அக்கினிப் பறவை. -19

19 மனதில் மேகமூட்டமாய் சூழ்ந்திருந்த சந்தேகப் பேய்கள் விலகி ஓட காய்ச்சல் கூட குணமானது போல் சட்டென்று ஓர் உற்சாகம் தொற்றிக் கொண்டது ஆத...


19

மனதில் மேகமூட்டமாய் சூழ்ந்திருந்த சந்தேகப் பேய்கள் விலகி ஓட காய்ச்சல் கூட குணமானது போல் சட்டென்று ஓர் உற்சாகம் தொற்றிக் கொண்டது ஆதித்தனை. இன்று புதிதாய் பிறந்தாற் போல் அவனுக்குத் தோன்றியது. எதிரே அன்னை பராசக்தியின் வடிவம் போல் அமர்ந்திருந்த அன்னத்தை நோக்கினான். 
'இந்த அன்னை அல்லவோ அவன் கண் திறந்தாள்.
அன்று ஓர் நாள் நேர்முகத் தேர்வின்போது 'உன் அம்மா ஏன் ஓடி வந்தார்கள்..?' என்று சந்தியாவைக் கேட்டது நினைவில் வந்ததும் வெட்கினான். நாவில் தீயேற்று அவன் பேசிய வார்த்தைகள் சுடாமல் அவள் எதிர்த்து நின்றது நினைவில் ஆடியது.
'வல்லமை தாராயோ..' என்று பாரதியே வேண்டி நின்றபோது ஆதித்தன் கேட்காமலேயே வல்லமையே வடிவாய் வந்த பெண் சக்தியல்லவா சந்தியா. 
அவன் வாழ்வில் களிப்பேற்ற வந்தவள். அவனைக் கடைத்தேற்ற வந்தவள். ஊனாகி, உயிராகி, உணர்வாகி, மூச்சாகி, வாழ்வாகி, எல்லாமும் அவளாகி யாதுமாகி நின்றாள் சந்தியா. 
அவள் கை நழுவிப் போய் விடுவாளோ என்ற பயத்தில் காதலை மனதிற்குள் புதைத்து வைத்தவன். இனி ஊற்றாய் அவன் அன்பு வெளி வரத் தடையேதும் இல்லை. பண்பட்ட அவள் ..புண்பட்ட அவன் இதயத்திற்கு புத்துயிர் ஊட்டுவாள். 
அவன் விழியில் சுடரேற்று சந்தியாவைப் பார்க்க அவன் பார்வையில் அவள் தவித்துப் போனாள். அவன் பார்வை அவளை அழைத்தது. பரிதவித்தது அவளது பெண்மை.
"என்னை மன்னிச்சிருங்க.." என்று அன்னத்திடம் வேண்டினான் ஆதித்தன்.
"எதுக்குத் தம்பி..?"
"உண்மை என்னன்னு தெரியாமல் சந்தியாவிடம் 'உன் அம்மா ஏன் ஓடி வந்தார்கள்'ன்னு கேட்டு விட்டேன்."
"அப்படியா..? சந்தியா இதை என்னிடம் சொல்ல வில்லை தம்பி. என் மனசைக் கஷ்டப்படுத்தற எந்த விஷயத்தையும் சந்தியா என்னிடம் சொல்ல மாட்டாள். மத்தபடி மறைக்கணும்கிற எண்ணம் என் மகளுக்கு சுட்டுப் போட்டாலும் வராது."
"சந்தியா கொடுத்து வைத்தவள்.."
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்..?"
"உங்களைப் போன்ற ஒரு தாயின் மடியில் நிழலில் வளரும் பாக்கியம் கிடைத்து இருக்கிறதே. தாய் இல்லா விட்டால் சீர் இல்லைன்னு சொல்வார்கள். அது எத்தனை பெரிய உண்மை..? தாயில்லாக் குழந்தையாய் வளர்ந்த எனக்குத்தான் அந்தக் கொடுமை தெரியும். என் எதிரிக்குக் கூட இந்தக் கொடுமை வரக் கூடாது."
சந்தியாவின் கண்கள் கலங்கின. ஆண் சிங்கமாய் அலுவலகத்தில் கர்ஜிக்கும் இந்த துர்வாசன், இந்த இளம் வயதில் ஏகப்பட்ட பட்டங்கள் வாங்கி ஓர் அலுவலகத்தின் மிகப் பெரிய பதவியிலிருக்கும் இந்த சிடுமூஞ்சி எம்.ஜி. தாய் தந்தையரால் புறக்கணிக்கப்பட்டவன். 
அந்த அலுவலகத்தை தன் கண் அசைவில் ஆட்டுவிக்கும் சூத்ரதாரி. அவளைப் போலவே இதயத்தில் அடி வாங்கியவன். அவளுக்காவது இளைப்பாற 'அன்னம்' என்ற மலர்சோலை இருந்தது. அவளை மகாராணியாக உணர வைக்க அன்னை இருந்தாள். அவனுக்கு..? யாருமே யில்லையாமே.. உள்ளம் இரக்கம் கொண்டபோதே 'ஏன் இனி அவனுக்காக எல்லமாயிருக்க நீயில்லையா..?' என்று கேட்டது.
சந்தியா அந்தக் கணத்தில் முடிவெடுத்தாள். அந்த வினாடி வரை ஊசலாடிய மனம் ஒரு நிலைக்கு வந்தது. ஆதித்தன் மேல் கொண்டிருந்த விருப்பத்தை இனி ஆராயத் தேவையில்லையென்று தீர்மானித்தாள். அது வரை அவள் வாழ்வில் சந்தித்த எந்த ஆணிடமும் செல்லாத மனம் அவன் பின்னால் ஏன் சென்றது..? அவன் தான் அவளுக்கு என்பது ஆண்டவன் விதித்த விதி. இனி இதில் எந்த இடையூறு வந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று அவள் இதயத்திற்குள் சங்கல்பம் செய்தாள்.
"உங்களை யார் வளர்த்தது தம்பி..?" அன்னம் கேட்டாள்.
"என்னுடைய தாத்தா..?"
"உங்களை வளர்த்து பாசத்தைக் கொட்ட ஒரு தாத்தா இருந்திருக்காரில்லையா..? அப்போ.. அவர் தானே உங்களுக்கு அம்மா! அம்மான்னா பெண்ணாய்த்தான் இருக்கணுமா..? ஆணும் 'தாயுமானவன்' ஆகலாமே. அந்த வகையில் உங்க தாத்தா உங்களுக்கு தாயுமானவனுமாகி தந்தையுமானவனா இருந்திருக்கார். தம்பி! கடவுள் யாரையும் கைவிடறதில்லை. வாழ்க்கை நம்ம கட்டுப் பாட்டுக்குள்ளயா இருக்கு..? இல்லை தம்பி. எப்ப.. எது.. நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. ஆனால் அதிலிருந்து மேடேற நாம் எதிர்பார்க்காத இடத்திலிருந்து உதவி வருமே.. அதுதான் கடவுள் செயல். இப்ப எங்களையே எடுத்துக்கங்க.. சந்தியாவோட அப்பா திடீர்ன்னு ஒரு பெண்ணைக் கூட்டிக்கிட்டு வந்திட்டார். 'இவதான் என் பெண்டாட்டி. இனிமே இங்கேதான் என் கூட குடும்பம் நடத்துவா'ன்னு சொல்லிட்டாரு. அதைக் கேட்டுக்கிட்டும், பார்த்துக்கிட்டும் கூட இருக்கிறது தன்மானமாகுமா தம்பி..? அதுக்கப்புறம் நான் சாப்பிடும் சாப்பாடு சாப்பாடாகுமா..? என் பெண்ணைக் கையில் பிடிச்சுக்கிட்டு வெளியேறிட்டேன். பொழைக்க வழி வேணுமே.. சின்னதாய் இட்லிக் கடை ஆரம்பிச்சேன். சந்தியா வளர, வளர இட்லிக் கடையும் வளர்ந்து இன்னைக்கு 'அம்மா உணவகம்'ன்னு நிக்குது. என்னிடம் இரண்டு பேர் வேலை பார்க்கிறார்கள். சந்தியாவையும் வளர்த்து ஆளாக்கிட்டேன். இதுதான் எங்க கதை. மனசில் வைராக்கியத்தோட கட்டின துணியோடும், என் மகளோடும் வெளியே வந்தேனே.. என்னைக் கடவுள் கை விட்டு விட்டாரா..? யார்கிட்ட சோகமில்லைன்னு நினைக்கறீங்க. எல்லார் மனசிலயும் ஏதாவது ஒரு சுமையிருக்கும். வெளியேதான் தெரியாது. நாம் தான் சோகத்தை ஜெயித்து வாழ்ந்து காட்டணும். மனசை திசை திருப்பணும். இப்ப நான் மெஸ் வேலையில் கவனத்தைத் திருப்பல..? அதுபோல சந்தியாவைப் பாருங்க. எப்போதும் நிமிர்ந்து நிற்பா. சோர்ந்து போய் கீழே விழ மாட்டா. நீங்க என்ன தப்பு செஞ்சீங்க தம்பி. ?தப்பு செஞ்சவங்க தலை நிமிர்ந்து வாழும்போது நீங்களும், சந்தியாவும் ஏன் சோர்ந்து போகணும், ?நிமிர்ந்து நில்லுங்க தம்பி. அப்ப உங்க சோகமெல்லாம் ஓடியே போய்விடும்."
அதிகம் படிக்காத அடுக்களையே உலகமென வாழ்ந்த அன்னத்தின் வார்த்தைகளை குருவிடம் பாடம் கேட்கும் சிஷ்யனைப் போல் பயபக்தியுடன் செவிமடுத்துக் கொண்டிருந்தான். ஆதித்தன். அவனுக்கு இருள் மூட்டம் விலகி வெளிச்சம் தெரிந்தது. அருணனின் உதயக் கதிர்கள் அவன் வாழ்வை ஆட்டுவித்துக் கொண்டு இருந்த தன்னிரக்கத்தை விரட்டி அடித்தது. புரியாத புதிராய் வாழ்ந்தவனுக்கு எதுவோ புரிந்த மாதிரி இருந்தது. வெளியே அரவம் கேட்டது. பரமசிவம் உள்ளே நுழைந்தான்.
"ரொம்ப நேரமாகிருச்சாம்மா..?"
"இல்லை பரமசிவம்.." என்றபடி  அன்னம் எழுந்து கொள்ள சந்தியாவும் உடன் எழுந்தாள். 
திடீரென ஆதித்தனின் மனதில் கணல் மூண்டது. அது காதலின் கனல். இந்த வினாடியில் அவளிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டுமென்ற தவிப்பு.. பொறுத்திருக்க முடியாதென்ற போராட்டம்.. அவள் முகம் பார்த்து ஒரு சொல் பேசிவிட வேண்டுமென்ற ஏக்கம்.. 
என்ன செய்வது.. 'சந்தியா கிளம்பாதே..' என்று கூற வாய் வரை வந்த வார்த்தைகளை வெளிவிட முடியாமல் ஆதித்தன் திணறிக் கொண்டிருக்கும்போதே அன்னத்துடன், சந்தியா வெளியேறி விட்டாள்.
"பரமசிவம்.." என்று ஆதித்தன் அவசரமாய் அழைத்தான்.
"என்னங்க சார்..?"
"ஆபிஸில் என் டேபிளில் முக்கியமான லெட்டர் ஒன்றை வைச்சிருந்தேன். அதை சந்தியா எடுத்து வைத்தாங்களான்னு கேட்கணும். ஒரு நிமிசம் சந்தியாவை மட்டும் வந்துட்டுப் போகச் சொல்லு.."
"சரிங்க சார்..!"என்று பரமசிவம் வெளியே போக முயல.
"பரமசிவம் ஒரு நிமிடம்.. இங்கே சந்தியா வந்து விவரம் கேட்டுக் கிட்டு வருவதற்குள் நீ சந்தியாவின் அம்மாவிடம்.. அவங்க சாப்பாடு கொடுத்து விடுவதாகச் சொன்னார்களே.. அதை நீ போய் வாங்கிக் கொண்டு வரவேண்டுமா.. இல்லை அவங்களே அனுப்பி வைத்து விடுவார்களான்னு கேட்டுத் தெரிந்து கொள்.." என்றான் ஆதித்தன்.
"ஆமாங்க சார்.. அந்த அம்மா ரொம்ப நல்லவங்க.. அவங்களை சிரமப்படுத்தாம நானே போயி வாங்கிக்கறேன்னு சொல்லிடறேன்."
"நல்லது. அதை அவங்ககிட்ட எடுத்துச் சொல்லு.. சந்தியாவை இங்கே அனுப்பி வைத்து விட்டுப் பொறுமையா.. ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் அவங்களை மரியாதையாய் உட்கார வைத்துப் பேசு.. என்ன..?"
"அதுவும் சரிதான் சார்.. பெரியவங்களை நிக்க வைச்சாப் பேசுவேன்..? உக்காரச் சொல்லியே பேசுகிறேன்."
பரமசிவம் அவசரமாய் வெளியே ஓடினான். அதற்குள் அன்னமும், சந்தியாவும் வரவேற்பறையை நெருங்கிவிட பரமசிவம் போய் பிடித்து விட்டான்.
"என்னப்பா இப்படி மூச்சு வாங்க ஓடி வர்றே.." என்ற அன்னத்திடம்,
"செக்ரட்டரி அம்மா கிடட ஒரு அர்ஜன்ட் லெட்டரைப் பத்தி விசாரிக்கணுமாம். ஜி.எம். ஐயா வரச் சொன்னார்." என்று கூறினான் பரமசிவம்.
"அப்படியா.. வா, சந்தியா போய் விசாரித்து விட்டு வரலாம்.." என்று அன்னம் திரும்ப முயல,
"அம்மா, நீங்கள் இந்தச் சேரில் உட்காருங்கள். உங்களிடம் ஒண்ணு கேட்கணும்.." என்று பரமசிவம் தடுத்துக் கூற அன்னம் அவனிடம் கேட்கலானாள். 
சந்தியா திரும்பி, 'என்னவாக இருக்கும்' என்ற யோசனையோடு ஆதித்தனின் அறை நோக்கி விரைந்தான்.
அறை வாயிலை நோக்கியவாறு 'சந்தியா தனியே வரவேண்டுமே' என்று வேண்டிக் கொண்டிருந்த ஆதித்தனின் விழிகள் சந்தியா தனியே உள்ளே வருவதைக் கண்டதும் மின்னின. அவனது உள்ளம் துள்ளியது. என்றும் இல்லாதவாறு இதயம் இறக்கைக் கட்டிப் பறந்தது. சந்தியா அவனைப் பார்த்துக் கடமை உணர்வுடன்,
"என்ன லெட்டர் சார்.. எங்கேயிருந்து வந்தது.. அதை நான் எடுத்து வைக்கவா.. இல்லை பிரித்துப் பார்த்து பதில் அனுப்பிவிடவா..?" என்று கடமையே கண்ணாக வினவினாள்.
ஆதித்தன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்தவளாய் அவன் முகம் நோக்க, அவளை விழுங்கி விடுபவன் போல் அவன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் இன்னும் திகைத்தவளாய் நாணி நிலம் நோக்கினாள். அவள் கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்தன. முகம் குங்குமமாய் சிவந்து விட்டது. சுவாரஸ்யமாய் அவள் முகம் நோக்கியவன்,
"அந்த லெட்டர்.. அந்தப் பேப்பரையும் பேனாவையும் எடு.. விவரம் எழுதித் தருகிறேன்." என்றான்.
அவன் ஒருமையில் தன்னை அழைப்பதை மனதில் குறித்துக் கொண்டவள் அருகிலிருந்த பேப்பர் பேடையும், பேனாவையும் எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
"உட்காரு.. ஏன் நிற்கறே." என்று அவள் முகம் பார்த்த பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவன் கூற,
"ஆபிசுக்கு நேரமாகுது சார். இருக்கட்டும்.." என்றாள் அவள்.
"இவ்வளவு நேரம் இருந்தாயே..? இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் குறைந்தா போய் விடுவாய்..?"
இதழ்களை மடித்துக் கடித்த வண்ணம் அவள் உட்கார,
"ஏன்.. என்னுடன் தனியே பேச பயமா..?" என்று வினவினான். 
தலை குனிந்த சந்தியா நிமிராமலே 'இல்லை' யென்பதாய் தலையாட்ட,
"அதுதானே.. ஆபிஸே.. தள்ளி நின்று கூடப் பேசப் பயப்படுகிறவனிடம் நாள் முழுவதும் அருகிலிருந்து வேலை செய்பவளாயிற்றே உனக்கு எப்படிப் பயம் வரும்.." என்று வம்புக்கு இழுத்தான். அவன் எதிர் பார்த்தவாறே,
"நீங்கள் என்ன சிங்கம், புலியா..? உங்களிடம் பயப்பட..?" என்று பதில் கூறினாள் சந்தியா.
"அப்பாடா..! பேசா மடந்தை பேசி விட்டது... நான் சிங்கம், புலியில்லை.. சரி.. நான் யார் சந்தியா..?"
"ஜி.எம்."
"அது அலுவலகத்திற்கு.. உனக்கு நான் யார்..?"
நேரடியாய் தாக்கிய அந்தக் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்தவள் அவன் கண்களில் இருந்த யாசிப்பைக் கண்டாள். தன்னையறியாமல் கண்கள் கலங்க,
"எல்லாமும்.." என்று ஒரே சொல்லில் பதில் கூறினாள்.
அக்கினியாய் எரிந்து கொண்டிருந்தவனின் மேல் குளிர் மழையாய் வந்து விழுந்த அந்தப் பதிலில் மனம் குளிர்ந்து போனவனின் கண்கள் பனித்தன. அவளிடம் அவன் எழுதிக் கொண்டிருந்த பேப்பரைக் கொடுத்தான். பிரித்துப் பார்த்தாள்.
'ஒற்றையடிப் பாதையிலே,
             ஒற்றையாய் போகும் பெண்ணே!
    வழித்துணையாய் நான் வரவா..
             வாழ்க்கை முழுதும் உன்னோடு..?'
என்று நான்கு வரிகளில் கேட்டிருந்தான். மனம் சிறகடிக்க அதன் கீழ்,
'காத்திருக்கிறேன் இந்த வார்த்தைக்காக..'
என்று எழுதி அவனிடம் திருப்பிக் கொடுத்தாள். கொடுத்த வேகத்தில் திரும்பி அவள் வெளியே செல்லப் போக, அதைத் தடுக்க அவசரமாய் எழுந்த அவன் கை பட்டு ஸ்டூலில் இருந்த தம்ளர் கீழே விழுந்தது. 'என்னவோ' என்று பதறி அவள் ஆதித்தனின் அருகே வர அவளின் கரத்தை இறுகப் பற்றி அதில் தன் இதழ்களைப் பதித்தான் ஆதித்தன். தன் கைகளை விடுவிக்க முயன்றவள் அவன் முத்தம் பதித்தபோது கொதித்த ஸ்பாசத்தை உணர்ந்து அவசரமாய் மறுகரத்தால் அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். காய்ச்சல் அதிகமாகி இருந்தது. அவள் கைபட்ட இடம் அனலாய் சுட்டது. பதறிப் போனவளாய்,
"காய்ச்சல இப்படி அடிக்குதே.. இறங்கவே இல்லையே" என்று கூறினாள்.
"இனிச் சரியாகி விடும்.." என்று கூறியவன் அவள் விலக முயல்வதைக் கண்டு அருகே இழுத்து,
 "என்னை விட்டுப் போகாதே.." என்றான். அவன் முடி கோதியவள்,
"இல்லை. போகவில்லை. அம்மாவிடம் சொல்லி விட்டு, ஆபிஸிற்கு லீவ் சொல்ல வேண்டும். இப்போது உடனே டாக்டரைக் கூப்பிட வேண்டும்." என்று கூறினாள்.
"எது செய்வதானாலும் எனக்கு இரண்டு நிமிடம் கொடுத்து விட்டுச் செய்.."
அவன் கண்களில் தாபத்தைக் கண்டவள் அவன் அருகில் அமர்ந்தாள். அவன் கைபற்றி விரலோடு விரல் கோர்த்துக் கொண்டாள். மென்மையாய்,
"இரண்டு நிமிடம் என்ன.. என் வாழ்க்கையையே உங்களிடம் தான் கொடுத்திருக்கிறேன்.." என்று கூறினாள்.
"என்னைக் கண்டால் முள்ளைப் பார்த்தது போல் எல்லோரும் விலகிப் போவார்கள்."
"இல்லை. அவ்வாறு நீங்கள் விலக வைத்தீர்கள்.."
"எப்படித் தெரிந்து கொண்டாய்..?"
"ம்ம்.. ஜோஸியம் பார்த்தேன். ஆளைப் பாரேன்.."
"ஆளைத்தான் பார்த்தாயே.. கடுகடுவென்று.. சிடுமூஞ்சியாய்.. ம்ம்.. அன்று முதல் நாள் இன்டர்வியூக்கு வந்தபோது என்னோடு சண்டை போட்டாயே..?"
"நானா சண்டை போட்டேன்..?"
"என் சண்டைக்குப் பதில் சண்டை போட்டாய் போதுமா..? அப்பா.. என்னமாய் - கோபம் வருகிறது. இப்போது சண்டை போட்டு விடாதே. நான் சண்டை போடும் மூடில் இல்லை." அவன் உல்லாசமாய் சிரித்தான்.
"தெரியுதே.. உங்கள் மூடைப் பற்றி.. இவ்வளவு காய்ச்சலை வைத்துக் கொண்டு.. அம்மாவை பிடித்து வைத்துக் கொள்ள பரமசிவத்தை அனுப்பி வைத்து.. என்னைத் தனியாக வரவழைத்து.. அப்பா.. எவ்வளவு போக்கிரித்தனம்.. எங்கள் ஆபிஸ் ஜி.எம். செய்கிற வேலையா இது..?"
"ஏய்ய்.. உன்னுடன் பேசிக் கொண்டிருப்பது உன் ஆதித்தன். ஜி.எம். இல்லை,"
'உன் ஆதித்தன்.' என்ற வார்த்தைகளில் மயங்கினாள் சந்தியா.
"அது சரி.. அன்று 'இந்தக் கடுவன் பூனையை யாராவது சைட் அடிப்பார்களா'ன்னு கேட்டாயே..? இன்று எப்படியாம்..?" என்று அவன் வினவியதும், அன்றைய நினைவில் முகம் மலர்ந்து சிரித்தவள்.
"அப்போதே.. எனக்கு வேறு ஒன்றுதான் தோன்றியது.." என்றாள்.
"என்னவென்று..? ம்ம்.. கடுவன் பூனைக்கு பதில் சுண்டெலியென்றா..?"
"சுண்டெலியா..? யார் உங்களையா..? நெவர்."
"அப்புறம் என்ன நினைத்தாய்... பெருச்சாளி என்றா..?" அவன் மேலும் வம்புக்கு இழுத்தான்.
"ஊஹூம்.. அது வந்து.. எனக்கென்னவோ 'ஆண் சிங்கம்' என்றுதான் தோன்றியது."
 சிவந்த முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு கூறினாள். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகமும் மென்மையானது.
"எப்படி சந்தியா..? எப்படி..? எனக்கு உன் மனம் முன்னரே தெரியும். இருந்தும் நான் தாழ்வு மனப்பான்மையால் விலகிப் போனேன். நீ நெருங்கி, நெருங்கி வந்து என்னை ஜெயித்து விட்டாய்.. எப்படிடீ.. சொல்லு.. எல்லோராலும் வெறுக்கப்பட்ட இந்த ஆதித்தனை உன் மனம் எப்படி விரும்பியது..?"
சந்தியா அவனைக் கனிவுடன் நோக்கினாள்.
"பலாப்பழம் மேலே பார்க்க முள்ளாகத்தான் இருக்கும். உள்ளே இருப்பது இனிப்பான பழம். முக்கனிகளில் பலாக்கனியும் ஒன்று. எல்லோரும் மேலோட்டமான உங்களது முள்ளான சுபாவத்தைத்தான் பார்த்தார்கள். எனக்கு உள்ளே இருந்த உங்கள் புத்திசாலித்தனம், உழைப்பு, கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை, இதுதான் தெரிந்தது."
"வெயிட்.. வெயிட்.. அது என்னடி எம்.ஜி.ஆர் படம் மாதிரி கடமை, கண்ணியம் கட்டுப்பாடுன்னு அடுக்கறே..?"
"இல்லையா பின்னே.. நம் அபிஸில் என்னை விட அழகாய் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்..? அவர்களில் யாரையாவது, நிமிர்ந்து பார்த்திருப்பீர்களா..?"
"உன்னை விட அழகா..? நோ சான்ஸ்.."
"ராமன் கண்ணுக்கு சீதை மட்டும்தான் அழகு.. உங்கள் கண்ணுக்கு நான் மட்டும்தான் அழகாய் தெரிவேன். ஆனால் நான் சொல்ல வந்தது என்னன்னா எல்லாப் பெண்ணுமே உங்களை 'துர்வாசர்'ன்னுதான் சொன்னார்கள். 'சபலச் சித்தர்'ன்னு ஒருவர் கூடச் சொல்லவில்லை. 'கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல் பார்த்தார்'ன்னு தான் கேலி செய்வார்கள்.. அதனால் தான் கண்ணியம், கட்டுப்பாடுன்னு சொன்னேன். கடமையைப் பற்றி நான் சொல்லவா வேண்டும்..?"
"சந்தியா, ராமன் எங்கே போனாலும் சீதை தொடர்ந்தே போவாள். நான் உன்னைக் காட்டுக்குள் கூட்டிப் போக மாட்டேன். ஆனால் என் கடந்த காலம்ங்கிற இருண்ட குகைக்குள் கூட்டிப் போவேன். எனக்காக சகித்துக் கொள்வாயா..?"
"நீங்கள் கூட்டிப் போகும் இடம் கொடைக்கானலில் 'தற்கொலை முனை'யாக இருந்தாலும் வருவேன். சகித்துக் கொள்வேன்."
"என்னடி... இப்படிச் சொல்கிற.? இந்த அன்புக்கு நான் தகுதியானவன் தானா..?"
"உங்களை விட யாருக்கு அந்தத் தகுதி இருக்கிறது..?"
கண்ணுக்கு தெரியாத மாய வட்டத்தில் புகுந்த ஆதித்தனும், சந்தியாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு விழிகளை விலக்காமல் சிலையாக அமர்ந்திருக்க அறை வாசலில் 'சந்தியா' என்று அழைக்கும் குரல் கேட்டது. திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்த சந்தியா ஆதித்தனிடமிருந்து விலகி வாசலைப் பார்த்தாள். அன்னம் நின்றிருந்தாள்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை. -19
அக்கினிப் பறவை. -19
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy