அழகான ராட்சசியே -98

98 உன் கோபத்திலே.. எனை புரட்டியெடுக்கும்.. அழகான ராட்சசி நீ.... ஒரு மனித ஜீவனின் இயல்பான குணத்தை அவர்கள் வாழும் சூழலே நிர்ணயம் ...


98
உன் கோபத்திலே..
எனை புரட்டியெடுக்கும்..
அழகான ராட்சசி நீ....

ஒரு மனித ஜீவனின் இயல்பான குணத்தை அவர்கள் வாழும் சூழலே நிர்ணயம் செய்கிறது..
ஊர்மிளா அழகான தேவதை..! அவளை அழகான ராட்சசியென்று நரேந்திரனை கோபம் கொள்ள வைத்தது அவளைக் கொண்டு போய் அவன் விட்டு வைத்த அகல்யாவின் வீட்டுச் சூழல்..
நரேந்திரன் மட்டும் கஜேந்திரனின் பேச்சுக்கு செவி சாய்த்து ஊர்மிளாவை அவனுடைய வீட்டிற்கு அழைத்துப் போயிருந்தால்.. அவளுடைய கோபத்தின் பரிணாமத்தை அவன் உணர வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.. அவனும் அவளை அடிக்கடி..
'அழகான ராட்சசி..!' என்று மனதுக்குள் அழைத்திருக்கவும் மாட்டான்..
"இந்த வருச பட்ஜெட் எப்படி போகுதுன்னு தெரியலை.."
பேரனைக் கண்டதும் டிவியின் வால்யூமை குறைத்து விட்டுச் சொன்னார் கஜேந்திரன்.. அவன் தோளைக் குலுக்கினான்.. அதைப் பார்த்து விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சுரேந்திரனும் தோளைக் குலுக்க.. ஊர்மிளாவின் முகத்தில் பெருமிதச் சிரிப்பு வந்தது..
"ஜீனியர் நரேந்திரன் பண்ணுகிற லூட்டியைக் கவனிச்சியாடா..?"
கஜேந்திரன் பலத்த குரலில் சிரித்தார்.. சுரேந்திரனும் அதைப்போல சிரித்துக் காண்பித்தான்.. அவரின் சிரிப்பு அதிகரித்தது.. நரைந்த மீசையை முறுக்கி விட்டபடி பெருமைப் பட்டுப் போனார்..
நரேந்திரனின் மன பாரம் விலகியது.. அந்த இதமான குடும்பச் சூழலில் அவனை பீடித்திருந்த தனிமை உணர்வு விலகி ஓடுவதை வியப்புடன் அவன் உணர்ந்தான்..
"இது வீடு..!" சிரித்து ஓய்ந்த கஜேந்திரன் நெகிழ்ச்சியுடன் சொன்னார்..
ஊர்மிளா அவரை நிமிர்ந்து பார்த்தாள்..
"ஆமாம்மா.. வீடுன்னா இப்படித்தான் இருக்கனும்.. இப்படியில்லாம உன் பாட்டி முகத்தை நானும்.. என் முகத்தை உன் பாட்டியும் பார்த்துக்கிட்டு இருந்தோமே.. அது வீடா..? இல்லைம்மா.. அப்பவே நான் உன் ஹஸ்பெண்டிடம் சொன்னேன்.. உன் அப்பாவுக்கு வாக்குக் கொடுத்திருந்தா தள்ளி நின்று அந்தக் குடும்பத்துக்கு உதவி செய்.. உள்ளே போய் விழுகாதே.. அது சேறுன்னு.. உன் ஹஸ்பெண்ட் கேட்கலை.. அவனோடும் போகாமல் உன்னையும் அந்த வீட்டுக்குள்ளே அழைச்சுக்கிட்டுப் போயிட்டானே.. அதை என்னன்னு சொல்ல..? வேண்டாம்ன்னு சொன்னேன்ம்மா.. அந்த அகல்யா சரியான லேடி இல்லே.. தான் வாழனும்னா யாருக்கு வேண்டும்னாலும் அது குழி பறிக்கும்ன்னு சொன்னேன்.. அவ இருக்கிற வீட்டுக்கு உன்னை அழைத்துக்கிட்டுப் போக வேண்டாம்ன்னு சொன்னேன்.. என் பேச்சை இவன் காதிலேயே போட்டுக்கலை.. என்னாச்சு..? என்னென்னவோ நடந்து போச்சு.. வீட்டை நிறைக்க நீயும் உன் மகனும் இருந்தும் உங்களை எங்கள் கண்ணில் காட்டாம தள்ளி நின்னிருந்தான் என் பேரன்.. வயசான எங்க மேலே இரக்கம் காட்ட மாட்டேன்னு அந்த அகல்யா குடும்பத்து மேலே இரக்கம் காட்டினான்.. இவனோட அப்பா புத்திசாலி.. வாக்கு வாங்கி இவனை அவனோட குடும்பத்துப் பக்கம் இழுத்து விட்டுட்டுப் போயிட்டான்.. என் பொண்ணு ஏமாளிம்மா.. பெத்த மகன்கிட்ட வாக்கு வாங்கி அவனைக் கட்டிப் போடனும்கிற குறுக்குப் புத்தியெல்லாம் அவளுக்குக் கிடையாது.. அவ போன பின்னாலே.. அவ மகன் அவளோட வயசான அம்மாவையும், அப்பாவையும் கவனிச்சுக்கவாங்கிற நம்பிக்கையோட போய் சேர்ந்திட்டா.. நாங்க தனி மரங்களா ஆகிட்டோம்.."
"தாத்தா.."
ஊர்மிளா தாள முடியாமல் அழுது விட்டாள்.. நரேந்திரனின் மனம் கனத்தது.. கஜேந்திரனின் ஒவ்வொரு வார்த்தையும் கூரிய சம்மடிகளாக அவன் இதயத்தில் விழுந்தன.. ஹாலின் சுவரில் மாட்டப்பட்டிருந்த நளினியின் புகைப்படத்தைப் பார்த்தான்..
'அம்மா..!...'
ஆதரவு தேடி அவன் அழைத்த குரல் நளினியின் காதில் விழுந்ததோ என்னவோ..
"போதும்.." என்ற அதட்டலுடன் சித்ரலேகா அங்கே வந்தாள்..
"இப்பத்தான் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்தாச்சில்ல..? இன்னும் எதுக்காக பழைய குப்பையை கிளறிக்கிட்டு இருக்கீங்க.."
"தப்புத்தான் சித்ரா.. மனசு தாங்காம பேசிட்டேன்.."
"அதுக்காக நரேன் மனசு தாங்காம பேசனுமா..? நளினி இருந்திருந்தா உங்களை சும்மா விட்டிருக்க மாட்டா.."
"அதைச் சொல்லு.."
கஜேந்திரனின் பார்வை மன்னித்து விடம்மா என்ற இறைஞ்சலுடன் நளினியின் புகைப்படத்தைப் பார்த்தது..
'அம்மா..!' நரேந்திரன் சிலிர்த்து விட்டான்..
இதுதான் தாய்மையா..? இதுதான் தாய் மனமா..? அவன் மனம் வருந்திய அடுத்த நிமிடம் அவனுக்காக பரிந்து பேசி வாதாட அவளின் அன்னை உருவில் அவனின் அன்னை வந்தாளே..
புகைப்படத்திலிருந்த நளினியின் அன்புப் பார்வை பாசத்துடன் மகனை வருடியது..
சுரேந்திரன் வீட்டுப் பாடத்தை முடித்து விட்டான்.. கண்களைத் துடைத்தபடி எழுந்த ஊர்மிளா சுரேந்திரனின் புத்தகப்பையை ஒழுங்காக அடுக்கி வைத்து விட்டு.. இரவு உணவுக்கான ஆயத்தங்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.. சுரேந்திரன் ஓடிவந்து கஜேந்திரனின் மடி மீது ஏறிக் கொண்டான்.. சித்ரலேகா பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள்.. கஜேந்திரனின் நரைத்த மீசையைப் பிடித்து சுரேந்திரன் இழுக்க.. சித்ரலேகா கைதட்டி அவனைப் பாராட்டி ஊக்கப் படுத்தினாள்.. சிறுவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்த அந்தக் கோடிஸ்வர பிஸினெஸ் மேnனை வியப்புடன் பார்த்தான் நரேந்திரன்..
அவர் முன்னால் நேருக்கு நேர் நின்று பேசும் தைரியம் எவ்வளவு பெரிய மனிதருக்கும் வந்ததில்லை..
அப்படிப்பட்டவர் நரேந்திரனின் மகன் இழுப்பதற்காக தன் மீசையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்..
'எப்படிப்பட்ட குடும்பச் சூழலை மிஸ் பண்ணியிருக்கேன்..'
நரேந்திரன் வேதனைப் பட்டான்.. செழியன் அவனை அகல்யாவின் குடும்பத்துடன் பிணைக்கவில்லையே.. உதவியைத்தான் கேட்டார்.. அவனும் தள்ளி நின்றுதான் அதைச் செய்தான்.. உதவிக்கு நீட்டிய அவன் கரத்தை பிடித்து இழுத்து புதைகுழி போல அகல்யாவின் குடும்பத்துக்குள் அமுக்கி விட்டது அகல்யாதானே..
'இந்த உலகத்திலே உதவி செய்ய நினைச்சா இந்தக் கதிதான் வருமா..?'
வேதனையுடன் கண்களை மூடிக் கொண்ட நரேந்திரனைப் பார்த்தபடி டைனிங் டேபிளில் தட்டுக்களை வைத்தாள் ஊர்மிளா.. அவன் வேதனையில் அவளுக்கு வேதனை வந்தது.. அவனின் புருவச் சுளிப்பை நீவி விட வேண்டும் போல மனதில் தோன்றிய தாபத்தை அடக்கிக் கொண்டாள்..
'தென்றல் பாடும் தாலாட்டில் - நீ
             இன்பம் பெறவில்லையா..?
    இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே
             துன்பம் தரவில்லையா..?
    உன் துயர் கண்டால் என்உயிர் இங்கு
             தவிப்பது தெரியலையா..?
         உண்மை அறிந்தும்.. உள்ளம் வருந்த
             நடப்பது தவறில்லையா..?'
அவன் மனதுக்கு அவள் மனது பாடும் பாடல் கேட்டதோ என்னவோ.. அவன் சட்டென கண் விழித்து அவளைப் பார்த்து விட்டான்.. அதை எதிர்பாராத அவளின் காருண்ய பார்வை தவிப்புடன் தடுமாறி நின்றது.. ஆழ்ந்து பார்த்த அவன் பார்வை அவள் பார்வையை சிறை பிடிக்க.. இருவர் பார்வைகளும் பின்னிப் பிணைந்தன..
லத்த மழையில் மாட்டிக் கொண்டிருந்தாள் ராதா.. குடையைப் பிடித்தபடி காரின் பக்கத்தில் நின்றிருந்தாள்.. வைப்பர் துடைத்து விட்ட மழைத்துளிகளின் உலர்வில்.. காரின் முன்பக்க கண்ணாடி வழியாக அவள் நின்றிருப்பதைப் பார்த்த நரேந்திரன் வேகத்தைக் குறைத்து அவளருகில் காரைக் கொண்டுபோய் நிறுத்தினான்..
"ஹலோ.. அனாமிகா.." என்றான்..
அவள் திரும்பவில்லை.. செல்போனில் பேசியபடியே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நரேந்திரன் கைகளை ஆட்டி அவள் கவனத்தை ஈர்த்தான்.. அவனைக் கண்டதும் செல்போனை அணைத்தவள்..
"ஹலோ.." என்றாள்..
"ஏங்க.. உங்க பெயர் அனாமிகா இல்லையா..?" நரேந்திரன் சிரித்தான்..
ராதாவின் முகம் மாறியது.. அதில் தெரிந்த நிம்மதியில் நரேந்திரனுக்குக் குழப்பமாக இருந்தது.. இவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் இவள் திரும்பிப் பார்க்க மாட்டேன என்கிறாள்.. அதற்காக உன் பெயர் உனதில்லையா என்று கேட்டால் 'ஹப்பா..' என்பதைப் போல நிம்மதியாக பார்த்து வைக்கிறாள்..
'என்னடா இது..!'
"என்னங்க ஆச்சு..? நீங்க இப்படியெல்லாம் திருதிருக்கிற ஆள் இல்லையே.." அவளிடமே விசாரித்தான்..
"உங்களுக்கு எப்படித் தெரியும்...? ஊர்மி சொன்னாளா..?" முகத்தில் வெளிச்சம் பரவக் கேட்டாள் ராதா..
"எதைங்க..?"
"என் பெயர் என்னங்கிறதை.."
"ஜோக்கா..? இந்த மழையிலேயும் உங்களுக்கு ஜோக் வருதே.. குட்..! உங்களுக்கு செமத்தியான ஹியுமர் சென்ஸ்தான்.. உங்க பக்கத்திலே காரை நிறுத்திட்டு.. அனாமிகா.. அனாமிகான்னு ஏலம் போட்டுக்கிட்டே இருக்கேன்.. நீங்க திரும்பிப் பார்க்க மாட்டேங்கறிங்க.. அதான்.. உங்க பெயர் அனாமிகா இல்லையான்னு கேட்டேன்.. நீங்க என்னடான்னா அதுக்கு இந்த அளவுக்குச் சந்தோசப் பட்டுப் போறிங்க.. ஏங்க.. உங்களுக்கு உங்க பெயரைப் பிடிக்காதா..?"
ராதாவின் முகம் பழைய நிலைமைக்குத் திரும்பியது..
"ரொம்பத் தெளிவான ஆள்தான்.." வாய்க்குள் முணுமுணுத்தாள்..
"என்ன சொல்கிறீங்க..?" நரேந்திரன் காதைத் தீட்டியபடி கேட்டான்..
"எனக்கு இந்தப் பெயரை பிடிக்காதுன்னு சொன்னேன்.." ராதா கடுப்புடன் மழையைப் பார்த்தாள்..
"யாருக்குத்தான் பெயரில்லாதவங்கங்கிற பெயரைப் பிடிக்கும்..? உங்க பேரண்ட்ஸ் வித்தியாசமானவங்களோ..? இந்தப் பெயரை வைத்திருக்கிறாங்களே.."
அடிக்கிற மழையில் குடையைப் பிடித்துக் கொண்டு மக்கர் பண்ணிவிட்ட காரில் அருகே நின்று கொண்டிருந்தவளுக்கு இந்த விவாதம் தேவைதான் என்றிருந்தது.. நரேந்திரனை வெற்றுப் பார்வையொன்றைப் பார்த்து வைத்தாள்..
'இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்..?' நரேந்திரனால் அனுமானிக்க முடியவில்லை..
"காருக்கு என்ன ஆச்சு..?"
ஒருவழியாக அவளிடம் கேட்டு விட்டான்.. இப்போதாவது கேட்டானே என்று ராதாவும் அதற்கான பதிலைச் சொன்னாள்..
"என்னன்னு தெரியலை.. திடிர்ன்னு நின்று என்னைப் பழிவாங்கிக்கிட்டு இருக்கு.."
"ஹா.. ஹா.. உங்க மேலே இதுக்கு என்ன கோபம்..?"
நரேந்திரன் போனை எடுத்துப் பேசினான்.. சற்றுப் பொழுதிற்குள் மழையைப் பொருட்படுத்தாமல் ரெயின் கோட்டைப் போட்டபடி இரண்டு இளைஞர்கள் புல்லட்டில் வந்து இறங்கினார்கள்.. ஒருவன் நரேந்திரனிடம் வந்து வணக்கம் சொன்னான்.. இன்னொருவன் காரின் பானட்டைத்திறந்து ஆராய்ந்து விட்டு மூடினான்..
"மெக்கானிக் ஷாப்பில வைத்துத்தான் பார்க்கனும் சார்.." அவன் சொன்னதும்..
"உங்க கார் சாவியை அவங்ககிட்டக் கொடுங்க.." என்றான் நரேந்திரன்..
ராதாவியப்புடன் அவர்களிடம் கார் சாவியைக் கொடுத்தாள்..
"வாங்க உங்களை டிராப் பண்ணிடறேன்.." என்ற நரேந்திரனுக்கு நன்றி சொல்லி விட்டுக் காரில் ஏறிக் கொண்டாள்..
மழை கொட்டிக் கொண்டிருந்த சாலையில் கார் விரைந்தது..
"எப்படி அவங்க உடனடியா வந்தாங்க..?"
"எவங்க..?"
"அந்த மெக்கானிக்ஸ்தான்.."
"பக்கத்திலேதான் அவங்களோட மெக்கானிக் ஷாப் இருக்கு.. ஸோ.. உடனடியா வந்திட்டாங்க.. பொதுவா எல்லா ஏரியாவிலேயும் இருக்கிற மெக்கானிக் ஷாப்பைப் பத்தி நாம தெரிந்து வைத்துக்கனும்.. எங்கே கார் மக்கர் பண்ணினாலும் அந்த ஏரியா மெக்கானிக்ஸீக்கு போன் பண்ணி இம்மீடியட்டா காரை சரி பண்ணி விடலாமே.."
"பெண்டாஸிடிக்.."
"இதை உங்க பிரண்ட் காதிலே போட்டு வையுங்க.."
"நீங்க பெண்டாஸ்டிக்குன்னு சொன்னவளே அவள்தான்.."
"அன்றைக்குப் பார்த்தா சென்னையிலே இருந்தீங்க.. இன்றைக்கு என்னடான்னா பெங்களூரில் இருக்கீங்க.. எதுதான் உங்க ஊர்..?"
"எதுவும் என் ஊரில்லை.. அட் தி ஸேம் டைம்.. எல்லா ஊரும் என் ஊர்தான்.."
இப்படிச் சொன்னவளை விசித்திரமாக திரும்பிப் பார்த்தான் நரேந்திரன்.. ராதா புருவங்களை உயர்த்தினாள்..
"பெயரில்லாதவங்கங்கிற பெயர் இருக்கிறவங்களுக்கு.. ஊரில்லாத ஊரா..?"
ராதா வாய்விட்டுச் சிரித்தாள்.. சிந்தனையை உள்ளடக்கிய அவளின் சிரிப்பில் ஒட்டாத தன்மை இருந்தது.. அது ஊர்மிளாவுக்கும் அவனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டதினால் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் நரேந்திரன்..
'இவளுக்கு ஊர்மிளாவின்மீது அதிகப்படியான வாஞ்சை இருக்கிறது..'
"சென்னையிலேயும்.. பெங்களூரிலேயும்.. ஏன் இந்தியாவின் முக்கியமான சிட்டிகளில் எல்லாம் எங்க கம்பெனிஸின் பிரான்ச் இருக்கிறது.. ஸோ.. நான் டெவுடேசன் பேஸிக்கில் எங்கே வேண்டும்னாலும் வொர்க் பண்ணலாம்.."
"ஈஸிட்..? உங்க கம்பெனியின் ஹெட் ஆபிஸ் எங்கே இருக்கு..?"
நநேரந்திரன் காரை நிறுத்தியபடி கேட்டான்.. ராதா சொன்ன முகவரியில் இருந்த வீட்டின் முன்னால் அவனுடைய கார் நின்றிருந்தது.. கார் கதவைத் திறந்து இறங்கப் போன ராதா ஓர் நொடி தாமதித்து அவன் முகம் பார்த்தாள்.. அவள் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் நரேந்திரனின் புருவங்கள் முடிச்சிட்டன.. இது போன்ற மர்மப் பார்வையை சித்ரலேகாவிடம் அவன் பார்த்திருக்கிறான்.. ஊர்மிளாவைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அந்தப் பார்வை சித்ரலேகாவிடம் வந்து விடும்..
"நியூயார்க்கில்..."
ராதா இறங்கிக் கை அசைத்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டாள்.. இதைச் சொல்லவா இவ்வளவு பீடிகை என்று தோளைக் குலுக்கியபடி காரைக் கிளப்பப் போனான் நரேந்திரன்..
"யார் சார் நீங்க..? என்ன வேணும்..?"
அந்த வீட்டின் கேட்டைத் திறக்கப் போன மனிதர் கேட்டார்.. அவர் கையில் குடையும் பால் கவரும் இருந்தன..
"இந்த வீட்டில் இருக்கிற அனாமிகாவை டிராப் பண்ண வந்தேன்.. நான் அவங்களோட பிரண்டின் ஹஸ்பெண்ட்.." என்றான் நரேந்திரன்..
"அனாமிகாவா..? அப்படி இங்கே யாருமில்லையே.."  சந்தேகத்துடன் அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தார் அவர்..
'இதென்னடா வம்பாப் போச்சு..'
நரேந்திரன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் இருந்து ராதா வெளிப்பட்டாள்.. வேகமாக காருக்கு அருகில் வந்தாள்..
"நீங்க இன்னும் கிளம்பலையா..?" என்று கேட்டாள்..
"இவளையா அனாமிகான்னு சொன்னீங்க..?"
அந்த மனிதர் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த போதே ராதா கை அசைத்து விட.. வேறு வழியில்லாமல் காரைக் கிளப்பினான் நரேந்திரன்.. வழியெல்லாம் அவனுக்கு ஒரே நினைவுதான்..
'ஏன் அந்த மனிதர் அப்படிச் சொன்னார்..?'



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -98
அழகான ராட்சசியே -98
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-98.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-98.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy