அழகான ராட்சசியே -102

102 உன் உயிரில் எனைக் கரைத்து என் உயிரில் கலந்து விட்ட அழகான ராட்சசி நீ.... சாலையோர மரங்களின் நிழலில் நரேந்திரனின் கார் நின்ற...


102
உன் உயிரில் எனைக் கரைத்து
என் உயிரில் கலந்து விட்ட
அழகான ராட்சசி நீ....


சாலையோர மரங்களின் நிழலில் நரேந்திரனின் கார் நின்றிருந்தது.. அவனுடைய வலிமையான கரம்.. அவளுடைய தளிர் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.. ஊர்மிளா விரல்களை உறுவிக் கொள்ள வில்லை.. மௌனமாக இருந்தாள்..
"பேசு ஊர்மிளா.." நரேந்திரன் குரல் கரகரத்தது..
"இத்தனை நாள்களாகத்தான் என்னிடம் பேச உனக்கு எதுவுமே இல்லை இப்ப என்னடி..? மனம் திருந்தி உன்னிடம் மன்னிப்புக் கேட்டு வந்திருக்கிறேன் ஊர்மிளா.. மன்னிக்க மாட்டாயா..?"
ஊர்மிளாவின் கண்கள் கலங்கின.. இமையோர நீர்த்துளிகள் அவன் கரத்தின்மீது விழுந்து உதிர்ந்தன..
"தாயில்லாப் பிள்ளைடி.. உன்னையே தஞ்சம்ன்னு அடைக்கலம் கேட்டு வந்திருக்கிறேன்.. அடைக்கலம் தர மாட்டாயா..?"
நரேந்திரன் விட்ட அஸ்திரம் மிகச் சரியாக தன் வேலையைச் செய்தது.. தேம்பியபடி அடைக்கலம் கேட்ட நரேந்திரனிடம் அடைக்கலம் புகுந்தாள் ஊர்மிளா..
தேம்பிய மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் நரேந்திரன்.. அவன் முகத்தில் பழைய வெளிச்சம் மீண்டு வந்திருந்தது.. மனைவியின் முடி கோதியவன் அவள் கூந்தலில் முகம் புதைத்தான்..
'எத்தனை நாளாச்சு..'
அவன் உடலில் தாபம் பொங்கியது.. வேட்கையுடன் அவளை ஆளத்துடித்தவன் அவள் காதோரமாக பேசினான்..
"நீயில்லாத வாழ்க்கை எனக்க வாழ்க்கையா இருந்த தில்லை ஊர்மிளா.. என் கேள்விக்கு பதில் சொல்லாம நீ விலகிப் போனதை என்னால் தாங்கிக்க முடியலை.. இவ்வளவுதானா உன் காதல் என்றிருந்தது.. என்மேல் உனக்கு நினைவில்லையான்னு கோபம்.. கோபமா வந்தது.. நீ என்னைத் தேடலைன்னு நான் நினைத்தேன்.."
"நானும் அப்படித்தான்.." ஊர்மிளா முணுமுணுத்தாள்..
"உன் அப்பா என்னிடம் சண்டை போட்டிருக்கனும்டி.. அந்தச் சாக்கிலாவது நான் உன்னைப் பார்த்திருப்பேன்.. அதற்கும் வழிஇல்லாம அவரும் பேசாம இருந்துட்டார்.."
"எப்படிப் பேசுவார்..? வீட்டை விட்டுப் போன பெண்டாட்டி எங்கே போனா.. என்ன ஆனான்னு தேடி அலையாத புருசனிடம் என்னத்தைக் கேட்டு அவர் சண்டை போடுவார்..?"
ஊர்மிளாவின் குரலில் இருந்த விரக்தியில் நரேந்திரன் குற்ற உணர்வைக் கொண்டான்..
"மன்னிச்சிருடி.." இறைஞ்சினான்..
ஊர்மிளா கருணையுடன் அவனை அரவணைத்துக் கொண்டாள்.. அவன் காதலித்த அந்த அழகான ராட்சசியின் முகம் தேவதையின் முகத்தைப் போல சுடர் விட்டுப் பிரகாசித்தது..
"உங்களிடம் நானும்.. என்னிடம் நீங்களும் மன்னிப்புக் கேட்கனும்னா நம்ம வாழ்க்கை முழுவதும் மன்னிப்புக் கேட்பதிலேயே கழிஞ்சு போயிரும்.. போனதை விட்டுத் தள்ளுங்க.."
"உன்னால் முடியுமா..?"
"இனி முடியும்.. அகல்யா என்னிடம் விட்ட சவாலில் நான் ஜெயிச்சுட்டேன்.. அது போதும் எனக்கு.."
"என்மேல் உனக்கு வருத்தமே இல்லையா.?"
"அது இருக்கு நிறைய.. பட்.. அதுவும்கூட போகப் போக சரியாகிரும்ன்னு நினைக்கிறேன்.. ஏன்னா.."
"ஏன்னா..?"
"ஐ லவ் யு மிஸ்டர் நரேந்திரன்.."
கண்களில் காதல் வழியச் சொன்னாள் ஊர்மிளா.. எந்தக் காதலை அவள் கண்களில் நரேந்திரன் தேடினானோ.. அந்தக் காதல் அவள் கண்களில் நிரம்பி வழிந்தது.. நரேந்திரனின் அடி மனதில் ஆசை எழுந்தது.. அவன் தேடிய காதலை அவள் கண்களில் கண்டு விட்டவனின் உடல் அவளைத் தழுவிக் கொள்ளத் துடித்தது..
"உனக்காக உன்னை சென்னைக்கு அழைச்சுட்டு வரலை.. என் மகனுக்காகத்தான் அழைச்சுக்கிட்டு வந்தேன்னு சொன்னியாமே.."
"ஆமாம்.. அதற்கென்னவாம்..?"
"பழிவாங்காதேடி.. உனக்கே தெரியும்... நான் உன்மேலே எவ்வளவு பைத்தியமா இருந்தேன்னு.. நான் என்ன நினைச்சேன் தெரியுமா..?"
"சொன்னால்தானே தெரியும்.."
"உன் மகனுக்காகத்தான் நீ என் பின்னால் வந்தேன்னு மனசுக்குள்ளே புழுங்கிக்கிட்டு இருந்தேன்.."
இருவரின் மனத்தாங்கலும் ஒரே விதமான கோபதாபத்துடன் இருப்பதை புரிந்து கொண்டவர்கள்.. ஒருவரையொருவர் காதலுடன் பார்த்துக கொண்டார்கள்..
"சுரேனோட ட்ரீட்மெண்ட் செலவுக்காகத்தான் நான் உங்களுக்கு தகவல் சொன்னேன்னு சொன்னீங்க.."
"அது கோபத்தில் வந்த வார்த்தைன்னு உனக்கே தெரியும்... வருத்தத்திலே பேசினதை நீ பெரிசா எடுத்துக்குவியா..? நீ கூடத்தான் நான் உனக்கு வாங்கிக் கொடுத்திருந்த வைர நகைகளை தொட்டுப் பார்க்காமல் விட்டுவிட்டுப் போன... அந்த சிச்சுவேசனில அந்த நகைகளிலே ஒன்னு உன்னிடம் இருந்தாக்கூடப் போதும்.. நீ கலங்கி நின்னிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.."
"அதுசரி.. உங்களையே விட்டுவிட்டுப் போகிறவ.. நகைகளை விட்டு விட்டுப் போக மாட்டேனா..?"
ஊர்மிளாவின் கேள்வியில் அவள் நெற்றியில் முத்தமிட்டான் நரேந்திரன்.. அவள் உடல் சிலிர்த்தது.. அதை அவன் உடல் உணர்ந்தது.. சூடேறும் உடலை கட்டுக்குள் வைத்திருக்க அவன் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது..
"நான் கன்சீவ் ஆகியிருந்தைச் சொல்லியிருந்தா என்னைப் போக விட்டிருக்க மாட்டேன்னு நீங்க சொன்னீங்க.. எனக்காக நீங்க என்னைத் தடுத்து நிறுத்தனும்னு நினைக்கலை.. உங்க குழந்தைக்காகத்தானே நினைச்சீங்க..?" ஊர்மிளா துயரத்துடன் கேட்டாள்..
"அப்படியில்லைடி.. நீ கன்சீவ் ஆகியிருக்கிறதைச் சொல்லியிருந்தா.. அகல்யாவின் விளையாட்டுக்கே அங்கே இடமிருந்திருக்காது.. நேரே உன்னைக் கொண்டு போய் பாட்டியிடம் சேர்த்திருப்பேன்.. அந்த அர்த்தத்தில் தான் நான் சொன்னேன்.." விளக்கம் சொன்னான் நரேந்திரன்..
"உங்க மகன் பிறந்திருக்கிறதைச் சொல்லியிருந்தா.. என்னைத்தேடி வந்திருப்பீங்கன்னும் சொன்னீங்க.."
"எனக்குக் காரணம் வேண்டாமாடி..? எனக்கும் ரோசம் இருக்காதா..? நான் வேண்டாம்ன்னு விட்டு விட்டுப் போன பெண்டாட்டியை இழுத்துக் கொண்டு வந்து என் கைபிடிக்குள் அடக்கிக்க எனக்கும் காரணம் தேவைப்பட்டுச்சு... அப்படிக் காரணம் கிடைத்ததும் உன்னை 'அலேக்' பண்ணி என் கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்தேனா இல்லையா..?"
பேசினார்கள்.. அத்தனை நாள்களாக அவர்கள் இருவரின் மனதிலும் புதைந்து கிடந்த காதலைக் கொட்டிக் கவிழ்த்து விட்டார்கள்.. வீட்டுக்குப் போனபோது சித்ரலேகா.. வாசலிலேயே காத்திருந்தாள்..
"பாட்டி..."
முகம் சிவக்க வந்து அவளைக் கட்டிக் கொண்ட ஊர்மிளாவின் சந்தோசம் விவரத்தை முரசறிவிக்க.. அவள்..
"நரேன்.." என்று மகிழ்ந்து போனாள்..
"நீங்க சொன்னதை வைத்துத்தான் தேடிப் போனேன் பாட்டி.."
"யாரை..?" என்று முறைத்தாள் ஊர்மிளா...
"உண்மையைடி.. உன்னையே தேடி வராதவன்.. வேற யாரைடி தேடிப் போயிருப்பேன்.." நரேந்திரன் மிரள்வதைப் போலப் பாவனை செய்தான்..
அன்றைய இரவில் சித்ரலேகா சுரேந்திரனை அவர்களின் அறையில் படுக்க வைத்துக் கொண்டாள்..
மழை கொட்டிக் கொண்டிருந்தது.. வலுத்த மழையின் ஓசையைக் கேட்டபடி மாடிப்படியில் கால் வைத்த ஊர்மிளாவின் மனம் புதுமணப்பெண்ணைப் போல படபடத்தது.. கை, கால்கள் வெடவெடக்க.. ஊர்மிளா மாடிக்குப் போனாள்.. நரேந்திரனின் வேட்கை ததும்பிய பார்வையை சந்தித்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.. அவளுக்காகவே காத்திருந்த நரேந்திரன் கதவை மூடித் தாழிட்டான்.. அவன் ஆசையுடன் அவளை அணுகிய போதெல்லாம் அவள் மறுத்து விலகி விட்டதை நினைத்துப் பார்த்தபடி அனைத்து வேட்கைகளையும் ஒட்டு மொத்தமாக திரட்டியவனாக அவளை நெருங்கினான்..
தப்பிக்கும் மார்க்கம் இல்லாமல் அகப்பட்டு விட்டதைப் போல உணர்ந்தாள் ஊர்மிளா.. இது அவள் விரும்பிய அடைக்கலம்.. என்பதில் அவள் விரல்கள் நடுங்கின.. வெற்றுமார்புடன் இருந்த நரேந்திரன்.. முகம் துடைத்துக் கொண்டிருந்த துவாலையை அருகிலிருந்த சோபாவின் மீது போட்டு விட்டு அவளை நெருங்கினான் அவளை அணைத்து முத்தம் கொடுத்தவன்..
"அப்புறம்..?" என்றான்..
ஊர்மிளாவின் முகம் சிவந்து விட்டது.. அத்து மீறிய அவன் கைகள் பழைய தேநிலவு நாள்களுக்கு அவளை அழைத்துச் சென்றன.. வருடக் கணக்கில் அவனுக்குள் புதைந்திருந்த உணர்வுகள் கரையுடைத்ததில் ஊர்மிளா அடித்துக செல்லப்பட்டாள்.. மூச்சுத் திணற அந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவளை ஆக்ரமித்து திருப்தி கண்ட நரேந்திரன் விடியலின் போது விலகிப் படுத்து அவள் காதுகளில் முணுமுணுத்தான்..
"நீ அழகான ராட்சசிடி.."

ராம்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரைச் சுற்றி வந்து கொண்டிருந்தான்.. அவனருகில் நெருங்கிய கனத்த காலடி சப்தத்தில் திரும்பினான்..
"உங்களிடம் பேசனுமே.." என்றபடி நரேந்திரன் அங்கே நின்றிருந்தான்.
அவன் என்ன பேசப்போகிறான் என்பதை ராம்குமார் யூகித்து விட்டாலும்.. எதுவும் சொல்லாமல் தலையை அசைத்து நரேந்திரனை மரியாதையாக வரவேற்றபடி அலுவலக அறைக்குள் நுழைந்தான்.. இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள்..
"என்ன சாப்பிடறீங்க..? காபி ஆர் கூல்டிரிங்ஸ்..?" ராம்குமார் கேட்டான்..
"நான் காபி சாப்பிட வரலை ராம்குமார்.. அர்ச்சனாவைப் பற்றிப் பேச வந்தேன்.." நேரடியாக விவரத்திற்கு வந்தான் நரேந்திரன்..
"அர்ச்சனா என் அப்பாவுடைய அக்கா மகள்.. அவளைப் பற்றிப் பேச என்ன இருக்கு..?" வறண்ட குரலில் கேட்டான் ராம்குமார்..
"உங்களுக்கும், அவளுக்கும் இடையில் இருக்கிற காதல் இருக்கு.." அழுத்தம் திருத்தமாக சொன்னான் நரேந்திரன்..
"இல்லை சார்.. அது வேலைக்கு ஆகாது.." ராம்குமார் மறுத்தான்..
"ஏன்..?" பிடிவாதமாக வினவினான் நரேந்திரன்..
"அகல்யா அத்தையோட குணத்தைப் பத்தி நான் சொல்லித்தான் நீங்க தெரிந்துக்கனுமா..? பட்டுத் தெரிந்திருப்பீங்களே சார்.."
வினயமாக எடுத்துரைத்தான் ராம்குமார்.. அவன் எப்போதுமே நரேந்திரனை 'சார்' என்றுதான் அழைப்பான்.. அதை உடைத்து அவனை 'அத்தான்' என்ற உறவு முறையைச் சொல்லி அழைக்கும்படி அகல்யா மல்லுக் கட்டிப் பார்ப்பாள்.. அதற்கான காரணம் ராம்குமாரின் மீதான அக்கறையும், சொந்தமுமல்ல.. அகல்யாவின் தம்பி மகன் நரேந்திரனை அத்தான் என்று அழைக்காமல் சார் என்று அழைக்கிறான் என்ற விவரம் வெளியில் பரவி விடக் கூடாது என்பதற்காக..
அதை உணர்ந்தவனைப் போல நாசுக்காய் அகல்யாவின் வற்புறுத்தலைத் தட்டிக் கழித்து விடுவான் ராம்குமார்..
எப்போதுமே தள்ளி நின்று இடைவெளியை பாதுகாக்கும் அவனது தன்மையில் நரேந்திரனுக்கு மரியாதை உண்டு.. அப்படிப்பட்ட ராம்குமார் அர்ச்சனாவைக் காதலித்தும் அவள் அகல்யாவின் மகள் என்பதற்காக மறுப்பதில் அவனது மரியாதை அதிகரித்தது..
"என் வீடு நிம்மதியாய் இருக்கனம்னா நாங்க அகல்யா அத்தையை விட்டு தள்ளி நிற்கிறதுதான் நல்லது சார்.."
"தள்ளியே நில்லுங்க.. உங்களை யார் தடுத்தது..? அதை அர்ச்சனாவின் கழுத்தில் தாலியைக் கட்டி விட்டுச் செய்யுங்களேன்.."
"அது எப்படி சார்..?"
"அது அப்படித்தான் ராம்குமார்.. பெண்கள் பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க.. மேரேஜ் முடிந்ததும் அர்ச்சனா உங்களுடன் உங்க வீட்டுக்கு வாழ வந்து விடுவா.. அதுக்கப்புறம் நீங்கதான் அவளுக்கு உலகம்.."
நரேந்திரன் பேசிப் பேசி ராம்குமாரின் மறுப்புக்களைக் கரைத்தான்.. அகல்யாவின் பெண்ணாக பிறந்த குற்றத்தைத் தவிர அர்ச்சனா வேறு என்ன குற்றம் செய்தாள் என்று கேட்டான்.. பெற்றவள் செய்த பாவத்தின் சுமையை பெண்ணின் தலையில் ஏற்ற வேண்டுமா என்ற கேள்வியை ராம்குமாரின் முன்னால் வைத்தான்..
நரேந்திரனின் கிடுக்கிப்பிடி போர்முறையில் நியாயவாதியான ராம்குமார் சரணடைந்தான்..
"ஆனாலும்.. அகல்யா அத்தை இதற்குச் சம்மதிக்கனுமே.." என்றான்..
"அது சம்மதத்தை யார் கேட்டது..? அருண்குமார்தான் அவங்க வீட்டில் எல்லாமும்.. நீங்க அவனிடம் பெண் கேளுங்க.." நிலைமையை உணர்த்தினான் நரேந்திரன்...
"ஆச்சரியமாய் இருக்கே.. அகல்யா அத்தையைக் கூட ஓரம் கட்டி உட்கார வைக்க முடியுமா..?"
"இப்போதைக்கு முடிந்திருக்கிறது.. அது எப்போதும் நிலைத்து நிற்பது உங்கள் கையிலும்.. அருணின் கையிலும் இருக்கு.." என்றான் நரேந்திரன்..
இந்த ஒன்றிற்காகவே அர்ச்சனாவை திருமணம் முடித்தாக வேண்டும் என்ற உறுதி ராம்குமாருக்குள் வந்தது..
"ரம்யாவின் மேரேஜ் முடிந்ததும்தான் நான் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கனும்.." ராம்குமார் திட்டவட்டமாக சொல்லிவிட்டான்..
நரேந்திரன் அதற்கும் வழி வகை செய்திருந்தான்.. மும்பையில் இருந்த அவனின் உறவினர் வீட்டுப் பையனை ரம்யாவுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறினான்..
"உங்க தம்பியின் நினைவு வரவில்லையா..? இல்லை.. ரம்யாவை விட உயர்த்தியான இடத்திலிருந்து பெண் தேடுகிறீர்களா..?" ராம்குமார் மெலிதான கோபத்துடன் கேட்டான்..
"பெண் கொடுத்து பெண் எடுக்கிறது எப்பேற்பட்ட ஸ்ட்ராங்கான பிணைப்புன்னு எனக்கும் தெரியும் ராம்குமார்.. பட்.. அருணும் ரம்யாவும் இதை விரும்ப மாட்டாங்க.. நீங்க இதை ரம்யாவிடமே பேசித் தெளிவு பண்ணிக்கங்க.." அமைதியாக சொன்னான் நரேந்திரன்..
நரேந்திரனின் கணிப்பு மிகச் சரியானதாக இருந்தது.
"அதே வீட்டில் அருணின் கண்ணுக்கு முன்னாலே நான் நரேந்திரனை மயக்க டிரை பண்ணினேன் அண்ணா.. இதைச் சொல்கிறதுக்காக நீ என்னை மன்னிச்சிரு.. அப்ப எனக்கு அது தப்பாவே தெரியலை.. நரேந்திரனுக்கு டைவர்ஸ் ஆகிருச்சுன்னு நினைத்தேன்.. யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா அகல்யா அத்தையை ஒரு வழி பண்ணி ஓரம் கட்டி உட்கார வைக்கலாம்ன்னு பிளான் போட்டேன்.."
அகல்யாவை ஓரம் கட்டி உட்கார வைப்பதற்காக தங்கை எப்பேற்பட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறாள் என்பதில் ராம்குமாருக்குள் தீ கனன்றது..
"என்னை மன்னிச்சிரு.. நரேந்திரனை மயக்க நினைச்சிட்டு அருண்குமாரை கல்யாணம் பண்ணிக்க என்னால் முடியாது.."
ரம்யாவின் குணத்தை நரேந்திரன் புரிந்து வைத்திருக்கிறான் என்பதில் அவன் மீதான மதிப்பு ராம்குமாருக்குள் அதிகரித்தது.. அவன் நரேந்திரன் சொன்ன மும்பை வரனின் வீட்டில் போய் திருமணப் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினான்.. ரம்யாவின் திருமணம் முடிந்ததும் அர்ச்சனாவைப் பெண் கேட்டுப் போனான்..
"அதுக்கென்ன அத்தான்.. அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணத்தை நடத்தி விடலாம்.." என்றான் அருண்குமார்.
அகல்யாவை யாருமே சட்டை செய்யவில்லை.. அர்ச்சனாவின் திருமணத்துக்கு கூட்டத்தோடு கூட்டமாக நரேந்திரனும் ஊர்மிளாவும் சென்று ஆசிர்வதித்து விட்டு வந்தார்கள்.. அர்ச்சனாவிற்கு திருமணப் பரிசாக வைர நகை செட் ஒன்றை வாங்கி பரிசளித்தான் நரேந்திரன்..
ராதா நியூயார்க்கிற்கு திரும்பினாள்.. அவள் திரும்பு வதற்கு முன்னால் காவேரிக் கரையில் தோழிகள் ஒன்று சேர்ந்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.. நரேந்திரன் ஊர்மிளாவையும்.. சுரேந்திரனையும் அழைத்துக் கொண்டு மாமனார் வீட்டிற்குப் போனான்.. கணவன், குழந்தையென்று மகள் குடும்பசகிதம் வந்து இறங்கியதில் பூங்குழலி பூரித்து விட்டாள்.. சோமசுந்தரமோ சுரேந்திரனுக்கு பொதுவுட மையைப் பற்றிய பாடத்தைப் போதிக்க ஆரம்பித்து விட்டார்..
காவேரி நதிக்கரையில் அமிர்தா, ராதா, ஊர்மிளா மூவரும் நடந்தபடி பேசிக் களித்தார்கள்.. தங்களின் தோழியின் வாழ்வு செம்மையாகி விட்டதில் ராதாவுக்கும், அமிர்தாவுக்கும் மன நிறைவு ஏற்பட்டது..
வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த ராதாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.. அவள் தோழிகளிடம் விடைபெற்று நியூயார்க்கிற்குக் கிளம்பிப் போனாள்..
"என்னால் அவளும் ஹஸ்பெண்டைப் பிரிஞ்சு நின்னா" நெகிழ்வுடன் சொன்னாள் ஊர்மிளா..
"அவ மனசில ஒரு கில்ட்டி கான்சியஸ்.."
முறுவலித்த அமிர்தாவும் டாட்டா சொல்லி விட்டு தஞ்சைக்குக் கிளம்பினாள்..
தோழிகளுடன் பேசிவிட்டு வீடு திரும்பிய ஊர்மிளாவை கையில் தடித்த புத்தகங்களுடன் எதிர் கொண்டான் நரேந்திரன்..
"இன்னைக்குள்ள இதைப் படிச்சு முடிக்கனுமாம்.. மாமனார் படுத்தறார்டி.."
ஊர்மிளா 'களுக்' என்று சிரித்தாள்.. அவளை அப்பிக் கொண்டவன்..
"நீ அழகான ராட்சசிடி.." என்றபடி அவளை ஆக்ரமித்தான்.

- முற்றும் -


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -102
அழகான ராட்சசியே -102
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsaiye-102.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsaiye-102.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy