபா மனதுக்குள் உத்தேசித்திருந்தாள்...
அன்று காலையில் குற்றாலத்துக்கு ஷோபாவுடன் துணைக்கு கிளம்பும் போதே.. 'நீயெல்லாம் நான் துணைக்கு வரவேண்டிய நிலையில் இருப்பவளா..' என்ற கேள்வியை உள்ளடக்கிய பார்வையை வீசியபடிதான் மீனாட்சி துணைக்கு வந்தாள்...
அப்போதிருந்தே மீனாட்சியின் பார்வையைக் கண்டால்.. பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்ற முடிவோடு ஷோபா இருந்ததால்.. இப்போதும் மீனாட்சியின் முறைப்பைக் கண்டும் காணாதவளைப் போல பார்வையை தழைத்துக் கொண்டாள்...
"சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு நான் வீட்டுக்குப் போகனும் சின்னம்மா... எனக்கு சின்ன சோலியொன்னு காத்திருக்கு.."
"இதென்ன மீனாட்சி... இப்படிச் சொல்ற.. அப்படி என்ன வேலை உனக்காக காத்திருக்காம்..?"
"வேற ஒன்னுமில்ல சின்னம்மா.. பேயோட்டனும்..."
ஷோபாவைப் பார்த்தபடி மீனாட்சி பல்லை நறநறக்க.. ஷோபா வெலவெலத்துப் போனாள்.. மீனாட்சியின் கையிலிருந்த பாத்திரம் உடுக்கை போல அவளுக்கு தோற்றமளிக்க... 'சேச்சே... இது மனபிரமை..' என்று மனம் தேறினாள்...
ராதிகாவுக்கு அவளைப் பீடித்திருந்த கவலையிலும்.. சிரிப்பு வந்தது... வாய்விட்டு அவள் சிரித்ததில் மேகலாவின் முகமும் தெளிந்தது.. அவளும் மருமகளுடன் கூடச் சேர்ந்து மெல்லச் சிரித்தாள்...
"பேயோட்டப் போறியா... இது என்ன புதுசா சொல்ற..?"
"புதுசில்ல சின்னம்மா.. பழசுதான்... எங்க தெருப் பக்கம் வந்து கேட்டுப் பாருங்க.. எத்தனை பேயை நான் ஓட்டியிருக்கேன்னு அவங்கவங்க.. கதைகதையாய் சொல்லுவாங்க.. பேயோட்டி நாளாச்சு சின்னம்மா.. புதுசா ஒரு பேய் வந்து குதிச்சிருக்கு.. அதை வேப்பிழை அடிச்சு.. ஓட்டாம விட மாட்டேன்..."
"சும்மா சிரிப்பு மூட்டாதே மீனாட்சி.. எனக்கு வயிறு வலிக்குது.."
"அது மனுசங்களுக்கு சின்னம்மா.. சில பிசாசுகளுக்கு வயிறு எரியும்... அந்தப் பிசாசை ஓட்டிட்டுத்தான் வேற வேலை பார்க்கனும்..."
"விட்டா வேப்பிழையை அடிச்சுருவே போல இருக்கே..."
"ஆமா...! கேட்டுக்கங்க சின்னம்மா..!
             பட்டினத்து மோகினியோ...!
    அத்தையோ..! மாமியோ...!
             தேனூத்துக்கு வந்தியோ...
    மிதிவாங்கிப் போவியோ..
             ம்ம்ம்.. மாரி.. சூரி.. காளி.. வாடி..!"
மீனாட்சி தலையை ஆட்டிக் கொண்டு... கால் மாற்றி கையாட்டி இஷ்டத்துக்கு பாடி வைக்க.. ஷோபா அவசரமாக எழுந்து கையைக் கூட கழுவாமல் 'தப்பித்தேன்... பிழைத்தேன்..' என்று அவள் அறைக்கு ஓடி விட்டாள்.. மேகலாவுக்கு எல்லாமே மறந்து விட.. அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்..
"யாருகிட்ட..?"
மீனாட்சி வெற்றிப் பார்வையுடன் மேகலாவைப் பார்க்க..
"ஏய்ய்.. போடி.. போய் வேலையைப் பாருடி.." என்றாள் அவள்..
மேகலாவின் சிரித்த முகத்தை ஆதுரத்துடன் பார்த்த ராதிகாவின் கண்கலங்கியது... அவர்கள் இருவரையும் பார்த்த மீனாட்சியின் நெஞ்சம் நிறைந்தது..
- மூன்றாம் பாகம் முடிந்தது -



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...!,-107
அம்மம்மா.. கேளடி தோழி...!,-107
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-107.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-107.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy