அம்மம்மா.. கேளடி தோழி...! -80

80 உன்மீது   ஆசை   வைத்தேன்.. வேறுஎன்ன தீமை செய்தேன்... ? பாலமுரளி சாப்பிட்டுக் கொண்டிருக்க... அவன் முகம் பார்த்துப் பறிமாறிக் கொ...


80
உன்மீது  ஆசை  வைத்தேன்..
வேறுஎன்ன தீமை செய்தேன்...?

பாலமுரளி சாப்பிட்டுக் கொண்டிருக்க... அவன் முகம் பார்த்துப் பறிமாறிக் கொண்டிருந்தாள் ராதிகா... அதைப் பார்க்க வெகு பாந்தமாக இருந்தது மேகலாவிற்கு.. அவள் மல்லுககட்டினாலும் சாப்பிட வராத மகன்.. மருமகளின் ஒருவார்த்தையில் சாப்பிட வந்து விட்டதில் அவள் மகிழ்ந்து போயிருந்தாள்...
சாப்பிட்டு முடிந்ததும்.. அவன் கிளம்ப முனைய.. ராஜேஸ்வரி கிருஷ்ணமூர்த்தியின் முகம் பார்த்தாள்.. அவர் அவசரமாக...
"மாப்பிள்ளை..." என்றார்...
"சொல்லுங்க மாமா..." அவன் நின்று விட்டான்...
"மறுவீட்டு விருந்துக்கு நீங்க எப்ப வருவீங்கன்னு சொன்னால் தேவலாம்.. நாங்க இப்ப ஊருக்கு கிளம்பி விடுவோம்.. நீங்க உங்களுக்கு வசதிப்பட்ட நாளைச் சொன்னால்.. அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ண ஆரம்பிச்சிருவோம்..."
"அப்படியா..?"
அவன் தாடையைத் தடவியபடி யோசிக்க ஆரம்பித்தான்.. அவனைவிட படுவேகமாக யோசிக்க ஆரம்பித்தாள் பாலசரஸ்வதி...
"டேய் முரளி.. நீ முதலில் என்வீட்டு விருந்துக்கு வா.. மறுவீட்டு விருந்துக்கு போகிறதைப்பத்தி அப்புறமாய் யோசிக்கலாம்.." என்று ஒரு வெடியைப் பற்ற வைத்து தூக்கியெறிந்தாள்...
"என்னது.." சண்டைக்கோழியாய் சிலிர்த்தெழுந்தாள் ராஜேஸ்வரி...
"இதோ பாருங்கண்ணி... எந்த வீட்டிலயும் இப்படி நான் கேள்விப்பட்டதில்லை... புதிசா கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்ணும் மாப்பிள்ளையும் போகிற முதல் விருந்து மறுவீட்டு விருந்துதான்.. மத்த விருந்தெல்லாம் இதுக்கு அப்புறம்தான்.."
"அதெப்படி... நான் இந்த வீட்டில் பிறந்தவ... என்தம்பி என்வீட்டுக்குத்தான் முதல் விருந்துக்கு வரனும்..."
"பொண்ணு வீட்டுக்குத்தானே மறுவீட்டு விருந்துக்கு வரனும்.. இதுதான் உலகவழக்கம்..."
"வழக்கப்படிதான் இங்கே எல்லாம் நடக்குதா..?"
"வழக்கம் மாறி என்வீட்டில எதுவும் நடக்கல..."
"என்னடா முரளி பதில் சொல்லாம நிற்கிற.. என் வீட்டு விருந்துக்கு வரப்போறியா.. இல்லையா..?"
"என்னண்ணி பேசாம இருக்கீங்க.. என் மகளையும்.. மருமகனையும் மறுவீட்டு விருந்துக்கு அனுப்பப் போறிங்களா இல்லையா..?"
சுற்றி நின்ற உறவினர்களைப் பற்றி லட்சியமே செய்யாமல் அவர்கள் இருவரும் மோதிக் கொண்டிருக்க.. என்னவோ.. காலைநேர திரைப்படக் காட்சியை ரசிப்பதைப் போல.. உறவினர்கள் அதை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார்கள்...
மேகலா மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு.. அவள் வழக்கப்படி மருமகனை கெஞ்சுதலாகப் பார்த்தாள்...
'கவலைப் படாதீங்க...' என்ற அபயப் பார்வை பார்த்தபடியே ராஜராஜன் உடனடியாக உதவிக்கரம் நீட்டினான்...
"சரஸ்.. நீ பாட்டுக்கு உன் தம்பியை விருந்துக்கு வரச்சொல்லி அழைக்கிறயே.. இதைப்பற்றி ஒருவார்த்தை அப்பா.. அம்மாவிடம் கேட்க வேண்டாமா...?"
"அது.. அதுவந்து..." தடுமாறிப் போனாள் பாலசரஸ்வதி...
அவள் மாமனார்.. மாமியார் மெச்சிய மருமகள்... இதுவரை அவர்களைக் கலந்து கொள்ளாமல் குடும்ப சம்பந்தமான எந்த ஒரு முடிவையும் அவள் எடுத்தது கிடையாது...
"அவங்க ரெண்டு பேரும் ஊருக்குப் போயிருக்காங்க.. நேத்து இங்கே கல்யாணம் முடிந்தவுடன் அதைப்பத்தி நம்மகிட்ட சொல்லிட்டுத்தானே போனாங்க...?"
"ஆ.. ஆமாமாம்..."
"அப்புறம் எப்படி.. இப்படியொரு பிளானைப் போடுகிற..? அவங்க வீட்டில இல்லாதப்போ உன் தம்பி விருந்துக்கு வந்துட்டுப் போனா அவங்க என்ன நினைப்பாங்கன்னு ஒரு நிமிசம் யோசனை பண்ணினயா..?"
"அதில்லைங்க..."
"இப்போ என்ன பண்றதாக உத்தேசம்.. அவங்க இல்லாதப்ப உன்தம்பிக்கு விருந்து கொடுத்திரலாமா..?"
"நான் அப்படிச் சொல்வேனா..? அவங்க இல்லாம விருந்தா..? நடக்கவே நடக்காது..."
"அப்போக் கிளம்பு.. ஊருக்குப் போய் சேரலாம்.. அப்பா.. அம்மா.. வந்த பின்னாலே உன் தம்பியை அவங்களே விருந்துக்கு அழைப்பாங்க.. அதுதான் முறை.."
பாலசரஸ்வதி அடங்கிப்போய் விட்டாள்.. ராஜராஜன் அங்கிருந்து அகல.. அவசரமாக அவனைப் பின் தொடர்ந்தாள்.. பெரிதாக வெடிக்க வேண்டிய வெடி புஸ்வாணமாகிப் போனதில் சூழ்ந்திருந்த உறவினர்களுக்கு மகா வருத்தம்...
பாலமுரளி அப்போதும் தாடையைத் தடவிக் கொண்டிருக்க மேகலாவிற்கு கோபம் வந்து விட்டது...
"ஏன் தம்பி.. இப்பத்தான் ஒரு வழியாய் உன் அக்கா மலையிறங்கி போயிருக்கா.. அடுத்து யாரு போட்டிக்கு வருவாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கியா..?"
"அதில்லைம்மா.. இங்கே வேலை நிறைய இருக்கு.."
"அதுக்கு..? மறுவீட்டு விருந்தை தள்ளிப் போடலாம்கிறியா..?"
"என்னம்மா... நீங்களே என் நிலைமையை புரிஞ்சுக்காம பேசறிங்க..."
"நீதான் உலகவழக்கத்தை புரிஞ்சுக்காம பேசிக்கிட்டு நிக்கிற.. கல்யாணம் பண்ணின கையோட உன் வீட்டில வந்து இறங்கியிருக்கயே... இதைப்போல அந்தப் பொண்ணு வீட்டிலயும் கால் பதிச்சுட்டு திரும்பி வரனும்கிற நினைப்பு உனக்கில்லாம போயிருச்சா..? வேலை அதிகமிருக்குன்னு தாலிகட்டற முகூர்த்த நேரத்தை நீ தள்ளி வைச்சியா..?"
"எதுக்கும்மா கோபப் படறிங்க..?"
"வேற என்னத்தை செய்யச் சொல்ற...? பொண்ணைக் கொடுத்தவங்க வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்கு போயிட்டு வர இம்புட்டு யோசனையா..? அது உன் கடமைப்பா... அதைத் தள்ளிப் போடப் பார்க்கறியே.."
"இங்கே வேலை.. தலைக்கு மேல கிடக்குதும்மா..."
"தள்ளிப் போடு..."
மேகலாவின் கண்டிப்பில் இரண்டு தினங்கள் கழித்து மறுவீட்டு விருந்திற்கு வருவதாக கிருஷ்ண மூர்த்தியிடம் சொல்லி விட்டான் பாலமுரளி...
அவன் கிளம்பிப் போன பின்னால் கிருஷ்ண மூர்த்தியின் குடும்பமும் சென்னைக்கு கிளம்பியது... மறுவீட்டு விருந்திற்கு வருவதில் இவ்வளவு தயக்கம் காட்டும் மருமகனிடம் ராஜேஸ்வரிக்கு கோபம் ஏற்பட்டது... அதோடு.. மறுவீட்டு விருந்தைத் தள்ளி வைத்து விட்டு.. தன் வீட்டு விருந்துக்கு வரும்படி பாலசரஸ்வதி அழைத்ததையும் அவள் மறக்கத்தயாராக இல்லை...
"என் பொண்ணு ஆசைப்பட்டான்னுதான் உங்க வீட்டிலே பொண்ணு கொடுத்தோம் அண்ணி.. மத்தபடி கல்யாணத்துக்கு முன்னாலே மாப்பிள்ளை வீட்டைப் பார்க்கக்கூட நாங்க வரலை.. இருக்கலாம்... நீங்க ஊராள்கிற ராஜாவாய்கூட இருக்கலாம்.. இந்த தென்காசி கீமையிலே கொடிகட்டிப் பறக்கிற பரம்பரைப் பணக்காரங்களா இருக்கலாம்.. எங்களுக்கு அது பெரிசில்லை... எங்க மதிப்பும் மரியாதையும் மட்டும்தான் எங்களுக்குப் பெரிசு.." என்று மேகலாவிடம் பொரிந்து தள்ளி விட்டாள்...
"ராஜி..." கிருஷ்ணமூர்த்தி அதட்ட...
"பேசட்டும்தம்பி..." என்று சொல்லி விட்டாள் மேகலா..
கிருஷ்ணமூர்த்தியை விட அவள் வயதில் மூத்தவள் என்பதால் இயல்பாக அவளை 'அக்கா' என்று கிருஷ்ண மூர்த்தி அழைக்க ஆரம்பித்திருந்தார்...
அவளும் கிருஷ்ணமூர்த்தியை தம்பி என்றும்.. ராஜேஸ்வரியை பெயர் சொல்லியும் அழைப்பாள்...
"ராஜி கோபப் படறதிலயும் ஒரு நியாயம் இருக்கேப்பா.. மறுவீட்டு விருந்துக்கு அழைக்கிறது வெறும் சம்பிரதாயம்தான்.. மத்தபடி அதுவும் கல்யாணக் கடமைகளில ஒன்னாச்சேப்பா.. என்னவோ.. என் பொண்ணுக்கு புத்தியில்லாம போச்சு..."
"அதுக்கா புத்தியில்ல..? அது நிறைய இருக்கப் போய்த்தான் இப்படி குதர்க்கமா நினைக்கத் தோணுது அண்ணி..."
"அவ புத்தியை நீதான் மெச்சிக்கனும் ராஜி... யாராவது ஒற்றை உடன்பிறப்பு கல்யாணத்தில வந்து இப்படி ரகளை பண்ணுவாங்களா..? இவ பண்றாளே.. இவ பேச்சையெல்லாம் நீ பெரிசா எடுத்துக்கக் கூடாது ராஜி..."
"உங்க மக பேச்சைத்தான் புத்தியில்லாத பேச்சுன்னு சொல்லிட்டிங்க.. உங்க மகன் பேச்சை என்னன்னு சொல்லப் போறிங்க...?"
"வேலையிருக்கிறவன் பேச்சுன்னு சொல்லுவேன்.. அவனுக்கு மூச்சு விடநேரமில்லை... அதுக்காக உலக வழக்கத்தை தள்ளிப் போட முடியுமா..? அதான் நான் சொன்னதும் கேட்டுக்கிட்டானே..."
"இதுக்கு இவ்வளவு தூரம் சொல்லனுமான்னு தான் நான் கேட்கிறேன்..."
"விடுராஜி... அறியாம பேசின பேச்சை.. நாம பெரிய மனுசங்க பெரிசு பண்ணக்கூடாது..."
மேகலா தழைந்துதான் பேசினாள்.. ராஜேஸ்வரியின் மனம் கோணாமல் இதமாகத்தான் பேசினாள்.. மருமகளைப் பெற்றவர்கள் மனம் கோணினால்.. அது மருமகளிடமும் எதிரொலிக்கும் என்பதை புரிந்தவளாகத் தான் பேசினாள்...
அவளின் இதமான அணுகுமுறைக்கு நல்ல பலன் இருந்தது.. ராஜேஸ்வரி கோபம் தணிந்தவளாக கிளம்பிச் சொன்றாள்..
ராதிகாவிற்கு மாமியாரின்மீது பற்றும்.. பாசமும் தோன்றியது.. இப்படிப்பட்ட மாமியார் கிடைக்க தான் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்... பெற்றவர்கள் கிளம்பிப் போனதும் மாமியாரிடம் தயக்கத்துடன் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்...
"அம்மா நல்லவங்கதான் அத்தை..."
அவள் மென்று விழுங்க அவளை இதமாகப் பார்த்துப் புன்னகைத்தாள் மேகலா...
"நான் இல்லைன்னு சொன்னேனா..? ராஜியின் குணத்துக்கென்ன குறை.. அது தங்கமாச்சே..."
"படபடன்னு பேசிருவாங்களே தவிர.. அவங்க மனசில எதுவும் இருக்காது..."
"இதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனுமா..? எனக்கே அது தெரியுமே..."
"அண்ணி மேலயும் அவங்க கோபப் படலை..."
"கோபப் பட்டாலும் தப்பில்லைம்மா.. ஆயிரம் தான் இருந்தாலும் ராஜி பெண்ணைப் பெற்றது இல்லையா.. மறுவீட்டு விருந்துக்கு போட்டியா.. மகளோட நாத்தனாரும் விருந்துக்கு அழைச்சா.. அதுக்கு கோபம் வரத்தானே செய்யும்..?"
"அத்தை..."
சொல்ல நினைத்ததை சொல்ல முடியாமல் தவித்தாள் ராதிகா.. மேகலாவிற்கு மருமகளின் மனம் புரிந்தது.. அவளது தவிப்பை இனம் கண்டு கொண்டவளாக பரிவுடன் மருமகளின் தலையை வருடிக் கொடுத்தாள்...
"அம்மாடி..! நீ எதுக்காக இதுக்குப் போயி இம்புட்டுத்தூரத்துக்கு விளக்கம் சொல்ற..? இது நம்ம வீடும்மா.. நான் உனக்கு அம்மான்னு நினைச்சுக்க.. வேத்து மனுசங்ககிட்டத்தான் வேற்றுமை பாராட்டனும்... விளக்கம் சொல்லனும்.. நமக்குள்ள எதுக்கும்மா விளக்கம் வரனும்..?"
"அத்தை...!" ராதிகாவின் மனம் நெகிழ்ந்து விட்டது...
"ராஜியை உன் அம்மாவா நினைச்சு.. என்னை உன் மாமியாராய் நினைச்சாத்தான் உனக்கு சங்கடம் வரும்.. என்னையும் உன் அம்மாவாய் நினைச்சுப்பாரு... நமக்குள்ள என்ன இருக்குன்னு சங்கடமெல்லாம் விலகி ஓடிடும்.. இது உன் வீடு ராதிகா.. எனக்குப் பின்னாலே நீதான் இந்த வீட்டையும்.. குடும்பத்தையும் கட்டிக் காப்பாத்தப் போகிறவ..."
"அத்தை.." ராதிகாவின் கண்கள் கசிந்துவிட்டன...
"பாலசரஸ்வதி கோபக்காரிதான்.. ஆனாலும்.. இந்த வீட்டில் பிறந்தவ.. அந்த நினைப்பு உன் மனசில இருக்கனும்..."
"இருக்கும் அத்தை.. எப்பவும் இருக்கும்..."
"எனக்குப் பின்னாலே அவளுக்கு 'தாய்வீடு' இல்லைன்னு ஆகிறக்கூடாது..."
"இப்படிச் சொல்லாதீங்க அத்தை..."
"இல்லைம்மா.. அவ விவரமில்லாம வார்த்தைகளைக் கொட்டிக்கிட்டு இருக்கா... இன்னைக்கு கொட்டறதை அள்ளவும் முடியாது.. அது விதையாய் மாறி நாளைக்கு விளைஞ்சு நின்னா அதை அறுக்கவும் முடியாது.. விவரமில்லாதவளுக்கு அது புரியலை.."
ராதிகாவிற்கு புரிந்தது.. இன்று பாலசரஸ்வதி பேசும் பேச்சுக்களையும் செய்யும் செய்கைகளையும் ராதிகா மனதில் வைத்துக் கொண்டால் பிற்காலத்தில் அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடும் என்று மேகலா சொல்கிறாள்...
"அத்தை.. நினைக்கிறதுக்கு ஆயிரம் நல்ல விசயங்கள் இருக்கு... அதை விட்டுட்டு இதையெல்லாம் மனதில நிணைத்துக்கிற ஆள் நானில்லை.. அண்ணிக்கு என்ன காரணத்தினாலேயோ.. என்னைப் பிடிக்கல.. அதுக்காக அவங்களை எனக்குப் பிடிக்காம போயிருமா..?"
"அவ அப்படியெல்லாம் யாரையும் வெறுக்கிற ரகமில்லைம்மா..."
"எனக்கும் அது தெரியுது..."
"அவளுக்கு என் காலத்துக்கு பின்னாலேயும் தாய்வீட்டுப் பாசம் நிலைத்திருக்கனும்கிற எண்ணம்..."
"அதில தப்பில்லையே..."
"அதனால.. அவளோட சின்ன மாமியா மகளை முரளிக்கு கட்டி வைக்கனும்னு ஆசைப்பட்டா..."
"ஓ..."
"அது நடக்கலைங்கிறதில அவளுக்கு ஒரு ஏமாத்தம்.. அதனால இப்படியெல்லாம் நடந்துக்கிறா.. நீ எதையும் மனசில வைத்துக்காதே...."
"என்னத்தை இது.. அவங்க யாரு..? என் அண்ணி..! அவங்கமேல நான் கோபம் வைச்சுக்கிறதா..? முடிஞ்சா அவங்களுக்கு என்மேல இருக்கிற கோபத்தை மாற்றத்தான் நான் டிரை பண்ணுவேன்.. பதிலுக்கு கோபம் காட்டமாட்டேன்..."
"உன்னை அப்படியிருக்கச் சொல்லலை ராதிகா.. உனக்குக் கோபம் வந்தா பதிலுக்கு நீயும் உன்னோட கோபத்தை கொட்டு.. ஆனா.. அவமேல வெறுப்பை மட்டும் காட்டிடாதேம்மா..."
"இதை நீங்க சொல்லனுமா அத்தை..."
ராதிகாவின் முகத்தில் தெரிந்த பாசத்தில் மேகலா மனம் நிறைந்து விட்டாள்...
உறவுகள் என்பது பாசத்தால் பிணைக்கப் பட்டவை.. நீரடித்து நீர் விலகுவதில்லை.. அதைப்போல.. சண்டைகளும்.. சச்சரவுகளும் உறவுகளை பிரித்துவிட முடியாது... அப்படிப் பிரிந்தால் அது உண்மையான உறவாக இருக்காது...
கோபம் வருகிறதா கொட்டு.. ஆனால் வெறுப்பைக் காட்டிவிடாதே என்று சொன்னாளே மேகலா... அந்தச் சொல் கோடியில் ஒரு சொல்லல்லவா..! எதைச் செய்தேனும் அமைதியைக் காப்போம் என்று பாரதத்தில் கண்ணன் சொன்னானாம்... நாம் எதையேனும் செய்து உறவுகளைக் காக்க வேண்டுமல்லவா..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -80
அம்மம்மா.. கேளடி தோழி...! -80
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-80.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-80.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy