அம்மம்மா.. கேளடி தோழி...! -90

90 ஊனுருக உனை நினைத்தும்... உன் மனது இரங்கவில்லை... பாலசரஸ்வதி துடிக்கும் இதழ்களுடன்.. கண்ணீர் திரையிட்ட விழிகளுடன் தம்பியை ஏறிட்...


90
ஊனுருக உனை நினைத்தும்...
உன் மனது இரங்கவில்லை...

பாலசரஸ்வதி துடிக்கும் இதழ்களுடன்.. கண்ணீர் திரையிட்ட விழிகளுடன் தம்பியை ஏறிட்டாள்... தமக்கையை தகப்பனாக வளர்த்த அந்த தம்பியின் இதயம் துடித்தது...
"என்னக்கா ஆச்சு..? ஏன் இப்படி அழுகிற...?"
"இந்த வீட்டில் நான் யாருடா..?"
"த்ச்சு... அபத்தமாய் பேசாதே... எப்பப் பார்த்தாலும் இதே கேள்விதானா..?"
"நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லு..."
"நீ என் அக்கா... இந்த வீட்டுக்கு மூத்தமகள்..."
"எனக்குன்னு இந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லையா..?"
பாலசரஸ்வதியின் குரலில் தெரிந்த பரிதவிப்பில் முரளி உருகிப்போய் விட்டான்... ஆண்பிள்ளை சிங்கமாய் அவனிருக்க... அவன் கூடப் பிறந்தவள் கண்ணீர் விடுவதா..?
"ஏன் இல்லை..? இது நீ பிறந்து வளர்ந்த வீடுக்கா.. உனக்கில்லாத உரிமை இங்கே வேற யாருக்கு இருக்கு..?"
"உன் பெண்டாட்டிக்கு இருக்குடா..."
பாலசரஸ்வதியின் பேச்சில் முரளியின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன... அவனுக்கு ராதிகாவின் மீது சரஸ்வதி கோபமாக இருக்கிறாள் என்று தெரியும்... அந்த கோபத்தில் ராதிகாவை அவள் அதட்டுவாளே தவிர இப்படி கண்ணீரை உகுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டாளே... அது அவளின் இயல்பல்லவே...
பாலசரஸ்வதி பெரிய வீட்டில் பிறந்த பெண்.. பரம்பரை கோடிஸ்வரான மாணிக்கவாசகத்தின் மகள்.. அந்த வட்டாரத்திலேயே பெருந்தொழிலதிபனான பாலமுரளியின் அக்கா.. அவளாவது நியாயம் கேட்டு கண்ணீர் விடுவதாவது...
அவளுக்கு அதட்டித்தானே பழக்கம்..? அடிபட்ட உணர்வுடன் கண்ணீர் விட்டுப் பழக்கமில்லையே....
'என்னவோ... நடந்திருக்கு...' அவன் முகம் மாறிவிட்டது...
"உனக்கு உரிமையில்லைன்னு அவ சொன்னாளா..?"
முரளி புயலை உள்ளடக்கிய அமைதியுடன் கேட்க.. அதை அறைக்கு வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த ராதிகாவின் உடல் பதறியது..
"ஆமாம்..." பாலசரஸ்வதி தேம்பினாள்...
அவனை விட வயதில் மூத்தவள்.. பத்துவயதில் ஒன்று... எட்டு வயதில் ஒன்று என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயானவள்.. இப்படித் தேம்பி அழுததில் பாலமுரளியின் மனம் பாதிப்பையடைந்தது....
"சும்மா அழுகாதேக்கா.. முதலில் அழுகையை நிறுத்து.. நீ அழுது நான் கேட்கிறதா..?"
"பிறந்த வீட்டில் உரிமையில்லைன்னு ஆகிப் போனா.. எந்தப் பொண்ணுதான் அழாம இருப்பா..? எனக்கு இங்கே உரிமையில்லையாம்.. அவளுக்குத்தான் இங்கே எல்லா உரிமையும் இருக்காம்... உன் பெண்டாட்டி சொல்லிட்டா... முரளி.."
மகளின் கண்ணீரைக் கண்டு பதைப்புடன் அருகே அமர்ந்திருந்த மேகலாவுக்கும் என்னவோ போல ஆகிவிட்டது....
'ராதிகாவா... இப்படிச் சொன்னா...?'
என்னதான் மருமகள் மேல் பாசமிருந்தாலும்.. மகளின் மனம் புண்படப் பேசுவதை எந்தத் தாய்தான் அனுமதிப்பாள்...?
அவள் பாலமுரளியை கேள்வியாய் நோக்க... அவன் வெகுண்டான்...
"ராதிகா..."
அவன் போட்ட சத்தத்தில் சாதனாவும்.. ராஜீவும் பயந்து போய் மேகலாவின் புடவை முந்தானையின் பின்னால் பதுங்கிக் கொண்டார்கள்... சமையலறையில் கைவேலையாக இருப்பதைப் போல பாவனை செய்தபடி.. காதைத் தீட்டிக் கொண்டிருந்த காவேரி... அவசரமாக வந்து எட்டிப் பார்த்தாள்.. மீனாட்சியின் கையிலிருந்த பாத்திரம் நழுவி தரையில் விழுந்து... அதன் பங்குக்கு 'டமார்...' என்ற சப்தத்தை எழுப்பி வைத்தது...
ராதிகா நடுக்கத்துடன்.. பாலமுரளியின் முன்னால் வந்து நின்றாள்... அவனின் கோபப்பார்வை அவளைத் துளைப்பதை உணர்ந்தும் அவளால் தலைநிமிர்ந்து அவனைப் பார்க்க முடியவில்லை....
"ஏய்ய்.... நிமிர்ந்து பாருடி..." அவன் ரௌத்திரமானான்....
மெதுவாக தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்த ராதிகா பயந்து விட்டாள்... அவ்வளவு ரௌத்திரத்துடன் அதற்கு முன்னால் இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறாள்... அந்த இரண்டு முறையும் அவன் அவளுக்கு வாழ்நாளிலேயே மறக்க முடியாதபடி மிகக் கடுமையான தண்டனைகளை அளித்திருக்கிறான்..
இது மூன்றாம் முறை... இப்போது என்ன நடக்கப் போகிறதோ என்ற நினைவில் அவள் மேனி நடுங்கியது...
அவளது நடுக்கத்தைக் கண்டவனின் ரௌத்திரம் இன்னும் அதிகமானது.. குற்றம் செய்யாதவள் ஏன் நடுங்க வேண்டும் என்ற உக்கிரத்துடன் அவளை எரித்து விடுவதைப் போல முறைத்தான் பாலமுரளி...
"அக்காகிட்ட என்னடி சொன்ன...?"
"அண்ணி மதியம் நம்ம ரூமுக்கு வந்திருந்தாங்க..."
"அக்காவை என்ன சொன்னன்னு கேட்டேன்..."
"என் நகைகளைப் பார்க்கனுமுன்னு சொன்னாங்க.."
"இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலை...."
"அதில ஒரு வைர நகை செட்டைப் பார்த்துட்டு அவங்களுக்கு வேணும்னு எடுத்துக்கப் போனாங்க..."
ராதிகா விவகாரத்தின் ஆணிவேரை அடைந்து விட்டதை உணர்ந்த முரளியின் புருவங்கள் முடிச்சிட்டன...
"எடுத்துக்கிட்டா.. எடுத்துக்கட்டுமே.. நீ அதைத் தடுத்தியா..?"
அவன் அழுத்தமான குரலில் கேட்க... பயந்து நடுங்கி பின் வாங்கினாள் ராதிகா... முரளி அவளின் பயத்தை லட்சியமே செய்யவில்லை... தன் கேள்வியிலேயே அவன் நின்றான்...
"சொல்லுடி.. நீ அதைத் தடுத்தியா...?"
ராதிகா செய்வதறியாதவளாக வீட்டைச் சுற்றிப் பார்வையை ஓட விட்டாள்.. சமையலறையில் காவேரியும்.. ஹாலில் மீனாட்சியும்.. வாசலில் தோட்டக்காரனும் நின்று கொண்டிருப்பது தெரிந்தது... போதாக்குறைக்கு டிரைவர் வேறு வந்து கொண்டிருந்தான்...
இத்தனை பேரின் மத்தியில் வைத்துத்தான் இவன் விசாரணை நடத்த வேண்டுமா என்று மனதில் புகைந்தாள்...
தனிமையில் இதைக் கேட்டால் ஆகாதா என்றிருந்தது அவளுக்கு... ஆனால் இதை அவனிடம் யார் சொல்வது...?
சொல்ல வேண்டிய மேகலாவே மகனின் விசாரனைக்கு ஒத்துழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் போது.. ராதிகாவிற்கு ஆதரவாக அங்கே யார் பேசப் போகிறார்கள்...?
பதிலைச் சொன்னால் என்ன நடக்கும் என்று மிக நன்றாகவே தெரிந்திருந்தும்.. பதிலைச் சொன்னாள் ராதிகா...
"ஆமாம்..."
அடுத்த நொடியில் பாலமுரளி ஓங்கிவிட்ட அறையில் சுருண்டு கீழே விழுந்தாள் ராதிகா.. அவள் காதுகளில் 'ஙொய்' என்ற சத்தம் மட்டுமே கேட்டது... அசைய முடியாமல் கிடந்தவளின் முடியைப் பற்றித் தூக்கி அடுத்த அறையை விட்டான் பாலமுரளி...
இப்போது ராதிகா உணர்விழந்து விழுந்துவிட...
"ஐய்யோ..." என்று வாய் பொத்தினாள் மேகலா...
ராஜிவும்.. சாதனாவும் ராட்சஸனைப் பார்ப்பதைப் போல பாலமுரளியைப் பார்த்தபடி.. நகர்ந்து பின்னுக்குச் சென்றார்கள்.. மீனாட்சி தண்ணீர் குவளையுடன் ஓடிவர.. மேகலா தரையில் அமர்ந்து ராதிகாவின் முகத்தை தூக்கி மடியில் வைத்து.. தண்ணீரைத் தெளித்தபடி...
"இப்படிப் போட்டு அடிச்சிட்டயே முரளி.. கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் தான் வந்து தொலைக்குமா..? பாவம்... பச்சை மண்ணு.. உன் கோபத்தை இவ தாங்குவாளான்னு நினைச்சுப் பார்த்தியா..." என்று புலம்பினாள்...
"இவ பண்ணுகிற வேலைக்கு... நொறுக்கித் தள்ளனும்மா..." அவனது கோபம் குறையவில்லை...
தண்ணீர் தெளித்ததில் ராதிகா கண் விழித்துப் பார்த்தாள்... முரளியை அவளது நிலைமை கொஞ்சம் கூட அசைக்கவில்லை.. அவள் முகத்துக்கு நேரே குனிந்து அவன் கர்ஜித்தான்...
"சொல்லுடி... அக்காவுக்கு அந்த நகையைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னியா...?"
"விடுடா.." மேகலா தடுக்க...
"ஆமாம்..." என்று தீனமான குரலில் சொல்லிவிட்டு மீண்டும் அடி வாங்கினாள் ராதிகா...
"இவளைக் கொல்லனும்னு நினைக்கறியாடா.." மேகலாவின் விழிகள் கனலைக் கக்கின...
"சாகட்டும்மா... நகைஆசை பிடிச்சவ எனக்கு வேணாம்..." அவன் வெறுப்புடன் சொன்னான்...
"என்ன நடந்திருந்தாலும் உனக்கு இத்தனை கோபம் ஆகாது முரளி..." மேகலாவின் குரலில் கண்டிப்பிருந்தது..
பாலமுரளி அதைக் கண்டு கொள்வதாகவே இல்லை..
"சொல்லுடி... அந்த நகைக்காக என் அக்காவுக்கு உரிமையில்லைன்னு சொன்னியா..?" பாலமுரளி விடாக் கண்டனாக அதிலேயே நின்றான்...
அன்று அவனறிந்த ராதிகாவின் இன்னொரு முகத்தை அவன் ரசிக்கவில்லை.. அழகான பின் மாலையும்... முன்னிரவும் சந்தித்துக் கொள்ளும் அற்புதமான பொழுதில்... தோட்டத்தில் மலர் செடிகளின் மத்தியில் தேவதையைப் போல நின்று நிலவைக் குறித்து பாடலைப் பாடிய அந்த ராதிகாவா இவள்.. என்று மனம் கசந்தான் அவன்...
'கடைசியில் அக்கா சொன்னதைப் போல.... என் பணத்துக்காகத்தான் இவ என்னை அந்தப் பார்வை பார்த்தாளா...'
நினைவே அவனை தகித்தது.. அந்த தகிப்பைப் பொறுக்க மாட்டாதவனாக.. அதை அப்படியே அவளிடம் காட்டினான் அவன்...
"சொல்லு... ஏன் பேசாம இருக்க..?"
"போதும் முரளி... அவளால பேச முடிகிறதைப் போலவா நீ அடிச்சு வைச்சிருக்கிற.. குத்துயிரும்.. குலையுயிருமா ஆக்கிட்டு அவகிட்ட விடாம விசாரணை நடத்தறியே... உனக்கு கொஞ்சம்கூட இரக்கமே இல்லையா...?"
"இவளுக்குப் போயி இரக்கம் காட்டறிங்களேம்மா.. நகைமேல ஆசைப்பட்டு நீங்க பெத்த பொண்ணுக்கே இந்த வீட்டிலே உரிமையில்லேன்னு இவ சொல்லியிருக்கா.. அதை நினைச்சுப் பாருங்கம்மா..."
"இவ எதைச் செய்திருந்தாலும் இப்போதைக்கு இது போதும்.. விட்டுவிடு..."
"முடியாது.. இது புருசன் பெண்டாட்டி பிரச்னை.. நீங்க இதில் தலையிடாதீங்க..."
இப்படிச் சொல்லி விட்டவனிடம் அவள் எதைச் சொல்லி தடுத்து நிறுத்துவது...
"சொல்லு.." பாலமுரளியின் கண்கள் சிவந்தன...
"ஆமாம்... சொன்னேன்.. அந்த நகையை எடுத்துக்க உங்க அக்காவுக்கு உரிமையில்லைன்னு சொன்னேன்.. எனக்குத்தான் அந்த நகைமேல உரிமையிருக்குன்னு சொன்னேன்..."
பேசமுடியாத அந்த நிலைமையிலும்.. மெல்லிய குரலில் நிறுத்தி நிதானமாக பதில் சொன்ன மருமகளின் மேல் கவிழ்ந்து.. மகனின் அடியிலிருந்து அவளைப் பாதுகாத்து விட்டாள் மேகலா...
"நீங்க விலகுங்கம்மா..." அவன் கொதித்துக் கொண்டிருந்தான்...
"முடியாது.. இனி ஒரு அடியை நீ அடிச்சாக்கூட இவ தாங்க மாட்டா..." மேகலா விலக மறுத்தாள்...
"போய் சேரட்டும்.." முரளி வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தான்...
"இதுக்காடா.. நீ இவ மேல ஆசைப்பட்டு கட்டிக் கிட்ட..?" மேகலாவின் குரலில் குற்றச்சாட்டு இருந்தது...
"ஆசை...! ச்சே... இவமேல நான் ஆசைப்பட்டேன்.. இவ என்னடான்னா.. நகைமேல ஆசைப்பட்டிருக்கா..நம்ம வீட்டில இல்லாத நகைகளா..? இவ கேட்டா நான் வாங்கிக் கொடுக்க மாட்டேனா..? அதை விட்டுட்டு.. ஆசைப்பட்டு கேட்ட அக்காகிட்ட.. என்ன வார்த்தையைச் சொல்லியிருக்கா... அக்காவுக்கு பிடிச்ச நகையை எடுத்துக்க இவ எப்படி தடைசொல்லலாம்...?"
"பிடிச்சதையெல்லாம் உங்களுக்கு சொந்தமாக்கிக் கணும்னு நினைக்காதீங்க அண்ணி... உங்களாலே சொந்தமாக்கிக்க முடியாததும் உலகத்திலே இருக்கும்ன்னு உன் பெண்டாட்டி சொன்னாடா முரளி..."
பாலசரஸ்வதி நிறுத்தி வைத்திருந்த அழுகையை மீண்டும் ஆரம்பித்துவைக்க.. என்ன பெண் இவள் என்று மேகலாவுக்கு தலை வேதனையாக போய்விட்டது...
"ஏண்டா.. உன் பெண்டாட்டியை மட்டும் குத்தம் சொல்றியே... ஏன்.... உன் அக்காவுக்கு பிடிச்சிருந்தா உன்கிட்ட கேட்க வேண்டியதுதானே.. நீ உடனே வாங்கித் தரமாட்டியா..? அதை விட்டுட்டு.. இப்பத்தான் கல்யாணமாகி வந்திருக்கிற புதுப் பொண்ணுகிட்டப் போயி கேட்கலாமா..?"
"என்னம்மா நீங்க.. உங்க மருமக பக்கமே நியாயம் பேசறிங்க.. இது என் அப்பா வீட்டுச் சொத்துன்னு சொன்னேன்ம்மா... அதுக்கு இவ.. இப்ப இது என்னோட சொத்துன்னு சொல்றாம்மா..." பாலசரஸ்வதி எடுத்துக் கொடுத்தாள்...
"அப்படியாக்கா சொன்னா..?"
"ஆமாம்டா தம்பி..."
"நீங்க விலகுங்கம்மா சொல்றேன்... அப்ப சொத்தை உரிமை கொண்டாடத்தான் எனக்கு இவ கழுத்தை நீட்டினாளா...?"
ரௌத்திரம் கொண்ட முரளியுடன் மேகலா சரி மல்லுக்கு நின்றாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -90
அம்மம்மா.. கேளடி தோழி...! -90
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-90.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-90.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy