அக்கினிப் பறவை -32

32 ஆதித்தன் தூக்கத்தில் புரண்டு படுத்து சந்தயாவின் மேல் கை போட்டு மீண்டும் தூக்கத்தில் மூழ்க ஆரம்பிக்கும் போது செல்போன் ஒலித்தது. ஆதி...


32

ஆதித்தன் தூக்கத்தில் புரண்டு படுத்து சந்தயாவின் மேல் கை போட்டு மீண்டும் தூக்கத்தில் மூழ்க ஆரம்பிக்கும் போது செல்போன் ஒலித்தது. ஆதித்தன் விழித்து எழுந்து உட்கார்ந்து போனை எடுத்து எண்களைப் பார்த்தான். பனையூர் கிராமத்தின் போன் நம்பர் ஒளிர்ந்தது. அவசரமாய் பேசினான்.
"ஹலோ ஆதித்தன் பேசுகிறேன்.." மறுமுனை மௌனமாக இருந்தது.
"ஹலோ.. ஹலோ.. யாருங்க.." 
ஆதித்தன் போட்ட சத்தத்தில் சந்தியா விழித்து எழுந்து தூக்கத்தில் சிணுங்கிய ஒரு வயது அன்னலட்சுமியின் மரத் தொட்டிலை ஆட்டி விட்டவாறு,
"மெதுவாப் பேசக்கூடாதா.." என்று கேட்டாள். 
ஆதித்தன் உதட்டில் விரலை வைத்து அவளைப் 'பேசாதே' என்று எச்சரித்தான். அவள் மௌனமாகி 'ஏன்' என்பதாய் சைகை செய்ய 'பொறு' என்பதாய் கையசைத்தான்.
"நான் உன் அப்பன் பேசறேன்லே.." என்றது மறுமுனையில் மலையப்பனின் குரல். 
ஆதித்தனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
"அப்பா... அப்பாவா பேசுகிறது.. என் அப்பாவா பேசுகிறது."
"ஆமாம்லே.. உன்னைப் பெத்த உன் அப்பன் தான் பேசுகிறேன். மகனே ஆதித்தா.. என் மருமகளையும், பேத்தியையும் கூட்டிக்கிட்டு உடனே ஓடிவாலே.. இங்க உன் தாத்தனுக்கு.."
"தாத்தாவுக்கு.. அப்பா .. தாத்தாவுக்கு என்ன ஆயிற்று..?"
"இப்பவோ, பிறகோன்னு கிடக்கிறார்லே. அவர் வளர்த்த பேரப்புள்ள.. உன் கையால் பாலூத்தாம அவர் உயிர் பிரியாதுன்னு சொல்லி உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு 'இழுத்துக்க, பறிச்சுக்க'ன்னு பாடு படறார்லே.. நீ உடனே ஓடிவா.. உன் முகமுழி பார்க்கத்தான் அவர் உயிர் காத்திருக்கு."
"வர்றேன்பா உடனே கிளம்பிவிட்டேன்."
அடுத்த மணித்துளிகள் இறக்கை கட்டிப் பறந்தன. நாராயணனுக்கு போன் பண்ணினான். சந்தியா மின்னல் வேகத்தில் பெட்டியில் அவர்களது துணிமணிகளை அடைத்தாள். குழந்தைக்குத் தேவையான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் கூடையில எடுத்து வைத்தாள். குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அவள் கிளம்ப விளக்குகளை அணைத்து விட்டு பெட்டி, கூடைகளை கையில் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டுக் கீழே இறங்கிய ஆதித்தன் காரை எடுத்தான். 
அந்தக் குடியிருப்பின் இரவு நேரக் காவலாளி விசாரிக்க "தாத்தாவுக்கு சீரியஸ். ஊருக்குப் போகிறோம்." என்று சுருக்கமாய் விவரம் சொன்னான். 
சந்தியா காரில் பின்பக்கம் குழந்தை தூங்கி வர வசதியாக ஏறிக் கொள்ள கார் கிளம்பி குற்றாலம் செல்லும் பாதையில் பறந்தது.
விடியற்காலையில் குற்றாலத்தைக் தாண்டி பனையூரில் நுழைந்து விட்டது கார். மலையப்பனின் வீட்டு வாசலில் கூட்டமிருக்க
'தாத்தா போய் விட்டாரோ' என்ற பதட்டத்துடன் ஆதித்தன் அவசரமாய் இறங்க,
"பதட்டப்படாம வாண்ணே. தாத்தா.. உன்னைப் பார்க்கணும்னுதான் காத்துக்கிட்டு இருக்கார்." என்றபடி காளியப்பன் வந்து பெட்டியை வாங்கிக் கொண்டான்.
'அண்ணா.?.' என்று அதிசயப்பட்ட ஆதித்தன் அடுத்து வெள்ளையம்மாள்,
"ஏன்லே, உங்க மதனி புள்ளையைத் தூக்கிக்கிட்டு இறங்க முடியாம காருக்குள்ளேயே உட்கார்ந்திருக்கு பாரு.. கதவைத் திறந்து விட்டு மதனியைக் கூப்பிடுலே.." என்று கூறவும் மயக்கம் போடும் நிலைக்கே வந்து விட்டான்.
சித்தய்யன் கார் கதவைத் திறந்துவிட சுப்பய்யன்.
"வா மதனி.. இதுதான் எங்க அண்ணன் மகளா..? சித்தப்பன் கிட்ட வா கண்ணு.." என்றபடி குழந்தையை வாங்கிக் கொண்டான்.
மலையப்பன் வர வெள்ளையம்மாளையும் அவரையும் நிற்க வைத்து பாதம் பணிந்து எழுந்தார்கள் ஆதித்தனும் சந்தியாவும், பேத்தியை வாங்கி உச்சி முகர்ந்த மலையப்பனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. ஊரே திரண்டு நின்று அவர்களை வேடிக்கை பார்த்தது.
"பாத்தியாலே.. மலையப்பன் மூத்த மவன்கிட்ட கொஞ்சுறதை.. பாசம் விட்டா போகும். ?பாவி மகன் இத்தன நாளா எங்கேலே ஔச்சு வைச்சிருந்தான் இந்தப் பாசத்த."
"நீரடிச்சு நீர் விலகுமாலே.. எங்கே தூர தேசம் போனாலும்.. அந்தப் பயபுள்ளையோட வேர் இங்கே தானல்ல இருக்கும். மலையப்பன் வம்சம் தழைச்சிருக்கு. பொம்பளப் புள்ளையே பொறக்காத பரம்பரையில் முதப் பொண் குழந்த பொறந்திருக்கு.. வம்சத்த வாழ வைக்க வந்த மகாலட்சுமியில்ல அது.. குடும்பம் ஒண்ணு மண்ணாப் போயிருச்சு. நல்லதுதானேலே..?"
ஆளுக்கு ஆள் நியாயம் பேச ஆதித்தனை மாடிக்கு அழைத்துச் சென்றார் மலையப்பன். வெள்ளையம்மாள் சந்தியாவை அழைத்துச் கொண்டு உடன் செல்ல அன்னலட்சுமியை தூக்கிக் கொண்டு காளியப்பனும் அவனது தம்பிகளும் பின் தொடர்ந்தனர்.
கிழிந்த நாராய் படுக்கையில் கிடந்த அந்த வயோதிகர்
"தாத்தா" என்ற கதறலில் கண் விழித்தார்.
"யாரு.. என் ஆதித்தனாலே.. என் ஆதித்தனாலே வந்திருக்கிறது.?."
"ஆமாம் தாத்தா.. நீங்க வளர்த்து ஆளாக்கின ஆதித்தன்தான் வந்திருக்கேன்.. கண் திறந்து பாருங்க தாத்தா.."
பார்வை மங்கின விழிகளால் துழாவியவர் பேரனை இனம் கண்டு கொண்டார். தளர்ந்து விழுந்த தோல் சுருங்கிய கைகளை அசைக்க முயன்றபடி,
"உன் பொஞ்சாதி, புள்ளைக வந்திருக்கா ராசா..?" என்று வினவினார்.
"இந்தா இருக்காங்க பாருய்யா.." என்று மலையப்பன் பேத்தியின் மேல் தந்தையின் கையை எடுத்து வைக்க சந்தியாவும் ஆதித்தனும் தணிகாசலத்தின் கால் தொட்டு வணங்கினர்.
"ஆதித்தா.. இங்கே வாலே.." என்று தாத்தா அழைத்த குரல் கேட்டு,
"வர்றேன் தாத்தா.." என்று அவரின் முகத்தோடு முகம் வைத்து தேம்பினான் ஆதித்தன். அவனின் முகத்தை தடவியர் சந்தியாவை அருகே அழைத்து,
"அம்மா.. தாயி.. என் பேரன் முரடு.. முன் கோபக்காரன் ஆனா.. நல்லவன்தாயி. அவனை பொஞ்சாதி புள்ளைன்னு குடும்பமா பார்த்திட்டேன். இனி நிம்மதியா என் கட்டை வேகும். அவனை பெத்த தாய்க்கு தாயா இருந்து பார்த்துக்குவியா தாயி.." என்று கேட்க.
"பார்த்துக்குவேன் தாத்தா.." என்று சந்தியா வாக்குக் கொடுத்தாள்.
யாரோ பால் கொண்டு வர ஆதித்தன் வாங்கி அதை தாத்தாவைப் பருக வைத்தான். அடுத்த இரண்டு மணி நேரங்கள் அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு எரிந்து பேச வேண்டியதைப் பேசிவிட்டு தான் வளர்த்த செடி விருட்சமாகி கிளை பரப்பி விட்ட நிம்மதியுடன் அந்தத் தியாகியின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. ஆதித்தன் கதறிய கதறல் குற்றாலத்தின் மலைகளில் எதிரொலித்தது.
பதினாறாம் நாள் காரியம் முடிந்தவுடன் எல்லோரும் மலையப்பன் வீட்டு முற்றத்தில் கூடியிருந்தனர்.
"அப்பா நாங்கள் சென்னைக்கு கிளம்புகிறோம். அதிக நாள் லீவ் எடுத்தாகி விட்டது.." என்று கூறினான் ஆதித்தன்.
"அப்படியாப்பா.." என்ற மலையப்பன் காளியப்பனைப் பார்க்க அவன் சில பத்திரங்களைக் கொண்டு வந்து கொடுத்தான்.
"இந்தாப்பா.." என்று மலையப்பன் கொடுக்க அதை வாங்கிப் பார்த்த ஆதித்தன்,
"என்னப்பா இது..?" என்று வினவினான்.
"உனக்கு சேர வேண்டிய சொத்துக்கள்ப்பா.."
"என்னுடைய சொத்து தாத்தாவும், நீங்களும்தான். உங்க பாசம் ஒண்ணே போதும். நான் கை நிறைய சம்பாதிக்கிறேன். எனக்கு அது போதும்மா. சொத்தெல்லாம் வேண்டாம்."
"அப்படிச் சொல்லாதே அண்ணா. இது சொத்தில்லை. இந்தப் பரம்பரையில் உனக்கு இருக்கும் உரிமை.  எந்தக் காரணத்துக்காகவும் விட்டுத் தராதே. நீ எங்க ரத்தம்ங்கறப்போ இந்தச் சொத்தும் உன்னதுதான்." என்றான் காளியப்பன்.
"அப்படியானால் காளியப்பா. இந்தா என் பங்குச் சொத்தை என் தம்பிகளான உங்கள் மூன்று பேரிடமும் ஒப்படைக்கிறேன். நீங்க உழைத்ததில், செலவழித்தது போக மீதமிருந்தால் அப்பா அம்மாவிடம் கொடுங்கள். நான் தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன்.." என்று தம்பிகளிடம் தன் சொத்தை ஒப்படைத்தான் ஆதித்தன்.
எல்லோரிடமும் விடைபெற்று ஆதித்தன் திரும்பினான். அந்தக் குடும்பமே கூடி தெரு வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்ததைக் கண்டு காற்றோடு கலந்து நின்ற தணிகாசலத்தின் ஆத்மா நிம்மதி அடைந்தது.
ந்தத் திருமண மண்டபம் களை கட்டியிருந்தது. சந்தானலட்சுமி பட்டுப் புடவை சரசரக்க, நகைகள் அணிந்து பரபரப்புடன் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள். 
கோபாலன் பட்டு வேட்டி, சட்டை யணிந்து வந்தவர்களை வரவேற்று அமர வைத்துக் கொண்டிருந்தார். வரவேற்பில் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த சந்தியாவிடம் வந்த ஆதித்தன், மூன்று வயது அன்னலட்சுமியை தூக்கிக் கொண்டிருந்தான். சந்தியாவின் மேடிட்ட வயிறு அவள் நிறை மாத கர்ப்பிணி என்பதைக் காட்டியது. 
அன்னலட்சுமி பட்டு கவுன் அணிந்து கொழுக் மொழுக்கென்று பார்ப்பவரின் கண்களைக் கவரும் துருதுருப்போடு இருந்தாள். ஆதித்தனின் கரங்களில் இருந்து வழுக்கி இறங்கிய குழந்தை வாசலில் ஓட
"ஏய்ய்" என்று நின்றபடி அதட்டிய ஆதித்தன்,
"அப்படியே அம்மாவைப் போல சொன்ன பேச்சு கேட்பதில்லை.." என்றான்.
"அடடே.. அப்படியா ஜி.எம். சார்.. மாற்றிச் சொல்லி தப்பிக்கப் பார்க்கறீங்களா.. அப்படியே அப்பா மாதிரி அடங்கா பிள்ளையாய் இருக்கிறாள்.." என்று கணவனை வாரிய சந்தியா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
"சிரிச்சு மயக்காதேடி.. உன் அண்ணனுக்குக் கல்யாணம்ன்னால் புருசனை கண்டுக்கக் கூடாதுன்னு சட்டமிருக்கா மூன்று நாள்களாய் தேவி தரிசனம் சரியாகவே கிடைப்பதில்லை. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்."
"உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்னு உங்களுக்குத் தெரியாதா..?"
"இப்போ பேசி மயக்கு.. இப்போ கல்யாணம் முடிஞ்சதும் நம்ம வீட்டுக்கு வருவியா, மாட்டியா..? மூன்று நாளா உன் அண்ணன் வீட்டில் டேரா போட்டிருக்கிறே.."
"நைட் புது மணத் தம்பதிகளை முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்கிறது வரை அண்ணன் வீட்டில் தான் இருப்பேன். அப்புறம்தான் வருவேன்.."
"ஏண்டி.. நமக்கும் இரவுன்னு ஒண்ணு வேண்டும்.. மனதில் வை.."
"ஐயே.. இங்க தான் நித்தம் முதலிரவா இருக்கே.. அப்புறமென்ன.. அதோ வாசலில் ஒண்ணு விளையாடுது. வயிற்றில் ஒண்ணு இன்றைக்கு வரவா நாளைக்கு வரவான்னு கேட்டுக்கிட்டு இருக்கு. என்னவோ சாமியாராய் அலைய விட்டது போல் பேச்சைப்பார். மூன்று நாள் விட்டுப் பிரிஞ்சா என்னவாம்.. என் அண்ணன் எனக்கு எல்லாக் கடமைiயும் செஞ்சான். தங்கை கடமையை நான் செய்ய வேண்டாமா..?"
"சரிடி.. முறைக்காதே.. அத்தை வருகிறார்கள்.. அப்புறம் பேசலாம்.."
சந்தானலட்சுமி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருவரையும் மேடைக்கு அழைத்துச் சென்றாள். பிரதீப் மணப் பெண்ணான சுமதியின் கழுத்தில் தாலி கட்ட மூன்றாவது முடிச்சான நாத்தனார் முடிச்சு சந்தியா போட்டாள். ஆதித்தன் மைத்துனன் சீர்வரிசையாய் தங்கச் செயின் போட்டு கைக்கடிகாரத்தை கட்டி விட்டு மோதிரம் போட்டு விட்டான். கணவனின் பரிசைக் கண்ட சந்தியாவின் இதயம் நிறைந்தது.
னையூர் கிராமத்தின் எல்லையிருந்த அம்மன் கோவில் வாசலில் கார்கள் நின்றிருந்தன. கூட்டம் கூடியிருந்தது. ஆதித்தனின் குழந்தைகள் அன்னலட்சுமி, தணிகாசலம் இருவருக்கும் குலதெய்வம் கோவிலில் முடிக் காணிக்கை செலுத்தி காது குத்தும் விழா நடை பெற்றுக் கொண்டிருந்தது.
சென்னையிலிருந்து ஒரு காரில் சந்தானலட்சுமி, கோபாலன், பிரதீப், சுமதி எல்லோரும் வந்திருந்தனர். சுமதி மேடிட்ட வயிறுடன் நின்றாள்.
வெள்ளையம்மாள் பொங்கல் வைத்து இறக்க காளியப்பன் முடி இறக்குபவரிடம் பேசிக் கொண்டிருக்க சித்தய்யன் பூஜை சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்க சுப்பய்யன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க, மலையப்பன் கோபாலன் குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஊர் பெரியவர் ஒருவர் ஆதித்தனிடம்,
"ஏன்லே உன் புள்ளைக பேரென்ன.." என்று கேட்க,
"அன்னலட்சுமி, தணிகாசலம்" என்று அவன் பதில் கூறினான்.
"என்னலே பட்டணத்துல போயி பொழைக்கிறே, பட்டிக்காட்டுப் பழைய பேரா வைச்சிருக்கே.." என்று அந்தப் பெரியவர் வியக்க,
"பட்டணத்தில் பிழைத்தாலும் என் வேர் இருப்பது பட்டிக்காட்டில் தான் தாத்தா. பழமை காப்பாத்தாமல் இந்த இளமை இல்லை." என்று ஆதித்தன் கூற,
"என்னவோ போ.. இந்தக் கிழவனுக்கு நீ சொல்றது மண்டையில ஏறலே.. ஆனா ஒண்ணு.. ஒண்ணை வளர்த்து ஆளாக்கி விட்ட உன் தாத்தன் பேரை ஒன் பையனுக்கு வைச்சிருக்கிறதைக் கேட்டு எம் மனசு குளிருதுய்யா.." என்றார் அவர்.
மலையப்பன் இந்த உரையாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்தார்.
"பிள்ளைகளுக்கு தாய் மாமன் எங்கே.. வாங்க.." என்று முடி இறக்குபவர் அழைக்க பிரதீப் வந்து குழந்தைகளை மடிதாங்கிக் கொண்டான்.
குழந்தைகளுக்கு காதணி முதல் வளையல், செயின் என்று தாய் மாமன் வீட்டுச் சீர்கள் பதினான்கு தட்டுக்களில் வரிசை பரப்பப் பட்டிருக்க ஊரே அதைப் பார்த்து வியந்தது.
பிரதீப்பின் மடியிலிருந்து குழந்தைகள் காது குத்தி  காதணி அணிந்தார்கள்.
மலையப்பன் தடபுடலாக ஊருக்கே காதணி விழா விருந்து வைத்தார்.
இரவு ஊர் திரும்பும் போது பின் சீட்டில் குழந்தை களுடன் அமர்ந்திருந்த சந்தியாவின் பக்கம் திரும்பி,
"முன் சீட்டுக்கு வாடி.." என்றார் கார் ஓட்டிக் கொண்டிருந்த ஆதித்தன்.
"அதுதானே பார்த்தேன். ஊரில் அடக்கமான பிள்ளையா வண்டியில் ஏறிட்டு ஊர் எல்லையைத் தாண்டியவுடன் வம்பு பண்ண ஆரம்பிச்சாச்சா..!" என்று பொய்யாய் சலித்துக் கொண்டவள் அன்னலட்சுமிக்கு தலையணையை அணைவு கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு தணிகாசலத்தை மடியில் வைத்துக் கொண்டு கணவன் அருகே வந்தாள்.
இருண்ட அந்த மலைப்பாதையில் வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டு அந்தக் கார் விரைந்தது.. சந்தியாவின் அருகாமை அந்த வெளிச்சத்தைப் போல் தனக்கிருப்பதை உணர்ந்த ஆதித்தன் ஒரு கையால் காரை ஓட்டியவாறு மறுகையால் மனைவியை அணைத்துக் கொண்டான்.
'பிருந்தாவனம்' என்ற பெயர் பலகை வைத்த அந்த புதிதாகக் கட்டப்பட்டிருந்த பங்களாவின் வாசலில் கட்டப்படிருந்த வாழை மரங்களும், மாவிலைத் தோரணங்களும், சாமியானா பந்தலும் செம்மண் கரையிடப்பட்டிருந்த அகன்ற மாக்கோலமும் அந்த வீட்டில் புதுமனை புகுவிழா நடைபெறுவதை பறை சாற்றியது.
உள்ளே ஹோமம் வளர்த்து ஐயர் மந்திரங்கள் ஓத புத்தாடை அணிந்து சந்தியாவும், ஆதித்தனும் மனையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரின் இரு பக்கமும் ஆறு வயது அன்னலட்சுமியும், மூன்று வயது தணிகாசலமும் உட்கார்ந்து இருந்தனர். 
எதிரே மலையப்பன், வெள்ளை யம்மாள், காளியப்பன், சித்தய்யன், சுப்பய்யன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். சந்தானலட்சுமி சமையலறையில் பால் காய்ச்ச ஆயத்தங்கள் செய்து சொண்டிருந்தாள். சுமதி கைக் குழந்தையுடன் வாசலில் உணவு வந்த வேனிலிருந்து பாத்திரங்களை இறக்கி வைத்துக் கொண்டிருப்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பிரதீப்பிடம் சென்று பேசிக் கொண்டிருந்தாள்.
எலி வலைன்னாலும் தனி வலை வேண்டும் என்று சந்தியா பிடிவாதம் பிடித்து தன் கிஷான் விகாஸ் பத்திரங்கள் முதிர்ந்து வந்த தொகை ஆறு லட்சத்தையும் அவளது வேலையில் பிடித்தம் வந்தத, அவள் சேமித்து முதலிய தொகை ஒரு லட்சத்தையும் கொடுக்க ஆதித்தன் தன் வங்கி கையிருப்பை எடுத்து இடம் வாங்கிப் போட்டான். அலுவலகத்தில் வீடு கட்ட லோன் போட்டு பற்றாக்குறைக்கு சந்தியாவின் நகைகளை அடமானம் வைத்து இந்த பங்களாவை கட்டி முடித்து விட்டனர்.
'பிருந்தாவனம்' என்ற பெயரை சந்தியாதான் தேர்ந்தெடுத்தாள். குழலூதும் கண்ணன் குதூகலம் கொடுத்த இடத்தின் பெயர் அதைப் போலென்றும் கண்ணன் துணையிருக்க அந்தக் குடும்பம் பிருந்தாவனமாய் தழைக்க வேண்டுமாம்.
ஒரு மாதம் தங்கி ஓய்வெடுத்த பின் மலையப்பன் குடும்பத்தார் பனையூர் சென்று விட்டனர்.. மைத்துனன்களின் திருமணத்திற்கும் மற்ற குடும்ப விசேஷங்களுக்கும் ஒரு வாரம் முன்னாலேயே சென்று சந்தியா நடத்திக் கொடுத்து வந்தாள்.
அன்று இரவு 'பிருந்தாவனத்தின்' மாடியிலிருந்த படுக்கையறையில் நுழைந்தாள் சந்தியா. நான்கு கட்டில்கள் சேர்த்துப் போடப்பட்டிருந்த மிகப் பெரிய படுக்கையறையில் குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு ஆதித்தன் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். சந்தியா வந்ததும் புத்தகத்தை வைத்து விட்டு,
"அம்மையார் பள்ளி கொள்ள வர இவ்வளவு நேரமா.." என்றான்.
"மாளிகை போல் வீடு. சரியாப் பார்த்துக்க வேண்டாமா..?"
"மகாராஜா போல் உன் புருசன். அவனையும் பார்க்க வேண்டாமா..?"
"ம்ம்.. குழந்தைகள் தூங்கிட்டாங்களா.."
"அப்போதே.." என்று மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் ஆதித்தன்.
அலைகள் அடிக்கும் கடல்தான் வாழ்க்கை.. அந்த அலைகளைப் புரிந்து கொண்ட மீனவனுக்கு கடல்தான் தாய்வீடு. நாமும் அதைப்போல் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் அலையடிக்கும் வாழ்க்கை அமைதியாய் தாலாட்டும்..
அக்கினிப் பறவையான ஆதித்தனை சந்தியா தாலாட்டியது போல்.


... முற்றும் ...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -32
அக்கினிப் பறவை -32
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy