அம்மம்மா.. கேளடி தோழி...! -102

102 என்னை விட்டு இன்னொருத்தி.. உன் இதயம் புகலாமா... ? "வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கியாடி..." முரளி அலுத்துக் கொண்ட...


102
என்னை விட்டு இன்னொருத்தி..
உன் இதயம் புகலாமா...?

"வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கியாடி..." முரளி அலுத்துக் கொண்டான்...
ராதிகா பயந்து போனாள்.. அந்த இரவு நேரமும்.. தூரத்தில் தெரிந்த வெண்ணிற பெண்ணுருவமும் அவளை பயமுறுத்தின...
"நான் என்னங்க பண்ணினேன்..?" அவள் அழமாட்டாத குறையாக வினவினாள்...
"மோகினிப் பேயைக் கூப்பிடச் சொன்ன... இப்பப்பாரு... கூப்பிடாமலே அது வந்து வழியை மறிக்குது.." பாலமுரளி பயமுறுத்தினான்...
"பே.. பே.. பேயா..?"
ராதிகாவின் விரல்கள் தந்தியடிக்க ஆரம்பித்தன...
"இப்ப எதுக்கு பே.. பே..ன்னு உளறி வைக்கிற.. நீயென்ன ஊமையா..?" அவன் கிண்டலடித்தான்...
உனக்கு கிண்டலடிக்க வேறு நேரமே கிடைக்க வில்லையா என்பதைப் போல அவள் அவனை முறைத்தாள்...
"இந்த முறைப்புக் கொன்னும் குறைச்சலில்ல.. உன் வீரத்தை என்னிடம் காட்டாம.. அந்தப் பேயிடம் காட்டு..."
"என்னது..."
வேண்டாம்.. நிறுத்தாதே.. என்று அவள் அலற யத்தனிக்கும் போதே அவன்.. அந்த உருவத்தின் அருகே காரை நிறுத்திவிட்டான்...
அவ்வளவுதான்.. ராதிகா முரளியின் மீது அட்டைபோல ஒட்டிக் கொண்டு விட்டாள்...
"ராது.. ஏய்ய்.." பாலமுரளிக்கு சிரிப்பு பீறிட்டது...
பயத்தில் உடல் வெடவெடக்க.. அவள் கண்களைத் திறக்காமல் அவன் மேல் அப்பிக் கொண்டது அவனுக்கு வெகு பிடித்தமானதாக இருந்து வைத்தது..
பயத்தில் நடுங்கிய அவளது தளிர் மேனி அவனோடு ஒட்டிக் கொண்டிருக்க.. அந்த சுகத்தில் லயித்திருந்தவனை...
"தேங்க்ஸ் அத்தான்.." என்ற குரல் கலைத்தது...
'அத்தானா...'
அரண்ட நிலையிலும் அவசரமாக கண் விழித்தாள் ராதிகா...
என்னதான் பேயாக இருந்தாலும்.. எப்படி இவ்வளவு உரிமையாக ராதிகாவின் கணவனைப் பார்த்து அத்தான் என்று அழைக்கலாம்..?
ஊரில் உள்ள ஆண்களையெல்லாம் மோகினிப் பேய்களுக்கு என்று நேர்ந்தா விட்டிருக்கிறார்கள் என்ற கோபம் தலைக்கேற விசுக்கென்று திரும்பிப் பார்த்தாள் ராதிகா...
வருவது வரட்டும்.. பேயாக இருந்தாலும் மோதிப் பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு அவள் வந்திருந்த போது...
"பின் சீட்டில் ஏறிக்க ஷோபா.." என்றான் முரளி...
'ஷோபாவா..?'
ராதிகா கண்களை கசக்கிவிட்டுப் பார்த்தாள்... அங்கே ஷோபாதான் நின்றிருந்தாள்...
'இவ எங்கே இங்கே... இந்த நேரத்தில வந்து தொலைச்சா...?' ராதிகாவுக்கு ஒரு மண்ணும் பிடிபடவில்லை...
"நல்ல வேளை அத்தான்... உங்க நினைப்பு வந்து போன் பண்ணினேன்... நீங்களும் இந்த வழியில... இந்த நேரத்தில வந்து சேர்ந்தீங்க பாருங்க... அதுதான் என் லக்.."
'எனக்கு பெட் லக்...' என்று சொல்ல வேண்டும் போல ராதிகா ஆசைப்பட்டாள்...
ஆசைப்பட்டதையெல்லாம் நடத்தி விட முடிகிறதா என்ன...?
"அத்தையும்... மாமாவும் இல்லாம இப்படி நைட் ஜர்னி வரலாமா...?"
"என்னத்தான் செய்கிறது..? அப்பாவுக்கு திடிர்ன்னு பாரின் போகிற புரோக்ராம் வந்துருச்சு... அம்மாவும் கூடப் போகனுமாம்... என்னை பெரியம்மா வீட்டுக்கு தள்ளி விட்டுட்டாங்க..."
'அப்புறம் எதுக்குடி.. அங்கே போகாம இந்தக் காரில ஏறி... என் உயிரை குறைக்கிற...'
"இங்கே வருகிற வரைக்கும் கார் ஒழுங்காத்தான் இருந்ததுச்சு... திடிர்ன்னு பார்த்தா... ரேடியேட்டர் சூடாகி புகையாய் வர ஆரம்பிச்சிருச்சு..."
'வழக்கமாய் நீதான் புகைவ.. இப்ப உன் காரின் ரேடியேட்டரும் புகைய ஆரம்பிச்சிருச்சா...? பேஷ்.. பேஷ்.. ரொம்ப நன்னாயிருக்கு...'
"என்ன செய்கிறதுன்னு தெரியாம உங்களுக்கு போன் பண்ணினேன்..."
'ஆக்சுவலா... உன் பெரியம்மாவுக்குத்தானே நீ போன் பண்ணியிருக்கனும்..? அதை விட்டுட்டு என் புருசனுக்கு ஏண்டி போனை போட்ட...?'
"என்னவோ தெரியலை அத்தான்... ஆபத்தான நேரத்தில பட்டுன்னு உங்க நினைப்புத்தான் என் மனசுக்குள்ள வந்து நிற்குது..."
'நிற்கும்.. நிற்கும்.. ஆபத்தான நேரத்தில உதவிக்கு அழைக்க அடுத்தவ புருசன்தானே உன் நினைப்பில வருவான்.. சொந்த பெரியம்மாவும்.. பெரியம்மா மகனுமா நினைப்பில வரப் போறாங்க...'
"இதில ஒரு ஒற்றுமையைப் பார்த்தீங்களா அத்தான்..."
'ஏண்டி.. என் புருசன்கூட ஒற்றுமை கொண்டாடுறதிலேயே குறியாய் இருக்க..? அந்த ஒற்றுமையை என்னிடம் காட்டேண்டி...'
"என் கார் ரிப்பேரான அடுத்த செகண்டில் உங்க கார் வந்து நிற்குது..."
இந்தக் கதையை நம்புவதற்கு ராதிகா தயாராக இல்லை...
'அது எப்படி.. இந்த அர்த்த ஜாம நேரத்திலே இவகார் இதே ரோட்டில ரிப்பேராகி நிற்குமாம்... அடுத்த செகண்டில் எங்க கார் வந்து இவளை அள்ளிப் போட்டுக்கிட்டு பறக்குமாம்.. கதை விடுறா...'
இந்தக் கதையை வேறு எங்காவது போய் சொல்லு.. எனக்கு காது குத்தி கம்மல் மாட்டியாகி விட்டது என்ற தினுசில் காதைத் தடவியபடி ஷோபாவை முறைத்தாள் ராதிகா...
அவளெங்கே அதைப் பார்த்தாள்..? அவளுக்கு பாலமுரளியின் முகத்தைப் பருகுவதைப் போலப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருந்ததே...
லைலா கூட மஜ்னுவை இப்படியொரு காதல் பார்வை பார்த்திருக்க மாட்டாள்.. அதைவிட அதீதமான காதலையும்.. ஏக்கத்தையும் கண்களில் தேக்கி பாலமுரளியை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் ஷோபா..
பாலமுரளி அதை கண்டு கொள்வதாகவே இல்லை.. அவனது கவனமெல்லாம் விலகி அமர்ந்திருந்த ராதிகாவின் மீதே இருந்தது... சற்றுமுன் அவள் பயத்துடன் ஒட்டிக் கொண்டபோது உணர்ந்த அவளது உடலின் மென்மையில் நிலை கொண்டிருந்தது அவனின் மனம்...
தள்ளி அமர்ந்திருந்தவளை தாபத்துடன் பார்த்தான்... அவள் முகத்தில் இப்போது எள்ளும்.. கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன...
"இவ எப்ப போன் பண்ணினா..?"
ஷோபாவை லட்சியம் பண்ணாமல் பாலமுரளியிடம் அதட்டலாக அவள் கேள்வி கேட்ட விதம் பாலமுரளிக்கு புதிதாகவும்.. இனிப்பாகவும் இருந்தது...
அவனது மனைவியென்ற உரிமையுடன் அவனை அவள் கேள்வி கேட்டதில் அவனுக்குள் ஒர்விதமான கிளர்ச்சி உருவானது..
"இப்பத்தான்..." அவன் விட்டேற்றியாக பதில் சொல்வதைப் போலச் சொன்னான்...
அவனுக்குத் தெரியும்.. அவனின் இந்தப் பதிலில் ராதிகாவின் கோபம் அதிகரிக்கும் என்பது...
"இப்பத்தான்னா... எப்ப..? உங்க கூடத்தானே நானும் வர்றேன்.. எனக்குத் தெரியாம எப்ப இவ உங்ககூட பேசினா..?" ராதிகா சிடுசிடுத்தாள்...
"என் காதில என்ன இருக்குன்ன பார்த்துட்டுப் பேசுடி..."
செல்போனின் வயரை காதில் மாட்டியிருந்த பாலமுரளி அதைத் தூக்கிக் காட்டினான்...
"இதில அவ பேசினா.. எனக்குத்தான் கேட்கும்.. உனக்கெப்படி கேட்கும்..?"
'இது வேற நடக்குதா...
ராதிகாவின் விழிகள் எரி கங்குகளாகின.. அவளின் அந்தத் தணல் பார்வையில் குளிர்ந்து போனான் பாலமுரளி... விட்டேற்றியாக தள்ளி உட்கார்ந்திருந்தவள்.. இப்போது கணவனென்ற உரிமையுடன் அவனை அதட்டி ஆயிரம் கேள்விகள் கேட்டதில் அவனுக்குள் வெகுவாக பிரியம் பொங்கி வழிந்தது...
"பதிலுக்கு நீங்க வாயைத்திறந்து எதுவும் சொன்னதா எனக்கு நினைவில்லையே..." ராதிகா குத்தலாகப் பேசினாள்..
"ம்ம்ன்னு சொன்னேன்டி.. உனக்குத்தான் அது காதில் விழுகலை..." பாலமுரளி அவள் பேச்சுக்கு உடனடியாக பதிலைச் சொன்னான்...
"அதுதான் என் காதில் விழலை.. இவ போன் பண்ணியதை என்னிடம் சொல்லக் கூடவா உங்களுக்கு வாய் வரலை..?" வெடுக்கென்று கேட்டாள் ராதிகா...
அவளின் அந்த அதீத புத்திசாலித்தனத்தை ரசித்துச் சிரித்தான் பாலமுரளி.. மற்ற நேரமாக இருந்திருந்தால் அந்தச் சிரிப்பில் மயங்கிப் போயிருப்பாள் ராதிகா... இப்போது அப்படியில்லையே.. ஷோபாவின் அந்த நடுநிசி வருகை வெகுவாக அவளைப் பாதித்திருந்தது.. இனம் புரியாத ஒரு கலவர உணர்விற்கு ஆளானாள் ராதிகா.. அதே சமயம் அதை ஷோபா அறிய வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவள் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது..
இத்தனைக்கும் காரணம் இவன்தானே என்று பாலமுரளியின் மீது அவளின் கோபம் பாய்ந்தது...
இவனென்ன ஊருக்கு உழைப்பவனா..? எங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் போனாலும் ஒடோடிப் போய் உதவிக்கரம் நீட்டும் கதாநாயகனா..?
அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அதை அவளது முகம் உணர்த்த.. பாலமுரளிக்கு சற்று முன் வரை அலுப்பைத் தந்த அந்த இரவு நேரத்தின் பயணம் பிடித்தமானதாக மாறிவிட்டிருந்தது..
மாலையில் அவன் மொட்டைமாடியில்... பால சரஸ்வதியுடன் பேசிக் கொண்டிருந்த போது ராஜராஜன் வந்து சேர.. பாலசரஸ்வதி போய் விட்டாள்.. அவன் ராஜராஜனுடன் ஊர் நடப்பு.. உலகநடப்பு என்று உலகை வலம் வந்து கொண்டிருந்தபோது தான் அந்த அதிசயம் நடந்தது..
என்னவோ.. காலம் காலமாய் இணைபிரியாமல் பழகிய தோழிகளைப் போல... பாசப்பறவைகளைப் போல.. நகமும் சதையும் போல.. பேசிச் சிரித்தபடி பாலசரஸ்வதியும்... ராதிகாவும் ஒற்றுமையாய் வந்து சேர.. மாமனும்.. மச்சினனும் மயக்கம் போட்டு விழத் தெரிந்து.. மயிரிழையில் சுதாரித்து நிமிர்ந்து அமர்ந்தார்கள்...
'என்னடா இது...'
பாலமுரளிக்கு கையைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போல இருந்தது... ராஜராஜனின் நினைவில் அதை செயல்படுத்தும் முயற்சியைக் கைவிட்டான்.. இரவு உணவு முடிந்து அவர்கள் கிளம்பும் நேரம் வரை பாலசரஸ்வதியும் ராதிகாவும் ஒட்டிக் கொண்டே அலைந்தார்கள்.. அவர்கள் கிளம்பிய போது அகிலா.. மருமகளைப் பார்த்தாள்..
"இதோ அத்தை..." பாலசரஸ்வதி விரைந்தாள்...
திரும்பி வந்தவளின் கையில் பெரிய வெள்ளித் தட்டு இருந்தது.. அதில் அகலக் கரையிட்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலையும்.. பட்டு வேட்டி சட்டையும் இருந்தன.. உடைகளுக்கு மேலாக திறந்து வைக்கப் பட்டிருந்த நகைப் பெட்டியில் வைரங்கள் ஒளிர்ந்தன... பூவும்.. குங்குமச் சிமிழில் நிரப்பப் பட்டிருந்த குங்குமமுமாக அவள் அதை ராதிகாவிடம் நீட்டிய போது.. ராதிகாவின் கண்கள் பனித்திருந்தன...
"இப்பத்தான் போய் இந்த நகையை வாங்கிட்டு வந்தேன் ராதிகா... எனக்குத் தெரியும்.. கடைசி வரைக்கும் இந்த நகையை மத்தவங்க கை படாம நீ பாதுகாத்து வைச்சுக்குவேன்னு... சொத்து சுகத்தை விட.. உனக்கு அன்பாக வாங்கிக் கொடுத்த பொருள்கள்தானே முக்கியம்..? எந்தப் பரிசையும் அதன் மதிப்புத் தெரிந்து.. கடைசிவரைக்கும் வைத்துக் காப்பாத்தற மனுசங்களுக்குத் தான் கொடுக்கனும்.. அந்த வகையில் நீ கெட்டி.. இது உனக்காக நான் வாங்கிக் கொடுக்கிற நகை.. பத்திரமாய் வைச்சுக்க.."
நகைப் பெட்டியை நீட்டிக் கொண்டிருந்த பாலசரஸ்வதியிடம் பழைய காருண்ய குணம் மீண்டிருப்பதை கண்டு கொண்டான் பாலமுரளி...
அவனுடைய அன்பான அக்கா திரும்பக் கிடைத்து விட்டதில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி பெருகியது.. அதைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் மனைவியின் முகம் பார்த்தால்... அவள் உணர்வுகள் துடைக்கப் பட்ட முகத்துடன் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
மாலையில் அவன் அடித்த அடியின் பாதிப்பு அவள் மனதில் தங்கியிருப்பதை புரிந்து கொண்டவனாக அவனும் எதுவும் பேசாமல் காரைக் கிளப்பி விட்டான்.. வழியில் அதே மௌன விரதத்தை அவள் கடைபிடிக்க.. அதை உடைக்கும் முயற்சியில் அன் ஈடுபட்டிருந்த போது... ஷோபா ஊடே வந்து ராதிகாவின் மௌன விரத்தை முற்றிலுமாக உடைத்து விட்டாள்..
"அதைச் சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.. நீ மோகினிப்பேயை கூப்பிடச் சொன்ன..."
அந்த நினைவில் மீண்டும் வாய் விட்டுச் சிரித்தான் பாலமுரளி.. அந்த இருளிலும் தெரிந்த அவனின் வரிசைப் பற்களின் அழகில் அவள் சொக்கிப் போனாள்...
'இவன் ஒருத்தன்.. தனியாய் இருக்கும் போது.. அடிக்கவா.. பல்லை உடைக்கவான்னு.. வம்பைக் கட்டி இழுப்பான்.. கூட இந்த மாதிரி ஒரு ஜென்மத்தை வைச்சுக்கிட்டு.. பல்லைக் காட்டிச் சிரித்து மனதைக் கட்டி இழுப்பான்...'
அவள் உதட்டைக் கடித்தபடி முகத்தை திருப்பிக் கொண்டாள்...
ஷோபாவுக்கு அவர்களின் அன்யோன்யமான பேச்சை கொஞ்சம்கூட பிடிக்கவில்லை... பாலமுரளியின் பார்வை ராதிகாவின் மீதே படிந்திருக்க... அவளுக்குள் பொறாமைக் கனல் பொங்கியெழுந்தது.. ஷோபா இருப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் அவளின் வரவைப் பற்றி ராதிகா பாலமுரளியிடம் கோபப் பட்டதில் ஷோபா மனதிற்குள் கொதித்துப் போனாள்...
'என்னமா.. அதட்டி.. அதிகாரம் பண்றா.. இவனும் தான் இவ கேட்டதுக்கெல்லாம் இப்படி பயந்து பதில் சொல்லனுமா..? இவன் திமிருக்கு இது கொஞ்சம்கூட பொருந்த வில்லையே...'
ஷோபா அறிந்த பாலமுரளி மனிதரை மதித்து நின்று பேச மாட்டான்.. அதுவும் ஷோபாவைப் போன்ற அதீத ஒப்பனை செய்யும் அழகு சுந்தரிகளை இளப்பமாக பார்த்து விட்டு கல்லோ.. மண்ணோ என்று தோள்களைக் குலுக்கி விட்டுப் போய் விடுவான்..
அவனா.. ராதிகாவிடம் இவ்வளவு தன்மையாகவும்.. பணிவாகவும்.. பேசுகிறான்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -102
அம்மம்மா.. கேளடி தோழி...! -102
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-102.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-102.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy