அம்மம்மா.. கேளடி தோழி...! -81

81 நீ கொடுத்த பந்தம் மட்டும்.. நிரந்தரமாய் நிலைத்து நிற்கும்... "தட்டுத் தடுமாறி நெஞ்சம்..                கை தொட்டு விளைய...


81
நீ கொடுத்த பந்தம் மட்டும்..
நிரந்தரமாய் நிலைத்து நிற்கும்...

"தட்டுத் தடுமாறி நெஞ்சம்..
              கை தொட்டு விளையாடக் கொஞ்சும்..
    சிட்டு முகம் காதல் சொல்லும்..
              கைபட்டு மலர்மேனி துள்ளும்..."
இரவின் அமைதியில் காருக்குள் ஒலித்த பாடல் பாலமுரளியை ஏதோ செய்தது.. அருகினில் பார்த்தான்.. கழுத்தில் புது மஞசள் கயிறு மின்ன ராதிகா தேவதை போல அமர்ந்திருந்தாள்.. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் அவனது நாசியில் நுழைந்து அவன் மனதை மயக்கியது...
மாலையில் அவர்கள் தேனூத்தை விட்டுக் கிளம்பும் போது இந்த மல்லிகைப்பூ மலர்ந்திருக்கவில்லை என்பதை நினைவு கூர்ந்தான் பாலமுரளி...
அப்போது அவை மொட்டுக்களாக இருந்தன.. நெருக்கித் தொடுக்கப் பட்ட மல்லிகைச் சரத்தை அவன்  வீட்டில் வேலை செய்யும் மீனாட்சி கொண்டு வந்து கொடுத்த போது.. அவனைப் பார்த்தபடியே பூவை வாங்கி தனது தலையில் ராதிகா வைத்துக் கொண்டதை தேவையில்லாமல் நினைத்துப் பார்த்தான் பாலமுரளி...
எதற்காக இந்த நினைவு கூர்தல்கள் என்று அவனுக்கே பிடிபடவில்லை.. அப்படி நினைத்துப் பார்க்குமளவிற்கு அந்த நிகழ்வுகளில் எந்த ஒரு முக்கியத்துவமும் இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றவில்லை...
இருந்தும் அவன் நினைவுகூர்ந்தான்...
இப்போதெல்லாம் இப்படித்தான் அவன் ஆகிவிடுகிறான்... ஒவ்வொரு தருணங்களிலும் அவளிடமிருந்து வெளிப்படும் பல்வேறு பார்வைகளை படம்பிடித்து அவன் இதயத்திற்குள் பதுக்கி வைத்துக் கொள்கிறான்.. அவள் சிந்துகின்ற சிரிப்பொலிகளையும்... பேச்சுக்களையும் வேலையில் இருக்கும் போதும் நினைத்துக் கொள்கிறான்...
'சை.. இவள் ஒரு மோகினிப் பிசாசு...'
அவனுக்கு ஆயாசமாக இருந்தது... இந்த மறுவீட்டு விருந்தைப் புறக்கணிக்க ஆனமட்டுக்கும் அவன் முயன்று பார்த்து விட்டான்.. மேகலாவிடம் அவனது பிடிவாதம் எடுபடவில்லை...
"இதப் பாருடா தம்பி... பொண்ணைப் பெத்தவங்க மனசு நொந்தா அது நம்மைத்தான் பாதிக்கும்... ஆனானப்பட்ட ராஜாவா இருந்தாலும்.. பொண்ணைப் பெத்தவங்களை மதிச்சுத்தான் ஆகனும்.. நீ மறுவீட்டு விருந்துக்கு போறேன்னா... போறேதான்..."
இருந்தும் அவன் இழுத்தடித்தான்.. அதிகாலையில் கிளம்ப வேண்டிய பயணத்தை மாலைவரைதான் அவனால் தள்ளிப் போட முடிந்தது.. அதற்கு மேலும் தாமதித்தால் மேகலாவிடம் பாட்டு வாங்க முடியாது என்ற ஒரே காரணத்துக்காக கிளம்ப மனமில்லாமல் கிளம்பினான்...
ஊரை விட்டுக் கார் கடக்கும்வரை நகர்ந்து அமர்ந்திருந்த ராதிகா.. அதற்குப் பின்னால் இயல்பாக சரித்து அமர... அவளது கை அவன் கைமேல் உராய்ந்து வைத்தது.. அவன் கிளர்ந்தான்...
"ஏய்ய்.. தள்ளி உட்காருடி..."
பொறுக்கமுடியாமல் அவன் எரிந்துவிழ.. அவள் சண்டைக் கோழியானாள்...
"ஏன் தள்ளி உட்காரனும்..? எதுக்குத் தள்ளி உட்காரனும்..? நல்ல கொடுமையாய் இருக்கே.. மணிக்கணக்கில் டிராவல் பண்ணனும்.. என்னால ஒடுங்கி ஓரமாய் உட்காரவெல்லாம் முடியாது.. வேணும்ன்னா சொல்லுங்க.. நான் பின் சீட்டுக்கு போயிடறேன்.. ஹாய்யா உட்கார்ந்துக்கிட்டும் வரலாம்.. தூக்கம் வந்தா அப்படியே படுத்து தூங்கிக்கவும் தோதாப் போச்சு.. காரை நிறுத்துங்க... நான் பின் சீட்டுக்கு மாறிக்கறேன்.."
அதற்கு அனுமதிக்கவும் பாலமுரளியால் முடியவில்லை...
'மகராணி பின்சீட்டில ஹாயாய் உட்கார்ந்துக்கிட்டு வருவாளாம்... நான் இவளுக்கு டிரைவர் வேலை பார்க்கனுமாம்... இவ மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கா..?'
"காரை நிறுத்தச் சொன்னேன்..."
"அப்படியே ஓங்கி ஒரு அப்பு அப்பினேன்னு வைய்யி.. சென்னையிலே போயித்தான் விழுவ.. அடங்கி உட்காருடி.."
"அதான் என்னால முடியாதுன்னு சொல்லிட்டேனே.."
"எப்படியோ உட்கார்ந்து தொலைடி.. எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கயே..."
அவன் எரிச்சலுடன் சொல்ல.. அவள் கிடைத்தது வாய்ப்பென்று அவன் தோளோரமாக தலையைச் சரித்துக் கொண்டாள்...
ஜன்னல் கதவுகள் பூட்டிய ஏஸி காருக்குள் வெயியேற மடியாத மல்லிகையின் நறுமணம் சூழ்ந்து கொள்ள அவன் கிறங்கிப் போனான்..
நேரம் செல்லச் செல்ல... மொட்டாக இருந்த மல்லிகை மலர்கள் மலர்ந்து விரிந்து மணம் பரப்ப ஆரம்பித்தன.. அவற்றின் நறுமணத்தை நுகர்ந்த பாலமுரளிக்கு கிறக்கம் அதிகமானது.. தள்ளி உட்கார முடியாது என்று அடம் பிடித்த ராதிகா ஒட்டி உராய ஆரம்பிக்க... பாலமுரளியின் மனக் கட்டுப்பாடு.. இருக்கவா இல்லை பறக்கவா என்று கேட்டு அவனை அச்சுறுத்திக் கொண்டிருந்தது...
நான்கு வழிச்சாலையின் இரவு நேரத் தோற்றம் ஒரு பூங்காவில் வலம் வருவதைப் போல கார் விளக்குகளின் ஒளிர்வில் தெரிய... இதமான ஒரு இம்சை பாலமுரளியை படுத்தி எடுக்க ஆரம்பித்தது...
அந்த இரவு நேரக் கார் பயணம் அவனை சோதிக்க ஆரம்பிக்கும் என்று அவன் அறியாமல் போய்விட்டான்...
இதைப் பற்றிக் கொஞ்சமேனும் தெரிந்திருந்தால் கூட.. அவன் பகலில் பறந்து போயிருப்பான்...
காருக்குள் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில் ராதிகாவின் வடிவம் போதையூட்டுவதாக அமைந்திருந்தது... அவளின் நெருக்கம் தந்த கிறக்கம் அவன் மனதை மயக்கியது...
'இந்த மோகினியைப் பக்கத்தில வைச்சுக்கிட்டு... ராப்பயணம் கிளம்பிட்டேனே.. என்னைப் போல ஒரு மடையன் எங்காவது இருப்பானா..?'
அவனுக்கு சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது...
சும்மாவே அவளைக் கண்டால் அவன் கைகள் பரபரக்கும்.. இந்த லட்சணத்தில் இப்படி பூவாசத்துடன் அவள் ஒட்டி உராய்ந்தால் அவன் பாவம்.. என்னதான் செய்வான்...?
'இந்த நினைப்பு கொஞ்சமாவது இவளுக்கு இருக்கா..?'
அவனுக்கு கோபம்.. கோபமாக வந்தது...
அவர்களைச் சூழ்ந்திருந்த மௌனம்... மயக்கத்தை அதிகப்படுத்துவதைப் போலத் தோன்றி வைக்க.. அவன் அதை உடைக்க விரும்பியவனாகத்தான் பாடலை ஒலிக்க விட்டான்...
அந்தப் பாடலும் சேர்ந்து அவனைச் சோதிக்கும் என்று சத்தியமாக அவன் நினைத்தும் பார்த்திருக்கவில்லை...
"தட்டுத் தடுமாறி நெஞ்சம்..." என்று பாடல் ஆரம்பித்த போதே...
'போச்சுடா...' என்று மானசீகமாக தலையில் கைவைத்துக் கொண்டான் பாலமுரளி...
"இந்தப் பாட்டு இங்கே எப்படி வந்துச்சு...?" அவன் கோபப்பட..
"நான்தான் எனக்குப் பிடிச்ச பாட்டுக்களாய் பதிஞ்சு வைச்ச சிடியை காருக்குள் போட்டு வைச்சேன்..." என்று பதில் சொன்னாள் ராதிகா..
"யாரைக் கேட்டுடி போட்ட..?"
அவன் ஆவேசப்பட்டான்.. எதற்காக இந்த அளவுக்கு அவன் கொதிக்கிறான் என்ற காரணம் புரியாமல் அவனை விசித்திரமாகப் பார்த்து வைத்தாள் ராதிகா...
அவளது பார்வையைக் கண்டவன் உதடுகளைக் கடித்துக் கொண்டு சாலையில் கவனமானான்...
    "எனக்காக வா...
             நான்.. உனக்காக வா...
        என்னைக் காண வா..
             என்னில் உன்னைக்காண
        வா.. வாவா.. எனக்காக வா..."
முதல் பாடல் முடிந்து விட்டது என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் அடுத்த பாடலில் அரண்டே போனான்...
ராதிகா வேறு அவனுடைய நிலைமை புரியாதவளாக பாடலுடன் கூடச் சேர்ந்து பாடி வைத்தாள்.. பாடலை ரசித்து அவள் பாடிய வரிகள் அவனையே 'வா.. வா...' என்று அழைப்பதைப் போல இருக்க அவன் உடல் சூடேறியது...
"ஏய்ய்.. வாயை வைச்சுக்கிட்டு சும்மா வரமாட்டியா..?" அவன் உஷ்ணமானான்...
"ஹலோ.. நான் ஏதும் உங்ககிட்ட பேச்சு வைச்சுக் கிட்டேனா..?" அவள் சண்டைக்குத் தயாரானாள்...
"அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்.. படவா ராஸ்கல்.. ஹலோவாம் ஹலோ... தெருவில் போகிறவனையாடி கூப்பிடுகிற...?"
காரணம் சொல்ல முடியாமல் கிளர்ந்தெழுந்த கோபத்துடன் அவளை அதட்டினான் பாலமுரளி...
"தப்புத்தான் அத்தான்... இது பேச்சு... இப்படிச் சொன்னா கேட்டுக்கறேன்.. இத விட்டுட்டு வாயை மூடுடின்னா.. என்னால அது முடியுமா..? அதுக்குப் பதிலா நாலு அடியைப் போடுங்க.. வாங்கிக்கறேன்..."
"அதானே... உன் வாயை மூடச் சொன்னால் உன்னால அது முடியாதுதான்... உனக்கு அது கஷ்டமான வேலைதான்..."
அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. காரை ஓட்டிக் கொண்டே பக்கவாட்டில் அவளைத் திரும்பிப் பார்த்து அவன் சிரித்த சிரிப்பில் அவள் மயங்கிப் போனாள்...
அவன் மீதிருந்த வந்த அவனுக்கே உரித்தான நறுமணத்தில் அவள் மனம் சரிந்தது... அவன் தோள் தொட்டுத் தழுவி.. அவன் முகமெங்கும் முத்தமிட வேண்டும் போன்ற ஆவேசப் பேரலையொன்று அவள் மனதில் ஓங்கி எழவும் அவள் தடுமாறிப் போனாள்...
    "பொன்மேனி  தழுவாமல்
             பெண் இன்பம் அறியாமல்
       போக வேண்டுமா..?
             கண்ணோடு கண்சேர...
       உன்னோடு நான்சேர
             தூது வேண்டுமா..?"
அவள் மனதைப் படித்ததைப் போல பாடல் ஒலிக்க.. அவள் கண்களில் இறைஞ்சுதலுடன் அவன் முகத்தைப் பார்த்தாள்...
அதே நொடியில் அவளைப் பார்த்தவனின் கண்களில் மின்னல் வந்தது.. காரை சட்டென்று நிறுத்தி விட்டான்.. பின்னால் வந்த கார்... கணப்பொழுதில் விலகிப் பறக்க.. அந்தக் காரில் போனவன் ஜன்னல் வழி எட்டிப் பார்த்து திட்டிய வார்த்தைகள் காற்றில் கரைந்தன...
       "பொன்  மாங்கல்யம்..
               வண்ணப் பூச்சரம்...
        மஞ்சள் குங்குமம்..
               என்றும் நீ தந்தது..."
மாறிய பாடலின் வரிகளில் அவள் மனம் கசிந்தாள்.. கழுத்தில் கிடந்த தாலிச் சரட்டை கைகளில் ஏந்திப் பார்த்தாள்...
'இது இவன் கட்டிய தாலி... இவன் என் புருசன்.. இருந்தும் இவன் தள்ளி நிற்கிறான்... இவனுக்கு உரிமை இல்லாதபோது அத்துமீறி என்னைத் தொட்டான்.. இப்போது இவனுக்கே இவனுக்கென்று நான் உரிமைப் பொருளாகிய பின்பு என்னை விட்டு விலகி நிற்கிறான்...'
அவள் மனம் துக்கத்தில் தோய்ந்தது... அந்தத் துக்கம் அவள் விழிகளிலும் பிரதிபலிக்க... தாள முடியாத தவிப்புடன் அவன் தோள் மீது முகம் புதைத்து விம்மினாள்...
"முரளி"
அந்த ஒர் அழைப்பில் அவனது உயிர் துடித்தது.. எல்லையில்லாத ஓர் உணர்வை உணர்த்திய அந்தக்குரல் எழுப்பிய அதிர்வில் அவன் மனம் சிக்கித் தவித்தது...
"என்னை அப்படிக் கூப்பிடாதே..." அவன் மனம் குமுறினான்...
"முரளி..." அவள் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினாள்...
"அப்படிக் கூப்பிடாதேன்னு சொல்றேனில்ல.. நீ பெயர்... சொல்லிக் கூப்பிட்டாலே அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்ட அந்த நிமிசம் தாண்டி என் கண்முன்னால் வந்து நிற்குது..."
"கடவுளே..." அவள் அதிர்ந்து வாய் பொத்தினாள்...
"அவரை ஏண்டி கூப்பிடறே... அவருக்கு இருக்குடி ஆயிரம் வேலை... நீ கூப்பிட்டவுடனே ஓடிவர அவர் என்ன வேலை வெட்டி இல்லாத ஆளா..? கடவுள்டி.."
"நான் சொல்கிறதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க மாட்டிங்களா..? அன்றைக்கு நடந்ததே வேறு..." ராதிகா விளக்கம் சொல்ல முயன்றாள்...
"பொய் சொல்லாதே... எனக்கு அது பிடிக்காது.." அவன் முகத்தில் இளக்கம் மறைந்து கடினம் மீண்டிருந்தது...
"எனக்கும் அது பிடிக்காது.. வரவும் வராது..." ராதிகா ரோசத்துடன் சொன்னாள்...
"வராததை ஏன் செய்ய நினைக்கிற..?" அவன் காரைக் கிளப்பினான் சற்றுமுன் அவர்களுக்கு இடையே தோன்றியிருந்த இனிய உணர்வலைகள் கலைந்து மறைந்து போயிருந்தன.. அவனது விலகலில் மனம் குமுறியவளாக ராதிகாவும் விலகி அமர்ந்தாள்.. ரோசத்துடன அவள் நகர்ந்து கொண்டதில் அவனது கோபம் இன்னமும் அதிகரிக்கத்தான் செய்தது...
 "நீயோ.. நானோ.. யார்நிலவே...!
    இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே...!"
காருக்குள் பாடல் ஒலிக்க.. வட்ட நிலா வானில் எழுந்து.. நின்றது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -81
அம்மம்மா.. கேளடி தோழி...! -81
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-81.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-81.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy