முகில் மறைத்த நிலவு. -2

2 பெரிய தங்கையின் முகத்தில் நிலவிய கடுமையை நவநீதன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. காரணமும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனா...


2

பெரிய தங்கையின் முகத்தில் நிலவிய கடுமையை நவநீதன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. காரணமும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.
ஆனாலும் ஒன்றும் அறியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு.. சிறிய தங்கையிடம் பேச்சை வளர்த்தான் அவன்..
"நீ பேங்க் மேனேஜராக இருந்தால் எனக்கென்ன பிரயோஜனம்..?"
"ஏண்டா.. ஏதாவது லோன் வேண்டும்ன்னா சொல்லு.. உடனே சேங்சன் பண்ணுகிறேன்.."
"எனக்கு எதுக்கு லோன்..? நான் உனக்கு லோன் தருகிறேன்.. வாங்கிக் கொள்..."
"கொடு.. கொடு அதற்காகத்தானே காத்திருக்கிறேன்.."
நவநீதன் மோனிகாவிடம் சிரித்துக் கொண்டிருக்கும் போது ராதிகா அவனை முறைத்தாள்..
"என்னடா.. நம்மை விட வயதில் எவ்வளவோ சின்னவன்.. வீட்டின் கடைக்குட்டி.. அவள் லோன் கொடுக்கிறேன்னு சொல்கிறாளேன்னு உனக்குத் தோணவில்லை.. அவள் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிற.. உனக்கே நீ செய்வது சரின்னு படுதா...?"
"அவள் விளையாட்டுக்குத்தானே சொன்னாள் ராது.."
"அந்த விளையாட்டுக்குக் கூட அவள் உன்னிடம் லோன் வாங்கிக் கொள்கிறேன்னு சொல்லலை.. இது ஏன் உன் மரமண்டைக்கு உறைக்கவில்லை...?"
"நீயேன் இதுக்குப் போய் அப்செட் ஆகிறாய்..?"
"நான் இதுக்காக ஒன்னும் அப்செட் ஆகவில்லை.. நீயேன் ராமையா கொடுத்த வாடகைப் பணத்தை என்னிடம் கொடுக்கலை...?"
"அது... வந்து..."
"என்ன வந்து போய்ன்னு இழுக்கிற... பணம் எங்கே..?"
"அவசரக் செலவு ஒன்று வந்து விட்டது ராது..."
"அவ்வளவு பணத்தையும் செலவு செய்துட்டயா..?"
"இல்லை.. கொஞ்சம்தான் எடுத்தேன்.."
"மீதி எங்கே...?"
"என் ரூமில் இருக்கிறது..."
"சாப்பிட்டவுடன் முதல் காரியமாய் அதை என்னிடம் கொடு.. நீ செலவளித்த பணத்தை.. உன் சம்பளத்தில் இருந்து கொடுத்து விடு..."
"என்ன ராதும்மா.. எனக்கு அந்தப் பணத்தை செலவளிக்க உரிமையில்லையா...?"
"உரிமையைப் பற்றி நீ பேசாதே.. என்னடா.. நாம் வீட்டுக்குத் தலைமகன்.. மூத்தவன்.. நம்மை நம்பி.. வயதுக்கு வந்த தங்கைகள் இரண்டு பேர் இருக்கி றாங்களே.. அவர்களுக்கு பாதுகாப்பாய் இருப்போம்ன்னு ஒழுங்காய் வீடு தங்குகிறாயா..? பேங்கில் லீவு விட்டால்.. நீ ஊரை விட்டே காணாமல் போய் விடுவாய்.. லீவு முடிந்தவுடன் வந்து சேர்வாய்.. எங்களைக் காப்பாற்றுவதும் உன் உரிமைதானே.. அதை முதலில் செய்..."
"இதுக்குப் போய் ஏண்டா கோபித்துக் கொள்கிற..? இப்ப என்ன.. நான் செலவளித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கணும் என்கிறாய்.. அவ்வளவு தானே..."
"அவ்வளவுதான்..."
"நாளைக்கே அதைக் கொடுத்து விடுகிறேன்.. போதுமா.."
"சரி.."
"இப்போதாவது கொஞ்சம் சிரி..."
"உனக்கு தங்கையாக பிறந்து விட்டு நான் எப்படி சிரிப்பது..?"
"இதோ.. நம் இரண்டு பேருக்கும் தங்கையாய் பிறந்து விட்டு.. மனம் விட்டுச் சிரிக்கிறாளே.. இவளைப் பார்த்து சிரிக்கக் கற்றுக் கொள்.."
"முதலில் நீ தட்டைப் பார்த்து சாப்பிடு..."
கறாராய் பேசிய ராதிகாவின் முகத்தில் மருந்துக்குக் கூடச் சிரிப்பு இல்லை..
தங்கையின் முகத்தை கவலையாய் பார்த்தான் நவநீதன்.. என்று அவர்களின் பெற்றோர் இறந்து போனார் களோ.. அன்றே ராதிகா சிரிப்பை மறந்து போனாள்...
கன்றுக் குட்டி போல் கலகலவென்று சிரித்துத் துள்ளலுடன் இருந்தவள்.. கடமையில் மூழ்கி.. சிரிப்பைத் தொலைத்துவிட்டாள்..
இந்த இருபத்தி ஒரு வயதில் அவள் எவ்வளவு சந்தோசமாக இருக்க வேண்டும்..? ஆனால் அவள் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் துளிகூட இருக்காது.. அதே சமயம் கவலையின் சாயலோ.. அல்லது துக்கத்தின் சாயலோ.. அவள் முகத்தில் படிந்து இருக்காது.
எந்த உணர்ச்சிகளையும் காட்டாத இறுக்கமான முகபாவனை. கண்டிப்பை காட்டும் விழிகள்.. கறாராய் பேசும் ஒன்றிரண்டு வார்த்தைகள்..
'கையில் குச்சிதான் இல்லை.. மற்றபடி.. அப்படியே அச்சு அசலாய் டீச்சர்தான்...'
நவநீதன் இப்படி நினைத்துக் கொண்டாலும்.. ராதி காவிடம் அவனுக்கு மதிப்பும்.. மரியாதையும் மிகவும் அதிகம்.
பொதுவாக மூத்தவன்தான் பெற்றவர்களுக்கு அடுத்து குடும்பத்தை தாங்க வேண்டும்.. தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.. காலை.. முதல் இரவு வரை பொறுப்புணர்வுடன் வயதுப் பெண்களை கண்காணித்து.. பாதுகாப்பாய் வளர்க்க வேண்டும்.
ஆனால்.. நவநீதனின் விசயத்தில் எல்லாமே தலை கீழாய் இருந்தது..
இருபத்திரண்டு வயதில் பெற்றவர்கள் காலமான போது.. அவனுடைய பெரிய தங்கை ராதிகாவிற்கு பதினெட்டு வயது.. கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.. மோனிகாவிற்கோ பனி ரெண்டு வயது.. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..
பருவம் எய்திய பருவத்தில் இருக்கும் பெரிய தங்கைக்கும்.. சின்னஞ்சிறு சிறுமியான சிறிய தங்கைக்கும் பாதுகாவலனாய் இருக்க வேண்டியவன் நவநீதன்..
எம்.எஸ்ஸி., பட்டம் பெற்று.. குடும்ப நிர்வாகத் தையும்.. தொழில் நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்ளும்.. வயதும் தகுதியும்.. பெற்றிருந்தும்.. நவநீதன்.. பொறுப்பை ஏற்றுக் கொள்ள முனையவில்லை..
ராதிகா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்..
"அண்ணா.. அப்பா அம்மாவுக்கு பின்னால் நீதான் எங்களுக்கு எல்லாமும்.. நீ பொறுப்பாய் இருந்தால் தானே.. நாங்களும் நிம்மதியாய் இருக்க முடியும்..."
ராதிகாவின் கெஞ்சல்கள் காற்றில் கரைந்த கற்பூரம் போல் ஆக.. அவனை வீட்டில் நிறுத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்த கொண்ட ராதிகா இறுகிப் போனாள்..
பெயர் பெற்று வாழ்ந்த தந்தையின் மதிப்பும் மரியாதையும் ஒரு போதும் குறைய இடம் கொடுத்து விடக்கூடாது என்ற வைராக்கியம் மட்டுமே.. மனதில் இருக்க.. ராதிகா நவநீதனை எதற்கும் எதிர்பார்க்காமல்.. குடும்பத்தையும்.. தொழிலையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள்..
கூடவே.. அண்ணனையும்.. தங்கையையும்.. தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவள் துளிகூட தயங்கவில்லை..
"அண்ணா.. இரண்டு நாளாய் எங்கே போனாய்..?"
"ஒரு பிரண்டைப் பார்க்கப் போயிருந்தேன் ராதும்மா.."
"எந்த பிரண்ட்..? ஆணா..? பெண்ணா..?"
"என்னடாம்மா.. இப்படிக் கேட்கிறாய்..? உனக்கு அண்ணனிடம் நம்பிக்கை இல்லையா..?"
"துளிகூட இல்லை..."
தயவு தாட்சண்யம் இல்லாமல் பதில் சொல்லும் தங்கையைப் பார்க்கும் போது அவனுக்குப் தன் தாயைப் பார்ப்பது போல் இருக்கும்.
பதினெட்டு வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்றவள்.. தன் வயதுக்கு தகுந்தது போல் பேசவோ.. சிரிக்கவோ செய்யாமல்.. கம்பீரமாய் தொழிலைப் பார்ப்பதும்.. வீட்டை நிர்வகிப்பதுமாக.. அநாவசியப் பேச்சுகளுக்கு துளிகூட இடம் கொடுக்காமல்.. தன்னைக் காத்துக் கொண்டு நிற்கிறாளே என்பது அவனுக்குள் நிம்மதியை அளிக்கும்.
தன்னைக் காத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல்.. தன் தங்கைக்கும் தாயாக இருந்து.. அவள் பருவம் எய்திய போது ஒரு குறையும் இல்லாமல் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தி.. சிறியவளின் பயத்தையும் போக்கி.. அதே சமயம் அவள் வெளியுலகில் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளையும் கூறி.. வெளியுலகில் கலந்து பழகும் போது கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகளையும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து.. ஓர் தோழியாய்.. ஆசானாய் நின்றாள்..
"மோனி.. இது என்ன டிரஸ்...?"
"இது வசதியாய் இருக்கு அக்கா..."
"பெண்கள் வசதிக்கு மட்டுமாய் டிரஸ் அணியப் பழக்கூடாது மோனி..."
"வேறு எப்படி இருக்கனும்..?"
"மற்றவர்கள் கவனத்தைக் கவராத வகையில் கண்ணியமாய் டிரஸ் போட்டுக் கொள்ளப் பழகு..."
"ஐ பீல் அன் ஈஸிக்கா..."
"போகப் போக இது பழகிவிடும்.. வீட்டில் நைட்டியில் இரு.. வெளியே சுடிதார் போட்டுக்க.. இந்த ஸ்கர்ட்டையெல் லாம் தூக்கி.. தேவைப்படுகிறவர்களுக்கு கொடுத்து விடு.."
"சரிக்கா..."
மோனிகா.. தமக்கை என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வாள்.. பனிரெண்டு வயதில் தாயையும்.. தந்தையும் இழந்த அந்தச் சிறுமிக்கு.. தாயுமானவளாய்.. தந்தையு மானவளாய் இருந்து காத்து.. வளர்த்து.. பாதுகாத்து... அரவணைக்கும் ராதிகாவிடம் அளவு கடந்த பாசம் இருந்தது..
நவநீதனுக்குப் பதில் குடும்பத்தை தாங்கி நின்று... தன்னையும்.. தங்கையையும்.. ஒரு சொல் வராமல் காத்துக் கொண்டு.. குடும்ப வருமானத்தை குறைவில்லாமல் பெருக்கிக் கொண்டு.. சரிவே இல்லாமல் குடும்பத்தை தாங்கி நின்று.. நவநீதனையும் கவனித்துக் கொள்ளும் பெரிய தங்கைக்கு.. விட்டால்.. நவநீதன் கற்பூரம் கொளுத்தி காலில் விழுந்து வணங்கியே எழுந்து விடுவான்..
"அண்ணா.. தட்டைப் பார்த்துச் சாப்பிடாமல்.. எந்தக் கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிற.."
ராதிகா நவநீதனை அதட்டவும்.. மோனிகா வாய் பொத்தி,
"களுக்.." கென்று சிரித்தாள்..
"என்னடி சிரிக்கிறாய்..?"
"இல்லைக்கா.. அண்ணன் சோம்பேறியாச்சே.. தூரம் தொலைவில் இருக்கிற கோட்டையையெல்லாம் பிடிக்க நினைக்காது.. நம்ம திண்டுக்கல் மலைக்கோட்டையைத் தான் பிடிக்க நினைக்கும்ன்னு நினைத்தேன்.. சிரித்தேன்.."
"அந்தக் கோட்டையைப் பிடித்து நான் என்ன செய்ய?"
"ஏன் அண்ணா..?"
"அது ஊமைத்துரையின் கோட்டைம்மா.. நான் பிடித்து விட்டால் உடைந்து விட்ட பீரங்கியோடு.. கனவில் வந்து அவர் என்னை பயமுறுத்த மாட்டாரா...?"
"பீரங்கிக்கு எல்லாம் பயப்படலாமா? நீ வீரனாச்சே.."
"ஆவிகளோடு சண்டை போடும் அசகாய சூரன் நான் இல்லை மோனிகா.. அதுக்கெல்லாம் ஆவி அமுதாதான் லாயக்கு.."
"என்னமோ போ.. நாள் கணக்கில் காணாமல் போகிற.. அக்கா உனக்குக் கொஞ்சம் கூட பயம் பத்து கிடையாதுன்னு சொல்லித் திட்டுது.. நீ என்னடான்னா ஆவிக்குப் பயப்படுகிற.."
"அதுக்கும்.. இதுக்கும்.. என்னடா சம்பந்தம்..?"
நவநீதன் அசடு வழிய.. ராதிகா மீண்டும் முறைத்தாள்..
"இப்ப எதுக்கு திரும்பவும் முறைக்கிற..? தட்டைப் போட்டு டிபனையும் பரிமாறிட்டு சாப்பிட விடாமல் திட்டிக் கொண்டும்.. முறைத்துக் கொண்டும் இருந்தால் சாப்பாடு உள்ளே இறங்குமா..?"
"எல்லாம் இறங்கும். நீ நான் முறைப்பதற்கும்.. திட்டுவதற்கும் ரொம்பப் பயப்படுகிறவன் போல் சீன் போடாதே..."
"உள்ளதைச் சொன்னால்.. அதுக்கும் ஒரு திட்டா..?"
"உன்னை விட பத்து வயது இளையவள்.. நீ வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றிக் கொண்டு இருப்பதை சொல்லிக் காட்டுகிறாள்.. நீ வெட்கமில்லாமல் மழுப்புகிறாய்.."
"இதுக்கா இவ்வளவு கோபப்படுகிற..?"
"இது என்ன உனக்கு அவ்வளவு ஈஸியான விசயமாகப் போய் விட்டதா..?"
"வேலை இருந்தது ராதும்மா.. முக்கியமான.. என் உயிர் சிநேகிதன் ஒருவனைப் பார்க்கப் போயிருந்தேன்.."
"உனக்கு முக்கியமான உயிர் சிநேகிதன் எப்படி இருப்பான்..? உன்னைப் போல்தான்.. பொறுப்பில்லாமல்.. ஊர் சுற்றுகிறவனாக இருப்பான்.."
ராதிகா வெறுப்புடன் கூறிய அந்தப் பொறுப்பில்லாத ஊர் சுற்றி நண்பன்.. பெட்டிப் படுக்கையோடு நவநீதனின் வீட்டில் வந்து ஓர் நாள் இறங்கினான்.. ராதிகாவின் முகத்தில்  அன்று எள்ளும்.. கொள்ளும் வெடித்தது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -2
முகில் மறைத்த நிலவு. -2
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy