அக்கினிப் பறவை -22

22 இரவெல்லாம் தூங்காமல் விடிவதற்கு சற்று முன்னர் கண்ணயர்ந்தவனுக்கு ' கிர்ர்ர் ' ரென்று கர்ண கடுரமாய் அலறிய அழைப்பு மணிமேல் எ...


22

இரவெல்லாம் தூங்காமல் விடிவதற்கு சற்று முன்னர் கண்ணயர்ந்தவனுக்கு 'கிர்ர்ர்'ரென்று கர்ண கடுரமாய் அலறிய அழைப்பு மணிமேல் எரிச்சல் வந்தது. தூக்கம் கலையாதவனாய் வந்து கதவைத் திறந்தவனின் தூக்கம், சோர்வு எல்லாம் வினாடியில் பறந்தோடியது. வாசலில் நின்று கொண்டிருந்தது 'பூங்கா' என்ற பூங்காவனம்.
ஆதித்தனை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றாள் அவள்.
"உள்ளே வான்னு கூப்பிடமாட்டாயா..?"
ஒருமையில் பேசினாள். பெற்றதாய் என்ற உரிமையில் பேசினாள். ஆதித்தன் வழிவிட்டான்.. உள்ளே வந்தாள். ஒருமுறை அபார்ட்மென்ட்டை சுற்றிப் பார்வையை சுழற்றினாள். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். ஆதித்தனைப் பார்த்தாள்.
"பேசமாட்டாயா..? என் கூடப் பேசமாட்டாயா..?"
"திடீர்ன்னு வந்திருக்கிறீங்க. திடீர் பாசம் காட்டறீங்க. என்ன பேச..?"
"எப்படி வந்தாலும் நான் உன் அம்மாதானேடா.."
ஒருமையில்  விளித்தவள் 'டா'போட்டாள். மௌனம் சாதித்தான் அவன்.
"ஏன் கபூரிடம் அப்படிச் சொன்னாய்..? எங்கள் கூட வரமாட்டேன்னு ஏன் சொன்னாய்..?"
"இது என்னங்க வம்பாப் போச்சு.. நான் யார்.. அவர் யார்.. அவர் ஏங்க எனக்கு சொத்து தரேன்னு சொல்லணும்."
"ஆதித்தா.. உன் அப்பா உன்னைக் கைவிடலைன்னா இந்தக் கேள்வியே வந்திருக்காது."
"என் அப்பா என்னை கைவிட்டுட்டால்..? சொல்லுங்க.. அதனால் நான் உங்க கணவர் கிட்ட கை ஏந்தணுமா..?"
பூங்காவனம் வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டாள்.
"ஆதித்தா.. என்ன சொல்லி என் நிலையை உனக்கு புரிய வைப்பேன்..? ஏழ்மையான நிலையில் பணம்தான் முக்கியம் என்று தோன்றியது. பணம் கைக்கு வந்தவுடன் மனம்தான் முக்கியம்ன்னு தோன்றிவிட்டது."
"ஆனால் பெத்த குழந்தை முக்கியம்ன்னு தோணலை. என்ன ஒரு பெத்த தாய்..?"
"ஆதித்தா.. என்னை வார்த்தைகளால் கொல்லாதே. உன்னை உன் அப்பாவிடம் விட்டுப் போனதான் காரணம் வேறு. கபூர் என்னுடன் உன்னையும் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால் உன் பேரை மறைத்து இன்னொருவரை உன் தகப்பன் என்று அடையாளம் காட்ட எனக்கு விருப்பமில்லை. உன் அப்பாவிற்கு நீயாவது மிஞ்சட்டுமே என்று நினைத்துத்தான்.."
"வெரிகுட்.. மானம், மரியாதையை கொன்றுவிட்டு என்னை மட்டும் மிச்சம் வைத்துப் போனீர்களா..? இப்படி விளக்கம் சொல்ல நாக் கூசவில்லை..?"
"ஆதித்தா. நான் தந்நிலை விளக்கம் தான் சொல்கிறேன். என் செயலை நியாயப் படுத்தவில்லை. நான் செய்தது தவறுதான். மாபெரும் தவறு. அதற்காக என்னை மன்னிக்க மாட்டாயா..? என்னுடன் வந்து விட மாட்டாயா..?"
"எப்படி, எப்படி... உங்களை நான் மன்னிப்பது. நீங்கள் உங்கள் குடும்பம், கணவர், குழந்தைகள்ன்னு வாழ்கிறீர்கள். என் தகப்பன் அவர் மனைவி குழந்தைகள்ன்னு வாழ்கிறார். இடையில் நான்..? தாய், தகப்பனிருந்தும் அநாதையாகிப் போனேனே.."
பூங்காவனம் குமுறிக் குமுறி அழுதாள். கடவுள் சந்நிதானம் போல் தன் மகனின் அருகாமையை எண்ணி கை கூப்பினாள். ஆதித்தன் பல்லைக் கடித்து தன் துயரத்தை அடக்கிக் கொண்டான். அவன் கற்பனையில் எண்ணித் தவித்த தாயின் மடி கண்முன்.. ஆனால்..?
"ஆதித்தா.. ஒரே ஓர் தடவை என்னை 'அம்மா' என்று அழைக்க மாட்டாயா..?"
"இல்லை மிஸஸ். கபூர். நீங்கள் என் அம்மா இல்லை. கபூரின் மனைவி."
"ஆதித்தா. உன்னைப் பெற்றவரும் இன்னொருத்தி யின் கணவர்தானே. அவரை 'அப்பா'என்று அழைக்க மாட்டாயா..? எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை..?"
"இருக்கலாம். என் அப்பா என்னைக் கொடுமை பண்ணியிருக்கலாம். என்னைப் புறக்கணித்திருக்கலாம். இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்துகிறவராக இருக்கலாம். என்மேல் பாசமில்லாதவராக இருக்கலாம். ஆனால்.. இவ்வளவு எதனால் ஏற்பட்டது..? யாரால் நடந்தது..? உங்களால்.. உங்களால் நான் அநாதையானேன். துன்பப்பட்டேன். என் தாத்தா மட்டும் இல்லாவிட்டால் என் கதி என்ன..?"
"மன்னித்து விடடா மகனே. இந்தக் கேடு கெட்டவளை மன்னித்துவிடு. நீ மனம் வைத்தால் அத்தனையையும் நான் சீர் செய்து விடுகிறேன். எத்தனை கோடி பணம் வேண்டும்..? உன்னை தன் மூத்த மகனனென்று கபூரை உலகம் அறியச் சொல்லச் சொல்கிறேன். இந்தியாவின் கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றான நம் குடும்பத்தின் மூத்த மகனாக நீ இருக்கலாம். உனக்கு அடுத்துத்தான் சுனில், மோனிகா எல்லாம்.."
"நான் மலையப்பனின் மகன் ஆதித்தன். தணிகாசலத்தின் பேரன். என் ஊர் பனையூர். என் வேரைவிட்டு மற்றொரு வேர் தேடிப் போக மாட்டேன். உங்கள் கணவர் ஒரு நாளும் என் அப்பா ஆகமாட்டார். நீங்கள் நடக்க முடியாததைப் பேசுகிறீர்கள். முதலில் நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள்."
"ஆதித்தா.. கொஞ்சம் மனம் இரங்கு.. இந்தத் தாயின் முகம் பார்."
"வேண்டாம். நான் உங்கள் முகம் பார்த்தால் கறை படிந்த என் கடந்த காலம் என் நினைவில் வரும். இப்போதுதான் நான் நோயிலிருந்து மீண்டிருக்கிறேன். என்னை சோதிக்காமல் நீங்கள் கிளம்பி விடுங்கள்."
"கண்ணே.. நான் பெற்ற மகனே.."
"இல்லை. நான் உங்கள் மகன் இல்லை. சுனில்தான் உங்கள் மகன். மோனிகா தான் உங்கள் மகள். நான் ஒன்று சொல்கிறேன் கேட்பீர்களா..?"
"சொல்லடா.. சொல்.. நீ பேசிக் கேட்கத்தானே ஓடி வந்திருக்கிறேன்."
"குடும்பம் ஒரு கோவில். அதை விளையாட்டு மைதானமாக்கி விளையாடி விட்டீர்கள். நான் சிதைந்து விடாமல் அந்தப் பெரியவர். என்னருமைத் தாத்தா என்னைக் காப்பாற்றி விட்டார். இனி மீண்டும் வந்து என்ன பயன்..? எந்தச் சொந்தமும் இனி மீண்டு வராது. இதைப் புரிந்து கொண்டு என் வழியில் இருந்து விலகிப் போய் விடுங்கள். உங்கள் வழி உங்களுக்கு.. என் வழி எனக்கு. புரிகிறதா..? இனி என்னைப் பார்க்க வரவேண்டாம்.."
அபார்ட்மெண்டின் ஜன்னல் வழியாக பூங்காவனம் நடை தளர்ந்து போய் காரில் ஏறுவதைக் கவனித்துக் கொண்டு நின்றான் ஆதித்தன். 
'அம்மா' என்று மனம் அலறியது. அவள் பேசிய பேச்சுக்கள் காற்றோடு கலந்து அவன் காதில் நிறைந்தன. அவள் அமர்ந்திருந்த சோபாவில் தலை சாய்த்து அது 'அன்னையின் மடி'யென்று பொய்யாய் ஆறுதல் படுத்திக் கொள்ள முயன்றான். அடக்கமாட்டாமல்,
"அம்மா.. அம்மா..." என்று பொங்கிப் பொங்கி அழுதான். அவனைப் பெற்றவள் வந்தாள். அவன் விரட்டி விட்டான். 'அம்மா'வென்று கூப்பிடச் சொல்லிக் கொஞ்சினாள். மறுத்துவிட்டான். அவன் மனம் உடைந்தான்.
போன் மணி ஒலித்தது. எடுத்துப் பேசினான். மறுமுனையில் சந்தியாவின் குரல் ஒலித்தது.
"என்ன ஆச்சு..? மணி பதினொன்று மிஸ்டர் ஜி.எம். ஆபிஸ் வரும் உத்தேசமில்லையா..?"
"சந்தியா. எனக்கு உடம்பு சரியில்லை. இன்று நான் வரமாட்டேன். எம்.டியிடம் சொல்லி விடு. முக்கியமான மெயில்களை விமலாவிடம் கையெழுத்து வாங்கி அனுப்பிவிடு."
"என்ன உடம்புக்கு.. திரும்பவும் காய்ச்சலா.." என்று சந்தியா பதறினாள்.
"இல்லை. மனம் சரியில்லை. சந்தியா உன்னைப் பார்க்க வேண்டுமே.."
"ம்ம்.." சந்தியா யோசித்தாள். அவனது அபார்ட்மென்டுக்கு அவள் வரமாட்டாள்.
எனவே ஆதித்தனே,
"மாலையில் கடற்கரையில் சந்திக்கலாமா..?" என்று கேட்டான். சுமை விலகியவளாய்.
"ஓ.யெஸ்" என்று அவள் பதில் சொன்னாள்.
தாய்க்குப் பின் தாரம். அவனது மனக்காயத்திற்கு மருந்து சந்தியாவின் அருகாமைதான். அவளைப் பார்த்தால் போதும் துன்பமெல்லாம் பறந்துவிடும். அவள் கடைசிவரை அவனுடன் வருவாள். அவனை நேசிக்க சந்தியா இருக்கிறாள். அவன் ஏன் மனம் கலங்க வேண்டும். அவள் அவனுடையவள். அவனுக்கு மட்டுமே அவள் சொந்தம்.
போராடிய பகல்பொழுது ஒரு வழியாய் முடிய இனிய மாலைப்பொழுது வந்தது. ஆவலுடன் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் கடற்கரைக்குச் சென்றான். அங்கே போகும்போதே தூரத்தில் சந்தியா கடலோரம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ஆவலுடன் அவள் அருகே விரையப் போகும்போது ஒரு பெரிய அலையொன்று அவள் மேல் நீரைவாரி ஊற்றிவிட்டுச் செல்ல அவள் ஆதரவாய் அருகேயிருந்த வாலிபன் ஒருவனைக் கட்டியணைத்துக் கொண்டு கலகலவென சிரித்தாள்.
'தாய்க்குப் பின் தாரம்' என்றால் இதுதானா.? ஆதித்தன் அறை வாங்கியவன் போல் அதிர்ந்து நின்றான்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -22
அக்கினிப் பறவை -22
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy