அம்மம்மா.. கேளடி தோழி...! -104

104 காலைப் பனியின் துளிகளோடு.. கலந்து வரும் என்காதல்... ஷோபாவின் ஆசேவத்தின் பிண்ணனியில் சங்கரின் நிராகரிப்பு இருந்தது... எந்த சங்...


104
காலைப் பனியின் துளிகளோடு..
கலந்து வரும் என்காதல்...

ஷோபாவின் ஆசேவத்தின் பிண்ணனியில் சங்கரின் நிராகரிப்பு இருந்தது... எந்த சங்கருக்காக... பாலமுரளியை தூண்டிவிட்டு ராதிகாவின் கரம் பிடிக்க வைத்தாளோ... அந்த சங்கர் ஷோபவை நிராகரித்து விட்டான்...
எவனைத் திருமணம் செய்து கொள்ள ராதிகா தடையாக நிற்கிறாளென்று பாலமுரளியை விட்டுக் கொடுத்தாளோ.. அவன் ஷோபாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான்...
ஷோபாவின் அப்பா எவ்வளவோ முயன்று பார்த்தும் சங்கரின் மனதை மாற்ற முடியவில்லை...
"நான் என்னடா செய்வேன்..? அவனோ எனக்கு ஒற்றை மகன்.. மேரேஜ் என்கிறது அவன் மனதுக்கு பிடித்ததாக இருக்க வேண்டுமில்லையா..? பிஸினெஸ்ஸில் நிறைய சாதித்தவன்.. பாரினில் படிச்சுட்டு வந்தவன்.. அவனுக்குத் தெரியாததையா நான் அவனுக்குச் சொல்லிவிடப் போகிறேன்..? இது மேரேஜ் மேட்டர்.. அவன் சம்பந்தப்பட்டது... இதில் அவனை ஃபோர்ஸ் பண்ண என்னால் முடியாது.. ஐ ஆம் ஸாரி..."
சங்கரின் தகப்பனார் கையை விரித்து விட்டார்.. நெருங்கின நண்பரே பின் வாங்கி விட்ட பின்னால் எந்த நம்பிக்கையில் சங்கருக்காக ஷோபாவை காத்திருக்க வைக்க முடியும்...?
போதாக்குறைக்கு.. சங்கரின் திருமணம் முடிவாகி விட்டதாக செய்தி வந்து சேர.. ஷோபாவின் தந்தை தீவிரமாக அவளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்...
ஷோபாவுக்கு மனம் தாங்கவில்லை.. சுசிலா வேறு அவளை சொல்லிக் காட்டி விட்டாள்...
"ஆற்றிலே ஒரு கால்.. சேற்றிலே ஒரு கால்ன்னு இருந்தா இந்தக் கதிதான்.. நீ ஒரு நிலையாய் நின்றிருக்கனும் ஷோபா.. நான்தான் அருமையான மாப்பிள்ளையாய் பாலமுரளியை பார்த்து வைத்திருந்தேனே.. கிராமம்ன்னு சொல்லி.. நீயும் உன் அப்பாவும் அலட்சியமா இருந்துட்டிங்க... இப்பப் பாரு.. பாலமுரளிக்கும் மேரேஜ் ஆகிருச்சு.. சங்கருக்கும் ஆகப் போகுது.. இரண்டையும் கோட்டை விட்டுட்டு நாமதான் முட்டாள் தனமா முழிச்சுக்கிட்டு நிற்கிறோம்..."
ஷோபாவின் அதிர்ந்த பார்வையில் எதைக் கண்டாளோ.. சுசிலா மகளின் தோளில் கைபோட்டு ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்..
"உனக்கென்ன குறை ஷோபா..? அழகில்லையா..? படிப்பில்லையா..? அந்தஸ்துதான் இல்லையா..? உன் அப்பாவோட கோடிக் கணக்கான சொத்துக்களுக்கு நீ ஒருத்திதானே வாரிசு.. இதுக்குப் போய் மனம் வருந்தலாமா..? இவங்களைவிட மேலானவனாப் பார்த்து உனக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறோம்.. டோன்ட் வொர்ரி.. செல்லம்.."
ஷோபாவால் கவலைப்படாமல் எப்படியிருக்க முடியும்..? யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நினைவில் தலைவலியை வரவழைத்துக் கொண்டு அவதிப் பட்டாளோ.. அந்த ராதிகாவின் காதல் நிறைவேற முட்டாள் தனமாக உதவி விட்டு கவலைப்படாமல் இருக்க முடியுமா...?
பாலமுரளியைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ராதிகாவையும் தோற்கடித்திருக்கலாம்.. சங்கரின் முன்னாலும் வாழ்ந்து காட்டியிருக்கலாம்.. இவையிரண்டுமே நடக்காமல் போனது யாரால்..?
அந்த ராதிகாவால்...
இப்படி நடக்குமென்று ஷோபா நினைத்தா பார்த்தாள்...?
அவள் நினைத்தது வேறு.. நடந்ததோ முற்றிலும் வேறு...
சங்கருடனான ராதிகாவின் திருமணம் நிற்க வேண்டும்... அதே நேரத்தில் பாலமுரளியின் தீராத வெறுப்பிற்கும் ராதிகா ஆளாக வேண்டும்...
ஷோபா மட்டும்.. அந்த இருவரில் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு.. இன்னொருவனுக்கு 'டாட்டா' காட்ட வேண்டும்...
இப்படித்தான் நினைத்து அவள் காய் நகர்த்தினாள்.. பாலமுரளிக்கு ராதிகா பேசிய பேச்சுக்களை செல் போனில் பதிவு செய்து அனுப்பி வைத்தாள்.. பாலமுரளியின் மனமும்.. குணமும் ஷோபாவுக்கு மிக நன்றாகவே தெரியும்...
முரளியின் மனதில் ராதிகா இருந்தாள்...
இதை முதல் நாளிலேயே ஷோபா கண்டு பிடித்து விட்டாள்.. யாராலும் அசைக்க முடியாத பாலமுரளியின் மனதை ராதிகா அசைத்து.. அவன் மனதில் இடம் பிடித்து விட்டதில் ஷோபாவுக்குள் பொறாமை இருந்தது தான்...
ஆனாலும்.. கிணற்று வெள்ளத்தை ஆற்று நீரல் கொண்டு செல்ல முடியாது என்று அலட்சியமாக இருந்து விட்டாள்... முரளியின் அக்காவை அவளது ஒன்று விட்ட அண்ணன் திருமணம் முடித்திருந்தான்.. அந்த அக்காவுக்கு ஷோபாவை பிடித்திருந்தது...
இதைவிட வேறென்ன வேண்டும் என்ற நினைவுதான் ஷோபாவின் பிழைப்பைக் கெடுத்து விட்டது..
அக்கா சொன்னால் கட்டாயம் தம்பி கேட்டு கொள்வான் என்று ஷோபா நினைத்தாள்.. அந்தத் தம்பி.. யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் ரகமில்லை என்று அவளுக்குப் புரியவைத்து விட்டான்...
பாலமுரளியின் குணம் பற்றி ஷோபா ஒரளவுக்கு கணித்து வைத்திருந்தாள்.. அவனுக்கு வேண்டியவர்கள் என்றால் அவர்களுக்காக அவன் எதையும் செய்வான்.. அதுவே எதிரிகள் என்றால் அவர்களை கூண்டோடு அழிக்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டான்..
இந்த குணாதியம் தான் ஷோபாவை பயமுறுத்தி வைத்திருந்தது...
'இவனே இப்படிப்பட்ட ராட்சஸ குணம் படைச்சவனா இருக்கான்.. இவனை மேரேஜ் பண்ணிக்கிட்டா.. லைஃப் முழுவதும் பயந்து சாகனும்... தேவையா..?'
ஷோபாவின் மனம் சங்கரை நாடியதற்கு இதுவும் ஒரு காரணம்... கூடுதலாக சங்கரின் அழகும்.. வெளிநாட்டுப் படிப்பும் இருந்தன...
இப்படிப்பட்டவனுக்காக... சங்கரை தூக்கியெறிந்து விட்டு ராதிகா உருகி நிற்பாள் என்று ஷோபா நினைத்துக் கூடப் பார்த்ததில்லை..
பாலமுரளியின் காதல் ஒருதலையானது என்ற நினைவில்தான் அவனது கோபத்தை தூண்டி விட்டாள் ஷோபா... அவன் கோபம் கொண்டால் ராதிகாவின் கதி.. அதோ கதியாகி விடும் என்பது ஷோபாவின் எதிர்பார்ப்பு..
அவன் நினைத்த ராதிகாவை சங்கர் திருமணம் செய்து கொள்ள ஒருநாளும் பாலமுரளி விடமாட்டான்.. அதே சமயத்தில் சங்கர் மேல் ஆசைப்பட்ட ராதிகாவை திருமணமும் செய்து கொள்ள மாட்டான் என்று தான் ஷேபா நினைத்தாள்...
அவளது முதல் நினைவு பலித்தது... சங்கருடனான ராதிகாவின் திருமணத்தை பாலமுரளி நிறுத்தி விட்டான்..
ஆனால் அவளது இரண்டாவது எதிர்பார்ப்பைத் தான் தவிடு பொடியாக்கி விட்டு.. ராதிகாவைத் திருமணம் செய்து கொள்ள கிளம்பி விட்டான்...
இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத ஷோபா நிலை குலைந்து போய்விட்டாள்... இப்பேற்பட்ட கோடிஸ்வரனுக்கு ராதிகா மனைவியாகி விடுவதா என்று வயிறெரிந்தாள்.. அவளால் ஆனமட்டும் அந்தத் திருமணத்தை தடுத்த நிறுத்தும் யத்தனங்களைச் செய்தாள்... என்னதான் அவள் பகீரத பிரயத்தனங்களைச் செய்தாலும்.. பாலமுரளியுடனான ராதிகாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த அவளால் முடியாமல் போய் விட்டது...
'இந்தக் கோபக்காரனுக்கு கழுத்தை நீட்டா விட்டால் தான் என்ன..?'
அவள் மனதை சமாதானம் பண்ணிக் கொண்டு.. அவனின் திருமண நிச்சயதார்த்தத்திற்குப் போனாள்.. அங்கேதான் அவள் தலையில் இடி விழுந்தது...
ராதிகாவின் மனதிலும் பாலமுரளி இருந்ததை அன்றுதான் அவள் கண்டு கொண்டாள்... அதை அவளால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை...
சங்கர் போன்ற கவர்ச்சிகரமான அழகுடன் கூடிய பணக்காரன் சென்னையிலே இருக்க.. அவனைத் திருமணம் செய்து கொள்ள.. வலிய வந்திருக்கும் வாய்ப்பை புறக்கணித்து ராதிகாவின் மனம் தேனூத்து கோபக்காரனிடம் நிலைகொண்டிருக்கும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லையே...
தன் எதிரியைத் தோற்கடிக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டதுமில்லாமல் அவளது காதல் நிறைவேற தானே மறைமுக காரணமாகி விட்டதை ஷோபாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
அந்த நிலைமையிலும் அவள் ராதிகாவுடன் மோதத்தான் செய்தாள்.. அவளோ பதிலுக்கு எச்சரிக்கை செய்து விட்டாள்...
பாலமுரளியுடனான ராதிகாவின் திருமணம் நின்றால் ஷோபாவுக்குத்தான் சிரமம்.. சங்கரை ராதிகா திருமணம் செய்து கொண்டு விடுவாள்... பாலமுரளியோ ஷோபாவைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்...
இப்படியாகப்பட்ட அஸ்திரத்தை ராதிகா எய்ததும்.. ஷோபா யோசனையுடன் பின் வாங்க வேண்டியதாகி விட்டது...
ராதிகா வெற்றிகரமாக பாலமுரளியின் மனைவியாகி விட்டாள.. சங்கரோ ஷோபாவை மறுத்து விட்டான்..
இந்த நிலைமையில் ஷோபாவுக்கு பைத்தியம் பிடிக்காமலிருக்குமா...?
அவள் உன்மத்தம் பிடித்தவளாக சங்கரைத் தேடிப் போனாள்... அவனும் அவளைத் தனிமையில் சந்திக்க வந்தான்.. கடற்கரைச் சாலையில் காரை நிறுத்திவிட்டு மணலில் கால் புதைய அவளுடன் நடந்தான்.. ஷோபாவின் மனக்குமுறல்களை பொறுமையாக கேட்டான்.. அதன் பின்னரும் அவனது மறுப்பைத் தெளிவாகச் சொன்னான்...
"என் மனசில ராதிகா மேல மட்டும் தான் காதல் வந்தது ஷோபா.. அது ஏன்னு தெரியலை.. பார்த்தவுடனேயே அவளை எனக்கு பிடித்துப் போய் விட்டது..."
"அவளுக்குத்தான் மேரேஜ் முடிந்து விட்டதே சங்கர்..?"
"அந்த மேரேஜீக்குப் பின்னாலே நீயிருக்கிறாய்ன்னு.. நான் சந்தேகப்படுகிறேன் ஷோபா..."
நிதானமாக கூறிய சங்கர் தனது புத்திசாலித்- தனத்தை ஷோபாவுக்கு நிருபித்தான்.. ஷோபாவின் விழிகளில் நொடிப் பொழுதுக்கு தோன்றி மறைந்த அதிர்வு அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது...
சங்கர் கடலை வெறித்தான்.. அவன் முகம் இறுகியிருந்தது...
"பாலமுரளி உனக்கு ரிலேடிவ் ஷோபா... நீ என்மேல் ஆசைப்பட்டாய்.. உனக்கும் ராதிகாவுக்கும் ஆகவே ஆகாது... இந்த மூன்றும் போதும்... நீதான்.. இதைச் செய்திருக்கிறாய்ன்னு புருஃப் பண்ண..."
"நோ சங்கர்... நான் குற்றமற்றவள்..."
சங்கரின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்து.. உன்னை எனக்குத் தெரியாதா என்றன...
"பொய் வேண்டாம் ஷோபா.. ஏதோ நடந்திருக்கிறது.. பாலமுரளியிடம் ராதிகா பயப்படுகிறாள்.. பிளாக்மெயில் செய்துதான் பாலமுரளி அவளை மேரேஜ் பண்ணிக்-கொண்டு போயிருக்கிறான்... நீ ராதிகாவின் வாழ்வை சிதைத்து விட்டாய்.."
"சங்கர்..." ஷோபாவின் குரல் நடுங்கியது..
சங்கரிடமிருந்து வெளிப்பட்ட இந்த அதீதமான கோபத்தை அவளால் எதிர் நோக்க முடியவில்லை...
அவளறிந்த சங்கர் மென்மையானவன்.. அதிர்ந்து பேசாதவன்.. அழகானவன்.. நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வெளிநாட்டு படிப்புக்காரன்.. வியாபாரத்தில் பல வெற்றிகளைச் சந்தித்தவன்.. நாசுக்கும்... நாகரிகமும் தெரிந்தவன்..
அவனா இந்த அளவுக்கு அவள்மேல் கோபப் படுகிறான்..?
"இதை நான் மன்னிக்கவே மாட்டேன் ஷோபா... நான் உன்னை வெறுக்கிறேன்.. உன்னைக் கொன்று இந்தக் கடலில் வீசியெறிந்தால் கூடத் தப்பில்லை.. நீ அந்த அளவுக்கு கொடுரமானவள்... ராதிகா பாவம்.. எதையோ மனதில் வைத்துப் பூட்டிக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் மருகுகிறாள்.. பாலமுரளியிடம் பயந்து போய்.. அவனை மேரேஜ் பண்ணியிருக்கிறாள் என்றால் எந்த அளவுக்கு அவன் அவளைத் துன்புறுத்தியிருக்க வேண்டும்..? இதற்கெல்லாம் காரணம் யார்..? நீதான்.."
சங்கரின் சுட்டு விரல் அவளை நோக்கி நீண்டு 'நீ குற்றவாளி...' என்றது.. ஷோபா விக்கித்துப் போனாள்...
"நீயும் ஒரு பெண்ணா..? ச்சே... இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் குரூரமாக விளையாடி விட்டாயே.. பாவி.. உன்னை நான் மேரேஜ் பண்ணிக்கனுமா..? போய்விடு.. என் கண்ட்ரோலை மீறி உன் கழுத்தை நெறித்துக் கொல்வதற்குள் இங்கேயிருந்து ஓடிவிடு.."
ஷோபா ஓடித்தான் வந்து விட்டாள்.. அதற்கு மேலும் அங்கே நிற்க அவளால் முடியவில்லை... சங்கருடன் திருமணம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று அவளுக்குத் தெரிந்து விட்டது.. மனம் முழுவதும் வெறுப்பையும்.. கோபத்தையும் நிரப்பிக் கொண்டிருக்கும் சங்கரின் மனம் அவள் பக்கம் திரும்பவே திரும்பாது என்று தெரிந்து கொண்டபின்பு.. அவன் முன்னால் நிற்கக் கூட அவளுக்கு தகுதியில்லாமல் போய் விட்டது...
ஷோபா அடிபட்ட புலியானாள்... அவளது ஆக்ரோசம் முழுவதும்.. ராதிகாவின் பக்கம் திரும்பியது...
'இவள் யார்..? ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.. இவள்மீது இரண்டு கோடிஸ்வரன் களின் பார்வை பட்டது... அது யாரால்..? என்னால்...! அந்த இரண்டு பேருமே எனக்காக பார்க்கப்பட்ட மாப்பிள்ளைகள்.. இரண்டில் ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டிய உச்சத்தில் இருந்தேன்... இவளால் அந்த இரண்டுமே கை நழுவிப் போய்விட்டது.. இவள் மட்டும் என் பர்த்டே பங்சனுக்கு வராமல் இருந்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்குமா..,'
அந்த பிறந்த நாள் விழாவிற்கு எதற்காக ராதிகாவை ஷோபா வரவழைத்தாள் என்ற நினைவில் கண் சிவந்தாள் ஷோபா...
'என்னைப்பார்... என் லெவலைப் பார்ன்னு காட்டத்தானே இவளைக் கூப்பிட்டேன்.. இது ரெண்டையும் விட்டுவிட்டு.. எனக்காக பார்த்திருந்த மாப்பிள்ளைகள் இரண்டு பேரையும் பார்க்கச் சொல்லி.. இவளுக்கு யார் சொன்னது..? ஒரே நாளில் இரண்டு பேரையும் மயக்கி என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டாளே.. இவளை எனன் செய்தால் தேவலாம்...'
எது செய்தாலும் தேவலாம் தான் என்ற முடிவுடன் அவள் தேனூத்துக்கு கிளம்பிவிட்டாள்... சங்கர் தென்காசியில் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறான்... அந்த மணப்பெண் பாலமுரளிக்கு உறவுக்காரப் பெண் என்ற செய்தி அவள் காதுக்கு வந்து சேர்ந்தது... அதை வைத்து விளையாடிப் பார்க்கலாம் என்று அவள் தேனூத்தில் கால் வைத்திருந்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -104
அம்மம்மா.. கேளடி தோழி...! -104
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-104.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-104.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy