பொதிகையிலே பூத்தவளே -73

73 குளிர் நிரம்பிய காற்று முகத்தில் அடிக்க சிலிர்த்தாள் மீனா.. ஏன் என்னை விட்டுப் பிரிந்து போனாய் என்ற செல்ல கோபத்துடன் கானாடுகிரியின...


73

குளிர் நிரம்பிய காற்று முகத்தில் அடிக்க சிலிர்த்தாள் மீனா.. ஏன் என்னை விட்டுப் பிரிந்து போனாய் என்ற செல்ல கோபத்துடன் கானாடுகிரியின் பனிக்காற்று அவளுடன் சண்டையிட்டதைப் போல இருந்தது.. ஆறுமாதங்கள் கழித்துப் பார்க்கும் இடங்களையெல்லாம் பலவருடங்கள் கழித்துப் பார்ப்பதைப் போலப் பாசத்துடன் சுற்றிப் பார்த்தாள்..
கானாடுகிரிக்கு அவள் வருவாள் என்று நினைக்கவே இல்லை.. மதுரையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை அமைத்துக் கொண்டு என்வழி தனிவழியென்று முன்னேறிக் கொண்டிருந்தவள் கானாடுகிரி மலைக்குச் செல்ல வேண்டும் என்று கனவில்கூட எண்ணியதில்லை.. மனதில் கானாடுகிரி மலையின் நினைவுகள் உறைந்திருந்தன.. அங்கு கழித்த நாள்களை அசை போட்டுக் கொண்டிருந்தாலும் அதை அவள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை..
மூர்த்தியும் புனிதாவும் கானாடுகிரியில் அவர்கள் இருந்த நாள்களை அடிக்கடி நினைத்துப் பார்த்துப் பேசுவார்கள்.. அங்கே போனபோது அது நடந்தது.. இங்கே போனபோது இது நடந்தது என்று சொல்வார்கள்.. மீனாவின் மனம் அவர்கள் சொன்ன இடங்களுக்குப் பயணிக்கும்.. அலைபாயும் மனதை அடக்கிக் கொண்டு வேலையிருப்பதைப் போல போய் விடுவாள்..
"சரியாப் போச்சு போங்க.. இங்கு வந்தும் யோசனைதானா..? பி காம் மீனா.. பாருங்க.. சீனரியெல்லாம் எவ்வளவு பெண்டாஸ்ட்டிக்கா இருக்கு.. இந்த மலையிலே நீங்க டூ இயர்ஸ் இருந்திருக்கீங்கன்னு நினைக்கிறப்ப பொறாமையா இருக்கு.. என்னை இங்கேயே இருக்கச் சொன்னா ஹேப்பியா இருந்து விடுவேன்.." காமினி மீனாவின் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டாள்..
கூலிங்கிளாஸ், ஜெர்கின் கோட், பனியன், ஜீன்ஸ் என்று அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக காட்சியளித்த காமினியை நன்றியுடன் பார்த்தாள் மீனா..
'இவளால் அல்லவா நான் கானாடுகிரி மலையில் கால் வைக்க முடிந்தது.. அதிலும் விஷ்வாவின் அரண்மனைக்குள்ளும் கால் பதித்து அங்கே ஓர் அறையில் தங்கியிருக்கிறேனே.. கனவு போல இருக்கு..'
தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.. வலித்தது.. காமினியின் தூண்டுதலினால் கானாடுகிரி மலைக்குப் போய் வந்தால்தான் என்ன என்று மனதில் தோன்றினாலும் அது சாத்தியமில்லை என்பதினால் பேசாமல் இருந்து விட்டாள்.. என்னதான் வாய் தாட்டியம் இருந்தாலும் மீனா ஓர் வீட்டுப்பறவை.. துணையில்லாமல் தனித்துப் பயணிக்க மாட்டாள்.. அன்று கானாடுகிரி மலைக்கு அவள் சென்றபோது அவளது குடும்பம் கூட வந்தது.. அவர்கள் குடியிருக்க குவார்ட்டர்ஸ் காத்திருந்தது.. வேலை, கார், சம்பளம் என்று அந்தப் பயணத்திற்கு ஓர் அர்த்தம் இருந்தது.. மீனாவும் குடும்பத்தினர் கூட இருக்கும் தைரியத்தில் கிளம்பிப் போனாள்..
இப்போது அப்படியில்லை.. அவள் கானாடுகிரி மலைக்குக் கிளம்புவதாக இருந்தால் அதற்குக் காரணம் வேண்டும்.. காரணம் கிடைத்தாலும் அவள் தனித்துப் பயணம் செய்வதை மூர்த்தி அனுமதிக்க மாட்டார்.. கானாடுகிரி மலையில் அவள் எங்கே தங்குவாள் என்று கேள்வி கேட்பார்.. அதையும் யோசிக்க வேண்டும்.. குன்னூர் ஹோட்டலில் தங்குவது அவர் குடும்பத்துப் பெண்களுக்கு சரிவராது என்று சொல்லி விடுவார்.. குவார்ட்டர்ஸில் தங்குவது என்றால் தனித்து எப்படித் தங்குவாள் என்று கோபப்படுவார்..
'இதெல்லாம் வேலைக்கு ஆகாது..'
பொங்கிய மனதை அடக்கிக் கொண்டு மீனா யோகியைப் போல வேலையில் ஆழ்ந்தாள்.. காமினி வினவிய போது கடந்தகாலம் திரும்பாது என்று தத்துவம் பேசினாள்..
"என்ன மீனா இப்படி இருக்கீங்க..? விஷ்வா அவன் காதலைக் காப்பாற்ற போராடிக்கிட்டு இருக்கிறான்.. நீங்க எங்கே போனாலும் அங்கே ஃபாலோ பண்ணிக்கிட்டு வர ரெடியா இருக்கான்.. உங்களுக்காக அவன் ஊர் விட்டு ஊர் வந்து ஸ்டே பண்ணியிருக்கிறப்ப அவனுக்காக நீங்க ஒரு ஸ்டெப் எடுத்து வைக்க மாட்டிங்களா..?" காமினி சினந்தாள்..
"அவர் சுதந்திரப்பறவை காமினி.. நான் சிறைப்பறவை.. என் வீட்டுக் காவலை மீறி ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியாது.." மீனா முடிவாகச் சொல்லி விட்டாள்..
விஷ்பரூபம் மாலில் மேற்பார்வைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய மீனா குளித்து நைட்டிக்கு மாறிப் படுக்கையில் விழுந்தாள்.. மாலில் வேலையைப் பார்த்து விட்டுக் கடையையும் கவனிக்க அவளால் முடியாது என்று புனிதா சொல்லியிருந்தாள்..
"நம்ம உடம்பு ஒன்னும் மெஷினில்ல மீனா.. ஓரளவுக்குத்தான் வேலை செய்ய முடியும்.. இரும்பிலேயா உடம்பை செஞ்சு வைச்சிருக்காங்க..? அதனால சொன்ன பேச்சைக் கேளு.."
"நீங்க சொன்ன சொல்லைக் கேட்காமல் இருந்திருக்கேனாம்மா..?"
"அப்ப இப்பவும் சொன்ன பேச்சைக் கேளு.. நீ மாலில் வேலையை முடிக்கிறவரை கடையை நான் பார்த்துக்கிறேன்.."
"உங்களுக்கு வீட்டில் வேலை இருக்குமேம்மா.."
"மொதமாதிரி அத்தன வேலகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டா செய்யறேன்..? இல்லையே.. துணி துவைக்க வாஷிங் மெஷின்... வீடு கூட்டிப் பெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவிக் கொடுக்க கோமளா.. சமைக்கிறது மட்டும்தான் நானு.. அதக் காலையிலேயே செஞ்சு வைச்சுட்டுக் கடையில போயி உக்காந்துக்குவேன்.. சாயங்காலம் மோகனா பள்ளிக்கூடத்தில இருந்து வந்ததும் என்னை மாத்திவிட்டுட்டுக் கடையில உக்காந்துக்குவா.. நீ பேசாம இரு.."
பள்ளிக்கு சென்று வரும் மோகனா மாலையில் கடையில் உட்காரலாமாம்.. அதுவே மாலுக்குப் போய் வரும் மீனா மாலையில் கடையில் உட்காரக் கூடாதாம்.. அவளுடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமாம்..
'அம்மா..' மனம் நெகிழ்ந்தாள் மீனா..
ஐவரின் தாயான குந்திக்கு சகாதேவனும், நகுலனும்தான் செல்லப் பிள்ளைகளாம்.. அவர்கள் மாத்ரியின் புத்திரர்கள் என்று எவரும் சொன்னதில்லை.. குந்தியின் புத்திரர்களாகவே அறியப்படுகிறார்கள்..
புனிதாவின் தாய்மையின் பிரியத்தை நினைத்தபடி கண்ணுறங்கிப் போனாள் மீனா.. மாலின் தளங்கள் அனைத்திலும் சுற்றி வந்த களைப்பு ஆளை அயர வைத்தது.. தன்னையும் அறியாமல் உறங்கி விட்டவளை வந்து எழுப்பி விட்டாள் புனிதா..
"மீனா.. எழுந்திரு.. உன் முதலாளியும் ஒரு பொண்ணும் வந்திருக்காங்க.."
"என் முதலாளியா..?ம்மா.. நானே இப்ப ஒரு கடைக்கு முதலாளி.." கண்ணைக் கசக்கியபடி எழுந்த மீனா சொன்னாள்..
"என்னைக்கு இருந்தாலும் அவர் நமக்கு முதலாளிதானே மீனா.. மகராசன், சமயத்துக்குக் கை கொடுத்து தெய்வம் போல நமக்கு உதவி செஞ்சாரு.. இல்லேன்னா உன் அப்பாவை இப்படி ஆரோக்கியமா நாம பாத்திருக்க முடியுமா..?"
'அது உண்மைதான்..' என்ற நினைவோடு முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு ஹாலுக்குப் போனாள் மீனா.. அங்கே விஷ்வாவும், காமினியும் மூர்த்தியுடன் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்..
'இவங்க வருகிறதாய் சொல்லவே இல்லையே..' மீனா அவர்களை வரவேற்கும் விதமாக தலையை அசைத்தாள்..
"ஹாய் மீனா.. ஈவினிங்கில் என்ன தூக்கம்..?" மீனாவின் வீங்கிய இமைகளைப் பார்த்தபடி கேட்டாள் காமினி..
"தெரியலை.. டயர்டா இருந்தது.." சோர்வுடன் முறுவலித்தாள் மீனா..
விஷ்வா எதுவும் பேசாமல் மீனாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதினால் நைட்டியிலிருந்து சேலைக்கு மாறியிருந்தாள் மீனா.. மற்றபடி தலைவாரி பவுடர் கூடப் பூசவில்லை.. கலைந்த தலையும், கழுவித் துடைத்த முகமுமாக அப்படியே வந்து உட்கார்ந்திருந்தாள்.. அந்த நிலையிலும் அதீத அழகுடன் இருந்தவளைப் பார்க்கப் பார்க்க அவனது மனம் வலித்தது..
'ஏண்டி இப்படி உன்னைக் கஷ்டப்படுத்திக்கற..? என்னைப் பிரியறது உனக்குத் துன்பமா இருக்காதா..? காதலின் வலியைச் சுமப்பது அத்தனை ஈஸியில்லை மீனா..'
புனிதா சூடான பஜ்ஜி  கேசரியுடன் வந்தாள்..
"அவசரத்துக்கு இந்தப் பலகாரங்களைத்தான் செய்ய முடியுது.." மன்னிப்புக் கோருவதைப் போலச் சொன்னாள்..
"செம டேஸ்டா இருக்கு.. ஸ்டார் ஹோட்டல்களில் இந்த டேஸ்ட் கிடைக்குமா..? சொல்லுங்க.." காமினி ஆர்வத்துடன் பஜ்ஜி கேசரியை சுவைத்ததில் புனிதாவின் முகம் மலர்ந்தது..
அவள் காபிக் கப்புகளுடன் வரும் வரை விஷ்வாவும் காமினியும் மூர்த்தியிடமும் மீனாவிடமும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.. புனிதா வந்தவுடன் அவளை உட்காரச் சொன்னார்கள்..
காமினி தன் செல்போனில் தணிந்த குரலில் பேசினாள்.. அடுத்த இரு நிமிடங்களில் கையில் பெரிய வெள்ளித் தாம்பளத்தைச் சுமந்தபடி டிரைவர் உள்ளே வந்தான்.. தாம்பளத்தில் பழ வகைகள் அடுக்கப் பட்டிருந்தன.. அதன்மீது விஸ்வரூபம் மாலின் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்.. விஷ்வா எழுந்து டிரைவரிடம் இருந்த தாம்பாளத்தட்டை வாங்கி மூர்த்தியிடமும் புனிதாவிடமும் நீட்டினான்..
"விஷ்வரூபம் மாலின் ஓப்பனிங் பங்சனுக்கு நீங்க ஃபேமிலியோட வரனும்.."
அவன் கொடுத்த மரியாதையிலும், கௌரவத்திலும் நெகிழ்ந்து போனார் மூர்த்தி.. யார் அவர்..? விஷ்வாவின் எத்தனையோ தொழில்களில் ஒரு தொழிலான விஷ்வரூபம் மாலில் வேலை செய்த பெண்ணின் தந்தை.. அவருக்கு வீடு தேடி வந்து வெள்ளித் தாம்பாலத்தில் பழவகைகளுடன் பத்திரிக்கை வைக்கிறானே இந்த கோடிஸ்வரன்..!
"கட்டாயம் வந்துடறோம்ங்க.. அன்னைக்கு கடைகளுக்கு லீவு விட்டுடறோம்.. என்ன புனிதா.. நான் சொல்றது சரிதானே..?"
"நீங்க தப்பா என்னைக்குச் சொல்லியிருக்கீங்க..? சொல்றது எல்லாமே சரியாத்தான இருக்கும்..?"
"மேட் ஃபார் ஈச் அதர்.." என்றாள் காமினி..
சிறு புன்னகையுடன்.. "யு ஆர் கரெக்ட்.." என்றான் விஷ்வா..
மீனாவின் மனதில் திருப்தி வந்தது.. அவளது பார்வை உயர்ந்து விஷ்வாவின் மீது படிந்தது.. அதற்காகவே காத்திருந்ததைப் போல அவனுடைய பார்வை அவளது பார்வையுடன் கலந்தது.. ஆழ்ந்த பார்வையின் சங்கமத்தில் மீனா தடுமாறினாள்.. தளைகளை உடைத்து அவனைத் தழுவிக் கொள்ள மனம் துடித்தது..
"சார்.. விஷ்வாவுக்கு ஒரு ஆப்ளிகேசன் இருக்கு.." காமினி ஆரம்பித்தாள்..
'என்னவாம்..?' 
மீனாவுக்கே இந்தச் செய்தி புதிதானதாக இருந்தது.. விஷ்வா அவளிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லையே..
"ஆப்ளிகேசன்கிறதெல்லாம் பெரிய வார்த்தைங்க.. சார் சொன்னாச் செய்ய நாங்க கடமைப்பட்டிருக்கோம்.." நன்றியுணர்வுடன் சொன்னார் மூர்த்தி..
"கானாடுகிரி சாக்லெட் பேக்டரியில ஒரு பிராப்ளம்.. பழைய மேனேஜர் ஏதோ ப்ராடு பண்ணியிருக்கிறான்.. மீனா அவனை டிஸ்மிஸ் பண்ணிட்டு புது மேனேஜரை அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க.. அந்த மேனேஜர் மேல கேஸ் ஃபைல் பண்ணனும்.. அதுக்கான டீடெயில்ஸை கலெக்ட் பண்ணிக்கொடுக்க மீனா கானாடுகிரிக்குப் போயாகனும்.. ஐஸ்ட் டென் ஆர் ட்வெண்டி டேஸ்.. வேலை முடிந்ததும் மீனா மதுரைக்கு வந்திருவாங்க.. நீங்க மீனாவை அனுப்பி வைக்கனும்.." இறைஞ்சலாகக் கேட்டாள் காமினி..
"அப்படியா..?" மூர்த்தி தயங்கினார்..
"பொம்பளப்புள்ளயத் தூரந் தொலைவுக்குத் தனியா அனுப்பி வைக்க முடியாதும்மா.. ஆனா முக்கியமான சோலின்னு சொல்றீங்க.. நான் கடையை அடைச்சுட்டு மீனாகூட கிளம்பி வர்றேன்.. வேல முடியற வரைக்கும் கூடவே இருந்துட்டு வேல முடிஞ்சதும் மீனாவைக் கூப்பிட்டுக்கிட்டு வந்துடறேன்.."
'அதுசரி.. இதுக்கா பிளான் போட்டேன்..?' காமினி சங்கடத்துடன் சிரித்து வைத்தாள்..
"மீனா தனியாப் போனாத்தானே இந்தக் கவலை..? கூட நானும் போகப் போறேன் சார்.. மீனா ஹோட்டலில் கூடத் தங்கப் போவதில்லை.. என்னுடன் கானாடுகிரி மலை அரண்மனையில் தான் தங்கப் போகிறாங்க.."
"நீங்களும் கூடப் போகிறீங்களா..?"
"யெஸ்.. என்னோட ஃபிலிம் ஷீட்டிங்கை ஹில் ஸ்டேசனில் எடுப்பதா இருந்தாங்க.. ஜமிந்தார் ஃபீரியட் ப்லிம்.. கொடைக்கானலை சூஸ் பண்ணியிருந்தவர்களிடம் கானாடுகிரி மலையைப் பத்தியும் எங்க பெரியப்பாவின் அரண்மனையைப் பற்றியும் சொன்னேன்.. லொகேசன் பார்க்க வந்தவருக்கு ஸ்பாட் பிடித்துப் போச்சு.. நான் கேட்டதினால பெரியப்பாவும் அரண்மனையில் ஷீட் பண்ணிக்க ஓகே சொல்லிட்டார்.. ஒன் மன்த் அங்கேதான் இருப்பேன்.. என்னுடன் மீனாவை அழைத்துப் போயிட்டுப் பத்திரமா கொண்டுவந்து விட்டு விட்டுத்தான் மும்பைக்கு ப்ளைட் ஏறுவேன்.. போதுமா..? என்னை நம்பி மீனாவை அனுப்பி வைப்பீங்கள்ல..?"
மாட்டேன் என்று மூர்த்தியால் சொல்ல முடியவில்லை.. இந்தித் திரையுலகில் கொடி நாட்டியிருக்கும் நடிகை கொஞ்சம்கூட கர்வமில்லாமல் கோரிக்கை வைக்கும் போது மறுப்பது நாகரிகமல்லவே..
"சரிங்கம்மா.." மூர்த்தி அனுமதியளித்து விட்டார்..
"எனக்காக உங்க சினிமாவோட ஷீட்டிங்கை கானாடுகிரிக்கு மாத்தினீங்களா..?" தனிமையில் காமினியின் கைபிடித்து கேட்டாள் மீனா..
ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று மீனாவின் அறைக்குள் வந்திருந்த காமினி மீனாவின் கையை அழுத்தினாள்..
"ஊஹீம்.. உங்க அப்பாவிடம் சொன்னதுதான்.. எங்க யூனிட்டுக்கு லொகேசனைப் பிடித்துப் போயிருச்சு.. இதுவரை எந்த ஃபிலிமிலும் வராத லொகேசன்.. விஷ்வாவின் அரண்மனை பளிங்கு மாளிகை போல இருக்கும் என்பது உங்களுக்கும் தெரியும்தானே.. இப்படியொரு பேலஸை ஃபிலிமில் காட்ட சான்ஸ் கிடைத்திருக்குன்னு புரொடுயூசர் துள்ளிக் குதிக்கிறார் மீனா.."
"அரண்மனையில் நானும் தங்கனும் என்கிறது..?"
"ஸ்டார் ஹோட்டலில் எனக்கு ரூம் போட்டுக் கொடுப்பாங்க.. என்னுடன் உங்களையும் ஸ்டே பண்ண வைக்கலாம்.. அதைச் சொன்னா உங்க அப்பா ஒப்புக்குவாரா..? பயப்பட மாட்டாரா..? ஸோ, எதுக்காக ரிஸ்க் எடுக்கனும்னு பெரியப்பாவின் பேலஸில் நான் தங்கிக்கப் போகிறேன்னு புரொடுயூசரிடம் சொல்லிட்டேன்.. செலவு குறைந்தா அவருக்கும் சந்தோசம்தானே.. என்னுடன் என் பிரண்டா பேலஸீக்குள் நீங்க நுழையும் போது யாராலும் அப்ஜெக்ட் பண்ண முடியாது.. பிஹாஸ்.. என் அப்பாவின் அப்பாவும் பெரியப்பாவின் அப்பாவும் கூடப் பிறந்தவங்க.. தன் வழிச் சொந்தம்ன்னு வந்து விட்டால் பெரியப்பா விட்டுக் கொடுக்கவே மாட்டார்.. பெரியம்மா பேச்சையோ, பெரியண்ணா பேச்சையோ காது கொடுத்துக் கேட்க மாட்டார்.." காமினி கண்சிமிட்டிச் சிரித்தாள்..
இலகுவாகக் கண்சிமிட்டிச் சிரிக்கிறாளே என்று மீனாவுக்குக் கலவரமாகத்தான் இருந்தது.. ஆனால் காமினி சொன்னதுதான் நடந்தது.. எந்த அரண்மனைக்குள் நுழைவது மீனாவுக்கு கடினமான ஒன்றாக இருந்ததோ.. அந்த அரண்மனைக்குள் விருந்தினராக நுழைந்து விட்டாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -73
பொதிகையிலே பூத்தவளே -73
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-73.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-73.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy