அம்மம்மா.. கேளடி தோழி...! -97

97 காற்றாக நானிருந்தால் - உன் கன்னத்தையே தொட்டிருப்பேன்... பாலமுரளிக்கு தேவையான உடைகளை அடுக்கி... பெட்டியை இறுக மூடினாள் ராதிகா.....


97
காற்றாக நானிருந்தால் - உன்
கன்னத்தையே தொட்டிருப்பேன்...

பாலமுரளிக்கு தேவையான உடைகளை அடுக்கி... பெட்டியை இறுக மூடினாள் ராதிகா... அறைக்குள் வந்தவன் பெட்டியைப் பார்த்தான்... புருவங்களை உயர்த்தினான்...
"என்னடி செஞ்சு வைச்சிருக்க...?"
"பார்த்தாத் தெரியலை... உங்க டிரெஸ்ஸை பேக் பண்ணியிருக்கேன்..."
அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் வெடுக்கென்று அவள் பதில் சொன்னாள்... குனிந்திருந்தவளின் இடுப்பில் செருகியிருந்த சேலை முந்தானையின் மீது அவனது பார்வை படிந்தது...
வாகாக புடவையை இழுத்துச் செருகியபடி அவள் வேலை செய்த விதம் அவனை வசீகரித்தது... அவளது பட்டுப் போன்ற வழவழப்பான இடுப்பில் கிள்ளி வைத்தால் என்ன என்று தோன்ற...
'இவ அதுக்காகத்தானே என் கண் முன்னாலே ஆலவட்டம் போடுறா...' என்ற கோபம் அவனுக்குள் வந்தது...
அவளிடம் சொன்னால்... அதை மேகலாவிடம் சொல்லி நியாயம் கேட்கவா என்று பயமுறுத்துவாள் என்பதால்... வேறு வகையாக அவளிடம் தன் கோபத்தை வெளிப் படுத்தினான் பாலமுரளி...
"உன்னை யாரு இந்த வேலையை யெல்லாம் செய்யச் சொன்னது...?"
எரிந்து விழுந்தவனின் எரிச்சலை லட்சியம் செய்யாமல் ஒரு மார்க்கமாக அவனை பார்த்து வைத்தாள் ராதிகா...
"யாரு சொல்லனும்..?"
"நான் சொல்லனும்.. என் டிரெஸ்ஸை எடுத்து வைக்க நீ யாரு...?"
"நான் யாரு..? தெரியலையே... வேணும்னா.. அத்தையிடம் போய் கேட்டுட்டு வந்து சொல்லவா...?"
'இதைச் சொல்லியே மிரட்டி வைக்கிறாளே...'
"இங்கே பாரு.. என் வேலையைச் செஞ்சுக்க எனக்குத் தெரியும்... நீ ஒன்னும் சேவகம் பண்ணிக்கிட்டுத் திரிய வேணாம்... புரியுதா..?"
"புரியலை..."
"என்னது..?"
"ஆமாம்.. புரியலைன்னு சொன்னேன்.. இந்த ரூமுக்குள்ள என் வேலை.. உங்க வேலைன்னு எதையும் பிரிச்சுப் பார்க்க முடியாது... இது உங்களுக்குப் புரியுதா..?"
அவன் கேட்டதையே அவள் திருப்பிக் கேட்க...
"கொழுப்பாடி..." என்று அவன் பல்லைக் கடித்தான்...
"வேண்டாம்டி... விட்டிரு..."
அவன் எச்சரித்துக் கொண்டிருக்க... அவள் பெட்டியை தயார்செய்து மூடிவிட்டு நிமிர்ந்த ராதிகா அவனை தீர்க்கமாக பார்த்தாள்...
"நீங்க வேண்டாம்ன்னு சொன்னீங்க.. நானும் கேட்டுக்கிட்டு... விட்டுட்டேன்.. இதுக்கு மேல நான் என்ன செய்யனும்னு நீங்க எதிர் பார்க்கறிங்க..?"
நிதானமான அவளது கேள்வி அவனைத் தாக்கியது...
"ஏய்ய்... நான் எதைச் சொன்னா.. நீ எதைச் சொல்லிக்கிட்டு வர்ற..."
"பாருங்க... நான் பாட்டுக்கு என் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்... சும்மா.. இதைச் செய்யாதே.. அதைச் செய்யாதேன்னு குடைச்சல் குடுத்தா எனக்கு வேற வழியில்லாம போயிரும்..."
"என்னடி செய்வ...?"
"எங்க வீட்டில செஞ்சதைப் போலச் செஞ்சிருவேன்.."
'இவவீட்டில அப்படி எதைச் செஞ்சா..?'
"செய்யேன் யாரு வேணாம்னது..."
"அப்போச்சரி... பஞ்சாயத்தைக் கூட்டிர வேண்டியதுதான்..."
"பஞ்சாயத்தா...?"
"ஆமாம்... பஞ்சாயத்துதான்.. அத்தைதான் பஞ்சாயத்து தலைவர்..."
"அடிப்பாவி... இதைத்தான் நீ உங்க வீட்டிலே செஞ்சியா...?"
"நான் மட்டுமில்ல... கீதா.. சுந்தர்.. எல்லாமே.. இதைத்தான் செய்வோம்..."
"இதைப் பாருடா.. பஞ்சாயத்து தலைவர் யாரு..?"
"அப்பாதான்... ஆனா.. தீர்ப்புச் சொல்றது மட்டும் அம்மா கைக்கு போயிடும்...."
"அதானே பார்த்தேன்..." முரளிக்கு சிரிப்பு வந்து விட்டது...
"என்ன செய்யலாம்..?" ராதிகா அவனை மேல்பார்வை பார்க்க... அவனது சிரிப்பு அதிகரித்தது...
"எதையாவது செய்து தொலைடி..."
அவர்கள் கிளம்பிய போது... மேகலா முரளியிடம் ராதிகாவை பத்திரமாய் பார்த்துக் கொள்ளச் சொல்லி எச்சரித்தாள்...
"அக்கா குணம் முன்ன மாதிரியில்லடா முரளி... ராதிகாவைப் பார்த்துக்க..."
"என்னங்கம்மா இது... நம்ம வீட்டுப் பொண்ணைப் பத்தி நாமளே இப்படிப் பேசலாமா...?"
"தங்கக் கத்திங்கிறதுக்காக... கையை பதம் பார்த்தாப் பரவாயில்லைன்னு கையை வெட்டிக்கலாமா...?"
காரில் கிளம்பும் போது... முரளிக்கும் அந்தப் பிரயாணம் பிடித்தமானதாகவே இருந்தது...
அன்றைய நாளுக்குப் பின்னால்... அவனிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை ராதிகா வைத்துக் கொள்ளவில்லை... அவளது காய்ச்சலும் குணமாகி விட்டதில் முரளி.. நிம்மதியடைந்தவனாக தன் வேலைகளில் மூழ்கிப் போனான்...
ராதிகா... அவள் வழக்கப்படி... அவனுக்கான வேலைகளை பார்த்துப் பார்த்துச் செய்தாள்... அவன் ஆட்சேபித்தால்... மேகலாவிடம் வழக்கைக் கொண்டு போய் விடுவதாகச் சொல்லி மிரட்டினாள்...
எது எப்படியிருந்தாலும்.. பழையபடியான இயல்பு நிலைக்கு அவள் திரும்பி விட்டதில் முரளிக்கு மகிழ்ச்சிதான்...
பேச்சுக்கு... பேச்சு பதில் பேசும் அவள் குணத்தை அவன் மனதுக்குள் ரசித்தான்... அதற்காகவே அவளிடம் வார்த்தை வளர்ப்பதை வழக்கமாக வைத்திருந்தான்...
துருதுருவென்று... ஒரு இடத்தில் நிற்காமல்... இங்கும்.. அங்குமாய் வளைய வந்து கொண்டிருப்பவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது...
அதைப் பார்வையில் கூட வெளிப்படுத்த முடியாமல் திண்டாடிப் போனான்...
'ம்ஹீம்... லேசாய் ஒரு பார்வை பார்த்தேன்னா போதும்... அவ விழுங்கி விடறதைப் போல பார்த்து வைச்சிருவா... அப்புறம் பச்சக்குன்னு பற்றித் தொலைக்கும்... எதுக்கு வம்பு...?'
அவன் விரதம் காத்தான்... அவளும் அவனது விரதத்தை கலைக்க முனையாமல் ஒதுங்கிப் போனாள்...
சிலநேரம்.. அவளது அந்த ஒதுக்கமே அவனுக்குள் எரிச்சலை மூட்டும்... சுள்ளென்று விழுவான்...
"கடனேன்னுதான் எதையும் செய்வியா..?"
"வேற என்ன செய்ய..? கொடுத்து வைச்சிருந்தாத்தானே உரிமையோட செய்ய முடியும்..?"
அவளிடம் உடனுக்குடனான பதில் சுடச்சுட கிடைத்து விடுவதால் அவன் வாய் மூடிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது...
அப்போதும்.. அதைப் போலத்தான்.. குனிந்து.. நிமிர்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்தவளின் அங்க அசைவுகளில் அவன் மனம் லயித்து தொலைத்தது...
அவளது நீண்ட பின்னல்... அவன் மடிமீது இரண்டு முறைக்கு மேல் விழுந்து புரண்டு விலகியதில் அவன் கிளர்ச்சிக்கு ஆளானான்... அவளது பின்னலில் இருந்து வெளிப்பட்ட நறுமணம்... செண்பகப்பாண்டியனைப் போல... பெண்களின் கூந்தலுக்கு எப்படி இந்த நறுமணம் வந்தது என்ற ஆராய்ச்சியைத் தூண்டிவிட்டது...
அவள் குனிந்து.. நிமிர்ந்தபோது... அவன்மீது பட்டதில்.. அவளை இழுத்து அணைத்து மடியில் சரித்துக் கொள்ள வேண்டும் போல மோகம் பொங்கி எழ... அவன் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டான் மோகம் பொங்கி எழ... அவன் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டான்...
"என்ன ஆச்சு..?" அவள் புரியாமல் பார்த்தாள்...
"என்னத்தை நொன்ன ஆச்சுன்னு கேள்வி கேட்கிறவ...? ஏண்டி.. நீ ஒரு இடத்தில அடங்கி உட்காரவே மாட்டியா..? எதுக்கு குனிஞ்சு.. வளைஞ்சு.. நிமிர்ந்து.. மனுசனை இம்சை பண்ணித் தொலைக்கிற..?"
"அதனால கார் ஏதும் குழுங்கிப் போச்சா..?"
"ஏய்ய்.. கடுப்பைக்கிளப்பாதே... பக்கத்தில உட்கார்ந்திருக்கவ ஆடிக்கிட்டு இருந்தா.. ஒரு மனுசன் எப்படிடீ நிம்மதியா காரை ஓட்டுவான்...?"
"ஆமாங்க... இது மேடை பாருங்க... நான் பரத நாட்டியம் ஆடறேன்.. இவர் சொல்ல வந்துட்டார்..."
"மேடையில்லை... கார்ன்னு தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக இந்த ஆட்டம் போடற..? அடங்கி உட்காரு..."
"திரும்பவும் ஆடறேன்னு சொன்னா எனக்குக் கோபம் வந்திரும் சொல்லிட்டேன்.. நானும் பார்க்கிறேன்.. என்னவோ சின்னக் குழந்தையை அரட்டுகிறதைப் போல என்னை அரட்டிக்கிட்டே இருக்கீங்க... எதுக்குங்க இந்த வம்பு..? நான் உங்க பக்கத்தில உட்கார்ந்தாத்தானே இந்தப் பிரச்னை..? பேசாம பின் சீட்டுக்கு போயிடறேன்.. அங்கதான் எனக்கு வசதி..."
"ஆமாண்டி.. உனக்கு பின்சீட் வசதியாத்தான் இருக்கும்.. நீ முதலாளியம்மா.. தெனாவெட்டா பின்சீட்டில் உட்கார்ந்துட்டு வருவ... நான் உனக்கு டிரைவர்... காரோட்டிக்கிட்டு வருவேன்.."
அவன் அதற்கும் சண்டைக்கு வர... ராதிகா அவனை தீர்க்கமாக பார்த்து வைத்தாள்...
'எதுக்கு இப்ப இவ.. இப்படி பார்வையிடறா...?'
பாலமுரளியின் புருவங்கள் முடிச்சிட்டன...
"வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாலும் குற்றம்... கால்பட்டாலும் குற்றம்ன்னு பழமொழியைக் கேட்டிருக்கேன்.. அதை இப்பத்தான் உணர்ந்து அனுபவிக்கிறேன்.. நான் உங்களுக்கு வேண்டாதவதான்.. அதுக்காக இப்படியா படுத்துவீங்க...?"
ராதிகாவின் தீட்சண்யமான பார்வையைத் தாங்க முடியாமல் அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்...
அவள் சொல்வது சரியோ என்று அவனுக்குத் தோன்றியது... அவள் செய்வதெல்லாம் குற்றமாக ஏன் அவனுக்குத் தோன்றவேண்டும்...?
"பிடிக்கலைன்னா திருப்பி அனுப்பிவிட வேண்டியது தானே...?" நிதானமாக கேட்டாள் ராதிகா...
முரளிக்கு சுர்ரென்னு கோபம் வந்துவிட்டது..
'எவ்வளவு தைரியமிருந்தா.. இப்படிப் பேசுவா..?'
"திருப்பி அனுப்புறதா..? யாரை..?" அவன் முகம் சுளித்தான்...
"வேறு யாரை..? வேண்டாத பெண்டாட்டியைத்தான் திருப்பி அனுப்பனும்..", ராதிகா முகம் திருப்பிக் கொண்டாள்...
"அதாவது... உன்னைத் திருப்பி அனுப்பனும்னு சொல்ற..?" அவளை விட நிதானமான குரலில் அவன் கேட்டான்...
"நான்தானே வேண்டாத பெண்டாட்டி.. அப்ப என்னைத்தானே திருப்பி அனுப்பனும்..?"
அடிவாங்கி செவிப்பறைகிழியப் போவது நிச்சயம் என்று அறிந்திருந்தும் அதை எதிர் கொள்ளும் மனோ தைரியத்துடன் இதைச் சொன்னாள் ராதிகா...
"என்னடி சொன்ன...?"
அவன் கர்ஜிக்க... கண்களை இறுக மூடிக் கொண்டு.. அடிக்குத் தயாரானாள் ராதிகா...
அப்படியெதுவும் நிகழாமல் போக.. ஆச்சரியத்துடன் இமைதிறந்து அவனைப் பார்த்தாள்...
அவனோ.. கைமுஷ்டியை மடக்கி.. தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தான்...
'என்னடா இது அதிசயமா இருக்கு.. இவனாவது.. கைநீட்டாமல் இருப்பதாவது...'
அவள் விழி விரிய அவனைப் பார்க்க.. அவனோ.. அவளை அடிக்க முடியாமல் பல்லைக் கடித்தான்...
"காய்ச்சல்ல விழுந்து எழுந்திருச்சவன்னு பார்க்கிறேன்... இல்லைன்னா பல்லைக் கழட்டியிருப்பேன்.."
'ஓ.. அதுதான் விசயமா..? என்னடா.. இவன் இன்னும் பல்லைக் கழட்டலையேன்னு பார்த்தேன்...'
"அம்மா வேற என் கையை கட்டிப் போட்டு அனுப்பியிருக்காங்க..."
'அட.. இந்த சிங்கம்.. பூவேலியில் மாட்டிக்குச்சா...'
"அக்கா கிட்டயிருந்து உன்னைக் காப்பாத்தச் சொன்னவங்க.. நான் உன்னை அடிச்சதைத் தெரிஞ்சா.. என்கூட பேசக்கூட மாட்டாங்க... அதனால நீ பிழைச்சேடி.."
'இப்பவாவது நான் ஸ்ட்ராங்கான சப்போர்ட்டோட இருக்கேங்கிறதை நீ தெரிஞ்சுக்க...'
"உன்னைத் திருப்பி அனுப்பினா எங்கே போகிறதா உத்தேசம்...?"
அவன் கண்கள் இடுங்க கேட்க... அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது...
"எனக்கு வீடா இல்லை...?"
"அது உன் வீடில்லை..."
"அடேங்கப்பா... இதை இவர் சொல்லி நான் கேட்க வேண்டியிருக்கு..."
"வேற யார் சொல்லி... நீ கேட்ப...?"
"இங்கே பாருங்க... இப்படி கிழக்கே போனா மேற்கே.. தெற்கே போனா வடக்கேன்னு பேசி வைச்சீங்கன்னா என்னால பதில் சொல்ல முடியாது..."
"ஆமாமாம்... நீ அமைதியின் சிகரம்தான்... இன்னொருதரம் இப்படிப் பேசி வைச்சே... அப்புறம்... அம்மா சொன்னதுக்காக கூட நான் பார்க்க மாட்டேன்... கொன்னு புதைச்சிருவேன்...."
அவன் கோபத்துடன் பேச... இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய்... என்று கேட்கத் தோன்றியது ராதிகாவுக்கு....
காரைக் கிளப்பியவன் சற்றுத் தள்ளியிருந்த மரத்தடியில் நிறுத்தினான்... மரத்தடியில் இருந்த இளநிர்கடையில் இளநியை வாங்கி அவளிடம் நீட்டினான்...
போடா நீயுமாச்சு.. உன் இளநியுமாச்சு என்று சொல்லத்தான் அவள் நினைத்தாள்... அதைச் சொல்ல மறந்தவளாக... இளநீரை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள்...
"போதுமா... இன்னொன்னு வேணுமா..?"
அக்கறையுடன் அவன்கேட்ட போது... இவனை புரிந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா என்றிருந்தது ராதிகாவிற்கு...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -97
அம்மம்மா.. கேளடி தோழி...! -97
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-97.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-97.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy