அம்மம்மா.. கேளடி தோழி...! -101

101 என்னவோ சொல்ல வந்தேன்.. எதையோ சொல்லிச் சென்றேன்... "எங்க வீட்டிலே பெர்மிசன் கிடைக்காதுன்னும் சொல்லிப் பார்த்தேன்.. அவ கேட...


101
என்னவோ சொல்ல வந்தேன்..
எதையோ சொல்லிச் சென்றேன்...

"எங்க வீட்டிலே பெர்மிசன் கிடைக்காதுன்னும் சொல்லிப் பார்த்தேன்.. அவ கேட்கலை... எனக்கு ஆச்சரியமா போயிருச்சு.. அந்தளவுக்கு அவ வருந்தி.. வருந்திக் கூப்பிடுகிற அளவுக்கு எனக்கும்.. அவளுக்கும் பழக்கமில்லையேன்னு யோசிச்சேன்.. இருந்தும் அவளை அவாய்ட் பண்ண முடியாம போயிருச்சு அண்ணி... அவ.. அந்தளவுக்கு என்னை போர்ஸ் பண்ணினா..."
"அப்படியா..?"
"ஆமாமண்ணி... என் மத்த பிரண்ட்ஸெல்லாம் அவளைத் திட்டினாங்க... வரமுடியாதுன்னு சொல்கிறவளை ஏன் வற்புறுத்தறேன்னு அவளிடம் கோவித்தாங்க..."
இந்தச் செய்தி பாலசரஸ்வதியின் மூளையைத் தட்டி எழுப்பியது... ஷோபா சொன்ன போது.. அவள் மற்ற தோழிகளை அழைத்ததாகவும்... ராதிகாவே வலிய வந்து எனக்கு அழைப்பில்லையா என்று கேட்டதாகவும் தான் சொல்லியிருந்தாள்...
இப்போது ராதிகா சொல்வது முற்றிலும் மாறாக இருந்தது... அவளை ஷோபா வற்புறுத்தி அழைத்தபோது.. மற்ற தோழிகள் அதை கண்டித்தாக கூறுகிறாள்...
விவரம் இப்படியிருக்க ஷோபா எதற்காக மாற்றிச் சொன்னாள்...?
"எனக்கு வேற வழியில்லாம போச்சு.. இவ்வளவு தூரம் மெனக்கெட்டு கூப்பிடுகிறாளே... போய் தலையைக் காட்டிவிட்டு வந்துடலாம்ன்னு ஹேமாவிடம் சொன்னேன்.."
"ஹேமா யாரு...?"
"எனக்கு பிரண்ட்.. ஷோபாவுக்கு கிளாஸ்மேட்..."
"அப்போ நீ தனியாய் போகலையா...?"
"ஏண்ணி.. இருட்டின பின்னாலே எங்க வீட்டிலே வெளியே அனுப்பறதே பெரிய விசயம்.. இதில தனியா வேற அனுப்புவாங்களா...? கொன்னே போட்டிருவாங்க.. ஹேமா என் வீட்டுக்கு வந்து பத்திரமா கூப்பிட்டுக்கிட்டு போய் வரேன்னு என் அம்மாவிடம் கேரண்டி கொடுத்து கூப்பிட்டுக்கிட்டுப் போனா..."
"எப்படிப் போனீங்க..."
"ஆட்டோவில போனோம்..."
"திரும்பவும்... ஆட்டோவிலதான் வந்தீங்களா...?"
இதற்கான ராதிகாவின் பதில் பாலசரஸ்வதிக்கு அதி முக்கியமான ஒன்றாக இருந்தது... ஓசி கார் பயணத்துக்கு ஆசைப்படுகிறவளாக ஷோபா ராதிகாவை சித்தரித்திருந்தது உண்மைதானா என்று அவளுக்கு தெரிய வேண்டியிருந்தது...
"ஆட்டோ பிடிக்கத்தான் கிளம்பினோம்... அதுக்குள்ள ஷோபா வந்து உங்க தம்பி காரில எங்களை அனுப்பி வைச்சிட்டா..."
"நீ அவளை காரில் டிராப் பண்ணிவிடச் சொன்னியா..?"
"சேச்சே... அவளெல்லாம் ஒரு மனுஷின்னு அந்த பங்சனுக்கு அட்டெண்ட் பண்ணப் போனோமேன்னு நானே நொந்து போயிருந்தேன்... நானாவது... எங்களை டிராப் பண்ணுன்னு அவளிடம் போய் கேட்பதாவது... அந்தளவுக்கு நான் வைத்துக்க மாட்டேன் அண்ணி..."
'என்னடா இது...' பாலசரஸ்வதிக்கு தலையைச் சுற்றியது...
"வேற ஒன்னுமில்ல அண்ணி... அவளை நான் கண்டுக்க மாட்டேன்... அதில அவளுக்கு கோபம்.. என்னிடம் அவளோட லெவல் என்னன்னு காட்ட வரச்சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்..."
இப்படிக்கூட பெருமை பீற்றல் காஞ்சியங்களாய் இருப்பார்களா என்றிருந்தது பாலசரஸ்வதிக்கு...
ஷோபா இருப்பாள் என்று சொன்னாள் ராதிகா...
"அவ்வளவு தூரத்துக்கு கூப்பிட்டவ... என்னையும்.. ஹேமாவையும் கண்டுக்கவே இல்லைண்ணி.. யாரோ போல பார்த்துக்கிட்டு இருந்தவ திடிர்ன்னு அக்கறை வந்தவளைப் போல கிட்டே வந்து... வேலை மெனக்கெட்டு உங்க தம்பி காரில எங்களை ஏற்றி அனுப்பினது எதுக்காகன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குப் புரியலை அண்ணி..."
என்னவாக இருக்கக் கூடும் என்று பாலசரஸ்வதிக்கும்.. புரியவில்லை... அன்று இரவு.. பாலமுரளியும்... ராதிகாவும் கிளம்பிப் போன பின்னால் அதைப்பற்றி ராஜராஜனிடம் பேசியபோது.... அவன் மர்மமாகச் சிரித்தான்...
"எதுக்குச் சிரிக்கறிங்க...?" பாலசரஸ்வதி குழம்பினாள்...
"அந்த பங்சனில் உன்தம்பி மட்டும் கலந்துக்கலை சரஸ்.."
"இதென்னங்க வம்பாப் போச்சு.. நிறையப் பேர் கலந்திருப்பாங்க... இப்ப எதுக்காக இதைச் சொல்கிறீங்க.."
"மத்தவங்களும்... உன் தம்பியும் ஒன்றா சரஸ்...? இவர் ஷோபாவுக்கு முறை மாப்பிள்ளை இல்லையா...?"
பாலசரஸ்வதிக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது... மனைவியின் விழிகளில் இருந்து அதை கண்டு கொண்டவனாக ராஜராஜன் தலையை ஆட்டி.. அதை ஆமோதித்தான்...
"நீ நினைக்கிறது சரிதான்.. ஷோபாவுக்கு வேற ஒரு இடத்திலேயும் சித்தி மாப்பிள்ளை பார்த்து வைச்சிருந்தாங்க... அவன் பெயர் சங்கர்.. அவன் மேலதான் ஷோபாவுக்கு அதிகமாக நோக்கம் இருக்கு..."
இது வேறா என்று மலைத்தாள் பாலசரஸ்வதி.. இந்த ஷோபாவைப் பற்றி விசாரிக்கப் போனால்... ஆழத்திலிருந்து இன்னும் எத்தனை கதைகள் வெளிப் படுமோ என்றிருந்தது அவளுக்கு...
"முரளி மேலதான் அவளுக்கு விருப்பம் போல என்னிடம் பேசுவாளே..."
"இப்பாவது உலகத்தைப் புரிஞ்சுக்க... ஆயிரம் தான் இருந்தாலும் அவ என் தங்கையாச்சேன்னு நானும் சிலதை உன்னிடம் சொல்லாம விட்டு வைச்சேன்..."
"மறைச்சீங்கன்னு சொல்லுங்க..."
"அப்படியில்லைடி.. அவ கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு... அதான்..."
ராஜராஜன் சங்கடப்பட.. அதை பெரிது பண்ணாமல் விட்டுவிட்டாள் சரஸ்வதி...
"போகுது விடுங்க... அந்த சங்கருக்கும்.. முரளிக்கும் என்ன சம்பந்தம்...?"
"முரளிக்கும்... அவனுக்கும் சம்பந்தம் இல்ல... ஆனா.. இருக்கு..."
என்னத்தை கன்னையா பாணியில் ராஜராஜன் சொல்ல.. பல்லைக் கடித்தபடி அவனை ஒருபார்வை பார்த்தாள் சரஸ்வதி...
"விடுடி.. விடுடி.. என்ன விவரம்ங்கிறதை எனக்குத் தெரிஞ்ச அளவில் சொல்லிடறேன்..."
"முதல்லே அதைச் செய்யுங்க..."
"அந்த சங்கர் நம்ம முரளிக்கு முன்னாலேயே ராதிகாவைப் பெண் கேட்டவர்ன்னு உனக்குத் தெரியும் தானே சரஸ்..?"
"அட... ஆமாம்.."
"அந்த சங்கரும்... ராதிகாவை முதன் முதலா.. ஷோபாவின் பர்த்டே பங்சனில்தான் பார்த்திருக்கான்..."
"ஓ..."
உள்ளங்கை நெல்லிக்கனியாக சரஸ்வதிக்கு அனைத்து விவரங்களும் பிடிபட்டு விட்டன...
"சித்தி என்னிடம் புலம்பினாங்க... கூடப் படிச்சவ இவளை டாமினேட் பண்றதைப் போல இருந்தா விட்டு விலகியிருக்கனும்.. அதைவிட்டுட்டு உன் தங்கச்சி... அவளை பர்த்டே பங்கனுக்கு அழைச்சுட்டு வந்திட்டா... வந்தவளப் பார்த்த ரெண்டு மாப்பிள்ளையும் ஷோபாவை விட்டுட்டு அவ பின்னாலே போயிட்டாங்க... இப்படிப்பட்ட கூறுகெட்ட கூதரையை பெத்து வைச்சிட்டேனே ராஜராஜான்னு தலையைப் பிடிச்சிட்டாங்க..."
"ஷோபாதானே தலையைப் பிடிப்பா..."
"இப்ப அந்த வியாதி சித்திக்கும் தொற்றிக்குச்சு.."
"தலைவலி தொற்றுவியாதியா..?"
பாலசரஸ்வதி வெகுவாக கவலைப்பட்டுப் போக.. அவளை ஒருவிதமாகப் பார்த்த ராஜராஜன்...
"ஏண்டி..?" என்றான்...
"இல்லைங்க..."
"என்ன நொல்லைங்க... இதைப் போல ஏடா கூடமாய் எதையாவது அம்மா முன்னாலே சொல்லி வைச்சிராதே.. அவங்களுக்கு சித்திமேல பிரியம் ஜாஸ்தி.."
"நான் ஏங்க வாயைத் திறக்கப் போறேன்..?"
"அஃது.. அந்த பயம் இருக்கட்டும்.. அந்த பர்த்டே பங்சனில் சங்கர்தான் ராதிகா பின்னாலே சுற்றினானாம்.. அவளை உடனடியாக நாடு கடத்தச் சொல்லி சித்திதான் ஷோபாவிடம் சொன்னாங்களாம்.. இவ உன்தம்பி காரில போகச் சொல்லி வற்புறுத்தி அனுப்பி வைச்சாளாம்..."
விவரம் இப்படியிருக்க.. தன்னிடம் ஷோபா.. எப்படியெல்லாம் மாற்றி கதை பிணைத்து சொன்னாள் என்று நினைத்து.. நினைத்து மனம் வெதும்பினாள் பாலசரஸ்வதி...
அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ராஜராஜன்...
"என்ன சரஸ்... எப்படி இப்படியொரு எடுப்பார் கைப்பிள்ளையாய் மாறிட்டோமேன்னு நினைச்சு வேதனைப்படறியா..?"
"த்ச்ச்சு...."
"இப்பவாவது ராதிகாவைப் புரிஞ்சுக்கிட்டியா..?"
"எப்பவோ புரிஞ்சுக்கிட்டாச்சு..."
"அதான் பார்த்தேனே.. சாயங்காலம் காபி டிபனை நீங்க ரெண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு கொண்டு வந்தப்போ நான் பார்க்கிறது கனவா.. இல்லை நனவான்னு எனக்குச் சந்தேகமே வந்துருச்சு... சந்தேகத்தைத் தெளிவு பண்ணிக்கலாமுன்னு உன் தம்பியைத் திரும்பிப் பார்த்தா.. அவர் இருக்கவா.. இல்லை பறக்கவாங்கிறதைப் போல ஒரு மார்க்கமா என்னைப் பார்த்து முழிச்சு வைச்சார்..."
ராஜராஜன் கேலி பேசப்பேச.. பாலசரஸ்வதிக்கு வெட்கமாகி விட்டது.. அவள் செல்லமாகச்சிணுங்கியபடி ராஜராஜனின் கையைப் பிடித்துக் கிள்ளினாள்...
காரை ஓட்டிக் கொண்டிருந்த பாலமுரளி... லேசாக தொண்டையைச் செறுமினான்.. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ராதிகா ஏனென்றும் கேட்கவில்லை... திரும்பியும் பார்க்கவில்லை... எனக்கென்ன என்று அமர்ந்திருந்தாள்...
'திமிர்...' பாலமுரளிக்குள் கோபம் துளிர் விட்டது...
"ஏய்ய்.." என்றான்...
அதற்கும் அவளிடம் பதிலில்லாமல் போகவும்... அவனது கோபம் அதிகரித்தது...
"உன்னைத்தாண்டி..." என்றான்...
அவள் மௌனத்தை நீடிக்க... பிரேக்கில் காலை அழுத்தமாக மிதித்தான்... கார் 'கிறிச்' சென்ற ஓசையுடன் நின்றது...
அப்போதும் அவள் அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருக்க.. ஓங்கி ஒரு அறை விட்டால்தான் என்ன என்று அவனுக்குள் கோபம் பொங்கி எழுந்தது...
"உன்கிட்டயெல்லாம் கேட்கிற விதமாய் கேட்கனும்டி... இப்படிக் கேட்டா வேலைக்கு ஆகாது..."
"எப்படிக் கேட்பீங்க...?"
ஒரு வழியாக மௌனத்தை கலைத்தாள் ராதிகா..
"ஓங்கி நாலு அப்பு... அப்பிக் கேட்கனும்டி..."
"நினைச்சேன்.. இதைவிட்டா வேற என்ன தோணப் போகுது...?"
"கூப்பிட்டா ஏன்னு கேட்க மாட்டியா...?"
"யாரைக் கூப்பிட்டிங்க..?"
"வழியில போகிறவளையா கூப்பிட்டேன்...?"
"யாருக்குத் தெரியும்..?"
அவள் முகவாயை தோளில் இடித்துக் கொண்டு முகம் திருப்பிக் கொள்ள... வழியில் யாராவது போகிறார்களா என்று பார்த்தான் முரளி...
அந்த அர்த்த ஜாம நேரத்தில் தென்காசிக்குப் போகும் சாலையில் யார் நடமாடப் போகிறார்கள்..?
கார்களும்.. பஸ்களும்.. லாரிகளும் மட்டும் பறந்து கொண்டிருக்க... நடந்து போவாரென்று எவருமில்லை...
"என்னத்தைப் பார்க்கிறிங்க... வழியில எவளாவது போகிறாளான்னா..? இந்த நேரத்தில மோகினிப் பேய்தான் வழியில் போகும்... போங்க.. போய் அதைக் கூப்பிடுங்க..."
நிலவு காயும் அந்த நடுநிசி வேளையில்.. மல்லிகை மணக்க மயக்கும் தோற்றத்துடன் அருகில் அமர்ந்திருந்த வளைப் பார்த்தான் பாலமுரளி...
"மோகினிப் பேய் ரோட்டில போகலைடி.. காருக்குள்ள என் பக்கத்தில வந்து உட்கார்ந்திருக்கு.."
ராதிகா கோபத்துடன் அவன் பக்கம் திரும்ப.. அவன் வெற்றிப்புன்னகையுடன் காரைக் கிளப்பினான்.. சற்று தூரம் போனதும் ஒரு வளைவில் அந்த பெண்ணுருவம் தெரிந்தது.. அவர்களின் காரை வழிமறிப்பதைப் போல நடுரோட்டில் நின்றபடி கையை ஆட்டியது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -101
அம்மம்மா.. கேளடி தோழி...! -101
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-101.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-101.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy