அம்மம்மா.. கேளடி தோழி...! -100

100 சொந்தமென்று உன்னை மட்டும்... நினைத்ததெந்தன் நெஞ்சம்... ஆகாயத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன... மழை வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் ...


100
சொந்தமென்று உன்னை மட்டும்...
நினைத்ததெந்தன் நெஞ்சம்...

ஆகாயத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன... மழை வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்க.. எங்கோ பெய்த மழையின் மண் வாசனையை நுகர்ந்தான் பாலமுரளி...
"மழை வரப் போறது மாதிரியிருக்கில்லக்கா..."
அவன் கேட்டதற்கு பாலசரஸ்வதியால் பதில் சொல்ல முடியவில்லை.. அவள் தலை கவிழ்ந்திருந்தது...
"அக்கா வாயேன்.. மொட்டை மாடியில காத்தாடப் போசிட்டு வரலாம்..."
சற்று முன்னால் பாலமுரளி கூப்பிட்ட போது.. சப்த நாடியும் ஒடுங்கினவளாகத்தான் அவள்.. தம்பியைப் பின் தொடர்ந்தாள்..
அதுநேரம் வரை அவன் எங்கேயிருக்கிறானோ.. அந்தப் பக்கம் போகாமல் வேலையிருப்பதைப் போல ஒளிந்து நடமாடிக் கொண்டிருந்தவளுக்கு.. தப்பிக்க மார்க்கமில்லாமல் போய் விட்டது...
அகப்பட்டுக் கொண்ட குற்ற உணர்வுடன் அவன் முகம் பார்க்காமல் வேறு திக்கில் பார்த்தபடி அவள் சையாமல் அமர்ந்திருந்தாள்...
"உனக்கு நினைவிருக்காக்கா.. மழை வந்தால் உனக்கும்.. எனக்கும் அவ்வளவு கொண்டாட்டமாயிருக்கும்... மழைத்தண்ணியில நனைஞ்சு ஆட்டம் போடுவோம்... ஓடுற தண்ணியில காகிதக் கப்பல் விடுவோம்..."
அந்த நாளின் ஞாபகத்தில் அவன் கரைந்து விட.. பாலசரஸ்வதியின் கண்களில் லேசாக கண்ணீர் திரையிட்டது...
அப்போதெல்லாம் மாணிக்கவாசகம் உயிரோடிருந்தார்.. அவளும்.. பாலமுரளியும் உடன் பிறந்த பாசத்தோடு ஒட்டிக் கலந்த தோழமையுடன் குதுகலமாக இருந்தார்கள்...
"எனக்கு நல்லா நினைவிருக்குக்கா.. ஒரு சமயம்.. மழைக்காலத்திலே ஒரு பொண்ணு வந்து சாப்பிட வழியில்லைன்னு உன்கிட்ட அழுதுச்சு.. நீ டக்குன்னு உன் கையில இருந்த தங்க வளையலைக் கழட்டிக் கொடுத்துட்ட..."
சரஸ்வதிக்கும் அந்த நினைவு வந்தது...
"அப்பாவும்.. அம்மாவும் உன்கிட்ட நகையெங்கேன்னு கேட்டாங்க.. காணமப் போயிருச்சுன்னு நீ பொய் சொன்ன..."
சரஸ்வதி அப்படித்தான் சொன்னாள்.. நகையைத் தொலைத்து விட்டதாக சொல்லிவிட்டு.. பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்...
"அப்ப நீ சொன்ன பொய்க்கும்.... இப்ப நீ சொல்லியிருக்கிற பொய்க்கும் எத்தனை வித்தியாசம்..! பார்த்தியாக்கா..."
முரளி... சரியான கேள்வியாக கேட்டுவிட...
"முரளி..." என்று அதிர்ந்து நிமிர்ந்தாள் பாலசரஸ்வதி....
"அன்னைக்கும் ஒரு பொண்ணுக்காகத்தான் நீ பொய் சொன்ன.. இன்னைக்கும் ஒரு பொண்ணுக்காகத்தான் நீ பொய் சொல்லியிருக்க... அந்தப் பொய் அந்தப் பொண்ணைக் காப்பாத்துச்சு... இந்தப் பொய்..?"
முரளியின் கேள்வியில் இருந்த கூர்மை... குத்தீட்டியாக பாலசரஸ்வதியின் இதயத்தில் பாய்ந்தது...
"நீ இப்படிச் செய்யலாமாக்கா..? உனக்கு ராதிகாவைப் பிடிக்கலைங்கிறதுக்கா... அவளைப் பத்தி என்ன வேணும்னாலும் சொல்லிடுவியா..? அவ என்கிட்ட அடிவாங்கித் துடிக்கிறதைப் பார்க்கிறதில உனக்கு அவ்வளவு சந்தோசமா..? அப்படிப்பட்ட குரூர குணமா உனக்கு..?"
இதற்குப் பதில் தம்பி தன்கையால் நான்கு அடிகளைக் கூட அடித்து விடலாமே என்று குறுகிப் போனாள் சரஸ்வதி...
"உன்னைப் பத்தி ஒருவார்த்தை குறைவா அவ பேச மாட்டாக்கா... நீ அவமேல பழி சொன்னா... தந்நிலை விளக்கம் தான் சொல்லுவா... உன்மேல குற்றம் சொல்ல மாட்டா... அவளை அவ வீட்டில அப்படி வளர்த்திருக்காங்க.... அதைவிட பத்து மடங்கு உயர்வாத்தான் உன்னை அம்மாவும்.. நானும் வளர்த்தோம்.. நீ மட்டும் ஏன்க்கா இப்படி இருக்க..?"
"போதும்டா..." அவள் அழுதுவிட்டாள்...
"நீ பெரிய வீட்டில பிறந்த பொண்ணுன்னு பெருமை பேசினா மட்டும் போதாது... உன் மனசும் பெரிசாய் இருக்கனும்.. இதைப் போல பேசிவைச்சின்னா உன்னை சின்னப்புத்தி படைச்ச பொண்ணுன்னு எல்லாரும் பேசிர மாட்டாங்களா...?"
"என்னைப் பேசியே கொல்லாதேடா..."
"உன்னை வருத்தனும்னு நான் இதைப் பேசலை.. நீ திருந்தனும்னுதான் இதைப் பேசறேன்... என் கூடப் பிறந்தது நீ மட்டும்தான்.. அதைப்போல.. உன் கூடப் பிறந்தவனும் நான் மட்டும்தான்... ராதிகா என் பெண்டாட்டி.. என்னில் பாதி.. அவமேல நீ பழி சொன்னா.. அது என்னைச் சொல்கிறதைப் போல... இது ஏன் உனக்குப் புரியல..?"
"ஏதோ கோபத்திலே... தப்பு பண்ணிட்டேன்..."
"இதை மத்தவங்க செய்யலாம்.. நீ செய்யக்கூடாது.. அவ என்ன குற்றம் செஞ்சா..? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு குற்றமா..? அதுக்காக அவளை பழிசொல்வியா...?"
"இனி இதுபோல நடக்காதுடா..."
"நடக்கக் கூடாது.. அவ்வளவுதான் நான் சொல்வேன்.. அவளை நீ விலக்கி வைச்சா.. அது என்னை நீ விலக்கி வைச்சதைப் போலத்தான்... ஒற்றை உடன் பிறப்போட சொந்தம் வேணுமா.. வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்க..."
"முரளி..."
"வேணாம்க்கா... உனக்கு இந்தக் குணம் வேண்டாம்.. நான் பார்த்த காருண்ய குணமான அக்காவாகவே நீ எப்பவும் இரு... மாறாதே..."
தொடர்ந்து பேசப் போன பாலமுரளி.. மாடிப்படிகளில் கேட்ட காலடியோசையில் நிதானித்தான்.. வாய் நிறைய சிரிப்போடு ராஜராஜன் வந்து கொண்டிருந்தான்...
"என்ன... அக்காவும்.. தம்பியுமா வானிலை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க...?"
பாலசரஸ்வதி சோர்ந்த விழிகளை கணவனிடம் காட்ட முடியாமல், முகம் திருப்பிக் கொள்ள.. பாலமுரளி புன்னகைத்தான்...
"மழை வர்றதைப் போல இருந்துச்சு மாமா... உடனே.. அந்த நாள் ஞாபகமும் சேர்ந்து வந்துருச்சு..."
"அதனாலே அந்த நாள் ஞாபகத்தை உடன் பிறப்புக இரண்டு பேரும் அசை போட்டுக்கிட்டு இருந்தீங்களாக்கும்..?"
"பரவாயில்லையே.. கண்டு பிடிச்சிட்டிங்களே..."
பாலமுரளி... உற்சாகமாக சிரிக்க... ராஜராஜனும் அவன் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்...
"சரஸ்.. இந்த கிளைமேட்டுக்கு சூடா ஏதாவது டிபனை உள்ளே தள்ளி... காபியைக் குடிச்சா எப்படியிருக்கும்..?"
"இதோ.. ஒரு நொடியில் கொண்டு வர்றேன்..."
அங்கிருந்து நகர முடிந்ததில் கிடைக்கப் பெற்ற விடுதலை உணர்வுடன் பாலசரஸ்வதி அவசரமாக அகன்றாள்...
மாடிப்படிகளில் விரைவாக இறங்கி ஓடியவளை ரசித்துப் பார்த்த ராஜராஜன்...
"உங்க அக்கா... புள்ளி மானைப் போல துள்ளி ஓடுறாள்ல முரளி..?" என்று மைத்துனனைப் பார்த்துச் சிரித்தான்...
அவள் எதற்காக... மானைப் போல மாறி ஓடினாள் என்ற விவரம் அறிந்திருந்த பாலமுரளி பேச்சை மாற்றினான்...
பாலசரஸ்வதி... சமையலறைக்கு சென்றபோது... அகிலா வந்திருந்தாள்... சூடான வடைகளைப் பொரித்துக் கொண்டிருந்த சமையல்காரம்மாவிடம் பேசிக் கொண்டிருந்hள்...
"அதுக்குள்ள வந்துட்டிங்களே..." பாலசரஸ்வதி வியந்தாள்...
"உன் தம்பியும்... தம்பி பெண்டாட்டியும் இன்னைக்கு நைட்டே ஊருக்குக் கிளம்பனும்னு சொல்லிட்டாங்க... அப்படியிருக்கிறப்போ அங்கே எனக்கு இருப்புக் கொள்ளுமா..?"
மாமியாரின் அக்கறையில் நெகிழ்ந்து விட்டாள் சரஸ்வதி... மருமகளின் தம்பி என்பதற்காக அகிலா அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது... கூடப் பிறந்தவளான அவள் என்ன காரியத்தை செய்து வைத்திருக்கிறாள் என்று நினைத்துப் பார்த்த பாலசரஸ்வதிக்கு என்னவோ போல ஆகிவிட்டது...
அவள் ராதிகாவைத் தேடி போனாள்... அவர்களுக்காக கொடுத்திருந்த அறையில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த ராதிகாவைப் பார்த்ததும் அசைவற்று நின்று விட்டாள்... பாலசரஸ்வதியின் நினைவுகளில் அவளுக்குத் திருமணமான புதிதில் நடந்த நிகழ்வுகள் வந்து நின்றன....
இதைப் போல ஒரு நாள்கூட அவள் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்ததில்லை என்ற உண்மை அவளைச் சுட்டது...
வெட்கமும்... காதலும்.. நாணமும்... மிரட்சியும்.. கலந்த அற்புதமான களையென்று அந்நாள்களில் அவள் முகத்தில் தவழ்ந்தது... அதை 'கல்யாண களை..' என்று மற்றவர்கள் சொன்னார்கள்... ஏறக்குறைய இரண்டு வருடகால அளவிற்கு அவள் முகத்தில் அந்தக்களை நிலைத்திருந்தது...
ராதிகாவின் முகத்தில் அந்தக் கல்யாணக் களைக்கான சுவடே இல்லையே.. அது ஏன்...?
எதையோ தொலைத்து விட்டு தேடுகிறவளைப் போல அவள் மிரளமிரள விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பது யாரால்...?
அது தன்னால்தான் என்ற குற்ற உணர்வில் சரஸ்வதி மனம் நொந்தாள்... ராதிகாவின் அருகில் சென்று அவள் தோளைத் தொட்டாள்...
திடிரென்று ஏற்பட்ட தொடுகை உணர்வில் சட்டென்று திரும்பிப் பார்த்த ராதிகா... சரஸ்வதியைக் கண்டு திகைத்தாள்.. அவள் விழிகளில் தெரிந்த காருண்யத்திலும்.. சொந்தத்திலும்.. அதைவிட அதிகமாக திகைத்தாள்...
"அண்ணி..!" அவள் பதறி எழுந்துகொள்ள முயன்றபோது..
"வேண்டாம் ராதிகா... அப்படியே உட்காரு..." என்று அவள் தோள்களைப் பிடித்து அழுத்தி... அமரவைத்த சரஸ்வதி அவளுருகே அமர்ந்தாள்...
ராதிகாவின் கைகளைப் பிடித்து விரல்களை வருடியபடி அவள் முகத்தை கூர்ந்து பார்த்த சரஸ்வதியின் இதழ்கள் துடித்தன்.. அவள் எதையோ சொல்லத் துடிப்பதை புரிந்து கொண்டவளாக..
"என்னங்கண்ணி..?" என்று வினவினாள் ராதிகா...
"நீ வயதில் சின்னப்பெண்... எனக்கு தம்பி பெண்டாட்டி.. உன்னிடம் மன்னிச்சிருன்னு எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை ராதிகா..." சரஸ்வதியின் குரலில் நெகிழ்வு தெரிந்தது...
"அண்ணி..! யார்கிட்ட யார் மன்னிப்புக் கேட்கிறது..? நீங்க என்கிட்ட மன்னிப்புக் கேட்கிறதா..? அது எதுக்காக...?"
"உனக்கே தெரியும் ராதிகா..."
"இருக்கட்டும் அண்ணி... உங்களுக்கு என்னைப் பிடிக்கலை... நான் உங்க தம்பி வொய்பா வந்ததில உங்களுக்கு உடன்பாடில்லை... அந்தக் கோபத்தை இப்படி வெளிக்காட்டறிங்க.. இதனால உங்க கோபம் தணிஞ்சா... அதில எனக்கு சந்தோசம்தான்..."
"ராதிகா..."
"விட்டுருங்க அண்ணி... இதை நினைச்சு நீங்க மனசு கஷ்டப்பட வேணாம்.. எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கனும்கிற அவசியம் ஒன்னுமில்லையே... உங்க தம்பிக்கு வொய்பா ஆகிட்டேன்கிற ஒரே காரணத்துக்காக என்னை உங்களுக்கு கட்டாயம் பிடிச்சாகனும்னு சொல்கிறது நியாயமில்லையே..."
ராதிகாவின் அறிவார்ந்த பேச்சில் ஆச்சரியப்பட்டுப் போனாள் சரஸ்வதி... இப்படிப்பட்ட பேச்சுக்களை அவள் ஷோபாவிடம் கேட்டதில்லை... சில நேரங்களில் ஷோபாவின் அதிகமான அலட்டலில் சரஸ்வதிக்கு தலை வலியே வந்ததுண்டு.. அப்படிப்பட்ட ஷோபாவிற்கே தலைவலியை வரவழைத்து தண்ணி காட்டியவள் ராதிகா என்ற உண்மை தெரியாத சரஸ்வதி.. ராதிகாவை வியப்புடன் பார்த்தாள்...
"சின்னப் பெண்ணாய் இருந்துக்கிட்டு என்னமா நியாயம் பேசற... இந்தப் பெரியமனசு இருந்தாப் போதுமே.. எங்கம்மாவுக்கு மருமகளா வர வேறென்ன தகுதி வேணும்..?"
"ஏன் அண்ணி... உங்களுக்கு பிடிச்ச தம்பி வொய்பா வர என்ன தகுதி வேணும்னு சொல்லுங்கண்ணி... அந்தக் தகுதியை நான் வளர்த்துக்கறேன்..." ராதிகா ஏக்கத்துடன் கேட்க...
"என் செல்லமே..." என்று அவள் கன்னத்தில் லேசாக தட்டினாள் சரஸ்வதி...
"உன்னைப் பத்தி என் தம்பியிடம் போட்டுக் கொடுத்திருக்கேன்.. நீ எனக்குப் பிடிச்சவளா மாறுகிறது எப்படின்னு கோபப்படாம கேட்கிற.. உன்னால இது எப்படி முடியுது ராதிகா...?"
"உங்கமேல தப்பில்லை அண்ணி.. ஷோபா உங்களோட நாத்தனார்.. அவ எதையாவது இல்லாததும்.. பொல்லாததுமே சொல்லியிருப்பா... நீங்க அதைக் கேட்டுட்டு என்மேல ஏதாவது ஒரு அபிப்ராயத்தை உருவாக்கி வைச்சிருப்பீங்க.. அதனாலதான் என்னைக் கண்டா உங்களுக்கு பிடிக்காம போயிருச்சு..."
இதைச் சொன்ன ராதிகா முகம் மாறாமல் பேசினாள்.. அவளது கள்ளம் கபடமற்ற பால் போன்ற வெண்மையான முகத்தை கூர்ந்து பார்த்த சரஸ்வதி...
"உனக்கும்.. ஷோபாவுக்கும் ஆகாதா..?" என்று யோசனையுடன் கேட்டாள்...
"ம்ம்... அவ எனக்கு கிளாஸ்மேட்... அவ்வளவு தான்.. மத்தபடி அவளிடம் அவ்வளவா நான் பேசிக்க மாட்டேன்.."
"அப்போ.. அவ பிறந்த நாளுக்கு நீ போனது எப்படி..? ஏன் கேட்கிறேன்னா.. அங்கேதான் முரளி உன்னை முதன் முதலா சந்தித்திருக்கிறான்...", சரஸ்வதியின் புருவங்கள் உயர்ந்தன...
"அதையேன் கேட்கறிங்கண்ணி.. அவ பிறந்த நாளுக்கு நான் கட்டாயம் வந்தே தீரனுமுன்னு அவ ஒரு வாரமா என்னைத் தொணத்தியெடுத்தா.. நான் முடியாதுன்னு எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன்.. அவ நான் வந்தே ஆகனுமுன்னு ஒத்தைக்காலில் நின்னு கெஞ்சினா..."
"என்னது..?"
சரஸ்வதியினால் அவள் காதுகளை நம்ப முடியவில்லை.. ஷோபா சொன்னதற்கும்.. ராதிகா சொன்னதற்கும் இடையே இருந்த அறுபது வித்தியாசங்கள் அவளை யோசிக்க வைத்தன..
"ஏன் நீ மாட்டேன்னு சொன்ன ராதிகா...?"
"எங்க வீட்டில இதுபோல பங்ஷன் நடத்திப் பழக்கமில்ல அண்ணி... பர்த்டேன்னா அம்மா பாயாசம் பண்ணுவாங்க... அப்பா புது டிரெஸ் எடுத்துக் கொடுப்பார்.. தம்பி.. தங்கை ஏதாவது பிரஸெண்ட் பண்ணுவாங்க... குடும்பத்தோட கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணுவோம்.. அதுக்கப்புறம் அவங்வங்க வேலைகளைப் பார்க்கப் போயிருவோம்.. இவ வேற இருட்டின பின்னால தான் பங்சன் ஆரம்பிக்கும்ன்னு சொன்னா... இருட்டினதுக்குப் பின்னால... எங்க வீட்டிலே வெளியே போகிறதுக்கு பெர்மிசன் தரமாட்டாங்கண்ணி... இருட்டறதுக்குள்ள வீடு வந்து சேரலைன்னா எங்கம்மா.. காலில் சூடே வைச்சிருவாங்க..."
ராதிகா சொல்லச்சொல்ல.. பாலசரஸ்வதிக்கு.. மேகலா அவளை வளர்த்த வளர்ப்புதான் ஞாபகத்தில் வந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -100
அம்மம்மா.. கேளடி தோழி...! -100
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-100.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-100.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy