அம்மம்மா.. கேளடி தோழி...! -89

89 உன்கைபிடித்து நடக்கும் போது.. கானகம்கூட அரண்மனையே... ராஜராஜன் ஊருக்கு கிளம்பியபோது.. பாலசரஸ்வதி தேங்கி நின்றாள்... ' என்...


89
உன்கைபிடித்து நடக்கும் போது..
கானகம்கூட அரண்மனையே...

ராஜராஜன் ஊருக்கு கிளம்பியபோது.. பாலசரஸ்வதி தேங்கி நின்றாள்... 'என்னடி...' என்று புருவம் உயர்த்தியவனிடம் இரண்டு நாள்கள் பிறந்த வீட்டில் இருந்து விட்டு வருவதாக அனுமதி கேட்டாள்.. ராஜராஜனுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை...
"அதுதான் இந்த வாரக் கடைசியில் முரளியும்.. ராதிகாவும் விருந்துக்கு வருகிறாங்களே சரஸ்..." என்றான்...
"அவங்கதானே வராங்க.. அம்மா வரலையே.."
பாலசரஸ்வதியின் பதிலில் ராஜராஜன் கிளம்பி விட்டான்... மேகலாவுக்கு மனதிற்குள் கலவரம் மூண்டது.. மகள் இருப்பதில் அவளுக்கு சந்தோசம்தான்.. ஆனால்.. அவள் தாய் வீட்டில் சீராட மட்டும் இருப்பதாகத் தெரியவில்லையே.. அதற்கு மேலும் ஏதோ இருப்பதாக மேகலாவின் அடிமனதில் தோன்றுகிறதே...
பாலசரஸ்வதி இயல்பாக இருப்பதைப் போல்தான் முதல்நான் வீட்டைச் சுற்றிவந்தாள்... மீனாட்சியிடம் சொல்லி.. தோட்டத்து முல்லை மலர்களை தொடுத்து தலையில் வைத்துக் கொண்டாள்.. காவேரியிடம் சொல்லி பால்கோவா கிண்டிச் சாப்பிட்டாள்...
மகள் உண்மையிலேயே பிறந்த வீட்டில் சீராடத்தான் நினைக்கிறாள் என்று மேகலா.. கலவரத்தை விட்டபோது.. பாலசரஸ்வதி தன் வேலையை ஆரம்பித்தாள்...
மறுநாள் மதிய உணவிற்குப் பின்னால் மேகலா கண் அயர்ந்திருந்த நேரம் பார்த்து மாடியேறினாள் பாலசரஸ்வதி... ராதிகாவின் அறைக் கதவைத் தட்டினாள்.. கதவைத் திறந்துவிட்ட ராதிகா அவசரமாக...
"வாங்கண்ணி..." என்றாள்...
அவளது வரவேற்பை லட்சியம் செய்யாமல் அலட்சியமாக அறைக்குள் நுழைந்து பார்வையை சுழல விட்ட பாலசரஸ்வதி...
"வரவேற்பெல்லாம் பலமாயிருக்கு.. இது என்ன உன் தனிக்குடித்தன வீடுன்னு நினைச்சிட்டியா..?" என்று எகத்தாளமாக கேட்டாள்...
ராதிகாவுக்கு பற்றிக்கொண்டு வந்தாலும் பதில் பேசாமல் நின்றாள்.. அவளை வரவேற்காமல் இருந்திருந்தாலும் அதற்கும் குதர்க்கமாக எதையாவது பாலசரஸ்வதி சொல்லி வைப்பாள் என்று அவளுக்குத் தெரியும்...
'ம்ஹீம்.. பேய்க்கு வாழ்க்கைப் பட்டா.. முருங்கை மரத்தில ஏறித்தானே ஆகனும்...'
இந்த நினைவை வாய் விட்டுச் சொன்னால் முரளிக்கு எப்படியிருக்கும் என்ற நினைவில் அவளுக்கு சிரிப்புவந்து விட்டது...
"என்ன சிரிப்பு..? என்னைப் பார்த்தா உனக்கு சிரிக்கனும் போல இருக்கா..?"
பாலசரஸ்வதியின் முறைப்பில் ராதிகாவின் சிரிப்பு உதட்டிலேயே உறைந்து.. மறைந்து போனது...
"உட்காருங்கண்ணி..."
மீண்டும் வாங்குப்பெற நேரிடும் என்று தெரிந்தே உபசரித்து வைத்தாள் ராதிகா...
அவள்தான் பேய்க்கு வாழ்க்கைப் பட்டு தொலைத்தவளாயிற்றே.. முருங்கை மரத்துக்கு பயந்தால் முடியுமா..?
"இப்போத்தானே சொன்னேன்..? தனிக் குடித்தன கனவில இருக்காதேன்னு.. அதுக்குள்ள மறந்து தொலைச்சிட்டயா..?"
ராதிகாவைத் தாளித்தபடி அங்கிருந்த சோபாவில் தோரணையாக கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள் பாலசரஸ்வதி...
'அடேங்கப்பா.. மைசூர் மகா ராணிதான்...'
மனதில் நினைத்தை அவசரமாக அழித்தபடி எதிரே அமரப் போனாள் ராதிகா...
"என்ன.. நீயும் உட்காரக் கிளம்பிட்ட..?" அதட்டினாள் சரஸ்வதி...
"வேனும்னா வெளியே போய்விடவா..?" பவ்யமாக கேட்டு வைத்தாள் ராதிகா...
"கிண்டலா...?" பாலசரஸ்வதியின் பார்வை ராதிகாவை சுட்டெரித்தது...
"அதெல்லாம் இல்லைண்ணி.. உங்க முன்னாலே நின்னாலும் குற்ற மாகிருமோ.. என்னவோன்னு தோணுச்சு... எதுக்கு வம்புன்னு வெளியே போயிடலாம்ன்னு பார்த்தேன்.." மரியாதையான குரலில் சிரிக்காமல் சொன்னாள் ராதிகா...
"அப்போ.. நான் வம்புக்கு அலைகிறவன்னு சொல்றியா..?" பாலசரஸ்வதி சண்டைக்கு வந்தாள்...
"அப்படியெல்லாம் நான் சொல்லுவேனா அண்ணி..?"
"ஏன் சொல்லித்தான் பாரேன்..."
"உங்களுக்கு என்னதான் வேணும் அண்ணி...?"
"அடேங்கப்பா.. நான் கேட்டதைக் கொடுக்கிற அளவுக்கு நீ பெரிய ஆளா..?"
"அப்படின்னா சரிண்ணி.. நான் எதுவும் கேட்கலை.."
"அதுதான் சாக்குன்னு பேசாம இருந்துருவியா..."
இன்றைக்கு விடிந்த விடியல் சரியில்லை என்ற நினைவில் ராதிகா தலையைப் பிடித்துக் கொண்டாள்.. எதைப் பேசினாலும் அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக பேசிக் கொண்டு வருபவளிடம் அவள் என்னதான் செய்வாள்...?
அசையாமல் நின்றிருந்த ராதிகாவை உற்றுப் பார்த்த பாலசரஸ்வதி ஒரு முடிவுடன்...
"எங்கே... உன் நகைகளைக் காட்டு..." என்றாள்...
ராதிகா மௌனமாக அவளது நகைப் பெட்டியைக் கொண்டுவந்து பாலசரஸ்வதியின் முன்னாலிருந்த டீப்பாயின் மேல் வைத்தாள்.. திறந்து பார்த்த பாலசரஸ்வதி அவற்றின் ஒளிர்வில் அயர்ந்து போனாள்...
"அத்தனையும் வைரம்..! எல்லாம் என் அம்மா கொடுத்ததா..?"
இகழ்ச்சியுடன் பாலசரஸ்வதி கேட்க.. ராதிகா உதடுகளை மடித்து தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தபடி...
"ம்ம்ம்..." என்று முணுமுணுத்தாள்...
"நான் ஒருத்தி... இதைப் போய் உன்னிடம் கேட்கிறேனே... நீ தங்கத்துக்கே.. தகிடத்தோம் போடற குடும்பத்தில பிறந்தவளாச்சே.. வைரத்தை இதுக்கு முன்னாலே நீ கண்ணாலேயாவது பார்த்திருக்கியா..?" பாலசரஸ்வதி இளப்பமான குரலில் கேட்டாள்...
'அது என்ன பெரிய குற்றமா..?' எரிச்சலுடன் நினைத்த ராதிகா.. இல்லையெனும் விதமாக தலையை ஆட்டினாள்...
"உனக்கு வந்த வாழ்வைப் பாரேன்.. இத்தனை நகையும் இந்தக் குடும்பச் சொத்து... எனக்கு கொடுக்க மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க.." பொறாமையுடன் சொன்னாள் பாலசரஸ்வதி...
இதற்கு ராதிகா என்ன பதிலைச் சொல்ல முடியும்..? பேசாமல் மௌனமாக நிற்கத்தான் முடியும்...
"அதுக்குன்னு என்னை ஒன்னும் சும்மா அனுப்பிடலை... இந்த நகைகளை விட அதிகமான வைர நகைகளை செய்து போட்டுத்தான் அனுப்பி வைச்சாங்க.. உன்வீடு மாதிரியில்லை... என்வீடு.." பாலசரஸ்வதியின் குரலில் பெருமை வழிந்தோடியது...
"ம்ம்ம்..."
"மருமகளுக்குத்தான் குடும்ப நகைகள் போகனுமாம்... இது என்ன நியாயம்ன்னே தெரியலை... ஆமா... இது என்ன புது மாதிரியான வைர செட்..? அழகாயிருக்கே... இது எங்க குடும்ப நகை இல்லையே.. புதுசா வாங்கினதைப் போலத் தெரியுதே..."
பாலசரஸ்வதியின் கணிப்பு மிகச் சரியானதாக இருந்தது... அவள் காட்டிய வைர நகை செட்டைத்தான் பாலமுரளி ராதிகாவுக்கு நிச்சயதார்த்த விழாவின் போது போட்டுக்கொள்ள வென்று வாங்கிக் கொடுத்திருந்தான்..
"ஆமாம்.. இது புதுசுதான்..."
"எனக்கு இதைப் பிடிச்சிருக்கு.. நான் எடுத்தக்கறேன்..."
பாலசரஸ்வதி.. அந்த நகையை வைத்துக் கொண்டு.. மற்றவற்றை பெட்டியில் வைத்து பூட்டவும்.. ராதிகாவுக்கு திக்கென்று ஆகிவிட்டது...
"அண்ணி.. அந்த நகைசெட்டைக் கொடுங்க..." என்றாள்...
பாலசரஸ்வதியின் முகம் மாறிவிட்டது.. அவள் உண்மையிலேயே அந்த வைரநகைகளின் வடிவமைப்பில் மயங்கியிருந்தாள்.. ராதிகாவை தாழ்த்திப் பேசி வம்பிழுக்கவென்றுதான் அவள் நகைப் பெட்டியைக் கேட்டாள்.. அந்த நகைகளுக்கூடே இருந்த புதிய நகை அவளை வசீகரித்துவிட.. அந்த நகையின் மீது ஆசைப்பட்டு விட்டாள்...
"உனக்கு காதென்ன செவிடா..? இதை எனக்குப் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னேனா... இல்லையா..?"
"பிடிச்சதையெல்லாம் உங்களுக்கு சொந்தமாக்கிக் கனும்னு நினைக்காதீங்க.. உங்களாலே சொந்தமாக்கிக்க முடியாததும் உலகத்தில இருக்கும்... அந்த நகை எனக்கு வேணும்.. வைச்சுருங்க..."
"ஏய்ய்.. இது என்ன உங்க அப்பா வீட்டுச் சொத்தா..? என் அப்பாவீட்டுச் சொத்து.. இதை எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்ல நீ யாருடி..?"
"மரியாதையாய் பேசுங்க அண்ணி.. என்னை வாடி போடின்னு கூப்பிடுகிற உரிமை என் புருசனுக்கு மட்டும் தான் இருக்கு.. அந்த நகை என்னோடது.. எனக்குச் சொந்தமானது... அதை நீங்க எடுத்துக்க முடியாது.. நான் கொடுக்க மாட்டேன்..."
ராதிகாவின் கடுமையான பேச்சில் பாலசரஸ்வதி வெகுண்டாள்...
"இதைக் கொடுக்க மாட்டேன்னு சொல்ல உனக்கு அதிகாரம் கிடையாது..."
"இதை எடுத்துக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை கிடையாது..."
"இது என் அப்பாவீட்டுச் சொத்து..."
"இப்ப.. இது என்னோட சொத்து.."
"ராதிகா.."
"போதும்.. நீங்க அரட்டினா.. நான் மிரள மாட்டேன்.. என்னால அந்த நகையைக் கொடுக்க முடியாது..."
ஏறக்குறைய அந்த நகையை பாலசரஸ்வதியின் கையிலிருந்து பறித்தாள் ராதிகா.. நகைப் பெட்டியை பீரோவின் உள்ளறையில் வைத்து.. பாலசரஸ்வதியின் கண் முன்னாலேயே சாவி போட்டு அதை இறுக்கமாக மூடினாள்.. சாவியுடன் அறையை விட்டுப் போய் விட்டாள்...
பாலசரஸ்வதியால் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.. என்னதான் முன்புபோல பிறந்தவீடு இல்லையென்று அவள் சொன்னாலும் அதை வெறும் வாய் வார்த்தையாகத்தான் அதுவரை சொல்லி வந்தாள்... முதல் முறையாக.. அவள் சொன்னது நிஜமாகிப் போனபோது.. அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது...
எத்தனை நேரம் அசைவற்று அமர்ந்திருந்தாளோ... அவளுக்கே அது தெரியவில்லை.. சாதனா அவளைத் தேடிவந்து...
"அம்மா.. பாட்டி உங்களை டிபன் சாப்பிட வரச் சொன்னாங்க..." என்று சொன்ன போதுதான் அவளுக்கு உணர்வே மீண்டது..
அவளை அறையில் அமர வைத்துவிட்டு அலட்சியமாக வெளியே போய்விட்ட ராதிகாவின் உதாசினத்தை நினைத்த போது பாலசரஸ்வதியின் ரத்தம் கொதித்தது..
"எனக்கு டிபனும் வேணாம்.. ஒரு மண்ணும் வேணாம்ன்னு போய் சொல்லு.." என்று எரிந்து விழுந்து விட்டு விரைவாக மாடிப்படிகளில் இறங்கினாள்..
அவள் சொன்னதை அப்படியே சாதனா மேகலாவிடம் ஒப்பிக்க மேகலாவை கவலை பிடித்துக் கொண்டது...
"என்னாச்சுன்னு தெரியலையே..." புலம்பியபடி மகளைத் தேடிச் சென்றாள்...
தலைவிரி கோலமாக கட்டிலில் படுத்திருந்த சரஸ்வதியின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன... அதுவரை அதைப் போன்றதொரு கோலத்தில் மகளைப் பார்த்திராத மேகலா அதிர்ந்து விட்டாள்...
"சரசு... என்னடி ஆச்சு...?" பதறியபடி மகளின் அருகே சென்றாள்...
"பேசாதீங்கம்மா... எல்லாம் உங்களாலேதான்..." பாலசரஸ்வதியின் கண்களில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது...
மேகலாவினால் மகளின் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை... ஒற்றைமகளின் கண்களில் சிறு வருத்தம்கூட ஏற்படாமல் வளர்த்திருந்த அந்தத் தாயின் மனம் துடித்தது...
எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டாள்.. பாலசரஸ்வதி என்ன நடந்தது என்று அவளிடம் சொல்லவில்லை... அதே சமயம் கண்ணீர் விடுவதை நிறுத்தவுமில்லை... காபி பலகாரம் சாப்பிட வரவுமில்லை...
செய்வதறியாமல் பாலமுரளிக்கு போன் செய்தாள் மேகலா.. அவனும் உடனே வந்து விட்டான்... நடப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவின் அடிவயிறு ஜில்லிட்டது.. தொண்டைக்குள் கலவரப் பந்து சுற்றுவதை அவள் உணர்ந்தாள்...
'என்ன மாதிரியான கல்யாணம் இது..?'
அவளுக்கு அழவேண்டும் போல இருந்தது... அவள் அழுதால் கேட்க யாரிருக்கிறார்கள்...? சாய்ந்து கொள்ள யார் தோளிருக்கிறது..? என்ற நினைவில் கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டாள்.. தனிமைப் பட்டு விட்ட துயரம் அவள் மனதில் பொங்கியது.. ஏbன்று கேட்க ஆளில்லாமல் அநாதையாகி விட்ட தன்னிரக்கத்தில் அவள் மௌனம் கொண்டாள்...
"என்னம்மா...? எதுக்காக அப்படியொரு போனைப் பண்ணினீங்க..? அக்காவுக்கு என்ன..?" முரளி விசாரித்தான்...
"தெரியலைடா முரளி... அழுதுகிட்டே இருக்கிறாடா... என்னன்னு கேட்டா சொல்வே மாட்டேங்கிறா.." மேகலாவின் கண்களும் கலங்கியிருந்தன...
"என்னது.. அக்கா அழுகுதா..?" முரளியின் புருவங்கள் உயர்ந்தன...
அவன் வேகமாக பாலசரஸ்வதியைத் தேடிச் சென்றான்... தம்பியைக் கண்டதும் அவளின் கண்ணீர் அதிகமானது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -89
அம்மம்மா.. கேளடி தோழி...! -89
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-89.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-89.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy