அம்மம்மா.. கேளடி தோழி...! -83

83 கண்ணுக்குத் தெரியாத ஒர்தளையில் காலம் முழுவதும் பிணைக்கப்பட்டேன் ராதிகாவுக்கு மூச்சு முட்டியது... அந்தச் சூழல் அவளை சிறைபடுத்தி...


83
கண்ணுக்குத் தெரியாத ஒர்தளையில்
காலம் முழுவதும் பிணைக்கப்பட்டேன்

ராதிகாவுக்கு மூச்சு முட்டியது... அந்தச் சூழல் அவளை சிறைபடுத்தியது... இதுதான் என்று அறிந்து வந்தவள்தான்.. அவனோடு வாழும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்று அறிந்திருந்தாலும்.. அவனோடு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழ வந்தவள்தான்.. கட்டிலில் உறவாடவிட்டால் என்ன... அவனுடைய கடைக்கண்பார்வை மட்டும் போதுமென்ற நினைவுடன் அவன் கைபிடித்து வந்தவள்தான்...
இருந்தாலும் அவளால் ஒரளவிற்கு மேல் அவனிடம் பொறுத்தப் போக முடியவில்லை... எவ்வளவுதான் தழைந்து போனாலும் பாலமுரளி எரிந்து விழுந்தான்... இப்படிப் பேசுகிறானே என்று ஒதுங்கிப் போனால் அதிலும் ஒரு குற்றம் கண்டான்...
முன்னால் போனால் கடிப்பதும்.. பின்னால் போனால் உதைப்பதுமாக அவனிருந்தால் அவளும்தான் என்ன செய்வாள்..குட்டக் குட்ட தலையைக் கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் ஒர் அளவு வேண்டாமா..?
ராதிகா அவனை எதிர்த்துப் பேச ஆரம்பித்தாள்... குற்றமே செய்யாதவளை சிலுவையில் அறைந்தால் அவளும் எத்தனை நாள்தான் வலிகளைப் பொறுத்துக் கொண்டிருப்பாள்..உடல் ரணம்கூட நாளடைவில் ஆறிவிடும்.. மணரணம் காலம்காலத்துக்கும் ஆறுமா..மாறுமா...?
வள்ளுவர் பெருந்தகைதான் அழகாக சொல்லியிருக்கிறாரே..
'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் - ஆறாதே
    நாவினால் சுட்ட வடு...என்று
பாலமுரளி நாவினால் அவளைச் சுட்டான்.. அவனை நெருங்கிப் போனால் அதற்கும் ஒன்றைச் சொன்னான்.. விலகிப் போனால் அதற்கும் ஒன்றைச் சொன்னான்...
அவனுடன் போராடிப் போராடி மனம் களைத்துப் போனாள் ராதிகா... ஆனாலும் அவள் பின் வாங்குவதாக இல்லை...
'இது போர்க்களம்...'
இதுவே அவளின் நினைவு... யுத்தகளமாய் வாழ்க்கை ஆகிவிட்ட பின்னாலே புறமுதுகு காட்டி ஓட அவளால் முடியாது...
அவள் போர் முறையை மாற்றிக் கொண்டாளே தவிர... போராட்டத்திலிருந்து பின் வாங்கவில்லை...
ஹால்டிக்கெட் வாங்கவென்று கல்லூரிக்கு அழைத்துச் சென்றவன் அவளை விட்டுவிட்டு...
'ஹாய் அத்தான்...என்று பல்லைக்காட்டிக் கொண்டு வந்த ஷோபாவிடம் ஈஷிக் கொண்டான்...
'அத்தானா..இது எப்போயிருந்து...'
ராதிகாவுக்கு புரியவில்லை... ஷோபா பாலமுரளியை பெயர் சொல்லித்தான் அழைப்பாள்... புதிதாக அவள் அத்தான் முறை கொண்டாடவும் ராதிகாவிற்குள் எரிச்சல் மூண்டது...
அவள்தான் பச்சோந்தி... நேற்று வரை பெயர் சொல்லிக் கூப்பிட்டுவிட்டு இன்று எதிரியின் கழுத்தில் தாலியைக் கட்டியவனை... எதிரியை நோகடிக்கவென்று 'அத்தான்முறை போட்டு அழைத்து வைக்கிறாள் என்றால் இந்த பாலமுரளிக்கு எங்கே போனது புத்தி என்று ராதிகாவிற்கு சுத்தமாக விளங்கவில்லை...
ஷோபா முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டினாள் என்றால் இவன் அந்த முப்பத்தியிரண்டு பற்களோடு ஈறுகளையும் சேர்த்துக் காட்டினான்...
அத்தான் என்றவளிடம் புருவத்தை உயர்த்தாமல்... அவளைப் போலவே
"ஹாய்.. ஷோபா.." என்று 'ஹாய்வேறு போட்டு வைத்தான்...
'இதப்பாருடா.. தேனூத்துக்காரனுக்கு செந்தமிழ் தான் பிடிக்கும்.. இது என்ன புதுசா.. ஹாய்..?'
புதிதாக தோன்றியிருந்த அந்த பந்தத்தைப் பற்றிய ஆராய்ச்சி ராதிகாவின் மனதிலோடிக் கொண்டிருக்க...
"போங்க அத்தான்.. உங்க கூட நான் 'டூ'.. என்று செல்லமாக சிணுங்கினாள் ஷோபா..."
"அடடா.. என் ஷோபாக்குட்டிக்கு அத்தான் மேல அப்படியென்ன கோபமாம்..நீ டூ விட்டால் நானெங்கே போக ஷோபா..?" பாலமுரளி வெகுவாக வருத்தப்பட்டான்...
"சும்மா உடான்ஸெல்லாம் விடாதீங்கத்தான்.. உங்களுக்கு என்மேல கொஞ்சம் கூட ஆசையேயில்லை..."
ஷோபா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள ராதிகாவிற்கு பக்கென்று ஆகிவிட்டது...
ஷோபா அன்பேயில்லை என்று சிணுங்கினால் கூட அவள் பொறுத்துக் கொள்ளுவாள்.. ஆசையேயில்லை என்று சொன்னால் அவளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்..?
அவளுடைய முகம் கடுத்தது... அதை பாலமுரளி கண்டும் காணாதவனைப் போல ஷோபாவிடம் ஜொள்ள வேண்டியதை ஜொள்ளிக்கொண்டிருந்தான்...
"இப்படியெல்லாம் அவசரப்பட்டு நீயாய் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது ஷோபா.. உன்மேல ஆசை வைக்காம அத்தான் யார் மேல ஆசை வைக்கப் போகிறேன்..?"
இதைக்கேட்ட ஷோபாவின் விழிகளில் மின்னிய வெற்றிக் குறியீடை ராதிகாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதே சமயத்தில் அவளது மனக்குமுறலை ஷோபா அறியும்படி வெளிவிடவும் அவள் தயாராக இல்லை...
அவள் முகம் மாறாமல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.. அதை ஷோபாவும் பார்த்தாள்...
"என்ன ராதிகா ஹால் டிக்கெட் வாங்க நேரமாகிருச்சா..நீ வேணும்னா ஹால் டிக்கெட் வாங்கப் போயேன்.. நானும் அத்தானும் ஹாயாய் பேசிக் கொண்டிருக்கோம்..." என்றாள்...
'பேசுவடி பேசுவ... அடுத்தவ புருசனிடம் பல்லைக் காட்டிப் பேசினா உனக்கு ஹாயாய் தான் இருக்கும்.. நீயெல்லாம் ஒரு பிறவி... உன் கூடவும் இந்த மனுசன் நின்று பேசுகிறாரே.. இவரைச் சொல்லனும்...ராதிகா மனம் கொந்தளித்தாள்...
"மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.. வாங்க அத்தான்.. அந்த மரத்தடியில கிடக்கிற பெஞ்சில உட்கார்ந்து பேசலாம்.. அப்படியே இந்த அப்பீயரன்ஸ் பார்க்கில இருக்கிறதைப் போல சூப்பராய் இருக்கில்ல.."
அதுவரை தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த ஷோபா பாலமுரளியின் கையைத் தொட்டுப் பிடித்து இழுத்தாள்...
ராதிகா அதிர்ந்து விட்டாள்.. அவளது பாலமுரளியின் கையின் மேல் அவள் கண்முன்னாலேயே வேறொருத்தியின் விரல்கள் படிவதா..?
உடல் விதிர்க்க.. ஷோபாவின் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தவளை கூர்மையாகப் பார்த்தான் பாலமுரளி...
ஷோபாவின் பிடியிலிருந்து கையை உறுவிக் கொள்ள அவன் முயலவில்லை...
அடுத்த வெற்றிப்பார்வை ஷோபாவிடமிருந்து பறந்து வந்தது... ராதிகா வேக மூச்செடுத்து தன்னைச் சமனப் படுத்திக் கொண்டாள்...
"பேசிட்டா போச்சு... அதுக்கு முன்னாடி இதுக்குப் பதில் சொல்லு... உன்மேல எனக்கு ஆசையேயில்லைன்னு எதை வைச்சு நீ முடிவுக்கு வந்த..?" ராதிகாவைப் பார்த்தபடி ஷோபாவிடம் கேட்டான முரளி...
"நீங்க சென்னைக்கு வந்தவுடனே என்னைப் பார்க்க ஓடி வந்திருக்க வேணாமா..யாரோ போல காலேஜில்தான் நாம ரெண்டு பேரும் பார்த்துக்கனுமா..?" ஷோபா உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்..
"ஓ... அதைச் செல்கிறயா..ஸாரி ஷோபா... நான் கிளம்பனும்னுதான் நினைச்சேன்..."
"அப்புறம் ஏன் வரல..இவ விடலையா..?"
"என்னை யாரும் தடுக்க முடியாது..."
"அதான் எனக்குத் தெரியுமே..."
ஷோபாவின் ஏளனமான பார்வையில் வேறொருத்தியாக இருந்திருந்தால் குன்றிப் போயிருப்பாள்.. ராதிகா அவளது பார்வையை சட்டை செய்யவே இல்லை... நிமிர்ந்து நின்றாள்...
வழக்கம் போலவே அவளின் அந்த நிமிர்வு ஷோபாவுக்கு பெருத்த தோல்வியாக இருந்தது... தலைவலி... வரட்டுமா என்று கேட்க ஆரம்பிக்க.. பல்லைக் கடித்து அதை தற்காலிகமாக துரத்தி விட்டாள்...
'எப்படி நிற்கிறா பாரேன்... இவளுக்கு தாலி கட்டின ஹஸ்பெண்ட் இவ முன்னாலேயே என்மேல ஆசை வைச்சிருக்கேன்னு சொல்கிறான்... இவ அசையாம நெடுமரமா நிற்கிறா... என்னைப் பார்க்க வரனும்னு அவன் நினைச்சா யாரும் அவனை தடுக்க முடியாதுன்னு வேற சொல்கிறான்.. இது அதுக்கும் எனக்கென்னன்னு நிற்கிறாளே... இவளை அசைக்கவே முடியாதா..?'
எப்படியாவது ராதிகாவின் மனதை காயப்படுத்தியே தீர வேண்டும் என்ற வெறியோடிருந்த ஷோபாவிற்கு தெரியாது... ராதிகா ஷோபாவின் முதல் அஸ்திரத்திலேயே மனக்காயப் பட்டு விட்டாள் என்பது...
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் கற்சிலையாக நின்று கொண்டிருந்ததை ஷோபா அறியவில்லை... ஆனால்.. பாலமுரளி அதை அறிந்திருந்தான்...
நொடிப் பொழுதில் ராதிகாவின் கண்களில் வந்து போன வேதனையை உடனே அவன் இனம் கண்டு கொண்டுவிட்டான்... அவன் கண்கள் மின்னின... அவளை புண்படுத்திவிடத் துடித்த மனத்துடிப்பில் அவன் ஷோபாவோடு இணைந்து பேச ஆரம்பித்து விட்டான்...
"என் அத்தான்னா.. அத்தான்தான்... உங்களுக்கும் எனக்கும் நடுவில யாரும் வரமுடியாதுங்கிறப்போ எதுக்காக அத்தான் என் வீட்டில வந்து தங்காம அந்த வீட்டிலே தங்கியிருக்கீங்க..."
இந்த வார்த்தைகளில் முகம் சுளித்தாள் ராதிகா.. என்னவோ பாலமுரளிக்கு இரண்டு வீடுகள் இருப்பதைப்போலவும்... அவன் ஒரு வீட்டுக்குப் போகாமல் இன்னொரு வீட்டிற்கு போய் விட்டதைப் போலவும் ஷோபா பேசிய லட்சணத்தில் அவள் அருவெறுப்பு கொண்டாள்...
'எப்படிப் பேசி வைக்கிறான்னு பாரு... இவளெல்லாம் ஒரு பிறவியா...'
எத்தனை முறைதான் ராதிகாவும் ஷோபாவை பிறவியில்லை என்று நினைத்து வைப்பாள்...?
அவளது கோபம் பெருகிக் கொண்டிருக்க... பாலமுரளி நிதானமாக அவளது கோபத்தை அளவிட்டபடி ஷோபாவின் பேச்சை மதித்துப் பதில் சொன்னான்...
"என்ன ஷோபா செய்கிறது..அந்த வீட்டில் பெண் கட்டியிருக்கேனே..."
பெருத்த வேதனையைப் பகிர்ந்து கொள்பவனைப் போல அவன் சொல்லிய விதத்தில் ஷோபா சந்தோசப் பட்டுப் போனாள்...
அவள் நினைத்ததைப் போலவே பாலமுரளியின் மனதில் வன்மம் புதைந்திருப்பது அவளுக்கு உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல தெளிவாக விளங்கி விட்டது...
இல்லாவிட்டால் அவளை மதித்து நின்று ஒருவார்த்தை பேசியறியாதவன் அன்று 'ஆசை.. தோசை.. அப்பளம்... வடை...என்ற அளவிற்கு நெருக்கமான பேச்சுக்களை பேசிவைப்பானா..?
இதைப் பயன் படுத்திக் கொள்ளாவிட்டால் அவள் ஷோபா இல்லையே...
"அதைச் சொல்லுங்க.. அண்ணியும் இதைச் சொல்லித்தான் தினமும் புலம்புகிறாங்க... எப்படியத்தான் அந்த வீட்டிலே போய் தங்கியிருக்கீங்க..நம்ம ஸ்டேட்டஸீக்கு அங்கேயெல்லாம் போய் நீங்க தங்கலாமா..?"
"த்ச்சு... மறுவீட்டு விருந்தாம்.. அம்மா சொல்லிட்டாங்க... மறுக்க முடியலை.. வந்து தொலைச்சாச்சு..."
"பாவம்தான் அத்தான் நீங்க..."
"என்மேல் பாவப்பட நீயாவது இருக்கியே..."
அவன் ராதிகாவைப் பார்த்தபடியே இதைக் கூற அவள் பல்லைக்கடித்தாள்...
'வேணும்ன்னா... உன்மேல பாவப்பட இன்னும் இரண்டு ஆளை பிடிச்சு விடவா..?' என்று கேட்டு விடலாமா என்று ராதிகாவுக்கு தோன்றியது...
அவளுக்கு ஷோபாவின் மீது கூட கோபம் வரவில்லை... அவள்புத்தி அதுதான் என்று ராதிகாவுக்கு மிக நன்றாகவே தெரியும்...
'இவனுக்கு எங்கே போச்சு புத்தி...இதுதான் அவள் நினைவு...
அவளை அவன் மனதுக்குள் அலற வைப்பதைப் போல... அவனையும் ஒரு ஆட்டு ஆட்டினால் என்ன என்ற நினைவு தோன்ற...
"ஹேய்.. ஹேமா..." என்று தூரத்தில் போய் கொண்டிருந்த ஹேமாவை கை தட்டி அழைத்தாள் ராதிகா...
"ராது..." திரும்பிப் பார்த்த ஹேமாவின் முகம் ஒளிர்ந்தது...
"எப்போடி வந்த...?"
அவள் உற்சாகமாக ராதிகாவின் அருகே வர.. பாலமுரளியின் முகம் கருத்தது... அதை ஜாடையாக பார்த்துக் கொண்டாள் ராதிகா...
"இப்பத்தான் வந்தேன்.. ஏண்டி.. என்னை வரச் சொல்லிட்டு.. நீ திருவாரூர் தேரைப்போல ஆடி அசைஞ்சுக்கிட்டு வர்றியே... இது உனக்கே நல்லாயிருக்கா...?" உரிமையுடன் கோபித்துக் கொண்டாள்...
"ஏய்ய்.. நீ இன்னைக்கு வர்றேன்னு சொன்னியாடி..?"
"அடேங்கப்பா... சொல்லிட்டுத்தான் வரனுமாக்கும்.. இது உனக்கு மட்டும் சொந்தமான காலேஜா...?"
"நீ வேணும்னா பட்டா போட்டுக்க... யாரு வேண்டாம்ன்னு சொன்னது..?"
ராதிகாவைப் போலவே 'பட்டாஎன்ற வார்த்தையை உபயோகித்தார் ஷோபா...
"சொல்லித்தான் பாரேன்..."
"நீ உடனே கேட்டுட்டுத்தான் வேற வேலை பார்ப்ப.. அந்த விளையாட்டுக்கே நான் வர்றதா இல்லை..."
"நீ ஹால் டிக்கெட் வாங்கிட்டியா..?"
"ஆச்சு.. வா.. உனக்கு வாங்கிக்கலாம்.."
"செய்துடலாமா..வா.. போகலாம்..."
"உன் ஹஸ்பெண்ட் நிற்கிறாரே..."
"அவருக்குத்தான் ஷோபா கம்பெனி கொடுத்துக் கிட்டிருக்காளே.. நீ வாடி.. போகலாம்..." ராதிகா ஹேமாவுடன் பேசியபடி நடந்து விட்டாள்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -83
அம்மம்மா.. கேளடி தோழி...! -83
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-83_8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-83_8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy