அக்கினிப் பறவை -8

8 ஏறக்குறைய ஒரு யுத்த களம்போல் அந்த இன்டர்வியூ அறை இருந்தது. ஆதித்தனின் கேள்விக் கணைகள் வில்லில் இருந்து செலுத்தப்படும் பாணங்களாகச் ச...


8

ஏறக்குறைய ஒரு யுத்த களம்போல் அந்த இன்டர்வியூ அறை இருந்தது. ஆதித்தனின் கேள்விக் கணைகள் வில்லில் இருந்து செலுத்தப்படும் பாணங்களாகச் சந்தியாவை நோக்கி கண நேர இடைவெளி கூடக் கொடுக்காமல் பாய்ந்து வந்து கொண்டிருந்தன. கேள்விக் கணைகளை தன் பதில்களால் கண நேரம் கூட ஸ்தம்பிக்காமல் முறியடித்துக் கொண்டிருந்தாள் சந்தியா.. யுத்தம் முடிவேயுறாது என்று தோன்றிய நிலையில் ஆதித்தன்.
"எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. பணிவைத் தவிர.." என்றான்.
"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை சார்.."
"உங்களுக்கா புரியாது..? குட் ஜோக். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிக்கு பணிந்து பேகணும். அதுதான் இந்த வேலைக்கான.. ஏன் எந்த வேலைக்குமான முதல் தகுதி.. அது உங்களிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை."
"எதை வைத்து என்னிடம் பணிவில்லைன்னு சொல்கிறீர்கள் சார். நீங்கள் என்னைப் பார்த்து இரண்டு மணி நேரங்கள்தான் ஆகின்றன. அதற்குள் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை சார்.."
"....இதை.. இதை.. வைத்துத்தான் சொல்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசுகிறது.. இது எப்படிப் பணிவாகும்..?"
"இது இண்டர்வியூ ரூம்ன்னு நீங்கள்தான் அடிக்கடி எனக்கு நினைவு படுத்தி வைத்திருக்கிறீர்கள் சார். கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா..?"
"பணிவுன்னா என்னவென்றே தெரியாத உங்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நாள் பூராவும் மூட்-அவுட் ஆக என்னாலெல்லாம் முடியாது."
"மன்னிக்க வேண்டும் சார். பணிவுன்னா என்ன சார்..? சுயமரியாதை இல்லாமல் காலில் விழுவதா..? ஆபிஸ் லெட்டரில் எல்லாம் முன்னால் 'தங்கள் பணிவுள்ள'ன்னு எழுதிக் கையெழுத்துப் போடுவாங்க. இப்ப எல்லாம் அப்படிப் போடுவது இல்லை சார். 'தங்கள் உண்மை யுள்ள'ன்னு எழுதிக் கையெழுத்துப் போடறாங்க. இதில் இருந்து ஒரு வேலையில் உண்மையாக மனச்சாட்சியோடு உழைத்தால் போதும். கூழைக் கும்பிடு போடத் தேவையில்லைன்னு தெரியலையா சார்..? நீங்கள் எனக்கு வேலை கொடுத்தால் வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை செய்வேன். கொடுக்கிற வேலையை சரியாகச் செய்வேன். இந்தக் கம்பெனிக்கு விசுவாசமாக உழைப்பேன். என் மேலதிகாரிகளிடம் மரியாதையோடு இருப்பேன். ஒரு வேலை செய்ய இதுதான் சரியான தகுதிகள்ன்னு நான் நினைக்கிறேன் சார்.."
"மேலதிகாரியிடம் மரியாதையா இருப்பீங்க.. ஆனா பணிவா இருக்க மாட்டிங்க.. அப்படித்தானே." என்றான் ஆதித்தன் காட்டமாக.
"மரியாதையாக இருப்பதும் ஒரு வகையில் பணிவு தான் சார்.."
"இது இன்டர்வியூ ரூம். இங்கேயே இப்படிப் பேசினீர்கள் என்றால் நாளைக்கு இங்கே உங்களுக்கு வேலை கொடுத்தால் எவ்வளவு பேச மாட்டீர்கள்..?"
"நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதைப்போலக் கேட்கப்படும் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றும் உண்மையான பதில்களைச் சொல்ல வேண்டும்.. பொய்யான பணிவையல்ல.. அதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்."
"இன்டர்வியூ முடிந்து விட்டது நீங்கள் போகலாம்."
சந்தியா எழுந்து மூவரிடமும் மரியாதை நிமித்தம் தலை அசைத்து விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள். சுதந்திரமான காற்று முகத்தில் பட்டது. இதமாக இருந்தது. இந்த வேலை கிடைக்குமென்று அன்று காலை வரை இருந்த எதிர்பார்ப்பு இப்போது வற்றிப்போய் இருந்தத. சந்தியா நம்பிக்கை இழந்திருந்தாள். 
அந்த இளைஞன் பெண்களை வெறுப்பவனாக இருக்கிறான். அவன் நிச்சயம் இவளுக்கு வேலை கொடுப்பதை விரும்பமாட்டான். அதை தடை செய்வான். 
அவன் முகம் நினைவில் வர 'கடுவன் பூனை' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
'அவன் பெயர் ஆதித்தனாமே. ஆனால் கடுவன் பூனைன்னு பெயர் வைத்ததுதான் சரி. மருந்திற்குக் கூடச் சிரிப்பு இல்லையே அவன் முகத்தில்' என்று எண்ணிக் கொண்டவள் 'எப்படித்தான் அவனால் சிரிக்காமல் இருக்க முடிகின்றதோ' என்று எண்ணி தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். 
அவன் என்னதான் விரும்புகிறான்..? சந்தியாவிற்கு பணிவு இல்லையென்று யாரும் சொல்ல மாட்டார்கள். அவன் அவளிடம் பணிவை வேண்டவில்லை. அவளது சுய மரியாதையை அவன் விரும்பவில்லை. போகட்டும் சுயமரியாதை இல்லாமல் முதுகெலும்பு இல்லாமல் வேலை பார்க்க சந்தியாவும் விரும்பவில்லை. அவள் சந்தியா. சுயமரியாதை பெரிதென்று பெண் குழந்தையுடன் தன் கரங்களை மட்டுமே நம்பி வெளியேறினாள அந்த அன்னத்தின் மகள். இந்த உலகில் நிச்சயம் காலை ஊன்றுவாள்.
பஸ் ஏறி வீடு இருக்கும் தெருவில் இறங்கியவள் வீட்டை அடைந்தாள். வீட்டு நடையில் செருப்புக்களை அவிழ்த்து விட்டு உள்ளே சென்றாள். முன்புறம் மெஸ்ஸாகவும், பின்புறம் அவர்களுக்கான வீடாகவும் இருந்த 'அம்மா உணவக'த்திற்குப் போனபோது மதிய சாப்பாட்டு நேரம் முடிந்து பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள் அன்னமும், கனகமும், சிந்துவைக் கண்டதும்,
"வாடா செல்லம். என் சந்தியாக் குட்டிக்கு முக மெல்லாம் சோர்ந்திருக்கே. என்னடா தங்கம்.. இன்டர்வியூ கஷ்டமா இருந்துச்சா.." என்று கேட்டாள் அன்னம்.
"இல்லைம்மா.. எந்தக் கேள்வியையும் மிஸ் பண்ணாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டேன். இந்த வேலை  கட்டாயம் கிடைக்கும்மா" என்றாள் சந்தியா மனதில் வலியுடன்.
"கிடைச்சாலும் சரி கிடைக்கா விட்டாலும் சரி. நீ கவலையில்லாமல் முயற்சி பண்ணு.. கடவுளை நம்பு. கைவிட மாட்டார். அதற்காக நீ உன் முயற்சியை நிறுத்தாத. இப்போது சாப்பிட வா.. முகமெல்லாம் வாடிப் போயிருக்கு." என்று கூறிக்கொண்டே கழுவிய பாத்திரங்களை துடைத்து அடுக்கி வைக்கலானாள் அன்னம். அன்னையின் சொற்களை கேட்டு மனம் நெகிழ்ந்த சந்தியா.
'உன்னால் மட்டும் தான்ம்மா இப்படியெல்லாம் பேச முடியும்..' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
"சந்தியா சாப்பிட வரலை..?" என்று அன்னம் கூப்பிட,
"இதோ வரேன்ம்மா.." என்று கூறிக் கொண்டே அன்னையிடம் விரைந்தாள்.
சந்தியாவிற்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் போது அறை வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள் அன்னம். கனகம் நின்றிருந்தாள்.
"என்ன கனகம். வேலையை முடிச்சிட்டயா.. சரி போய்ட்டு வா. சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு. ராத்திரி கடைக்குச் சட்னி அரைக்கணும், காய் நறுக்கணும் வேலை நிறைய இருக்கு.." என்றவள் கனகம் போகாமல் தயங்குவதைக் கண்டு,
"சொல்லு கனகம் வேறு எதுவும் வேணுமா..?" என்று கேட்டாள்.
"ஆமாம்க்கா.. ஐநூறு ரூபாய் முன் பணம் வேணும்.."
"அப்படியா.." என்று யோசித்த அன்னம், "நாளைக்குக் கொடுத்தால் போதுமா..?" என்று கேட்டாள்.
உடனே முகம் மலர, "நாளைக்குக் கொடுத்தால் போதும்க்கா. என் மகன் படிக்கிற பள்ளிக் கூடத்தில் டூர் போறாங்களாம்.. அதுக்கு ஐநூறு ரூபாய் பணம் கட்டணுமாம். இன்னும் இரண்டு நாளில் கட்டணும்னு சொன்னான். நீங்க நாளைக்குக் கொடுத்தால் நாளை மறுநாள் பணம் கட்டிருவான்க்கா.." என்ற கனகம் உற்சாகமாய் சென்று விட்டாள்.
உணவு பரிமாறிக் கொண்டிருந்த அன்னத்தை நிமிர்ந்து பார்த்தாள் சந்தியா. வீட்டு நிலவரமும், உணவுக் கடை நிலவரமும் அவளுக்குத் தெரியும். பற்றாக்குறையில் இருந்தது. காலையில் அவள் கிளம்பும்போதே அன்னம் பணப் பற்றாக்குறையினால் குறைவான காய்கறிகளை வாங்கி வந்ததைப் பார்த்திருந்தாள். சந்தியாவின் பார்வையில் கேள்வி இருந்ததைக் கண்ட அன்னம்,
"என்னடா..?" என்றாள் அன்பாக.
"அம்மா வீட்டு பட்ஜெட் இடிக்குது போல இருக்கே..?"
"பட்ஜெட்டுன்னா அப்படித்தான். இடிக்கத்தான் செய்யும்.." கனிவாய் கூறியவள் குழம்பை ஊற்ற சாதத்தை பிசைந்து கொண்டே சந்தியா தாயைப் பார்த்து,
"அம்மா நீங்க கோவிச்சுக்கலைன்னா நான் ஒன்னு கேட்கவா..?"
"கேளுடா செல்லம்.. நீ கேட்காமல் அம்மா கிட்ட யாரு கேட்பாங்க.."
"கனகம் சித்திக்கு ஏற்கனவே ஆயிரக் கணக்கில் முன் பணம் கொடுத்திருக்கீங்க.. இப்போ நாம பணம் பத்தாம கடையை நடத்தவே சிரமப்படும்போது அவங்களுக்கு எப்படிம்மா ஐநூறு ரூபாய் கொடுக்க முடியும்..? ஏன் தரேன்னு சொன்னீங்க.."
"நாளைக்கு நான் சீட்டு எடுத்த பணம் வருதும்மா.. அதிலிருந்து தரலாம்.. பாவம் அவ பையன் ஸ்கூல் டூருக்கு வேணும்னு கேட்கிறா.."
"அதனால்தாம்மா சொல்கிறேன். அது ஒன்னும் முக்கியமான அத்தியாவசிய செலவில்லையே.. இப்போ ஸ்கூல் ஃபீஸ் கட்டறதா இருந்ததாலோ இல்லை புத்தகம் வாங்க வேண்டியிருந்ததாலோ.. நீங்க கையிலிருப்பதைக் கணக்குப் பார்க்காமல் நம்ம நிலைமையை யோசிக்காமல் கொடுக்கலாம் தப்பில்லை. ஆனால் ஸ்கூல் டூர்தானே கனகம் சித்தி நினைத்தால் அதைத் தவிர்க்கலாமே.."
"அவ நினைச்சா தவிர்க்கலாம்தான். ஆனா ஏன் அவ தவிர்க்கலே.. அவளுக்கே நல்லாத் தெரியும். அவ ஆயிரக் கணக்கில் முன் பணம் வாங்கியிருக்காள்ன்னு. அந்தக் கடன் அடையவே இன்னும் ஆறேழு மாசம் ஆகும். இந்த மாதிரி இருக்கிறப்போ ஏன் இன்னும் ஜநூறு ரூபாய் கேட்டு அவளோட கடன் தொகையை அதிகப்படுத்திக்கிறா..?"
சந்தியாவிற்கு சிரிப்பு வந்தது. இன்று என்ன கேள்விக்கு எதிர் கேள்விதான் பதிலா..? அவள் இன்டர்வியூவில் ஆதித்தனின் கேள்விகளுக்கு எதில் கேள்வியையே பதிலாகக் கொடுத்து விட்டு வந்தால் வீட்டில் அம்மா அதையே திருப்பித் தருகிறாளே.
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது இதுதான் போலும் என்று நினைத்தவள் வாயில் உணவை வைத்துக் கொண்டு சிரித்தாள். புரையேறப் பதறிப்போன அன்னம் அவசரமாய் தண்ணீரை எடுத்துக் கொடுத்து,
"போக்கிரி.. வாயில் சோற்றை வைச்சுக்கிட்டு துடுக்குத்தனமாய் எதையாவது நினைச்சு சிரிச்சு வைக்கிறே. புரையேறுது பார்.." என்று கடிந்து கொண்டாள்.
"இல்லைம்மா.. நான் கேள்வி கேட்டால் பதில் சொல்லாம நீங்க கேள்வி கேட்கறீங்களேன்னு நினைச்சுச் சிரித்தேன்.." என்று சமாதானம் சொன்னவள் அன்னைனை ஏறிட்டுப் பார்க்க, மகளின் மனம் புரிந்தவளாய்,
"ஏன் கனகம் அவ இருக்கிற கஷ்டத்திலயும் கடன் வாங்கியாவது மகனை டூருக்கு அனுப்பனும்னு நினைக்கிறா தெரியுமா... அவ அம்மா! அதனால்தான்.. நம்ம கஞ்சியோ கூழோ குடிச்சாலும்.. நம்ம பிள்ளை தங்கத்தடில் பாலும் பழமும் சாப்பிடணும்னு நினைக்கிறது தான் அம்மாவோட மனசு.. அவ மகனுக்கு டூர் போகலைன்னா ஏமாற்றம் வரும். மத்த பசங்கள் போறாங்களே நாம போக முடியலையேன்னு ஏக்கம் வரும்.. அதை அவனுக்கு வர விடக் கூடாதுன்னு நினைக்கிறா.. அவளோட கஷ்டங்களோட நிழல், அவ மகனின் வாழ்க்கையில் விழக்கூடாதுன்னு வைராக்கியமா உழைக்கிறா.. தான் தரையில் தூசியாகக் கிடந்தாலும் தான் பெத்தபிள்ளை கோபுரத்தில்தான் இருக்கணும்ன்னு எவ ஒருத்தி நினைக்கிறாளோ, போராடுகிறாளோ... அவள்தான் அம்மா! கனகம் ஒரு அம்மா சந்தியா.. அவ கடன் கேட்கிறது. தன் சுமையைக் கூட்டிகிறது.. எல்லாமே தன் பிள்ளைக்காக.. அதனால்தான் அவ கேட்டபோதெல்லாம் நான் பணம் கொடுக்கிறேன்.. இப்ப புரியுதா" என்றாள் தோழமையுடன்.
அன்னையின் முகத்தையே பார்த்தாள் சந்தியா.. அவள் போன ஸ்கூல் டூரெல்லாம் நினைவில் ஆடின. ஒவ்வொரு டூருக்குப் பின்னாலும் அவள் தாயின் போராட்டம் எத்தனை இருந்ததோ..? அவள் உடுத்திய உயர்ந்த ரக உடைகளுக்குப் பின்னே இந்த மாதிரியான கதைகள் எத்தனை மறைந்திருந்ததோ..? அவளது பெயருக்குப் பின்னால் இருக்கும் பட்டப் படிப்பிற்கும், மற்ற கோர்ஸ்களுக்கும் அவள் தாயின் உழைப்பு எத்தனை தேவைப்பட்டதோ..?
'அம்மா! நீ வாழ்ககையில் தோற்றுப் போனாய். ஆனால் எனக்கு ஜெயிக்க கற்றுக் கொடுத்தாய்.. வெயிலான வாழ்க்கையில் உன் காலடிகள் புண்ணாகப் போராடினாய். ஆனால் எனக்கு என்றுமே நிழல் தரும் சோலையாய் வரமளித்தாய். நான் சுணங்கும்போதும், உறங்கும் போது மடி தாங்கினாய்.. இன்று நோயினால் நீ சுணங்கி நிற்கின்றாய் என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தேவை இப்போது ஓய்வம்மா.. உன்னை என் மடி தாங்கி ஓய்வு கொடுக்கத் துடிக்கின்றேன். அது முடியாமல் போகின்றதே.. என்ன செய்வேன்..' மௌனமாய் மனதிற்குள் அரற்றிக் கொண்ட சந்தியா எழுந்து கைகழுவச் சென்றாள். மகளின் மனம் படும்பாட்டை அறியாத அன்னம் வேலையைப் பார்க்கச் சென்றாள்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -8
அக்கினிப் பறவை -8
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy