அம்மம்மா.. கேளடி தோழி...! -103

103 உன்னைப் பார்த்த பின்னாலே... நானாக.. நானில்லை... மகள் வீட்டு விருந்துக்குப் போன மகனும்.. மருமகளும் ஷோபாவை கூட வைத்துக் கொண்டு ...


103
உன்னைப் பார்த்த பின்னாலே...
நானாக.. நானில்லை...

மகள் வீட்டு விருந்துக்குப் போன மகனும்.. மருமகளும் ஷோபாவை கூட வைத்துக் கொண்டு காரைவிட்டு இறங்கியதைக் கண்ட மேகலா புரியாமல் பார்த்தாள்...
பாலமுரளி அவளுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க... அதைக் காது கொடுத்துக் கேட்கக் கூட விருப்பப் படாதவளாக ராதிகா மாடியேறிவிட்டாள்...
அதை ஜாடையாக கவனித்த மேகலாவின் மனதில் பொறிதட்டியது...
"அத்தான்... நான் எந்த ரூமில் தங்கட்டும்...?"
மேகலா என்ற ஒருத்தி அங்கே இருப்பதைப் பார்க்காதவளைப் போல பாலமுரளியிடம் கொஞ்சும் குரலில் வினவினாள் ஷோபா.. மேகலாவின் புருவங்கள் முடிச்சிட்டன... விட்டால் பாலமுரளியின் மடியில் ஏறிக்கொள்வாள் போலத் தோன்றியவளை யோசனையுடன் பார்வையிட்டாள்...
அவளை எந்த அறையில் தங்க வைக்கலாம் என்ற யோசனையை மகன் தன்னிடம் கேட்பான் என்று எதிர்பார்த்த மேகலா ஏமாந்து போனாள்...
"மாடியில தங்கிக்கயேன்.." என்று சொன்ன பாலமுரளி...
"சரிதானேம்மா...", என்று கேட்கவேறு செய்தான்...
"சரியில்லைடா முரளி..."
பட்டென்று பதில் சொன்ன மேகலா தான் மாணிக்க வாசகத்தின் மனைவி என்பதை நிருபித்தாள்...
"ஏம்மா...?"
தாயார் எதற்காக ஆட்சேபம் தெரிவிக்கிறாள் என்று பாலமுரளிக்கு சுத்தமாக புரியவில்லை...
"மாடியில நீயும்.. ராதிகாவும் தங்கியிருக்கீங்கடா.."
"அதற்கென்னம்மா.. எங்க ரூமுக்கு பக்கத்து ரூமில தானே ஷோபாவை தங்கிக்கச் சொன்னேன்.."
என் அறையிலா தங்கிக்கச் சொன்னேன்..? என்ற பாலமுரளியின் மறைமுகக் கேள்வியில் மேகலா முகம் கருத்தாள்.. ஷோபா முகம் மலர்ந்தாள்..
"ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன் ஆண்ட்டி..."
ஷோபா அவசரமாக குறுக்கிட.. அவளுக்கு எதில்தான் ஆட்சேபனை இருக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் முகம் சுளித்தாள் மேகலா...
"நீ புரிஞ்சுதான் பேசறியா முரளி... ஷோபா கல்யாணம் ஆகாத பொண்ணு அவளைப் போய் உன் ரூமுக்கு பக்கத்து ரூமில் தங்க வைச்சா ஊர்.. உலகம் என்ன சொல்லும்..?"
இதில் ஊர்.. உலகம் சொல்ல என்ன இருக்கிறது என்று ஷோபாவுக்கு சுத்தமாகப் புரியவில்லை...
ஊர் உலகத்திற்கு இதைக் கவனிப்பதை விட வேறு வேலை இல்லையா என்று கேட்க நினைத்து.. மேகலாவின் கடுமையான முகபாவத்தை கண்டு அவசரமாக அந்த முடிவை மாற்றிக் கொண்டாள் ஷோபா...
"இப்ப என்னதான செய்யனும்கறிங்க..?" முரளி எரிச்சலுடன் கேட்டான்...
"இப்ப வந்து கேளு.. இதை முதலிலேயே கேட்கிறதுக்கு என்ன..?"
மேகலா மகனின் தவறை சுட்டிக் காட்டினாள்..
"என்ன இது.. என் முன்னாலேயே அத்தானை இந்தக் காய்ச்சு காய்ச்சறிங்க.. சுயமாய் முடிவெடுக்கக் கூட அவர்க்கு உரிமையில்லையா..?"
ஷோபாவின் பேச்சு முரளியை தூண்டி விடுவதைப் போல இருப்பதை கவனித்த மேகலா.. கண்கள் இடுங்க.. அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்.. மேலும்.. எதையோ பேச நினைத்து வாய் திறந்த ஷோபா.. அந்தப் பார்வையை கண்டதும் வாயை மூடிக் கொண்டாள்...
"இது குடும்பம்மா.. இங்கே உரிமைப் பிரச்னைக்கு இடமில்லை.. நீ விருந்தாளியாய் வந்த பொண்ணு.. வீட்டு பிரச்னையில தலையிடக் கூடாது.. மீனாட்சி...!" மேகலா உள்பக்கமாக திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தாள்...
"அம்மா..." மீனாட்சி ஓடி வந்தாள்...
"இந்தப் பொண்ணை என் ரூமுக்கு பக்கத்து ரூமில தங்க வை..."
"ஆகட்டும்மா.." 
மீனாட்சி ஷோபாவின் பைகளை தூக்கிக் கொள்ள... ஷோபா தயங்கி நின்று முரளியின் முகம் பார்த்தாள்...
"அங்கேயென்ன பார்வை வேண்டிக்கிடக்கு..? வயசுப் பொண்ணு அடுத்தவங்க வீட்டிலே தங்கனும்னு நினைக்கிறதே தப்பு.. இதில புதுசா கல்யாணமான ஜோடி இருக்கிற ரூமுக்கு பக்கத்து ரூமில தங்கறது அதைவிடத் தப்பு.. போம்மா.. போய் குளிச்சுட்டு ரெஸ்ட் எடு.. சாப்பாட்டு டயத்திலே கூப்பிட்டு விடறோம்.. சாப்பிட வா..."
"அத்தான்...?"
என்னவோ காலம் காலமாக அத்தானோடு கூட வளர்ந்தவளைப் போல அவள் ஏக்கமாகக் கேட்டு வைக்க.. மேகலாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது...
'இந்தப் பொண்ணு என்ன இப்படி நடந்துக்குது..? இவ வீட்டிலே இப்படியா வளர்த்து வைச்சிருப்பாங்க..? இவளப் போயி நம்ம முரளிக்கு கட்டி வைக்க நினைச்சேசேன.. நல்ல வேளை தெய்வமே.. தப்பிப் பிழைச்சேன்...'
"அத்தானை அவன் பெண்டாட்டி பார்த்துக்குவாம்மா... உனக்கு அந்தக் கவலை வேணாம்.. நீ போ.."
ஏறக்குறைய ஷோபாவின் கழுத்தைப் பிடித்து தள்ளுவதைப் போலதான் மேகலா பேசி வைத்தாள்.. ஷோபா அதை தட்டி விட்டுவிட்டு எந்தவிதப் பாதிப்புணர்வும் இல்லாமல் ஆணியடித்ததைப் போல அங்கேயே நின்றாள்..
"உன்னைப் போன்னு சொன்னேனேம்மா..."
"அத்தான் கூட எனக்குக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு..."
தைரியமாக ஷோபா சொல்ல.. மீனாட்சி விழி விரித்தாள்.. மேகலாவுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்று அறிந்தவள் அவள்.. அப்பேற்பட்ட மேகலாவின் முன்னாலே அவள் மகனிடம் பேச வேண்டியிருக்கிறது என்று ஒரு இளம் பெண் சொல்கிறாள் என்றால் அவள் விழி விரித்துப் பார்க்க மாட்டாளா..?
"ஏன் முரளி... இந்தப் பொண்ணு உன்கூடத் தனியாப் பேசனுமாம்.. நான் வேண்டும்னா.. என் மருமகளையும்.. வேலையாள்களையும் கூப்பிட்டுக்கிட்டு வெளியே போயிரவா..?" மேகலாவின் கேள்வியில் புயலை உள்ளடக்கிய அமைதி இருந்தது...
"அம்மா..!" முரளி தலையைப் பிடித்துக் கொண்டான்....
"பேசாதே.. நடுவழியில் இந்தப் பெண்ணைப் பார்த்தா நீ என்ன செய்திருக்கனும்.. அப்படியே காரைத் திருப்பி.. உன் அக்கா வீட்டிலே இவளை ஒப்படைச்சுட்டு வந்திருக்கனுமா.. இல்லையா..?"
"ஏம்மா.. ஷோபா என்ன மூன்றாம் மனுஷியா..? அப்படியே கை கழுவிட்டு வர.. இவ நம்ம உறவுக்காரப் பெண்ம்மா..."
"நல்லாச் சொல்லுங்க அத்தான்... என்னை தேர்ட் பெர்ஸன் போலவே ட்ரீட் பண்றாங்க.. அதை முதல்ல ஏன்னு கேளுங்க..."
ஷோபா வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்காமல் ஊடே புகுந்து பேச... மேகலா இமைக்காமல் அவளையே பார்த்தாள்...
"ஏம்மா.. என்னை ஏன்னு கேட்கச் சொல்லத்தான் எங்க வீட்டுக்கு நீ வந்தியா..?"
"அம்மா..."
"முரளி.. இது சரியாப்படலே.. இந்தப் பொண்ணு தெரிஞ்சு பேசுதா... இல்லை தெரியாமப் பேசுதான்னு ஒரு விவரமும் பிடிபடலே.. ஒன்னு மட்டும் நல்லாத் தெரியுது.. இது பேசறது நல்லதுக்கில்ல..."
"என்னங்கம்மா நீங்க.. இது சென்னையில பிறந்து வளர்ந்த பொண்ணு.. நம்ம ஊரு பழக்க வழக்க மெல்லாம் இவளுக்கு எப்படித் தெரியும்..? தெரியாத்தனமா பேசி வைக்கிறா.. ஷோபா நீ கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாத் தேவலை..."
"நான் தப்பா எதுவும் சொல்லலையே அத்தான்.. உங்ககூட எனக்கு பேச வேண்டியிருக்குன்னு சொன்னேன்... அது தப்பா..?"
"தப்பேயில்லம்மா... இந்தப் பொண்ணு பேசுற லட்சணத்தை.. கேட்டுக்கடா முரளி.. ராதிகாவும் சென்னையில பிறந்து வளர்ந்தவதான்.. இவளப் போலவா பேசி வைக்கிறா..?"
மேகலா ராதிகாவை உயர்த்திப் பேசியதில் ஷோபா பொங்கி விட்டாள்...
"வாட் இஸ் திஸ் ஆண்ட்டி..?"
"ஆண்டியா..? ஏண்டா முரளி.. ஆனானப்பட்ட மாணிக்க வாசகத்தோட பெண்டாட்டி நானு.. இந்த தென்காசிப் பட்டினத்தில கோட்டையைப் பிடிச்சு கொடியை நாட்டின உன்னோட அம்மா நானு.. என்னைப் பார்த்து இந்தப் பொண்ணு ஆண்டின்னு சொல்லுது.. கேட்டுக்கம்மா.. என் வம்சம் கோடிஸ்வர வம்சம்.. உங்களைப் போல புதுப் பணக்கார வம்சமில்ல... யாரைப் பார்த்து ஆண்டின்னு சொல்ற...?"
மேகலா காளி அவதாரமெடுக்க.. முரளிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை...
"உனக்கு பீட்டர் விட வேற ஆள் கிடைக்கலியா ஷோபா..?" என்று ஷோபாவை கடிந்து கொண்டான்..
"இது சின்ன செண்டென்ஸ் அத்தான்... இதுக்கே இந்தப் பாடுன்னா.. இன்னும் நான் பீட்டர் விட்டா உங்க அம்மா தாங்குவாங்களா...?"
ஷோபா கேலியாக கேட்க.. முரளியின் முகம் மாறி கடினமானது... அவன் கண்டிப்பு பார்வை பார்த்தான்...
"உன் இங்கிலீஷ் லாங்குவேஜ் பெருமையை என் அம்மாவிடம் காட்டத்தான் எங்க வீட்டுக்கு வந்தியா..? பதிலுக்கு அவங்க தேனூத்து லாங்குவேஜ் பெருமையைக் காட்டினா நீ தாங்குவியா..?"
முரளியின் கோபக்குரலில் சட்டென்று ஷோபா ஜகா வாங்கினாள்...
"ஐயோ அத்தான்.. நான் ஆண்ட்டியிடம் பெருமை பேசுவேனா...? உங்களிடம் பேசக்கூட அவங்க விட மாட்டேங்கிறாங்களே... இது நியாயமா அத்தான்...?"
"ஏம்மா.. என் மகன்கிட்ட உனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு...?"
மேகலாவின் கேள்விக்கு.. ஷோபாவிடமிருந்து உடனடியாக பதில் கிடைத்தது...
"எனக்கு குற்றாலத்துக்கு போகனும் ஆண்ட்டி..."
"அதுக்கு எதுக்கு என் மகனிடம் பேசனும்கிற...?"
"அவர்தானே என்னைக் கூப்பிட்டுக்கிட்டுப் போகனும்...?"
"ஓஹோ... உன்னைப் பார்த்தா.. நடுவழியில கார் ரிப்பேராகி தற்செயலா தேனூத்துக்கு வந்ததைப் போலத் தெரியலையே... தெளிவாத் திட்டம் போட்டு வந்திருக்கிறது மாதிரியில்ல இருக்கு..."
"போங்க ஆண்ட்டி.. கேலி பண்ணாதீங்க..."
"இங்கே பாரும்மா.. இந்த வீட்டில உன் கூடப் படிச்ச பொண்ணு இருக்கா.. அவகூடப் பேசு.. உன் அண்ணியைப் பெத்த அம்மா... நான் இருக்கேன்.. என்கிட்டப் பேசு.. இந்தா மீனாட்சி இருக்கா.. அடுப்படியில காவிரி இருக்கா.. அவங்ககிட்டப் பேசு..."
"ஆக மொத்தம் அத்தானிடம் மட்டும் நான் பேசக் கூடாதுன்னு சொல்றிங்க..." ஷோபா அதிலேயே நின்றாள்...
"ஆமாம்மா..." மேகலாவும் பட்டென்று பதில் சொன்னாள்...
"அதுதான் ஏன்..?" ஷோபா விடவில்லை...
'ஏன்னா.. அவன்.. இன்னொருத்தியோட புருசன்..' சொல்லத் துடித்த நாவைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் மேகலா.... நிதானத்தை வரவழைத்துக் கொண்டவளாய்..
"அவனுக்கு ஆயிரம் வேலையிருக்கும்மா.. நின்னு பேச நேரமில்லாம ஒடிக்கிட்டு இருக்கிறவன் இவன்.. சாப்பிடக்கூட மறந்து போயி வேலை.. வேலைன்னு அலைகிறவன்.. இவனுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதாதும்மா.. உனக்கு ஊர் சுத்திப் பார்க்கனும்னா என்கிட்டச் சொல்லு..." என்று சிறு குழந்தைக்கு சொல்வதைப் போலச் சொன்னாள்...
"நீங்களே பாவம் வயசானவங்க.. உங்களைப் போய் தொந்தரவு பண்ணினா நல்லாயிருக்குமா.. ஆண்ட்டி.."
சந்தடிசாக்கில் மேகலாவை 'கிழவி'யென்று ஷோபா சுட்டிக் காட்ட... மேகலா மனதிற்குள் வெகுண்டாள்..
"நல்லாயில்லாததைப் பத்தி நீயெல்லாம் பேசக் கூடாதும்மா... நீ வந்ததில இருந்து பேசுகிறது எதுவுமே நல்லாயில்லை.. எனக்குத் தான் வயசாகிருச்சு... எங்க வீட்டிலேயும்.. மில்லிலேயும்... தோட்டம் வயல்.. செங்கல் சூளை.. ஜவுளிக்கடை.. உரக்கடைன்னு இருக்கிற அத்தனை தொழில்களிலயும் வேலை செய்கிறவங்களுக்கு ஒன்னும் வயசாகிரலை..."
"என்ன அத்தை சொல்கிறிங்க.. வேலையாள்கள் கூட நான் ஊர் சுற்றிப் பார்க்கிறதா...?"
"தப்பில்லைம்மா.. உனக்குத் துணையாய் மீனாட்சி வருவா.. இப்ப நீ போ.."
"என்னத்தான் இது...?"
"முரளி.. நீ மாடிக்குப் போ.."
மேகலாவின் கண்டிப்பான குரலில்... முரளி மாடிப்படி யேறிவிட்டான்...
ஷோபாவினால் அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை... ஒரு கிராமத்துப் பெண்மணி எளிதாக அவளைத் தோற்கடித்து விட்டதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை... அதிலும்.. பேச்சுக்கு பேச்சு.. ராதிகாவை உயர்த்தி வைத்து மேகலா பேசியதில் ஷோபா காழ்ப்புணர்ச்சி கொண்டாள்...
ஷோபாவுக்கு மேகலாவைப் பிடிக்காமல் போய் விட்டது...
"இன்னும் ஏம்மா இங்கேயே நிற்கிற.. போய் குளிச்சுட்டுவா... சாப்பிட்டுட்டு ஓய்வெடு.. நாளைக்கு மில்லில் இருந்து இந்தப் பக்கம் பூராவும் தெரிஞ்ச மனுசரா ஒருத்தரை அனுப்பச்சொல்றேன்.. நம்ம டிரைவர் இருக்கான்... மீனாட்சி உன் கூட வருவா.. ஊரைச் சுற்றிப் பாரு.. நாளைக்கு மறுநாள் உன்னைப் பத்திரமா திருநெல்வேலியில் விட்டுவிட்டு வர நானே உன்கூட வர்றேன்... கவலையே படாதே..."
பேச்சோடு பேச்சாக.. இரண்டு நாளில் ஷோபா அங்கிருந்து கிளம்பி விடவேண்டும் என்ற மறைமுக உத்தரவை போட்டு விட்டு மேகலா அகன்று விட்டாள்...
"வாங்கம்மா..." 
மீனாட்சி ஷோபாவைப் பார்த்த பார்வையில் கடுகளவு கூட மரியாதை தென்படவில்லை..
பல்லைக் கடித்தபடி... அவள் காட்டிய அறைக்குள் சென்ற ஷோபா அறைக் கதவைத் தாழிட்டு அதன் மேல் சாய்ந்து... கண்மூடி நின்றாள்...
அங்கே அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்ற நினைவில் அவள் மனம் குமுறியது...
ராதிகா..! அவளது சந்தோசத்தை அழிக்க வேண்டும்.. அதற்காகத்தான் அவள் சென்னையிலிருந்து கிளம்பி வந்திருக்கிறாள்...
ஆனால் ராதிகாவைக் காக்கும் பலமான அரணாக மேகலா நிற்கிறாளே...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -103
அம்மம்மா.. கேளடி தோழி...! -103
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-103.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-103.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy